Tamil Madhura ஓகே என் கள்வனின் மடியில்,தமிழ் மதுரா,தொடர்கள் தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 6’

ரூபியிலிருந்து மீட்டிங் முடிந்து மதியம் தன் ஏஜென்சிக்கு வரும்போதே மண்டையைப் பிளக்கும் தலைவலியோடுதான் வந்தாள் காதம்பரி.

“என்ன கேட்… எப்படி இருந்தது?”

“கஷ்டமர் மீட்டிங் மாதிரி இருந்தது… “ என்று கேட் பதில் சொன்னதும் புரிந்து கொண்டாள்.

“கல்பனா… மதியம் ரெண்டு மணிக்கு ஒரு மீட்டிங் ஏற்பாடு பண்ணு. இப்போதைக்கு ரூபி ப்ராஜெக்ட்ல வொர்க் பண்ற ஆளுங்க எல்லாம் இருக்கணும். அதைத்தவிர புதுசா சில ஆட்களை சேர்க்கணும். லாஸ்ட் மினிட் ப்ரஷரைத் தாங்கும் ஆட்களா பார்த்து ரூபில போடு. பேமிலி கமிட்மென்ட், வீக்எண்டு வேலைக்கு வர முடியாத லேடீஸ் இவங்களை இதில் போட வேண்டாம். முக்கியமா ஒரு டீம் வீக்எண்டு வேலை செய்யவேண்டி இருக்கும். நீயும் சிலவாரங்கள் என்னோட வேலை செய்ய வேண்டி வரலாம். இதெல்லாம் மனசில் வச்சுட்டு டைம்ஷீட்டை ப்ராப்பரா மெயின்டைன் பண்ணணும். அப்பத்தான் ஓவர்டைம் பே பண்ண முடியும்”

“சரி”

“முதலில் ஒரு காப்பிக்கு ஏற்பாடு பண்ணு தலைவலி மண்டையைப் பிளக்குது”

சற்று நேரத்தில் அருகிலிருக்கும் கடையில் வாங்கிய மீல்சை எடுத்துக்கொண்டு கேட்டின் அறைக்குள் நுழைந்தாள்  கல்பனா.

“கேட் மகாராஷ்டிராவின் புகழ் வாய்ந்த ‘வரன்பாத்’, கேரட் பொரியலும், புல்காவும் கூட இருக்கு. இதை முதலில் சாப்பிடு”

“எனக்கு சாப்பாடு வேணும்னு கேட்டேனா… ஏன் இப்படி எல்லாரும் நான் என்ன செய்யணும்னே ஆர்டர் போட்டுட்டு இருக்கிங்க” தலையைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் மேஜை மேல் காப்பி கப்பை வைத்தாள் கல்பனா.

“நீ காலைல சாப்பிட்டிருக்க மாட்ட. நீ பேசுறதை பாத்தா அந்த வம்சி சரியான இம்சியா இருப்பான் போலிருக்கு. வயிறு காலியா இருந்தால் மூளை வேலை செய்யாது. முதலில் சாப்பிடு. அப்பறம் காப்பி குடி. அரைமணி கழிச்சு வரேன் அதுக்கப்பறம் என்னைத் திட்டு”

அரைமணி நேரம் கழித்து கல்பனா வந்தபோது தட்டு காலியாய் இருந்தது. காப்பியும் முடிந்திருந்தது. காதம்பரியின் முகத்தில் அமைதி.

“சாம்பார் சாதமும் புல்காவும் நல்லாருந்தது. சாரி கல்பனா”

“இட்ஸ் ஆல்ரைட் என் தங்கையாத்தான் உன்னை பாக்குறேன். அதனால்தான் உரிமையோட உன்னை கவனிக்கிறேன்”

“சென்டிமென்ட்ஸ் பேசாதே…. அதுக்கு பதிலா ரூபி ப்ராஜெக்ட் பத்தி பேசலாம். இந்த வம்சி பயங்கரமா டிமாண்டிங். ஆனால் இவனை விட நொச்சு பண்றவங்களை எல்லாம் நம்ம பாத்தாச்சு. சோ உடனடியா அவனோட கண்டிஷன்களை ஏத்துக்காம கொஞ்சம் பிகு பண்ணிட்டுதான் சம்மதிச்சேன்”

“அப்ப இவன் மத்தவங்களை விட தேவலாமா”

“சில இடத்தில் மட்டும்…. ஒரு சாதாரண பிரச்சனைக்காக நம்மை ராத்திரி ஒரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு கேக்குற கிளையன்ட்செல்லாம் பாத்தாச்சு. இவன் எந்த அளவுக்கு இருப்பான்னு தெரியல. ஆனால் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறான். அவன் சொல்றதைத்தான் செய்யணும்னு சொல்றான். அதுதான் கைகாலைக் கட்டிப் போட்ட மாதிரி கடுப்பா இருக்கு”

“என்ன மிஞ்சிப் போனா  மூணு மாசம். அதுக்கப்பறம் அவன் மூக்கை நீட்டினா ஓங்கி ஒரு குத்து விட்டுடலாம்”

முஷ்டியை  மடக்கிக் கல்பனா காட்டிய போஸில் கலகலவென நகைத்தாள் காதம்பரி.

மாலை வம்சிக்கு போன் செய்தவள் “வம்சி நம்ம தினப்படி மீட்டிங்கை வர்ற மண்டேலேருந்து வச்சுக்கலாம்”

“ஏன் அவ்வளவு நாள் தள்ளி…”

“நான் முதலில் ரூபிக்காக என் டீம்ல சில மாற்றங்கள் செய்யவேண்டியிருக்கு. எங்க டீம் மேனஜர், ப்ராஜெக்ட் மேனேஜர் கூட சேர்ந்து ப்ளான் போடணும். டைம்லைன் செட் பண்ணனும். நான் முதலில் தயாராகணும். அப்பத்தானே உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண முடியும்” என்று சொன்னதும் மறுக்காமல் சம்மதம் தந்தான்.

ம்சிகிருஷ்ணாவுக்குத் காதம்பரியுடன் கழிக்கும் பொழுதுகள்  தனக்கு எந்த அளவுக்கு உற்சாகமாக இருக்கிறது என்பதை  நினைத்து வியப்பாக இருந்தது. அவளை சந்தித்ததிலிருந்து அவனுக்கு ஆச்சிரியங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

முதல் ஆச்சிரியம் அவளை சந்தித்த வினாடி. அவளைப் பற்றியும் அவளது ஏஜென்சியின் திருப்திகரமான வேலைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டுதான் அவர்களை ப்ரெசென்ட்டேஷனுக்கு அழைக்க சொன்னான். ஆனால் தன்னம்பிக்கை நிறைந்த அழகான காதம்பரி முதல் பார்வையிலேயே அவனைக் கவர்ந்து விட்டாள்

அவளை வரவேற்க மாடியில் அவனறையிலிருந்து காமிரா வழியே கண்ட பொழுது சைடு போஸில் தூரத்தில் தெரிந்த கடலை ரசித்துக் கொண்டிருந்தாள். உடனே நேரில் முழு வதனத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப் படுத்திக் கொண்டு பிஏ அழைக்கும் வரை பொறுத்திருந்தான்.

அவனைக் கண்டதும் மெதுவாகத் திரும்பினாள். மண்ணிலிறங்கும் சிறு மின்னலைப் போலே, தொட்டு விலகும் குளிர் தென்றலைப் போலே பார்த்தவுடன் பச்சக் என்று ஒட்டிக் கொண்டாள் அந்த சுந்தரிப் பெண்.

அழகு சரி… அது மட்டும் போதுமா… இவ்வளவு முக்கியமான ப்ராஜெக்ட் செய்யும் தகுதி இருக்கா.. அதுதானே நமக்கு வேணும் என்று மனதில் சொல்லிக் கொண்டான். ஆனால் காதம்பரி பேசத்தொடங்கியதும் தானே இந்தத் திட்டத்தை வகுத்திருந்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சிரத்தையுடன் வேலை செய்திருப்பது புலப்பட்டது. ரூபிக்கு காதம்பரியின் பங்கு அவசியம் என்று அந்த கணமே முடிவு செய்தான். அவன் அவசர அவசரமாக கிளம்பியதும் அவளது கண்களில் மின்னல் கீற்றாக தோன்றி மறைந்த ஏமாற்றம் என்னவோ அவன் மனதை உறுத்தியது. அதனால்தான் அவனே நேரில் அவள் விளையாடும் இடத்தில் சந்தித்து கேட் ஏஜென்சியைத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதை பகிர்ந்து கொண்டான். அவளுடன் உணவு அருந்தியதும் அவன் எதிர்பார்க்காததே.

அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை தெய்வவாக்காக ஏற்று நடக்கும் ஆட்களைத்தான் சந்தித்திருக்கிறான். அதுவும் பெண்களைக் கேட்கவே வேண்டாம் சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவனுடன் பசை போட்டு ஒட்டிக் கொள்ள முயல்வார்கள். ஆனால் இந்த விஷயத்திலும் காதம்பரி மற்றவர்களிடமிருந்து வேறுபட்டாள். அவனது அழகு, பணம், புகழ் எல்லாம் அவளிடம் ஒரு ஸ்பெஷல் கவனத்தைப் பெற்றுத் தரவில்லை. அவன் போட்ட கண்டிஷன்களை கிரகித்து, மனதுக்குள் கணக்குப் போட்டு பார்த்து, நன்றாக யோசித்து பதில் சொன்ன பாணியை ரசித்தான். அவனுக்கு முக்கியமில்லாத இடங்களில் கடுமை முகம் காட்டி யோசிக்க வைத்து, அவன் முக்கியம் என்று நினைத்த இடங்களில் அவளை சம்மதிக்க வைத்தான். சொல்லப்போனால் இந்த விளையாட்டை அவன் மிகவும் ரசித்தான். கூடவே போனசாய் அழகான காதம்பரி வேறு. அவள் ஏதோ ஒரு வகையில் அவன் மனதை பாதித்திருந்தாள். அன்று காரில் ஏற்றிவிட்ட பிறகு மிக அழகான பெண் என்று அவன் சொன்னதைக் கேட்டு அவளையும் அறியாமல் அவள் முகத்தில் படர்ந்த வெட்கம் இன்னும் அவன் மனதை விட்டு அகலவில்லை.

மொத்தத்தில் காதம்பரி அவனை மிகவும் பாதித்திருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல இது அதிகமாகுமே தவிர குறையும் என்று அவனுக்கே நம்பிக்கையில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 12யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 12

கனவு – 12   விழிநீர் சொரிய சஞ்சயனின் கைகளைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டாள் வைஷாலி.   “என்னை மன்னிச்சிடு சஞ்சு… நீ இத்தனை வருசமாக இவ்வளவு வலியை உனக்குள்ள வைச்சிருக்கிறாய் என்று சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லைடா… நான்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 12ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 12

12 – மனதை மாற்றிவிட்டாய் சிறிது நேரத்தில் ஆபீஸ் கிளம்பி ரெடியாக சாப்பிட வந்தவன் அம்மா அப்பாவிடம், இந்த சம்பந்தத்தை பற்றி கூறினான். அவர்களுக்கு முதலில் ஆச்சரியமா அதிர்ச்சியா என பிரிக்கமுடியாத கலவையான உணர்வு. பின்பு முதலில் தெளிந்தவர் சந்திரசேகர் தான்.

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 01

குமாஸ்தாவின் பெண் பதிப்பாசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர், திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம். தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழியக்கங்களில் முழு மூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர், தமிழகப் புலவர்