உள்ளம் குழையுதடி கிளியே – 27

அத்யாயம் – 27

மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி வாங்கும் உணர்வே மேலோங்கி இருந்தது. தனக்கு துரோகம் செய்தது சரத்தும் ஹிமாவும்தான் என்று கொதித்துக் கொண்டிருந்தாள்.

இந்தியாவில் நம்பிக்கையான நபர்களின் உதவியுடன் தொலைப்பேசி எண்ணைக் கண்டறிய முயன்றாள். அந்த எண் அவளுக்கு வந்தடைந்த நிமிடம் தனது வருங்காலக் கணவனுடன் அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தாள். அந்த நம்பரைப் பார்த்தவுடன்

“ஒரு முக்கியமான கால் பண்ண வேண்டியிருக்கு. பத்து நிமிஷத்தில் வந்துடுறேன்” என்று எழுந்தவளைக் கேள்வியோடு நோக்கினார் மேத்தா.

“பகையையும் தீயையும் பாதியில் விடக் கூடாது டியர். எவளோ ஒரு அன்னக்காவடிக்காக என்னைத் தூக்கி எறிஞ்சவன் எப்படி சந்தோஷமா இருக்கலாம்” குரோதத்துடன் சென்றவள், அவள் நினைத்த நபருடன் பேசி முடித்தபோது அவள் உதட்டில் ஒரு வஞ்சகப் புன்னகை.

கோவையில் அந்தத் தொலைபேசியில் முன்பின் தெரியாத அந்தப் பெண் சொன்ன செய்தியை நம்ப முடியாது ரிசீவரைக் கையில் பிடித்தபடி விக்கித்து நின்றிருந்தார் தெய்வானை.

மாலை நேரத்தின் தென்றல் காற்றின் தீண்டல் சின்னசாமியைக் குளிர்விக்கவில்லை. சரத்தின் வீட்டின் வரவேற்பறையில் தொலைப்பேசி ரிசீவரைப் பிடித்தபடி சிலையாக நின்ற தனது தங்கையை உலுக்கினார்.

“நம்ம மோசம் போயிட்டோம் தெய்வானை. உன் மருமகளுக்கு சரத் ரெண்டாவது புருசனாம். அந்தப் பையனுக்கு கூட சரத் அப்பா இல்லையாம். நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டா…” ஆத்திரத்தோடு முறையிட்டார்.

தெய்வானை முன்பானால் யோசிப்பார். சரத் பற்றி தொலைபேசியில் அந்தப் பெண் ஒருத்தி சொன்ன விஷயமும் தனது சகோதரன் சொன்ன விஷயமும் ஒன்று போலிருந்தது.

“ரெண்டாவது புருஷனா…” திகைப்பில் அவரது உதடுகள் தன்னிடம் வந்தடைந்த உண்மையை முணுமுணுத்தது.

“இன்னமுமா சந்தேகம்… அவளை இழுத்து வச்சு கேளு உண்மையை சொல்லுவா…” என்றார் சின்னசாமி ஆத்திரத்துடன்.

எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியதைப் போல சரியான நேரத்தில் துருவ்வுடன் வீட்டினுள் நுழைந்தாள் ஹிமா.

“வாம்மா பத்தினித் தெய்வமே… உனக்காகத் தான் காத்துட்டு இருக்கோம்” என்ற சின்னசாமியின் குரல் ஏதோ விபரீதம் நடந்ததை ஹிமாவுக்கு உணர்த்தியது.

சரத்தையும் அவனது காதலியையும் அன்று வீடியோவில் கண்டதும், அவள் மேல் நக்ஷத்திரா சுமத்திய பழியும், அதன் பிறகு ஆறுதலாகக் கூட சரத்திடமிருந்து ஒரு அழைப்பும் வராமலிருந்ததும் ஹிமாவை நிம்மதி இழக்க செய்திருந்தன.

‘என்ன இருந்தாலும் சரத்துக்கும் நக்ஷத்திராவுக்கும் தானே இறுதிவரை பந்தம் நிலைத்திருக்கப் போகிறது. நான் இடையில் வந்தவள் தானே… அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுத்தாமல் அமைதியாக சென்றுவிடுவதுதான் முறை. ’ என்று தன்னைத்தானே சமாதனம் செய்து கொண்டாள்.

சரத்தின் பாராமுகத்தைக் காட்டிலும் மற்ற பிரச்சனைகள் எதுவும் தன்னை வதைத்துவிடப் போவதில்லை என்ற தன் மனம் புரிந்து திகைப்பில் இருந்தாள்.

இது தவறு நான் சத்யாவின் மனைவி என்று நினைவு படுத்திக் கொண்டாலும் சரத்தின் பால் தன் மனம் செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை. தான் ஒரு நல்ல பெண்தானா என்ற எண்ணம் அவளை நெடுநேரமாக வதைத்துக் கொண்டிருந்தது.

அதனால் நடக்கப் போவது எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சரத்தின் வாழ்க்கைக்கு தன்னாலான உதவியை செய்வது என்ற முடிவுக்கு சில நொடிகளில் வந்துவிட்டாள்.

சின்னசாமி சொன்னதை சட்டை செய்யாமல் கால் செருப்பை கழற்றிவிட்டு வீட்டின் உள்ளே நுழைந்தாள்.

“நில்லு… நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு வீட்டுக்குள்ள போ…” என்றார் சின்னசாமி அதிகாரமாக.

“கேளுங்க” என்றாள் ஹிமா நிமிர்வுடன்.

“சரத் உனக்கு எத்தானாவது புருஷன்”

“என்ன… கேள்வி புரியல” சீற்றத்துடன் சொன்னாள் ஹிமா.

“உனக்குப் புரியுற மாதிரியே சொல்றேன். உனக்கு ஏற்கனவே கல்யாணமாகி உன் முதல் புருஷனுக்கு பிறந்தவன் தானே இந்தப் பையன்”

ஹிமா மறுக்கவில்லை.

“சரத்தை மயக்கி ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட…” என்றார் சின்னசாமி தெளிவாக.

“பதில் சொல்லு” என்றார் அதட்டலுடன்.

“எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டிங்களே” என்றாள் ஹிமா பதிலுக்கு.

ஆனால் சின்னசாமியை அலட்சியம் செய்தவளால் தெய்வானையிடம் கடுமை காட்ட முடியவில்லை.

அவர்கள் உரையாடலின் இடையில் குறுக்கிட்ட தெய்வானை அழுகையை அடக்கியவண்ணம் ஹிமாவின் முகத்தைத் தன்புறம் திருப்பினார் “அப்ப உனக்கு ஏற்கனவே கல்யாணமாயிடுச்சு. என் மகன் உனக்கு ரெண்டாவது புருஷன். இவ்வளவு நாளா இந்தக் கிழவிகிட்ட பொய் சொல்லிருக்க…”

துருவை சுட்டிக் காட்டியவர் “இவன் என் பேரனில்லை. இவனுக்கு அப்பா வேற யாரோவா…” என்றார் கொதிப்புடன்.

தலைகுனிந்தாள் ஹிமா.

“இந்தக் கல்யாணம் எப்படி நடந்தது. என்னல்லாம் சொல்லி என் மகனை ஏமாத்துன… அவன் எப்படி உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சான்…”

“அது எனக்கும் உங்க மகனுக்கும் இடையில் நடந்த விஷயம். அதைப் பத்தி நான் உங்களுக்கு சொல்லணும்னு அவசியமில்லை” முயன்று அவரிடம் கடிந்து பேச நினைத்தாள். இருந்தும் குரல் மென்மையாகவே ஒலித்தது. தான் கடுமை காட்டினால் நக்ஷத்திராவை ஏற்றுக் கொள்வது தெய்வானைக்கு எளிதாக இருக்கும் என்று நம்பினாள். ஆனால் அவளது மனதோ சரத்தின் தாயிடம் கடுமை காட்ட அனுமதிக்கவே இல்லை.

“யாருடி நீ… ஏன் என் மகனை இந்தப் பாடு படுத்துற…” என்ற தெய்வானையின் கதறலால் ஹிமாவின் மனது இளகியது.

“அத்தை…” அவளது குரல் நடுங்கியது.

“இனிமேலும் அப்படிக் கூப்பிடுறதில் அர்த்தம் இருக்கா…”

“முதலில் நான் உங்களை அப்படிக் கூப்பிடல. நீங்கதான் அந்த முறையில் அழைக்க சொன்னிங்க. பக்கத்து வீட்டு பொண்ணு கூப்பிட்டா பொறுத்துக்குவிங்கள்ள அதே மாதிரி என்னோட அழைப்பையும் கொஞ்ச நேரத்துக்கு சகிச்சுக்கோங்க”

முகத்தைத் திருப்பிக் கொண்டார் தெய்வானை. அவரிடம் இனிமேல் வேஷம் போடுவதில்லை என்று உண்மையை சொல்லிவிடும் முடிவுக்கு வந்திருந்தாள் ஹிமா.

“நான் உங்க மகனோட கம்பனில வேலை பார்த்தேன். நாங்க ரெண்டு நல்ல நண்பர்கள். எனக்கு சத்யாவோட கல்யாணம் நடந்தது. அதனால வேலையை விட்டுட்டேன். எங்களுக்கு துருவ் பிறந்தான். அவன் பிறந்த சில மாதங்களில் சத்யாவும் என்னோட அப்பாவும் ஒரே சமயத்தில் ஒரு விபத்தில் தவறிட்டாங்க…

அம்மாவுக்கும் உடம்பு சரியில்லை. கையில் பணமில்லை, ஆறுதல் சொல்ல துணையில்லை, சொல்லப்போனா ஒரு ஜடமா நாட்களைக் கடத்திட்டு இருந்தேன். துருவ் மட்டுமில்லைன்னா நானும் எங்கம்மாவும் எப்பவோ போய் சேர்ந்திருப்போம்.

இப்படி வாழ்க்கை என்னை எல்லா பக்கமும் ஓட ஓட விரட்டி பழி வாங்கிட்டு இருந்தப்பத்தான் சரத்தை மறுபடி சந்திச்சேன். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிட்டு இருந்தவர் என்னைக் கொஞ்ச நாள் மனைவியா நடிக்க சொல்லிக் கேட்டார்.

ஒரு நல்ல தாய் வளர்த்த சிறந்த மகன் அவர். அவர் மேலிருந்த நம்பிக்கையாலும், என் பணத்தேவையாலும் மட்டும்தான் இந்த வேடத்தில் நடிக்க சம்மதிச்சேன். ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களை ஏமாத்துறோம் என்ற குற்ற உணர்ச்சி என்னைக் கொன்னு தின்னுட்டு இருந்தது”

“பொய் சொல்லாதேடி… நானே என் தாலியைக் கொடுத்து என் மகனைக் கட்ட சொன்னேனே அன்னைக்காவது சொல்லிருக்கலாமே”

“சூழ்நிலைக் கைதியா இருந்த என்னால அன்னைக்கு எதுவும் பேச முடியல. மனசில் சத்யாவை வச்சுட்டு கழுத்தில் உங்க மகன் கட்டும் தாலியை ஏத்துக்குறது எவ்வளவு கஷ்டமான விஷயம்னு உங்களுக்குப் புரியாது. சத்யாவின் மகன் அவனோட அடையாளம் மறைஞ்சு சரத்தின் மகனா அடையாளம் காட்டப்படும் ஒவ்வொரு வினாடியும் என் மனசு எத்தனை கஷ்டப்பட்டிருக்கும்னு உங்களால் உணர முடியாது”

“இவ்வளவு கஷ்டம் ஏன்… எதுக்காக என் மகன் உன்னை நடிக்க வைக்கணும்”

“அவரோட விஷயத்தை நான் பகிர்ந்துக்க முடியாது. ஆனால் ஒண்ணு மட்டும் உறுதியா சொல்றேன். அவர் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அவ திருமணமாகாதவ. அவளைக் கல்யாணம் செஞ்சு வச்சா அவர் மகிழ்ச்சியா இருப்பார்”

“இதனை சொன்ன நீ அவ யாருன்னும் சொல்லிடு”

“நடிகை நக்ஷத்திரா”

அவளா… அரைகுறை ஆடை அணிந்து எல்லாரும் முகம் சுளிக்கும் வகையில் ஆட்டம் போடுபவளா என் மருமகள்… திகைத்து சில நொடிகள் உறைந்தார் தெய்வானை.

“இன்னும் எத்தனை அதிர்ச்சியை என் தலைல தூக்கிப் போடப்போறானோ என் மகன்” குமுறிக் குமுறி அழுதார்.

“என்னை மன்னிச்சுக்கோங்க அத்தை”

காலில் விழுந்தவளை தூக்கி விடக் கூட மனமில்லாது தனது அறைக்கு சென்றார். அவருக்குத் தற்போது தேவை தனிமை. அந்தத் தனிமையில் தனது ஏமாற்றத்தைக் கண்ணீரால் கரைக்க முயன்றது தாயுள்ளம்.

அவரைத் தொடர்வதா இல்லை தனது அறைக்கு செல்வதா, சரத் இல்லாத நிலையில் தனது செயல்பாடு எந்தக் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற மனநிலையில் அப்படியே நின்றாள் ஹிமா.

“இன்னும் ஏன் இங்க நிக்கிற” என்றார் சின்னசாமி எகத்தாளமாக.

புரியாமல் ஏறிட்டவளை…

“இத்தனை டிராமா போட்டு சரத்தைக் கவுத்தது பத்தாதா…”

“நான்…”

கையை உயர்த்தி அவளைப் பேசவிடாமல் தடுத்தவர் “உனக்கு ரெண்டு நிமிஷம் டைம்… அதுக்குள்ளே இந்த வீட்டை விட்டு நடையைக் கட்டுற… இல்ல நானே உன்னையும் உன் மகனையும் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளுவேன்”

அதற்கு மேல் அங்கு எந்த உரிமையில் நிற்க, வாதிட என்று ஹிமாவுக்குப் புரியவில்லை. ஒரு சிறிய பெட்டியில் தனது உடமைகளை அடைத்தாள். துருவ்வை அழைத்தாள்.

“வா கண்ணா கிளம்பலாம்”

“எங்கம்மா… அப்பாவைப் பார்க்க போறோமா…

அவளது கண்கள் கலங்கின…”ஆமாம் சீக்கிரம் போய்டலாம்” என்றாள் மரத்த குரலில்.

“அந்த ஹோட்டல் சூப்பரா இருந்ததில்லம்மா… அப்பா நம்ம ரெண்டு பேரையும் அங்க பார்த்தா ஷாக் ஆயிடுவாரு இல்ல” துருவ் பேசிக்கொண்டே துணி மணிகளை எடுத்து வைக்க உதவி செய்தான்.

“பாட்டி ஏன்மா கோவமா இருக்காங்க… அப்பாகிட்ட சொல்லி இந்த தாத்தாவை இனிமே வீட்டுக்கு வரவேண்டாம்னு சொல்ல சொல்லணும். இவர் வந்தா பாட்டிக்கு நம்ம மேல கோபம் வருதும்மா”

சில மாதங்களில் சரத்தை தனது அப்பாவாகவும் அவனது தாயை தனது பாட்டியாகவும் ஏற்றுக் கொண்டது அந்தக் குழந்தை. அது கானல் நீர்… உன் அப்பா சரத் இல்லை என்று சொல்ல வாய் வரை வார்த்தைகள் வந்தது. இருந்தாலும் அவனது உற்சாகத்தைக் கெடுக்க மனமில்லாமல் கிளம்பினாள் ஹிமா.

அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு அந்த வீட்டு வாசலைக் கடந்தபோது அவளைத் தடுப்பார் இல்லை. அறையில் சோகத்தில் தெய்வானை. ஹிமாவை வீட்டை விட்டு அனுப்புவதே குறியாக சின்னசாமி. எங்கே அவள் மனம் மாறி திரும்ப வந்துவிட்டால்… வெளியே சென்றவுடன் கதவை இழுத்து பூட்டினார்.

சின்னசாமி நக்ஷத்திரா இருவரின் புண்ணியத்தால் சரத்தின் வீடும் சரத்தின் தாயார் மனதும் இறுக்கமாக பூட்டிக் கொள்ள அந்த இருள் கவிழும் வேளையில் கையில் பெட்டியுடன், சிறு குழந்தையுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்து கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள் ஹிமாவதி.

2 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 27”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 7’

அத்தியாயம் – 7   ரஞ்சனுக்கு உறக்கமே பிடிக்கவில்லை. கனவு நினைவு இரண்டிலும் நந்தனாவே நிறைந்திருந்தாள். மாதம் இருமுறை பெரியகுளம் வந்தது மறைந்து,  வாரம் இரண்டு  நாட்களாயிற்று. புதிதாக ஆரம்பித்த தொழிலுக்கு அது உதவியாகக் கூட இருந்தது. அவன் தாய் அகிலாண்டத்துக்கும்

உள்ளம் குழையுதடி கிளியே – 15உள்ளம் குழையுதடி கிளியே – 15

அத்தியாயம் – 15 அன்று இரவு தன்னையும் அறியாமல் தனது வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள் ஹிமா. சில வருடங்களாக அப்படி செய்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதையே அன்றும் தொடர்ந்தாள். ஹாலில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். தூங்கும் நேரமானதும் துருவ்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’

அத்தியாயம் – 14   ‘கௌமாரியம்மா என் மேல அன்பு செலுத்த இந்த உலகத்தில யாருமே இல்லையான்னு உன்னைக் கேட்டுட்டுத்தான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். ஆனா என்னைக் காப்பாத்தி புது வாழ்க்கை தந்த ப்ரித்வியை நல்லா வை. இனிமேலும் ப்ரிதிவியை சோதிக்காதே.