Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 17

உள்ளம் குழையுதடி கிளியே – 17

அத்தியாயம் – 17

வீட்டிற்கு வந்ததும் கிறிஸ்டியின் பகுதி நேரப் படிப்பும் அவளது வேலையும் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாள் ஹிமா.

“உனக்கெதுக்குடி இதெல்லாம்”

“என் மேல இரக்கப்பட்டு ஷாரதா மேடம் வேலை தந்திருக்காங்க. இது எத்தனை நாள் நிலைக்கும்? சரத்-நக்ஷத்திரா சேர்ந்தவுடன் நான் மறுபடியும் தெருவில் நிற்கக் கூடாதே”

“உன்னை தெருவில் நிக்க சரத் விட்டுடுவாரா…”

“கண்டிப்பா மாட்டார். ஆனால் ஏற்கனவே அவருக்கு ரொம்பத் தொந்திரவு தரேனோ என்ற குற்ற உணர்ச்சி என்னை அரிச்சுட்டே இருக்கு”

“எதுக்குடி குற்ற உணர்ச்சி”

“நேத்து என் மாமியார் துருவ் கிட்ட படுத்துட்டு என்னை மாடிக்கு அனுப்பிட்டாங்க. பாவம் சரத்துக்கு என்ன கஷ்டமா இருந்திருக்கும்”

“அவங்களைப் பொறுத்தவரை கணவன் அறையில் தான் மனைவி

தூங்கணும். அது புரியாத அளவுக்கு சரத் ஒண்ணும் ‘சின்னத்தம்பி’ இல்லை… இன்னொண்ணு சொல்லுவேன் ஆனால் நீ என்னை திட்டுவ… இல்லை இல்லை அடிப்ப”

“சரி திட்டல, அடிக்கல சொல்லு”

“அப்படியே தப்பு நடந்தாலும் அதில் வருத்தப்பட ஒண்ணுமில்லை”

“ஏண்டி இவளே… உன்னை…” அடிக்க ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.

“என்னை ஏண்டி அடிக்க வர்ற… ஒரு கணவன் மனைவிக்குள் இயல்பா ஏற்படும் நெருக்கம் உங்களுக்குள் ஏற்பட்டா தப்பில்லைன்னு சொன்னேன். இதில் கோபப்பட என்ன இருக்கு”

“இருக்குதாண்டி… என் கணவன் சத்யாதான்”

“அப்ப சரத்”

“என் நண்பர், வெல் விஷர்…” இழுத்தாள்.

“பாதுகாவலர்… உன் கண்ணில் இருந்து கண்ணீர் வர விடமாட்டார்… உன்னைத் தப்பா யாராவது சொன்னா ஜானோட கன்னம் பழுத்த மாதிரி அவங்க கன்னத்தையும் பழுக்க வைப்பார்” தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனாள் கிறிஸ்டி.

“போதுண்டி… இது எல்லாம்தான்”

“ஆக மொத்தம் நண்பனுக்கு ஒரு படி மேல ஆனால் கணவன் இல்லை… சரியா”

“ஆமாம்… உன்னால எங்க உறவைப் புரிஞ்சுக்க முடியாது”

“ஆமாம்டி மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது. சரியா… நான் கிளம்புறேன். மெட்ராஸ்க்கு ஒரு தரம் வா… அம்மாவுக்கு துருவ்வைத் தேடுது”

“வரேன்… நீயும் உடம்பை பார்த்துக்கோ… இன்னொண்ணு சொன்னா அடிக்கக் கூடாது”

“இப்ப உன் முறையா… சொல்லு”

“அம்மா என்கிட்டே வருத்தபட்டாங்க. உன்னை யாரோ ஒரு சொந்தக்காரப் பையன் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறானாமே… நீ ஏன் சம்மதிக்கக் கூடாது”

“நான் செய்யலாம் ஆனால் நீ கிடைச்ச வாழ்க்கையை வாழ மாட்டியா”

“சுப்… என் நிலமை வேற உன் நிலைமை வேற… டோன்ட் கம்பேர் ஆப்பிள்ஸ் வித் ஆரஞ்சஸ்…

நான் வாழ்ந்து முடிச்சவ கிறிஸ்டி… ஆனால் நீ வாழவே ஆரம்பிக்கல”

“வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் புதுசாத்தான் தொடங்குது ஹிமா அதில் வாழ்ந்து முடிச்சவங்க என்ற கேட்டகிரி இல்லவே இல்லை. நீ முதலில் வாழ ஆரம்பி. அப்பறம் என்னைப் பத்தி பேசலாம்”

“நல்ல சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும் கிறிஸ்டி நினைவு வச்சுக்கோ”

“சந்தர்ப்பம் எனக்கானதா இருந்தால் அது எப்படியாவது என்கிட்டே திரும்பவும் வரும். இப்ப சரத் அஞ்சு வருஷத்துக்குப் பின்னாடி உன்னைத் தேடி வந்த மாதிரி”

“உன்னை…” தோழியைப் பிடிக்க வந்தாள் ஹிமா.

“இந்த சண்டையை அப்பறம் வச்சுக்கலாம். ட்ரைனுக்கு லேட்டாச்சு” என்றபடி நழுவி ஓடினாள் கிறிஸ்டி.

“காலைல வந்துட்டு ராத்திரி கிளம்புறியே ஒரு நாலு நாள் தங்கிட்டு போலாமேம்மா…” என்று குறைபட்டுக் கொண்டார் தெய்வானை.

“இப்பத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன் ஆன்ட்டி. அடுத்த முறை லீவ் போட்டுட்டு வரேன். நீங்களும் சென்னைக்கு எங்க வீட்டுக்கு வரணும்”

“நிச்சயம் வரோம்மா…”

இரவு தானே கிறிஸ்டியை டிராப் செய்வதாக சொல்லி சரத் கிளம்பினான்.

“ஹிமா… கிறிஸ்டியை டிராப் பண்ணிட்டு, லாயர் ஆபிஸ் வரைக்கும் போக வேண்டியிருக்கு… வர்ற லேட்டாகும்… அதனால் எனக்குக் காத்திருக்காம சாப்பிட்டுட்டு துருவ் கூடத் தூங்கிடு” என்று சொல்லி அன்றைய இரவு ஹிமாவின் பிரச்சனையைத் தீர்த்தான்.

“விடிய விடிய எந்த லாயர் ஆபிஸ் திறந்து வச்சிருக்கான்…” சத்தமாகவே முணுமுணுத்தார் சின்னசாமி.

“உங்க மூத்த மகன் என்ஜினியரிங் காலேஜ்ல பார்ட்னர்ஷிப் வாங்கித்தரேன்னு பத்து ஆளுங்ககிட்ட பணம் வாங்கிருக்கானே… அந்தக் கட்டப் பஞ்சாயத்துதான் இன்னைக்கு நைட்… துணைக்கு என்னை வர சொல்லி கெஞ்சினான்னு போறேன். நான் வேணும்னா வீட்டில் இருந்துக்குறேன்… நீங்களே பஞ்சாயத்தை பாத்துக்குறிங்களா”

“அட… ராத்திரி பகலா வேலை பாக்குற லாயரைப் பாக்குறதே கஷ்டம் சரத்து… நீ வேலையை முடிச்சுட்டே வா கண்ணு… வீட்டில் லேடிஸைத் தனியா விடமுடியாது… நான் பாதுகாப்பா இருக்கேன்”

மாமாவை சரத் சமாளித்த விதம் கண்டு கிறிஸ்டி சிரித்துக் கொண்டே அவனுடன் கிளம்பினாள்.

வழியெங்கும் காரை ஓட்டிக் கொண்டு வந்த சரத்தைத் திரும்பிப் பார்த்து ஏதோ கேட்க நினைப்பதும் தயங்குவதுமாய் இருந்ததைக் கண்டுபிடித்து

“சொல்லும்மா என்ன விஷயம்” என்றான்.

“எல்லாரோட கேரக்டரையும் கணிச்சு அவங்களை டேக்கில் பண்ணுற நீங்க கல்யாண விஷயத்தில் மட்டும் எப்படித் தவறுனிங்க…

இந்த டம்மி கல்யாணம் இதெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களோட ஒத்துப் போகலையே”

“தவறுன்னு சொல்ல முடியாது, அறிவு முதிர்ச்சி இல்லாத சமயத்தில் தோன்றிய காதல், அதனால் ஏற்பட்ட நெருக்கமான உறவு, சட்டுன்னு ஒட்டிக்கவும் இல்லை ஒத்துவரலைன்னா பிரிஞ்சு போறதுமா இருக்கும் இன்றைய தலைமுறையைப் போல இல்லாம… காதலுக்காக எந்த அளவுக்கும் போகலாம் என்ற ஒரு பைத்தியக்காரத்தனமான எண்ணம்,

இதற்கிடையில் இரு நபர்களின் ஒத்துப் போகாத சிந்தனைகள்… காதலர்கள் இருவரின் முற்றிலும் வேறுபட்ட ப்ரையாரிட்டீஸ் இதெல்லாம் காரணம்”

“உங்க பிரச்சனையெல்லாம் சீக்கிரம் தீர்ந்துடும் சரத். ஆனால் ஹிமாவுக்கு ஒரு அன்செக்யூரிட்டி இருந்துட்டே இருக்கு… அது சூடுபட்டதால் கூட இருக்கலாம். விதி அவளோட வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னாடியே கருக்கிடுச்சு”

“ரொம்ப வருத்தம் தரும் விஷயம். அவளை சின்ன சந்தோஷமான ஒரு டாலா பார்த்துட்டு இந்த நிலைமையில் பார்க்க மனசு தாங்கல”

“அவள் சந்தோஷம் சத்யாதான்…”

“யாரது சத்யா…”

“துருவ்வின் அப்பா…” என்றாள் வியப்புடன்.

“சாரி… அவளிடம் அவரைப் பத்தின விவரங்களைக் கேட்டு மீண்டும் சோகத்தைக் கிளறிவிட விரும்பல”

“சரிதான் சரத்… ஹிமா நல்லா படிப்பா… அம்மா அப்பாவோட அல்டிமேட் ஏய்ம் பொண்ணோட திருமணம்தானே… அவளுக்குக் கல்யாணமானது. சத்யாவின் அம்மா ரொம்ப நல்லவங்கன்னு எல்லாம் சொல்ல முடியாது. பொழுதன்னைக்கும் பணம் கேட்பாங்க. அவ சத்யாட்ட இதை சொல்லி சண்டையெல்லாம் பிடிக்கமாட்டா… ஆனால் அவங்களோட ஆசை அடங்கவே இல்லை. அந்தப் பணத்தாசைக்கு சத்யாவே பலியானதுதான் சோகம்”

“என்னாச்சு கிறிஸ்டி” என்றான் அதிர்ச்சியுடன்

“துருவ் பிறந்து, ஹிமாவையும் துருவையும் சத்யா வீட்டுக்குக் கூட்டிட்டு போறதுக்கு ஒரு தேதி குறிச்சாங்க. அன்னைக்கு காலைல ஹிமா வீட்டுக்கு வந்த சத்யாவோட அம்மா, உடனடியா அதிக எடையில் தங்கச் சங்கிலி போட்டால்தான் கூட்டுட்டு போக முடியும்னு டிமாண்ட் பண்ணாங்க.

நல்ல நேரம் முடியுறதுக்கு முன்னாடி நகையை வாங்கிட்டு வரணும் என்ற வேகத்தில் சத்யாவும், ஹிமாவோட அப்பாவும் பைக்கில் கிளம்புனாங்க. வழியில் ஆக்ஸிடென்ட். இவங்களோட ஆசை அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் முடிச்சுடுச்சு”

“ஓ மை காட்… ஒரு பொண்ணோட பணத்தாசை ரெண்டு உயிரைப் பலி வாங்கிடுச்சே”

“சோகமான விஷயம் என்னன்னா… அவங்க அதுக்குக் காரணம் காட்டினது துருவ்வோட ராசியை. ஹிமா, துருவ் ரெண்டுபேருக்கும் ஒரு சப்போர்ட்டும் பண்ணல. அதுதவிர சத்யாவுக்கு வந்த இழப்பீட்டையும் ஒரு பைசா கூடத் தராம எடுத்துகிட்டாங்க”

“ஹிமா… கணவனே போயிட்டதுக்கப்பறம் இந்த பணம் எதுக்குன்னு நினைச்சிருப்பா…”

“அதேதான் சரத். இவங்கம்மா மருத்துவமனையில் இருக்குறது தெரிஞ்சும் அவங்க யாராவது ஒத்தாசைக்கு வரணுமே… ம்ம்ம்ஹும்… இத்தனைக்கும் சத்யாவின் அப்பா இவங்க அம்மாவுக்கு அண்ணா முறை. அவர்கிட்ட நிலமையை சொன்னால் எதுக்கு வீணா வைத்தியம் பாக்குறன்னு அறிவுரை சொல்லுவார்”

“இந்த மாதிரி மனிதர்களும் இருக்குறாங்க… நம்ம வாழ்க்கையில் இவங்களையும் அனுசரிச்சு வாழ வேண்டியிருக்கு. “ என்றான் வெறுப்புடன்.

ஹிமா இருவரின் நினைவிலும் தோன்றியதால் மௌனமானார்கள். சரத்துக்கு ஹிமாவை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது.

கிறிஸ்டியை ரயிலில் ஏற்றிவிட்டு அவள் மறுக்க மறுக்க சிப்ஸ் பாக்கெட், தண்ணீர் பாட்டில், பத்திரிக்கை அனைத்தையும் வாங்கித்தந்தான்.

“சரத்… உங்களை மாதிரி ஒரு சகோதரன் இல்லையேன்னு பீல் பண்ண வைக்கிறிங்க”

“இப்ப கூட நான் உன் சகோதரன்தான்மா”

அவனை ஆராய்ச்சியோடு உற்றுப் பார்த்தாள். “இதே மாதிரி ஹிமாட்ட ஃபீல் பண்ணிருக்கிங்களா சரத்” என்ற அவளது கேள்வி அவனை அந்த இடத்திலேயே நிறுத்தியது.

“என்னதிது இவ்வளவு நேரம் யோசனை பண்ணுறிங்க…”

“இதுவரைக்கும் அவளை அப்படி நினைச்சதே இல்லை கிறிஸ்டி. அதனால்தான் இந்த விபரீதமான திட்டத்தில் அவளையும் கூட்டு சேர்த்துகிட்டேன். அதுதான் ஏதாவது தப்பு பண்றேனோன்னு யோசிச்சேன்”

“ரொம்ப பீல் பண்ணாதிங்க… அவளும் சம்மதிக்கலைன்னா இந்தத் திட்டத்துக்கு வேற யாரை அப்ரோச் பன்னிருப்பிங்க” சிரித்தாள்.

“முதலில் ராஜி டம்மி கல்யாணத்தை சஜெஸ்ட் பண்ணபோதே பைத்தியக்காரத்தனமாத்தான் பட்டுது. கல்யாணம் மாதிரி பெரிய விஷயமெல்லாம் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிக்க முடியுமா… ஆனால் என்னவோ ஹிமாவைப் பார்த்ததும் அவளைக் கேட்கணும்னு ஒரு எண்ணம்… என்னையும் அறியாம வெளிய வந்துருச்சு.

ஹிமா சம்மதிச்சதும், சமாளிக்கவே முடியாதுன்னு நினைச்ச எங்கம்மாவும் அவளும் நெருக்கமா இருக்குறதும்… இப்ப கூட இதெல்லாம் கனவு மாதிரிதான் படுது”

ட்ரைன் கிளம்பும் நேரம்… மனதை திடப்படுத்திக் கொண்டு கிறிஸ்டி அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“சரத்… ஒருவேளை நீங்க நக்ஷத்திராவைப் பார்க்காம, காதலிக்காம இருந்திருந்தால் ஹிமாவைக் காதலிச்சிருப்பிங்களோ…”

சரத்சந்தரின் முகத்தில் திகைப்பு. ட்ரைன் நகரத் தொடங்கியது. கிளம்பும் முன்

“இதுக்கு பதிலை என்கிட்டே சொல்ல வேண்டாம். ஆனால் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க… ஆனால் அது நூறு சதவிகிதம் உண்மையா இருக்கணும்”

ரயில் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாலும் அதில் சென்றவள் கேட்ட கேள்வி அவன் மனதை விட்டு அகலவில்லை. ஆனால் அதற்கு பதில்?

1 thought on “உள்ளம் குழையுதடி கிளியே – 17”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 1உள்ளம் குழையுதடி கிளியே – 1

ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க…. ‘உள்ளம் குழையுதடி கிளியே’ வாயிலாக உங்களை சந்திக்க வந்துவிட்டேன். ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட முடிவுக்குத் தள்ளும்  ஆற்றல் சூழ்நிலைக்கு மட்டுமே உண்டு. நாம் படிப்பாகட்டும், உத்யோகமாகட்டும் நாம் ஆசைபட்டது  ஒன்றாக இருக்கக் கூடும் ஆனால்

உள்ளம் குழையுதடி கிளியே – 20உள்ளம் குழையுதடி கிளியே – 20

அத்தியாயம் – 20 மனதில் பூட்டி வைத்ததைப் பகிர்ந்து கொண்டதில் மனமே சற்று லேசானதைப் போலத் தோன்றியது சரத்துக்கு. “இப்ப காதல் டாபிக்குக்கு வருவோமா…” என்று ஹிமா கேட்டதும் ஒரு வினாடி திகைத்து விழித்தவன். மறுபடியும் குறும்புடன் “நீ மனைவியா நடிக்க

உள்ளம் குழையுதடி கிளியே – 6உள்ளம் குழையுதடி கிளியே – 6

அத்தியாயம் – 6 சென்னை வீட்டில் பொருட்கள் அதிகமில்லை. அருகிலிருந்தவர்களுக்கு உபயோகப்படும் என்று நினைத்தவற்றை அவர்களிடம் தந்தாள். மர சாமான்களையும் பொக்கிஷமாய் பாதுகாக்கும் சில பொருட்களையும் க்ரிஸ்ட்டியின் வீட்டில் அனுமதி பெற்று பத்திரமாக வைத்தாள்.  “பத்திரமா பாத்துக்கோடி மூணு வருஷம் கழிச்சு