Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 16

உள்ளம் குழையுதடி கிளியே – 16

அத்தியாயம் – 16

சின்னையன் வேக வேகமாய் நடந்து மெதுவாக வீட்டுக் கதவைத் திறந்து, இருட்டில் சந்தமெழுப்பாமல் பூனை போல நடந்து ஹாலில் விரித்த பாயில் படுத்து போர்வையைப் போர்த்திக் கொண்டார்.

இது எதையும் அறியாத சரத் அறைக்குள் நுழைந்து மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்த ஹிமாவிடம் மன்னிப்பு கேட்டான்.

“ஹிமா ஸாரி லேட்டாச்சு…”

“பரவல்ல சரத். முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். சரி பாருங்க. எல்லாரும் தூங்கிருப்பாங்க. நான் கீழ போறேன்”

மெதுவாக மாடியிலிருந்து கீழே இறங்கினாள் ஹிமா. குறட்டை விட்டுத் தூங்குவது போல பாவனை செய்த சின்னையனை நம்பித் தனது அறைக்கு சென்றவள் தெய்வானையும் துருவ்வும் கட்டிலில் நன்றாக உறங்குவது கண்டு, வேறு வழியில்லாமல் தெய்வானையின் அறைக்கு சென்று சிறிது நேரம் தூங்கினாள். காலை அனைவரும் எழுவதற்கு முன்பு எழுந்து வீட்டின் புழக்கடையிலிருந்த குளியலறையில் குளித்துவிட்டு வேலைகளைத் துவங்கினாள்.

மெதுவாக எழுந்து வந்த தெய்வானையிடம் காலை காப்பியைத் தந்தவள் “இன்னைக்கு ஏதாவது ஸ்பெஷலா டிபன் பண்ணலாமா. அவருக்கு என்ன பிடிக்கும் அத்தை” என்றாள்.

“உன் புருஷனைப் பத்தி உனக்குத் தெரியாததா என் தங்கச்சிக்குத் தெரியப் போகுது. நீயே அவனுக்குப் பிடிச்சதா சமை பார்ப்போம்” என்று குறுக்கிட்டுத் தன்மையாக சொன்ன அண்ணனைப் பார்த்து தெய்வானைக்கு வியப்பு.

முதல் நாள் இரவு சரியான தூங்கமின்றி சோர்ந்திருந்தவளைப் பார்த்து “இன்னைக்கு காலை சாப்பாட்டை நான் பாத்துக்குறேன். நீ கொஞ்ச நேரம் தூங்கு போ”

“இல்லத்த… நான் செய்றேன்”

“லீவு நாள் கொஞ்ச நேரம் தூங்கி எந்திருச்சு வா… போ…” என்று அனுப்பிவிட்டார்.

“என் மகள் இருக்க வேண்டிய இடத்தில் என்னமோ திருட்டுத்தனம் செஞ்சுட்டு இவ வந்து உக்காந்திருக்கா… இவளை எப்படித் துரத்துறது…” சிந்தித்தவண்ணம் காப்பியைப் பருகினார் சின்னசாமி.

அவருக்காகவே பழம் நழுவி பாலில் விழுவதைப் போல அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது.

காலை ஒய்வெடுத்ததும் அந்த நாள் உற்சாகமாகவே செல்வதாக ஹிமாவுக்குப் பட்டதும். அதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வண்ணம் கிறிஸ்டியின் வருகை அமைந்தது.

“ஹிமா ஒரு பிரெண்டை பிக் அப் பண்ணனும்… மத்தியானம் கொஞ்சம் ஸ்பெஷல் சாப்பாடு செஞ்சு வை” என்று உத்தரவிட்டு சரத் கிளம்பியபோது கூட தன் தோழிதான் அந்த விருந்தினள் என்று ஹிமா நினைக்கவில்லை. ஆனால் கிறிஸ்டியைக் கண்டதும் சந்தோஷம் பொங்க அவளை நோக்கி ஓடினாள். தோழிகள் இருவரும் தனது அன்பினைப் பரிமாறிக் கொண்டனர். சந்தோஷத்தில் உருவாகும் நட்பை விட துன்பத்தில் துணை நிற்கும் தோழமைதானே நிலைத்து நிற்கும்.

பெருமை பொங்க தோழியை அனைவரிடமும் அறிமுகப் படுத்தினாள்.

“ஹிமா… நீ பேசிட்டு இரு. நான் இன்னைக்கு சமைக்கிறேன்” என்று பரிவுடன் மருமகளிடம் சொன்ன தெய்வானையைக் கண்டு மனதினுள் பூரித்தாள் கிறிஸ்டி.

“நம்ம மூணு பேரும் பேசிகிட்டே ஆளுக்கு ஒரு வேலையா செஞ்சு முடிச்சுடலாம் ஆண்ட்டி” என்று விளையாட்டாய் சொன்ன சென்னை பெண்ணைப் பற்றி ஒரு நல்ல அபிப்ராயமே தெய்வானைக்கும் தோன்றியது.

“ராத்திரி முழுக்க பிராயாணம் வந்திருப்பியேம்மா… கொஞ்சம் தூங்கலாமே…”

“இருக்கட்டும்மா… எத்தனையோ நாள் கழிச்சு ஹிமாவைப் பார்க்கிறேன். இப்ப எதுக்கு தூக்கம்” என்றபடி யார் தடுத்தும் கேளாமல் சமையலறையில் நுழைந்து காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.

“அத்தை நானும் கிறிஸ்டியும் சமையலைப் பாத்துக்குறோம். நீங்க குலதெய்வம் கோவில் பூஜை விஷயமா யார்கிட்டயோ பேசணும்னு சொன்னிங்களே…” என்று மாமியாருக்கு நினைவு படுத்தினாள்.

“நல்லவேளை நினைவு படுத்தின… சரத்தோட லீவு நாளைக் கேட்டுக்குறேன்”.

தெய்வானை அகன்றதும் தோழிகள் இருவருக்கும் தனிமை கிடைத்தது.

“சமையலுக்கு ஒரு அம்மா இருக்குறதா சொன்னியே” என்றாள் கிறிஸ்டி.

“அவங்க உறவுக்காரங்க கல்யாணத்துக்குப் போயிருக்காங்க இன்னும் கொஞ்ச நாளில் வந்துடுவாங்க” என்று பதில் சொன்னாள் தோழி.

“மத்தபடி உன் மாமியார் ஓகேதானே…” அக்கறையோடு கேட்டாள்.

“சரத்தின் அம்மா தங்கமானவங்க…”

“இல்ல கொஞ்ச நாள் முன்னாடி கோபமா வார்த்தைகள் வந்துதே… அது மாதிரி வேற ஏதாவது…” இழுத்தாள்.

“அவங்க நிலையில் நானிருந்தாலும் இதை விட அதிகமா கோபப் பட்டிருப்பேன் கிறிஸ்டி” என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தாள்.

“ஹப்பாடி… உன் வாழ்க்கை கோயம்புத்தூரில் ஸ்மூத்தா போறதைப் பார்க்கவே நல்லாருக்கு”

“டெம்பிரவரி வாழ்க்கைன்னு சொல்லு”

“இதை நீ மறக்கவே மாட்டியா… :”

விரக்தியாய் சிரித்த ஹிமா…”மறந்தா… எத்தனை பேருக்கு செய்யும் துரோகம் தெரியுமா… அன்பான அத்தைக்கு, நம்பிக்கை வச்சிருக்கும் சரத்துக்கு, அவரோட காதலிக்கு… எல்லாத்துக்கும் மேல என்னோட சத்யாவுக்கு”

சமையலறைக்கு வெளியே தோட்டத்தின் அருகே இருந்த சாளரத்தின் பக்கவாட்டில் நின்று அவர்கள் பேசுவதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்த சின்னசாமிக்கு அந்த சம்பாஷணையின் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. ஆனால் சரத்தின் காதலி என்று சொன்னது மாத்திரம் தெளிவாக விழுந்தது.

“காதலியா… அடிப்பாவி புருஷனுக்கு ஒரு காதலி இருக்கா… இதை என்னமோ விஜய் டிவி ப்ரோக்ராம் மாதிரி அறிவிக்கிற… ஒரு சரியான பொண்டாட்டின்னா அவனை இந்நேரம் அவனுக்கு சாத்துபூசை நடத்திருக்கணும்…” என்று சத்தமெழாமல் சொன்னார்.

“தற்காலிகம்னு என்னமோ சொன்னாளே… யாரது சத்யா… ஒருவேளை அதுதான் சரத்தோட காதலி பெயரா… அவள்தானே துரோகி, அந்தப் பொண்ணுக்கு இவ ஏன் துரோகம் செய்யணும்…”

என்று தலையைப் பிய்த்துக் கொண்டவர் தோழிகள் பேச்சு தொடருவதைக் கண்டு, முதலில் இவர்கள் பேச்சை முழுவதுமாகக் காதில் வாங்கிக் கொள்ளலாம், அதன் பின் இந்தப் புதிரை விடுவிக்கலாம் என்று முடிவு செய்தார்.

அவர் மறுபடி அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்த போது ஹிமா தோழியைக் கடிந்து கொண்டிருந்தாள்.

“ஜான் செஞ்ச துரோகத்தை உன்னால எப்படி மறக்க முடிஞ்சது. அவரைப் பார்க்கத்தான் அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தியா… சரி எந்த ஹாஸ்பிடல்”

மருத்துவமனையின் பெயரை சொன்னாள்.

“எங்கம்மாவைக் கூட அங்கதான் சரத் சேர்த்திருக்கார்…”

“அப்படியா… அப்ப ஆன்ட்டியைப் பார்த்துட்டு கூடவே ஜானைப் பாக்குற வேலையையும் முடிச்சுடலாம்”

“அது கொஞ்சம் செலவு பிடிக்கும் மருத்துவமனை. உன்கிட்ட பணம் கேட்கத்தான் கூப்பிட்டிருப்பார்னு நினைக்கிறேன். நீயும் அந்தாளு சொன்னதை நம்பி அடிச்சு பிடிச்சு கிளம்பி வந்துட்ட”

“நிஜம்மா சொல்லப்போனா இத்தனை வருஷத்தில் அந்தாளோட முகம் கூட எனக்கு சரியா நினைவில்லை. ஆனால் ஆக்ஸிடென்ட்ல அடிபட்டுப் படுக்கையில் இருக்குறவன் கிட்ட நம்ம பகை பாராட்ட முடியுமா…”

“எப்படியோ போ… ஆனால் பகைவனுக்கருளும் உன் நெஞ்சம் பாம்புக்குப் பால் வார்க்காம இருந்தால் சரி” என்று சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் ஹிமா.

சரத்தின் தாய் தெய்வானை மற்றும் மருத்துவமனையிலிருக்கும் சௌந்திரவல்லி சந்திப்பு எந்த திசையில் பயணிக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியவில்லை என்றாலும் இப்போதைக்கு அது நடக்காமல் இருந்தால் நல்லது என்றே அனைவரும் நினைத்தார்கள் சின்னசாமி உட்பட.

அதை எப்படி சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்த போது

தெய்வானையோ தெய்வாதீனமாக “எல்லாரும் போனா சரிவராது. இன்னைக்கு நான் துருவ்வைப் பாத்துக்குறேன். இன்னொரு நாள் இவனை ஸ்கூலுக்கு அனுப்பிட்டு உங்கம்மாவைப் பாத்துட்டு வரலாம்” என்று மருமகளிடம் சொல்லிவிட்டார்.

ஒரு பெரிய பிரச்சனைக்கு அவரே தீர்வு கண்டுவிட்ட நிம்மதியில் மூவரும் கிளம்பினார்கள்.

முன்பே தயாராகி சின்னசாமியும் எல்லாரையும் முந்திக் கொண்டு வாசலில் நின்றார். அவருக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஊகித்தபடி ஹிமாவின் தாயார், கிறிஸ்டியின் கணவன் இருவரும் ஒரே மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களை சந்தித்தால் ஏதாவது ஒரு பிடி கிடைத்துவிடும். அதனால் அவர்களை சந்தித்தே ஆகவேண்டும்

ஆனால் வாசலில் சின்னசாமியைக் கண்டதும் அவரை கழற்றி விட்டேயாகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் சரத்.

“நானும் உங்க கூட வர்றேன் ஆன்ட்டி” என்று கிறிஸ்டியின் கால்களைக் கட்டிக் கொண்டு அடம்பிடித்த துருவ்வை சின்னசாமியின் கைகளில் தந்தவன்.

“துருவ்… இந்தத் தாத்தாவும் நம்ம பாட்டியும் உன்னை பார்க்குக்குக் கூட்டிட்டு போவாங்க. தாத்தா ரெடியா இருக்கார். பாட்டியையும் கிளம்ப சொல்லு” என்றதும் ஒப்புக் கொள்வதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.

வழியில் சரத் லாயரிடம் சில பேப்பர்களை பெற்றுக் கொண்டு மூவரும் மருத்துவமனை வந்தடைந்தனர். ஹிமா கிறிஸ்டியிடம் “உன்னை விட்டுட்டு ஓடினதிலிருந்து ஒரு நியூசும் இல்லாம இவ்வளவு நாள் கழிச்சு உன்னை காண்டாக்ட் பண்றார்ன்னா… எனக்கு மனசுக்கு சரியா படலடி… கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று எச்சரித்தாள்.

“ஹிமா உன்னை மாதிரியேதான் சரத்தும் சொன்னார். காலைல போன் பண்ணப்ப விவரங்கள் எல்லாம் கேட்டுட்டு எனக்காக அவரோட லாயர் மூலமா சில பேப்பர்ஸ் ரெடி பண்ணி வச்சிருக்கார்”

சரத்தும் அவன் பங்குக்கு எச்சரித்தான் “சொல்லவே கஷ்டமா இருக்கு கிறிஸ்டி. அவருக்கு ஆக்ஸிடென்ட் எல்லாம் இல்லை. ஏதோ லேடிஸ் விவகாரம். அதில் அடி வாங்கி ரோட்டில் விழுந்து கிடந்தவரை யாரோ இரக்கப்பட்டு இங்க அட்மிட் பண்ணிருக்காங்க. நீங்க அவரை பாருங்க. நான் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்”

கிறிஸ்டி ஜானை சந்தித்தபோது அவன் கேட்ட முதல் வார்த்தை

“என்ன ஆளே பளபளப்பா மாறிட்ட… உனக்கேது இவ்வளவு காசு… இன்னொரு கல்யாணம் பண்ணிட்டியா என்ன?” என்றான்.

“இங்கேருந்து பாத்தேன். வாசல் வரை வந்தது உன் பிரெண்ட் ஹிமாவதிதானே… அவளேதான்… நம்ம கல்யாணத்துக்கு பச்சை பட்டுப் புடவை கட்டிட்டு வீட்டுக்காரன் கூட வந்திருந்தாளே…”

கல்யாணத்துக்கு வந்த மனைவியின் தோழியின் புடவையைக் கூட நினைவு வைத்திருக்கும் இவன் என்னமாதிரி பட்டவன்.

கிறிஸ்டி சில ஜென்மங்கள் எத்தனை பட்டாலும் திருந்தாது என்பதை இரண்டாவது முறையாக உணர்ந்தாள்.

“ஆமா… அவ வீட்டுக்காரன் கூட செத்துட்டான்ல… இப்ப இருக்குறவன் யாரு… அவளோட ரெண்டாவது புருஷனா…”

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்” பல்லைக் கடித்தாள் கிறிஸ்டி.

“அவனைப் பார்த்தாலே பணக்காரனா தெரியுது, இவ வேற அழகான பொண்ணு… ஒருவேளை கம்பனி தர்றாளோ… இவ்வளவு ப்ளக்சிபிலா இருப்பான்னு முன்னாடியே தெரியாம போயிருச்சே… மிஸ் பண்ணிட்டேன்… ஒரு வேளை இன்னமும் சான்ஸ் இருக்கோ ஹே ஹே” என்று விகாரமாக சிரித்தான்.

“வாயை மூடு…”

“சரி… அவளைப் பத்தி பேசல… நீங்களே பிச்சைக்காரக் குடும்பமாச்சே… உனக்கேது இவ்வளவு பணம். உங்கப்பனுக்கு லாட்டிரி அடிச்சுடுச்சா… இல்ல இந்த மாதிரி நீயும் ஒரு புளியங்கொம்பா பிடிச்சுட்டியா…”

அவன் காதோடு சேர்த்து அறைய வேண்டும் போல கிறிஸ்டிக்கு வெறி எழுந்தது.

“என்னை எதுக்குக் கூப்பிட்ட… இப்ப உனக்கு என்ன வேணும்”

“பணம்… பணம்… பணம்… அதைத்தவிர எனக்கு வேறென்ன வேணும். இப்பப் போகக் கூட இடமில்ல. புதுசா எல்லாத்தையும் ஸ்டார்ட் பண்ணனும்”

“ஏன்… உன் கூட ஓடி வந்தவ என்னானா?”

“வேறொருத்தன் கூட ஓடிட்டா… என்ன இருந்தாலும் உன்னை மாதிரி வருமா… வீட்டுக்காரனுக்கு ஆக்ஸிடென்ட்டுன்னு தெரிஞ்சதும் அடிச்சு பிடிச்சுட்டு ஓடி வந்த பாரு… நீதாண்டி பத்தினி”

“வீட்டுக்காரனா… இவ்வளவு நாளா நீ எங்க இருந்தேன்னு தெரியாம இருந்தது. இப்ப தெரிஞ்சுருச்சுல்ல… ஒழுங்கா டைவர்ஸக் கொடுத்துட்டு என் கண்ணில் படாம ஓடிப் போயிடு”

“டைவேர்ஸ் தராம ஓடிப் போனா…” தெனாவெட்டாய் கேட்டான் ஜான்.

“ஓடுறதுக்குக் கால் இருக்காது” என்றபடி அறையினுள் நுழைந்தான் சரத்.

“இந்தம்மா… இவனுக்கு பில் செட்டில் பண்ணிட்டேன்” என்றவாறு பில்கள் அடங்கிய பைலைத் தந்தான்.

“ஓ… தோழிங்க ரெண்டு பேருக்கும் நீதான் கம்பனி தர்றியா” சொல்லி முடிப்பதற்குள் அவன் கண்களில் பூச்சி பறந்தது. வாங்கிய அறையின் தாக்கத்தில் பொறி கலங்கிவிட்டான்.

“பெண்ணின் கேரக்டரைப் பத்தித் தப்பா பேசினாலே எனக்குப் பிடிக்காது. நீ என் மனைவியையும், கூடப் பிறக்காத தங்கையையும் என்னுடன் சம்பந்தப் படுத்திப் பேசுற… இதுதான் உனக்கு முதலும் கடைசியுமான எச்சரிக்கை. இனிமே என்னையோ என் பாதுகாப்பில் இருக்குறவங்களையோ தப்பா பேசினால் கடும் விளைவுகள் ஏற்படும்” எச்சரித்தவனை அதிர்ச்சியோடு பார்த்தான் ஜான்.

“கிறிஸ்டி டைவேர்ஸ் பத்திரம் கொண்டு வந்திருக்கா… சத்தம் போடாம சைன் பண்ணிட்டு நான் தர்ற பணத்தை வாங்கிட்டு ஓடிப் போயிடு… வீண் தகராறு பண்ண… நடக்கக் கூடக் கால் இருக்காது… எப்படி வசதி” நக்கலாய் கேட்டான்.

“எவ்வளவு பணம் ஸார் தருவிங்க…” பம்மிக்கொண்டு ஜான் கேட்டான்.

பச்சோந்தி ஜான் பம்மியது கூட பெரிதாகத் தோன்றவில்லை.

‘என் மனைவி, என் கூடப் பிறக்காத தங்கை’ என்று சொல்லி ஒரு வார்த்தையில் ஹிமாவுக்கும் தனக்கும் புது விடியலைக் காண்பித்த தேவதையாய் சரத் தோன்றினான் கிறிஸ்டிக்கு.

‘மனசு ஏத்துக்க ஆரம்பிச்சதை தன்னையறியாம வரும் வார்த்தைகள் காட்டிக் கொடுத்துடும். ஹிமா என் மனைவின்னு உங்க வாயிலேயே வந்துருச்சு சரத். ஆனா அவளை உங்ககூட சம்பந்தப்படுத்தித்தான் பேசுவாங்கன்னு நீங்க எப்ப உணருவிங்க.

இன்னமும் என் மாமியாருன்னு சொல்ல மனசு வராம சரத்தோட அம்மான்னு சொல்லிட்டு இருக்குற ஹிமா எப்ப என் மாமியார், என் வீட்டுக்காரர்ன்னு சொல்லுவார். எல்லாத்துக்கும் மேல எல்லாத்திலையும் ஒரே அலைவரிசைல சிந்திக்கும் நீங்க இருவரும் மட்டும்தான் சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ முடியும்னு எப்ப உணரப்போறிங்க’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 20உள்ளம் குழையுதடி கிளியே – 20

அத்தியாயம் – 20 மனதில் பூட்டி வைத்ததைப் பகிர்ந்து கொண்டதில் மனமே சற்று லேசானதைப் போலத் தோன்றியது சரத்துக்கு. “இப்ப காதல் டாபிக்குக்கு வருவோமா…” என்று ஹிமா கேட்டதும் ஒரு வினாடி திகைத்து விழித்தவன். மறுபடியும் குறும்புடன் “நீ மனைவியா நடிக்க

உள்ளம் குழையுதடி கிளியே – 27உள்ளம் குழையுதடி கிளியே – 27

அத்யாயம் – 27 மெய் காதல் தவறையும் மன்னிக்கும். சரத்தால் ராஜியின் துரோகத்தை மன்னிக்க முடியாவிட்டாலும் மறக்கத் தயாரானான். பொய் காதல் கொண்ட அந்த நக்ஷத்திராவுக்கு பழி வாங்கும் உணர்வே மேலோங்கி இருந்தது. தனக்கு துரோகம் செய்தது சரத்தும் ஹிமாவும்தான் என்று

உள்ளம் குழையுதடி கிளியே – 12உள்ளம் குழையுதடி கிளியே – 12

அத்தியாயம் – 12 காலையில் எழுந்து தோட்டத்தில் சுற்றிவிட்டுத் தாயிடம் ஓடி வந்தான் துருவ். பழனியம்மா ஊருக்கு சென்றுவிட்டதால் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள் ஹிமா. “இந்த வீடு ரொம்ப பெருசுல்லம்மா…” “ஆமாம் கண்ணா…” “நான் வீட்டுக்குள்ள ஏரோப்ளேன் ஓட்டி விளையாடிட்டு