Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 15

உள்ளம் குழையுதடி கிளியே – 15

அத்தியாயம் – 15

ன்று இரவு தன்னையும் அறியாமல் தனது வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள் ஹிமா. சில வருடங்களாக அப்படி செய்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதையே அன்றும் தொடர்ந்தாள். ஹாலில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். தூங்கும் நேரமானதும் துருவ் அவளைத் தேடி வந்துவிட்டான்.

“அம்மா தூக்கம் வருது… வாங்க தூங்கலாம்” என்று முந்தானையைப் பிடித்து இழுத்தான் மகன்.

அறைக்கு அழைத்து சென்றவுடன் அவளை எதிர்கொண்டார் தெய்வானை.

“நான் அவனை தூங்க வைக்கிறேன். நீ இந்தப் பாலைக் கொண்டு போயி சரத்துக்குக் கொடு…”

வேண்டா வெறுப்பாய் அவள் வாங்கிக் கொண்ட பொழுது…

“நான் இன்னைக்கு துருவ் கூட தூங்குறேன்” என்று அடுத்த குண்டைப் போட்டார்.

“வந்து… துருவ் ராத்திரி என்னைக் கேட்பான்”

“அவனைக் கைக்குள்ளயே வளர்த்தேன்னா எப்படி தைரியம் வரும். எல்லாம் நான் பாத்துக்குறேன் சரத்துக்கு என்னமோ லெட்டர் வேணுமாம்”

அந்த வயதான பெண்மணியின் எண்ணம் புரிந்தும் மறுக்க வழியில்லாமல் மாடிக்குப் படியேறினாள். ஏறும் போது ஒவ்வொரு காலிலும் இரும்பு குண்டு ஒன்றினைப் பிணைத்தது போலக் கனத்தது.

சட்டையைக் கழட்டிவிட்டு இரவு உடையை அணிய முற்பட்ட சரத் அறையின் கதவை மெலிதாகத் தட்டும் சத்தம் கேட்டு வியப்புடன் திறந்தான். வெளியே நின்ற ஹிமாவைக் கண்டதும் அவனது முகத்தில் ஒரு கேள்வி தோன்றி அதே வேகத்தில் மறைந்தது.

“அத்தை இதைத் தந்துட்டு வர சொன்னாங்க” டம்ளரை நீட்டினாள்.

“உள்ளே வா ஹிமா…” என்றவனை ஏறிட்டுப் பார்க்காமல் தனது தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

மேல்சட்டை போடாமல் தான் நின்றிருந்ததை உணர்ந்தவன் லாவகமாக அங்கிருந்த பூந்துவலையை மாலையை போல சுற்றிக் கொண்டான்.

“இல்ல சரத்… நீங்க குடிச்சுட்டுத் தாங்க… நான் இங்கேயே நிக்கிறேன்”

“கீழ போயி…”

“இந்த சோபால உக்காந்திருக்கேன்… கொஞ்ச நேரம் கழிச்சு கீழ போயி துருவ் கிட்ட படுத்துக்குறேன்… இல்லேன்னா உங்கம்மா ரூமில் படுத்துக்குறேன்”

“எங்க மாமா ஹால்லதான் படுத்திருக்கார். அவருக்கு சரியா தூக்கம் வராது. ராத்திரி முழுசும் நடந்துட்டே இருப்பார். விடியற்காலைலதான் தூங்குவார்”

கலக்கத்துடன் அவனையே கேட்டாள் “இப்ப நான் என்ன செய்யட்டும் சரத்”

குறும்புடன் சிரித்தவன்…”இப்படிக் கெஞ்சினா என்ன செய்றது… பேசாம ரெண்டு பேரும் உக்கார்ந்து ப்ராஜக்ட் வேலையை செய்யலாம்” என்றான்.

அடுத்து அவளிடம் ஒரு பைலை பார்க்க சொல்லிவிட்டு

“ஒரு நிமிஷம் டிரஸ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றவாறு குளியலறைக்குள் சென்றான்.

அவனது அறையை சுற்றிப் பார்வையை ஓட விட்டாள் ஹிமா. கீழ்த்தளத்தில் ஒரு குடும்பம் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி தான் ஒரு குடும்பஸ்தன் என்று ஊராரை நம்ப வைக்க முடிந்தவனால் மாடியில் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஒரு பெண்ணின் பார்வை படாத பேச்சிலர் ரூமாவாகவே அது காட்சியளித்தது.

படுக்கை அறையும், அலுவலக அறையையும் இணைத்தார்போல பெரியதாகவே இருந்தது. ஓரத்தில் இருந்த மேஜையில் அவனது லேப்டாப் மானிட்டர் ஒன்றுடன் இணைக்கப் பட்டிருந்தது. மற்றொரு நீளமான சோபாவில் அவனது பெட்டிகள் திறந்த வண்ணம் இருந்தது. அதில் அவனது உடைகள் பாதி சோபாவிலும் பாதி பெட்டியிலுமாக இறைந்திருந்தது. துணிகளை உள்ளே போட்டுப் பெட்டியை மூடி வைக்கலாம் போலத் துறுதுறுத்த கைகளை சிரமப் பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். யாரோ ஒருவனது சூட்கேஸ் எப்படி இருந்தால் எனக்கென்ன… என்று தன்னுள் கேள்வி கேட்டுக் கொண்டாள்.

‘ஹிமா அவன் யாரோ ஒரு குழந்தை என்று நினைக்காமல் துருவ்விற்கு பிடித்த விளையாட்டு சாமான்களை வாங்கி வரவில்லையா… ‘

‘அவன் குடும்பத் தலைவனாக தாய்க்கும் மாமாவுக்கும் நிரூபிக்க வேண்டிஇருந்தது. அந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் துருவ்வுக்கு விளையாட்டு சாமான்களை வாங்கி வந்தது. பணத்துக்காக நடிக்க வந்த என்னிடம் இதற்கு மேல் அவன் எதிர்பார்க்கக் கூடாது’

‘பணத்துக்காக நடிக்க வந்த உனக்கு அவன் செய்திருக்கும் நன்மைகளை நினைத்துப் பார். உன் தாய்க்கு மருத்துவ செலவு செய்கிறேன் என்று சொன்னான். சாதாரண மருத்துவத்திற்கே பணமில்லாமல் தவித்த உனக்கு அவன் ஏற்பாடு செய்த மருத்துவமனை சிகிச்சைகள் எல்லாமே உயர்தரம். மகனுக்கு ஏதாவது பள்ளியில் இடம் கிடைக்காதா என்று வருத்தப்பட்டாய். இப்போதோ துருவிற்கு ஆசைப்பட்ட படிப்பைத் தர ஒரு அன்பான மனிதன் கிடைத்திருக்கிறான். இதெல்லாம் பணத்திற்காக மட்டும் அவன் செய்யவில்லை. சரத்துடனான இந்த ஒப்பந்தத்தை ஒப்பந்தமாகப் பார்க்காமல் அன்புடன் பார்த்துப் பழகு”

குளியலறையின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்த சரத் லூசான ட்ராக் சூட் பேண்ட்டும், டீஷர்ட்டும் அணிந்திருந்தான்.

“உங்க ப்ரைவசியை கெடுக்குறேனா சரத். கொஞ்சம் பொறுத்துக்கோங்க… எல்லாரும் தூங்கினவுடன் கீழே போயிடுறேன்”

“கீழே போறதா… விடிய விடிய நமக்கு ஆபிஸ் வேலை இருக்கு. முதல் காரியமா நீ எடுத்துட்டு வந்த பாலில் கொஞ்சம் காப்பித் தூளை போட்டு சுட வச்சு எடுத்துட்டு வா… ஐ நீட் கேபைன் டு கான்சென்ட்ரேட்”

“சரி…”

அவள் காப்பி போட்டு எடுத்து வந்தபோது மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தான்.

“ஹிமா… உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே…”

“சொல்லுங்க சரத்”

“நீ சூழ்நிலை காரணமா என் வீட்டுக்கு வர சம்மதிச்சாலும், உன் மனநிலையை என்னால் உணர முடியுது”

அவனுக்கு தன் மனதை உணர முடிந்தது அவளுக்கு பெரிய ஆறுதலைத் தந்தது.

“நம்ம நடத்துற இந்த நாடகத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ துருவ்வையும் இழுத்து விட்டுட்டோம்.

இன்னைக்கு நடந்த சம்பவம் உன் மனசை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்னு எனக்குத் தெரியும். இதைக் கூட அந்த நாடகத்தின் ஒரு பகுதியா நினைச்சுக்கோ…

ஒரு தாய்க்கு இது கஷ்டம்தான்… ஆனால் இந்த சூழ்நிலையில் கொஞ்சம் ட்ரை பண்ணுவோமே… இப்படியே தொடருவது உனக்கு வேதனை தரும். அதனால சமயம் பார்த்து நானே அம்மாட்ட சொல்லிடுறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ ஹிமா… ப்ளீஸ்”

இதற்கு என்ன பதில் சொல்ல. என்று அவளுக்குப் புரியவில்லை. கையில் நீண்ட நேரமாக வைத்திருந்த காப்பியை நீட்டினாள். அவள் சரி எம்று சொல்லவில்லை… ஆனாலும் மறுக்கவும் இல்லை… அதனால் அவளது செய்கையை சம்மதமாக எடுத்துக் கொண்டான் சரத்.

அவள் கையிலிருந்த காப்பிக் கோப்பையை அவன் வாங்கிக் கொண்டதும் போன் அடித்தது. நக்ஷத்திராவின் நம்பரைப் பார்த்தவன் அவளிடம் அவசர அவசரமாக

“ஹிமா நீ அனுப்ப வேண்டிய டிராப்ட் எல்லாம் டெஸ்க்டாப்பில் இருக்கும். நீ வேலையை ஆரம்பிச்சுடு. எனக்கு கொஞ்சம் முக்கியமான கால் அட்டென்ட் பண்ணனும். கொஞ்சம் லேட் ஆகும்”

அவன் அவசரத்தைப் பார்த்து கிண்டலாக சிரித்தாள் ஹிமா.

“ஸ்வீட் நத்திங்க்சைப் பொறுமையா பேசிட்டே வாங்க சரத்” சிரிப்புடன் சொல்லிவிட்டு அவனது லேப் டாப்பின் முன் அமர்ந்தாள்.

வெட்கத்துடன் பால்கனிக்கு சென்றான் சரத் “சொல்லு ராஜி”

“சரத்… எப்படி இருக்க?”

“கோவை காற்றை அனுபவிச்சு சுவாசிச்சுட்டு, வீட்டு சாப்பாட்டை ருசிச்சு சாப்பிட்டுட்டு ரொம்ப நல்லாவே இருக்கேன்”

“அம்மா சாப்பாட்டை ருசிச்சு சாப்ட்டுட்டு, வீட்டுக்காரி கவனிப்பில் நல்லாவே இருக்கன்னு சொல்லு”

“நீ இப்ப சொன்ன வார்த்தைகளை விளையாட்டுக்கு சொன்னதா எடுத்துக்குறேன். ஆனால் இனிமே இந்தக் குத்தல் பேச்சை தொடர்ந்தா என்கிட்டயும் அதே மாதிரி வார்த்தைகள் வரும்”

“பதிலுக்கு பதில் பேசுவேன்னு சொல்றியா… நான் நடிகைதானே… இந்தத் தொழிலுக்கு வந்த குற்றத்துக்காக ரோட்டில போறவன் வர்றவன் எல்லாம் எங்க மேல சேற்றை வாரி இறைக்கிறாங்க. அதே காரியத்தை நீயும் செய்யலாம்”

“உன்னைக் காயப்படுத்த என்னைக்கும் நான் நினைச்சதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க உன்னைப் பேசுறப்ப படுற வேதனையைத்தான் நான் இப்ப அனுபவிக்கிறேன். இதில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஹிமாவும் இதில் காயப்படுறா. உன் வார்த்தைகள் இப்படித்தான் வரும்னா இந்த அழைப்பை நான் கட் செய்துக்குறேன்”

சில நொடிகள் அவளிடமிருந்து பதிலே இல்லாததைக் கண்டு எரிச்சலுற்ற சரத் “சரி நான் வைக்கிறேன்” என்ற வண்ணம் கட் செய்யப் போனான்

“சரத், என்னைக் கட் பண்ணிடாதே… நீ என் உயிர்… என்னிடத்தில் இன்னொரு பெண் இருக்குறதை என்னால தாங்க முடியல” கேவினாள்.

பெருமூச்சு விட்டான் சரத் “அது நீயே தேர்ந்தெடுத்த வழி. எத்தனை தடவைக் கெஞ்சினேன். எத்தனை வருஷங்கள் காத்திருக்கிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியும்

இப்ப கூட உம்னு சொல்லு இந்த நாடகத்தை இத்தோட முடிச்சுக்கலாம். ஹிமாவுக்கும் இங்க இருக்குறது ஒண்ணும் என்ஜாய்மென்ட்டா இல்லை. முள்மேல நிக்கிறா மாதிரி இருக்கா…”

அடுத்த வேளை சாப்பாடுக்குக் கூட வழியில்லாம நின்னவளுக்கு, மூணு வேளை சாப்பாடு, தங்க கடல் மாதிரி வீடு, அம்மாவுக்கு ராஜவைத்தியம், மகனுக்கு பெஸ்ட் ஸ்கூல் இதைத் தவிர சரத்தின் மனைவி ஸ்தானம்… இத்தனையும் கிடைக்கும்போது இவ ஏன் முள் மேல நிக்கணும். சரத்தைக் கவர நல்லா வேஷம் போடுறா… என்று மனதினுள் பொருமினாள்.

“சொல்லு ஹிமா… எங்கம்மாட்ட நம்ம விஷயத்தை சொல்லிடுறேன். நீயும் உன் கமிட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு கிளம்பத் தயாராகு”

“இன்னும் ரெண்டு வருஷம் சரத்… அப்பா சொந்தப் படம் எடுக்க ஆசைப்படுறார். அதுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது” கெஞ்சினாள்.

“ஓ காட்… ஏற்கனவே நிறைய இடத்தில் கையை சுட்டிருக்க. இப்ப படம் எடுத்து ரிஸ்க் எடுக்குறேன்னு அவர்தான் சொல்றாருன்னா உனக்கெங்கே போச்சு புத்தி…” சற்று எரிச்சலுடனே சொன்னான் சரத்.

“இந்த தடவை கண்டிப்பா ஜெய்போம் சரத். ஹீரோயின் சப்ஜெக்ட் சால்ட் படத்தில் ஏஞ்சலினா நடிச்ச மாதிரி ஒரு கேரக்டர். தமிழ், தெலுகு, ஹிந்தின்னு ட்ரைலிங்க்குவல் ப்ராஜெக்ட். இது முடிஞ்சதும் இந்தியன் சினிமாவே என் பெயரை சொல்லும். ஸ்க்ரீன் ப்ளே எல்லாம் ரெடி. இப்ப கேக்குறியா”

“சொல்லு…” என்றான். அந்த பால்கனியில் இரவு இரண்டு மணிவரை அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

“ராஜி… கதை ரொம்ப நல்லாருக்கு… ஆனால் அதே மாதிரி எடுக்குறது கஷ்டம்”

“என்ன சரத் இப்படி சொல்ற…”

“இப்ப இந்த கதைக்கே டைரக்டர் சொல்படி இன்னொரு யங் ஹீரோயினை புக் பண்ணிருக்க. ஒரு இளம் காதல் ஜோடி யங்ஸ்டர்ஸ இழுக்கன்னு சொல்லிருக்கார். இந்த மாற்றங்களை நீயும் அக்செப்ட் பண்ணிருக்க. அப்பறம் குத்துப் பாட்டு சேர்க்கலாம், ஒரு டூயட்ன்னு அடுக்கிட்டே போவார். படம் ஆரம்பிச்சதும் வேற வழியே இல்லாம தலையாட்டுவ. கடைசில படத்தைப் பார்க்குறப்ப நீ சொன்ன கதையின் இம்பாக்ட் அதில் இருக்காது. மக்களுக்கு பர்கரில் சாம்பாரை ஊத்திப் பரிமாறின மாதிரி சவசவன்னு இருக்கும்”

“இங்கிலீஷ் ஸ்டைலில் ஒரு தமிழ் படம் எடுத்து நடிக்கனும்னு ஆசைப்படுறேன்”

“இங்கிலீஷ் படம் மாதிரி எதுக்கு தமிழ் படம் எடுக்கணும். நம்ம ரீஜினல் படம் நம்ம ஊர் இயல்போடவே இருக்கட்டுமே”

“உலகத் தரத்தோட ஒரு படம் எடுக்கணும் நினைக்கிறேன்”

“உலகத் தரம்னா ஆங்கிலப் படம் இல்லை ராஜி. ஆங்கிலப் படத்தின் நேர்த்தியைத்தான் உலகத்தரம்னு சொல்றோம். அதே நேர்த்தியை மகேந்திரன் மாதிரி நம்ம ஊர் இயக்குனர்கள் முன்னாடியே தந்திருக்காங்க.

என்னோட கருத்து என்னன்னா மண்ணின் இயல்போட வரும் படம்தான் என்னைக்கும் நிலைச்சு நிற்கும்.

இப்ப சினிமாவின் சிறந்த நடிகைகள் ராதிகா ரேவதி இவங்களை நினைச்சதும் என்ன கேரக்டர் நினைவுக்கு வருது”

“ராதிகான்னா கிழக்கு சீமையிலேயே, கிழக்கே போகும் ரயில் ரேவதின்னா மண்வாசனை, மௌனராகம்”

“இதில் இவங்க எல்லாரும் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணாத்தான் நடிச்சிருப்பாங்க… படம் பார்க்கும் மக்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தரா நினைப்பாங்க. அதுதான அந்த நடிகைகளின் நடிப்புக்குக் கிடைத்த வெற்றி… ஒரு டால் மாதிரி வந்து டான்ஸ் ஆடிட்டு போனால் போதும்னு நினைச்சா மக்கள் மனதில் நிற்கவே முடியாது”

“நீ சொல்றது எல்லாம் வாதத்துக்கு நல்லாருக்கும். அந்த மாதிரி ஹீரோயின் சப்ஜெக்ட் எடுக்க இப்ப யாரும் விரும்புறதே இல்லை. அதனால்தான் நான் இந்தப் படம் தயாரிச்சு என்னைப் ப்ரூவ் பண்ண டிசைட் பண்ணிருக்கேன்”

“என்ன சரத் பதிலே காணோம்”

“நீ என்கிட்டே ஆலோசனை கேக்குறேன்னு நினைச்சு என் கருத்தை சொல்லிட்டேன். தகவல் சொல்றேன்னு முன்னாடியே சொல்லிருந்தால் இவ்வளவு நேரம் வீணாயிருக்காது”

“வீண்னு யார் சொன்னது? உன் கூட பேசும்போதுதான் என் கவலைகளை மறந்திருக்கேன்”

“கவலைகளை என்னைக்கும் மறக்க நினைக்காதே… தீர்க்க நினை அதுதான் நம்ம எதிர்காலத்துக்கு நல்லது. இப்ப போயி தூங்கு”

“அதுக்குள்ளயா…”

“மணி என்ன தெரியுமா… ரெண்டு…”

“அதனால என்ன… நாளைக்கு எனக்கு ஷூட்டிங் பன்னெண்டு மணிக்குத்தான் லேட்டா எந்திருச்சா போதும்”

“ஆனால் எனக்கு வேலை இருக்கு. ஹிமா வேற எனக்காக வெயிட் பண்றா…”

“நைட் ரெண்டு மணிக்கு அவ ஏன் வெயிட் பண்றா… ரெண்டு பேரு மட்டுமே பண்ற முக்கியமான வேலையா”

அவ்வளவு நேரம் இருந்த ரம்யமான சூழ்நிலை மாறியது “ஆமாம் நாங்க ரெண்டு பேரும் மட்டுமே செய்ய வேண்டிய முக்கியமான, எங்க வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம். குட் நைட். “ என்றபடி போனை வைத்தான்.

வைத்த வேகத்தில் அதை அணைத்தும் விட்டான். இல்லாவிட்டால் இன்னொரு முறை அழைப்பாள். அவளது பேச்சின் விளைவை அவள் உணர வேண்டும். அறைக்குள் சென்றான்.

தோட்டத்தில் இருந்த மரபெஞ்சில் போர்வையை போர்த்திக் கொண்டு கரிமேடு கருவாயன் போஸில் உட்கார்ந்திருந்த சின்னய்யனுக்கு அந்தக் குளிரிலும் மூக்கில் வேர்த்தது.

‘சரத்து… பொண்டாட்டிய பெட்ரூம்ல தூங்க வச்சுட்டு பால்கனில ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் யாரு கூட பேசுற?

உன் பொண்டாட்டி கிட்டத்தான் ஏதோ தப்பிருக்குன்னு பார்த்தா உன்கிட்ட அதை விடப் பெரிய தப்பிருக்கு. சின்னசாமியா கொக்கா… சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் பாரு…

4 thoughts on “உள்ளம் குழையுதடி கிளியே – 15”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 19உள்ளம் குழையுதடி கிளியே – 19

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு இதில் சரத்துக்கும் அவன் தாய் தெய்வானைக்கும் இடைவேளை விழுந்த காரணத்தை சொல்லியிருக்கிறேன். இதற்குக் காரணம் சரத்தா, தெய்வானையா இல்லை நம்ம

உள்ளம் குழையுதடி கிளியே -4உள்ளம் குழையுதடி கிளியே -4

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு தந்த வரவேற்புக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். உங்களைப் போல நானும் பண்டிகைக் கால வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். கிடைக்கும் இடைவேளைகளில் அப்டேட்ஸ் தந்து விடுகிறேன். இன்று ஹிமாவின் கடந்தகாலம் சரத்துக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சிறு ஆச்சிரியத்தைத் தரலாம்.

உள்ளம் குழையுதடி கிளியே – 12உள்ளம் குழையுதடி கிளியே – 12

அத்தியாயம் – 12 காலையில் எழுந்து தோட்டத்தில் சுற்றிவிட்டுத் தாயிடம் ஓடி வந்தான் துருவ். பழனியம்மா ஊருக்கு சென்றுவிட்டதால் சமையல் வேலையில் மும்முரமாக இருந்தாள் ஹிமா. “இந்த வீடு ரொம்ப பெருசுல்லம்மா…” “ஆமாம் கண்ணா…” “நான் வீட்டுக்குள்ள ஏரோப்ளேன் ஓட்டி விளையாடிட்டு