Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35

அத்தியாயம் – 35

 

ரு வினாடி சாரிகா பேசும்போது  குறுக்கிட்ட  சித்தாரா  “இது  நடந்ததெல்லாம் எங்க வீட்டுக்கு நீங்க   குடிவரதுக்கு முன்ன  தண்டையார்பேட்டைல குடி இருந்திங்களே அப்பத்தானே” என்று கேட்டு  உறுதிப்  படுத்திக்  கொண்டாள். ஆமோதித்த சாரிகா தொடர்ந்தாள்.

 

முதுகு வலியால்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சுதாவைப் பார்க்க சுமித்ரா மதுரை சென்று விட, அக்கா  தங்கைகள்  மூவரும் சேர்ந்து ஸ்ராவணியை கவனித்துக் கொண்டார்கள்.  முதலிரண்டு நாள் நன்றாக இருந்தாலும் அதன் பின்  சோர்வாகவே  தெரிந்தாள்  குழந்தை ஸ்ராவணி.

 

“சத்யாக்கா, நாம என்னதான் பார்த்து  பார்த்து கவனிச்சுகிட்டாலும்  ரொம்ப சோர்ந்து தெரியுறா குழந்தை. சாந்தா, பாப்பாவுக்கு நீ காலைல சாப்பாடு தர்றியா இல்லை நீயே மொத்த சாப்பாட்டையும் முழுங்கிடுறியா ?” கவலையாகக் கேட்டாள்  சாரிகா.

 

“ஏன் சொல்ல மாட்ட. சத்யாக்காவுக்கு உடம்பு சரியில்லை நீ காலேஜ  சாக்கு வச்சு ஊர் சுத்த போய்டுற. படிப்பு வராத காரணத்தால  இந்த வீட்டுக்கு சம்பளமில்லாத வேலைக்காரி நான்தானே.

 

வீட்டு வேலையை செஞ்சு. இவளுக்கு  உடம்புக்கு ஊத்தி, சாப்பாடு கொடுத்து டிரஸ் போட்டு விட்டு, காத்தாட கடைக்கு கூட்டிட்டு போயிட்டு இவ்வளவு வேலையும் செஞ்சு வச்சு இன்னமும் குறை சொல்லுங்க” கண்ணைக் கசக்கினாள் .

 

“சும்மா அழாதே சாந்தா. குழந்தைக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடுச்சோன்னு கவலையா கேட்டா ஏன் இப்படி பேசுற?”

 

“அதுக்கு என்ன குறைச்சல்? நல்லா  கல்லுக்  குண்டாட்டம் இருக்கு.  அவ அம்மா பெத்து போடுட்டு போய்ட்டா , இப்ப  எனக்குத்தான்  உயிர் போகுது”

 

சுறு சுறுவென கோவம் பொங்கியது சாரிகாவுக்கு

 

“ச்சே….  சின்ன குழந்தையை என்ன பேச்சு பேசுற. நம்ம அண்ணன் மட்டும் இந்த மாதிரி நெனச்சிருந்தா நாம சாப்பாடு கூட இல்லாம தெருவில நின்னிருப்போம்.

நம்மளத்  தவிர  வேற  வாழ்க்கையே  இல்லாம  அரவிந்த் அண்ணா  கண்  காணாத  இடத்துல  கஷ்டப்பட்டுட்டு  இருக்கார். நம்ம நல்லபடியா அவர்  குழந்தையைப்  பார்த்துகிட்டு  நன்றி  செலுத்த  வேண்டாமா ?  இனிமே நீ இவளைப் பார்த்துக்க வேணாம். அம்மா ஊருக்கு வர வரைக்கும் நான் பாத்துக்குறேன்”

 

 

“அதை முதல்ல செய். எனக்கும் பணமெல்லாம் வீணாப்  போகுது. நான் நிம்மதியா என்னோட கோர்ஸ் வேலையை கவனிப்பேன்”.

 

“என்னமோ பணம் வீணாப்  போறதைப்  பத்தி பேசுற. இந்த அக்கறை எம் ஏ சேர்ந்துட்டு காலேஜை விட்டு நின்னையே அப்ப எங்க போச்சு? அதுக்கு  பீஸ் கட்டினதே இந்தோ சலிச்சுகிட்டிருக்கியே  இந்தப்  பொண்ணோட அப்பா தான் ”

 

சண்டைக் கோழியாய் சிலுப்பிக் கொண்டிருந்த தங்கைகளின் குரலைக்  கேட்டு வந்த சத்யா நடந்ததை அறிந்துக் கொண்டாள்.

 

“சுதாவுக்கு இப்ப பிரயாணம் பண்ணுற அளவுக்கு உடம்பு தேறிடுச்சு. அம்மாவும் சுதாவும்  சீக்கிரம் வந்திடுவாங்க. அதுவரை நீங்க ரெண்டு பெரும் சண்டை போடாம வனியப பாத்துக்கோங்க” என்று சொல்லி முற்றுப்புள்ளி   வைத்தாள் .

 

” அண்ணா  நமக்காக உழைச்சாரா?  நல்ல வேடிக்கைதான். அப்பா இருந்தவரை எவ்வளவு வசதியா இருந்தோம். அவர்  போனவுடனே  தன்னோட  நல்வாழ்க்கைக்காகக்   குடியிருந்த வீட்டை வித்து,  அந்தப் பணத்தை எடுத்துட்டு தனக்கும், புது பொண்டாட்டிக்கும் டிக்கெட் வாங்கிட்டு லண்டனுக்குப் போனவர் தானே உன் அண்ணா.

 

இப்ப கூட நம்ம இந்தக் குழந்தையைப் பார்த்துக்க மாட்டேன்னு சொல்லிப்பாரு. உங்களுக்கு மாசாமாசம் பணம் பணம் அனுப்புறது நின்னு போய்டும். அக்கா தங்கைக்கு ஒரு வழி பண்ணாம நடு ரோட்டுல நிறுத்திட்டு, தன்னோட சுகம் பெருசுன்னு காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவனுக்கு வக்காலத்து வாங்குற. அம்மா நல்லா  உன்னை ‘பிரைன் வாஷ்’ பண்ணி வைச்சிருக்காங்க.

நீ ஒரு ஏட்டு சுரைக்காய் . உன்னால  உலகத்தைப்  புரிஞ்சுக்க முடியாது. கண்ணை நல்லா முழிச்சு பாரு. அண்ணனால நான்  நல்ல பாடம்  கத்துகிட்டேன்.  அவருக்கு  நம்மை  விட  அவர்  காதலும்  கல்யாணமும் தானே முக்கியமா இருந்தது. அது மாதிரி என்னோட வாழ்க்கைதான்  எனக்கு முக்கியம்.  என்னால இதைப்   பார்த்துக்க  முடியாது. நாளைல இருந்து    நீயும்    சத்யாக்காவும்  எப்படியோ  பார்த்துக்கோங்க ”

 

சாந்தாவின் அடாவடிப்  பேச்சால் கவலை கொண்ட சத்யா, நான்கு நாள் மட்டும் பார்த்துக் கொள்ளுமாறும் அதன் பின் தாங்களே கவனித்துக் கொள்வதையும் சொல்லி சமாதானப் படுத்தினாள் . சலித்துக் கொண்டு சென்றாள்  சாந்தா.

 

செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருந்தது அந்த வேன். அம்மா வீட்டுக்குப் போகும் சந்தோஷத்தில் இருந்தாள் சுதா. இந்த முறை நாதன்,  சுதாவின்  அம்மா சுமித்ராவை தாங்கோ தாங்கென்று தாங்கினார்…  ஊரிலிருந்து  வந்த  சுதாவின்  மாமியாரும் கூட. கடைசியில் தான் விஷயம் தெரிந்தது. செல்வியை அரவிந்துக்குப் பேசி முடிக்க சொன்னார்கள் தாயும் மகனும்.

 

செல்வி கூட சுமித்ராவிடம் அத்தை அத்தை என்று வழிய அவருக்கோ மயக்கம் வராத குறை. இவ்வளவு நாளாக இந்த கிரிமினல் குடும்பத்தில் குப்பை கொட்டியாயிற்று  இதைக்கூடவா  சுதாவால்   சமாளிக்க  முடியாது…

செல்வி  மாதிரி  ஒரு  பெண்  தம்பிக்கு  மனைவியாக  வருவதற்கு  மிகவும் கொடுத்து வைத்திருக்க  வேண்டும்   என்றாலும்,  அரவிந்தின் வார்த்தைதான் கல்யாண விஷயத்தில்  முக்கியம். அவனிடம் பேசி  சம்மதத்தைப்  பெற முயற்சி செய்கிறேன்  என்று  சொல்லிவிட்டு அவர்களிடம் சொல்லிவிட்டுக்  கையோடு   அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.

அவர்கள் வீட்டின் அருகில் இருந்த வேன் சர்வீஸ் ஒன்று மெட்ராஸ் கிளம்பும். அந்த வேனில் சுமித்ராவையும் அழைத்துக் கொண்டு  ஏறி விட்டாள் . மதுரையில் இருந்து கிளம்பிய வேனில்,  வழியில் திருச்சியில் கதிர் ஏறிக் கொண்டார்.

 

” சுதா என்ன முதுகெலும்பு உடையுற அளவு என்ன செஞ்ச? ராணி மங்கம்மா புதைச்சு வச்ச புதையலத் தேடி எடுத்தியா? சரி சரி முறைக்காதே….. இப்ப முதுகு வலி எப்படி இருக்கு?”

 

“நீ வேற கதிர், உங்க அண்ணன் வீட்டுக்கு வேலை செஞ்சே இப்படி ஆயிட்டேன். இதுல ஒரு  நல்லது என்னன்னா இனிமே வாரா வாரம் சுடுதண்ணி பானையைத் தூக்க வேண்டாம்”

 

“ரொம்ப சந்தோசம். அடிக்குற வெயில்ல உன் வீட்டுக்காரனுக்கு சுடுதண்ணி வேணுமா? ஆமா நீங்க ரெண்டு பேரும் வந்துட்டிங்களே, இப்ப ஆதியை யாரு பாத்துக்குவா?”

 

“அவனுக்கு பரீட்சை முடியுற வரை ஏன் மாமியாரும் நாத்தனாரும் பாத்துக்குவாங்க. முடிஞ்சதும் அவர் மெட்ராஸ் கொண்டு வந்து விட்டுடுவேன்னு சொல்லி இருக்கார்”

 

“உன் சோம்பேறி நாத்தனார்  வேலை செய்யுறாளா! நம்பவே முடியல.”

 

“அதுக்குக் காரணம் இருக்கு கதிர்… அவளுக்கு அரவிந்த் மேல திடீருன்னு ஒரு அன்பு வந்துடுச்சு”. நடந்ததை சொன்னாள் சுதா.

 

 

“அவளுக்கு ரொம்ப நாளா அரவிந்த் மேல கண்ணு. அவளுக்கு பயந்து கிட்டுத்தான் அவன் உன் வீட்டுக்கே வரதில்ல” செல்வி லவ் லெட்டர்  எழுதி அரவிந்திடம் தந்ததை சொன்னார்.

 

“அப்படியா  விஷயம்!” ஆச்சரியப் பட்டவள்

 

“நாம இதுல முடிவெடுக்க முடியாது. என்ன முடிவுன்னாலும்  அரவிந்த் வாயாலே வரட்டும் ” என்று யோசனையுடன் சொன்னாள்.

 

“வீட்டுல  ஊருக்குக் கிளம்பி வந்துட்டு இருக்கிறதை சொல்லிட்டிங்களா?   நான் போன் பண்ணா   சத்யா மொபைல்  எடுக்க மாட்டேங்குது ”

 

“இல்ல கதிர். திடீருன்னு கிளம்பினோம். சத்யா  மொபைல்  ரெண்டு நாளா ரிப்பேர். இந்த  சாந்தா மொபைல் எப்ப முயற்சி  செஞ்சாலும்  பிஸி. அதுதான் காலைல வீட்டுக்குப் போய்டுவோமே அப்ப  பாத்துக்கலாம்னு  விட்டுட்டோம்”

 

வழியில் வேன்  ரிப்பேர் ஆகிவிட அதை சரி செய்து அனைவரும் சென்னைக்கு வந்து சேர மணி பதினொன்றாகிவிட்டது .

 

“நல்ல வேளை  வீட்டுக்கு போன் பண்ணி இருந்தா பொண்ணுங்க  வேற நம்மளை பொழுதோட பாக்காத கவலைல உட்கார்ந்திருப்பாங்க ” என்று சந்தோஷப் பட்டார் சுமித்ரா.

 

எக்மோரில் இறங்கியவர்களிடம், “நில்லுங்க எப்படியும்  காலைல  நான் லீவ் தான் போடணும். வீட்டுல உங்களை விட்டுட்டு, குளிச்சிட்டு  நான் ஹெட் ஆபிஸ் கிளம்புறேன்” என்ற கதிர் அங்கே வந்து சவாரி இறக்கி விட்ட ஆட்டோவை நிறுத்தினார்.

 

“தண்டையார்பேட்ட  போகணும். எவ்வளவுப்பா கேட்குற?”

 

“மீட்டர் துட்டு மட்டும்  தா சார்”

 

ஆச்சிரியமாய் பார்த்தவர் கிளம்பிய சற்று நேரத்தில் அது  சூடு  வைக்காத  சுத்தமான  மீட்டர் என்று கண்டு கொண்டார்.  டிரைவர்  மேல்  நம்பிக்கை  வந்தது.

 

“ஏம்பா  ஆட்டோ,  நீ எந்த ஸ்டான்ட்?”

 

“திருவெத்தியூர் ராஜா கடையண்ட  சார்”

 

“அடப்பாவி நீ தண்டையார்பேட்ட தாண்டித்தானே போகணும்? அதான் மீட்டர் துட்டு மட்டும் போதும்ன்னு சொன்னியா?”

 

“போ சார். பீச் ரோடு வழியா போனா சல்லுன்னு போயிடலாம். தண்டையார்பேட்ட ட்ராபிக்ல போறது பயங்கர பேஜார். நம்ம எப்பவும் மீட்டர் துட்டுதான் சார்” சொல்லிக் கொண்டே வண்டியை வளைத்து சிக்னலில் நிறுத்தியவன் வாயில் இருந்து சரமாரியாக கெட்ட வார்த்தை வந்தது.

 

“கஸ்மாலம் சோறு போட வக்கு  இல்லைன்னா ஏன் புள்ள பெத்துகுதுங்க? …. …..”

“யாரப்பா திட்டுற?”

 

“சிக்னல்ல குழந்தைய வச்சு பிச்சை எடுக்குறாளே  அவளைத்தான். வண்டி நின்னதும் புள்ளையக் கிள்ளி  அழவிடுரா பாருங்க சார்.”

 

அவன் சொன்ன திசையில் பார்த்த அனைவரின் இதயமும் நின்றே விட்டது.

 

“ஐயோ நம்ம வனி……… வனி  எப்படி பிச்சை காரி கிட்ட போனா?” கத்திக் கொண்டே மயக்கமானார் சுமித்ரா.

 

நிலைமையின் தீவிரம் உரைத்தது அனைவருக்கும்.

“புள்ளையத் தூக்கிட்டாளா…  இப்ப போகாதே சார். அவ தப்பிச்சு ஓடிட்டா  அப்பறம் புள்ள உன்னுதில்ல… நான் பத்திரமா  உன் குழந்தையை வாங்கி வாங்கித்தரேன். முதல்ல இவங்க ரெண்டு பேரையும் அந்தக் கடைல குந்த சொல்லு”

இறங்கியவன் கடைக் காரனிடம் கர்ஜித்தான் “டேய் பீட்டரு, இந்த ரெண்டு பேத்தையும் பத்திரமா ஆட்டோல ஏத்தி வீட்டுல கொண்டு போய் சேர்க்குறது உன் பொறுப்பு. அங்க சிக்னல்ல குழந்தையோட பிச்சை எடுக்குறாளே  யாருடா அந்தக் கழுதை ?”

 

“அது  ரொம்ப நாளா எடுக்குது. இப்ப பத்து நாளா இந்த புது குழந்தையை கொண்டு வந்து பிச்சை எடுத்துட்டு இருக்கு. இதுக்கு டிபன் பாக்ஸ் சப்ளை பண்ணுறது நம்ம  இசக்கியம்மா. பூக்கடையண்ட அத்தோட வீடு இருக்கு”

 

“சரி அவ வீடு தெரிஞ்ச  யாரையாவது என்னோட அனுப்பு”

 

கதிருடன் சில நிமிடங்களில் அந்த வீட்டில்   போய்  நின்றான்.

“இசக்கியம்மா,  இவருக்கு குழந்தை இல்ல. இன்னைக்கு காலைல ஒரு டிபன் பாக்ஸ் ஒன்ன அனுப்புனியே அதை வளக்கக் கேக்குறாரு” நைச்சியமாகப் பேசினான் உடன் வந்தவன்.

 

முதலில் மறுத்தவள் “அது இங்க ஆட்டோ ஒட்டுவானே பிச்சை முத்து அவனோட டாவோட சொந்தக்கார புள்ளை. அதை குயந்தையப் பார்த்துக்க சொல்லிட்டாங்க  போலக்கீது . அது வூட்டுல அல்லாரும் கிளம்புனதும்,  புள்ளைய இட்டாந்து என்கிட்ட பாத்துக்க சொல்லிட்டுப் பிச்சை  கூட   போய்டும்.

புள்ள பூஞ்சையா கீதா, டிபன் பாக்ஸ் கேட்டு வந்தவங்க கிட்ட இத்த கொடுத்துடுவேன். நல்ல கலெக்ஷன். ஆனா குயந்தைய வளக்க தருமான்னு தெரில”

 

யோசித்தவள் “நாளைக்கு குயந்தைய அந்த சாந்திப் பொண்ணுகிட்ட கொடுக்க சொல்ல நீ இவன அனுப்பி ரெண்டு பேத்தையும் ஒரு தட்டு தட்டி புள்ளைய பரிச்சுக்குனு போக சொல்லு. போலீஸ்ல  புகார்  கொடுத்தா எங்க புள்ளைய தொலைச்சன்னு  கேப்பாங்க.

அந்தப் பொண்ணு  அவங்க  ஏரியால  ஏதாவது  ஒரு  இடத்தைதான்  சொல்லணும். நம்ம ஏரியா பத்தி சொன்னா நீ ஏன் அங்க போனன்னு கேள்வி வருமே… எப்படியோ நாம மாட்டமாட்டோம். ஒனிக்கு எப்படி குயந்தய கடத்தணும்னு ரோசனை சொல்லிட்டேன். இனிமே நீ தான் நடத்திக்கணும். நான் உன்னிய போலிசுக்கு கை காட்டாம இருக்கணும்னா, இப்ப  ஒரு  பத்தாயிரத்தை  என் கைல   வெட்டிட்டு  கிளம்பு”

 

“கைல வெட்டுறது என்ன, அண்ணாத்த நெனச்சா ஒன்  கையையே வெட்டுவாரு. திருவத்தியூர் பன்னீரு கேள்வி பட்டிருக்கியா? அவரு வூட்டுப் பொண்ணு அது”

உடன் வந்தவன் ஆட்டோ டிரைவரை கை காண்பித்து சொன்னான். தான் ஏறி வந்த ஆட்டோ டிரைவர் பெரிய தாதா  என்ற விவரமே அப்போதுதான் புரிந்தது கதிருக்கு.

 

“அண்ணாத்த நம்ம வூடா அது… தெரியாம பண்ணிட்டேன் மாப்பு கொடுத்துடு.  நான் பிச்சையண்ட கூட சொன்னேன் பெரிய  வூட்டு  பொண்ணு மாதிரி இருக்கு மாட்டிக்காதடான்னு சொன்னாக்  கேட்டாத்தானே…

அந்த சாந்தியக்   கல்லாணம்  கட்டிக்கபோறேன்னு   நிக்குறான். நீ  இந்த  பாப்பாவக் கூட்டிட்டு கிளம்பு அண்ணாத்த. நான்  பிச்சமுத்த  அந்தப் பக்கமே விடாம பாத்துக்குறேன்” என்று சொல்லி  கையில் ஸ்ராவணியை திணித்தாள்.

 

“இங்க பாரு இனிமே புள்ளைங்கள நீ வாடகைக்கு விடுற,  கடத்துரன்னு  கேள்விப் பட்டேன். அடிச்சு கடல்ல தூக்கிப் போட்டுடுவேன்.  ஜாக்கிரத” என்று சொல்லிய பன்னீர் கதிரைக் கூட்டிக் கொண்டு கிளம்பினான்.

 

ஸ்ராவனிக்கு கடையில் ஒரு பன்னும், சிறிது  பாலும் வாங்கிப் புகட்டியவன். “என்ன சார் உன்  கை இப்படி நடுங்குது? வூட்டுக்குப் போறதுக்குள்ள புள்ள பசி தாங்காது சார். அதுதான் கொஞ்சம் பால வாங்கித் தந்தேன்”

 

‘அவக்  அவக்’கென்று பன்னீரின் கையில் இருந்ததை வாங்கி விழுங்கியது குழந்தை.

 

“ராசாத்தி அவ்வளவு பசியா இருந்தியா? உன்னைப் பட்டினி போட்டிருந்தாளா அந்த பொம்பள?” என்றவன்

 

“டேய் பீட்டரு…  இன்னும்  ஒரு  மாசத்துக்கு இந்த கும்பல்ல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா அடி படணும். ஒவ்வொருத்தணும்  குறைஞ்சது ஆறு மாசத்துக்கு பெரியாஸ்பத்திரியே  கதின்னு இருக்கணும்… அதுக்கு ஏற்பாடு  பண்ணு. அதுவும் புள்ளைய பட்டினி  போட்ட  ரெண்டு பொம்பளைங்களுக்கு  இனிமே  சோத்துக்கை  கிடையாது… ” உறுமினான் கூட்டாளியிடம்.

 

கண்ணீருடன் பார்த்துக்  கொண்டிருந்த கதிர்  பன்னீரின்  கைகள்  இரண்டையும் பற்றிக் கொண்டார். “அப்பா.. நீ யாரு எவருன்னு தெரியாது. ஆனா எங்க வீட்டப் பொருத்தவரை நீ தெய்வம். நீ  இல்லைன்னா   என்ன செஞ்சுருப்பேன்னே  தெரியல. உனக்கு நன்றின்னு ஒரு  வார்த்தைல  சொல்லி முடிக்க முடியல. ஆனா என்னால ஆன  கைமாற  உனக்கு செய்வேன்”

 

சாரிகா சொல்லி முடித்திருந்தாள்.

” எங்களை நம்பி ஸ்ராவணியை  அண்ணன் விட்டுட்டு போனாங்க. ஆனா நாங்க இத்தனை பேர் இருந்தும்  அவருக்குக்   கொடுத்த  வாக்கைக் காப்பாத்த முடியல. அண்ணனுக்கு  அதனால எங்க மேல ஒரே  கோவம். வாணியை தானே இனிமே வளர்த்துக்குறதா சொல்லிக் கூட்டிட்டு போயிட்டார்.

 

எங்க மேல கோவம்  இருந்தாலும் அவரோட கடமையை மறக்காம கடனை உடனை வாங்கி   கொஞ்ச  நாள்ல  அண்ணன்  சாந்தாவுக்கு  கல்யாணம்  ஏற்பாடு  பண்ணார். சாந்தா  எல்லாத்துக்கும்  தலையாட்டிட்டு  கடைசி  நேரத்துல ஓடிப்  போய்  அந்த  ஆட்டோ  டிரைவரக்  கல்யாணம்  பண்ணிக்கிட்டா…

அதுமட்டுமில்லாம நாங்க  எங்க அவன் மேல  புகார்  கொடுத்துடப்  போறோம்மோன்னு  பயந்து  எங்களுக்கு  முந்தி  அண்ணன் மேலயும் எங்க  வீட்டுல  அவளை  அவளோட  காதலன்  கிட்ட  இருந்து  பிரிக்குறதாவும் புகார் கொடுத்துட்டா…

 

அப்பறம்  பன்னீர்  மாமா  விசாரிச்சிட்டு  பிச்சை முத்துவ  மிரட்டி  சாந்தாவை ஒழுங்கா வச்சுக்கனும்னு சொன்னார். அப்பறம் பன்னீர் மாமாவ சத்யாக்காவுக்குப் பேசி முடிச்சது உனக்கே தெரியும்.  அவருக்கு  பயந்துட்டு  சாந்தா  புருஷன்  இன்னமும்  அவளை  ஒழுங்கா வச்சிருக்கான். இப்படி  சின்ன  பிள்ளையை  வதைச்ச  அவனுக்கு ரெண்டு கிட்னியும் அவுட் . அவனுக்கு  ஆபேரஷன்  செய்யக் கூட  அண்ணன் தான் பணம் தந்தது.

 

சாந்தாவுக்கு இப்ப புத்தி வந்திருக்கு. எங்க அருமை தெரியுது. அவ கணவனும் இப்ப பரவால்ல. ஆனா  காலம்  கடந்துடுச்சே  இனிமே புத்தி வந்து என்ன பிரயோஜனம்? அவ பண்ண துரோகத்தை எங்களால அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியல. அவ  பிடிவாதமா  தேர்ந்தெடுத்துட்ட  வாழ்க்கையை  இனி அவதான் சீர் படுத்திக்கணும். நாங்க  கொஞ்ச நாள்ல அந்த தண்டையார்பேட்ட  வீட்டுல  இருக்கப்   பிடிக்காம  உங்க வீட்டுக்கு  மாறி  வந்தோம். சித்தாரா ….   கேக்குறியா… என்ன சத்தத்தையே காணோம்…”

 

அவ்வளவு நேரம் அவள் சொன்ன சம்பவங்களைக் கேட்டு பிரமை பிடித்தாற்போல் அமர்ந்திருந்த சித்தாரா அதிர்ச்சி கலைந்து சொன்னாள் ” கேட்டுட்டுத்தான் இருக்கேன்  சாரிக்கா . நான்  உடனே  என் வனியைப்  பார்க்கணும்”

 

“அப்பா வனி  இங்க  இல்லையா?  நீ எங்கிருந்து  பேசுற?”

என்ற சாரிகாவின் கேள்விகள் சித்தாராவின் காதில் விழுந்தால் தானே? புயல் வேகத்தில் கிளம்பினாள் .

 

“நான்சிக்கா  இப்ப என்னை வீட்டுல டிராப் பண்ண முடியுமா இல்ல காப்ல போகவா?”  என்று இரண்டே சாய்ஸ்  கொடுத்தவளிடம் அஞ்சு  நிமிஷம்  வெயிட் பண்ணு டிரஸ் மட்டும் மாத்திக்கிறோம் என்று நேரம் வாங்கினார்கள்.

 

” இவ்வளவு கஷ்டப்படிருக்காளா  என்  பொண்ணு… நான் வேற ரெண்டு நாளா அவங்களத் தனியா விட்டுட்டு வந்திருக்கேன். அரவிந்த் என்கிட்ட எதையுமே பகிர்ந்துக்கலன்னு கவலைப் பட்டேன்  அங்கிள். அதுனால  எத்தனை  தடவ அவர்கூட  சண்டை  போட்டிருக்கேன்  தெரியுமா…  பூ மாதிரி மனசில  இவ்வளவு  கவலைகளை சுமந்திருக்காரே.  வனி  குட்டி நான் சமைச்ச சாப்பாடு எவ்வளவு மோசமா இருந்தாலும் நல்ல இருக்கும்மா ன்னு சொல்லி சாப்பிடுவா….

 

அவளை இந்த மாதிரி வாடகைக்கு விட அந்த பிச்ச முத்துக்கு எவ்வளவு தைரியம்… அவனுக்கு இந்த விஷயம் கண்டிப்பா தெரியாம இருந்திருக்காது. அந்த மாதிரி பச்சை பிள்ளையை செய்திருக்காங்கன்னு தெரிஞ்சும் அதைப் பத்தி சட்டை செய்யாம அவன் கூட ஓடிப் போனாளே  சாந்தா அவளுக்குக் கொஞ்சம் கூட   அறிவே  இல்லையா… பச்சைக் குழந்தையை பிச்சை  எடுக்க வைக்குறவங்க  லட்டு மாதிரி வயசு  என்ன செய்வாங்கன்னு யோசிக்க  வேணாம். இப்படியுமா காதல் கண்ணை மறைக்கும்…

 

பன்னீருக்கு பயந்து அவளை நல்லபடியா பார்த்துட்டு இருந்திருக்கான் அந்த பிச்சை. அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்தா பன்னீர் அவனை உயிரோட விட மாட்டார்ன்னு நல்லாவே தெரியும் அவனுக்கும் அவனை சேர்ந்தவங்களுக்கும்”.

 

சித்தாராவின் புலம்பலில் இருந்து துண்டு துண்டாய் விஷயம் கிரகித்த  அனைவருக்கும் அதிர்ச்சி.

 

“டேய் கல்யாண் என்னையும் கூட்டிட்டு போடா எனக்கு உடனே ஸ்ராவணியைப் பார்க்கணும் போல இருக்கு”

 

அவர்களுடன் விவேகானந்தரும் அடம்  பிடித்துக் கிளம்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 41

இன்று மியூனிக் காலை வழக்கம்போல் மெதுவாக எழுந்து, வேகமாய் அலுவலகத்துக்குக் கிளம்பினாள் சரயு. ‘பத்து வருஷமா இதே தொல்லை. இவனால என் தூக்கமே கெட்டுப் போகுது’ மனதினுள் ஜிஷ்ணுவைத் திட்டியபடியே சாவியை ஸ்டைலாய் சுழற்றியவாறு, கோட்டை எடுத்துத் தனது தோளில் போட்டுக்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 5

மதியம் அனைவரும் உணவு உண்டுக்  கொண்டிருந்தனர். குடும்பத்தினர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கூடத்தில் இருந்தனர். தலை வாழை இலையில் உணவு பரிமாறி  இருக்க, அரவிந்த், முதல் பெண் சுதாவின் கணவன் நாதன், இரண்டாவது மகள் சங்கீதாவின் கணவன் கதிர், புதிதாக

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8

இரவு படுத்திருந்த பாயிலிருந்து உருண்டு அறையின் சுவரோரமாய் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்த சரயுவை ரசித்தார் சிவகாமி. ‘நம்ம பக்கத்துல யாரும் இம்புட்டு அழகில்ல. பொங்கலுக்குப் பறிச்ச பச்ச மஞ்சளாட்டம் ஒரு நெறம். சின்னதா மல்லிகப்பூ மொக்காட்டம் மூக்கு. வசதியிருந்தா இந்த மூக்குக்கு