Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

அத்தியாயம் – 30

 

கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம்.

ஊரில் இருந்து நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்த அரவிந்த்  முகம் வாடி  இருந்த சித்தாராவை சமாதனப் படுத்தும் நோக்கத்துடன்

“நாள் கணக்கா என் மேல கோவமா சித்து? நான் போன் பண்ணா எடுக்கக் கூடாதா? உன் குரல் கூடக் கேட்காமத் தவிச்சுப் போயிட்டேன். உன் கூட இந்த தடவை தெளிவா பேசிடலாம்னு முடிவெடுத்துட்டேன்.

உன் சந்தேகத்தைக் கேளு. ஆனா மறுபடி மறுபடி அதைப் பத்திப் பேசி என்னை நோகடிக்கக் கூடாது. வந்ததுல இருந்து நீ என்னைப் பார்த்து சிரிக்கக் கூட இல்லை தெரியுமா? இப்ப ப்ளீஸ் கோவிச்சுக்காம என்னைப் பார்த்து சிரி” சமாதானப் படுத்தியவனிடம்.

“அரவிந்த் நான் வனியத் தூங்க வைக்கணும். சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன். போய் சாப்பிடுங்க. மத்ததை அப்பறம் பேசலாம்” என்று அனுப்பி வைத்தாள்.

சப்பாத்தியின் நடுவில் பீன்ஸ் கறியை வைத்து ரோல் செய்து சாப்பிட்டுக் கொண்டே பையில் இருந்த துணிகளை எடுத்து வைத்தவன் கடைசியாக சார்ஜ் தீர்ந்து போன செல்போனை சார்ஜ் செய்யப் போட்டான்.

சிறிது சார்ஜ் ஆனதும் வரிசையாக வந்த மெசேஜ்களை அவசரமாக மேய்ந்தவனின் கண்கள் சந்திரிகாவின் தகவலைப் பார்த்து உறைந்து போயின. விழுங்க முடியாது உணவு தொண்டையில் சிக்கி விக்க ஆரம்பித்தது.

தண்ணிரைக் கொண்டு வந்து அவன் முன்னே வைத்ததாள் சித்தாரா. வெகு வேகமாகப் பருகியவன், கண்கள் கலங்க மனைவியைப் பார்த்தான்.

“உனக்கு இப்ப என்ன தெரியணும் சித்தாரா?”

ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள்.

“உன் கிட்ட சைலஜா பேசி இருக்கா. நீ எவ்வளவு குழப்பத்தில இருப்பன்னு எனக்குப் புரியுது. ஆனாலும் என்னோட வேண்டுகோளை மதிச்சு இந்த நிலையிலையும் என்னோட முதல் திருமணம் பத்தி நீ கேட்காதது உன்னோட மனமுதிர்ச்சியைக் காட்டுது. ஆனா இப்பக் கூட சொல்லாம இருந்தா நான் மனுஷனே இல்லை”

பதில் சொல்லவில்லை அவன் மனைவி. அவளது மௌனம் வாளாய் அவனது நெஞ்சைக் கீறியது. நீண்ட உரையாடல் ஒன்றுக்கு ஆயத்தமானான் அரவிந்த்.

“ஷைலஜாவ நான் காதலிக்கல. சூழ்நிலை காரணமா கல்யாணமானது உனக்கு நல்லா தெரியும். மனைவி அப்படிங்குற பந்தத்துக்கு நான் ரொம்ப மதிப்பு கொடுக்குறவன். அதுனால அவ என் வாழ்க்கைல நுழைஞ்ச வழி தப்பா இருந்தாலும் அவளை நல்லபடியா வச்சுக்கனும்னு நெனைச்சேன். இங்க வந்தும் படிப்புலயும் பார்ட் டைம் ஜாப்லையும் எனக்கு கவனமிருந்ததால குடும்ப வாழ்க்கை வேணாம்னு சொல்லிட்டேன். அவளும் காத்திருக்கேன்னு சொன்னா.

சைலஜாவுக்கு ஆடம்பர மோகம்… அதைவிட சரியான வார்த்தை ஆடம்பர வெறி உண்டு. என்னோட வரவுக்கு மீறி பல தடவை செலவு செஞ்சிருக்கா. ஒரு நாள் கோவமா கேட்டுட்டேன். அன்னைக்கு என் வாயை அடைக்க தாம்பத்யத்தைப் பயன் படுத்திகிட்டா.

என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டது கூட அவளோட வெளிநாட்டு வாழ்க்கைக்காக மட்டும்தான்னு எங்க பிரிவுக்கப்பறம் நான் நல்லா யோசிச்சுப் பார்த்தப்பத்தான்  எனக்குப் புரிஞ்சது.

அவ செலவுகள் என்னை பலசமயம் கடனாளியா மாத்தினப்ப அவ கிட்ட பணம் தேவைக்கு மட்டுமே கொடுக்க ஆரம்பிச்சேன். அவளுக்கு பணம் அதிகமா தேவைப்பட்டப்ப எல்லாம் அவளது அழகை என்கிட்ட ஆயுதமா பயன்படுத்த ஆரம்பிச்சா. நானும் ஆசாபாசம்  நிறைஞ்ச மனுஷன். ”

 

பொறுக்க முடியவில்லை சித்தாரவால் “போதும் அரவிந்த்….  நீயும், உன் முதல் பொண்டாட்டியும் வாழ்ந்த காதல் வாழ்க்கையைப் பத்தி நான் பேச விரும்பல. மத்த விஷயத்தை மட்டும் மேல சொல்லு”

அவளது மனநிலை புரிந்தது. அவன் என்ன கவிதையா சொல்கிறான் விரும்பிக் கேட்க. அவன் சந்தோஷம் கொள்ளை போன கதையைச்  சொல்கிறான்.

“சைலஜா ஏதோ பியூட்டிசியன் டிப்ளமாவ வைச்சு இங்க ஒரு பியூட்டி பார்லர்ல வேலைக்கு போனா. எனக்கும் ப்ராஜெக்ட் செயுறப்ப வேல்ஸ்ல  ஹாலிடே ஹோடெல்ல வேலை கிடைச்சது. அவளையும் அங்க வந்துடச் சொன்னேன். அவதான் லண்டன்ல அவ வேலை பார்த்துட்டு இருந்துக்குறதாவும். இதே வீட்டுல இருந்தா படிப்பு முடிஞ்சதும் லண்டன்ல வேலை தேடுறது ஈஸின்னும் சொல்லி என்னை சமாதானப் படுத்தி ஊருக்கு  அனுப்பினா.

எனக்கு வேலை பார்த்த இடத்துலயே தங்குற வசதி, சாப்பாடு உண்டு. இதைத் தவிர பக்கத்துல ஒரு இடத்துல என்னோட ப்ராஜெக்ட் வேலையும் பார்த்துட்டு இருந்தேன். வீக் எண்ட்  ரெண்டு பேருக்கும் வேலை இருக்கும், அதுனால ரெண்டு மூணு வாரத்துக்கு ஒரு தடவை லண்டன் வந்துட்டுப் போவேன். ஒவ்வொரு தடவையும் வீட்டுல ஆடம்பரப் பொருட்களோட எண்ணிக்கை அதிகமாச்சு. நான் விவரம் கேட்டா இப்ப ரெண்டு ஷிப்ட் வேலை செஞ்சு வாங்கினேன். இது இரவல் அப்படின்னு ஏதாவது  கதை சொல்லுவா.

என் கூட தீபக்ன்னு ஒரு பையன் வேலை பார்த்தான். தீபக்கோட பிரெண்ட் சாகர்  லண்டன்ல கிளப் ஒண்ணுல வேலை பார்த்துட்டு இருந்தான். சாகர் தீபக்கை எப்பவாவது பார்க்க வருவான். அப்படி வந்தப்ப ஒரு நாள் சாகர் நான் எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தான்”

கைகள் நடுங்கின அரவிந்துக்கு. அவனது பிரிவுக்கான காரணத்தை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது அவனுக்கு என்று புரிந்தது சித்தாராவுக்கு. சூடான காபி போட்டு அவனிடம் கொண்டு வந்து தந்தாள்.அந்த நேரத்தில் அது அவனுக்கும்  மிகவும் தேவையாக இருந்தது.

“தாங்க்ஸ்” என்று சொல்லி வாங்கியவன் மனதினுள் சொல்ல வேண்டிய வார்த்தைகளைக் கோர்த்தபடி காபியைப் பருகினான்.

“ஒரு வெள்ளிக் கிழமை மத்யானம் சாகர் கண்டிப்பா ஊருக்கு வா உன் மனைவிக்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாம்ன்னு  சொல்லிட்டு என்னையும் தீபக்கையும் கார்ல கூட்டிட்டுப்  போனான். தீபக் சும்மா ஒரு லண்டன் ட்ரிப்ன்னு சொல்லிதான் வந்தான். சாகர் வற்புறுத்தி எங்களை அவன் வேலை பாக்குற இடத்துக்குக் கூட்டிட்டு போனான்.

அங்க ஆம்பளைங்க பொம்பளைங்க வயசு வித்யாசம் கூட இல்லாம அரைகுறை ஆடையோட ஆடிப் பாடிட்டு, சொல்லவே நா கூசுற மாதிரி விஷயங்க எல்லாம் நடந்தது”

அப்போது பார்த்ததை நினைத்து இப்போது அருவருப்பாய் முகம் சுளித்துக் கொண்டான். அவன் கண்முன்னே அந்த நிகழ்வுகள் படமாக ஓடின…

 

“நான் வீட்டுக்குப் போறேண்டா. எனக்கு வாந்தியே வருது” சொல்லிக் கிளம்பியவனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நண்பர்கள், அங்கிருந்த ஒரு ஜோடியைக் காட்டினார்கள்.

“யாரப் பார்க்க போற… உன் மனைவிதான் இங்க இருக்காளே” என்று காண்பிக்க…

உடம்பின் முக்கால் வாசிப் பாகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த உடையில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆளின் கைகளைப் பற்றி ஆடிக் கொண்டு அவனிடம் சிலுமிஷம் செய்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் சைலஜா என்பதைப் பார்த்து அறிந்துக் கொண்டவனின் உள்ளம் வெடித்து சிதறியது.

ஒரு ஐட்டம் கேர்ளின் லாவகத்துடன் சைலஜா ஆடிய அந்த ஆட்டம் அவளுக்கு இது மிகவும் பழக்கம் என்பதைத் தெரிவித்தது. அந்த ஆளும் சளைக்காமல் அவளிடம் விளையாடிக் கொண்டிருந்தான். சுத்தி இருந்த கூட்டம் அவர்களை உற்சாகப் படுத்த ஆரம்பித்தது.

அரவிந்த்தின் முகம் ரத்தமென சிவந்துக் கன்றியது. அவன்  ஏதாவது கத்தி கலாட்டா செய்து விடக் கூடாது என்று அவன் வாயைப் பொத்தி வெளியே அழைத்துக் கொண்டு சென்றனர் நண்பர்கள். அவன் அருகிலேயே நின்றுக் கொண்டிருந்தனர். அரவிந்தின் கைகளை இறுக்கப் பற்றிக் கொண்டனர். அந்த நேரத்தில் அவனுக்கு அது அவசியமாக இருந்தது.

அரவிந்தின் ஊமை மனது கண்ணீர் வடித்தது. அதைக் கண்கள் காட்டிக் கொடுத்தது. சைலஜா அவனை ஒரு பலியாடாய் பயன்படுத்திக் கொண்டாள் என்பதைக் காலம் கடந்து உணர்ந்தான். இருந்தும் பண்பான குடும்பத்தில் இருந்து வந்தவன் அவளுக்கு ஒரு கடைசி சந்தர்ப்பம் தரத் தயாரானான்.

இரவு ரெண்டு மணி வரை அந்த இடத்தின் வாசலிலே நின்றுக் கொண்டிருந்த  அரவிந்த், சைலஜா வெளியே வந்தவுடன் சொன்னான்

“சைலஜா வீட்டுக்கு வா”

எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில் அரவிந்தை சந்தித்ததால் போதை முழுவதும் இறங்கிவிட்டது சைலஜாவுக்கு. அது சில வினாடிகள் தான் பின்னர் சுதாரித்துக் கொண்டாள்.

“எங்க வர சொல்லுற அந்தப் புறா கூண்டுக்கா?”

“இல்லை  நம்ம வீட்டுக்கு”

“அந்த நரகத்துல பிச்சைக்காரியா வாழ எனக்கு விருப்பமில்ல அரவிந்த். இனிமே பட்டேல்தான் எனக்கு எல்லாம். நான் அவர் கூட போறேன்”

பொறுமையைக் கையில் பிடித்தபடி பேசினான் அரவிந்த். இது முள்ளில் விழுந்த சேலை மெதுவாகத்தான் எடுக்க வேண்டும்.

“நீ பண்ணுறது தப்பு சைலஜா. ஆடம்பர வாழ்க்கை வெறில அளவுக்கு மீறி நடந்துக்குற. ஒரு நல்ல குடும்பப் பெண் செய்யுற காரியம் இல்லை இது. ”

“தப்பா? ஹா…ஹா… ஹா….. நமக்கு நல்லதுன்னா உலகத்துல எதுவுமே தப்பில்ல.

உன் மனைவியா இருக்குறது ரொம்பக் கஷ்டம் அரவிந்த். என்னோட அழகை ஆராதிக்குற அளவுக்கு உனக்குப் பணமில்லை, அந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்குற சாமர்த்தியமும் உனக்குக் கிடையாது.

உன்னையும் உன் குடும்பத்தையும் கட்டிக்கிட்டு காலமெல்லாம் அழ  என்னால முடியாது.  விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைக்கிறேன் மறக்காம சைன் பண்ணி அனுப்பிடு.

அப்பறம் எனக்காக எவ்வளவு பணம் தரவும் பட்டேல் ரெடி. வாங்கி உன் கடனை எல்லாம் அடைச்சுடு. நல்ல சான்ஸ் அரவிந்த் மிஸ் பண்ணாதே.”

அந்த சுயகாரியப் புலி அவனை விட்டுவிட்டு  வேறிடம் ஓடி சென்று விட்டது.

நண்பர்கள் அரவிந்தை சமாதனப் படுத்தினார்கள்

“இந்தப் பொண்ணு இங்க அடிக்கடி வரும் அரவிந்த். இப்ப கொஞ்ச நாளா இந்த ஆள் கூட வருது. உன் கிட்ட இந்தப் பொண்ணு  போட்டோ பார்த்ததும் எனக்கு ஷாக்.

இவளை வாட்ச் செஞ்சு உறுதி  பண்ணிட்டு தீபக் கிட்ட சொன்னேன். அப்பறம் நீ இவளைப் பார்த்ததும் கலாட்டா பண்ணா என்ன செய்யுறதுன்னு நெனச்சுத் தான் உன்னை கண்ட்ரோல் செய்ய தீபக் லீவ் போட்டுட்டு வந்தான்.

மன்னிச்சுக்கோடா… இவ வெறும் குப்பை. கோபுரம் மாதிரி இருக்குற உன்மேல காத்துல வந்து ஒட்டிகிட்ட குப்பை. அது இன்னொரு காத்து வந்தா தானா பறந்து போய்டும்.

எப்படி எதிர்பாராமல் அவன் வாழக்கையில் ஒரு விபத்தைப் போல வந்தாளோ. அதே போல் எதிர்பாராமல் விவாகரத்து வாங்கிப் பிரிந்து சென்றாள் சைலஜா.

அரவிந்த் புயலடித்தது  போல் சின்னாபின்னமாகயிருக்கும் தனது வாழ்க்கையில் இருந்து மீண்டு வரும் வேளையிலே மறுபடியும் அவன் வேலை பார்த்த ஹோட்டலுக்கு படேலுடன் வந்தாள் சைலஜா.

அவன் கையில் ஒரு சிசுவைத் திணித்துவிட்டு

“இது உன்னோட குழந்தைதான். நானும் எவ்வளவோ கலைக்க முயற்சி பண்ணேன். கடைசி வரை இந்த சனியனை ஒண்ணுமே செய்ய முடியல. எட்டர மாசத்திலையே வெளியே வந்து என்னைப் பாடா படுத்துது.

ரொம்ப வீக்கா இருக்குறதால ஆறு மாசம் இது தாங்குறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. எங்கயாவது விட்டுடலாம்னு பார்த்தா பட்டேல் இதுல தலையிட விரும்பல. நீதானே இதுக்கு அப்பா, இதை ஏதாவது செஞ்சுக்கோ. நாங்க பிரான்க்போர்ட்ல செட்டில் ஆகப்  போறோம்” என்று சொல்லிவிட்டு அவளது புத்தம் புதுக் கணவனுடன் நடையைக் கட்டினாள்.

உடன் இருந்தவர்கள் அந்தக் குழந்தையை அனாதை விடுதி எதிலாவது சேர்த்து விட்டுவிடலாம் என்று எவ்வளவோ சொன்னார்கள்.

“இது உன் பிள்ளையான்னு கூட உறுதியா தெரியாது…. ” தீபக் மெதுவாகச் சொன்னான்

கையில், ரோஜாவாய் மலர்ந்திருந்த  அந்தச் சின்னஞ் சிறு சிசுவைப் பார்த்தான் அரவிந்த். அது அவன் எங்கேயாவது கொண்டு போய் விட்டுவிடுவானோ என்ற பயத்தில் அவனது சட்டையை இருக்கப் பற்றிக் கொண்டு இருந்தது.

அரவிந்தின் உடலெல்லாம் நடுங்கியது

கையில் அமர்ந்த நிலவைத் தரையில் இறக்கி விடவே மனமில்லை

வாசல் திறந்து வந்தது தென்றல் வழியனுப்பவே வழியில்லை’

உறுதியாய் இறுதியாய் சொன்னான் “இல்லடா இது கண்டிப்பா என் குழந்தைதான். இந்தக் குழந்தை கிட்ட என் அம்மாவோட அருகாமையை உணருறேன். இந்தப் பாப்பா சிரிக்கிறப்ப என் சத்யாக்காவைப் பாக்குற மாதிரியே இருக்கு. அழறப்ப என் தங்கை சாரிகா அடம் பண்ணுற மாதிரியே இருக்கு. இந்தப் பாப்பாவை நான் என் உயிரைக் கொடுத்தாவது  காப்பாத்துவேன்”

அரவிந்தின் வாழ்க்கையை அவன் வார்த்தைகள் வழியே கண்டு கொண்டிருந்த சித்தாராவின் கண்களில் கங்கை. அது அவளது மனத்தைக் காட்டியது ஆமாம்

‘பாசம் நேசம் இரண்டையும் சொல்லக் கண்ணீரைப் போல் வழியில்லை’

“அம்மா கிட்ட கல்யாணத்துக்கு முன்னாடியே உன் கிட்ட நான் ஒரு டைவோர்சின்னு மட்டும் சொல்ல சொல்லி இருந்தேன். ஆனா அவங்க அதை மறைச்சு உன்கிட்ட நான் மனைவியை இழந்தவன்னு சொல்லி இருந்தது சமீபத்துல தான் எனக்குத் தெரியும். உன் கிட்ட உண்மை சொல்லாதது என் தப்புத்தான் சித்து என்னை மன்னிச்சுடு”

தரையில் மண்டியிட்டு அவள் மடியில் தலையை வைத்து  விம்மிய அரவிந்தின் கண்களில் இருக்கும் கண்ணீரைத் துடைத்து விட்டவள், மெதுவாக அவனது தலையைக் கோதி விட்டாள்.

‘எங்கோ அழுத கண்ணீர் துடைக்க எங்கோ ஒரு கை இருக்கிறது

தாவும் குருவிகள் தாகம் தீர்க்க கங்கை இன்னும் இருக்கிறது’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 17′(Final)தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 17′(Final)

அத்தியாயம் – 17 ரஞ்சன் சற்று இளைத்திருந்தான், கறுத்திருந்தான். கண்களை சுற்றிலும் கருவளையம் தூக்கமின்மையைக் காட்டியது. மொத்தத்தில் பழைய கலகலப்பில்லை. ப்ரித்வியின் வீட்டில் இருக்கும் ஒரு நாற்காலியைப் போல் நடப்பதை ஒரு பார்வையாளனாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இனிமேல் பார்க்கவே முடியாதோ

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 56தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 56

ஜெயசுதாவின் தகாத வார்த்தையின் விளைவை ஆண்கள் தடுக்க வழியில்லாது நிற்க, அவர் கழுத்தை இன்னம் இறுக்கியவாறு தொடர்ந்தாள். “மெக்கானிக் பொண்ணுன்னா அவ்வளவு கேவலமா உனக்கு? நான் உன்கிட்ட பிச்சை கேட்டு வந்து நின்னேனா… இப்ப நீதான் என்கிட்டே உன் மகனைத் திருப்பிக்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’

அத்தியாயம் – 12   இரவு ஏழரை மணிக்கு ஜலந்தரை அடைந்தது சென்னை-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ். சாய், காப்பி என குரல்கள் காதில் விழ ஆரம்பிக்க, “நந்தா எந்திரி…. ஊர் வந்துடுச்சு. அஞ்சு நிமிஷம்தான் இந்த ட்ரைன் ஸ்டேஷன்ல நிக்கும். அதுக்குள்ளே இறங்கல,