Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29

 

ல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா.

அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர்.

“சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம் நம்ம கிட்ட சிரிச்சு, கோவப்பட்டு, அழுது, மிரட்டி ஒரு பெரிய டிராமா பண்ணாளே… அவ பெத்த குழந்தையை வெறும் கையோடு பார்க்க வர்றா…

காதுலையும், கழுத்துலையும் வைரம் மின்ன மின்ன வரவளுக்கு , பக்கத்துல இருக்குற கடைல ஒரு சின்ன பொம்மை வாங்கித் தர முடியாது? அதைவிடு,  இவ்வளவு வருஷம் கழிச்சுப்  பாக்குற குழந்தையைத் தூக்கிக்  கொஞ்சினாளா?”

தோழி அதிர்ச்சியில் இருந்தபோது கவனித்தாளோ  இல்லையோ  என்று நினைத்த விஷயங்களை  எடுத்துச் சொன்னாள்.

“என்னமோ இவ மேல இருக்குற காதல்லதான் இவளுக்கு பிடிச்ச ‘ஸ்ராவணி’ன்னு பேர் வச்சாராமே அரவிந்த். கண்டிப்பா நம்ப மாட்டேன். அரவிந்த், கைக் குழந்தையா ஸ்ராவணியைத் தூக்கிட்டு உங்க வீட்டுக்குக் குடி  வந்தார். இந்தக் குழந்தையைத் தாயுமானவரா இருந்து கவனிச்சுகிட்டார்.

இந்த வனி குழந்தையா இருந்தப்ப ரொம்பக் குட்டியா இருக்கும், ஜீவனே இல்லாம அழும். சத்தமே கேட்காது. அதை கங்காரு மாதிரி தன்னோட வயத்தொட கட்டிக் கிட்டு லாண்டரிக்குத் துணி போடப் போவார்.

ஸ்ராவனிக்கு புட்டிப்பால் அலெர்ஜி  ஆயிடுச்சு . ஜாக்கி, உனக்குத் தெரியும் ஸ்ராவனிக்குத் தாய்ப்பால் கொடுத்து  கவனிச்சுகிட்டவ. எங்க வீட்டுக்குப் பக்கத்துலதான் குடியிருந்தா. அவ கிட்ட குழந்தையை கவனிச்சுக்க பணம் கொடுத்தார்ன்னு  கேள்வி. அப்ப எங்க போயிருந்தா இந்த அம்மா?

ஸ்ராவணி உடம்பு சரியில்லாதப்ப லீவ் போட்டு அவர் கஷ்டப்படுறதப் பார்த்தா எங்களுக்குப்  பாவமா இருக்கும். நான் கூட ஒரு தடவை நான் கொஞ்ச நேரம் பார்த்துக்கவான்னு கேட்டிருக்கேன்.

என் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காம வேண்டாம்னு சொல்லிட்டார். அவ வளர வளர அப்பா பொண்ணு முகத்துல சோகமும் கூடவே வளர்ந்தது. இப்ப நீ வந்தவுடனே தான் ஜீவன் இருக்கு. நீதான் அவங்க ஜீவன், சந்தோஷம், வாழ்க்கையோட உயிர்ப்பு  அதைப் புரிஞ்சுக்கோ”

சந்திரிகாவும் குழந்தைகளைக் கணவனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சித்தாராவின் வீட்டுக்கு வந்தாள். தன்னைப் பார்த்ததும் மத்தாப்பாய் மலர்ந்து சிரிக்கும் தனது தோழியின் முகம் களை இழந்து இருப்பதைக் கண்டு அவளால் வேதனை தாங்க முடியவில்லை.

“இந்தப் பொம்பள உன்னைக் குழப்பி அது மூலமா  அரவிந்த் வாழ்க்கைக்குள்ள மறுபடி வரப்  பாக்குறா. அவ சொன்ன மாதிரி அம்மான்னு உரிமையை வச்சு ஸ்ராவணியை உங்க கிட்ட இருந்து பிரிக்கவெல்லாம் முடியாது.

நான் ஹர்ஷிதா அப்பா கிட்ட சொல்லி, நல்ல வக்கீலா பார்த்து, அவர்கிட்ட  உன் சூழ்நிலையைப்  பத்தி பேசி,  சட்டத்துல சாதகமான விஷயத்தைக் கண்டு பிடிக்க சொல்லுறேன். கவலைப் படாதே. மனசைத் தளரவிடாதே”

வாயைத் திறந்தாள் சித்து “ எனக்கு அடுத்தவங்க உபயோகப் படுத்தினது பிடிக்காது. ரெண்டாந்தாரமா போக மாட்டேன்னு பாட்டிகிட்ட சண்டை பிடிச்சேன்.

பாட்டி ‘அந்தப் பையனும் இரண்டாந்தாரம் கல்யாணம் வேணும்னு கேட்கல. இது சூழ்நிலையால முடிவான கல்யாணம். முதல் தாரம் இறந்து போய்ட்டா, இறந்தவங்க தெய்வத்துக்கு சமம்… அவளோட அரவிந்த் வாழ்ந்த வாழ்க்கையை எச்சில் உணவா நினைக்காம ப்ரசாதமா நினை’ன்னு சொன்னாங்க.

நானும் இவ்வளவு நாளா அதைத்தான் நினைச்சுகிட்டு இருந்தேன். அதுனாலதான் என்னால அரவிந்த்தோட வாழ முடிஞ்சது. இப்ப அது முழுமையா பொய்யாயிடுச்சு. அதை என்னால தாங்கவே முடியல.

அரவிந்த் முன்னாடியே இதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல? இவளைப் பத்தியோ, முதல் திருமணத்தைப் பத்தியோ  ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லல சந்திரிகா”  விம்மினாள்.

தோழியின் முதுகைத் தட்டி சமாதானப் படுத்தியவள்,

“முதல் கல்யாணம் ஒரு விபத்து போல இருக்கு.  அரவிந்த், அவ வேலைக்கு போனதால  சந்தேகப்பட்டு, மாசமா இருந்த அவளை வீட்டை விட்டு விரட்டிட்டார்னு சொல்லுறா பாரேன். இதை உன்னால நம்ப முடியுதா? இதுல எங்க ரெண்டு பேருக்கும் பாலமா குழந்தை இருக்கும்போது,  யாரும் எங்களைப் பிரிக்க முடியாதுன்னு டயலாக் வேற”

கோவமாய் பேசினாள் சந்திரிகா

“எவ்வளவு தைரியம் இருந்தா உன்னை வீட்டை விட்டுப் போக சொல்லுவா? நீதான் அரவிந்தோட லீகல் வய்ப், அதை அந்த மரமண்டைக்குப் புரியுற மாதிரி எடுத்து சொல்லி இருக்கணும். நடக்குற விஷயத்தைப் பார்த்து நானும் வாயடைச்சுப் போய்ட்டேன்.

சித்து, அவங்க பிரிவுக்கு என்ன காரணம்னு இன்னமும் நமக்குத் தெரியாது. ஆனா அரவிந்த் மனசுல அது ஆழமான காயத்தை உண்டாக்கி இருக்கு. நம்ம கிட்ட அந்த மால்லயே அந்தப் பொம்பள அவ்வளவு நாடகம் போடுறாளே, அப்பாவி அரவிந்தை எவ்வளவு பாடு படுத்தி இருப்பா? அதுனாலதான்  முதல் கல்யாணத்தைப்  பத்திப்  பேசவே அவருக்கு பயம்மா இருக்கு” அரவிந்துக்கு வக்காலத்து வாங்கினாள் சந்திரிகா.

“நீ தப்பான முடிவுக்குப் போயிடாதே சித்து” கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.

“கண்டிப்பா மாட்டேன். இன்னைக்கு நான் நிறைய யோசிக்கணும்” என்றவள் மறுநாள்

“சந்திரிகா நான் கொஞ்ச நாள் ஊருக்குப் போயிட்டு வரேன். நீ வனியைப் பாத்துக்குவியா?”

“கண்டிப்பா. நீ போய் உன் பாட்டி கிட்ட பேசு தன்னால தெளிவு கிடைக்கும்.” என்றாள் சந்திரிகா. வயதான அவளது பாட்டியின் வாழ்க்கை அனுபவம் இந்த சூழ்நிலையில் இருந்து சித்தாரா மீண்டு வர உதவும் என்று நினைத்தாள்.

சித்தாரா மறுபடியும் மௌனமாய் உட்க்கார்ந்து யோசிக்கத் தொடங்கினாள்

பொய் சொல்ல பல சாட்சி, உண்மைக்கு ஒரு சாட்சி

அதுதான், மௌனத்தில் விளையாடும் நமது மனசாட்சி

அந்த மனசாட்சி சித்தாராவுக்கு உண்மையை எடுத்து சொல்லி இருக்கும் என்று நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’

அத்தியாயம் – 16 காலை நேரம் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சனிக்கிழமை என்பதால் நந்தனாவுக்கு விடுமுறை. நீளமுடியைக் கொண்டையாக முடித்துக் கிளிப் போட்டு, வீட்டில் போடும் பைஜாமாவுடன் சமையலறையில் சப்பாத்தியைத் தேய்த்துக்  கொண்டிருந்தாள். “டிபன் சாப்பிட்டுட்டு போங்க” உள்ளிருந்து கத்தினாள்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 35

அத்தியாயம் – 35   ஒரு வினாடி சாரிகா பேசும்போது  குறுக்கிட்ட  சித்தாரா  “இது  நடந்ததெல்லாம் எங்க வீட்டுக்கு நீங்க   குடிவரதுக்கு முன்ன  தண்டையார்பேட்டைல குடி இருந்திங்களே அப்பத்தானே” என்று கேட்டு  உறுதிப்  படுத்திக்  கொண்டாள். ஆமோதித்த சாரிகா தொடர்ந்தாள்.   முதுகு வலியால்  கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சுதாவைப் பார்க்க சுமித்ரா மதுரை சென்று விட,

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

பூங்காவில் கார்டை போட்டு பணம் செலுத்தி வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் வேகமாய் சைக்கிள் ஓட்டி ஒருவரை ஒருவர் முந்தினார்கள். ஓரிடத்தில் ஜெர்மன் கிராமிய நடனம் நடக்க அதை ஆர்வமாய் பார்த்தார்கள். ஒரு பெண்ணிருக்க அவளை