அத்தியாயம் – 2
விடியற்காலை நேரத்தில் எலியட்ஸ் பீச் காற்றை அனுபவித்தபடி தனது ஜாகிங்கைத் தொடர்ந்தான் சரத்சந்தர். இன்னும் இரண்டங்குலம் வளர்ந்திருந்தால் ஆறடி உயர நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பான். சதுரமான முகம், காற்றில் பறக்கும் முடி, சிரிக்கும் போது பளிச்சிடும் அழகான பல்வரிசை இதெல்லாம் அவனது ப்ளஸ்பாயிண்டுகள். உறுதியான உடல்வாகும், தெளிவான பார்வையும்,பேசும்போது அழுத்தம் திருத்தமான வாய்ஸ் மாடுலேஷனும் அவன் ஒரு முடிவெடுத்தால் அதில் ஒரே பிடியாய் நிற்பவன் என்பதை உணர்த்தும். சில சமயம் அவனையும் அறியாமல் இளகும் மனதை இந்த அஸ்திரங்களைக் கொண்டே சமாளிப்பான்.
இவனது அஸ்திரங்களை எல்லாம் தவிடு பொடியாக்கும் இரண்டு பெண்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். வெளியில் காண்பிக்காவிட்டாலும் அவர்களின் அன்புக்கு அவன் அடிமை. அந்த இருவரின் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீரைப் பார்த்தால் போதும் சரத் எதை செய்யவும் தயார்.
அந்த அழகான அப்பார்ட்மெண்ட்டில் நுழைந்தான். ஒவ்வொரு துளியிலும் பணத்தின் செழுமை அங்கு தெரிந்தது. ஆனால் அது எதுவும் அவனுக்கு சொந்தமில்லை. குளித்துவிட்டு படுக்கை அறைக்கு வந்தவன் அங்கு உறங்கும் அழகிய பெண்ணின் உறக்கம் கலையாமல் பெட்டியில் இருக்கும் உடையை அணிந்து கொண்டான். மாசு மருவின்றி வானத்திலிருந்து இறங்கிய தேவதையைப் போல உறங்கும் அந்த அழகி இன்றைய திரைத்துறையில் மின்னும் ஒரு நட்சத்திரம். அவள் பெயர் கூட நட்சத்திராதான்.
சமையலறையில் தனக்காக காபி கலந்துக்கொண்டான். நட்சத்திரா உலர் திராட்சையை முதல் நாளே நீரில் ஊறவைத்து அந்த நீரைப் பருகி திராட்ச்சையை உண்ணுவாள். சிறிது நேரம் கழித்து காலை உணவாக வேக வைத்த முட்டையில் செய்த சாண்ட்விச், க்ரீன் டீ. அவளுக்கு உடல் மேல் அத்தனை அக்கறை இருப்பதால்தானே இந்த வயதிலும் இத்தனை இளமையாக புதுமுகங்களிடமும் போட்டி போட முடிகிறது.
“விடியப் போகுதும்மா எழுந்திரு” என்றான்.
“போடா ராத்திரி முழுசும் தூங்கவே இல்ல. இப்ப கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்”
“நல்ல கதை… தூங்கவிடாதது நீ… தப்பு என் பேர்லயா”
என்றவனின் வார்த்தைகளைக் காதில் வாங்காமல் குப்புறப் படுத்து உறங்கத் தொடங்கினாள்.
“ராஜகுமாரி எழுந்திருக்கப் போறியா இல்லையா. நல்லா விடிஞ்சுருச்சுன்னா உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுருவாங்க” என்றதும் விருட்டென எழுந்தாள்.
“இந்தப் பேரை சொல்லிக் கூப்பிடாதேன்னு சொல்லிருக்கேன்ல… கால் மீ நக்ஷத்திரா. அந்த ராஜகுமாரி சாப்டர் முடிஞ்சது. என் பழைய வாழ்க்கையை மீடியாவில் மறைக்க எவ்வளவோ முயற்சி செய்றேன். நீ அந்த பேரையே சொல்லிக் கூப்பிடுற”
“பழசு எதுவுமே உனக்கு வேண்டாமா” அவனது குரலில் தென்பட்ட மாற்றத்தைக் கண்டுகொண்டவள்
“நீ மட்டும் வேணும்” என்றவாறு அவனைத் தன்னருகே இழுத்தாள். அவன் கோபத்தை தனக்குத் தெரிந்த வித்தைகளால் தணித்தாள்.
“புரிஞ்சுக்கோ சந்தர். ராஜகுமாரி வெளிய வந்தா அவளோட படிப்பு வாழ்க்கை எல்லாம் வெளிய வரும். என் வயசு, ஹிஸ்டரி எல்லாம் மீடியாவில் வர்றது என் கேரியருக்கு நல்லதில்லை”
“நக்ஷத்திராவுக்கு கேரியர் அத்தனை முக்கியமா”
“பின்னே… சின்ன வயசில் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா. வருஷத்துக்கு ரெண்டு புது டிரஸ் கிடைச்சா அதிகம். எங்கம்மா நூல் புடவையிலேயே வாழ்ந்தா. எங்கப்பா அழுக்கா நஞ்சு போன வேஷ்டி சட்டையோட அலைவார். ஒரு புடவையை பாதியா வெட்டி நானும் என் தங்கையும் பாவடையா தச்சுப்போம். இந்த ஒரு ரூமில் பாதிதான் எங்க வீடு. எல்லா குடுத்தனத்துக்கும் காமன் பாத்ரூம். அப்பல்லாம் பணம் சம்பாதிக்கணும் ஒரு வெறி வரும் பாரு. எப்படியோ அடிச்சு பிடிச்சு டிகிரி முடிச்சு, கோர்ஸ் படிச்சு, சின்ன சின்ன வேலையெல்லாம் பாத்துட்டு கடைசியில் உங்க ஆபிஸ்ல ரிஸப்ஷனிஸ்ட் ஆனேன். உன் கண்ணில் பட்டேன். காதல் கொண்டோம்”
“கல்யாணம் செய்ய தீர்மானிச்சப்ப அந்த டைரக்டர் கண்ணில் பட்ட, கதாநாயகி ஆன. அதிர்ஷ்ட தேவதை டபிள் ஷிப்ட்ல வேலை பார்க்க ஆரம்பிச்சா. தமிழ், தெலுங்குல ரெண்டு ரவுண்டு வந்துட்டு இப்ப புயல் பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கு”
“ஹா ஹா “ பெருமிதமாக சிரித்துக் கொண்டாள்.
“இன்னும் எவ்வளவு நாள்… எவ்வளவு நாள் காத்திருக்கிறது?”
“ப்ளீஸ்… புரிஞ்சுக்கோங்க… ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் கூட ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு”
“செகண்ட் ஹீரோயின் வாய்ப்புன்னு படிச்சேன்”
“ரெண்டாவது ஹீரோயின்னா கேவலமா…. இங்க இருக்கும் டாப் நடிகைகள் நினைச்சா கூட இந்த வாய்ப்பு கிடைக்காது”
“ஸாரிம்மா தெரியாம சொல்லிட்டேன்… இந்த வாய்ப்புக்காக எவ்வளவோ தியாகம் செய்திருக்க… யூ டிசர்வ் இட்“
“சந்தர்… நான் ஒழுங்கா சாப்பிட்டு எத்தனை வருஷமாச்சு தெரியுமா… இப்ப கூட உங்க கைல இருக்கும் காப்பி மணம் என்னை எவ்வளவு டெம்ப்ட் பண்ணுது தெரியுமா… ஆனால் உணவுக் கட்டுப்பாடும், எக்சர்சைஸ் இதெல்லாம்தான் இன்னமும் என்னைக் காப்பாத்திட்டு வருது”
“ஏன் இவ்வளவு கஷ்டப்படுற… உன்னளவுக்கு இல்லைன்னாலும் உன்னை ராணி மாதிரி பாத்துக்குற அளவுக்கு நான் சம்பாரிச்சு வச்சிருக்கேன். இந்தத் திருட்டுத்தனத்தை விட்டுட்டு முறைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்”
“ஹ்ம்ம்… “ பெருமூச்சு விட்டாள்
“எனக்கு மட்டும் கல்யாணம் செஞ்சுட்டு பிள்ளை குட்டிங்களோட வாழணும்னு ஆசை இல்லையா என்ன? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா சொந்த கம்பனி ஒண்ணு ஆரம்பிச்சு படத் தயாரிப்பில் இறங்கினது உங்களுக்குத்தான் தெரியுமே. அதில் கொஞ்சம் பலமான அடி. நான் நடிச்சுத்தான் அதையும் ஈடு கட்டணும். அதனாலதான் வர்ற படத்துக்கெல்லாம் ஒகே சொல்லிட்டு இருக்கேன்”
அவளது பேச்சு சரத்தின் ஆதங்கத்தைக் குறைத்தது. ஆனால் அவனது நிலமையையும் அவள் உணர வேண்டுமே… உணர்ந்தாளா தெரியவில்லை. இல்லையென்றாலும் இந்த முறை அவன் விடுவாதாயில்லை அவளிடம் இன்னொரு தரம் அழுத்தமாய் சொல்லவேண்டும். இவளது கமிட்மெண்ட்ஸ் முடிய இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது. அதற்குள் காலம் ஓடிவிடாதா…
நக்ஷத்திரா ட்ரெஸ்ஸிங் டேபிளில் அமர்ந்து கண்ணாடியில் கண்களை சுற்றிலும் பரீட்சித்துப் பார்த்தாள்.
“கண்ணு வீங்கிருக்கா… தூங்காதது தெரியுதா”
“இல்லை… ஆனால் போன தடவைக்கு இந்த தடவை இளைச்சிருக்க மாதிரி தெரியுது”
“லிப்போ சக்க்ஷன்… திட்டாதிங்க… கனடால தெலுகு பட ஷூட்டிங். ரெண்டு மாசம். வின்டர் வேற.. நல்ல சாப்பாடு, சரியா எக்ஸர்சைஸ் பண்ண முடியல… சதை போட்டிருச்சு. ஹிந்தி படத்துக்கு உடம்பைக் குறைக்கணும். என்ன செய்றது”
“உடம்பு மெஷின் இல்லை… நீ நினைச்ச இடத்தில் எல்லாம் டிங்கர் பண்ணி ஓட்ட… நமக்கு வயசாயிட்டே இருக்கு”
“வயசாச்சா… என்னைப் பார்த்தா எத்தனை வயசு மாதிரி தெரியுது சொல்லுங்க”
“ஒரு இருபத்தேழு, இருபத்தெட்டு”
“அவ்வளவா… “ அவளது முகத்தில் அதிர்ச்சி.
“மனுஷ உடம்பில் எத்தனை வயசை மறைக்க முடியும்னு நினைக்கிற… உன்னோட நிஜ வயசான முப்பத்தி…”
அவனது வாயைக் கைகளால் பொத்தினாள்.
“போதும்.. போதும்… “
“நான் சீரியஸா சொல்றேன் ராஜி… நீ எட்டாவது படிக்கிறப்ப டைரக்டர் அங்கிள் பாத்து நடிக்கக் கூப்பிட்டார்னு கதை விடுறதை மக்கள் வேணும்னா நம்புவாங்க. உன் உடல்வாகும் இப்ப ஒத்துழைக்கலாம். ஆனால் உன் உண்மையான வயசு உன் மனசுக்குத் தெரியும். நம்ம கிட்டத்தட்ட ஒரு எட்டு வருஷமா லவ் பண்றோம். ஆறு வருஷமா ரிலேஷன்ஷிப்பில் இருக்கோம். எனக்கும் வயசாயிட்டே போகுது. நீயும் போதுமான அளவு சம்பாரிச்சுட்ட. பேசாம கல்யாணத்தை பண்ணிட்டு செட்டில் ஆகலாம். அம்மா வேற ரொம்ப தொல்லை பண்றாங்க”
“நான் மாட்டேன்னா சொல்றேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே சரின்னு சொல்லிட்டேன். உங்க வீட்டில் கூட உங்களுக்குள் கல்யாணமாயிடுச்சுன்னு தானே சொல்லிருக்கீங்க”
“உன் பேச்சைக் கேக்கும் மடத்தனத்தை அப்பத்தான் நிறுத்தினேன்”
“அப்படி என்ன பெருசா துரோகம் செய்துட்டேன்”
“எனக்காக பொண்ணு பாத்து கல்யாணம் ஏற்பாடு பண்ண எங்கம்மாட்ட ஏற்கனவே கல்யாணமாயிடுச்சுன்னு பொய் சொன்னேன். அதை உண்மையாக்க ரகசியக் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணோம். கடைசி நேரத்தில் டாப் ஹீரோ படத்தில் வாய்ப்பு வந்திருக்கு. கல்யாணம் செய்ய டைரக்டர் தடைன்னு கல்யாணத்தைத் தள்ளிப் போட்ட”
“அதனால இப்ப என்ன… உங்க அம்மா தொல்லை நின்னுச்சா இல்லையா….”
“அதைத் தொல்லைன்னு என்னால நினைக்க முடியல. இதுக்கு முன்னே அப்பப்ப ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசிட்டு இருந்த எங்கம்மா என்கூட பேசுறதையே சுத்தமா நிறுத்திட்டாங்க…. உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கக் கூட அவங்க விரும்பல. அவங்களுக்கு நான் ஒரே பையன். எங்கப்பா நான் சின்னதாயிருந்தப்பவே தவறிட்டார். இதெல்லாம் உனக்கு நல்லாவே தெரியும். அவங்க ஆசையை நிறைவேத்த வேண்டாமா”
“கஷ்டப்பட்டு ஒரு நாள் பிரீ பண்ணிட்டு உன் கூட கழிக்கலாம்ன்னு வந்தால் இப்படி அறுத்துக் கொல்லாதே”
“தயவுசெய்து என்னோட இக்கட்டான நிலமையை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு. எங்கம்மாவுக்கு ஹார்ட் சர்ஜரி நடந்திருக்கு ராஜி. அவங்க செத்துப் பொழைச்சிருக்காங்க. கண் முழிச்சதும் என் குடும்பத்தைப் பாக்கணும்னு சொல்றாங்க. நம்மதானே கல்யாணம் செய்துக்குறதா முடிவு பண்ணிருக்கோம். இப்போதைக்கு என் மனைவின்னு அவங்க கண்ணு முன்னாடி வந்து நில்லு. மத்தபடி உன் கமிட்மெண்ட்ஸ்ல எந்த வகையிலும் குறுக்கிட மாட்டேன்னு ப்ராமிஸ் பண்றேன்.
புரிஞ்சுக்கோ… உனக்காக இத்தனை வருஷமா காத்திருக்கேன். நீ பிடியே கொடுக்க மாட்டிங்கிற”
“சந்தர்… என்னோட ஒவ்வொரு அடியையும் பாத்து பாத்து எடுத்து வச்சுட்டு இருக்கேன். நம்ம ரெண்டு பேரைப் பத்தி ஒரு சின்ன க்ளூ கிடைச்சா கூட போதும் என் சினிமா வாழ்க்கைக்கு சமாதி கட்டிடுவாங்க.
இங்க இருக்குறது கட் த்ரோட் கம்பட்டிஷன். நேரில் சிரிச்சு பேசுறவங்கதான் நமக்கு குழி பறிப்பாங்க. இத்தனை போட்டியையும் சமாளிச்சு இப்பத்தான் பாலிவுட்டில் நுழைஞ்சிருக்கேன். எங்க வீட்டில் இந்த சந்தர்ப்பத்தைத் தவற விட வேணாம்னு சொல்றாங்க. இன்னொரு ஸ்ரீதேவியா வரணும்னுறது என் ஆசை. அதுக்குக் குறுக்க நிக்காதே”
“சரி உன் சினிமாவை விட்டு வெளிய வந்து என் கேள்விக்கு பதில் சொல்லு…. எங்கம்மாவுக்கு நான் குடும்பத்தோட வாழணும், அதை அவங்க பாக்கணும் என்ற ஒரே நியாயமான ஆசைதான். அதைக் கூட நிறைவேற்றலைன்னா அவங்களால் அந்த ஏமாற்றத்தைத் தாங்க முடியாது. கல்யாணம் ஆகலைன்னு சொன்னா ஒருவேளை அந்த சமயத்தில் அதிர்ச்சியடைஞ்சாலும் கையோட சொந்தக்காரப் பொண்ணுங்க யாரையாவது கல்யாணம் பேசி முடிப்பாங்க.”
“நீ மாட்டேன்னு சொல்லு”
“என்னால முடியல. அவங்களோடது ஒரு நியாயமான எதிர்பார்ப்புதானே. எனக்கு முப்பத்து நாலு வயசாச்சு. இதுவரைக்கும் நான் செஞ்ச எதுவும் அவங்களுக்கு நிம்மதி தரல.
காலம் எங்கம்மாவுக்கு இதுவரைக்கும் சந்தோஷமே தந்ததில்லை. சின்ன வயதிலேயே என் அப்பா இறந்துட்டார். அதுக்கப்பறம் கிட்டத்தட்ட ஒரு சந்நியாசி வாழ்க்கைதான் வாழ்ந்தாங்க.
இனி வாழப்போகும் வருஷங்களாவது நிம்மதியா அவங்க கழிக்கணும். அதுதான் என்னோட ஒரே குறிக்கோள். அவங்க கூட இருக்கணும் என்ற ஒரே காரணத்துக்காகவே கொஞ்சநாள் கழிச்சு ஊர்பக்கமே பிஸினெஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”
“எனக்குப் புரியுது… அவங்க மகன் மருமகள் கூட இறுதிக்கு காலத்தை ஓட்டணும்னு நினைக்கிறாங்க. என்னால இப்போதைக்கு கல்யாணம் பண்ண முடியாது” என்ன செய்யலாம் என்று யோசித்தவள்
“ஒண்ணு செய் யாராவது எக்ஸ்டரா நடிகையை ஏற்படு செய்றேன். அவளை உன் வைபா கொஞ்ச நாள் நடிக்க சொல்லு”
“கொஞ்சநாள்ன்னா… “
“ஒரு மூணு நாலு வருஷம்… அவ்வளவு நாள் யாரும் நடிக்க மாட்டாங்க இல்ல. பேசாம யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ. என் கமிட்மெண்ட்ஸ் முடிஞ்சதும் டைவர்ஸ் பண்ணிடு”
“கொஞ்சம் சீரியஸா பேசுறியா”
“நிஜம்மாத்தான் பேசுறேன் சந்தர். ஒரு ஏழைப் பெண்ணா பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கோ. அதுக்கு முன்னாடியே விடுதலைப் பாத்திரம் எழுதி வாங்கிடு. நான் பிரீ ஆனதும் அவளை டைவர்ஸ் பண்ணிடலாம்”
“அப்ப எங்கம்மா மருமக எங்கன்னு கேட்க மாட்டாங்களா”
“நீதான் உங்கம்மா நாளை எண்ணிட்டு இருக்காங்கன்னு சொன்னியே”
அவன் முறைப்பதைக் கண்டு “சாரி சாரி… நான் ரெடியானதும் அவளை டைவர்ஸ் பண்ணிட்டு அனுப்பிடு. ஆனால் ஊரில் பிசினெஸ் பண்ணும் நினைப்பை விட்டுரு. நம்ம மும்பைலயோ சென்னைலயோதான் இருப்போம். உங்க அம்மா வரும் சமயத்தில் எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”
அவனது சுருங்கிப் போன முகத்தைக் கண்டு
“சரி சரி, நம்ம கூடவே அவங்களை வச்சுக்கலாம்”
“ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து டைவேர்ஸ் செய்து இதெல்லாம் நல்லாவா இருக்கு. அம்மா ஒத்துக்குவாங்களா. சொந்தக்காரங்க என்ன சொல்லுவாங்க… “
“செய்ற காரியத்தில் எல்லாம் சொத்தை சொல்றவங்கதான் சொந்தக்காரங்க. நம்ம கல்யாணம் முடிஞ்சதும் நக்ஷத்திராவோட உறவினர்கள்ன்னு சொல்லவே அவங்களுக்கு இனிக்கும். அப்பறம்… உங்கம்மாவை சரி செய்யும் வேலையை நான் பாத்துக்குறேன். இன்னும் மூணு வருஷம் என்னைத் தொல்லை பண்ணாதே. அடுத்த முறை திருவனந்தபுரத்தில் மீட் பண்ணலாம்”
அவனுடன் உரையாடியபடியே முகம் முழுக்க மறைக்கும்படி பெரிய கண்ணாடியை அணிந்து வெயிலுக்கு தலையை சுற்றி துப்பட்டாவால் மறைத்து ரெடியாகி இருந்தாள்.
“நான் சொன்னதை யோசிச்சு வை. நானும் இந்த கண்டிஷனுக்கு ஒத்து வரமாதிரி பொண்ணைத் தேடுறேன்”
அவனது மறுப்பு காதலியின் மூச்சு முட்டும் முத்தத்தால் மறைந்தது.