Tamil Madhura உள்ளம் குழையுதடி கிளியே உள்ளம் குழையுதடி கிளியே – 1

உள்ளம் குழையுதடி கிளியே – 1

அத்தியாயம் – 1

ண்ணே  பஸ்ச ஸ்லோ பண்ணுங்க… ஹிமா தெருமுனையில் வர்றா”

காலை ஏழு மணிக்கே கூட்டம் அப்பும் வடசென்னை பஸ்ஸில் டிரைவருக்கு மட்டும் கேட்கும்படி மெதுவான குரலில் கெஞ்சினாள் க்றிஸ்டி.

 

“பீக் அவர்ல  ஸ்டாப் இல்லாத இடத்தில் நிறுத்த சொல்லாதே… என்னைப் பிரிச்சு மேஞ்சுருவானுங்க.. “

 

“இந்த ஒரு தடவை அண்ணே… ஏற்கனவே  வேலைக்கு நேரமாச்சு”

 

பேருந்தை ஸ்லோ செய்தார் ட்ரைவர். அதற்குள் சிக்னல் விழுந்துவிட  பேருந்தை நிறுத்தினார்.

 

“மாட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தவனெல்லாம்  டிரைவரா வந்துட்டாங்கய்யா” முணுமுணுத்தபடியே சிலர் இறங்க பஸ்ஸில் ஓடி வந்து ஏறினாள் ஹிமாவதி.

 

“தாங்க்ஸ் அண்ணே” மூச்சிரைத்தபடியே டிரைவரிடம் நன்றி சொன்னாள்.

 

“ஏம்மா…. இந்த கிறிஸ்டி கூடவே வரதுக்கென்ன?” கடிந்து கொண்டார். அவரது வீடும் அவர்கள் தெருவிலேயேதான் இருக்கிறது. அதனால் நல்ல பழக்கம்.

 

“காலைல எப்படியோ லேட்டாயிடுதுண்ணே. இனிமே சீக்கிரம் வந்துடுறேன்”

 

அவள் கையில் டிபன் கேரியரைப் பார்த்தபடியே

 

“அம்மாவைப் பாக்கப் போறியா….?” என்றார்.

 

“ஆமாம்..… ஹோம்ல மதர் பாக்க வர சொல்லிருக்காங்க. அம்மாவுக்கு வேற ஹோம்  சாப்பாடு நாக்குக்குப் பிடிக்கலையாம். கொஞ்சம் காரசாரமா  சாப்பிடணுமாம். அதான் காலைல சமைச்சு எடுத்துட்டு வந்தேன்”

 

“நீ ஆன்ட்டியைப் பாத்துட்டு வேலைக்கு  சரியா ஒன்பது மணிக்கு  வந்துடுவேல்ல…. “ சந்தேகத்தோடு வினவினாள் கிறிஸ்டி.

 

“எட்டு மணிக்கு மதரைப் பாத்துட்டு நேரா பஸ் பிடிச்சு வரணும். நேரமாயிடுச்சுன்னா ஆட்டோ பிடிச்சு வந்துடுறேன்” உறுதியற்ற குரலில் தோழிக்கு பதிலளித்தாள் ஹிமா.

 

இந்த வாரம் ஏற்கனவே இரண்டு தினங்கள் வேலைக்குத் தாமதமாக சென்றிருக்கிறாள். இன்றும் நேரத்துக்கு செல்லவில்லை என்றால் அந்த மேனேஜர் வார்த்தைகளாலே குதறி விடுவார். வேலையை விட்டுத் தூக்கினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

 

இன்றைய நிலைமையில், இந்த வேலை அவளுக்கு மிக மிக அவசியம். அதனால் எப்படியாவது ஒன்பது மணிக்கு அவர் கண்முன்னே நின்றுவிட வேண்டும் என்ற கவலையுடனேயே பயணித்தாள். அவளது யோசனைகளைப்  பற்றி அறிந்த கிறிஸ்டியும் சிந்தனைக்கு இடையில் குறுக்கிடவில்லை.

 

ஹிமாவதி ஐந்தடி ஆறங்குல உயரம், விளம்பரத்தில் காண்பிக்கும் மாடல் பெண்கள் போல சற்று ஒடிசல் தேகம். பொன்னிறம், ஓவல் வடிவ முகம், திருத்தப்பட்ட புருவம், கூர்மையான களைப்பான கண்கள் , அழகாக  செதுக்கிய மூக்கு, சிறிய சிவந்த இதழ்கள், ஃபிரண்ட் கட் செய்திருந்ததால் நெற்றியில் பாதி மறைத்த முடி. அதற்கு நடுவே தெரிந்த சிறிய பொட்டு.

கிரீம் நிறத்தில் கருப்பு புள்ளிகள் போடப்பட்ட  நீள குர்த்தியும், கருப்பு லெக்கிங்ஸ்ம் அணிந்திருந்தாள். உருவத்தில் மார்டனாகவும், உடைகளை அணிவதில் கண்ணியமாகவும் இருக்கும் ஹிமாவதிதான் நம் கதாநாயகி. இனி அவள் வாழும் வடசென்னை பகுதியைப் பற்றி…

 

அந்த காலத்தில் மதராஸ் சிட்டியை வெள்ளையர் வாழும் வெள்ளை நகரமாகவும் அவர்களுக்கு சேவை செய்யும் கறுப்பர்கள் வாழும் கறுப்பர் நகரமாகவும் பிரித்த வால்டாக்ஸ் ரோடு. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் என்று இந்த தலைமுறையிலும்  தங்களது ஜாகைக்குள் சுருக்கிக் கொண்ட சென்னையின் பூர்வகுடிகள்.

 

மாநில அளவில் முதல் மதிப்பெண்களைக் குவிக்கும் இதே  சென்னையில்தான் ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகள், படிக்க வேண்டும் உந்துதல் இல்லாததால் பள்ளி இடை நிற்றல், படிப்பு தடைபட்டதின் விளைவால்  குழந்தை தொழிலாளர்கள், கூலித் தொழிலாளிகள், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர், அவர்களை தங்கள் லாபத்துக்காக வளர்க்கும் சுயநலமிகள்   என்ற நிலையில் இருக்கும் வடசென்னையும் இருக்கிறது.

 

இந்தியாவின் தொழிற்புரட்சி இங்கிருந்துதான் ஆரம்பித்தது. சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத சமயத்தில் தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் என்பதால் இவற்றால் ஏற்படும் மாசுதான் அதிகம்.

 

விளையாட்டு இவர்கள் உயிர்மூச்சு. கேரம் குத்துசண்டை விளையாட்டு என்று பின்னிப் பெடலெடுக்கும் வீரர்கள் இங்கேதான் இருக்கிறார்கள். கிரிக்கெட் போட்டிக்கு ஆயிரக்கணக்கில் செலவழிக்கும் நம் கருத்தை கேரம் வேர்ல்டுகப்பில் இரண்டாவது இடம் பெற்ற ராதாகிருஷ்ணன் எட்டவே இல்லை.

 

இவர்களுக்குக்  கல்வியோ, சுகாதாரமோ நூறு சதவிகிதம் சென்றடைய முடியாதபடி எது தடுக்கிறது என்ற கேள்விக்கு இன்னும் விடை தேடிக்  கொண்டே இருக்கிறார்கள்.

 

இத்தனை பாதகங்கள் இருந்தும், எளிமையான வாழ்க்கை முறை, செலவு குறைவு, ஈரம் நிறைந்த மக்கள், ஓட்டுதல்  நிறைந்த வடசென்னை வாசிகள் இவையே இந்த இடத்தைத் தேடி மக்கள் வருவதற்குக்  காரணம். அதன் காரணமாகவே ஹிமாவதியும் ஒரு இரண்டு வருடத்துக்கு முன்பு இங்கு குடியேறினாள். அவளுக்கு இன்று வரை பெரும் துணையாக அவளது வகுப்புத் தோழி கிறிஸ்டி இருக்கிறாள் என்றால் மிகையாகாது.

 

பஸ்ஸிலிருந்து இறங்கிய கூட்டம் மின்சார ரயிலைப் பிடிக்க விரைந்தது. அவர்களிடம்

 

சென்ட்ரல்-லிருந்து கிளம்புறாண்டா சூப்பர் ஃபாஸ்ட்டு

அதுல தொங்கிட்டு போனா அடிச்சுடுண்டா  இரும்பு போஸ்ட்டு

கைகால் உடைஞ்சா லைஃப்பு வேஸ்ட்டு

உனக்கு நேரம் சரியில்லைன்னா பாஸ்போர்ட்டு

 

என்று கானா பாட்டுப் பாடி இளைஞர்களுக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான் ஒருவன்.

 

அவன் பாடலைக் கேட்டபடி அடுத்த பஸ்ஸைப்  பிடிக்க விரைந்தாள் ஹிமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

உள்ளம் குழையுதடி கிளியே – 24உள்ளம் குழையுதடி கிளியே – 24

அத்தியாயம் – 24 சென்னைக்கு வந்தவன் முன்னரே எதிர்பார்த்தபடி உடனடியாக துபாய் செல்ல வேண்டியிருந்தது. அங்கிருக்கும் ஒரு நிறுவனத்தின் காண்ட்ராக்ட்டை கவனிக்க வேண்டியிருந்ததால் அவனது அலுவலக வேலைகள் அதிகமானது. அவனது நிறுவனம் துபாயின் மருத்துவ சேவை நிறுவனத்தின் இன்ப்ரா ஸ்டரக்சர் பொறுப்பை

உள்ளம் குழையுதடி கிளியே – நிறைவுப் பகுதிஉள்ளம் குழையுதடி கிளியே – நிறைவுப் பகுதி

சில நாட்கள் கழித்து ஒரு இனிய மாலைப் பொழுது, சரத் பள்ளிக்கு ஹிமாவையும் துருவையும் அழைக்க சென்றான். முன்பு இருந்த தாடிக் கோலம் மாறி நீட் ஷேவ் செய்து ட்ரிம்மாய் வந்தவனைக் கண்டு “நீங்க யாரு ஸார் புதுசா இருக்கீங்க” என்று

உள்ளம் குழையுதடி கிளியே – 2உள்ளம் குழையுதடி கிளியே – 2

ஹாய் பிரெண்ட்ஸ், முதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர் அறிமுகமாகிறான். பதிவைப்  படியுங்கள், உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் உள்ளம் குழையுதடி கிளியே