Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 25

அத்தியாயம் – 25

 

விவேகானந்தனின் வரவு எதிர்பாராததாக  இருந்தாலும் அவரை நினைத்து ஆச்சிரியமாக இருந்தது அரவிந்திற்கு. அவர் கொடுத்திருந்த ஈமெயில் விலாசத்துக்கு தனது திருமண விவரம் பற்றி சம்பிரதாயமாக எழுதி இருந்தான். அதனைப் படித்து விட்டு இரண்டு வரி வாழ்த்து சொல்லி எழுதியவர் அடுத்த முறை லண்டன் வரும்போது கண்டிப்பாக வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி விலாசத்தை வாங்கி இருந்தார். இப்படி நிஜமாகவே வருவார் என்று நினைக்கவில்லை.

அவர்கள் திருமணதிற்கு பரிசும், ஸ்ராவனிக்கு ஏராளமான பொம்மைகளையும் வாங்கி வந்திருந்தார். அவரது மருமகளுக்கு இது பிரசவ சமயமாம். அந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. இவர் ஏதோ தன்னாலான உதவி செய்யலாம் என்று நினைத்து வந்திருக்கிறார்.

“வழக்கமா குளிர் காலத்துல எங்கேயும் போக மாட்டேன். எனக்கு ஒத்துக்காது. இப்ப நம்மள விட்ட வேற யாரு இருக்கா. அதுனால தான் திருப்பரங்குன்றம் முருகன் மேல பாரத்தைப் போட்டுட்டு வந்துட்டேன். என் வீட்டம்மா இருந்திருந்தா உதவியா இருக்கும். எனக்கு என்ன உதவி செய்யுறதுன்னே தலையும் புரியல வாலும் புரியல” வருத்தப்பாட்டார்.

“கவலைப்படாதிங்க அங்கிள் உங்களுக்கு என்ன வேணும்னாலும் சொல்லுங்க. எனக்கும் ஒண்ணும் தெரியாது, இருந்தாலும் நீங்க சொல்லுறத செய்யுறேன்” தனது உதவி மனப்பான்மையை காட்டினாள் சித்தாரா.

“ரொம்ப நன்றிம்மா” என்று மனது நிறைந்து சொன்னார் விவேகானந்தன்.

காதல் தேவதையின் அருளால், சித்தாராவின்  மயக்கும் வட்டக் கருவிழியின் அசைவிலே மையலில் கழிந்தது அரவிந்தின் நாட்கள். இதன் நடுவே அரவிந்தும் மற்ற வேலைகளுக்கு முயற்சி செய்தான். இதனால் அடிக்கடி வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வந்தது.

அப்படி ஒரு நாளில் விவேகானந்தனின் மருமகளுக்கு பிரசவ வலி வர, சித்தாரா அவர்கள் வீட்டிற்குப் போய் உதவி செய்து வந்தாள். இதனால் விவேகானந்தன் மகன் கல்யாண் – நான்சி தம்பதியினருக்கும் பிரியமானவளாகிப் போனார்கள் சித்துவும் வணியும். அரவிந்த் ஊருக்குப் போய் வந்ததும் மற்றவர்கள் வீட்டுக்கதை பேசவே அவளுக்குப் பொழுது சரியாக இருந்தது.

“அரவிந்த் இந்த ஜோக் கேளேன், நம்ம விவேக் அங்கிள் என்னம்மா  மருமக பிரசவத்துக்கு கவலைப் பட்டார். அவர் பையன் கல்யாண் என்னவோ அவருக்குத்தான் வலி எடுத்து டெலிவரி ஆகப்  போற மாதிரி ஒரே அழுகை. ஆனா அவர் மருமக நான்சி பயங்கர தைரியம். ரெண்டு பேரையும் அழக்கூடாதுன்னு புத்தி சொல்லிட்டு, நல்லா வலி வந்தப்பறம் தான் ஹாஸ்பிடல் கிளம்பினாங்க.

சொல்ல மறந்துட்டேனே இது அவங்களுக்கு மூணாவது குழந்தை. அதுக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம். முதல் ரெண்டும் பசங்க. அறுந்த  வாலுங்க. நான் தான் ரெண்டு நாள் அவங்களை கவனிச்சுக்கிட்டேன். அங்கிளும், கல்யாணும் சமைச்சாங்க. என்ன சூப்பரா சமைக்குறாங்க தெரியுமா? மூணாவது அழகான பெண் குழந்தை அரவிந்த். கல்யாண் அவங்க அம்மா பேர பொண்ணுக்கு வச்சுருக்கார். அங்கிள் பாப்பாவ தூக்கி வச்சுகிட்டே இருக்கார்.”

யோசித்து விட்டு சொன்னாள் “இந்த  நான்சி – கல்யாண் பேரை பாரேன். இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது?”

“என் மேல உனக்கு கொஞ்சம் கூட அக்கறையே இல்லைன்னு தெரியுது”

“என்ன அரவிந்த் இப்படி சொல்லிட்ட” சிணுங்கினாள்

“நாலு நாள் வெளியூர்ல இருந்துட்டு வந்திருக்கேன். அத்தான் நேராநேரதுக்கு சாப்பிட்டிங்களா, உங்களை பார்க்காம நான் இளைச்சு போயிட்டேன். இப்படி சொல்ல வேண்டாமா?”

“உன் தொப்பயைப் பார்த்தாலே தெரியுதே நாலு நாளும் பீட்சாவை வெட்டு வெட்டி இருப்பன்னு. உங்க சட்டை பொத்தான கூட போட முடியால அத்தான்” என்றாள் நக்கலாக

“எனக்கா தொப்பை, வாடி வாடி வாடி என் மீசையில்லா கேடி …..” காதைப் பிடித்துத் திருகினான். ‘உன் சமையல சாப்பிட முடியாம தொப்பை பாதியா கரைஞ்சு போச்சு”

“காது வலிக்குது விடு அரவிந்த். நீ வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம வனி கிட்ட கிறிஸ்துமஸ்க்கு தம்பி வாங்கித் தரேன்னு சொல்லிட்ட, ஊர் பூராவும் சொல்லி நம்ம ரெண்டு பேர் மானத்தையும் வாங்கிட்டு இருக்கா. பாக்குறவங்க எல்லாம் என்ன வனிக்கு கிறிஸ்துமஸ்க்கு சூப்பர் கிப்ட் பிளான் பண்ணி இருக்கிங்க போல இருக்கேன்னு கலாய்குறாங்க. உன்னை என்ன செஞ்சால் தேவல”

“கவலைப் படாதே நிஜமாவே கிப்ட் தந்துடுவோம்”

வாடியது சித்தாராவின் முகம்

“வேண்டாம் அரவிந்த் எனக்கு பயம்மா இருக்கு”

அரவிந்திற்கு ஆச்சிரியம் “ என்னம்மா, உனக்கு என்ன பயம்?  நான்சி டெலிவரியைப் பார்த்து பயந்துட்டியா”

“பச்… இல்ல”

“அப்பறம்…. “

“இன்னொரு குழந்தை வந்தா வனி மேல இருக்குற அன்பு குறைஞ்சுடுமோன்னு எனக்கு பயம்மா இருக்கு அரவிந்த். நான் பாராபட்சம் பார்க்க ஆரம்பிச்சுட்டா”

அரவிந்த் நெகிழ்ந்து விட்டான்.

‘அதுக்காக தனக்குக் குழந்தையே வேணாம்னு நினைக்குறாளா? அந்த அளவு எங்க மேல உனக்கு ஒட்டுதலா சித்து? நாங்க ரொம்ப லக்கி’.

“சித்து அந்தக் கவலை உனக்கு வேண்டாம். பாராபட்சமா நடக்க உன்னால கண்டிப்பா முடியாது. கீரைக்காரி பசியைக் கூடத் தாங்க முடியாத உன்னால வனி மேல இன்னமும் அதிகமாத்தான் பிரியம் காட்ட முடியும்”

அமைதி நிலவியது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான் அரவிந்த்

“ நமக்கு இன்னொரு குழந்தை வேணும் சித்து. உன் வயத்துல இருக்குற போதில் இருந்து ஒவ்வொரு மாசமும் அதோட வளர்ச்சியையும் நான் ரசிக்கணும். அந்தக் கல்யாண்-நான்சி மாதிரி நானும் டெலிவரி சமயத்துல உன் கூடவே இருக்கணும். என் குழந்தையை பிறந்தவுடனே நான் பார்க்கணும். இதெல்லாம் என்னோட சின்ன சின்ன நிறைவேறா ஆசைகள். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ” கண்கள் கலங்கி விட்டது அவனுக்கு.

“ஹே நீ சிவாஜி படம் நிறையா பார்ப்பியா? பொசுக் பொசுக்குன்னு உணர்ச்சி வசப்படுற”

அவள் வாய் பேசியது. அவள் மனம் தன் மனதில் இதுவரை அவன் சொன்ன செய்திகளைக் கொண்டு ஒரு தெளிவான கோலம் போட முயற்சி செய்தது.

‘வயத்துல இருக்குறப்ப இருந்து அத்தோட வளர்ச்சியைப் பார்க்கணும் – அப்ப ஸ்ராவணி வளர்ச்சியைப் பார்க்கல.

டெலிவரி சமயத்துல  கூட இருக்கணும் – அரவிந்த் ஸ்ராவணி பிறந்தப்ப அவ அம்மா கூட இல்ல

என் குழந்தை பிறந்தவுடனே நான் பார்க்கணும் – அப்ப ஸ்ராவணி பிறந்தவுடனே இவன் பார்க்கல

கூட இல்லாம எங்க போயிருந்தான்? ஒரு வேளை அவ அம்மா இந்தியா வந்து ஸ்ராவனியப் பெத்துகிட்டாளா?’

முக்கியமான விஷயம் இன்னும் தெளிவாகவில்லை.

‘இதுல என்னமோ ஒரு பெரிய பகுதி விடுபடுது. என்ன அது? எங்க  போய் அதைக் கண்டு பிடிப்பேன். இவனே சொன்னாத்தான் உண்டு. சொல்லுவானா?”
தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தின் தலை முடியை சற்று கோதி விட்டுக் கேட்டாள்

“ஹே சக்கரைகட்டி, நிறையா விஷயத்த உளறிட்ட. முக்கியமான விஷயம் எப்ப உன் வாயில் இருந்து வரப்போகுது?”

 

சித்தாராவோட பணம் திரும்பக் கிடைச்சதா? நாதன் என்ன ஆனார்? சுதாவோட கோவம் குறைந்ததா? சத்யா- பன்னீர் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கிறது இப்படி நிறைய சந்தேகம் உங்களுக்கு இருக்கும். நம்ம அதுக்கான விடைகளை பாத்துடலாம்.

 

“சத்யா சீக்கிரம் வாம்மா ஆபிசுக்கு நேரமாகுது” பன்னீர் வாசலில் இருந்து கூப்பிட

“வந்துட்டேங்க” என்றபடி வந்தாள் சத்யா.

“ மதியத்துக்கு டிபன்பாக்ஸ் மறக்காம எடுத்துகிட்டியா? மிச்சம் வைக்காம சாப்பிடணும். வேலை முடிஞ்சதும் போன் பண்ணு ஒரு நிமிஷத்துல அங்கிருப்பேன்.

நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரணும். சாயந்தரம் ராயபுரம் போய் சாரிகாவுக்கு ஏதாவது வாங்கணும். உன் தங்கச்சி பிரசவ சமயத்துல நாலு நாள் லீவ் போட்டுடு”

ஆட்டோவை ஒட்டிக்  கொண்டே பேசினான். அனாதையாய் இருந்த தனக்கு கிடைத்த உறவினர்களை பொக்கிஷமாய் நினைத்தான் பன்னீர்.

“என்னை சொல்லிட்டு நீங்க சாப்பிடாம இருந்துடாதிங்க. ஒழுங்கா சாப்பிடுங்க” என்று பதிலுக்கு தனது அக்கறையைக் காண்பித்தாள் சத்யா.

அவளது கையைப் பிடித்து அலுவலகத்துக்குள் விட்டுவிட்டு கிளம்பினான் பன்னீர்.

வீட்டிற்குள் நுழைந்த உடன்  மதுரையில் இருக்கும் அவனது கடையில் இருந்து தினமும் இரவு வரும் கணக்கு வழக்குகளை சரிபார்த்தான். அதன் பின் அன்று ஒன்னாம் தேதி என்று நினைவு வர, தனது அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் தருவதற்கான ஏற்பாடுகளை செய்தான். பின் தனது நம்பிக்கையான அலுவலரை அழைத்து

“சம்பளம் போட்டுட்டேன். உங்களுக்கு பாதி சம்பளம் போட்டுட்டேன். மீதிய நீங்க இங்க வாங்கி இருக்குற நிலத்துக்கு டியு கட்டிட்டேன்…… “ என்று சொல்லி தொடர்ந்து வியாபார விஷயமாகப் பேசினான்.

கால் முடிந்தவுடன் ஒரே சிரிப்பு அந்த நபர்  கேட்ட கேள்வியை நினைத்து.

“முன்னாடி சரி, இப்பத்தான் வசதி வந்துடுச்சே. இன்னமும் ஆட்டோ ஓட்டணுமா”

அமைதியாக  பதில் சொன்னான் “எனக்கு வாழ்க்கை, நல்ல மனைவி, என்னோட கனவான குடும்ப வாழ்க்கையைத் தந்தது. அதை கண்டிப்பா என்னால விட முடியாது” சொல்லிவிட்டு ஹாங்கரில் இருந்த காக்கி சட்டையைப்  அணிந்தபடி  கிளம்பினான்.

ரோட்டில் கை காட்டி நிறுத்தினார் ஒருவர் “பாரிஸ் போகணும்பா எவ்வளவு கேக்குற?”

“மீட்டர் துட்டு தா சார்”

“மீட்டர் துட்டு போதுமா????? இது சூடு வச்ச மீட்டர் தானே??? கலிகாலம், இப்பல்லாம் எந்த ஆட்டோ ஒழுங்கா இருக்கு?” அழைத்தவர் கேட்க.

‘மக்கள் உண்மையாக இருந்தாலும் நம்ப மாட்டாங்க போல இருக்கு’. பெரிதாக சிரித்தான் பன்னீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 3’

அத்தியாயம் – 3 கைபேசி சரி செய்ய முடியாத அளவுக்கு பழுதாகிவிட்டதே… சரி செய்ய வேண்டுமென்றால் வெளியே செல்ல வேண்டும். இறுதித் தேர்வு முடிந்துவிட்டதால் வெளியே செல்ல பெரியம்மாவின்  ஆயிரம் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.   அப்படியே வெளியே சென்றாலும் இப்போதெல்லாம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 13தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 13

சரயு வயதுக்கு வந்ததறிந்து பட்டு சேலையுடனும் சீர்வரிசையுடனும் பார்த்துச் சென்றான் சம்முவம். லஷ்மிக்கு அது பேறுகாலம் அதனால் வரமுடியவில்லை. பார்வதி வீட்டில், “உந்தங்கச்சி பெரியவளாயிட்டாளா? இதென்ன ஊருலகத்தில் நடக்காததா…” என்று மாமியார் கேள்வி எழுப்பியதில் ஒரு போன் விசாரிப்போடு சம்பாஷனை முடிந்து