Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22

ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு.

அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து போகும். திங்கட்கிழமை ஏனடா வருகிறது என்றிருக்கும்.  

இன்று காலை

” அரவிந்த் உங்க ஆபிஸ்ல உனக்கு பிரமோஷன் வருதுன்னு சொன்னியே? எதாவது பரீட்சை எழுதணுமா? இல்ல சீனியாரிட்டிபடி, தானே கிடைக்குமா?”   

” ரெண்டும் இல்ல ஜால்ரா அடிப்படைல தான் முடிவெடுப்பாங்க”

“என்ன அரவிந்த்? இங்கேயுமா இப்படி? இந்திரன் சந்திரன்னு புகழணுமா?”

“எங்க மேலதிகாரிய பப் கூட்டிட்டு போறது, கால்பந்து விளையாட்டுக்கு டிக்கெட் போடுறதுன்னு ஏகப்பட்ட வேலைகளை சில பேர் செஞ்சுகிட்டு இருக்காங்க. எல்லாரும் இப்படியான்னு கேட்காதே. நான் வேலை செய்யுறது சின்ன ஆபிஸ், இதுல வேலை செய்யுற நிறைய ஆளுங்க சின்ன புத்திக்காரங்கதான்”

“ஏன் அரவிந்த் திறமைக்கு மரியாதை இல்லாத இடத்துல வேலை செய்யுற?”

“வேற வழியில்ல சித்து. வனி சின்ன குழந்தை, நான் ஒருத்தன்தான்  அவளைப் பாத்துக்கணும். எனக்கு வேலை நேரம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கணும். வீட்டுல வேலை பார்க்க அனுமதி வேணும். அடிப்படை சம்பளமாவது வேணும். இப்படி நிறைய காரணங்கள்.

அதுனாலதான் வேற வேலைக்குக் கூட முயற்சி செய்ய முடியல. என்னோட சூழ்நிலையை நல்லா தெரிஞ்சுட்டு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதைப் பத்தியும் வாயைத் திறக்க மாட்டேங்கிறாங்க”

அரவிந்த் மனதாலும் உடலாலும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்று சித்தாராவால் உணர முடிந்தது. தன கணவனுக்கு யோசனை சொல்லும் மதியூக மந்திரியாக,

“நம்ம சோப்பு சொன்னா, அவ வீட்டுக்காரர் வேலை பாத்துட்டு இருந்தப்ப நம்ம ஊர்  ஸ்பெஷல் சாப்பாடு சமைச்சு குடுத்தனுப்புவாளாம் . நான் வேணும்னா  உங்க மேனேஜர்க்கு நேத்து மிஞ்சின  வெஜிடபல் பிரியாணிய ஒரு  டப்பால போட்டுத் தரட்டுமா?” என்றாள் சீரியசாக.

சோப்பு அவளது பக்கத்து வீட்டு தோழி சந்திரிகா. சந்திரிகா சோப்பு நினைவில் அவள் பெயரையும் அதாகவே மாற்றியிருந்தாள் சித்து. 

‘நேத்து செஞ்சது பீட்ரூட் தக்காளி கலந்த என்னமோ சாதம் இல்லையா? பிரியாணியா? இவ என்னை வேலையை விட்டுத் தூக்க சதி பண்ணுறாளோ’  பயத்தோடு  அவளைப் பார்த்தவன்


” சித்து உன் பிரெண்ட் சோப்பு பேசுறதை காதுல வாங்குறதோட மட்டும் நிறுத்திக்கோ. அவ வீட்டுக்காரர் நல்ல வேலையை விட்டு  நின்னுட்டு ஏண்டா கடை வச்சிருக்காருன்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன், இப்ப உன் வாயாலயே பதில் கிடைச்சுடுச்சு”

சுருங்கிய முகத்தை சரி செய்து கொண்டவள் “சரி அரவிந்த் அப்ப மிஞ்சின பிரியாணிய நீயே நைட் வந்து சாப்பிடு. எனக்கும் வனிக்கும் இன்னைக்கு தோசை” என்றாள்.

‘இவ மிஞ்சின பிரியணிய யார் தலைலயாவது கட்டப் பாக்குறாளா? இல்ல நிஜமாவே என்னோட பதவி உயர்வு அவளுக்கு முக்கியமா?’ என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான். இரண்டாவதுதான் என்பதை வலியுறுத்தும் விதமாக

 ” வேற என்னதான் உன் மேனேஜருக்குப் பிடிக்கும்” என்றாள் விடாமல்.

அந்த ஆளுக்கு பாருல கூட உட்கார்ந்து தண்ணியடிச்சா பிடிக்கும். டான்ஸ் பார்த்தா பிடிக்கும். அதை சொன்னா இவ என்னை சுட்டே போட்டுடுவா. வேற ஆபத்தில்லாத வழி இருக்கா என்று யோசித்தவன்

“என்னோட மேலதிகாரி சாப்பாடே சாப்பிட மாட்டார், பழம் நிறையா சாப்பிடுவார். அதை வேணும்னா நான் வாங்கிட்டுப் போறேன். ஆனா சித்து ஐஸ் வச்சு எனக்கு பழக்கம் இல்ல. இப்ப புதுசா இப்படி வாங்கிட்டுப் போன அவர் கண்டு பிடிச்சுட மாட்டார்?” என்றான்.

பதில் சொல்லாமல், நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு விஞ்ஞானியைப் போல யோசித்தவள் “ஐடியா!!!!! பேசாம இந்த வாரம் நம்ம ஊர் கடைல சொல்லி வைக்குறேன். அடுத்தவாரம் கொய்யா பழம், வேணாம்.. வேணாம்… பெரிய பழமா குடுக்கணும் ஒன்னு செய் பலாப்பழம் ஒண்ணு கொண்டு போய் எங்க ஊர் ஸ்பெஷல்ன்னு சொல்லித்தா. ஐஸ் வைக்குறதா நினைக்கமாட்டார்” 


தான் ஒரு பெரிய பலாப்பழத்தைத் தலையில் சுமந்து செல்லும் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தவன், பயந்து போய் தலையைக் குலுக்கிக் கொண்டான்.  கடவுளே இவ யோசனைல இடி விழ என்று எண்ணியவன்

 “அடுத்த வாரம் முடிவு தெரிஞ்சிருக்கும். எனக்கு பதவி உயர்வு வரலைன்னா அதுக்கு பழம் தந்து தாங்க்ஸ்ன்னு சொல்லுறோம்னு நெனச்சு, இனிமே ஒரு ப்ரோமோஷனும் தராம இருந்துர போறாங்க”

“இவ்வளவு நேரம் யோசிச்சேனே, அதையெல்லாம் யோசிக்காம இருப்பேனா? பிரமோஷன் தந்தா அந்த பழத்தை எப்படி கட் பண்ணி சாப்பிடனும்னு சொல்லு. தரலைன்னா  எதுவுமே சொல்லாதே. அவன் தோலோட சாப்பிட்டு கஷ்டப்படட்டும்.  எப்படி?” என்று பார்க்க.

திகிலடைந்தவனாய் ” வரேன்மா ஐடியா அம்மாசாமி” என்று சொல்லிவிட்டு காலையில்   அலுவலகத்திற்கு ஓட்டமாய் ஓடிப்போனான்.

இப்போதும் அந்த சம்பவம் மனதில் தோன்றி புன்னகையை வரவழைத்தது அரவிந்திற்கு. இன்று பனிபொழிவு ஆரம்பம் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த  வாரம் முழுவதும் கடுமையான ஸ்னோ பால் என்று பிபிசியில் காலையிலே காதுக்குள்  கூவி இருந்தார்கள்.

முதல் முதலாக பனியைக் காணப் போகும் ஆவலுடன்   சித்து குதித்துக் கொண்டிருந்தது நினைவில் இருந்தது.

” அரவிந்த்… பனி எப்படி இருக்கும்? ஏரியல் பவுடர் மாதிரி இருக்குமா? இல்ல அதை தண்ணீல கரைச்சா வருமே, அந்த நுரை மாதிரி இருக்குமா?”

“ரொம்ப குளூருமா அரவிந்த்? அப்பறம் எப்படி நம்ம ஊர் ஹீரோயின் எல்லாரும் மினி ஸ்கர்ட் போட்டுட்டு ஸ்னோல ஆடுறாங்க?”

“ஸ்னோ, பாண்ட்ஸ் மேஜிக் பவுடர் மாதிரி  குடைல ஒட்டிக்குமா அரவிந்த்?”“கொட்டுற  பனியை சேர்த்து ஒரு அஞ்சடி உயர ஸ்னோ மேன் செய்யலாமா? அதுக்கு மூக்கு வைக்க காரட் வேணுமாமே? வனி பாப்பா சொல்லித்தான் எனக்கே தெரியும். நான் வேற நேத்தே எல்லாத்தையும் பொரியல்  செஞ்சுட்டேன். சாயந்தரம் நீ காரட் வாங்கிட்டு வர்றியா? இல்ல நான் கடைல போய் வாங்கிட்டு வரட்டுமா?”


 ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு துளைத்து விட்டாள்.

நன்றாக இருட்டி விட்டது. குளிர்காலத்தில் இங்கு இப்படித்தான் நான்கு மணிக்கே இருட்டி விடும். இப்போது மணி ஏழாகி விட்டது. பூஞ்சிதரலாக தூவ ஆரம்பித்திருந்த பனிப்பொழிவை  அனுபவித்தவாறே வேகமாக வீட்டை அடைந்தவனை தெருவிலே கருப்பு நிற பனிக்கோட்டு, பூட்ஸ், கையுறை என்று   நின்றுக் கொண்டிருந்த சந்திரிகா வரவேற்றாள். அவள் முகத்தில் அளவு கடந்த பதட்டம்.

“அரவிந்த், கடைக்கு போறேன்னு கிளம்பிப் போன சித்துவ இன்னமும் காணோம். ஸ்ராவணி எங்க வீட்டுல விளையாடிட்டு இருக்கா”

சுருக்கமாகப் பிரச்சனையை சொல்லி விட்டாள். வனி பத்திரமாக இருக்கிறாள்  என்றும் சொல்லி விட்டாள். சித்தாரா  இன்னைக்கு எங்க போனா?

காலையிலே சித்து ஒரு பொருளும் இல்லை என்று குற்றப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தது நினைவில் இருந்தது. “ச்சே!” என்று தனது பொறுப்பின்மையைக்  கடிந்துக் கொண்டான். வாங்கி வர மறந்திருந்தான்.

“நான்தான் வரப்ப வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருந்தேனே. இல்லைன்னா இருக்குறதை வைச்சு சமாளிக்க வேண்டியதுதான். சித்துவுக்குக் குளுர் பழக்கமே இல்லையே. என்கிட்ட கூட சொல்லாம எங்க போனா? உங்களுக்குத்  தெரியுமா? நான் போய் கூட்டிட்டு வந்துடுறேன்”. அரவிந்தின் முகம் கவலையில் இருண்டு விட்டது.

ஒரு பெரிய பல்பொருள் அங்காடி பேரை சொன்னாள் சந்திரிகா. ஆறேழு மைல் தொலைவில் இருந்தது அது. பேருந்தில் தான் செல்ல வேண்டும். அரவிந்த் ஒன்றிரண்டு முறை அங்கு அழைத்து சென்றிருக்கிறான். இப்ப எதுக்கு அங்க போனா? என்று எண்ணினான்.


“உங்களுக்கு கேக் பிடிக்குமாமே. அதுனால அம்மாவும் பொண்ணும் நீங்க வீட்டுக்கு வரப்ப கேக் செஞ்சு சர்ப்ரைஸ் தரணும்னு நெனச்சாங்க. அதுக்கு வேணும்குற சில  பொருள் எல்லாம் அங்கதான் கிடைக்கும் அதனால வனிய எங்க வீட்டுல விட்டுட்டு போயிட்டு வரேன்னு போனா”

வார விடுமுறை தினம் கூட பனிப்பொழிவும்  சேர்ந்து கொண்டதால் போக்குவரத்து நெரிசல் வர வாய்ப்பு இருப்பதை நினைத்து, பதறத் தொடங்கியிருந்த மனதை சமாதானப் படுத்திக்கொண்டான்


“பஸ் கிடைச்சிருக்காது. நான் போய் பார்த்துட்டு வரேன்”

சந்திரிகா பின்னர் கவலையாக  “அவ கிளம்பிப் போய் மூணு மணி நேரமாகப் போகுது. ஆளையே காணோம். வழக்கமா ஸ்ராவணி எங்க வீட்டுல விளையாடிட்டு  இருந்தாலே கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணுவா, இல்ல வந்து பார்ப்பா. இப்ப ஒரு போனையும் காணோம். நான் போன் பண்ணா வாய்ஸ் மெசேஜ் போகுது. எனக்கு பயம்மா இருக்கு அரவிந்த்” என்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 12’

அத்தியாயம் – 12   இரவு ஏழரை மணிக்கு ஜலந்தரை அடைந்தது சென்னை-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ். சாய், காப்பி என குரல்கள் காதில் விழ ஆரம்பிக்க, “நந்தா எந்திரி…. ஊர் வந்துடுச்சு. அஞ்சு நிமிஷம்தான் இந்த ட்ரைன் ஸ்டேஷன்ல நிக்கும். அதுக்குள்ளே இறங்கல,

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 24என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 24

அத்தியாயம் – 24   பில்டரில் இரண்டு ஸ்பூன் காபி பொடியைப் போட்டவன், அதன் தலையைத் தட்டி, கெட்டிலில் சுட்டிருந்த சுடுதண்ணியை ஊற்றினான். சுகந்தமான டிகாஷனின் நறுமணத்தை அனுபவித்தபடி பாலை சுடவைத்தான். அவன் மனதில் நேற்றைய நினைவுகள். “ என்ன சித்து

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 46

உறக்கம் கலைந்ததும் ஏதோ வித்யாசமான உணர்வில் விழித்தான் ஜிஷ்ணு. தூக்கக்கலக்கத்தில் புரண்டு அவளது இடுப்பினை வளைத்து வயிற்றில் முகம் புதைத்து உறங்கியிருந்தான். மெலிதாக குளிர்காற்றிலிருந்து ஜிஷ்ணுவைக் காக்கும் பொருட்டு சரயு அவளது ஸ்லீவ்லெஸ் ப்ராக் மேல் போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அவன்