Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 20

அத்தியாயம் -20

ஜன்னலில் இருந்து வந்த நிலவொளியில்  தங்கப் பதுமையாய் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்  அரவிந்த். சித்தாராவின் வார்த்தைகளில் இருந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் தவித்தது. அவளிடம் என்னனவோ சொல்ல ஏங்கியது.

 என் வாழ்கைக்கு வந்த உயிர்ப்பு நீதான்

மனதளவில்

எனை சாகாமல் வைக்கின்ற சஞ்ஜீவி  நீதான்

என் பாலைவனம் காண்கின்ற முதல் மழையும் நீதான்

தூரத்தில் மயிலறகால் தொட்டவளும் நீதான்

பக்கத்தில்  அக்கினியாய்  சுட்டவளும்  நீதான்

காதலுக்குக்   கண் திறந்து வைத்தவளும் நீதான்

நான் காதலித்தால் கண்மூடிக் கொள்பவளும் நீதான்

இதெல்லாம் நீ எப்பொழுது புரிந்துகே கொள்ளப் போகிறாய் சித்தாரா? என்று விம்மிய மனதை சமாதானப் படுத்தும் வேலையில் இறங்கினான். அவள் படுக்கைக்கு எதிரே இருந்த சிறு நாற்காலியில் அமர்ந்தவன் அவள் முகம் தந்த அமைதியில் கண் அயர்ந்தான்.

காலையில் கண்விழித்த சித்தாராவுக்கு முதலில் கண்ணில் பட்டது,  கை கால்களைக் குறுக்கிக் கொண்டு சேரில் உறங்கிய அரவிந்த் தான்.  சித்தாரவுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் மேல் திருமணத்துக்கு முன் ஏகப்பட்ட கோவம் இருந்தது. நேற்று அவனிடம் அப்படிப் பேசியதை நினைத்து இப்போது வருத்தம் ஏற்பட்டது. அவனே பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டு ஊரில் இருந்து அவசர அவசரமாக வந்திருக்கிறான். அவனுக்கும் இந்த திடீர் கல்யாணம் அதிர்ச்சியாகத் தானே இருக்கும். அவன் அம்மா கூட ப்ளான் செய்தா பாட்டியிடம் உன்னைத் திருமணம் செய்து வைக்கக் கேட்டார்கள். ஏதோ உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவு.

உன்னை விட்டால் அவனுக்கு வேறு பொண்ணா கிடைக்காது? நாதன் கூட அவரது தங்கையை அவனுக்கு பேசி முடிக்க மிகவும் முயன்றாததாகவும், அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் , இருந்தும் கூட அவளை  மறுத்து அவளின் திருமணத்துக்கு என்று அரவிந்த் அபராதம் கட்டியதாகவும் தகவல் கிடைத்தது. தகவலைத் தேடி சித்தாரா எங்கும் போக அவசியமில்லாமல் கல்யாணத்துக்கு வந்த உறவினர்கள் அவள் காதில் போட்டு விட்டுப் போனார்கள்.

 திருமணத்துக்கு அலைபவனாக இருந்தால் முன்னரே திருமணம் செய்திருப்பானே? ஸ்ராவணியை விட்டுவிட்டு தன்னால் வேறு திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று சொன்னானாமே.  இவனைப் பார்த்தால் தனது மகளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் தந்தையைப் போல் தெரிகிறதே. இவனை எவ்வளவு முயன்றாலும் பணத்தாசை, பெண்ணாசை  பிடித்தவனாகக் கற்பனை கூட பண்ண முடியவில்லை. மனது தேடித் தேடி அவனுக்கு சாதகமான விஷயங்களைக் கண்டுபிடித்தது.

இரவு முழுவதும் அவன் தூக்கம் வராமல் நடை பயின்றதை  அவளறிவாள்.  அவளுக்கு அது மிகவும் வேதனை தந்தது. எனக்கு வாழ்க்கை தருவதாக நினைத்துக் கொண்டு இருந்திருப்பானோ? நான் சொன்னதும் தான் இப்படி ஒரு கோணம் இருப்பதை அவன் உணர்ந்திருப்பான் போலிருக்கிறது. இவனிடம் பேசிவிட்டு  அவளாலும்  சரியாக உறங்கக் கூட முடியவில்லை. பாதி தூக்கமும் விழிப்புமாக இருந்தது அவளுக்கே தெரிந்தது. இதில் கனவுகள் வேறு வந்து அவளை அலைக்கழித்தது.

என்ன கனவு என்று யோசித்தவளுக்கு அரவிந்த் அவனது முதல் மனைவியுடன் பேசிக் கொண்டிருப்பது  போலவும் தான் அவளிடம் சண்டை போடுவது போலவும் வந்தது நினைவுக்கு வந்தது. அதனை நினைத்தாலே இப்பொழுதும் சித்தாராவுக்குக் கோவம் வந்தது. “அவ எப்படி அரவிந்த் கூட பேசலாம்?” என்று வாய் விட்டு சொல்லியவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொண்டாள். 

 தனக்கு சொந்தமான பொருளிடம் தான் உரிமை பாராட்ட முடியும். அப்போது அரவிந்த் எனக்கு சொந்தமானவனா? அவனை என் மனம் விரும்ப ஆரம்பித்து விட்டதா? மனதுடன் பேசிக்கொண்டே தனது வேலைகளை செய்து முடித்தவள் அரவிந்தை எழுப்பி கட்டிலில் படுக்க சொன்னாள். இன்று இரவு ஊருக்குக் கிளம்ப வேண்டும் பெட்டிகளை அடுக்கியாக வேண்டும் இருக்கும் வேலைகளை நினைத்துக் கொண்டே அவனுக்கும் மற்றவர்களுக்கும் காபி போட்டு விட்டு, காலை உணவை தயார் செய்ய ஆரம்பித்தாள்.


முதல் நாள் வீட்டுக்கு வந்திருந்த சாரிகா, சமையல் அறைக்கு நுழைந்தாள்.


“சித்தாரா, எப்படி இருக்க?”


“நல்லா இருக்கேன் சாரிகா”


“அப்படியா. என்னால நம்ப முடியல. உன் கிட்ட நிறைய பேசணும்னு ஆசை. ஆனா நேரமே இல்லை. சில விஷயங்கள் மட்டும் சொல்லுறேன்” என்று சொன்னவள் அரவிந்தின் முதல் திருமணம் நடந்த விதத்தைப் பற்றி சுருக்கமாக சொன்னாள்.

சித்தாராவிடம் பதில் வராமல் இருக்கவும் ” நம்ப முடியலையா? நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லி இருக்கலாம். கடைசி வரை இந்தக் கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதுனாலதான் சொல்லல. அப்பறம் எங்க அண்ணனுக்கு அனுதாபத்தால எதையும் வாங்குறது  பிடிக்காது. என் அண்ணனை விட அந்த சைலஜாவுக்கு மூணு வயசு அதிகம்.  எங்கண்ணன் எவ்வளவு பொறுப்பானவரு, குடும்பத்து மேல் பாசம் இருக்குறவர்ன்னு உனக்கு இப்ப தெரிஞ்சிருக்கும். தன்னை விட மூணு வயசு அதிகமான ஒருத்திய அவர் கண்டிப்பா காதல் கல்யாணம் செய்துருக்க முடியாது .  இப்ப நம்புறியா?”


அதிர்ச்சியாக அவளைப் பார்த்தாள் சித்தாரா. இதற்குள் சாரிகாவின் கணவன் முரளி அவளை அழைக்க.
” சாரி சித்தாரா உன்கிட்ட முழுசா பேச முடியல. இந்தா என் மொபைல் நம்பர். ஊருக்கு போனதும் என்னை கூப்பிடு. இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்ட சொல்ல வேண்டியது இருக்கு. ஆனா இது வரைக்கும் கஷ்டத்தை மட்டுமே அனுபவிச்சு இருக்குற எங்க அண்ணனுக்கு இனிமேயாவது உன் மூலமா சந்தோசம் கிடைக்கும்னு நாங்க எல்லாரும் நம்புறோம்” கண்கலங்க சொல்லி சென்றாள்.

ஸ்ராவணியை எழுப்பி விட சென்ற சித்தாரா அதிர்ந்தாள். அப்பாவும் மகளும் கீழே அவள் வழக்கமாக படுக்கும் பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். சித்தாரா இனி எங்களுக்கு நீ இருக்கும் இடம்தான் எல்லாமே என்று சொன்னது போல் இருந்தது. முதல் முறையாக அவளது கொள்கை மேல் அவளுக்கு எரிச்சலாக வந்தது.


இப்போது அரவிந்தின் மேல் கோவம் வந்தது “நாலு பேர் மிரட்டினா தாலிய கட்டிடுவானா?  இவனையெல்லாம் நல்லா திட்டனும் போல இருக்கு. வாய் விட்டும் சொல்ல மாட்டேங்கிறான். முதல் கல்யாணத்தை பத்தியும் பேசாம உயிரெடுக்குறான். இவனே பேசுற வரைக்கும் காத்துட்டு இருக்கனுமா? என் கேரக்டர்க்கு இது ஒத்து வராதே”


இருவரையும் எழுப்பி விட்டு காலை பலகாரத்துக்கு வர சொன்னாள்.

“நில்லு சித்தாரா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் அரவிந்த்.

“சித்தாரா….. நம்ப ரெண்டு பேரும் விரும்பியோ விரும்பாமலோ இந்த பந்தத்துல இணைஞ்சுடோம். எனக்கு நம்ம மணவாழ்க்கையை விட உன்னோட விருப்பம் ரொம்ப முக்கியம். சந்தோஷமா இருக்குற வயசானவங்களை இப்ப நாம் ஏதாவது சொல்லிக் கஷ்டப்படுத்த வேண்டாம். ஆனா உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கையை அமைச்சுக்க நீ ஆசைப்பட்டா அதுக்கு ஒரு நண்பனா நான் எப்போதுமே உன்கூட துணைக்கு இருப்பேன். இதை உன் மனசுல வச்சுக்கோ சித்தாரா”


உனக்கு வேறு யாருடனவது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எண்ணம்  என்றால் என்னிடம் சொல் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கனமான இதயத்துடன் சொல்லி முடித்தான்.‘கட்டாயமாக வற்புறுத்தி நடந்த திருமணத்தை இந்த பேக்கு மறுக்க வழியில்லாம தாலி கட்டி இருக்கு. முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே வாயில என்ன கொழுக்கட்டையா இருந்தது. சரி போகட்டும், அவளும் போய் சேர்ந்தாச்சு. எப்படியாவது நம்ம கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்க வேண்டியதுதான்’ இப்படி  ஏதோ வழிகளைக் கண்டு சமாதனப் பட்டுக் கொண்டிருந்தது அவள் மனம்.

அரவிந்தின் முதல் திருமணம் அவனுக்கு நடந்த விபத்து என்று சாரிகாவின் செய்தி தந்த சந்தோஷத்தை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்த சித்தாரா அரவிந்தின் இந்த வார்த்தைகளைக் கேட்டு விதிர் விதிர்த்து போனாள். அவன் மேல் தனக்கு தோன்றியிருக்கும்  ஈடுபாட்டை அப்போதுதான் நன்றாக உணர்ந்தது அவளது இதயம்.


எங்கே எப்போ நான் தொலைந்தேனே தெரியாதே
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் முகம் என்று மனம் சொல்லுதே


அவசரமாக மறுத்தாள் சித்தாரா. “அப்படியெல்லாம் நான் சொல்லல அரவிந்த். நீ தப்பா புரிஞ்சுட்ட”

சத்தத்தை குறைத்தவள் ” உன் மேல எனக்கு கொஞ்சூண்டு  கோவம்தான் அரவிந்த். அதுக்காக பெரிய வார்த்தை பேசாதே. எனக்கு டைம் வேணும்னு தான் கேட்குறேன். அதுகூட  என் கோவம் தீரத்தான். அந்த டைம் கூட உன் மனைவிக்கு தர மாட்டியா?”

அதுதானே மனதில் இருப்பதை வெளியில் கொண்டுவராவிட்டால் அது சித்தாராவே இல்லையே.
அவளது பேசியதை நம்ப முடியாமல் ஆச்சிரியமாகப் பார்த்தான் அரவிந்த்.

” நீ உண்மையாகவே சொல்லுறியா சித்து?  ஏன் மேல கொஞ்சூண்டு தான் உனக்கு கோவம் இருக்கா? என்னால இன்னொரு ஏமாற்றத்தைத் தாங்க முடியாது”

தரையினை பார்த்தவள் அருகே வந்து வேகமாக அவளது முகத்தைப் பற்றினான். கண்ணை நேருக்கு நேர் பார்த்தான்.

 என் இதயத்துக்கு சொந்தக்காரியே,

உனது விழியில் விழுந்து என் வலியினை மறக்கிறேன்.

உனக்குள் தொலைந்து எப்போது உயிரோடு கலக்கப் போகிறேன்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16

அத்தியாயம் –16  சித்தாரா ஸ்ராவணியை நன்றாக கவனித்துக் கொள்வது தனக்கு மகிழ்வளிப்பதாக கதிர் சொன்னார். “ஸ்ராவணியை அவள் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டான்னா உன்னையும் அவளுக்குப் பிடிக்க ஆரம்பிச்சாச்சுன்னு நினைக்கிறேன் அரவிந்த்” “இல்ல மாமா அவசரப் படாதிங்க. சித்தாரா சின்ன வயசில தாயை இழந்தவ.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 2என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 2

அத்தியாயம் – 2தூக்கம் என்பது ஒரு வரப்ரசாதம். எவன் ஒருத்தன்படுத்தவுடன் எந்த நினைவும் மனதை அலைக்களிக்காமல்கட்டை போலத் தூங்குகிறானோ அவன் தான் மிகப் பெரியபணக்காரன் என்னைப் பொருத்தவரை. சிறு குழந்தைகளைப் பாருங்கள். நன்றாகவிளையாடுவார்கள், சண்டை போட்டு அடி பட்டுக் கொண்டுவருவார்கள், ஏன்