Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 19

அத்தியாயம் – 19

டந்த  சம்பவங்கள் சிலருக்கு மகிழ்வையும், சிலருக்கு வருத்தத்தையும்  தந்தது. சத்யாவும் பன்னீரும் தங்களது மண  வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் கதை பேச ஆரம்பிக்க, சுமித்ரா சத்யாவுக்கு கல்யாணம் நிச்சயமானதைப் பற்றி மகிழ்வதா இல்லை கோவித்துக் கொண்டு போன முதல் மகள் சுதாவைப் பற்றிக் கவலைப் படுவதா என்று புரியாமல் கலங்கிப் போனார். தங்களை முந்திக் கொண்டு பதிலளித்த மருமகள் மேலும், தடாலடியாக அந்த முடிவுக்குத் தூண்டிய கதிர் மேலும்  சிறிது எரிச்சல் கூட வந்தது. 

 தேன் என்ற சொல் என்றும் தேனகுமோ? அதுதான் நாதன் பார்த்த மாப்பிள்ளை .  தீ  என்று சொன்னாலும் அது வாயை சுட்டுவிடுமா? அதுதான் சுதாவின் கோவம். இதனைப் புரியாமல் சுமித்ரா வருத்தப் பட, 

ஐந்து அக்கா தங்கைகளோடு  தோன்றி, பெண்ணோடு  வாழ்ந்தும், பெண் மனது என்னவென்று புரியாமல் குழம்பினான் அரவிந்த்.

“இருந்தாலும் நாம அவசரப் பட்டு தட்டு மாத்தி  இருக்க வேணாம்டா. சுதாவோட சம்மதம் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். பெரிய மாபிள்ளை வேற கோவக்காரர். இந்தக் கல்யாணம் குதிராததுக்கு சுதாவை என்ன பாடு  படுத்தப் போறாரோ?” ஆதங்கப் பட்டார் சுமித்ரா. 

“அதெல்லாம் பாடுபடுத்த மாட்டார். அவருக்கு சப்போர்ட் பண்ணுறாப்புல தான பேசிட்டு சுதாண்ணி   கூட்டிட்டு போயிருக்காங்க” அடக்கினாள் சித்தாரா. 

 “இருந்தாலும் சுதாவோட சம்மதம்…” 

“என்னத்த இப்படி குழந்தை பிள்ளையா இருக்கீங்க. சுதாண்ணி திட்டப் படிதான் எல்லாம் நடக்குது. இது கூடவா உங்களுக்குப் புரியல? 

அவங்க வீட்டுக்காரரால இந்தக் கல்யாணத்துல கலட்டா  நடந்துடக் கூடாதுன்னு தான் வேணும்னே சண்டை போட்டு கூட்டிட்டு போயிருக்காங்க. 

இல்லேன்னா அந்த குடிகார மாப்பிள்ளையைப்  பத்தி, அந்த ஆள் பஸ் ஏறின விவரம் பத்தி எல்லாம் நமக்கு எப்படி தெரியும்.  சுதாண்ணி எப்படியோ விவரத்தை கண்டு பிடிச்சு சொல்லி இருக்காங்க. 

நான் நெனச்சது சரின்னா இந்த திட்டத்தப் பத்தி சத்யண்ணிக்கும் கூடத் தெரியும். சந்தேகமா இருந்தா சத்யாண்ணி   கைல போட்டு இருக்குற சுதாண்ணியோட கல் வளையலைப் பாருங்க.  பிளான் போட்டது சுதாண்ணி. நடத்தி வச்சது கதிர் அண்ணன். சரியா, ” பட்டாசாய் அவர்களது ரகசியத் திட்டத்தைப் புட்டு புட்டு வைத்தாள் சித்தாரா. 

சரி என்று தலையாட்டினார் கதிர். தானும் சுதாவும் சேர்ந்து போட்ட திட்டத்தை அமைதியாக கிரகித்து, சரியான நேரத்தில் தடாலடியாக முடிவெடுத்த சித்தாரவை வியக்காமல் இருக்க முடியவில்லை அவரால்.  

” அரவிந்த் உன்னோட மூளையையும் சேர்த்து கடவுள் என் தங்கச்சிக்கே வச்சு அனுப்பிட்டாருடா” என்று சொல்ல

சுமித்ராவின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்குத் திரும்பியது. 

 ‘ஓ! இதனால்தான் இன்னைக்கு என்ன நடந்தாலும், ஒரு புயலே அடிச்சாக் கூட கலங்காம, நான் என்ன செஞ்சாலும் தலையாட்டனும்னு கதிர் மாமா சொன்னாரா?’ என்று எண்ணி அரவிந்த் கதிரைப் பார்க்க. ‘ஆமாம்’ என்று தலையாட்டினார் கதிர்.

 பக்கத்து அறையில் பேசிக் கொண்டிருந்தனர் சத்யாவும் பன்னீரும். 

“இப்படித்தான் வெடிகுண்டு போடுறதா சத்யா. என் இதயமே வலிக்குது பாரு” பன்னீர் கடிந்துக் கொள்ள 

“சுதாதான் உன் ஆளு ஒரு வாத்து, இந்த மாதிரி தடாலடி ஸ்டப் எடுத்தாத்தான் காதலை சொல்லுவாரு. இல்ல தினமும் பெட்டிக் கடை முன்னாடி நின்னு சைட் அடிச்சுகிட்டே தான் இருப்பார். உங்களுக்கு அறுவதாங் கல்யாணம் கூட நடக்க வாய்ப்பில்லைன்னு இந்த மாதிரி ப்ளான் பண்ணா” 

“நான் கூட உங்கக்காவை என்னமோ நெனச்சேன். இப்படி வில்லி ரேஞ்சுக்கு ப்ளான் பண்ணி நம்ம காதல கல்யாணத்துல கொண்டு போய் முடிச்சிருக்காங்க. ஆனாலும் அவங்களுக்காகத்தான் அந்த நாதன விடுறேன். வெளக்குமாத்துக்கு பட்டு குஞ்சலம்னு  பேர் வச்ச மாதிரி, இந்த ஆளுக்குப் போய்  குணநாதன்னு பேர்  வச்சுருக்காங்களே அவங்கள சொல்லணும்”

 “பன்னீர், எங்க சுதாக்கா பாவம். நாதன் மாமாவுக்கு தலையாட்டி தலையாட்டி பொம்மை மாதிரி ஆயிட்டா. அவ எங்க வீட்டுக்கு வரப்பத் தான் கொஞ்சமாவது சந்தோஷமா இருப்பா, இப்ப நம்ம கல்யாணம் முடிவானதுல அவளோட அந்த கொஞ்ச நஞ்ச சந்தோஷமும் நாசமாயிடுச்சு”, சொல்லிவிட்டு  சத்யா கண்கலங்க 

 பொறுக்காத பன்னீர் “அழாதே சத்யா, இந்த நாதன நான் கவனிச்சுக்கிறேன். எனக்கு நல்லது செஞ்ச உங்க அக்கா வாழ்க்கையை சந்தோஷமா மாத்துறது என் பொறுப்பு. சரியா” என்று பாலிலும் வெண்மையாக இருந்த சத்யாவின் கைகளைப் பற்றி  உறுதியளித்தார். 

 பஸ்சில் சுதாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர் நாதனும் அவரது உறவினர்களும். 

” அம்மாகிட்ட கோவமா பேசிட்டு வந்தத நெனச்சு கவலைப் படாதேம்மா . நீரடிச்சு நீர் விலகிடுமா? இவனோட பழக்க வழக்கத்துக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்குமா? இந்தக் கருவாயனுக்காக உன் அம்மா வீட்டத் தூக்கி எறிஞ்சிட்டையே” என்று ஒரு வயதான பெண்மணி  உண்மையாக வருத்தப் பட … 

“ஏய் கிழவி கம்முனு கிட… மயனி, நீதான் மயனி பத்தினித் தெய்வம். அண்ணன மதிக்காததுக்காக  நம்ம விசயகுமாரி மருதைய எரிச்ச மாதிரி எல்லாரையும் எரிச்சிட்டையே… இனிமே நீ ஒரு கல்ல காமிச்சு இதுதாண்டா நாயே உனக்கு பொண்டாட்டின்னு சொல்லு,  வாய மூடிகிட்டு அதுக்குத்  தாலியக் கட்டிப்புடுறேன்” என்று ஸ்டைல் பாண்டி உருகினான். 

 “நீங்க அதெல்லாம் செய்ய வேண்டாம் தம்பி.  நீங்க உங்க பழக்கத்தை மாத்திகிட்டு  வேலைல கருத்தா இருங்க. நல்ல பொண்ணு தன்னால வரும்”

‘பெரிய இவ, இந்த தடித் தாண்டவராயனுக்கு புத்தி சொல்லுறா’, என்று கோவத்தோடு முறைத்த நாதன் கண்களில் மொட்டையாக இருந்த சுதாவின் கைகள் பட்டது

 “சுதா உன் கல்லு வளையல் எங்கடி?” என்று கேட்க 

பதில் சொல்ல முடியாமல் திணறினாள் சுதா.  இந்தக் கல்யாணத்திற்கு வருவதற்காகப்  பணம் புரட்டி, பஜன்லால் சேட்டுக் கடையில் ஹிந்தி படித்துக் கொண்டிருந்த வளையலை மீட்டிருந்தார் நாதன். கண்டிப்பாக அது சுதாவின்  பிறந்த வீட்டு சீதனம் தான். அதை சுதா யாருக்கும் தெரியாமல் கல்யாணப் பரிசாக காலையிலே சத்யாவின் கைகளில் மாட்டி விட்டிருந்தாள். இன்னும் ரெண்டு மூன்று நாள் கழித்துத் தான் நாதன் கேட்பார் அப்போது ஏதாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தாள், அவளது நேரம் உடனே மாட்டிக் கொண்டாள். 

 அவளுக்கு யோசிக்கும் வேலையைக் கூட வைக்காமல் தானே யோசித்து ஒரு ஊகத்துக்கு வந்த நாதன் “குளிக்குறப்ப கழட்டி வைக்காதன்னு எத்தனை தடவை சொல்லுறது? கேட்டா எண்ணெய் இறங்கிடும், பாலிஷ் போய்டும்னு ஆயிரம் காரணம் சொல்லு. அடுத்த ஸ்டாப்ல இறங்கி,  உங்க அம்மா    வீட்டுக்குப்   போய் எடுத்துட்டு வா. அப்படியே  அவங்கள  சமாதானப் படுத்தி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வை”

நாதன் கடுப்பாக இருந்தார். கொஞ்சம் அனுசரித்துப் போய் காரியத்தை முடிக்கலாம் என்று நினைத்தால், இந்த சுதாவுக்கு திடீரென்று கோவம் வந்து விட்டது. சுதாவின் கோவம்  நிஜமா என்று ஒரு சிறிய சந்தேகம் இருந்தது அதுவும் ஆதியைப் பார்த்ததும் மறைந்து விட்டது. 

முதல் நாளே சித்தாரவிடம் ஆதியை அவள் அடித்ததற்காக சண்டை போட்டது நினைவுக்கு வந்தது, அப்படியானால் இந்த சண்டைக்கான பொறி முன்னரே உருவாகி விட்டது. இந்த சுதா சண்டைக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். நாதனை அவமதிக்கவும் அவளுக்குக் கோவம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

 சுதா அப்படித்தான் செல்வி திருமணம் முடிந்ததும், அவளும் அவளது கணவனும்  சேர்ந்து ஏதாவது படுத்தினாலும், சுதாவுக்குத் தாங்க முடியாது

 “இங்க பாரு செல்வி, உன் வீட்டு ஆளுங்களை ஜாக்கிரதையா இருக்க சொல்லு. ஏன் வீட்டுக்காரர் ஒத்த ஆளு எவ்வளவுதான் உனக்கு செய்வார்” என்று திட்டி விடுவாள்.

 செல்வியும் விட மாட்டாள்.  “இங்க பாரு மதனி, எங்கண்ணன் ஒவ்வொரு கிளாஸ்லயும் எட்டு குட்டிக் கரணம் போட்டு டிகிரி முடிச்சது. அதுக்கே உங்க வீட்டுல எவ்வளவு செஞ்சிங்க. எங்க வீட்டுக்காரரு அப்படியா. வெளிநாட்டுல படிச்சிட்டு ‘அட்வான்ஸ் சிஸ்டம்  டெவலப்மென்ட் அண்ட் அட்மினிஸ்ட்டிரேஷன்’ கம்பனில   வேலை பாக்குறாரு. அவருக்கு ஏத்த மாதிரி நீங்க செய்யணும் இல்லையா. ஏற்கனவே வசதி கம்மியான  குடும்பத்துல சம்பந்தம் பண்ணிட்டதா அவங்க சொந்தக்காரங்க சொல்லிகிறாங்க” 

அவள் பேசுவதைக் கேட்டு ரத்தம் கொதிக்கும்   நாதனுக்கு. இவள்  அரவிந்தைத் தனக்குக் கல்யாணம் செய்து வைக்காவிட்டால் தற்கொலை செய்துக் கொள்வதாக மிரட்டியதென்ன. அவளின் அரவிந்த் பைத்தியத்தைத் தெளிவித்து, நாய் படாத பாடுபட்டு அவர் இந்த சம்பந்தத்தைப் பேசி முடித்தார். அந்தப் பாட்டை  அந்தக் கள்ளழகர்தான் அறிவார். அந்த நன்றி கொஞ்சமும் இல்லாதவள் செல்வி. இந்த செல்வி வீட்டுக்காரன் இருக்கானே அவன் பண்ணுற அலும்பு அதுக்கும் மேல. வீட்டுல குடிக்குறதுக்கு மினரல் வாட்டர்  வாங்கி வச்சா அதுல குளிச்சிட்டு வந்து நிக்குறான். 

“மாப்பிள்ள   அது மினரல் வாட்டர். குடிக்குறதுக்கு   வாங்கி வச்சது” உச்சி மண்டையில் சுர்ரென்று ஏறிய கோவத்தை அடக்கியபடி சொன்னார் நாதன்.

“என்ன மச்சான் விளையாடுறிங்களா? பார்த்தாலே கலங்கலா இருக்கு அதைப் போய் நான் குடிச்சால் நாளைக்கே காலரா வந்துடும். அதுனால நீங்க என்ன செய்யுறிங்க, மாட்டுத்தாவணி போறீங்க. அங்க எனக்குத் தெரிஞ்ச கடைல அக்வாபினா ரெண்டு லிட்டர் பாட்டில் பத்து எடுத்து வைக்க சொல்லி இருக்கேன் வாங்கிட்டு வந்துடுங்க” என்று  மகாராஜா கட்டளையிடுவான். 

லொங்கு லொங்கென்று ஓடிப் போய் வாங்கி வருவார் நாதன். அதைக் குடிப்பதற்கு மட்டும் வைத்துக் கொண்டால் பரவாயில்லை. நாதனின் கண் எதிர்க்கவே சாப்பிட்டு விட்டு தட்டில் அந்தத் தண்ணியில் கை கழுவுவான். கோவத்துடன் செல்வியைப் பார்த்தால் அவளோ தனது கணவனுக்கு கை துடைக்க டவல் தந்து கொண்டிருப்பாள்.

 பேசாம இந்த அரவிந்த்த மிரட்டியாவது செல்வியக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம். ஆனா அவனக் கல்யாணம் செஞ்சு வச்சாலும் இந்த செல்வியோட ஆட்டம் தாங்க முடியாது. 

எல்லாரின் மேல் இருந்த  கோவத்தை எல்லாம் திரட்டி சுதாவிடம் காட்டினார். 

“ஏண்டி கொஞ்சம் அனுசரிச்சு போயிருக்கக் கூடாது? நான் என் கடனெல்லாம் தீர்த்து இருப்பேன்ல்ல. இந்தக் கல்யாணத்துக்கு வர்ற பணத்தை நம்பி போட்டத் திட்டமெல்லாம் உன்னால வீணாப் போச்சுடி. என்னைப் பிடிச்ச ஜென்ம சனிடி நீ”

தனது தங்கையின் வாழ்க்கையைக் கெடுத்து அதில் வரும் பணத்தில் மஞ்சள் குளிக்க என்னும் தனது கணவரின் மேல் அடங்காத ஆத்திரம் வந்தது சுதாவுக்கு. இருந்தாலும் அதனைக் காட்ட இது சமயம் அல்ல என்றெண்ணி அடக்கிக் கொண்டார். 

“நீங்க திட்டம் போட்டதெல்லாம் தெரியும். சித்தாரா வீட்டுல திருட்டுப் போன நகைக்கு ஈடா போலிஸ் ஸ்டேஷன்ல குடுத்த பணத்தை வாங்கி வச்சுட்டிங்களாமே. அதைத் தவிர ராஜம் பாட்டி கிட்ட ரெண்டு லட்சம் ரொக்கமா வேற பணம் வாங்கி இருக்கீங்க. சரியா”

எதிர்பார்க்காத கேள்வி எதிர்பார்க்காத ஆளிடம் இருந்து வந்ததால் திகைத்தார் நாதன் “அது…. அது வந்து வீட்டுக்குத் தாண்டி செலவு செஞ்சேன்”

“கிழிச்சிங்க. கழுத்துலயும் காதுலையும் பொற்குடத்துல ஒரு கிராம் நகை வாங்கி போட்டுக்கிட்டு விசேஷத்துக்கு போயிட்டு வந்துட்டு இருக்கேன். இப்படி லட்சம் லட்சமா வாங்கிட்டுப் போய்  சூதாடிட்டு வரிங்கன்னு கேள்விப் பட்டேன்.”

“இங்க பாரு சுதா ஆம்பிள்ளைக ஆயிரத்தொரு இடத்துல பணத்தைப் போட்டுப்  புரட்டுவோம். அதுல எல்லாம் நீ தலையிடாதே. உனக்கு மூணு வேளை சாப்பாட்டுக்குக் குறை வச்சிருக்கேனா? இல்ல துணி மணி வாங்கித்தராம இருக்கேனா”

என்னவோ அது இரண்டுக்கும் வழி இல்லாமல் தான் சுதாவைத் திருமணம் செய்துக் கொடுத்தது போலப் பேசினார். 

 பல்லைக் கடித்து மனதை அடக்கிய சுதா பொறுமையாகவே பதில் சொன்னார் 

“அதுல தலையிடல. ஆனா  நீங்க வாங்கிட்டு வந்த பணத்துக்கு என் தம்பி பொண்டாட்டி கணக்கு கேக்குறா. பணத்தை எண்ணி வைக்க சொல்லுறா. நான் என்ன செய்ய. அம்மா வீட்டுக்கு போகாம இருக்க வேண்டியதுதான்”

“அவ யாருடி உன்னை கணக்கு கேட்க? உன் அம்மா வீட்டுல உனக்கு எல்லா உரிமையும் இருக்குடி. மண்ணாத்தையாட்டம் நிக்காம அவகிட்ட   அதை அடிச்சு சொல்லு”

“அய்யா…..  எங்கம்மா வீட்டுல தான் எனக்கு உரிமையிருக்கு.  அரவிந்த் அவளுக்கு தாலி கட்டுறதுக்கு முன்னாடியே அவனை பேரம் பேசி நீங்க  வாங்கின பணத்துக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமில்லை. அதனால நீங்க சீக்கிரம் அந்தப் பணத்தைக் குடுக்குற வழியைப் பாருங்க”

வெகுண்டார் நாதன் ” தரேண்டி ஒரு பைசா பாக்கி இல்லாம தரேன். என்னை யாருன்னு நெனச்ச|? இன்னும் மூணே மாசம் அப்பறம் உன்னை தங்கத்தால இழைக்குறேண்டி” 

 அன்று இரவு வழக்கம் போல் ஸ்ராவனிக்கு பூஸ்ட் தந்து விட்டு அரவிந்த் கையிலும் பால் டம்ப்ளரை தந்தாள் சித்தாரா. 

அழகாகக் கத்தரிக்கப் பட்டிருந்த ஸ்ராவனியின் முடியினை அன்பாக வருடி விட்டவள், 

“பாரு அரவிந்த் வனியோட முகத்தையே மாத்திட்டேன்” என்றாள் உற்சாகமாக.

“வனிய  மாத்தின சரி, ஏன் என்னை ஏமாத்தின?” என்றான்.

“நான் உன்னை ஏமாத்தினேனா? என்ன சொல்லுற அரவிந்த்? நான் டென்த் ப்ளஸ்டூல ஸ்டேட் ரேங்க், எம்எஸ்சில கோல்ட் மெடலிஸ்ட் அப்படின்னெல்லாம்  உன்கிட்ட சொல்லவே இல்லையே!” என்றாள் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு. 

“நீ சொன்னா மட்டும் நான் நம்பிறப் போறேனா?” என்று சொல்லிவிட்டு நிமிடத்திற்கு  நிமிடம் மாறி மாறி வித்தை காட்டும் அவளது கோழிக் குண்டு கண்களையே பார்த்துக் கொண்டிருந்த அரவிந்த் தாங்கமாட்டாமல் பெரிதாக சிரிக்கத் துவங்கினான். இவனுக்கு என்ன ஆச்சு?  என்ற கேள்வியுடன் அவனைப் பார்த்தாள் சித்தாரா. 

ஒரு வழியாக சிரித்து முடித்தவன் 

“ஆமா சித்து, இந்த பால்ல எத்தனை தூக்க மாத்திரை போட்ட?” கென்று நமுட்டுச் சிரிப்புடன் வினவ, ஆடு திருடிய கள்ளன் போல  திரு திருவென விழித்தாள் சித்தாரா. 

“ஒண்ணு…. இல்ல, எனக்கு ஒண்ணு பத்தாதில்லை, ஒரு  ரெண்டு, மூணு, நாலு?” என்று சொல்லிக் கொண்டே போக

“அவ்வளவெல்லாம் இல்ல அரவிந்த் ரெண்டு மட்டும் தான்” என்றாள்  பதவிசாக. 

“உனக்கு எங்கேருந்து தூக்க மாத்திரை கிடைச்சது?”

“பாட்டி சில சமயம் போட்டுக்குவாங்க”

” அவங்க மாத்திரைய திருடிட்டயா?”

” அதெல்லாம் இல்ல, அவங்களுக்குத் தெரியாம எடுத்துகிட்டேன்”

“அதைத்தான் சித்து மத்த எல்லாரும் திருடுறதுன்னு சொல்லுவாங்க. சரி அதை விடு. ரெண்டா போட்ட, அது சரி என் தூக்க மாத்திரை போட்டு தினமும் என்னை தூங்க வைக்குற?”

என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள். 

“என்னையக் கிட்டத்தட்ட வில்லன் மாதிரி நெனச்சு ராத்திரி பால்ல தூக்க மாத்திரை போட்டு தூங்க வச்சிருக்க. நானும் ஸ்ராவணி அழுறது கூட காதுல விழாம அடிச்சு போட்டது மாதிரி தூங்கி இருக்கேன்”

குற்ற உணர்ச்சியுடன் தலை குனிந்த மனைவியைக் கண்டு இளகியது அரவிந்தின் மனம். இருந்தாலும்  மனத்தைக்  கல்லாக்கிக் கொண்டு கேட்டான் ” வேற யாரையாவது விரும்புனியா சித்தாரா. என்னை உன் பிரெண்ட் மாதிரி நெனச்சுட்டு சொல்லு”

 தலையை மரங்கொத்திப் பறவையைப் போல ஒரு பக்கமாக சாய்த்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். 

அள்ளி அணைத்துக் கொள்ளலாம் போலிருந்தாது அரவிந்துக்கு. இருந்தாலும்  யாருமில்லை என்ற வார்த்தை அவள் வாயில் இருந்து வராமல் விட முடியாதே ” உனக்கு….. உனக்கு சொல்ல தயக்கமா இருந்தா எழுதி காமி. இல்ல டைரி மாதிரி எதுலயாவது எழுதி இருக்கியா?”

“டயரியா” என்று யோசித்தவள் உள்ளே சென்றாள். திரும்பி வரும்போது அவள் கையில் ஒரு டசன் டயரிகள். 

“இது என்ன சித்து?” என்றான் அதிர்ந்து போய்.

அவனிடம் தனக்கிருக்கும் ஒரு தலையாய பிரச்சனைக்கு தீர்வு கேட்பது போல  “நான் என்ன செய்யுறது அரவிந்த்?  என் கிட்ட வருஷத்துக்கு ஒண்ணுன்னு நிறைய டயரி இருக்கே. நீயே நல்ல பையனா செலக்ட் பண்ணி என்கூட சேர்த்து வை” என்றாள். 

 இதென்னடா வம்பா போச்சு என்று பயத்துடன் ஒவ்வொரு புத்தகமாகப்  பிரித்தான். நல்லவேளை பெரிய குண்டு எதுவும் இல்லை. அது முழுவதும் ராஜம் பாட்டி வீட்டு செலவுக் கணக்கு எழுத உபயோகப் படுத்தி இருந்தது. அப்பாடா என்றிருந்தது அரவிந்திற்கு. சற்று நேரத்தில் மனுஷனைப் பதற வைத்து விட்டாளே இவளை என்று செல்லக் கோவத்துடன் சித்தாராவைப் பார்க்க சித்தாரா அவன் முகத்தயே பார்த்துக் கொண்டிருந்தாள். ஸ்ராவணி  அவள்  மடியில் படுத்து தூங்கி விட்டிருந்தாள். 

“இப்ப உண்மையான காரணத்தை சொல்லு சித்து. என்னை உனக்கு பிடிக்கலையா?” 

அவன் குரலில் தெரிந்த கவலை அவள் மனதை உலுக்கிற்று. ஸ்ராவணியைக் கட்டிலில் படுக்கவைத்து விட்டு மின்விசிறியின் வேகத்தை கொஞ்சம் அதிகப் படுத்தினாள். 

“காலேஜ்ல பொண்ணுங்களுக்கு மார்க் போடுவியா அரவிந்த்”

இதென்ன சம்பந்தா சம்பந்தமில்லாம என்றபடி அவளைப் பார்த்தான் அரவிந்த்.  

“நாங்க பசங்களுக்குப் போடுவோம்பா. அதுனால தைரியமா சொல்லு”

 பதில் சொல்லாமல் அவளையே பார்த்தான். 

 “இந்த மௌனத்தை சம்மதம்னு எடுத்துக்குறேன். சரி எனக்கு எவ்வளவு மார்க் போடுவ உண்மைய சொல்லு”

 “பரவல்ல தைரியமா சொல்லு”  தைரியம் கொடுத்தாள். 

 “பத்து”

“பத்துக்கு பத்தா? ஓவரா எனக்கு ஐஸ் வைக்காதே அரவிந்த். உண்மையை  மட்டும் சொல்லு”

‘உண்மைதான் சித்து, நூத்துக்கு பத்து’ என்று சொல்லி அவளுடன் விளையாட ஆசை எழுந்தது. ஆனால் அவள் முகத்தில் இருந்த தீவிரத்தைப் பார்த்து மனதை மாற்றிக்  கொண்டான்.  

” ஒரு ஒன்பது… முறைக்காத ஒரு செவென் பாயிண்ட் பைவ்” 

“ஓகே கொஞ்சம் கம்மி தான்னாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குறேன். ஆள் சுமாரா இருக்கேன். படிச்சிருக்கேன். வேலைக்கு போய் கௌரவமான சம்பளம் வாங்குறேன். குடி இருக்க சென்னைல ஒரு நல்ல வீடு இருக்கு. பாட்டியால உதவிதானே தவிர  உபத்திரவம் இல்ல”

‘ஏன் இப்படி அடுக்குகிறாள்’ என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்த். 

” எனக்கு வேற என்ன குறை இருக்கு? சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத உங்கம்மா ஒரு தடவை சத்யாண்ணிய ரெண்டாந்தாரமா கேட்டு வந்தவங்கள மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி அனுப்பினாங்க. எனக்கு இவ்வளவு பிளஸ் பாயிண்ட் இருந்தும் ஏன் அரவிந்த் உங்கம்மா சரியான சமயத்துல எங்க பாட்டியோட வருத்தத்தை பயன் படுத்தி உனக்கு ரெண்டாந்தாரமா கேட்டாங்க? என்னை பாட்டி ஏன் ரெண்டாந்தாரமா தந்தாங்க?

  ஆனா உங்கம்மா அந்தப் பேச்சை எடுக்கலைன்னா பாட்டிக்கு அந்த மாதிரி எண்ணம்  வந்திருக்காது. அதெல்லாம் போகட்டும்  நீயாவது கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை எனக்கு சம்மதமான்னு கேட்டிருக்கலாம்ல. 

நான் என்ன ஏழுகடல் ஏழு மலை தாண்டியா இருந்தேன். மாடிலதான இருந்தேன். இத்தனைக்கும் போட்டோ பின்னாடி என் போன் நம்பரை எழுதித் தானே உன் அம்மாகிட்ட தந்தேன். பேச கஷ்டமா இருந்தா போன் செய்திருக்கலாமே. நீ எதுவுமே செய்யலையே. 

உன் மேல எனக்கு ரொம்ப கோவம் அரவிந்த். அடுத்தவங்க உபயோகிச்ச பொருட்களை நான் தொடக் கூட மாட்டேன். போலிஸ்காரங்க எங்க வீட்டுல திருடு போன நகைகளுக்கு   ஈடா   வேற நகைங்க  தரோம்னு சொன்னப்பக் கூட நான் மறுத்துட்டேன்.  என்னால எப்படி  இன்னொருத்தியின்  கணவனோட குடும்பம் நடத்த முடியும்? சொல்லு “

தனது உள்ளக் குமுறலை அரவிந்திடம் முதல் முறையாக சித்தாரா கொட்ட, இதனை சற்றும் எதிர்பார்க்காத அரவிந்த் தீயினைத் தொட்டார்  போலத் துடித்துப்  போனான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 16

அத்தியாயம் –16  சித்தாரா ஸ்ராவணியை நன்றாக கவனித்துக் கொள்வது தனக்கு மகிழ்வளிப்பதாக கதிர் சொன்னார். “ஸ்ராவணியை அவள் ஏத்துக்க ஆரம்பிச்சுட்டான்னா உன்னையும் அவளுக்குப் பிடிக்க ஆரம்பிச்சாச்சுன்னு நினைக்கிறேன் அரவிந்த்” “இல்ல மாமா அவசரப் படாதிங்க. சித்தாரா சின்ன வயசில தாயை இழந்தவ.