Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 17

அத்தியாயம் – 17

வீட்டினருக்கு ஜவுளிகளை எடுத்த பின்,  பக்கத்தில் இருந்த கடைக்கு அழைத்து சென்று சித்தாராவுக்கு அவள் மறுக்க மறுக்க ஜீன்ஸ் எடுத்துத் தந்தான் அரவிந்த். 

“எனக்கு ஜீன்ஸ் எல்லாம் பழக்கமில்லை அரவிந்த். ப்ளீஸ் வேண்டாம். நான் வேணும்னா சுடிதார் போட்டுகிறேன்” 

மறுப்பாக தலையசைத்த அரவிந்த் “இல்ல சித்து, இப்ப அங்க குளிர் ஆரம்பிச்சு இருக்கும். ஜீன் தான் குளுரைத் தாங்கும். வெயில் வந்தவுடனே சுடிதார் போட்டுக்கோ.”

எங்கே அவள் மறுத்துவிடுவாளோ என்று பயந்த அந்த விற்பனைப் பெண் “என்ன மேடம்? பத்து வருஷத்துக்கு முன்னாடி இருந்த சிம்ரன் மாதிரி இடுப்ப வச்சுட்டு ஜீன்ஸ்  போட மாட்டேன்னு சொல்லுறிங்க. இந்த கருப்பு ஜீன், ராயல் ப்ளூ டாப் உங்களுக்கு சூப்பரா இருக்கு. இல்ல சார்?” என்று கேள்வி கேட்டு அரவிந்தையும் துணைக்கழைத்துக் கொண்டாள். 

பணிப்பெண் கூறியபடி இருந்த சித்தாராவின்  சிம்ரன் இடுப்பு இப்போதுதான் அரவிந்தின் கண்ணிற்குத் தட்டுப் பட்டது.

 “ஆமா ஆமா சூப்பர்” என்று எதைப் பற்றி சொல்கிறான் என்று சித்தாரா கண்டு பிடிக்காத வண்ணம் ஜாக்கிரதையாக சொன்னான். அதற்குள் அவனுக்கு வேர்த்துக் கொட்டி  விட்டது. 

சித்தாரா சொல்ல சொல்ல கேட்காமல் அவளுக்கு மூன்று ஜீன்சும் ஆறேழு குர்த்தியும் வாங்கினான். 

“ஏன் அரவிந்த் இப்படி செலவு செய்யுற?” என்று சித்தாரா கடிந்துக் கொண்டாள்.

சைலஜா இப்படி எல்லாம் வருத்தப் பட்டதே இல்லை. அவளுக்கு எத்தனை எடுத்துத் தந்தாலும் ஆசை அடங்காது. அவளது ஆசைகளுக்கு ஒரு எல்லையே இல்லையா என்று எண்ணி அரவிந்த் சில சமயம் நொந்து போயிருக்கிறான். ஒருத்தி அப்படி இன்னொருத்தி இப்படி. புன்னகைத்துக் கொண்டான். 

“சித்து அத்யாவசிய செலவுகளை செய்யக்  கஞ்சத்தனப் படக்கூடாது. இப்ப வாங்கினது நமக்கு தேவையானது தான். சரி போய் தெர்மல்ஸ் வாங்கு” என்று சொன்னான்.

அவனுக்கும் அவளது விருப்பப்படி டீஷர்ட்ஸ்  வாங்கினாள் சித்தாரா.

“சித்து தெலுங்கு படம் ரொம்பப்  பிடிக்குமா உனக்கு?” அவள் செலக்ட் செய்த மலர்கள் வாரி இறைத்த குட்டை சட்டை , பத்து பாக்கெட் வைத்த பாண்ட்டுகள்,  கத்திரிப்பூ ,  கிழங்கு மஞ்சள், துப்பாக்கி பிரிண்ட் என்று பலவாரியான  டிசைன் கொண்ட  டீஷர்ட்களைக் கையில் எந்தியவாறே பரிதாபமாகக் கேட்டான். 

“ஆமா அரவிந்த் நாக் படம்னா குறைஞ்சது பத்து தடவை பார்ப்பேன்”

“யாரது நாக்”

“நாகார்ஜுனா. கிங் பட ஹீரோ உனக்குத் தெரியாதா?”

“அமலா வீட்டுக்காரரா? தெரியும் தெரியும் ” என்று தலையாட்டிய அரவிந்தைப் பார்த்து முறைத்தாள்.

‘முறைப்பொண்ணட்டம் முறைக்கிறதைப் பாரு. இவ மட்டும் அங்கிள் நாகர்ஜுனாவைப் பார்த்து ஜொள்ளு விடலாம். நான் ஆன்ட்டி அமலா பேரைக் கூட சொல்லக் கூடாது. இது எந்த ஊரு நியாயம்? இருந்தாலும் நான் மத்த பொண்ணுங்க பேரை சொன்னாக் கூட உனக்குக்  கோவம் வருதா? இந்த வாத்து இதெல்லாம் என் மேல  வந்த உரிமைலன்னு எப்ப புரிஞ்சுக்கப் போகுது?’ என்று எண்ணியபடி  

“இங்க பாரு சித்து சில சமயம் நீ வா போன்னு மரியாதையா கூப்பிடுற. திடீருன்னு நீங்க வாங்கன்னு சொல்லுற. நீ என்னைத் தான் சொல்லுறன்னு புரிஞ்சுக்கவே எனக்கு நேரமாகுது”

“உங்க வீட்டு ஆளுங்க முன்னாடி நீங்க வாங்கன்னு  கூப்பிடுவேன் அரவிந்த். இல்லைன்னா பாட்டி திட்டுவாங்க. அதுனால இனிமே காலைல முழிச்சமாதிரி திரு திருன்னு முழிக்காதே”

மரியாதை கூட பாட்டியால தான் எனக்குக் கிடைக்குது. ‘வாழ்க ராஜம் பாட்டி’ மனதில்  வாழ்த்தினான் 

“சரிம்மா”. 

சைலஜா அவனை மிகவும் மரியாதையாகத் தான் கூப்பிடுவாள் சில காலம் வரை. அதன் பின் அவளும் அரவிந்த் என்று தான் அழைப்பாள். உனக்கு இந்த ஜென்மத்துல மரியாதை தராத மனைவிகள்தான் என்றெண்ணி புன்னகைத்துக் கொண்டான். 

அவனது காதல் உணர்வுகளுக்குத் தடை போடும் விதமாக அவனது கையை பிடித்துக் கிள்ளிய சித்தாரா அந்தக் கடையில் அவர்களின் பார்வைக்கு  மறைவாக நின்றிருந்த சேல்ஸ் கேர்ளைக் காண்பித்தாள். அது அவனது தங்கை சாந்தா. அரவிந்திற்கு முன்பு இருந்த குதூகலமான மனநிலை மாறி விட்டது. அமைதியாக இருவரும் அந்தக் கடையை விட்டு வெளியேறினார்கள். சித்தாரா அவனுக்கு எடுத்த உடைகளுக்குத் தானே பணம் கட்டினாள். அதனைத் தடுக்கும் மனநிலையில் கூட அவன் இல்லை. 

கடையை விட்டு சற்று தூரம் சென்ற பின் சித்தாரா கேட்டாள் “அரவிந்த், சாந்தா  என்ன அப்படி பெரிய தப்பு பண்ணிட்டாங்க ? எதுக்காக இந்த அளவு வெறுப்பை அவ மேல உங்கக் குடும்பம் காமிக்குது. அவளோட கணவனுக்கு கிட்னி பெயிலியர் ஆகி நடந்த ஆபரேஷன்ல உங்க கடமையை செஞ்சுட்டு அதாவது பணம் மட்டும் தந்துட்டு ஒதுங்கிட்டிங்க. 

அவ காதலிச்சது ஒரு பெரிய தப்பா? அப்படி பார்த்தா  உன் முதல் கல்யாணம் கூட காதல் கல்யாணம்னு தான் கேள்விப் பட்டேன். லவ் மேரேஜ் செய்துகிட்ட  பையன் உங்க வீட்டுக்கு வேணும் ஆனா அதே தப்பை செய்த பொண்ணு வேணாமா? ரொம்பத்தான் ஓரவஞ்சனை உங்க அம்மாவுக்கு” கோவத்துடன் கேட்டாள் சித்தாரா.  

“வாயை மூடு சித்தாரா. எதுவும் தெரியாம உளறக் கூடாது” மனதில் எழுந்த கோவத்தை அடக்க தனது உள்ளங்கைகளை இறுக்கிக் கோர்த்துக் கொண்டான்.

 இரண்டு மூன்று நிமிடங்களில் கோவம் சற்று  மட்டுப்பட்டது. பாவம் இவள் என்ன செய்வாள். நம் குடும்பத்திற்கே புதுமுகமான இவளுக்கு என்ன தெரியும்? இவள் இத்தனை தூரம் அவனிடம் பேசுவதே அவன் மேல் இருக்கும் உரிமையால் அல்லவா. அதை ஆரம்பத்திலே கருகவிடலாமா? அவளது முகத்தைப் பார்த்தான். இந்த மாதிரி திட்டை அவள் எதிர்பார்க்காததால் முகமே களை இழந்திருந்தது. 

“சித்து மறுபடியும் சாரிடா. இங்க பாரு காலைல நான் சொன்னேன்ல சில விஷயங்களைப் பத்தி பேச எனக்குப் பிடிக்காதுன்னு. அதுல இதையும் சேத்துக்கலாம். எனக்கு அவ்வளவு சீக்கிரம் கோபம் வராதும்மா. ஆனா இன்னைக்கு ரெண்டாவது தடவை உன்கிட்ட வெடுக்குன்னு பேசிட்டேன். என்னை என்ன செய்யுறதுன்னு தெரியல” 

வருத்தமாகத் தான் சொன்னான் ஆனால் அது சித்தாராவை சமாதானப் படுத்தவில்லை. மெளனமாக நடந்துக் கொண்டிருந்தாள். 

“சித்தாரா” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினாள். அங்கே ஒரு நடுத்தர வயது பெண்மணி நின்று கொண்டிருந்தார்.

“நல்லா இருக்கிங்களா மேடம்” புன்னகையுடன் கேட்டாள் 

“பைன். இவர்தான் உன் கணவரா. பொருத்தமா இருக்கிங்க. பரீட்சை நல்லா செய்துறிக்கியா? ரிசல்ட் வாங்க வருவியா?”

“இல்ல மேடம் ஊருக்குக் கிளம்பி போறேன். அதுனால வேற யாரவது தான் டிகிரி செர்ட்டிபிகேட்டை வாங்கி அனுப்பனும். என்ன பார்மாலிட்டின்னு தெரியல”

“கவலைப் படாதே நான் வாங்கி அனுப்புறேன். எனக்கு அவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க. என் பையன் இந்த வருஷம் நல்ல மார்க்ஸ்  வாங்கி இருக்கான். பொறுப்பா இருக்கான். உன்மேல அனாவசியமா கோவப் பட்டுட்டேன் மன்னிச்சுக்கோ”

“என்ன மேடம் பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு”

“ வயசுல சின்னவளா இருந்தாலும் நீ எனக்கே பாடம் சொல்லிட்டம்மா. அங்க வேலைக்கு போனா, காலேஜ்ல இருந்து ரெபரென்ஸ் கேட்பாங்க. என் பேரத் தா.  அடுத்த முறை வீட்டுக்கு கண்டிப்பா வரணும் ” அழைப்பு விடுத்துவிட்டுக்   கிளம்பினார். 

குழப்பமாகப் பார்த்தான் அரவிந்த் “நீ எம்.எஸ்.சி  படிச்சிருக்கன்னு சொன்னாங்க. இப்பதான் எக்ஸாம் எழுதி இருக்கியா?” 

பதில் பேசாமல் அவனை அலட்சியமாக ஒரு லுக் விட்டவள் “ நல்லா கவனி அரவிந்த், படிச்சேன்னு தான் சொல்லி இருப்பாங்க. படிச்சு முடிச்சுட்டேன்னு யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க. இப்ப தான் மிச்சம் மீதி பேப்பர்ஸ் எழுதி முடிச்சேன்”

பயபுள்ள என்னமா வாயாடுது பாரு “அரியர் எக்ஸாமா?” 

“அதுல என்ன அப்படி ஒரு அதிர்ச்சி, ஆச்சிரியம் உனக்கு?  அரியர் இல்லா மனிதன் அரை மனிதன் கேள்விப்பட்டதில்லையா. கிளாஸ்ல முதல் பெஞ்ச் ஆளா நீ? சரி உன்னோட வெளியே வந்தா ஒரு கூல் டிரிங்க்ஸ் கூட வாங்கித் தரமாட்டியா?”

இருவருக்கும் பிரச்சனையை பெரிதுபடுத்த நினைக்காத மனநிலமை இருந்ததால் அதுவும் வந்த இடம் தெரியாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டது. அருகில் இருந்த வடஇந்திய உணவகத்துக்கு சென்றார்கள்.   

அங்கே உணவகத்தில் அமர்ந்திருந்த இளைஞனை பார்த்து வினாடி நின்றவள் “அரவிந்த் உன் கையைத் தாயேன்”, என்று கைகளுடன் கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். டேபிளில் அரவிந்த் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அவனை நெருக்கிக் கொண்டு அமர்ந்தாள். 

‘இவ சாதாரணமா இப்படி எல்லாம் நடக்க மாட்டாளே. அந்த ஆள் தான் இவளுக்கு முன்னாடி நிச்சயம் செஞ்ச முகுந்தனா இருக்குமோ அதுனாலதான் அவனை வெறுப்பேத்த இப்படி செய்யுறாளோ எதுவா வேணும்னாலும் இருக்கட்டும் இவ கையைக் கோர்த்துகிட்டு இப்படி நெருக்கமா இருந்தா நல்லாத்தான் இருக்கு’ 

அவள் மேல் இருந்து வந்த மல்லிகை வாசனையையும், விக்கோ டர்மரிக் வாசனையையும் அனுபவித்தபடி அமர்ந்திருந்தான். தள்ளி அமர்ந்தாள் சித்தாரா. 

“என்ன ஆச்சு சித்து?” ஏமாற்றமாய்  கேட்டான். 

வெளியேறிக் கொண்டிருந்த அந்த பையனை சுட்டிக் காட்டியவள், 

“அங்க போகுதே அது  தினமும் என்னை பார்த்து ‘ச்சாதுவின் கா சாந்து ஹூ’ன்னு பாடிட்டு பின்னாடியே வரும். லவ் பண்ணுறேன்னு சொன்னான் திட்டி அனுப்பி விட்டேன். என்னைய விட்டா எந்த எருமையும் உன்னைக் கட்டிக்காது அப்படின்னு சவால் விட்டுட்டுப் போனான்”

எருமை பற்றிய டாபிக்கை பேச விரும்பவில்லை அரவிந்த்

“ச்சாதுவின் கா சாந்து ஹூ – அப்படின்னா என்ன சித்து?” 

“நீ முழு நிலாவா இல்ல சூரியனா இது எது கூடவும் உன்னை ஒப்பிட முடியாதுன்னு அர்த்தம்” கண்கள் விரிய பதில் சொன்னாள் சித்தாரா.

‘அப்படியா சொன்னான் இந்தக் கபோதி. உண்மையைத் தான் சொல்லி இருக்கான் இருந்தாலும் சித்துவ சொல்லுற உரிமை எனக்கு மட்டும் தான் உண்டு’ மனதில் எண்ணிக்  கொண்டு 

“அவன சும்மாவா விட்ட” கடு கடுத்தான் அரவிந்த். அது அவனை எருமைக்கு ஒப்பிட்டு பேசியதால்  என்பது நமக்குத் தெரியாதா என்ன. 

“ கோவப் படாதே அரவிந்த். அப்பறம் பொழுது போகணுமே. எங்கள பாதுகாப்பா வீட்டுல இருந்து காலேஜ் வரை விட்டுட்டு போவான். சாயந்தரம் மறுபடியும் காலேஜ்ல இருந்து வீட்டுக்கு. அவன் குரல் நல்லா இருக்கும் அரவிந்த். அதுனால ரசிச்சு கேட்போம்”. 

‘ஊருக்குப் போனதும்  ரன்பீர்கிட்ட இந்தப்  பாட்டு லிங்க் வாங்கிக்  கத்துக்கணும். அரவிந்த் நீ சின்ன வயசுல கத்து கிட்ட சரளி , ஜண்டை எல்லாத்தையும் தூசு தட்டு. இந்த விஷயத்துல அவனா நானான்னு  ஒரு கை பார்த்துடலாம்’ அவனது மனது உசுப்பிவிட்டது. 

அவன் அருகில் இருந்த குயில் கூவிக் கொண்டிருந்தது. தனது யோசனைகளைத் தள்ளி வைத்து விட்டு கானக் குயில் சித்தாராவின் பேச்சுக்கு செவி மடுத்தான்.

“நான் அப்படி ஒண்ணும் அழகில்லையா? பாட்டுப் பாடி கிண்டல் பண்ணுற. என்ன தைரியம் உனக்கு இப்படி சொல்லுறதுக்கு. நீ என்னமோ மன்மத ராசா மாதிரியும், நாங்க கோக்கோலா கலர்  கருவாச்சி மாதிரியும் நீ மட்டுமில்ல உங்க வீட்டுலயும் ஓட்டிக்கிட்டு இருக்கிங்க. ஜாக்கிரதையா இருக்க சொல்லு. 

என்னோட வால்யூ பத்தி உனக்குத் தெரியாது அரவிந்த், உன்னோட தங்கச்சிங்க ரெண்டு பேரும் படிச்சது நான் யூஜி படிச்ச பாரதி காலேஜ் தான். அவங்க கிட்ட என்னை பத்தி கேட்டுக்கோ. ஏதோ நான் பெருமையா வெளிய சொல்லிக்கிறது கிடையாது. ஒரு சில  பாயிண்ட் சொல்லுறேன் கேட்டுக்கோ  என்று அவள் சொன்னதின் சாராம்சம் இதுதான்  

“ நித்தம் நித்தம் நந்தனம் காலேஜ், கிறிஸ்டியன் காலேஜ், லயோலா காலேஜ் 

பக்தியுடன் சுற்றி வரும் அண்ணாமலை நான்தானே 

அப்படியே கிளப்பிக் கொண்டு போய் கடத்தல் மன்னர்கள் கடத்தப் பாக்குற 

அஞ்சு வகை பொன்னால பண்ணக் கண்ணான சிலை நான்தானே 

பீச் டூ தாம்பரம் வரைக்கும் எலெக்ட்ரிக் ட்ரெயினுல என்னோட வரும் 

பாசண்ஜரு எல்லாரும் தொழும் எல்லோரா சிலை நான்தானே”

உங்க வீட்டுல நீங்களா பார்த்து அடங்கிடுங்க இல்ல நான் அடக்கிடுவேன். இப்போதைக்கு இது போதும். அப்பறம் சமயம் கிடைக்குறப்ப மத்தத சொல்லுறேன். ரொம்ப டையர்டா இருக்கு இந்தக் கடைல ஒரு ஸ்வீட் லஸ்ஸி சொல்லு”

அந்தப் பஞ்சாபி கடையில் லஸ்ஸி ஒரு லோட்டாவில் கொண்டு வந்து கொடுத்தான். எப்படியும் ஒரு லிட்டருக்குக் குறையாது. இதைக் குடித்தால் மதியம் உணவை மறந்து விட வேண்டியதுதான். சித்தாரா கவலையே படாமல் வளைத்துக்  கட்டிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு ஸ்வீட்டுன்னா ரொம்ப பிடிக்குமா சித்து?”

“சே சே ஸ்வீட் அவ்வளவா பிடிக்காது அதுனால தான் கம்மியா சாப்பிடுறேன்”

அரவிந்துக்கு மயக்கம் வராத குறை. பிடிக்காதா?  பிடிக்காததே இந்தக்  கட்டு கட்டுறாளே   இவளுக்குத் தீனி போடணும்னா ரெண்டு ஷிப்ட் வேலை பார்க்கணும் போல இருக்கே.

தம்பதிகளின்  மகிழ்ச்சியான  மனநிலை வீட்டிற்கு வந்ததும் அப்படியே மாறியது.

வீட்டில் அவர்கள் வரவுக்கென்றே காத்திருந்தது மாதிரி அழுது கொண்டே வந்த ஸ்ராவணி அரவிந்தின் காலைக் கட்டிக் கொண்டாள்.

“அப்பா சித்து எனக்கு ஊருக்குப் போனதும் சூடு வைப்பாங்களாம், ரெண்டு பேரும் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவிங்களாம் ஆதி சொல்லுறான். ஆ……..” 

“கண்ணம்மா….  அப்படி எல்லாம் அப்பா செய்ய மாட்டேண்டா. சித்து உனக்கு பிரெண்ட் இல்லையா. அப்படி செய்வாங்களா? ஆதி சும்மா சொல்லுறான்” 

சத்தம் போட்டு அழுதுத் தேம்பிய வனியை அடக்க வழி தெரியாமல் திணற, சித்தாராவின் முகத்தில் கோவம் கொதிக்க ஆரம்பித்தது.

“டேய் ஆதி இங்க வாடா” சித்தாராவின் குரல் கேட்டு நாதன் கூட ஹாலுக்கு வந்து விட்டார். 

“என்னத்த” நிலமை தெரியாமல் திமிராய் ஆதி மெதுவாக எழுந்தபடி சொல்ல.

“பாப்பா கிட்ட என்னடா சொன்ன?”

“உண்மைய சொன்னேன். இங்க எங்களுக்கு பயந்துகிட்டு இப்படி இருக்கிங்க. ஊருக்குப் போனதும் என்னல்லாம் கொடுமை படுத்தப் போறிங்கன்னு சொன்னேன்”. 

அவன் அப்பா முதல் நாள் யாரிடமோ சொன்னதைக் கேட்டு அப்படியே சொன்னான். 

‘பளார்’ சத்தம் தான் வந்தது. 

ஆதியின் கண்களில் பூச்சி பறக்க ஆரம்பித்தது. நல்ல வேளை அவன் பல்லுக்கொன்றும் ஆபத்தில்லை. அப்பறம் நாதன் தங்கப் பல் கட்டச் சொல்லிக் கேட்டாலும் கேட்பார்.

   “ உன்னை ஏற்கனவே வயசுக்குத் தகுந்த மாதிரி பேசச்  சொல்லி இருக்கேன். இந்த மாதிரி வாயில வந்தத லூசுத் தனமா பேசின, நீ சொல்லுற கொடுமை எல்லாம் உனக்குத் தான் பண்ணுவேன்.

எல்லாரும் கேட்டுக்கோங்க. ஸ்ராவனிய எப்படி பாத்துக்கனும்னு எனக்குத் தெரியும். நீங்க யாரும் ஜோசியம் சொல்ல வேண்டாம். அப்படித் தான் பேசுவேன்னு வீம்பு பேசினா இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கணும்”

“அம்மா….. அத்தை அடிச்சிட்டாங்க” என்று அழுதுக் கொண்டே சுதாவிடம் ஓடினான் ஆதி. 

அதிர்ச்சியிலிருந்து சுதாரித்த  சுமித்ரா “என்னம்மா, சின்ன பையன் தெரியாம சொல்லிட்டான்…. “ 

“இல்லத்த இவன் ஏற்கனவே என்கிட்ட இப்படிப் பேசி இருக்கான். நானே கூப்பிட்டு கண்டிச்சு இருக்கேன். இப்ப பச்சக் குழந்தை கிட்ட போய் சொல்லி இருக்கானே. இவன் வாயை அடைக்க வேற வழி தெரியல” ஸ்ராவநியைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்று விட்டாள். 

மனதில் எழுந்த கோவத்தை நாதன் எப்படி அடக்கினார் என்பது அவருக்கே புரியாத புதிர். அவருடைய உறவினர்கள் வந்து சத்யாவைப் பேசி முடிக்கட்டும். அதன் பின் இருக்கு இந்த சித்தாராவுக்கு. கல்யாண செலவை அவ வீட்டுக்காரன் முழி பிதுங்குற அளவு இழுத்து விடுறேன். கருவிக் கொண்டே சமாதானமானார்.

ஆனால் பிரச்சனை இந்த முறை சுதாவிடம் இருந்து வந்தது. 

“ஏன்டா ஆதி செஞ்ச தப்பை சொன்னா நான் கண்டிக்க மாட்டேனா? பெத்தவ கண்ணு முன்னாடி  பையன அடிக்குறா. நீ பார்த்துட்டு ஊமைக் கோட்டான் மாதிரி நிக்குற. 

ஒரு வார்த்தை அவளைக் கேட்க மாட்டியா? கல்யாணம் ஆகி ஒரு வாரத்துல உன்னை முந்தானைல முடிஞ்சு வச்சுக்கிட்டாளா? 

இனிமே எனக்கு எங்க அம்மா வீடு? அம்மா வீடு தம்பி பொண்டாட்டி வீடாயிடுச்சே ” என்று கோவப் பட்ட சுதாவை சமாதானப் படுத்துவதற்குள் திணறி விட்டான் அரவிந்த். 

சுதா சமாதானமாகவில்லை. அவளது கோவத்தை மற்றொரு ரூபத்தில் வெகு விரைவில் காட்டினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

அத்தியாயம் -33 “அப்பா…..  வேலவா! ஷண்முகா! பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா?”,   ஊரில் இருந்து திரும்பி இருந்த நான்சியிடம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33

தாய் சிவகாமியின் படத்துக்கருகே புதிதாக இடம் பிடித்திருந்த தந்தை நெல்லையப்பனின் படத்தை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் சரயு. ‘தெனம் காலேல எந்திரிச்சதும்… அப்பாவுக்கு கஞ்சி தரணும், உடம்பு துடைக்கணும், துணி துவைக்கணும், மருந்து வாங்கணும்னு உன்னைப் பத்தியே நெனச்சுட்டு