Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 14

அத்தியாயம் – 14

ழக்கத்துக்கு மாறாக அன்று காலை சித்தாரா எழுந்தபோது அரவிந்த் எழுந்து சென்று விட்டிருந்தான்.

‘இவனுக்கு என்ன வந்தது? நான் வந்து காபி கொடுத்து, வனி அவன் மேல ரெண்டு குதி குதிச்சாத்தானே எழுந்திருப்பான்’ என்று எண்ணிக்  கொண்டே வனியைத் தூக்கம் கலையாமல் கீழ்வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்தாள். 

திருமணத்திற்கு மறுநாளே அரவிந்தை எப்படி எழுப்புவது என்று யோசித்தபடியே ஸ்ராவணியை மாடிக்கு அழைத்து வந்தவள், அப்பாவை விட்டுத் தள்ளி நின்ற பெண்ணிடம்  

“வனி போ போய் உங்க அப்பாவ ரெண்டு அடி போட்டு எழுப்பி விடு” என்று ஊக்கப் படுத்தியவளே அவள்தான்.. 

பஞ்சுப் பொதி ஒன்று மேலே விழுவதைப் போன்ற உணர்வில் திடுக்கிட்டு எழுந்தவன் ஸ்ராவனியின் இந்த செயலைக் கண்டு திகைத்தான். 

“வனி குட்டி, தவறி விழுந்திட்டியா?” பதட்டமாகக் கேட்டான் 

“இல்லப்பா நானே தான் விழுந்தேன். தூங்கு மூஞ்சி அப்பாவை எழுப்பி விட விழுந்தேன் ” என்று களுக்கிச் சிரித்தாள் ஸ்ராவணி. 

“ஏன் அரவிந்த் வலிக்குதா?” தன் பின்னே வந்து ஒளிந்துக் கொண்ட ஸ்ராவநியைத் தூக்கிக் கொண்டு வினவினாள் சித்தாரா.

“இந்த மாதிரி எல்லாம் ஸ்ராவணி என் கிட்ட விளையாண்டதே இல்ல சித்தாரா.  இப்படி மனசு விட்டு சிரிச்சதும் இல்ல. அதுதான்…..   ப்ரஷ் பண்ணிட்டு வந்து எடுத்துக்குறேன் ” என்று சொல்லிக் கொண்டே அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டான். 

அவன் எவ்வளவு தான் முயன்றாலும் அவனது கலங்கிய கண்களை சித்தாரா கவனித்து விட்டாள். குழந்தை செய்யும் சிறு சிறு சேட்டைகள் கூட செய்யாத அவனது பெண்ணும், செய்யமாட்டாளா என்று ஏங்கும் தந்தையும் அவளது மனதில் இருந்த பிடிவாதத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்தனர். 

அன்று நடந்ததை நினைத்துக் கொண்டே வேகமாக இறங்கினாள் சித்தாரா. மெதுவாக கீழே அவளை மற்ற குழந்தைகளிடம் படுக்க வைத்து விட்டு, தனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

 அன்று மாலை சத்யாவைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வருவதாக இருந்ததால் அனைவருக்கும் வேலைகள் இருந்தன. பையன் விளாத்திகுளத்தில் பலசரக்கு கடை வைத்திருக்கிறானாம். சத்யா பெரிதாய் ஒன்றும் ஆர்வம காட்ட வில்லை. மதியம் விடுமுறை எடுத்து வருவதாக சொல்லி அலுவலகத்திற்குக் கிளம்பிச் சென்றாள். சுமித்ராவுக்கு அதில் மிகக் கோவம். 

“அம்மா பேசாம இரு. அவளுக்கு இந்த வரன் வரதே அவளோட வேலையைக்  காரணமா வச்சுத் தான். இந்தப் பத்து வருஷத்துல எவ்வளவோ பேர் அவளைப் பார்த்துட்டுப் போயிருக்காங்க. ஒவ்வொரு தடவையும் யாராவது பெண் பார்க்க வந்தா  நீ குதிக்குற குதியும். இந்த தடவையாவது மாப்பிள்ளை அமையனும்னு சொல்லி தெய்வத்துக்கு வேண்டுதல் வைக்கிறதும். வரன் தகையலேன்னா அதிர்ஷ்டகட்டையா பிறந்த சத்யாவைப் பார்த்து புலம்பி அழறதும். தாங்க முடியல. சீரியல் பாக்குற மாதிரி இருக்கு. இதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுக்கோ. இந்த வரன் வேற என் வீட்டுக்காரருக்குத் தூரத்து சொந்தம். அதுனால நல்லா விசாரிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்” தாயிடம் எச்சரித்தார் சுதா. 

“ஆமாம்மா சுதா சொல்லுறது சரிதான். நாதனோட சொந்தக்காரங்கன்னா கொஞ்சம் ஜாக்கிரதையாத் தான் இருக்கணும். நீ எங்கயிருந்துதான் இந்த மாதிரி வரனைப்  பாக்கிறியோ” கடு கடுத்தாள் சங்கீதா.

“ நான் எங்கடி பார்த்தேன். சுதா  வீட்டுக்காரர் தான் அரவிந்த் கல்யாணம் பேசனும்னு வந்தப்ப இந்த மாதிரி வரனப் பத்தி சொல்லி, பொண்ணு பார்க்க வர சொல்லிட்டதா சொன்னார். உங்கப்பா இல்லாததால நான் நல்ல காரியத்தை ஆரம்பிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார். அதுனாலதான் அவரே மாப்பிள்ளை வீட்டுல பேசி வர சொல்லிட்டாராம்”

பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த சித்தாராவுக்கு சமையலறைப் பேச்சுக்கள் காதில் விழுந்தது. ‘இந்த மாதிரி சொத்தைக் காரணம் சொல்லித்தான் நாதன்  நம்ம வீட்டுலயும் வந்து தானே பேசி இருப்பாரோ? இவங்களாவது கேட்டு இருக்கலாம்ல போய் பேசுறது சித்தாரா பாட்டி கிட்டத்தான, அவங்களும் என்னை மாதிரி தானே அவங்க கிட்ட மட்டும் நல்லா காரியம் பேசுறது எப்படி சரி வரும்னு’ நினைத்துக் கொண்டே பாத்திரம் விளக்கி முடித்தாள்.

“சித்தாரா உனக்கு காபி வச்சிருக்கேன் எடுத்துக்கோம்மா” என்று சொல்லி அடுப்படி மேடை மேல் வைத்தார் சுமித்ரா. 

“சரித்த” என்று சொல்லிக் கையைத் துடைத்து விட்டு வந்தாள். 

சித்தாராவுக்கு சுமித்ராவிடம் பிடிக்காத விஷயங்கள் இருந்தன. சுமித்ராவுக்கு ஒரு நினைப்பு, உழைத்து சம்பாதிக்கும் வீட்டு ஆண்களுக்குத் தான்  முதல்  டிகாஷன் போட்டு காபி தருவார். பெண்களுக்கு அதே  தூளில் இறங்கும் இரண்டாவது டிகாஷன்  காபிதான். சிதாராவுக்கு மட்டுமல்ல இதைத்தான் அவரது பெண்களுக்கும் தருவார். அதுவும் காலி என்றால்  அவர் தனக்கு மூன்றாவது டிகாஷன் எடுத்துத் தண்ணிக் காபி போட்டுக் கொள்வார். இதுக்கு இவங்க சுடுதண்ணியே குடிக்கலாம் என்று சிதாராவுக்குத் தோன்றும்.

 சாப்பிடும் போது பரிமாறுவதும் அப்படியே. ஆண்களுக்கு சூடான நெய் தோசை, தேங்காய் சட்னி. பெண்களுக்கு மொத்தமாய் ஊத்தப்பம், மிளகாய் சட்னி. சாதத்திற்கு இரண்டு கரண்டி பொறியல் ஆண்களுக்கு. பெண்களுக்கு மிச்சம் இருந்தால் கால் கரண்டி பொறியல், முதல் நாள் மிஞ்சிய  குழம்பு, கொத்தவரை வத்தல், மோர் மிளகாய், உப்பில் போட்ட ஊறுகாய், ரசம் இப்படி. இந்தக் கல்யாணம் முடிவாவதற்கு முன்பே இதனை அவள் கவனித்திருக்கிறாள். இந்த பாரபட்சத்தாலே அவர்கள் வீடு கொஞ்சம் அலர்ஜி அவளுக்கு. 

வஹிதாவிடம் இதனைப் பல முறை  சொல்லி இருக்கிறாள். 

“ ஏன்கா அவங்க வீட்டுல ஆம்பிள்ளைங்களுக்கு மட்டும் தான் நாக்கு இருக்கா? பொண்ணுங்களுக்கு வயிறு மட்டும் தான் இருக்கா? எதையோ போட்டு அடைக்குறாங்க. இந்தம்மாவோட பையன் மட்டும் எப்படி இருப்பான்? அவன் பொண்டாட்டிய இப்படித்தான் கொடுமை பண்ணி இருப்பான்னு நினைக்குறேன். அதுதான் அந்தப் பொண்ணு சீக்கிரமா போய் சேர்ந்துடுச்சு”

“ஏண்டி டென்ஷன் ஆகுற? அந்தம்மா கிராமத்துகாரங்க. இப்படித்தான் நடந்துப்பாங்க. இது தப்புன்னு கூட அவங்க மூளைக்கு உரைக்காது”

“ என்ன உரைக்காது? நான் மட்டும் இந்த அம்மாவோட மருமகளா இருந்திருந்தேன் இந்தம்மா பையனுக்கு இந்தக் கழனித் தண்ணி காபியும், ரசம் சாதம், தாளிக்காத ஊறுகாய் போட்டு குடும்பத்துக்கே உரைக்க வச்சிருப்பேன் ” 

அவள் அப்போது பேசியது நினைவுக்கு வர மெலிதான புன்னகையுடன் காபியை எடுத்துக் கொண்டாள். காலை வேளையில் ஏதோ சூடான பானம். அவ்வளவுதான். 

“அம்மா நான் மார்கெட் போயிட்டு வந்திடுறேன்” சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தான் அவளது நினைவுகளின்  நாயகன். 

“ஏன்டா நீ அலையுற? சுதா வீட்டுக்காரர் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பஸ் ஸ்டான்ட்ல இருந்து கூட்டிட்டு வந்து ரூமுல தங்க வச்சுட்டு பத்து மணிக்கு வந்துடுறதா சொல்லி இருக்கார். அப்பறம் போய் தேவையானதை வாங்கிக்குறாராம்”

“அம்மா அவரக் கடைக்கு அனுப்பினா பூ பழம் வாங்கினேன்னு சொல்லி பத்தாயிரம்  இருவதாயிரம் வாங்கிட்டு போயிடுவார். என் பேங்க் பாலன்ஸ் தாங்காது. அதுனால அவர் வீட்டுக்கு வரதுக்குள்ள நான் மின்னல் வேகத்துல போய் வாங்கிட்டு வந்துடுறேன். எதுத்த வீட்டு நபீஸ் கிட்ட பைக் வாங்கி வச்சுட்டேன்” என்றவன் மெதுவாகத் திரும்பி சமையல் அறையில் இருந்த சித்தாராவைப் பார்த்து புன்னகைத்தான். 

அவளது கையில் இருந்த காபி கிளாசை பட்டென வாங்கியவன் “அம்மா என் காப்பிய சித்துவுக்குக் கொடுத்துடு. நான் அவளோட காப்பிய எடுத்துக்குறேன் ” என்று சொல்லியபடி சிதாராவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே பருக ஆரம்பித்தான். 

“அது எச்சில்” என்று சொல்ல வந்தவள் அவன் பருக ஆரம்பித்து விட்டதைப் பார்த்து அனைவரின் முன்பும் சொல்ல முடியாது தயங்கி  நின்றாள். 

சமையல் அறையில் இருந்த மற்ற பெண்களுக்கும் சற்று திகைப்பு பின்னர் அவர்கள் முகம் மலர்ந்து விட்டது. வேறு வேலைகள் செய்வது போல் குனிந்து சிரித்துக் கொண்டனர். 

“என்னம்மா இது, காபித்தூள் பழசா? நல்லாவே இல்ல” முகத்தை சுளித்தான் அரவிந்த். இருந்தாலும் காபி குடிப்பதை நிறுத்தவில்லை.

தன் மனைவியுடன் நெருக்கமாக இல்லையே என்று கவலைப் பட்ட தாய்க்கு ஆறுதல் தரும் விதமாகத் தான் சித்தாராவின் கிளாசை பிடிங்கி அவன் பருகியது. அவனது தாய் மட்டுமின்றி அவனது சகோதரிகளும் அவன் அவளை ஏற்றுக் கொண்டதைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தான். அது பலித்து விட்டது அவனுக்கு சந்தோஷம். ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக சித்தாரவிடம் சிறிது நெருங்குவதற்கு அடி வைத்தார்போலவும் ஆகி விட்டது. தனியாக இருக்கும் போது இந்த ராட்ஷசி அவனைப் பக்கத்தில் வர விட்டிருப்பாளா? கை காலை உடைத்திருப்பாள். இப்போது எல்லாரும் அருகில் இருக்கும் தைரியத்தில் பக்கத்தில் வந்து அவள் குடித்த எச்சில் கிளாசைப் பிடுங்கிக் குடிக்கிறேன். என்ன செய்கிறாள் என்று பார்ப்போம்? கையைப் பிசைந்தபடி அவள் நின்றிருந்ததைப் பார்த்தபடி பருகினான்.  அவன் மனது சிலு சிலுவென இருந்தது.

 சித்தாரா காபி சுமார்தான் என்று சொன்ன போது அவள் கேலி செய்வதாகவே நினைத்திருந்தான். நிஜமாகவே சூடான சக்கரைத் தண்ணி போலத்தான் அவனுக்குத் தெரிந்தது. என்ன அவள் குடித்தது வேறு இன்னும் கொஞ்சம் இனிப்பு சுவையை அதிகப் படுத்தி விட்டாற்போல் தெரிந்தது. இவள் சொல்வதை இனிமேல் விளையாட்டு என சொல்லி அலட்சியப் படுத்தக் கூடாது என்று முடிவு கட்டிக் கொண்டான்.

சுதாரித்துக் கொண்ட சுமித்ரா சொன்னார் “இல்லடா இது ரெண்டாவது டிகாஷன், நாங்க குடிக்குறதுக்கு போட்டது. உனக்கு முதல் டிகாஷன்ல போட்டுத் தரேன்”

இதை அரவிந்த் இதுவரை கவனித்தது இல்லை. அவனது வீட்டில் ஆண்கள் சமையலறைக்குள் நுழைவதே அதிசயம். கூடத்தில் ஆண்களுக்கு உணவு பரிமாரியபின் பெண்கள் அனைவரும் பேசிக் கொண்டே சமையலறையில் அமர்ந்து உணவு அருந்துவார்கள். பின்னர் அவனது வீட்டுப் பெண்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று  அவனுக்கு எப்படித் தெரியும்? 

“ ஏன் உங்களுக்கு மட்டும் ரெண்டாவது டிகாஷன்? நீங்க காபி குடிக்குறதுல கூட கஞ்சத்தனம் பண்ணுற அளவுக்கு நம்ம நிலமை இன்னும் மோசம் இல்லம்மா. இனிமே நான் யாரோட காப்பிய வேணும்னாலும் வாங்கிக் குடிப்பேன். எல்லாருக்கும் ஒரே மாதிரி போடுங்க”.

அறையில் இருந்த சுதா “போதும்டா,  இனிமே உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஒரே மாதிரி செய்யுறோம். முப்பது வருஷத்துக்கு மேல இதே மாதிரி காப்பித்தான் குடிச்சிட்டு இருக்கோம். ஒரு நாள் நாங்க என்ன சாப்பிடுறோம்னு வந்து பார்திருப்பியா?” சந்தோஷமாக அலுத்துக் கொண்டாள்.

“சாரி சுதாக்கா இதுவரை கவனிக்காதது என்னோட தப்புத்தான். இனிமே உங்க எல்லார் கூடயும் உட்கார்ந்துதான் நான் சாப்பிடப் போறேன். அம்மா இனிமே எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் சாப்பாடு  இருக்கணும். இப்ப கடைக்கு போயிட்டு வரேன்” என்று சொல்லிக் கிளம்பினான். தான் சித்தாராவின் மனக் கதவை முதல் முதலாய் தட்டி விட்டதைத் தெரியாமல். 

அரவிந்திற்கு அது தெரியாதது கூட தப்பில்லை. நம் சித்துவும் இதனை உணராமல் ‘இவனுக்கு என்ன தைரியம் இருந்தா என் காப்பியப்  புடுங்கிக் குடிப்பான்’ என்று பொருமினாள்.

அவளது மனம் “ அடங்கு சித்து, நீ அவனோட அம்மா போட்ட காபி நல்லா இல்லன்னு சொன்னது உண்மையா பொய்யான்னு செக் பண்ணுறதுக்காக உன் டம்ளரப் பிடுங்கி குடிச்சிருக்கான். உன்னை சீண்டி விடுற அளவுக்கு தைரியம் எல்லாம் அவனுக்குக் கிடையாது. நீ தப்பா நினைக்காதே” என்று அவனுக்குப் பரிந்து வாதாடியது. 

மனது சொன்னதை அங்கீகரித்தபடியே ஸ்ராவனிக்கு பூஸ்ட் கலக்கத் தொடங்கினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16

அன்று லாஸ் ஏன்ஜல்ஸ் ஜிஷ்ணுவுக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை. அவன் தாய் ஜெயசுதா ஆதாயமில்லாமல் ஒரு காரியமும் செய்ய மாட்டார். இவன் அமெரிக்காவை விட்டுச் செல்ல மனமில்லாமல் வருடக்கணக்காய் படிக்கிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் பணம் அனுப்புகிறார்கள்.

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’

அத்தியாயம் – 13   ப்ரித்வியின் பக்கத்து வீட்டில் கர்ஜீவன், அவர் மனைவி மித்தாலி, குழந்தைகளில் பெண்கள் நான்கும், ஆண்கள் இரண்டுமாய் பெரிய குடும்பம். அனைவரும் வஞ்சகமில்லா மனதோடும் உடம்போடுமிருந்தனர். கர்ஜீவன் வீட்டில் தீதி தீதி என காலையே சுற்றி வந்த

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 2

அத்தியாயம் – 2 அன்று வேலை நெட்டி முறித்தது. சரயு ஜெர்மனியில் இருக்கும் மியூனிக்கின் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றில் டிசைனிங் பிரிவில் பணியாற்றினாள். அவர்கள் அணி வடிவமைத்த பகுதியைப் பற்றிய இறுதி அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் ஒப்புவிக்க வேண்டும், அதனால்