Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Ongoing Stories,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 8

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 8

அது ஒரு பொன் மாலைப் பொழுது. இரவு உடை அணியும் முன் வான மகளின் முகம் நாணத்தால் சிவந்தது. காலையில் திருமணம் . கனவில் மிதக்காமல் அரவிந்த் யோசனையில்  இருந்தான். அவனுக்கு இன்று மிகப் பெரிய கவலை. திருமணம் செய்ய சம்மதித்ததை விட ஒரு கடினமான காரியம் அவன் கண் முன்னே தோன்றி அச்சுறுத்தியது. இது தள்ளிப் போட முடியாத விஷயம். ஸ்ராவநியிடம் தங்களது வீட்டிற்கு வரவிருக்கும் புது வரவைப் பற்றி அறிவிப்பது தான் அது. 

மூன்று வயது குழந்தைக்கு அதை எப்படி எடுத்து சொல்வது? அவளுக்கு அது எவ்வளவு தூரம் புரியும்? இப்போது சரி. விவரம் தெரியும் பருவத்தில், பெண்கள் எல்லாரும் ஒற்றை ஆளாய் மனோ திடத்துடன் குழந்தையை வளர்க்கும் இந்த உலகில், அப்பா தனது குடும்ப வாழ்க்கையே குறிக்கோளாய் மறுமணம் செய்து கொண்டார் என்று அவனது மகள் அவனைப் பற்றிக் கேவலமாய் நினைத்து விட்டால் அவன் உயிரையே விட்டு விடுவான். 

இந்த மாதிரி இக்கட்டான  நிலையில் தன்னைத் தள்ளி விட்ட உறவினர்களின் மேல் ஆத்திரம் வந்தது. அவர்களுக்கென்ன இந்தத் திருமணம் அவர்களைப் பொருத்தவரை ஒரு கடமை, ஒரு சாதனை. ஆனால் இதில் வரும் வருத்தத்தையும் சங்கடத்தையும் தான் தானே அனுபவிக்க வேண்டும். 

வீட்டு வாசலில் நாதனின் சத்தம் கேட்டது. “சுதா, ஏய் சுதா கொஞ்சம் காபி கொண்டு வாடி. சூடா இருக்கட்டும். புது டிகாஷனா இருக்கட்டும். உங்க வீட்டு ஆளுங்க மாதிரி கழனித் தண்ணி காபி என்னால குடிக்க முடியாது. அப்பாடா,  இந்த வீட்டு வேலையெல்லாம் ஒத்த ஆளா செஞ்சு தலைவலி மண்டையப் பிளக்குது”

கழனித் தண்ணி என்று சொல்லியது உரைக்க, திண்ணையில் அமர்ந்திருந்த சத்யா துடுக்காக “ ஏன் ஒத்த ஆளா கஷ்டப்படனும்? வீட்டுல ஆளுங்களுக்கா பஞ்சம்? ஆளுக்கு ஒரு வேலையா பிரிச்சு செய்ய வேண்டியதுதானே”

எரிச்சலானார் நாதன். ‘யாரை யார் கேள்வி கேட்பது? வேலைக்கு போக ஆரம்பித்ததும் இந்த சத்யாவுக்கு வாய் வளர்ந்து விட்டது. நில்லு உன் வாயே திறக்க முடியாதபடி செய்கிறேன்’. 

மனதுக்குள் கருவிக் கொண்டவர் கிண்டலாக “யார நம்பி வேலையத் தர சொல்லுற. குடிச்சிட்டு நிதானமில்லாம ரோட்டுல நொண்டிகிட்டு வர்ற ஆளுகிட்டயா?” அழுத்தி சொன்னார். 

சத்யாவுக்கு அவரது குத்திக் காட்டல் புரியாமல் இருந்தால்தான் அதிசயம். “அப்படி என்ன வேலை செஞ்சீங்க? சாப்பாடு சொல்லியாச்சு. துணி மணி உங்களுக்கும் சேர்த்து வாங்கியாச்சு. ஏதோ மச்சினன் முறைல நிக்குறேன்னு சொல்லிட்டு இருந்திங்க அதையும்  உங்களுக்கு வீண் சிரமம்னு எதுக்கு வேண்டாம்னு சொல்லியாச்சு. காலைல கோவிலுக்குக் கிளம்பி போயிட்டு வர்றதுக்கு வேன் முதற்கொண்டு ஏற்பாடு பண்ணியாச்சு. இதைத் தவிர வேற என்ன வேலை மண்டையப் பிளக்குற அளவுக்கு”

“இது மட்டும் போதுமா? பூ புஷ்பம் எல்லாம் யாரு வாங்குறது? அய்யர சரியான நேரத்துக்கு வர சொல்லி நியாபகப் படுத்திட்டு, பையனுக்கு இது இரண்டாந்தாரமாச்சே, பொண்ணுக்கும் இது கிட்டத்தட்ட ரெண்டாவது மாதிரி தான் அதுனால  வேற என்ன சாங்கியம் செய்யணும்னு விவரம் கேட்கணும், ஹோடெல்ல போய் மறுபடியும் சாப்பாடு மெனு சரி பார்த்துட்டு சரியான நேரத்துக்கு  வர சொல்லணும். தட்டு வைக்குறதுக்கு  மார்கெட்ல பழம், கல்கண்டு, வெத்தலை பாக்கு இத்யாதி எல்லாம் பார்த்து பார்த்து வாங்கிட்டு வரணும். இந்த வேலையெல்லாம் மூத்த மாப்பிள்ளை இந்த இளிச்சவாய் செய்வான்னு ஏன் தலைல கட்டிட்டு உங்க அப்பா நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு. 

சத்யா ‘எங்கப்பாவ ஏன் இதுல இழுக்குறிங்க? உன்ன பேச்சு தாங்க முடியாமத்தான் எங்க அப்பா சீக்கிரமே போய் சேர்ந்துட்டார். நீங்க மட்டும் எங்க வீட்டுக்கு வராம இருந்திருந்தா  இன்னும் பத்து வருஷமாவது கூடுதலா உயிரோட இருந்திருப்பார்’ என்று சொல்ல வாய் திறந்தாள்.அதற்குள்  வேகமாக காபியுடன் வந்த  சுமித்ரா தொண்டையைக் கனைத்து அவளை அடக்கினார்.

 “மாப்பிள்ளை இந்தாங்க காபி. சுதா சீர் தட்டுல பழத்தை எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கா. பழம், கல்கண்டு, பூ  எல்லாம் நிறைவா வாங்கிட்டு வந்திருக்கிங்க. ரொம்ப நன்றி மாப்பிள்ளை நீங்க இல்லாட்டி திணறி போயிருப்போம்”  கொஞ்சம் புகழ்ந்து அவரை தற்காலிகமாக அடக்கினார்.

பெருமையாக புன்னகைத்துக் கொண்ட நாதன் “ நீங்களாவது என்னோட அருமை புரிஞ்சுருக்கிங்களே, பழம் எல்லாம் நானே கோயம்பேடு போய் தரம் பார்த்து வாங்கிட்டு வந்தேன். நாளைக்கு தட்டைப் பார்த்து எல்லாரும் அசந்து போகணும். யார் இந்த அளவு நிறைவா செஞ்சதுன்னு ஏன் சொந்தக்காரங்க  கண்டிப்பா கேட்க மாட்டாங்க. அவங்களுக்கு தெரியும் இந்த அளவு நேர்த்தியா செஞ்சா அது இந்த நாதனாத்தான் இருக்கும்னு. அப்பறம் தட்டுக்கு ஐநூறு ஆச்சு அதை நீங்க நாளைக்கு சாய்ந்தரத்துகுள்ளத்  தந்தா போதும்”

ஒற்றைக் காலில் நொண்டி அடித்தபடி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த கதிர்

 “ ஐநூறு தானே நான் இப்பவே தர்றேன்” என்றார். 

பின் திண்ணையில் இருந்த சத்யாவிடம் “சத்யா ஊக்கு இருந்தா தா. வரப்ப செருப்பு பிஞ்சுடுச்சு அதுனால தைக்க குடுத்துட்டு வெறும் காலுல நடந்து வந்தேன். கால்ல முள்ளு குத்திடுச்சு. எடுக்கணும்”

முள் குத்தி நொண்டி அடித்துக் கொண்டு வந்தவரை எப்படி வாயில் வந்ததெல்லாம் பேசினார் இந்த நாதன் என்று நாதனைப் பார்த்து சத்யா முறைக்க, நாதனோ அவளை சட்டை செய்யாமல் “ ஐநூறு நீ தரியா? இல்ல  வேண்டாம். நான் மொத்தமா அரவிந்த் கிட்டேயே  வாங்கிக்குறேன்” என்றார். 

“அரவிந்த்கிட்டத்தான் நம்ம ஏகப்பட்டது வாங்கிக்குறோமே. இந்த செலவு கல்யாணத்துக்கு நான் செஞ்சதா இருக்கட்டும். இந்தாங்க ஐநூறு ரூபா” என்றார் கதிர். அப்பாடா ஒரு தடவை நாதனைக் குத்தி காண்பிச்சுட்டோம் என்ற நிம்மதி அவருக்கு.

கதிர் கொடுத்த  ஐநூறு ரூபாயை வாங்காமல் நாதன் “என்ன ரூபாயா? நான் ஐநூறு பவுண்ட்டுல்ல சொன்னேன். எங்க வீட்டுல எல்லாரும் பாரினா, அதுனால இப்பெல்லாம் பவுண்ட் இல்ல டாலர்ல சொல்லியே பழகிடுச்சு. நான் அரவிந்த்கிட்டே வாங்கிக்குறேன்” என்று கூறி அனைவரையும்  திகைக்க வைத்தார். பின் உள்ளே சென்று விட்டார். 

நாதன் சென்ற திசையையே திகைப்போடு பார்த்த கதிர் “ சத்யா, ஐநூறு பவுண்டு, இன்னைய ரேட் ஒரு பவுண்ட் எண்பது ரூபாய். கிட்டத்தட்ட நாப்பதாயிரத்துக்கு அப்படி என்னதான் வாங்கிட்டு வந்தான்?” என்றார்.

கிண்டல்  சிரிப்புடன் சத்யா “பூவும், புஷ்பமும்” என்றாள்.

எங்கம்மா உனக்குதாண்டி மாமியாரு..!

நீ இல்லாங்காட்டி ஆயிடுவேன் சாமியாரு..!

நான் உம்மேல வச்சிருக்கேன் ஆசை நூறு..!

நாம கல்யாணம் பண்ணிகிட்டா ரொம்ப ஜோரு..!

நம்ம வாழ்க்கை ரொம்ப ஜோரு..!

தாளம் போட்டு பாடிக் கொண்டிருந்த இளைஞர்களின் நார்த் மெட்ராஸ் கானா பாட்டைக் கேட்டு ரசித்தபடியே கடற்கரையில் அமர்ந்திருந்தார் கதிர். அரவிந்த் ஸ்ராவநியையும் கதிரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். ஸ்ராவநியிடம் தனது திருமணத்தைப் பற்றி தன் வாயால் சொல்ல வேண்டும் என்று நினைத்தான். அவனுக்குத் துணையாக கதிர் வந்திருந்தார்.

மாலையில் நடந்த கலாட்டாவைப் பற்றி கதிரிடம் விசாரித்தான் அரவிந்த். “நீ பவுண்ட் கணக்கு போடுறியோ இல்லையோ நாதன் நல்லா போடுறான். கேட்டா நாங்க லண்டன்காரங்கன்னு பீத்திக்குறதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆமா அவன் தங்கச்சி வீடு உன் வீட்டு பக்கத்துலையா இருக்கு? நீ அவளப் போய் பார்த்தியா?”

“இல்ல மாமா. கொஞ்சம் தூரம் தான். ஆனா நான் இன்னும் போய் பார்க்கல.” என்றான் தயங்கியபடியே. 

“நல்லதுதான் தப்பித் தவறி கூட அவ இருக்குற பக்கம் போயிடாதே” என்றார். 

நாதனின் தங்கை செல்விக்கு அரவிந்த் மேல் ஒரு மயக்கம். அரவிந்த் காலேஜ் படிக்கும் சமயத்தில்  அவன் சுதாவைப் பார்க்க சென்றபோது அவனுக்கு இரண்டு மூன்று காதல் கடிதம் கூட தந்திருக்கிறாள். அரவிந்த் வேறு யாரிடமும் சொல்ல தயங்கி கதிரிடம் வந்து ஒப்பிக்க, அவர் நைசாக அதற்குப் பின் அரவிந்தை சுதா வீட்டுக்கு அனுப்பாமல் பார்த்துக் கொண்டார். கதிர், சுமித்ரா மூத்த மாப்பிள்ளைக்கு மரியாதை கொடுத்து  அரவிந்திற்கு செல்வியைத்  திருமணம் செய்து வைத்து விட்டால் என்ன செய்வது. அவ்வளவுதான் அவன் தலை எழுத்தே மாறி விடும் என்று எண்ணி அச்சப் பட்டார். அவர்கள் யாருக்கும் அந்த வேலையைத்  தராமல் ஒருநாள் அரவிந்த் சைலஜாவை திருமணம் செய்து கொண்டான் . இது செல்விக்கு பயங்கர அதிர்ச்சி. 

அரவிந்த் தன்னை ஏற்கனவே காதலித்தான் என்று புரளி கிளப்பலாம்  என்று பார்த்தால் அவன் அவள் லவ் லெட்டர் கொடுத்தவுடன் பயந்துக் கொண்டு தன் அக்காவைப் பார்க்க வருவதைக் கூட நிறுத்தி விட்டான். இதில் அவளது அண்ணன் நாதன் வேறு அவர்களது வீட்டை விற்ற பணத்தில் பங்கு வாங்கிக் கொண்டு மாமியார் வீட்டுடன் பேச்சு வார்த்தையை வழக்கம் போல் நிறுத்தி விட்டிருந்தார். படித்து விட்டு திருச்சியில் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கும்  இருவத்தி மூன்று வயதே ஆன அரவிந்த் எங்கே போய் விடப் போகிறான் எப்படியும் தன் அண்ணன் தனது வாய் சவடலால் தனக்கு அவனைத் தாலி  கட்ட வைத்து விடுவான் என்று சற்று கவனக் குறைவாக இருந்து விட்டாள் செல்வி. அரவிந்த் என்னடாவென்றால்  தனது அக்கா தங்கைகள் பற்றி பொறுப்பே இல்லாமல் யாரோ ஒருத்தியை இழுத்துக் கொண்டு வந்து நிற்கிறான். 

பின்னர் சைலஜா மறைவு பற்றி சுதா மூலமாகத் தெரிய வந்த பின்பும் அவள் அரவிந்தை விடவில்லை. இந்த முறை அவன் தன்னை மணந்து கொள்ளாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள். அரவிந்த் மறுத்து விட்டான். தனது குணத்தில் அண்ணனை க்ளோன் செய்தது போல் இருக்கும் அவளை மணக்க அரவிந்தின் வீட்டில் யாருக்கும் விருப்பம் இல்லாததால் அவனை மேலும் வற்புறுத்தவில்லை. 

அரவிந்தின் குடும்பத்தின் இந்த மறுப்புக்கு நாதன் வைத்த அபராதம் தான் அதிகம். ஒன்று அரவிந்த் ஸ்ராவணியை சுமித்ராவிடம் வளர்க்க விட்டுவிட்டு தன் தங்கை செல்வியை மணக்க வேண்டும் இல்லை என்றால் இப்போது செல்விக்கு தான் பார்த்திருக்கும் லண்டன் மாபிள்ளைக்கு மணம் முடித்துத் தரும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். இவை நடக்காவிட்டால் தனது மனைவி சுதா தன் அம்மா வீட்டோடு இருந்து கொள்ள வேண்டியதுதான். 

இதைக் கேட்டு திகைத்து போனவர்களிடம், ஸ்ராவநியைத் தன்னால் கண்டிப்பாக பிரிய முடியாது, இன்னொரு நாதனின் வரவை தங்களால்  தாங்க முடியாது என்று தேற்றி, அதனால் அந்தக் கல்யாண செலவில் பாதி ஏற்றுக் கொள்வதாக சொல்லி ஆறு லட்சம் கடன் வாங்கி பணம் அனுப்பினான் அரவிந்த். இதெல்லாம் நினைவுக்கு வந்தது கதிருக்கு. 

கதிரிடம் விவரம் கேட்டான் அரவிந்த் “அது என்ன மாமா மச்சினன் முறை?”

சிரித்த கதிர் “இந்த நாதன் செஞ்ச வேலைதான். அந்த பொண்ணு சித்தாரவுக்கு பாட்டி மட்டும் தான, அதுனால பெரிய மனசு பண்ணி  தான் சிதாரவுக்கு அண்ணன் முறையா இருக்குறதாவும், நாம செய்ய வேண்டிய மச்சினன் மோதிரம் முறைய தானே எதுக்குறதாவும் உதார் விட்டுட்டு இருந்தான். இவனுக்கு பயந்துட்டு உங்க அம்மாவும் அவங்க வீட்டுல சொன்னாங்க. 

அதுக்கு அவ அவளுக்கு சின்ன வயசுல இருந்து அண்ணன்னா  எதிர் வீட்டு நபீஸ் தான். வேணும்னா அவர் அவளுக்கு செய்ய வேண்டிய முறை செயவார்னு சொன்னா. அதுக்கு நாதன் சம்மதிக்கல.  சித்தாரா உடனே பெரிய மனசு பண்ணி என்னைய தங்கையா ஏத்துகிட்டு நீங்க சிரமப் பட வேண்டாம். வெறும் வாயளவுல இருக்குற உறவு ஒட்டாது. மனசுல தங்கை நல்லா இருக்கணும்னு நினைக்குற அண்ணனா எனக்கு நபீஸாத்தான் இருக்க முடியும். அதுனால அந்த மாதிரி சாங்கியம் எல்லாம் வேண்டாம்னு பட்டுன்னு  சொல்லிட்டா. அவனுக்கு முகத்துல கரி பூசின மாதிரி ஆயிடுச்சு”

அரவிந்திர்க்கு சிரிப்பு. “மூஞ்சில அடிச்ச மாதிரி நேர்லயே சொல்லிட்டாளா?”

கதிர் அவனது சிரிப்பில் கலந்துக் கொண்டார் “ஏன்டா, உன் மனைவியா வரப்போறவ  உங்க வீட்டு மாப்பிள்ளை மூஞ்சில அடிக்குற மாதிரி பேசினா உனக்கு சந்தோஷமா?”

“ ச்சே அப்படி இல்ல மாமா. நாம செய்ய முடியாததை மத்தவங்க செய்ய முடிஞ்சா வர்ற அல்ப சந்தோஷம் தான். சித்தாரா மட்டுமில்ல வேற யார் இதை செஞ்சிருந்தாலும் நான் சந்தோஷப் பட்டிருப்பேன்.  நாதன் மாமா முதன் முறையா நம்ம குடும்பத்துல இருந்து ஒரு மறுப்பை பார்த்திருக்கார். ஆனா இதை மனசுல வச்சுட்டு சிதாராவை பழிவாங்காம இருக்கணும்” 

அவனுக்குத் தெரியவில்லை நாதன் மறுப்பை சுலபமாக ஏற்றுக் கொள்கிறவர் இல்லை. பழி வாங்குவதற்கான  ஏற்பாடுகளை ஸ்ராவனியின் மூலம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டார் என்று. 

மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த ஸ்ராவணியை அருகே அழைத்தவன், யோசித்து யோசித்து பேசினான் “ ஸ்ராவணி குட்டி. நம்ம வீட்டுக்கு ஒரு புது கெஸ்ட் வராங்க….. அவங்க இனிமே நம்ம கூட ரூம் ஷேர் பண்ணிப்பாங்க. நீயும் நானும் பார்க் போனா, மால் போனா, டிஸ்னி கார்ட்டூன் பார்த்தா, அப்பறம்  உன் பிரெண்ட்ஸ் பெர்த்டே பார்ட்டி இந்த மாதிரி நீயும் நானும் எங்க போனாலும் நம்ம கூட வருவாங்க. அவங்க பேர்….”

“சித்தாரா….” என்று சொல்லி அரவிந்தையும் கதிரையும் திகைக்க வைத்தாள் ஸ்ராவணி.

“அவங்க தான் என் சித்தியாம். அவங்க ஸின்டிரல்லா மாதிரி என்னை வீட்டு வேலை செய்ய வைப்பாங்களாம். நான் வேலை செய்யலேன்னா சூடு போடுவாங்களாம். அந்த ஸ்டெப் மதர் என்னை ஸ்நோபால்ல வீட்டை விட்டு விரட்டி விட்டுடுவாங்களாம்.  அப்பறம் சாப்பாடு போட மாட்டாங்ககளாம். அப்பறம் நான் ஒவ்வொரு காரா தட்டித்  தட்டி பிச்சை எடுக்கணுமாம்” 

அவள் சொல்ல சொல்ல அரவிந்தின் முகம் கோவத்தில் சிவக்க ஆரம்பித்தது. கண்கள் நெருப்புத் துண்டங்களாய் எரிந்தன. அவளது வாயைப் பொத்தியவன் “சொல்லாதம்மா, அப்படி எதுவும் சொல்லாத. நமக்கு யாரும் வேண்டாம். இப்பயே ஊருக்குக் கிளம்பலாம். எப்போதுமே நம்ம ரெண்டு பேர் மட்டும் இருக்கலாம். எனக்கு நீ, உனக்கு நான். வேற யாரும் வேண்டாம்….” சொல்லி முடிப்பதற்குள் உடைந்து போய் அவனது கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது. 

அமைதியான ஸ்ராவனியின் பேச்சைக் கேட்டு திகைத்து உட்கார்ந்திருந்த கதிர் இப்போது பேசினார் “ஸ்ரவனி குட்டி இப்படி எல்லாம் உன்கிட்ட சொன்னது  யாரும்மா?”

“ஆதி சொன்னான்.எனக்கு பிஸ்கட் தந்துட்டு, இனிமே சின்னம்மா கிட்ட நீ  பிஸ்கட்டுக்கு பிச்சை தான் எடுக்கணும்னு நாதன் மாமாவும் சொன்னார்.”

கடுப்பானார் கதிர் “ ஆதித்யா சொன்னானா? ஓ….  அப்பனும் மகனும் சொன்னாங்களா? விதை ஒண்ணு போட்டா சுரை ஒண்ணா முளைக்கும். ஏண்டா அரவிந்த் பிள்ளையாவது உங்க அக்காளைக் கொண்டு பிறந்திருக்கக் கூடாது? சுதா அப்படியே அந்த நாதனோட குணத்துல பிள்ளை பெத்து வச்சுருக்கா. எப்படி சின்ன குழந்தை மனசுல விஷத்தைக் கலந்திருக்கான் பாரு இந்த நாதன்” கோவமாகப் பேசியவர் ஸ்ராவாணியின் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்து நிறுத்தினார். 

கனிவாக குரலை மாற்றிக் கொண்டவர் ஸ்ராவநியிடம் 

“கண்ணா சித்தாரா ரொம்ப நல்ல பொண்ணு. அவளுக்கு அம்மா அப்பா யாரும் இல்லை. பாட்டி மட்டும்தான். எதிர் வீட்டு ரியாஸ்  இருக்கான் இல்லையா அவனோட க்ளோஸ் பிரெண்ட். சித்தாரா  ஏதாவது சேட்டை பண்ணா அப்பா கிட்ட சொல்லு, மாமா உன்கூட பேசும்போது சொல்லு. நாங்க கண்டிக்குறோம். உனக்கு இந்த மாமாவப் பிடிக்கும் இல்லையா? உனக்கு அவள  பிடிக்கலேன்னா நான் திருச்சில என் வீட்டுக்குக்  கூட்டிட்டு போய்டுவேன். அங்க சங்கீதா அத்தை, ஹர்ஷா அத்தான், ப்ரியா அத்தாச்சி எல்லாரும் இருக்கோம். நம்ம எல்லாரும் ஜாலியா  இருக்கலாம்” 

ஸ்ராவணியை சமாதானப் படுத்துவது போல் அரவிந்திற்கு பிரச்சனையாய் இருந்தால் பெண்ணை தன்னிடம் விட்டு விடுமாறு சூசகமாக சொன்னார். 

இதற்குள் ஒரு தெளிவிற்கு வந்திருந்தான் அரவிந்த்.

“ஸ்ராவணி இப்ப வீட்டுக்கு வர்றது சித்தி இல்லடா உன்னோட அம்மா. அவங்களுக்கு நம்ம கூட அட்ஜஸ்ட் பண்ணிக்க கொஞ்ச நாள் ஆகும். அதுவரை டைம் தரலாம். நாமளும் அவங்ககிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா ஒண்ணு மட்டும் உன் கிட்ட நான் ப்ராமிஸ் பண்ணுறேன். உன்னோட அம்மா மட்டும்தான் நம்ம கூட வாழ முடியும். வர்றது சித்தியா இருந்தா அவ நம்ம வீட்ட விட்டு வெளியே போய்ட வேண்டியதுதான்” தனது பொண்ணுக்குத் தெளிவாக ஆனால் உறுதியாக சொன்னான். 

சிறு குழந்தை என்று அவளை புறக்கணித்து விடாமல், அவளை சமாதானப் படுத்திய விதம் அவருக்குப் பிடித்திருந்தது. அவர் நினைத்திருந்ததை விட அரவிந்த் பக்குவப்பட்டு விட்டான்.  முப்பது வயதுக்குள் அரவிந்த் சந்தித்த சோதனைகளையும் அது அவனுக்குத் தந்திருக்கும் பக்குவத்தையும் பார்த்து ஒரு பிரமிப்பு அவருக்கு வந்தது. 

ஒன்று மட்டும் நிச்சயமாக கதிருக்குப் புரிந்தது. அரவிந்த் ஆயிரம் பூட்டு வைத்து காற்று கூட புக முடியாமல் இறுக்கமாகப் பூட்டி இருக்கும் அவனது இதயத்திற்குள் சித்தாரா வர வேண்டுமென்றால் அதற்கு ஸ்ராவனியின் மேல் அவள் வைக்கும் அன்பு  என்ற ஒற்றை சாவியாலே மட்டும்தான் முடியும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 13

அத்தியாயம் – 13  அரவிந்த் பொன்னியின் செல்வன் கால்வாசி புத்தகத்தை படித்து முடித்த போது கிட்டத்தட்ட நள்ளிரவாகி விட்டது. ஒரே இடத்தில் அசையாமல் இருந்தது அவன் காலை மரத்து போக வைத்திருந்தது. அவன் மேல் இருந்த பிஞ்சுக் காலை எடுத்து ஒரு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 58

ஜெர்மனி சென்றதும் அவளை ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துவிட்டு ராம் வேலையில் சேர்ந்தான். நாட்கள் நகர்ந்தன. இயல்பாகவே சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ளும் சரயு புதிய இடத்தில் பழகிக் கொண்டாள். கவலையை மறக்க உழைப்பை அதிகப்படுத்து என்பது அவளது வழக்கமாய் இருந்ததால்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27

சில மாதங்களில் ஜிஷ்ணு அடைந்த உயரம் பிரமிப்பு தருவது. வங்கிக் கடனை மட்டும் நம்பி வியாபாரத்தை விரிவு படுத்தினான். “ஜிஷ்ணு, பேசாம உன் மாமனார் ஆரம்பிச்சுத் தர கம்ப்யூட்டர் கம்பனில போய் தினமும் உட்கார்ந்துட்டு வா. மக்கள் பர்கர், பீட்சான்னு சாப்பிடுற