Tamil Madhura குழந்தைகள் கதைகள் முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை

முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை

முன்னொரு காலத்தில் களியனூர் எனும் ஊரில் முருகன் என்ற கொல்லன் வாழ்ந்து வந்தான். கொல்லன் என்பவன் இரும்புப் பொருட்களில் வேலை செய்பவன். அந்த சமயங்களில் கார், பஸ் போன்ற வாகனங்கள் இல்லாததால் குதிரை வண்டி, மாட்டு வண்டி ஆகியவற்றையே மக்கள் பயணம் செய்யப் பயன்படுத்தினார்கள். அந்தக் குதிரைகள் நீண்ட தூரம் பயணம் செய்வதால் அவற்றின் குளம்பு சீக்கிரம் தேய்ந்து கால் நடக்க முடியாது போய்விடும். எனவே நாம் இப்போது காலணி அணிந்திருப்பது போல இரும்பினால் u வடிவத்தில் கால் குளம்பில்ஆணிகள் அடித்துப் பொருத்தி விடுவர். அத்தகைய இரும்பு ஆணிகள், லாடம், கத்தி, அரிவாள் மற்றும் விவசாயப் பொருட்கள், வண்டி ஓட்ட தேவையான உலோகப் பாகங்கள் இவற்றை எல்லாம் செய்வதுதான் கொல்லர்களின் வேலை. சுருக்கமாக சொன்னால் பண்டைய மெக்கானிக்கல் இஞ்சினியர்கள்.

முருகன் இது போல பல தரமான பொருட்களை வடிவமைத்து,  மக்களுக்கு உபயோகத்திற்கென கொடுத்து அவர்கள் வேலையை எளிமையாக்கி  நாட்டில் நன்மதிப்பைப் பெற்ற சிறந்த கொல்லனாய் இருந்தான். அவனது புகழைக் கேள்விப் பட்ட மன்னர் ஒரு நாள் அவனை சந்திக்க வேண்டுமென கூப்பிட்டு அனுப்பினார்.

அந்நாட்டின் மன்னர் மிகவும் நல்லவர் ஆனால் ஆராய்ந்து பாராது கட்டளையிட்டுவிடுவார். அவரது ஆணைக்குக் கட்டுப்பட மறுப்பவர்களுக்குக் கடுமையான தண்டனையும் வழங்குவார். அதனால் மக்கள் அனைவருக்கும் அவரைக் கண்டாலே பயம்.

அவரைப் பற்றி முழுதும் அறியாத முருகனோ மன்னர் தன்னை அழைத்ததை எண்ணி சந்தோஷத்துடன் அரண்மனைக்கு பயணப்பட்டான். தலைநகரில் நுழைந்ததும் அங்கிருந்த மாட மாளிகைகளையும், கோபுரங்களையும் கண்டு அதிசயத்தான். அரசவையின் அலங்காரங்களும், ஆடம்பரங்களும் கண்டு பிரமித்து நின்றவனை காவலாளிகள் மன்னன் முன்பு கொண்டு சென்று நிறுந்த்தினர்.

முருகன் சொன்ன வணக்கத்தை ஏற்றுக் கொண்ட மன்னர் அவன் செய்ய வேண்டிய காரியத்தைத் தெரிவித்தார்

“முருகா நீதான் நமது நாட்டின் சிறந்த கொல்லன் என்பதை நீ செய்த வாள் கோடாரி கட்டாரிகளையும் பரிசோதித்து அறிந்துக் கொண்டேன். அதனால் உனக்கு  முக்கியமான பணி ஒன்றைத் தரலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன்” என்றார்.

“சொல்லுங்கள் மன்னவா! என்ன பணி என்றாலும் செய்யக் காத்திருக்கிறேன்”

மன்னர் கண்களைக் காட்ட முருகன் முன்பு மிகப் பெரிய இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டன.

“சேரநாட்டு உருக்காலையிலிருந்து இந்தக் கரும் பொன்னைக் (இரும்பு தங்கம் போல தீயில் உருகி பின்னர் கரிய நிறமுடைய உலோகமாவதால் கரும்பொன் என்று அழைத்தார்களாம்) கொண்டு வந்தேன். இதனை உருக்கி ஒரு இரும்பு மனிதன் ஒருவனை உருவாக்க வேண்டும்”

“அப்படியே செய்கிறேன் மன்னா. உலகிலேயே உறுதியான ஒரு இரும்பு மனித சிலையை வடிக்கிறேன்”

“முருகா நான் சொன்னதை நன்றாக கவனி. நீ வடிக்கும் இரும்பு மனிதனானது சாதாரண சிலையாக இருக்கக் கூடாது. நம்மைப் போலவே நடக்கவும், பேசவும், சிந்திக்கவும் செய்ய வேண்டும். முக்கியமான விஷயம் அவனுக்கு மனித உடலைப் போலவே ரத்த நாளங்களும் அவற்றில் ரத்தமும் ஓட வேண்டும்”

இதைக் கேட்டு திகைத்து நின்றான் முருகன். சிலையை செய்ய சொன்னால் பரவாயில்லை மன்னர் இரும்பினைத் தந்து ஒரு மனிதனை அல்லவா உருவாக்கச் சொல்கிறார் இது சாத்தியமா என்று திகைத்து அவன் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றான்.

முருகனுக்கு இரவு முழுவதும் ஒரு பொட்டு கூட உறக்கமில்லை. இந்த இக்கட்டிலிருந்து எப்படித் தப்பிப்பது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மிகந்த வருத்ததோடு இருந்தவன் தனது தாத்தாவிடம் பேசினால் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தான். எப்போதும் அறிவில் முதிர்ந்த பெரியவர்கள் பல சந்தர்ப்பங்களில் நாம் இக்கட்டில் இருக்கும்போது சரியான வழியினை சுட்டிக் காட்டி உதவுவார்கள்.முருகன் அதனை அறிந்திருந்ததால் அவனது தாத்தாவின் கிராமத்திற்கு சென்று அவன் தாத்தா ஆதிசிவனிடம் யோசனை கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஆதிசிவன்  சிறிது நேரம் யோசித்தார் பின்னர் “முருகா மன்னன் போகாத ஊருக்கு வழி தேடுகிறான். நீ முடியாது என்று சொன்னால் கடுமையாக தண்டனை தருவான். அதனால் நான் சொல்வது போல அவனிடம் நாளை கேள்” என்று தனது யோசனையை அவனிடம் சொன்னார்.

மறுநாள் அரசனை சந்தித்த முருகன் “அரசே! நீங்கள் செய்வது போன்ற சிலை மிகவும் விஷேஷமானது என்பதால் அதனை உருவாக்க வித்யாசமான பொருட்கள் வேண்டும். அவற்றை நீங்கள் அளித்தவுடன் நான் சிலை செய்ய ஆரம்பித்து விடுகிறேன்” என்றான்

“அதென்ன வித்யாசமான பொருள் என்று சொல். உனக்கு எப்படியாவது வாங்கித் தருகிறேன்” என்றார்.

“இரும்பினை உருக்கியவுடன் அதனைக் குளிர்விக்க தண்ணீர் வேண்டும். நீங்கள் உயிரும் உணர்வும் உள்ள ஒரு சிலையைக் கேட்டதால் இதனைக் குளிர்விக்க இரும்பின் எடைக்கு நிகராக கண்ணீரால் நிரம்பிய பானைகள் வேண்டும். அது மட்டுமின்றி அந்த மனிதனுக்கு தலையில் முடியினை வைக்க இரும்புத் தலையின் எடை எவ்வளவோ அவ்வளவு எடைக்கு ஆண்களின் முடி வேண்டும். அது மட்டுமல்லாமல் அவனுக்கு உடைகள் தயாரிக்க இரும்பின் எடையின் நான்கில் ஒரு பகுதி எடைக்கு பருத்தி வேண்டும்” என்றான்.

“அவ்வளவு தானே விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்ற மன்னன் மறுநாளே நாட்டில்  விளைந்த பருத்தி அனைத்தையும் சேகரித்து கொண்டுவருமாறு கட்டளையிட்டான். ஆண்கள் அனைவரும் மொட்டையடித்துக் கொண்டு தலைமுடியை அரசாங்கத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டான். அதுமட்டுமின்றி ஒவ்வொருவர் வீட்டிலும் பானை ஒன்று தந்து தினமும் முடிந்த அளவுக்கு அழுது கண்ணீரால் இந்தப் பானையை நிரப்ப வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.  இதென்ன பைத்தியக்காரத்தனமான உத்தரவு என்று மக்கள் நினைத்தாலும் இப்படி ஒரு புத்திகெட்ட மன்னனின் ஆட்சியில் சிக்கிக் கொண்டோமே என்று நினைத்துக் கண்ணீர் விட்டனர். அப்படி நாட்டு மக்கள் அனைவரும் விடாமல் அழுதும் கால்வாசி அளவு கூட கண்ணீர் நிரம்பவில்லை.

கண்ணீர் சேகரித்த பானைகளை சேமித்து வைத்தாலும் நீர் ஆவியாகி பானை காலியாகியிருந்தது. மன்னனின் முட்டாள்தனமான கட்டளைகளால் நாட்டில் குழப்பமே மிஞ்சியது. தினமும் நடப்பதை கவனித்த மன்னன் தனது முட்டாள்தனத்தை ஒரு நாள் உணர்ந்து கொண்டான். முருகனை அழைத்தவன்

“முருகா… நீ கேட்கும் பொருள் ஒன்று கூட என்னால் தர இயலாது. அதனால் எனது கட்டளையைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். நீ சிலையை செய்ய வேண்டாம்” என்றான்.

“மன்னியுங்கள் மன்னவா… அதே போலவே உங்களது கட்டளைபடியான சிலையை  மனிதர்கள் யாராலும் செய்ய முடியாது. கல்லினால் செய்த யானையையும் கரும்பு தின்ன வைக்கும் ஆற்றல் அந்த மகேசன் ஒருவனுக்குத்தான் உண்டு” என்று பணிந்தான்.

உண்மையை உணர்ந்த மன்னன் தகுந்தவர்களின் ஆலோசனையைக் கேட்டு நல்ல திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி நற்பெயர் பெற்றான்.

முருகனும் தக்க சமயத்தில் அறிவுரை தந்த தனது தாத்தாவிற்கு தனது நன்றியைத் தெரிவித்தான்.

“முருகா…  அனுபவத்தின் துணை கொண்டு  இளையவர்களை சரியான வழியில் நடத்துவதே எங்களைப் போன்ற பெரியவர்களின் கடமை. அதற்காக நீ நன்றி சொல்ல வேண்டியதில்லை” என்றார் தாத்தா.

Tags:

6 thoughts on “முருகன் எப்படி தப்பித்தான்- குழந்தைகள் கதை”

 1. அருமையான கதை. நமது அழகான கடந்த கால அனுபவங்களை இன்றைய குழந்தைகளுக்கு கொணரும் அற்புத முயற்சி. சில நிமிடத்தில் நானும் கடந்த காலத்திற்கு சென்றுவந்தேன்.
  ஒரு கதையில் எத்தனை நீதிகள். மனதில் பத்திரப்படுத்தவேண்டியவைகள் இவைகள். தொடரட்டும் பதிவுகள். ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். தொடரும் எனது ஆதரவுகள்.
  பெ. சிவசங்கர்,

 2. நல்ல கருத்துள்ள கதை..

  என்னை பொறுத்தவரை இவர் அந்த காலத்து மெக்கானிக்கல் என்ஜினீயர் அல்ல.. ஆட்டோ மொபைல் என்ஜினீயர்.

  மற்றும்… நாட்டின் தலைவர்கள் மன்னர்கள் எப்படி ஆக்க பூர்வமாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

  நீங்களே எழுதினீர்களா?

  1. மிக்க நன்றி விசு அவர்களே. லாக் டவுன் காலத்தில் மீண்டும் குழந்தைகள் பிரிவை தொடரும்படி சில நண்பர்கள் கேட்டு கொண்டதால் சிறுவயதில் கேட்ட, படித்த, மற்றும் நீதிநெறி வகுப்புகளில் போதிக்கபட்ட கதைகளை (இப்போதெல்லாம் பள்ளியில் அந்த வகுப்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை) திரட்டி, டிங்கரிங்க் பார்த்து பதிவிட்டு வருகிறோம். இதில் நானும் சில கதைகள் எழுதியுள்ளேன். அவை இனி வரும் பதிவுகளில் வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதைஸ்கங்க் கற்றுத் தந்த பாடம் – குழந்தைகள் கதை

அடுத்ததா நம்ம பார்க்கப்போறது  கனடாவின் நாட்டுப்புறக் கதை. இந்தக் கதையில் வரும் ஒரு சிறு பாலூட்டி விலங்கினைப் பத்தி நம்ம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். ஆங்கிலத்தில் அதை skunk என்று சொல்வாங்க. இது அணில் மாதிரி தோற்றம் அளிக்கும் ஒரு சிறிய உயிரினம்.

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்

சூரப்புலி – 5சூரப்புலி – 5

ஒரு வேலையும் செய்யா மல் வரும்படியிலே பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதற்கு, இப்படி மற்றவர்களுடைய தன்மையை அறிந்து அவர்களை அடக்கி நடத்தும் திறமையே காரணமாக இருந்தது.  சூரப்புலிக்குப் புலால் உணவும் எலும்புகளும் நிறையக் கிடைத்தன. “இந்த நாய் எப்படிக் கிடைத்தது?’ என்று முதலாளி சாப்பிட்டுக்கொண்டே