Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)

 

 

 

சில வருடங்களுக்குப் பின்,

மியூனிக்கில் சற்று பெரிய வீட்டுக்குக் குடியேறி இருந்தார்கள் ஜிஷ்ணு ராம் குடும்பத்தினர். பெருகிவிட்ட குடும்பம்தான் அதற்குக் காரணம். இந்தியாவில் ஊறுகாய் கம்பனி மற்றும் மிளகாய் ஏற்றுமதியை ராஜுகோகுலம் வசமும், மற்ற இடங்களில் அலைவதை ரமணா மற்றும் மேலும் சில ஆட்கள் மூலமாகவும் நிறைவேற்றிக் கொண்ட ஜிஷ்ணு ஹோட்டல் பிசினெஸ் மற்றும் அவனது மற்ற வியாபாரங்களின் ஐரோப்பிய சந்தையை மட்டும் கவனித்துக் கொண்டான். அவனது மனைவியின் வேலை ஒரு காரணம் என்றால், உறவினர்கள் வாய்க்கு அவலாக விரும்பாதது மற்றொரு காரணம். தாத்தா தந்த பரம்பரை சொத்தைத் தவிர வேறு எதையும் அவன் பெற்றோரிடம் பெற்றுக் கொள்ளவில்லை. அவனது பெற்றோருக்கும் அவர்கள் தீர்மானித்த பாதையை மறுத்து தன் விருப்பப்படி சென்ற மகனை மன்னிக்க மனமில்லை…

“பெத்த தாய் தகப்பனை மறந்துட்டு, எவளோ ஒருத்தி பின்னாடியே போயிட்டியே” ஜிஷ்ணுவைக் குற்றம் சாட்டினார் சலபதி.

“நாணா, என் லைப்ல முப்பது வருஷத்துக்கும் மேல உங்களுக்காகத்தான் வாழ்ந்திருக்கேன். உங்க இஷ்டப்படிதான் நடந்திருக்கேன். எவ்வளவு நாள் என் வாழ்க்கை தெரியாது… வாழுற நாட்களில் இனிமேலாவது எனக்காக, என் சந்தோஷத்துக்காக வாழுறேனே. நீங்க வாழ்த்தணும்னு கேக்கல… அட்லீஸ்ட் சாபம் தராதிங்க” கைகூப்பிக் கேட்ட மகனைத் திட்ட மனமின்றி வந்துவிட்டார். சொந்தக்காரர்கள் அவனைத் தள்ளி வைத்தனர். இவன் அவர்களின் கண்களில் இருந்து தள்ளி வந்துவிட்டான்.

அவனுக்கு வேண்டிய அன்பை வாரி வாரித் தர அவனது குடும்பம் இருக்கும்போது பணமும், பொருளும், உதட்டளவே நின்ற உறவுகளும் அவனுக்குப் பெரிதாய் படவில்லை. அவ்வப்போது பெற்றோரைத் தான் மட்டுமோ இல்லை சந்தனாவுடனோ சந்தித்து வருவான். குடும்ப வாழ்க்கையில் அவன் அனுபவித்த மகிழ்ச்சி தொழிலும் தோற்றப் பொலிவிலும் தெரிய, சந்தனாவின் வளர்ப்பு அவர்களுக்கு ஆதர்ஸ தம்பதியினரின் அன்பைப் பறை சாற்றியது. ஜெயசுதா இன்னுமும் வீம்பு பிடிக்க, சலபதி வருடந்தோறும் சீதாராம கல்யாணத்துக்கு தாரணிக்கோட்டைக்கு விஜயம் செய்யும் ஜிஷ்ணுவின் குடும்பத்தை ரகசியமாய் சந்தித்துப் பேரப்பிள்ளைகளுடன் குலவி வருகிறார்.

ந்தனா இன்று காலைதான் ஜமுனாவை அமெரிக்காவில் சந்தித்துவிட்டு வந்திருந்தாள். வருடம் ஒரு முறை அம்மாவிடம் சென்று ஒரு வாரம் இருந்துவிட்டு வருவாள். வாரம் ஒரு முறை பேசுவாள். அவ்வளவுதான் அவர்களின் மேல்தட்டு உறவு.

ஜமுனாவையும் அவள் பெற்றோர் தலை மூழ்கியிருந்தனர். அவளோ அவமதிப்பைத் தூசு போல் தட்டிவிட்டு ஜேசனுடன் மனமொப்பி வாழ்ந்து வருகிறாள். ஜமுனா ஜிஷ்ணுவின் பொருந்தாத் திருமணத்துக்கு பலியாய் போன சந்தனா அம்மா அப்பாவை விட சிற்றன்னையிடம் ஒட்டிக் கொண்டதுதான் வினோதம்.

“பின்னி, அம்மா உனக்கும் எனக்கும் புது மாடல் டிஸைனர் பிராக்ஸ் வாங்கித் தந்தாங்க. நம்ம ரெண்டு பேரும் இந்த வீக் வீடியோ சாட் பண்ணுறப்ப போட்டிருக்கனுமாம். நீ வாங்கித் தந்த ட்ரெஸ்ஸ அவங்களால போடவே முடியல… இப்ப அவ்வளவு குண்டாயிட்டாங்க. நம்ம கிட்ட ரெண்டு வருஷம் முன்னாடி எடுத்த போட்டோவைக் காமிச்சு ஏமாத்திட்டு இருக்காங்க.

ஷாப்பிங் தவிர மத்ததெல்லாம் அங்க செம போர்… அம்மா ஜேசன் ரெண்டு பேரும் வேலைக்குப் போயிடுவாங்க. அவங்க பசங்க மைக், ஜான் ரெண்டு பேர் கூடவும் என்னால ஒட்டவே முடியல. ரொம்ப லோன்லியா இருந்தது. நான் நம்ம வீட்டை ஒவ்வொரு செகண்டும் மிஸ் பண்ணேன். உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன்” வந்ததும் வராததுமாய் சரயுவை அணைத்துக் கொஞ்சினாள் சந்தனா. சோபாவில் அமர்ந்து பொற்கொடி மேல் சாய்ந்துக் கொண்டு, சரயுவின் மடியில் காலை நீட்டி அமர்ந்து டிவி பார்த்தபடியே அமெரிக்க சங்கதிகளை சலசலத்தாள்.

“ஹை பாட்டி முந்திரிக் கொத்து செஞ்சிங்களா…?” அவளுக்குப் பிடிக்கும் என்று பொற்கொடியும் ராம் மனைவி நீலாவும் சேர்ந்து செய்திருந்த முந்திரிக் கொத்தை ஒரு வாயும், கைமுறுக்கை இன்னொரு வாயும் கடித்து விட்டு, ஜிஷ்ணு போட்டுத் தந்த காப்பியை அருந்தினாள்.

“சந்து இன்னைக்கு நீ பல்லு விளக்காம காபி குடிச்சது மட்டுமில்லாம முந்திரிக் கொத்தை வேற சாப்பிட்டுட்டு இருக்க. இது மட்டும் ராமுக்குத் தெரிஞ்சது” எச்சரிக்கும் குரலில் சொன்னான் ஜிஷ்ணு.

“நாணா ப்ளீஸ் ப்ளீஸ் அங்கிள் கிட்ட மட்டும் சொல்லிடாதிங்க… சொன்னா அன்னைக்கு நீங்க திருட்டு தம் அடிச்சதை போட்டுக் கொடுத்துடுவேன்” மெதுவாய் தந்தையிடம் தெலுகில் சொல்லி வந்தாள். ராம், ஜிஷ்ணுவின் புகைப்பழக்கத்தைத் தடை செய்திருந்தான். திட்டிக் கொண்டே நிறுத்தினாலும் அவ்வப்போது திருட்டுதம் அடித்து வருவான் ஜிஷ்ணு. பெண்ணின் ப்ளாக்மெயிலுக்கு அடங்கினான்.

“என் ஸ்வீட் பொண்ணுல்ல… ரெண்டு பேரோட தப்பையும் நம்ம இங்கேயே மறந்துடுவோமாம்” சமாதான உடன்படிக்கைக்கு வந்தான் ஜிஷ்ணு.

நாளையிலிருந்து சந்தனாவுடன் ஸ்விம்மிங் போக வேண்டும் ஸ்விம் சூட் செக்சனில் புதிய டிசைன்களை ஆராய்ந்து கொண்டிருந்தாள் சரயு. இன்னும் சற்று நேரத்தில் பக்கத்திலிருக்கும் ப்ரைமரி ஸ்கூலில் டீச்சருடன் சந்திப்பு இருக்கிறது. அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்திருந்தாள். சிறிது நேரமிருந்ததால் பக்கத்திலிருக்கும் மாலில் உடைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

“இந்த ஸ்விம் சூட் உங்களுக்குப் பொருத்தமா இருக்கும் மேடம்… ட்ரை பண்ணுறிங்களா” சம்மனில்லாமல் ஆஜரானவனைக் கண்டு முறைத்தாள்.

“அதுவும் இந்த பிங்க் கலர் பிகினி உங்க நிறத்துக்குத் தூக்கும்… பிள்ளைங்களுக்குத் தெரியாம, நீங்க திருட்டுத்தனமா உங்க கணவரோட போகப்போற மௌரீஷியஸ் ட்ரிப் அப்ப போட்டுக்கலாம். உங்க ஹஸ்பன்ட் பெரிய கலாரசிகர், நீங்க இந்த ட்ரெஸ் போட்டுக்குறதை சந்தோஷமா வரவேற்பார்”

“ஜொள்ளு எவ அவ கலா? ஆமா இங்க என்ன சுத்திட்டு இருக்க?” அவள் சொன்னதைக் காதில் வாங்காமல் அந்த உடையை வாங்கி பத்திரமாய் காரில் வைத்தான். “நாளைக்கு பார்ம்ஹவுஸ் போறோம்ல அங்க ஸ்விம் பண்ணுறப்பப் போட்டுக்கோ” கண்ணடித்தபடி சென்றான்.

“இந்தப் பக்கம் என்ன விஜயம்?”

“ரமணா வரேன்னு சொல்லிருக்கான். அவனை ரிசீவ் பண்ணக் கிளம்பினேன். வழில இந்த மால்ல நீ இருக்குறதா ராம் சொன்னான். வந்துட்டேன்.”

“வந்ததும் வந்த, பாரென்ட்ஸ் மீட்டிங் போயிட்டு வர்றியா?” சிரித்தபடி சரயு கேட்க,

“ஐயோ என்னை விட்டுடு… நான் ரமணாவை பிக்அப் பண்ணனும்” என்று சொல்லிவிட்டு ‘அங்க போயி திட்டு வாங்க உன்னால மட்டும்தான் முடியும்’ மனதில் சொல்லியபடியே சிட்டாய் பறந்தான்.

கிளாஸ் டீச்சர் முன்பு க்ளோஸ்அப் விளம்பர மாடல் போல் ஈயென்று பல்லைக் காட்டியபடி அமர்ந்திருந்தாள் சரயு.

“மிசர்ஸ்.தாரனிகோட்டா… வம்சி மாதிரி ஒரு நல்ல பையனைப் பாக்கவே முடியாது… வெரி க்ளவர், ப்ரைட்ன்னு சொல்ல முடியாது… பட் அவன்கிட்ட என்னமோ ஸ்பார்க் இருக்கு. சொன்ன வேலையை செஞ்சுடுவான். சில சமயம் முடிக்க முடியலைன்னாலும் சாரி மிசர்ஸ்.பியர்சன் உங்க மனசை இன்னைக்கு கஷ்டப்படுத்திட்டேன். இந்த வீக்எண்டு முடிச்சுட்டு வந்துடுறேன்னு ஒரு லவ்லி ஸ்மைலோட சொல்லுவான் பாருங்க… அதைப் பார்த்தவுடனே அவனைத் திட்டவே மனசு வராது. அடுத்த வருஷம் அவனை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” உருகினாள் வம்சிகிருஷ்ணாவின் கிளாஸ் டீச்சர்.

நிறைகளை சொல்லியாகிவிட்டது இனி குறை சொல்லும் படலம். காதைத் தீட்டிக் கொண்டாள் சரயு.

“குறைன்னு சொல்ல பெருசா இல்லை. இப்ப சொல்ல போறதை குறைன்னு கூட சொல்ல முடியாது. என்னன்னா வம்சி எப்போதும் கேர்ள்ஸ் புடை சூழத்தான் இருக்கான். உங்க மகன் லேடி டீச்சர்ஸ் கிளாஸஸ்ல ஃபர்பார்ம் பண்ணுற அளவுக்கு ஜென்ட்ஸ் கிளாஸ்ல கோஆப்ரேட் பண்ணுறதில்லைன்னு சொல்லறாங்க…”

சரயுவின் முகம் சற்று வாட்டமடைவதைப் பார்த்தவர்,

“நோ வொர்ரீஸ்… எழுதி இருக்குறதால சொன்னேன்… என்னை பர்சனலா கேட்டா வம்சி மேல தப்பு கிடையாதுன்னுதான் சொல்லுவேன்… துறுதுறுன்னு எல்லாருக்கும் ஓடி ஓடி ஹெல்ப் பண்ணுறதால பொண்ணுங்க அவன் கூட பிரெண்ட்ஷிப் வச்சுக்க ஆசைப்படுறாங்க. டீச்சர்ஸ்ல கூட லேடீஸ்க்கு பொறுமை அதிகம். சோ அவங்க கிளாஸ்ல கம்பார்டபிளா பீல் பண்ணுறான்னு நினைக்கிறேன். மத்தபடி என் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் வம்சிகிருஷ்ணா மாதிரி இருந்தா, நான் வீக்எண்ட்ஸயே வெறுக்க ஆரம்பிச்சுடுவேன்”

மீட்டிங் முடித்து வந்தவளின் கால்களைக் கட்டிக் கொண்டு “அம்மா” என்றான் வம்சி. அவனின் தோழிகள் சற்று தள்ளி நின்று, “வம்சி’ஸ் மாம்” என்று சரயுவுக்குக் கேட்குமாறு ரகசியமாய் பேசிக் கொண்டார்கள்.

கீழே குனிந்து வம்சியின் தலையினைக் கலைத்தாள் சரயு. அப்படியே குட்டி ஜிஷ்ணுதான்… குறும்புக் கண்களும், சரயுமேல் காட்டும் பாசமும்.. இதனாலேயே இவனை அவளால் கண்டிக்கவே முடிவதில்லை… கண்டிக்கும்படி வம்சியும் விட்டதில்லை. அம்மாவின் வார்த்தைக்கு அவனிடம் மறுப்பே எழாது.

“டையர்டா இருக்கியே, தண்ணி குடிம்மா” கைகளில் வாட்டர்பாட்டிலைத் திணித்தான்.

‘ஏண்டா எப்ப பாத்தாலும் பொம்பளப் புள்ளைங்க கூடத்தான் சுத்துவியா… உங்கப்பாவ மாதிரி உருவம்தான் இருக்குதுன்னா புத்தி கூட அப்படியே இருக்கனுமா’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கி சிரித்தவள், “நீ உன் பிரெண்ட்ஸ் கூட விளையாடு…” முத்தமிட்டு அனுப்பினாள். அவன் வயதில் அவள் பெண்களுடன் விளையாடியதே இல்லை… ஆண்பிள்ளையைப் போல் சுற்றினாள்.

அவளின் முதுகை யாரோ சுரண்ட, சிறு பெண் ஒருத்தி அங்கு நின்றிருந்தாள். அவளது அம்மா டீச்சருடன் சந்திப்புக்கு சென்றிருக்க, அவள் வெளியே காத்திருந்தாள்.

“நீங்க வம்சியோட அம்மாவா?”

“எஸ்… நீ யாரு?”

“நான் வைலெட். வம்சி கிளாஸ்மெட்” சொன்ன பெண் ஒல்லியாய், நீலக் கண்களும், பொன்னிறக் கூந்தலுமாய் டிஸ்னி கதைகளில் வரும் இளவரசியைப் போலிருந்தாள்.

“வம்சிக்கு எங்க வீட்டுல செய்யுற பீட்ஸா ரொம்பப் பிடிக்கும்”

இத்தாலியப் பெண் ஒருத்தி மதியம் அவன் வீட்டில் பீட்ஸா, பாஸ்தா இவனுக்காக கொண்டு வந்துத் தருவாள் என்று சரயுவிடம் வம்சி ஏற்கனவே சொல்லியிருந்தான்.

“ஓ நீதானா அது… தாங்க்ஸ்” என்றாள்.

“எனக்கு வம்சிய ரொம்பப் பிடிக்கும் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அப்பதானே அவன் கூடவே விளையாட முடியும்” என்று தன் அன்பைக் கள்ளமில்லாமல் சொல்லிய சிறுமியைப் பார்த்து திகைத்து சிரித்தவள்,

“உனக்கு அவன் கூட விளையாடணும் அவ்வளவுதானே? லீவ்ல எங்க வீட்டுக்கு விளையாட வா…” அந்தக் குட்டிப் பெண்ணின் பட்டுக்கன்னத்தை வருடியபடி சொன்னாள்.

“யூ ஆர் சோ ஸ்வீட் லைக் வம்சி” பாராட்டிவிட்டு சென்றாள் அந்த சிறுமி.

“என்னடி, வெள்ளைக்கார மருமக கூடக் கொஞ்சலா… அப்பனுக்கும் மகனுக்கும் அவனுங்க ஊரு பொண்ணுங்களக் கட்டிக்கவே பிடிக்காதோ… எந்த ஊருடி, இந்தப் பொண்ணு?” பின்னால் கேட்ட குரலை வைத்தே ராம் வந்ததை தெரிந்து கொண்டாள்.

“இத்தாலி” ராமைப் பார்த்துக் கண்ணடித்தபடி சிரித்தாள் சரயு.

“இத்தாலில பெண்ணெடுக்குறது நமக்கு ஒண்ணும் புதுசில்லையே… ஜமாய்ச்சுடுவோம்” சக்சஸ் என்று விரலை உயர்த்தினான் ராம்.

“அடப்போலே, வம்சி ப்ரைமரி ஸ்கூல் முடிச்சு, ஹைஸ்கூல், யுனிவர்சிட்டி, வேலை இன்னும் எவ்வளவு இருக்கு… அதுக்குள்ளே எத்தனை பொண்ணுங்க அப்ளிக்கேஷன் போடப் போகுதோ தெரியல”

“வம்சிகிருஷ்ணான்னா குழலூதும் கண்ணனாம்… கோபிகைகள் புடைசூழ சுத்துறவனுக்குப் பொருத்தமான பேருதான்.”

“அணுகுண்டு, வம்சி டீச்சர சமாளிச்சுட்டேன்… அடுத்த கிளாஸ்க்கு போகணும்னு நெனச்சாலே…” அவள் முடிப்பதற்குள் மிஸர்ஸ். சரயு தாரனிக்கோட்டையும், மிஸ்டர். சீதாராம் சீமைத்துரையும் தலைமை ஆசிரியை அறைக்கு அழைக்கப்பட்டனர். ‘செத்தான் சேகரு’ பார்வையைப் பார்த்துக் கொண்டபடியே இருவரும் அறைக்குள் அடி எடுத்து வைத்தனர்.

ஹாசினி உன்னை யாரு இங்க வந்து உட்கார சொன்னா? உனக்கு டைம் அவுட் கொடுத்திருக்கேன். அப்படின்னா என்ன தெரியுமா? பனிஷ்மென்ட்… நீ கையை கட்டிக்கிட்டு சுவத்தைப் பார்த்துகிட்டே நான் சொல்லுற வரை நிக்கணும். போடி”

“சாப்பாடு”

“சாப்பாடு தரமாட்டேன்… டிவி கிடையாது… விளையாடவும் கூடாது. போடி… வால் பக்கத்துல போ. சந்தோஷ் நிக்கிறானில்ல உனக்கென்னடி கேடு. நீயும் கூட சேர்ந்து நில்லு”

கைகளைக் கட்டிக் கொண்டு, முகத்தில் அணிந்திருந்த ஹாரிபாட்டர் கண்ணாடியை சரி செய்தபடி அப்பாவியாய் நின்றான் சந்தோஷ். டேபிளில் அழகாக அடுக்கப்பட்டு, வாசனையால் வயிற்றில் பசியைக் கிள்ளிய ப்ராம்லி ஆப்பிள் பையையும், காரத்துக்காக செய்யப்பட்டிருந்த பப்பையும் தங்களை விட்டுவிட்டுக் குடும்பமே மொசுக்குவதை குரோதத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்தாள் ஹாசினி.

“என்ன தெனாவெட்டா முறைச்சுட்டு நிக்கிறா பாருடா” என்று ஹாசினியைப் பார்த்து சரயு பல்லைக் கடிக்க,

“அவளாவது மனசுல இருக்குறதை அப்படியே முகத்துல காமிக்குறா… இந்தக் கேடிப்பய செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு பாக்யராஜ் மாதிரி அப்பாவி லுக் விடுறான் பாரு” என்று சந்தோஷைப் பார்த்து முறைத்தான் ராம்.

சரயுவையும் ராமையும் பார்த்தவுடன் படக்கென தலையைக் குனிந்து கொண்ட அந்த சின்ன தாதாக்களைப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தான் ஜிஷ்ணு. அவனுடன் அவனது நண்பன் ரமணாவும் அவன் மகன் ஹர்ஷாவும் வந்தார்கள்.

“நாணா” குடுகுடுவென ஓடிப் போய் ஜிஷ்ணுவின் கன்னங்களில் முத்தம் பதித்தவர்கள் நைசாக அவன் கையிலிருந்த சாக்லேட்டை தங்களது ஜோபியில் போட்டுக் கொண்டு மறுபடியும் தண்டனை தந்த இடத்துக்கு சென்று அப்பாவி வேடம் போட்டார்கள்.

“எப்படி இருக்கிங்க… ரூம்ல இருக்க போர் அடிச்சது… அதனால உங்களைப் பாக்க வந்துட்டோம். தொந்தரவில்லையே?” ரமணா முன்னறிவிப்பில்லாமல் வந்ததுக்குக் காரணம் சொன்னான். ஹர்ஷா சூப்பர் டூப்பர் சிங்கரில் இறுதி சுற்றில் தோற்றுவிட்டதால் கவலையாய் இருந்தான். அவனுக்கு சற்று மாறுதலாய் இருக்கட்டுமே என்று இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தான் ரமணா.

“நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு என்ன பார்மாலிட்டி எல்லாம். சாப்பிடுங்கண்ணா” உபசரித்தாள் சரயு.

சந்தனாவுக்கும் அபிக்கும் வெஜிடபிள் பப்பை புதினா சட்டினியுடன் பரிமாறினாள். வம்சி அவளுக்கு உதவியாக சட்டினி பவுல்களைக் கையில் பிடித்தபடி பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தான்.

‘இப்படியே அம்மா முந்தானையைப் பிடிச்சுட்டே சுத்து…’ கடுப்போடு அவனைப் பார்த்தான் ஜிஷ்ணு. இரவு கூட தனது படுக்கையில் தூங்காமல்,

“நாணா சோபால படுங்க, நான் அம்மாட்டத்தான் படுப்பேன்” என ஜிஷ்ணுவை விரட்டிவிட்டு, அம்மா மேல் கால் போட்டு உறங்கும் வம்சியை எப்படித் திருத்துவது என்பதுதான் அவனுக்கு இப்போதைக்கிருக்கும் மிகப் பெரிய பிரச்சனை.

“எனக்கு ரொம்ப பசிக்கிது பின்னி. இன்னொன்னு வேணும்” என்றபடி இன்னொரு பப்பை எடுத்து வைத்துக் கொண்டாள் சந்தனா. தனது தட்டிலிருந்த பப்பை நைசாக அபியின் தட்டில் வைத்தான் ஜிஷ்ணு.

“வேண்டாம் நாணா… என் வயிறு புல்” என மறுத்தான் அபி.

“சாப்பிட வேண்டாம்… ஆனா தட்டில் பத்திரமா வச்சுக்கோ. இன்னும் கொஞ்ச நேரத்துல தேவைப்படும். நான் கேஸ் ஹியரிங்குக்கு மாடிக்குப் போறேன்”

“அப்ப சரி” என்றவாறு மெதுவாக சாப்பிட ஆரம்பித்தான்.

“அம்மா நான் சாப்பிட்டுட்டேன். பக்கத்து வீட்டு ரேச்சல் கூட சைக்ளிங் போயிட்டு வரேன்” நல்ல பிள்ளையாய் சரயுவிடம் அனுமதி வாங்கி வெளியே ஓடிவிட்டான் வம்சி.

ஜிஷ்ணு, ராம், பொற்கொடி என்று அனைவரும் மாடிக்கு வரிசையாகக் கிளம்பினார்கள்.

மாடியிலிருக்கும் ரூம்.

“இன்னைக்கு பாரெண்ட்ஸ் மீட்டிங்ன்னு ரெண்டு பேரும் போனப்பையே எதிர்பார்த்தேன். என்ன ஏழரையைக் கூட்டியிருக்கா உன் அழகுப் பொண்ணு” விசாரித்தான் ஜிஷ்ணு.

தலைமை ஆசிரியை சொன்னது படம் போல் சரயுவின் கண் முன் ஓடியது.

“குழந்தைகளோட அன்றாட நடவடிக்கைக்குத் தகுந்தாப்பில ட்ராபிக் லைட் சிக்னல்ன்னு வச்சு அவர்களுக்கு தினமும் மதிப்பெண் போடுவோம். பொதுவா பிள்ளைங்க எல்லாரும் பச்சைல இருப்பாங்க. கொஞ்சம் சேட்டை செஞ்சா வார்னிங் கொடுத்து ஆரஞ்ச் தருவோம். பயங்கரமா குறும்பு செய்யுறவங்களுக்கு சிவப்பு. ஆனா உங்க பொண்ணுக்கு சிவப்புலயிருந்து ஆரம்பிக்கிற மாதிரி புதுசா என்னமாவது சிஸ்டம் கொண்டு வரலாமான்னு யோசிக்கிறோம்.

அவள அடக்க முடியாம இதுவரை நாலு டீச்சர்ஸ் மாறிட்டாங்க. நான் நேத்து வார்னிங் தந்துட்டு வந்தேன். அதுக்காக இன்னைக்கு கிளாஸ் பிள்ளைங்கள கூட சேர்த்துட்டு பிரேவ் படத்துல வர்ற மாதிரி வில்லு அம்பு விட்டு விளையாடிருக்கா. அவ விளையாண்டது தப்பில்ல. ஆனா என் முகத்தை வரைஞ்சு, ஜெய்க்கணும்னா சரியா என்னோட ப்ரோக்கலி மூக்கைக் குறி பார்த்து அம்பு விடணுமாம். கேமோட ரூல்ஸ் எழுதுறது மிஸ்டர் ராமோட பையன் சந்தோஷ். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்குற கூத்திருக்கே… சுருக்கமா சொன்னா இவங்களைப் பார்த்து ஸ்கூலே நடுங்குது.

இவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு வேற கிளாஸுக்குப் போடவும் முடியல. நீங்களும் விட மாட்டிங்கிறிங்க. இந்த டெர்ம் முடியுறதுக்குள்ள இவங்களை அடக்கி சொன்னதைக் கேட்க வைக்கிறிங்க. இல்ல அடுத்த வருஷம் பிரிச்சுப் போட்டுடுவோம்”

கவலையுடன் சொல்லி முடித்தாள் சரயு.

“ஏலே அணுகுண்டு ஹெட் டீச்சர் முன்னாடி, எப்படிலே கையைக் கட்டிட்டு நின்னோம்” சரயு கொதிக்க,

கையைக் கட்டித் தலையைத் தொங்கப் போட்டு நின்று காட்டினான் ராம். “இப்புடி நின்னோம்… எங்க வாத்தியார் முன்னாடி கூட நாங்க இப்படி நின்னதில்ல… நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்டி. நம்ம பிள்ளைங்களா இதுங்க, வெளிய சொன்னா வெக்கம். தப்பை, தப்புத்தப்பா செய்யுதுங்க… ஏய் நீலா, சந்தோஷுக்கு உன்னோட மூளையைத் தந்துட்டியோ…” அணுகுண்டு எகிறினான்.

தொண்டை வழக்கம் போல் கட்டியிருக்க, தனது காக்கா குரலால், “என்ன வம்புக்கிழுத்தா பாரு” என்று நீலா ராமை கடுப்படித்தாள்.

ஜிஷ்ணு சிரிப்பை அடக்க, சரயு கடுப்பானாள்.

“ஹாசினியை அடக்க என்னால முடியல. பிள்ள பெத்துருக்கான் பாரு பிள்ளை…” என்றபடி தலையணையால் ஜிஷ்ணுவை ரெண்டு அடி அடித்தாள் சரயு.

“என்னை ஏண்டி அடிக்கிற, நீயும் அவனும் உங்க வாத்தியார்ட்ட வாங்கின சாபமெல்லாம் சும்மாவா போகும். அதுதான் உங்கள மாதிரியே உங்களுக்குப் பிள்ளைங்க பொறந்திருக்கு. இதுக்கு நானோ இல்லை அப்பாவி நீலாவோ பொறுப்பில்லைப்பா. முழுக்காரணமும் சரவெடியும் அணுகுண்டும்தான். உங்களுக்கு வாக்கப்பட்டதால நாங்களும் இதுல பங்குதாரரா மாறிட்டோம்”

“ஆமாண்ணா” அணுகுண்டின் சாரி ராமின் மனைவி நீலாவும் ஆமோதித்தாள்.

ரமணா கொட்டாவி விட்டபடி சொன்னான். “சின்ன பிள்ளைங்க சரயு… இப்படில்லாம் பனிஷ்மெண்ட் தராதம்மா… இன்னைக்கு அவங்களை பட்டினி போட்டுட்டு எங்க எல்லாருக்கும் பப் வைக்கிற… தப்பம்மா…”

“ஐயோ அண்ணா… பட்டினி போடுறதா… நானா… நீங்க வேற” என்று சலித்துக் கொள்ள,

“சைலென்ஸ்… இப்ப பிலிம் டைம்” என்று குறும்புச் சிரிப்புடன் ப்ரஜெக்டரில் தெரிந்த படத்தை ஆவலுடன் பார்க்கத் தயாரானான் ஜிஷ்ணு. சில நொடிகளில் ஆரம்பித்த படம் இவர்கள் மாடிக்கு ஏறியதும் ஹாலில் நடந்த விஷயங்களை தெள்ளெனக் காட்ட ஆரம்பித்தது.

ரவேற்பரையில் சந்தனா அவளது தோழன் ஹர்ஷாவுடன் தெலுகில் மாட்லாடிக் கொண்டிருந்தாள். ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றுக் கொண்டிருந்த ஹாசினியும் சந்தோஷும் சில நிமிடங்களில் சிரித்துக் கொண்டனர். தெனாவெட்டாய் ஓடி வந்து சோபாவில் ஜம்ப் செய்து, ரெண்டு குதி குதித்துவிட்டு அமர்ந்தனர். இருவரையும் விழி பிதுங்கி விடுகிறார்போல் ஆச்சரியமாய் பார்த்தான் ஹர்ஷா.

“டேய் சந்தோஷ், ஆங்ரி பேர்ட்ஸ் எல்லாம் சீக்கிரம் வந்துடப்போகுதுங்கடா”

“வராதுங்கடி… நம்ம செஞ்ச பழைய தப்பெல்லாம் ரிவைஸ் பண்ணிட்டு வரணுமில்ல ஒன் ஹவர் ஆகும். நம்ம அதுக்குள்ள சாப்பிட்டுடலாம்”

வேகமாய் தட்டை எடுத்தவன் ஒரு பார்வை பார்க்க, சந்தனா ஒளித்து வைத்திருந்த பப்பைத் தந்தாள். அபியும் ஜிஷ்ணு தந்த பப்பை அவர்கள் தட்டில் பயபக்தியோடு வைத்தான்.

“அம்மா கோண்டு இம்சி எங்க போனான்?” வம்சியை விசாரித்தாள் ஹாசினி.

“அவன் நம்ம தெருல இருக்குற கேர்ள்ஸ் யாரு கூடயாவது விளாடிட்டு இருப்பான்” இளக்காரமாய் பதிலளித்தான் சந்தோஷ்.

“ஹாரி, ஆப்பிள் பை தீந்து போச்சுடா… இந்த சரயு ஏன் சின்னதா ஆப்பிள் பை செய்யுறா… கொஞ்சம் பெருசா செய்யலாமில்ல”

மாடியில் படம் பார்த்துக் கொண்டிருந்த ராம் சரயுவைப் பார்த்து கிண்டலாய் சிரித்தான். அந்த சிரிப்புக்கு உடனடியாக வேட்டு வைத்தான் அவன் மகன் சந்தோஷ்.

“அடப்போடி சரயு செஞ்சாலும் இந்த ராம் கொலஸ்டிரால் அதிகமாகும்னு கலைச்சு விட வேண்டியது… இவங்க ரெண்டு பேரும் பத்து நாள் ஊருக்குப் போயிட்டு வரலாம். நம்மளாவது நிம்மதியா இருப்போம். ஆப்பிள் பை இன்னும் ரெண்டு மிச்சம் இருக்கணுமே… நான் எண்ணிட்டே இருந்தேனே”

“எனக்கு எங்க போச்சுன்னு தெரிஞ்சுடுச்சு” ஹர்ஷாவை முறைத்துக் கொண்டே சொன்னாள் ஹாசினி. சாவி கொடுத்ததைப் போல எழுந்த ஹர்ஷா, அவனது தட்டில் இருந்த பையை அவள் தட்டில் வைக்க, ‘அது’ என்று தெனாவெட்டாய் ஒரு லுக் விட்டவள், பாதியைப் பிய்த்து சந்தோஷின் தட்டில் வைத்தாள்.

“ரெண்டு இருக்கணுமே” விடாமல் கேள்வி கேட்டு தொணத்தினான் சந்தோஷ்.

“இன்னொண்ணைத்தான் இவனோட அப்பா சாப்டாச்சே” அலுப்புடன் சொன்னாள் ஹாசினி.

மாடியில் தங்கள் பிள்ளைகளின் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருந்த ராம், மனைவியிடம் போன் பேசப் போயிருந்த ரமணா வந்துவிட்டானா என்று பயத்துடன் எட்டிப் பார்த்தான்.

“எப்ப வந்தாலும் ஆப்பிள், சட்சுமா ஆரன்ஞ், பேரிச்சம்பழம் இப்படி நமக்குப் பிடிக்காததா வாங்கிட்டு வருவாரே அதுதானே இவனோட அப்பா… நம்ம வீட்டுல வந்து ஏன் நம்ம பையை சாப்பிடணும்?”

“ஆமாண்டா ஒரு நாள் ஹெல்தி புட்ன்னு சாலட் டின்னர் கூட்டிட்டுப் போனாரே அதை விட்டுட்டியே”

“ஆமாண்டி நம்ம ரெண்டு பேரும் பசியோட வீட்டுக்கு வந்து சீரியல் சாப்பிட்டோமே… மறக்க முடியுமா அதை… இவங்க வீட்டுல எல்லாரும் பச்சை இலைதான் சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்”

ஒல்லியாய் இருந்த ஹர்ஷா பக்கத்தில் சென்று அவனை உற்று உற்று பார்த்தாள் ஹாசினி.

“ஹெர்மயணி அவனை ஏண்டி இந்தப் பார்வை பாக்குற?”

“இல்ல ஹாரிபாட்டர், இவங்க வீட்டுல பச்சை காய்தான் சாப்பிடுவாங்களாமே, அதான் இவன் தலைல கொம்பு முளைச்சிருக்குதான்னு பாக்குறேன்”

அவ்வளவு நேரம் பொறுமையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த ஹர்ஷா காண்டானான்.

“ஏய் அம்மாயி, நாக்கும் தமிழ் தெலுசு”

அதிர்ச்சியடைவாள் என்று பார்த்தால், கூலாய் சொன்னாள். “நல்லதா போச்சு… இனிமே உங்கப்பாட்ட சொல்லி எங்க வீட்டுக்கு வரப்ப கேக், சாக்லேட், குக்கீஸ் இப்படி வித விதமா வாங்கிட்டு வர சொல்லு” என்றாள்.

ரமணாவின் ஒரே மகன், குலக்கொழுந்து ஹர்ஷாவை ஹாசினியும் சந்தோஷும் கலாய்ப்பதை பார்த்துப் பதறிய ஜிஷ்ணு, நிலைமை கட்டு மீறுவதற்குள் வேகமாய் ஹாலுக்கு ஓடினான்.

“ஹாசினி, ஹர்ஷாகிட்ட என்ன சொல்லிட்டு இருக்க?”

“அதுவா த்ரிபுட தாளத்துக்கும், ஆதி தாளத்துக்கும் வித்யாசம் சொல்லிதந்துட்டு இருந்தேன் நாணா…” சீரியஸாய் பதில் சொல்லிய அவனது குறும்புப் பெண்ணில் சரயுவின் சாயலைக் கண்டு அவன் முகத்தில் பெரிதாய் புன்னகை தோன்றியது.

ரவு நேரம்… ரமணாவின் குடும்பம் அங்கேயே தங்கிவிட்டது. மறுநாள் பழப்பண்ணை கணக்கை கவனிக்க அங்கிருந்து இருநூறு மைல் தொலைவிலிருக்கும் தங்களது பார்ம்ஹவுஸுக்கு கிளம்பி விட்டிருந்தனர் ஜிஷ்ணு தம்பதியினர். அதனால் அம்மாவின் மடியை மறந்து அவனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தான் வம்சி. மாடியிலிருக்கும் ஒரு பெரிய அறையில் கட்டில்கள் போடப்பட்டு குழந்தைகள் படுக்கை அறை, படிக்கும் அறை என்று ஒதுக்கி இருந்தனர். பொற்கொடி பேரப்பிள்ளைகளுடன்தான் படுத்துக் கொள்வேன் என்று தனது படுக்கையையும் அங்கேயே மாற்றிக் கொண்டார். சந்தனா ஹர்ஷாவுக்கு படுக்கையை விரிக்க உதவி செய்துக் கொண்டிருந்தாள். அபியும், வம்சியும் தூங்கி விட்டிருக்க, மறுநாள் குமான் கிளாஸ் ஹோம்வொர்க் நினைவுக்கு வர, ஆறு நாட்கள் செய்ய வேண்டிய வீட்டுப் பாடத்தை ஒரே இரவில் அவசர அவசரமாய் செய்துக் கொண்டிருந்தனர் ஹாசினியும் சந்தோஷும்.

“ஏய் சந்தனா, இந்த சரயு உனக்கு ஸ்டப் மதரா இல்லை எனக்கு ஸ்டப் மதரா… என்னை ஏண்டி எவ்வளவு கொடுமை படுத்துறா” படிக்கும் அறையிலிருந்து வீட்டுக்கே கேட்கும்படி அலறினாள் ஹாசினி.

அவள் கத்துவதை சகஜமாய் ஏற்றுக் கொண்டு தனது வேலையைத் தொடர்ந்தாள் சந்தனா… புரியாமல் விழித்தான் ஹர்ஷா. அவனுக்கு ஹாசினியை மிகவும் பிடித்து விட்டது.

“குமான் ஆன்சர் புக்கை பார்த்து ரெண்டும் தினமும் திருட்டுத்தனமா காப்பி அடிச்சுட்டு இருந்ததுங்க. பின்னி கண்டு பிடிச்சு புக்கை மறைச்சு வச்சுட்டாங்க… ஹோம்வொர்க் காப்பி அடிக்க முடியாம திட்டிட்டு இருக்காங்க” தெளிவு படுத்தினாள்.

அனைவரும் படுத்துத் தூங்கி வெகுநேரமாகியும் வீட்டுப் பாடத்தை செய்துக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்க்க ஹர்ஷாவுக்குப் பாவமாய் இருந்தது. மெதுவாக எழுந்து படிக்கும் அறைக்கு சென்றான்.

“எத்தனை செஞ்சிருக்கிங்க?”

“ரெண்டு, எனக்குத் தூக்கமா வருது” தூங்கி வழிந்தபடி சொன்னான் சந்தோஷ்.

“உங்களுக்கு வேணும்னா நான் ஹெல்ப் பண்ணுறேன்” என்று உதவிக் கரம் நீட்டவும் குஷியானார்கள்.

“நிஜம்மா ஹெல்ப் பண்ணுறியா தாங்க்ஸ்.. ஹெர்மாயினி புக்லெட்டை எடு…”

“ஹாரி.. மாத்ஸ் எடுடா…”

“மாத்ஸ் நல்லா படிச்சாதானே உங்கம்மா அப்பா மாதிரி என்ஜினீயர் ஆக முடியும்” பதமாய் சொன்னான்.

அவனை செய்யவிட்டு காப்பி அடித்துக் கொண்டிருந்தவர்கள்,

“அதுதான் சந்தனா படிக்கப் போறாளே”

“அப்ப டாக்டர் படிக்கப் போறிங்களா?”

“அதுதான் அபி இருக்கானே…”

“சரி வம்சி என்ன படிக்கப் போறான்?”

“அவன் தினமும் தலை சீவவே அரைமணி ஆக்குவான். பேசாம ஹேர் ஸ்டைலிஸ்ட் படிக்கலாம்” என்றான் சந்தோஷ் சிரித்தபடி,

“அப்ப நீங்க என்னதான் படிக்கப் போறிங்க?”

“நானும் ஹாரியும் ஹைஸ்கூலோட படிப்பை நிறுத்திருவோம்”

திகைத்து போய் “நிறுத்திட்டு”

“எங்க நாணாவோட ஊறுகாய் கம்பனி, எக்ஸ்போர்ட் பிசினஸ், ஹோட்டல் இதெல்லாம் பாத்துக்கப் போறோம். அதுக்கு காசு என்னுர அளவுக்கு படிச்சா போதாது” லாஜிக் பேசினார்கள்.

அவர்கள் தெளிவைப் பார்த்து அசந்து போய் சிரித்தான் ஹர்ஷா. ஒரே பையனாய் வளர்ந்தததால் அவனுக்கு வகுப்பு நண்பர்கள் மட்டும்தான். அவர்களும் இவனை படிப்பு குரூப்பில் சேர்த்து விட்டதால் இவன் யாருடனும் சகஜமாய் பேசி விளையாடியதே இல்லை எனலாம். இவர்களுடன் பேசுவது சுவாரசியமாகவே இருந்தது ஹர்ஷாவுக்கு.

“இவ ஏன் உன்னை ஹாரின்னு கூப்பிடுறா, உன் பேர் வேறல்ல” சந்தேகமாய் கேட்டான்.

“சந்தோஷோட நிக் நேம் ஹாரி… ஹாரி பாட்டர் கண்ணாடி போட்டிருக்கான் பாரு…” தெளிவு படுத்தினாள் ஹாசினி.

“ஹாரி பாட்டரோட பெஸ்ட் பிரெண்ட் ஹெர்மாயினி தானே…” ஹாசினியின் பெயர்காரணம் சொன்னான் சந்தோஷ்.

“உன் நிக் நேம் என்ன?” ஹர்ஷாவிடம் கேள்வி கேட்டாள் ஹாசினி.

“ரான் வீஸ்லி” குறும்பாய் பதிலளித்தான் ஹர்ஷா.

ங்கு குறும்புக் கூட்டம் பேசிக் கொண்டிருந்த அதே நேரம், இரவைப் பகலாக்கிய மின்விளக்கின் ஒளியில், பார்ம்ஹௌஸில் பாஸ்கெட்பால் விளையாடிக் கொண்டிருந்தனர் சரயுவும் ஜிஷ்ணுவும்.

“லக்ஷ்மி அக்காவோட பெரிய மகன் வெட்னரி டாக்டர் ஆகப் போறானாம்… அக்காவும் மச்சானும் அவன் காலேஜ் சேர்ந்ததும் நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க… அவங்களை யுரோப் புல்லா சுத்திக் காமிக்கணும் விஷ்ணு” பாலினைத் தட்டியபடி சொன்னாள்.

“போன தடவை உன் பிரெண்ட்ஸ் கூட கலக்கல் பார்ட்டி கொண்டாடிட்டு வந்திங்க… சிவதாணு உன் கம்பனிக்கு அப்ளை பண்ணிருந்தானே… அது எந்த அளவில் இருக்கு?”

“விசா ப்ராசெஸ் பண்ணுறாங்க… இந்த கனியும் ரத்தினசாமியும் பாருங்களேன். அணுகுண்டு கல்யாணத்துல அவங்க ரெண்டு பேரையும் புருஷன் பொண்டாட்டியா பாத்தது அதிர்ச்சிதான்”

“எனக்கு முன்னாடியே தெரியும். உன்னைத் தேடி உன் ஊருக்குப் போனப்பத்தான் அவங்களுக்குக் கல்யாணம் நடந்திருந்தது. கனிக்கு யாரோ குடிகாரன் கூட நிச்சயம் ஆயிருந்ததாம். ரத்தினசாமி இவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு நீ என்னையே கல்யாணம் பண்ணிக்கோன்னு கூட்டிட்டு போயி தாலி கட்டிட்டானாம்”

விளையாடியபடி சொன்னாள். “உன்னையும் அண்ணனையும் மாதிரி நாங்களும் காதலிக்க முயற்சி பண்ணுறோம்னு கனி சொன்னா…”

“அந்த செல்வம் எப்படி இருக்கானாம்?” பாலைத் தட்டிப் பறித்தான்.

“அவனைப் பத்தி கேக்காதே… அணுகுண்டு கல்யாணத்தப்ப அபியை கொஞ்சிட்டு இவன் எனக்குப் பிள்ளையா பொறந்திருக்க வேண்டியதுன்னு சொன்னானே… இவனெல்லாம் ஏன் உயிரோட இருக்கணும்னு தோணுச்சு… இவனுக்கு சர்ஜெரில கண்ணை சரி செய்து, எங்க வீட்டை சரசுக்கு எழுதி கொடுத்து… இதைத் தவிர பணம் வேற, அவனுக்கு ஏன் விஷ்ணு மாசம் மாசம் படியளந்துட்டு இருக்க?” வெறுப்புடன் சொன்னாள்.

அவனிடம் வெடுக்கென்று பாலைப் பிடுங்கி விளையாடியதிலேயே அவளது கோவம் தெரிந்தது.

“பணம் அனுப்புறது அவனுக்கில்ல உங்க அக்காவுக்காக… அவனைக் கொல்ல ஒரு நிமிஷம் போதும். உங்க அக்காவைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு பார்க்குறேன்”

“ராஜு அங்கிள் எப்ப வர்றார்?”

“அடுத்த மாசம் ராஜுவும் அவர் வைபும் வராங்க… ஒரு வாரம் லீவ் போட்டுடு”

“சும்மாவே சின்னது மூணும் ஒரே ஆட்டம்… ராஜு அங்கிளும், சம்முகம் மச்சானும் வந்தா அவ்வளவுதான்… அடக்கவே முடியாது”

“ஏண்டி என் பிள்ளைங்களைத் திட்டுற…”

“திட்டாம… சந்துவும் அபியும் எவ்வளவு பொறுப்பா இருக்காங்க. மத்தது மூணும் மந்திதான்…”

“சந்துவும் அபியும் பிறந்த சூழ்நிலையை நினை… நம்ம ரெண்டு பேரும் மனசால கஷ்டபட்டப்ப பிறந்த பிள்ளைகள். நமக்கு மேலும் கஷ்டம் தராம அட்ஜஸ்ட் பண்ணிட்டாங்க…

வம்சி, நம்ம பட்ட கஷ்டமெல்லாம் மறைஞ்சு காதலாகிக் கசிஞ்சு உருகி பெத்தவன். அதனாலத்தான் அவனும் என்னை மாதிரியே நீன்னா உயிரா இருக்கான். அப்பறம் என் ஸ்வீட்டி ஹாசினி…”

சொல்லும்போதே சிரிப்பில் மலர்ந்தது ஜிஷ்ணுவின் முகம்.

“யப்பா குழந்தை போதும்னு முரண்டு பிடிச்சவளைக் கட்டாயப்படுத்தில்ல பெத்தேன். அதுதான் எல்லா விஷயத்திலையும் அடம் பிடிக்கிறா… ஆனா ஹாசினியும், சந்தோஷையும் பாக்கும்போது உன்னையும் அணுகுண்டையும் பாக்குற மாதிரியே இருக்குடி… ஒரே வயசு கிளாஸ்மேட்ஸ், குறும்புக்காரக் குட்டிங்க… உன் பிரெண்ட் ரங்கம்மாவே உங்க கூட கம்பேர் பண்ணும்போது ரெண்டு பேரும் பயங்கர அமைதின்னு போனதரம் செர்டிபிகேட் தந்துட்டா… இனிமே அவங்க ரெண்டு பேரையும் பத்தித் தப்பா சொன்ன எனக்குக் கெட்ட கோவம் வரும் பாத்துக்கோ”

சேலை தடுக்கிவிட மேலும் இழுத்து செருகினாள். “போடா உன்னோட பெரிய தொல்லை சேலை கட்டிட்டு எப்படி விளையாடுவேன்?”

“நம்ம ரெண்டு பேரும் விளையாடும் போது சேலைதான் வசதி” புன்னகையோடு கண்ணடித்தான்.

பந்தினை தூக்கி எறிந்தவன், “இந்த விளையாட்டு போதும்… வா வீட்டுக்குள்ள போகலாம்” அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டான்.

“விளையாண்டது பசிக்குது விஷ்ணு”

“எனக்கும்தான்… வா முறுகல் தோசை ஊத்தித் தரேன். பதிலுக்கு என்ன தரணும்னு தெரியுமில்ல” கறாராய் பேசியபடி அவர்களது மூங்கில் வீட்டுக்கு பூக்குவியலை சுமந்து சென்றான்.

இருவரும் குறும்பும் விளையாட்டுமாய் உண்டு முடித்தனர்.

“பங்காரம்… நீ என்கிட்டே தெலுகுல ஏதாவது பேசுரா… என்னைத் திட்டினா கூட ஓகே. நீ தெலுகு பேசிக் கேக்கணும் போலிருக்கு” தாபத்துடன் கேட்டான் ஜிஷ்ணு.

“விஷ்ணு… உனக்காக ஒரு தெலுகு பாட்டு கத்துகிட்டேன். பாடவா…

நீ ஜதகா நேனுன்டாலி (நான் என்றுமே உன் துணையாக வேண்டும்)

நீ எதலோ நே நின்டாலி (நான் உன் மனதில் நிரம்பியிருக்க வேண்டும்)

நீ கதகா நேனே மாறாலி (உன் வாழ்க்கை கதையாக நான் மாற வேண்டும்)

நீ நீடாய் நே நடவாலி ( உன் நிழலாய் நான் நடக்க வேண்டும்)

நீ நிசமை நே நிலவாலி (உன் நிஜமாய் நான் நிலைக்க வேண்டும்)

நீ உப்பிரி நேனே காவாலி (உன் வாழ்வின் சாரமாய் நானே வேண்டும்)”

 

அவள் பாடிய ஒவ்வொரு வரிக்கும் அவனது கைகளின் அழுத்தம் கூடியது. அர்த்தத்தை அனுபவித்த அவன் இதழ்கள் சிரிப்பால் மலர்ந்தன. வண்டித்தடத்தில் ஓடும் மழைநீரைப் போல, அவளது குரல் வழி இயல்பாக சென்ற மனதை கட்டுப்படுத்தாமல் அவளை முத்தமிட்டு முத்தமிட்டுத் தன் அன்பை வெளிப்படுத்தினான்.

“நா ப்ரியதமா, நாகோசமே நின்னு புட்டின்சாடு…நுவே நா தோடு, நா நீட நா நிஜம், நா ஜீவிதானிக்கி அர்த்தம் நீவே…”

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசந்தனை

நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசந்தனை

காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தமிது

மனைவியே உலகம் என்று வாழும் நமது விஷ்ணுவையும், அவனது சக்கரைக்கட்டி சரயுவையும் அவர்கள் காதலின் ஒவ்வொரு துளியையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டுவோம்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் இந்த அர்ஜுனன், சித்ராங்கதாவின் காதல் வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுவோம்.

சுபம்

2 thoughts on “தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)”

  1. Ohhhh my God… story mudinjatha…. yevlo vachavachitenga… yevlo sirika vachiteenga…. my allbtine favorite la ❤ yeppavume chithrangatha undu….
    Miss u jishnu and sarayu….

  2. My all time favourite. இது எத்தனையாவது தடவை என்று எனக்கே கணக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28

அத்தியாயம் – 28   மனைவியின் நடவடிக்கை எல்லாம் தனது இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். கஷ்டமாக இருந்தது அரவிந்துக்கு. தான் செய்த காரியம் எவ்வளவு தப்பு என்று உரைத்தது. நியூகாசிலுக்கு வேலை விஷயமாக வந்தவன்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள்.