Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 60

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 60

கூப்பிடு தூரத்தில் நின்றது ஜிஷ்ணுவின் வாழ்க்கை.

Now she’s here, shining in the starlight
Now she’s here, suddenly I know
If she’s here, it’s crystal clear
I’m where I’m meant to go

 

And at last, I see the light
And it’s like the fog has lifted
And at last, I see the light
And it’s like the sky is new
And it’s warm and real and bright
And the world has somehow shifted

ஜிஷ்ணு முதன் முதலில் வாங்கித் தந்த புலி பொம்மையைத் தூக்க முடியாமல் தரதரவெனத் தரையில் இழுத்து வந்து ‘த்தைகத்’, ‘ப்பு..ல்லி’ என்று பாட்டி பொற்கொடியையும், தனது தத்துத் தந்தை ராமையும் பயப்படுத்தி விளையாடிக் கொண்டிருந்தான் அபிமன்யு.

யார் செய்த குற்றம் இது? எந்த ஜென்மத்தில், யார் குடியை அவன் கெடுத்தான். அவனது செல்வமகள் சந்தனா, அன்னை தந்தை இருவரும் உயிரோடு இருந்தும், தொலைதூரத்துப் பள்ளி விடுதியில் அனாதையைப் போல் வாழ்கிறாள்.

ராஜ வாழ்க்கை வாழ வேண்டிய காதல்கண்மணி சரயு, அவன் கண்ணில் படக்கூடாதென்று மறைந்து ஒளிந்து, வயிற்றுபாட்டுக்காக மாதச் சம்பளம் வாங்கி வாழ்க்கை நடத்துகிறாள். கட்டிய கணவனிருந்தும், கூடப் பிறந்தவர்களிருந்தும் ராமும் சரயுவும் தனித்தனியாக பிரசவம் பார்த்துக் கொண்டு, தெரியாத ஊரில் கைக்குழந்தையுடன், அதற்குத் தந்தை யார் என்று உரிமையோடு வெளியே சொல்ல முடியாமல், இருவரும் வாரக் கடைசியில் கூட வேலை பார்த்து நினைக்கவே மனது ஆறவில்லை.

தன்னுடைய டெனிம் ஜீன், அர்மானி டீஷர்ட்டுடன் சிண்டுவின் இரவு உடையும், சரயுவின் அலுவலக உடையையும் ஒப்பிட்டான். அவன் புகைக்கும் சிகாரின் விலை, அவன் மனைவி மகனது உடையின் விலையை விடப் பலமடங்கு அதிகம். தங்கத் தொட்டிலில் தாமரை இதழ் பரப்பி, தந்தையின் தாலேலோ கேட்டு உறங்க வேண்டிய இளவரசன், அப்பாவைக் காணாமல் ஏங்கி இருக்கிறான். ரம்பத்தால் யாரோ வலிக்க வலிக்க இதயத்தை அறுப்பதைப் போல் உணர்ந்தான்.

எதிரியாய் எண்ணிய ராம் என் மனைவி சரயுவின் தோழன் அணுகுண்டு, என் குடும்பத்தின் காவல் தெய்வம். அவன் தாய் சரயுவுக்குப் பெறாத தாய். எல்லாவற்றிற்கும் மேலாய் அபிமன்யு, அபிமன்யு தாரணிக்கோட்டா என் மகன், எங்கள் காதலுக்கு சாட்சியாய் பிறந்தவன்.

எரிகின்ற நெருப்பு எப்படி குளிர் மழையாய் மாறியது?

கொல்லும் விஷம் எப்படி அமிர்தமாய் மாறித் தித்திக்கிறது?

உயிர் வலி இன்பமாய் இனிப்பதெப்படி?

உண்மையான காதல் ஒன்றால் மட்டுமே இதெல்லாம் சாத்தியமோ?

அன்பின் தாக்குதல் தாங்க முடியாமல் நெஞ்சில் குமுறும் அதிர்ச்சியுடன் சிலையாய் சமைந்திருந்தான் ஜிஷ்ணு.

சரயுவின் காதல்பரிசை, அவர்கள் அன்புக்கு சாட்சியாய் காதல் வானில் முளைத்த அந்தத் திங்களை, ‘ப்பு..ல்லி’ எனும்போது சுளித்த அவனது செவ்வாயை, குறும்பாய் சிரித்த நட்சத்திரக் கண்களைக் கண்டு கண்கள் கலங்கிய ஜிஷ்ணு, அள்ளி அணைத்து மகனின் தாமரைக் கன்னங்களில் ஆவேசமாய் முத்தங்களை விதைத்தான்.

“அபி, நா கொடுகு… Precious gift from my angel… என்னைத் தேடுனியா புஜ்ஜி. இந்தக் கண்ணு அப்பாவைத் தேடுச்சா… நான் பாபிரா, எவ்வளவு நாளை மிஸ் பண்ணிட்டேன்… உங்கம்மா என் சந்தோஷத்துக்காக வேற கல்யாணம் செய்திருப்பான்னு நெனச்சேன். எனக்காக, என் சந்தோஷத்துக்காக நீயும் அவளும் தவம் செய்துட்டு இருந்திருக்கிங்க… இப்படியும் அதிசயம் நடக்கலாம்னு எனக்கு தோணாம போச்சே… உங்களைக் கஷ்டப்பட விட்டுட்டேனே…” சோபாவில் அபியை அமரவைத்து, தரையில் மண்டியிட்டு அவனது வெண்பஞ்சுப் பாதங்களில் முத்தங்கள் பதித்தான்.

அப்பாவின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்ட அபி, “புவர்பாய்… பெய்னிங்” என்று கேட்க,

“அவுனு, இக்கட” என்று இதயத்தை சுட்டிக் காட்டினான் ஜிஷ்ணு.

வலித்ததாய் காட்டிய இடத்தில் முத்தம் பதித்த அபி, “வலி போச்சா?” என்று கேட்க,

“போயிந்தி… சால ஆனந்தங்க உந்தி” என்றான் கண்களில் பெருகிய நீரை கட்டுப்படுத்த வழியின்றி. மகனின் முத்தம் தந்த ஆனந்தத்தால் மனம் ஜிலு ஜிலுவென சிலிர்த்தது.

அவனது தோளின் இருபுறமும் கைகளை வைத்தபடி அவனருகே நின்றனர் சரயுவும், ராமும். சரயுவின் உடையைப் பிடித்து அருகில் இழுத்து, அவள் இடுப்பை வளைத்துக் கட்டிக் கொண்டு, வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான் ஜிஷ்ணு. அவன் தோள்கள் குலுங்குவதிலிருந்து உணர்ச்சி வயப்பட்டிருக்கிறான் என்று அனைவரும் உணர, சரயு ஜிஷ்ணுவின் தலையைக் கோதியபடியே கண் மூடி முகம் இளக நின்றாள்.

“அழுவாத விஷ்ணு… நீ அழுவுறத என்னால தாங்கவே முடியாது. இதுக்குக் காரணம் நாந்தான்னு என் மனசு குத்துது” கலக்கமான குரலில் சொன்னாள்.

சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்தவன், “இது அழுகை காது. தொலைஞ்சு போயிட்டதா நெனச்ச என் வாழ்க்கை வட்டியும் முதலுமா திரும்பக் கிடைச்சிருக்கே. அதை நினைச்சு சந்தோஷக் கண்ணீர்ரா… வருத்தமோ சந்தோஷமோ உன்கிட்ட மட்டும்தானே நான் மனசுவிட்டு சொல்ல முடியும்… எனக்கு வேற யாரு இருக்கா?”

“சொல்லு விஷ்ணு… உன் குரலைக் கேக்க தவம் செஞ்சுட்டிருக்கேன்” சளைக்காமல் அவனது கண்களை தனது உடையால் துடைத்து விட்டபடி பதிலளித்தாள் சரயு.

பொற்கொடி வாயிலிருந்து எழுந்த கேவலைக் கட்டுப்படுத்தியபடி முந்தானையால் கண்களைத் துடைத்தார். ராம் அறியாமலேயே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதில் ஜிஷ்ணு மேல் அவன் கொண்டிருந்த கோவமும், ஆதங்கமும் கூடக் கரைந்து ஓடியது.

ராம் அழுவதைப் பார்த்த அபிக்கும் அழுகை வந்தது. உதடுகளைப் பிதிக்கியபடி, “ப்பா, நோ” என்றபடி தாவி அவனிடம் சென்றான்.

“சிண்டு எனக்கு ஒண்ணுமில்லடா… ப்பா பைன்… அழக்கூடாது… என் கண்ணுல்ல…” என்று அவனைத் தூக்கி சமாதானப் படுத்தினான். ராம் முகம் தெளிவாக இருப்பதைப் பார்த்த அபியின் முகமும் கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்குத் திரும்பியது.

“அவன் அப்பா பய்யன்” மெதுவாய் ஜிஷ்ணுவின் காதில் சொன்னாள்.

குழந்தை கலங்குவதைக் கண்டு அனைவரும் தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர். சரயுவின் உடை, இடை முழுவதும் ஜிஷ்ணுவின் கண்ணீரால் நனைந்திருந்தது.

“ஏண்டா விஷ்ணு, டேங்க் எதுவும் கட்டி வச்சிருக்கியா.. நெனச்சவுடனே கண்ணுல கடகட-ன்னு தண்ணி கொட்டுது” செல்லமாய் கடிந்துக் கொண்டாள்.

“தெரியுதுல்ல… இனிமே என்னைக் கண்கலங்காம பாத்துக்கோ…” என்று கிடைத்த சைக்கிள் கேப்பில் இனிமேல் உன்னைப் பிரியவே போவதில்லை என்ற தனது முடிவைத் தெளிவாய் சொன்னான் அந்தத் திருடன்.

பொற்கொடி சிறிய வெள்ளிக் கிண்ணத்தில் பால் சாதத்தையும் ஸ்பூனையும் சரயுவின் கையில் தந்து அபிக்கு உணவூட்டும் நேரம் வந்ததை நினைவு படுத்தினார். ராமின் மடியில் உரிமையோடு அமர்ந்திருந்த அபியைக் கண் நிறைய ஏக்கத்தோடு பார்த்தான் ஜிஷ்ணு.

‘இவ்வளவு நாளா அபியை மிஸ் பண்ணிட்டேனே… எங்க குழந்தையை எப்படியெல்லாம் வளக்கணும்னு கனவு கண்டேன். இப்ப இவன் பொறந்ததே அறியாமப் போனேனே. என்னை புது ஆள் மாதிரி பாக்குறான். ராம்கிட்ட காமிக்கிற ஒட்டுதல் என்கிட்டே இல்லை. அம்மா மகன் ரெண்டு பேருக்கும் என்னை விட அணுகுண்டு மேலதான் அட்டாச்மென்ட் அதிகம்’ மனதினுள் புலம்பினான். அவனது கண்களில் தெரிந்த ஏக்கத்தைப் பார்த்த ராம், அபியை ஜிஷ்ணுவின் மடியில் அமர வைத்தான்.

“நம்ம வீட்ல இனிமே யாராவது அழுதா அப்பா பாட்டுப் பாடிடுவேன்” அபியை மிரட்டினான் ராம்.

“ப்பா நோ நோ…” என்று பதறிய அபி காதைப் பொத்தியபடி ஜிஷ்ணுவின் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டான். ஆசையோடு மகனை உச்சி முகர்ந்தான் ஜிஷ்ணு.

கனவு காண்பது கண்களின் உரிமை.
கனவு கலைப்பது காலத்தின் உரிமை.
சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை

நானும் சிதைந்து போன என் கனவுகளை தேடி எடுத்து அரண்மனை கட்டுவேன் உறுதியாய் நினைத்தான்.

“ஏலே அணுகுண்டு, பாட்டுப் பாடியே புள்ளய பயப்படுத்திட்டிருக்க…” சரயுவின் குரல் ஜிஷ்ணுவை நினைவுலகுக்கு மீட்டு வந்தது.

பொற்கொடியிடம், “உங்களுக்கு நான் ஜென்ம ஜென்மமா கடன் பட்டிருக்கேன்மா…” என்று ஜிஷ்ணு உருக,

“அம்மான்னு சொல்லிட்டியேப்பா… இதெல்லாம் அம்மாவோட கடமைதானே… நாங்க எங்க சரயுவைத்தான் பொத்தி வச்சுப் பாதுகாத்தோம்… அவ உன் மனைவியா போயிட்டா… இதுல நீ நன்றிக் கடன் படவேண்டிய அவசியமில்லை” என்று அடக்கமாய் புன்னகைத்து அவனது மனதை அமர்த்தினார்.

“அணுகுண்டு… உனக்கு எப்படிடா நன்றி சொல்வேன். ஒரு தாயா மாறி என் மனைவிக்கு எல்லாமும் செஞ்சிருக்க… என் மகனுக்கு ஒரு தந்தையா இருந்து என் இடத்தை நிரப்பிருக்க… இந்தக் கடனை எப்படிடா அடைக்கப் போறேன்?”

“நீ கடனை அடைக்க ஒரே ஒரு வழிதானிருக்கு… என் சரவெடியை வாட விட்டுறாதே… என்னால தாங்க முடியாது… எங்க சொந்தக்காரங்க எங்களை விரட்டி விட்ட மாதிரி செஞ்சுட்டிங்களேடா அனாதையா சரவெடி வந்தாளேடா… எப்படி உன்னை நம்பி உன்கூட அவளையும் சிண்டுவையும் அனுப்புவேன்” என்று கண்கலங்கினான்.

“உன் சரவெடி எனக்குப் பிராணம். அவளை மனசுக்குள்ள பொத்தி வச்சிருக்கேன். உன் நிலையோட அவளைக் கம்பேர் பண்ணாதே. எங்க வீட்டுல அவளை அவமானப்படுத்தினதுக்காக, நான் இன்னும் எங்க வீட்டு வாசப்படி மிதிக்கல. அவளுக்கு ஒரு தூணா நின்னு சப்போர்ட் பண்ணேன். அவதான் என்னைவிட்டுப் பிரிஞ்சா… எங்க கல்யாணத்தை முறைப்படி ரெஜிஸ்டர் செய்துட்டேன். சரயு எனக்குத் தந்த மிகப்பெரிய தண்டனை என்ன தெரியுமா… உன்னைக் கல்யாணம் பண்ணிட்டதா என்னை நம்ப வச்சது. எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா… என் சரயு இனி எனக்கு சொந்தமில்லை நெனச்சு… ஹப்பா என்ன ஒரு வலி… இப்படிதானே அவளுக்கும் வலிச்சிருக்கும்… சில நாளா நான் கொஞ்சம் கொஞ்சமா செத்துட்டிருந்தேன்”

பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தான். “பின்னியைத் தவிர எனக்கும் சந்தனாவுக்கும் வேற ஆதரவில்லை. அவளை கவனிக்க வழியில்லாம விடுதில சேர்த்திருக்கேன். அவளும் என்னை மாதிரியே எல்லாத்துக்கும் பழகிட்டா… இதுதான் என் நிலமை. நீ ஆதரவில்லாம நின்னப்ப கூட உனக்கு உன் அம்மா இருந்தாங்க. நானும் சந்தனாவும் சுயநலம் பிடிச்ச தாய்க்குப் பிறந்த அனாதைகள். அன்புக்காக ஏங்கும் ஆத்மாக்கள்.”

சுருக்கமாகச் சொன்னாலும் அங்கிருந்த அனைவரும் அன்பற்ற அவனது வாழ்க்கையின் பயங்கரத்தை உணர்ந்தார், மனம் தேர்ந்தார், கலி(வருத்தம்) தீர்ந்தார்.

“நாங்க இருக்கப்ப நீ எப்படி அனாதையாவ?” – ராம்

சூழ்நிலையின் இறுக்கத்தை இலகுவாக சிரித்தபடி கேட்டான் ஜிஷ்ணு.

“அவுனு, என் மேல நீ பயங்கர கோவமா இருக்குறதா சரயு சொன்னா… அதுக்குள்ளே எப்படி மனசு மாறுச்சு”

“இன்னமும் கோவம்தான்… இவளுக்காக, இவ சந்தோஷத்துக்காகத் தான் உன்னை மன்னிக்கிறேன். சரயு உடம்பு மாத்திரம்தான் இங்கிருந்தது… அவ மனசு எப்போதும் உன் நெனப்பிலையே சுத்திட்டிருந்தது.

உனக்காக உருகி, உன் அருகாமைக்காக மருகி அவ பட்ட கஷ்டத்தை யாராலடா உணர முடியும். உன்னைத் தவிர வேற யாரால அதை நீக்க முடியும்…

எனக்கு உன் மேல கோவமும் பொறாமையும் போட்டி போட்டுட்டு இருந்தது. இவளை நெனச்சுட்டு, இவ சொன்ன வார்த்தையை வேதவாக்கா எடுத்துட்டு நான் இங்க படிச்சுட்டிருக்கேன். இவளுக்கு உன் மேல காதல். நீ அவ மனசில் உட்காந்துகிட்ட. நான்தான் சரவெடியை மிஸ் பண்ணேன். சரவெடி என்னை மிஸ் பண்ணவேயில்ல. உன்னை மட்டும்தான் மிஸ் பண்ணிருக்கா” ஆதங்கத்தைக் கொட்டினான்.

ஜிஷ்ணுவுக்கு வெகு சந்தோசம். அணுகுண்டை விட அவனைத் தேடியிருக்கிறாள். நீண்ட காலமாய் அணுகுண்டுக்கு அடுத்துத்தான் நானா என்ற அவனது குமைச்சல் அப்படியே மறைவதைக் கண்டான்.

“என் பொண்டாட்டி மஹா அழுத்தம். எதையும் வாய் விட்டு சொல்ல மாட்டாள். அதனாலயே உன்னை மிஸ் பண்ணலைன்னு நினைச்சியா?” அவனது மனைவி சரயு என்று வலியுறுத்தி, அவள் மேல் உரிமை கொண்டாடிய விதமும், கைகளில் அபியை ஏந்தி நொடிக்கொரு முத்தம் தந்த ஆசையையும் புன்னகையோடு பார்த்தனர் அனைவரும்.

“உன்னை பார்க்குற சூழ்நிலை வந்தா ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குறதா வேஷம் போடணும்னு நானும் சரயுவும் பேசி வச்சிருந்தோம். நீ அவளோட சந்தோஷத்துக்காக கல்யாணமாகாதவனா வேஷம் போட்ட. நாங்க உன்னோட சந்தோஷத்துக்காக இந்தப் பொய் சொல்லலாம்னு நெனச்சோம். ஆனா அதுகூட உன்னை பாதிக்கல.

உன் மனைவிகிட்ட உன்னைப் போட்டுக் கொடுத்துடலாம்னு நெனச்சுத்தான் என் பிரெண்ட் மூலமா ஜமுனாவை காண்டாக்ட் பண்ணேன். அவங்கதான் உங்களுக்கு விவாகரத்தானதை சொன்னாங்க. அப்படியே உங்க கல்யாணம் நடந்த சூழ்நிலை முதல்கொண்டு பேசினோம். உன் பக்கமும் நியாயம் இருக்குன்னு உணர்ந்தேன். அம்மாவோட கடைசி ஆசைன்னு ஒரு தூண்டில் போட்டு இழுத்துட்டாங்க. எல்லாம் நேரம்னு தான் சொல்லணும். ஆமாம் இந்த நாலைஞ்சு நாள்ல நீ சரயுட்ட உண்மையை சொல்லிருக்கலாமே”

“அவகிட்ட நடந்ததெல்லாம் கொட்டனும்னு வந்தேன். பார்த்த சில நிமிஷத்திலேயே சந்தனா, சரயு ஆன்ட்டிக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்குறதா சொல்லுறா. இவளும் நான் எப்படி வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்டாலும் ராம் ராம்னு உருகுறா… சரயு ஜமுனாவைப் பத்தி என்கிட்டே விசாரிச்சபோது கூட ஜமுனாவுக்கு இது டெலிவரி டைம்ன்னு நூல் விட்டுப் பார்த்தேன். இவ மூஞ்சீல வழக்கம் போல நோ ரியாக்ஷன். சோ… நான் நல்லா இருக்கனும்னே வேற வாழ்க்கையை அமைச்சுட்டான்னு முடிவுக்கு வந்தேன். என் டைவேர்ஸ் பத்தித் தெரிஞ்சா வருத்தப்படுவாளே… நான் குடும்பம் குழந்தைன்னு ஹாப்பியா இருக்குறதா நெனச்சுக்கட்டும்னுதான் சொல்லல”

“ஆக ரெண்டு பேரும் அடுத்தவங்க சந்தோஷத்துக்காக வேஷம் போட்டிருக்கிங்க… வெரி குட்” சிரித்தான் ராம்.

“சரி வேஷம் எப்படி கலைஞ்சது”

“சரயுவைப் பார்த்ததும், அவளைப் பத்தின விவரங்கள் சேகரிக்க சொல்லி ஒரு டிடெக்டிவ் ஏஜென்சில சொல்லிருந்தேன். அவங்களும் விசாரிச்சு எனக்கு ஒரு சீல்ட் கவர்-ல அனுப்பிட்டாங்க. ஆனா நான் அதைப் பிரிக்கல. சரயு நிலையை மூணாம் மனுஷன் கண் மூலமா பாக்குறதை விட நானே உணரனும்னு விரும்பினேன். இன்னைக்கு நடந்துடுச்சு. இன்னைக்குத் தெரியலைன்னா இன்னும் சில நாட்கள் கழிச்சு பிரிச்சுப் படிச்சிருப்பேன்.

என் மனசு சரயு இன்னும் உன் மனைவிதான்னு சொல்லிட்டே இருந்தது. நேத்தி எனக்கு சந்தேகம் உறுதியானது எங்க பின்னியாலதான். என் சொந்தக்காரங்களுக்கு நான் ஒரு ஜாலிபாய்ன்னு எண்ணம்தான். நானும் பார்ட்டி, டிஸ்கோத்தேன்னு ஒண்ணு விடமாட்டேன். என் மொபைல்ல ஆம்பிளைங்க குரல் கேட்டதைவிட பொண்ணுங்க குரல்தான் அதிகம் கேக்கும். இது போதாதா ஒருத்தனை ப்ளேபாய்ன்னு முடிவு கட்ட?

பின்னிக்கு நான் ஒரு தமிழ்பொண்ணைக் காதலிச்சது பத்தி அரைகுறையாத் தெரியும். ஆனா அது சரயுதான்னு தெரியாது. அவங்களுக்கு கொஞ்சமா எழுந்த சந்தேகத்தையும் கல்யாணமாகி குழந்தை இருக்குற செய்தி அடைச்சுடுச்சு. நேத்து இங்க வந்திருந்தவங்க ரூம்ஸ்ல சிங்கிள் காட் இருக்குறதைப் பாத்துட்டு சந்தேகப்பட்டு என்கிட்டே சொன்னாங்க.”

“ஜிஷ்ணு நீ காதலிச்ச பொண்ணு சரயுதான்னு நினைக்கிறேன். நீ அவளைப் பாக்குற பார்வைல நட்பைத் தாண்டி வேற ஒண்ணு இருக்கு. அவ உன்கிட்ட காட்டுற அக்கறைல ஒரு உரிமை இருக்கு. அதைப் பாக்கும்போதே சந்தேகம் தட்டுச்சு. அவ அப்பா மெக்கானிக்னு சொன்னப்ப அந்த சந்தேகம் உறுதியாயிடுச்சு.

நீ உன் விவாகரத்தை மறைக்கிற மாதிரி சரயுவும் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை நம்மகிட்ட மறைக்கிறதா படுது… ப்ளீஸ் நாங்க ட்ரிப் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள அவகிட்ட மனசு விட்டுப் பேசு. உன்னோட மனசு தெரிஞ்சாத்தான் அந்த அழுத்தக்காரி வாயைத் திறப்பா. நான் நினைக்கிறது மட்டும் சரியா இருந்தா உன் முகத்துல மறுபடியும் சந்தோஷத்தைப் பார்ப்பேன்”

சரயு உணவை சந்தனாவுடன் சேர்ந்து பக்கத்து அறையில் பரிமாறிக் கொண்டிருந்தபோது மெதுவாய் வரலக்ஷ்மி வந்து சந்தேகத்தை சொல்ல, அதுவரை சரயுவை மனைவியாகவே பார்க்க விரும்பிய மனதை அடக்கியவன், கட்டுக்களைத் தளர்த்தி கருப்பில் சிவப்புப் பூக்கள் பூத்திருந்த குர்த்தி அணிந்த தனது அழகு மனைவியை நீண்ட நாள் பிரிவுக்குப் பின் ரசிக்கத் தொடங்கினான். தள்ளிப் போடாமல் அன்றே பேசிவிட முடிவு செய்தான். உணவுப் பரிமாறும்போதும், துணிகளை எடுத்துவைக்கும் போதும் அவளைக் குறுகுறுவெனப் பார்த்தவன், அவளது முகத்திலிருந்து எதையாவது கண்டுபிடிக்க முடியுமா என்று முயன்று தோற்றான்.

இரவு தெலுகில் மெதுவாய் சந்தனாவுக்கு கதை சொல்லித் தூங்க வைத்த ஜிஷ்ணுவைக் கண்டதும் அபி தவற விட்ட தந்தையின் அன்பு பூதாகரமாய் தோன்றியது சரயுவுக்கு. இதற்குத் தான்தான் காரணம் என்று வருந்தியது அந்தப் பேதை மனம். தந்தை யாரென்று தெரியாமல் வீட்டிலிருக்கும் ராம்தான் அப்பா என்று சமாதானப் படுத்திக் கொண்ட தனது செல்வனின் நினைப்பால் கண் கலங்க, விடை பெற்றுக் கிளம்பினாள்.

அவளது கண்களில் நீரைக் கண்டு, “ஏன்ட்டம்மா? எந்துக்கு ஈ கண்ட்லோ நீலு? ஏமைந்தி?” பதறிய கணவன் அவளை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.

‘அடுத்தவ புருஷன் உன்னைத் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டு போனியே பங்காரம்… நீ வேறொருத்தன் மனைவியா இருந்தா எப்படி என் தோள்ல சாஞ்சு உரிமையா கண் மூடுவ’ சந்தேக விதை செடியாய் மாறியது ஜிஷ்ணுவின் மனதில்.

ஒரு வினாடி தயங்கியவன் மெதுவாக அவளறியாமல் அவளது இடுப்பினை வளைத்து அவள் உணரும் முன் நெருக்கமாய் அமர்ந்துக் கொண்டான். அவளிடமிருந்து மறுப்பு வரவில்லை.

சரயு அபிக்குத் தந்தையின் அன்பு தன்னால் மறுக்கப்பட்டதை எண்ணிக் கலங்கிய வண்ணமிருந்த சரயுவுக்குத் தன் கணவனின் தீண்டல் தப்பாகப் படவில்லை.

அவன் தோளில் சாய்ந்தவள், ‘விஷ்ணு, அபி நம்ம மகன்… நம்ம அன்புக்கு சாட்சியா பொறந்தவன்… நானும் அவனும் உன்னை எவ்வளவு தேடுறோம் தெரியுமா… இப்ப சந்தனாவுக்குக் கதை சொன்னியே அது மாதிரி எங்களுக்கும் கதை சொல்லுறியா?’ மனதினுள் குமுறினாள்.

ஆனால் பிரிவுத் துயரில் கொந்தளித்த ஜிஷ்ணு நிலை தடுமாற சரயுவின் வாயிலிருந்து அவளே அறியாமல் வந்துவிட்ட விஷ்ணு என்ற ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. புயல் வேகத்தில் அவள் முகம் முழுவதும் தன் இதழ்களால் கோலம் போட்டுவிட்டான்.

முதல்நாள் நினைவில் ஆழ்ந்திருந்தவனை பொற்கொடியின் குரல் கலைத்தது.

“விருந்து தயார். சாப்பிட வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்தார். அபிக்கு உணவினை ஊட்டி முடித்திருந்த சரயு, அவனைத் தூங்க வைக்க அறைக்குத் தூக்கி சென்றுவிட, மெலிதான தாலாட்டுப் பாட்டு சத்தம் கேட்டு தவிப்பாக கண்களால் வீடு முழுவதும் துழாவினான் ஜிஷ்ணு.

“அந்த ரூம்ல போய் முகம் கழுவிட்டு சாப்பிட வா… அபி நைட் பாத்ரூம் விடணும். இல்லைன்னா பெட்லையே போய்டுவான். சில சமயம் அழுவான்.

அவன் அழுதா சரயுவை எழுப்பாதே… அவ நைட் சரியா தூங்க மாட்டா… ரொம்ப கஷ்டப்படும்போது வேற வழியே இல்லாம மாத்திரை தந்துடுவேன். அப்படியும் நடுவுல முழிப்புத் தட்டினா, உன்னோட டிரெஸ்ஸை பார்த்துட்டு, நீ கட்டின பாசிமணித் தாலியைப் பார்த்துட்டுப் பித்துப் பிடிச்ச மாதிரி உக்காந்திருப்பா… நீ வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்… இனிமேலாவது அவளுக்கு தூங்குற வரம் கிடைக்கட்டும். நான் ஹால்லதான் படுத்திருப்பேன். பிரச்சனை எதுவும் பண்ணான்னா என்னைக் கூப்பிடு…”

சரயுவைப் பத்தி கேட்டதும் அவளது அறைக்கு வேகமாய் நடக்கத் தொடங்கிய ஜிஷ்ணுவிடம்,

“விஷ்ணு எனக்குப் பயங்கர பசி. நீ பத்து நிமிஷத்துல டைனிங் டேபிள்க்கு வரல… நானும் அம்மாவும் சாப்ட்டுட்டு படுத்துருவோம். அப்பறம் உன் பொண்டாட்டிதான் உனக்குப் பரிமாறணும்” என்று எச்சரித்தே அனுப்பினான்.

“ராசு மாப்பிள்ளைட்ட மரியாதையா பேசுடா… முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கார். கூட சேர்ந்து சாப்பிடாட்டி மரியாதையா இருக்குமா… அவருக்காக கொஞ்ச நேரம் காத்திருக்க மாட்டியா?”

“யம்மா… ரெண்டும் ஊர் சுத்திட்டு, செமையா வயத்துக்குத் தீனி போட்டுட்டு வந்திருக்குங்க. இதுங்களை நம்பி உட்காந்தோம் நமக்குக் கால டிபன்தான் சாப்பிட முடியும். நம்ம சாப்பிட்டதும் பிரிட்ஜ்ல எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு போயிப் படு” கிண்டலாய் சொன்னான் ராம்.

தூங்காமல் விடுதி அறையில் புரண்ட சந்தனாவிடம் வினவினார் வரலக்ஷ்மி, “என்னடா கண்ணா… ஜிஷ்ணு நினைவு வந்துடுச்சா… நாளைக்கு இந்நேரம் நாணா கூட இருக்கலாம்… இப்ப வேணும்னா போன் பண்ணி பேசுறியா…?”

“நாணம்மா… ஹர்ஷாவை அங்கிளும் ஆன்ட்டியும் எப்படி கவனிச்சுக்குறாங்க… ரெண்டு பேருக்கும் அவன் மேல ரொம்ப அன்பில்ல” அவளது ஏக்கம் வெளிப்பட கலங்கினார் வரலக்ஷ்மி.

“அம்மா நினைவு வந்துடுச்சாரா… வேணும்னா ஜமுனாவப் பாத்துட்டு வரலாமா?”

“வேணாம் நாணம்மா… நாணாவோட அன்பை என்னால பீல் பண்ண முடியுது. ஆனா அம்மாவோட என்னால ஒட்டவே முடியல… அவங்க பேசுறது, பழகுறது எல்லாம் நம்ம ஊர் அம்மா மாதிரியே இல்ல…” விடுதிப் படிப்பும் சிறு வயதில் பெற்றோரின் பிரிவு ஏற்படுத்திய தாக்கமும் சந்தனாவுக்கு வயதுக்கு மீறிய மன முதிர்ச்சியைத் தந்திருந்தது.

“அம்மா எப்படி இருப்பாங்கன்னு எனக்கு ஒரு கனவு இருக்கு நாணம்மா… பொழுதன்னைக்கும் நாணா கூட சண்டை போடாம, எங்க மேல அன்பா, ஆசையா, நல்ல பிரெண்டா…” சொல்லிக்கொண்டே போனவள் நிறுத்தினாள்.

“நம்ம சரயு ஆன்ட்டி மாதிரி… அவங்க என் அம்மாவா இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் நாணம்மா… நம்ம பிஎம்டபிள்யூ போனப்பையும், அவங்க வீட்டுக்கு போனப்பையும் எப்படி என்ஜாய் பண்ணேன் தெரியுமா… எனக்குக் கதை சொன்னாங்க, முடிக்கு ஆயில் மசாஜ் பண்ணி ஹெட்பாத் தந்தாங்க, வெட்டாம வளர்த்திருந்த நகத்தை கவனிச்சு திட்டி நகம் வெட்டி விட்டாங்க, சிக்கெடுத்து தலை சீவி விட்டாங்க, டிரஸ் எடுத்து வச்சாங்க, பிடிச்ச சமையல் செஞ்சாங்க, சமைக்கும்போதே ஊட்டி விட்டாங்க, பாடம் சொல்லித்தந்தாங்க, நாணாவை அன்பா பார்த்துட்டாங்க… அவங்க எங்க கூடவே இருந்தா, அதைத்தான் கற்பனை பண்ணிட்டு இருந்தேன்”

‘நானும் உங்கப்பனும் மயங்கின மாதிரி நீயும் அந்தக் கள்ளிகிட்ட மயங்கிட்டியா?’ சிரித்தபடி, “முதல்ல தூங்குவியாம்… நாளைக்கு ஊருக்குப் போனதும் சரயுவைப் பாக்கலாம்” சொல்லித் தூங்க வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4

4. அத்தியாயம் –  அரவிந்தும் ஸ்ராவனியும் ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டது. திருச்சி என்றால் தெரிந்தவர்கள் இருப்பார்கள். இங்கு யாரையும் தெரியாது. அதுவும் ஸ்ராவணியை வீட்டில் விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனமில்லை. ஏதோ தெனாலிராமன் பூனை வளர்த்த கதை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை அறையின் மூலையில் போட்டுச் சென்றுவிட்டான். ‘எந்துணியை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 6

சரயு காலையில் அலைப்பேசியின் அலறலில்தான் எழுந்தாள். தலை வரை போர்த்தியிருந்த போர்வையிலிருந்து கையை மட்டும் நீட்டி பெட்சைடு டேபிளிலிருந்த மொபைலை தேடி எடுத்து, பின் போர்வைக்குள் இழுத்துக்கொண்டாள். ‘இந்த ராம் காலைல எழுப்பி விட்டுடுரான்பா. போன ஜென்மத்துல கடிகாரமா பொறந்திருப்பான் போலிருக்கு’