Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 59

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 59

காலையிலிருந்து இருப்பே கொள்ளாமல் தவித்தான் ஜிஷ்ணு. சரயுவை வெறிப் பிடித்தார்போல் தேடி அலைகிறான். பலன்தான் இல்லை. அவளது சொந்த அக்கா குடும்பத்துக்குக் கூட அவளிருக்கும் இடம் தெரியவில்லை. ‘இன்னமும் விளையாட்டு புத்தி மாறல. இடியட் புருஷன்கிட்டயே கண்ணாமூச்சி விளையாடுறா’.

ஜமுனாவிடமிருந்து விவாகரத்து கிடைத்துவிட்டது. சட்டப்படி பிரிவாகும்போது வயிற்றுப் பிள்ளையுடன் ஜேசனை அழைத்து வந்த ஜமுனாவைப் பார்த்து அதிர்ந்து விட்டார் ஜெயசுதா. கிளம்பும் முன் அவளது திருமணத்துக்கு அழைப்பு விடுத்தவளைக் கண்டு திகைத்து மயங்கினார் ஜிஷ்ணுவின் அன்னை.

“மன்னிச்சுக்கோ ஜிஷ், உங்கம்மா உன்னை ரொம்பத் தொந்தரவு செய்றாங்கன்னு கேள்விப்பட்டேன். அதுதான் இந்த அதிர்ச்சி வைத்தியம்”

“நான் அவங்களை பொருட்படுத்துறதில்லை. உன் மணவாழ்க்கைக்கு என் வாழ்த்துக்கள்”

“நான் சந்தனாவை உன்கிட்ட விட்டுட்டு வந்தது உனக்கு ஆத்திரமா இருக்கும். உனக்காகத்தான் அவளை உன்கிட்ட விட்டுருக்கேன் ஜிஷ். சரயுவும் நீயும் சேருற வரைக்கும் உனக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு வேணும் இல்லையா… என்னால நீ பட்ட கஷ்டத்துக்கு முடிஞ்ச அளவுக்கு ப்ராயச்சித்தம் செய்ய ட்ரை பண்ணுறேன்”

காரில் ஏறி சென்றுவிட்டாள். ‘நல்ல பெண்… எங்களோட திருமணம் மட்டும் நடக்காம இருந்திருந்தா ஒரு நல்ல தோழர்களா இருந்திருப்போம். அணுகுண்டும் சரவெடியும் மாதிரி…’ நினைத்தவுடன் அவனது மனைவியின் நினைவு வாட்ட ஆரம்பித்தது.

‘அவளால என்னை வெறுக்க முடியாது. ஆனா எனக்கு நன்மை செய்யுறதா நெனச்சுட்டு வேற கல்யாணம் செய்துட்டான்னா…’ குழப்பத்திலேயே ஊருக்கு வந்தான். அவனது கவலையை உணர்ந்த ராஜு,

“பாபு சின்னம்மாவளால உங்களை மறக்கவே முடியாது. அவங்க வேற வாழ்க்கையை தேர்ந்தெடுக்க மாட்டாங்க” உறுதியாய் சொன்னார்.

“அது சாதாரண பொண்ணுங்க மனசு. என் பங்காரம் என்ன சாதாரண அம்மாயி காதே… நான் என் குடும்பத்தோட சந்தோஷமா இருக்கனும்னே வேற கல்யாணம் பண்ணிக்குவா… அதுக்கு என்ன காரணம்னு நினைக்கிறிங்க? அவ சந்தோஷத்துக்கா அந்தப் பெல்லி? இல்லவே இல்லை. அவ தனிமரமா இருந்தா நான் வருத்தப்படுவேனாம். பிச்சி, எனக்காக இவ்வளவு யோசிக்கிறவ அவதான் என் சந்தோஷம்னு உணர மறுக்குறா”

ரயுவுக்கு பிரசவ வலி வந்துவிட்டதென்று ராம் உணர்ந்ததும் மருத்துவமனைக்கு செல்ல தேவையானதை எடுத்து வைக்க ஆரம்பித்தான். அடுத்தடுத்து இடியாய் வந்த வலியினைப் பொறுத்துக் கொண்டாள்.

“அணுகுண்டு, எம்பெட்டில ஒரு கவர் இருக்கும் எடுத்துத்தாலே”

வெளியே டாக்ஸி நின்றுக் கொண்டிருக்கிறது இப்போதென்ன கவர் என்று எரிச்சலாய் பார்த்தான்.

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேண்டி. நேரமாவுது சாமி கும்முட்டுட்டு கெளம்பலாம்”

“ப்ளீஸ் எடுலே…” கெஞ்சியவளை கோபிக்க மனமின்றி அவள் கேட்டதைத் தந்தான்.

“நீ ஒரு நிமிசம் வெளிய இரேன்”

பல்லைக் கடித்துக் கொண்டு அறையை விட்டு சென்றான். சமையலறையில் தண்ணீர் அருந்திவிட்டு சரயுவை அழைக்க வந்தவனுக்கு அவள் மெலிதான குரலில் பேசுவது அந்த இரவு நேரத்தில் தெளிவாகக் கேட்டது.

“விஷ்ணு… ரொம்ப வலிக்குதுடா… உயிரே போவுற மாதிரி இருக்கு. நமக்கு பையன்தான் பொறக்கப் போறானாம் நம்ம டாக்டர் சேதுராம் கண்டுபிடிச்சு சொல்லிட்டாரு. நான் பேரு கூட வச்சுட்டேன். அபிமன்யு. சித்ராங்கதாவோட மகன் பாப்ருவாகணன் அர்ஜுனனைக் கொன்னுடுவான்னு அன்னைக்கு சொன்னல்ல. நம்ம மகனுக்கு அந்தப் பேர் வேணாம். இந்தச் சித்ராங்கதாவும் அபிமன்யுவும் எப்போதும் எங்க அர்ஜுனனுக்குத் துணையாவே இருப்போம். அவனை நினைச்சுட்டே இருப்போம்.

அணுகுண்டு என்னை உயிரா பாத்துக்குறான். ஆனாலும் அம்மா செய்யுற உப்புமாவைத் திட்டிக்கிட்டே சாப்புடனும், அப்பா மடில உக்காந்து கருப்பட்டிக் காப்பி குடிக்கணும், எல்லாத்துக்கும் மேல நீ என் பக்கத்துல இருக்கணும்னு ஏக்கமா இருக்கு. நானும் உன் பொண்டாட்டிதானே, எனக்கு மட்டும் உன் கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா…”

எம்பி உதைத்ததைப் போன்ற வலியில் ஒரு நிமிடம் துடித்துப் பின் சமாளித்தாள். ஜிஷ்ணுவின் உடையைக் கன்னத்தோடு அணைத்து ஆறுதல் தேட முயன்றாள்.

“என் வலிய வெளில காமிச்சா அணுகுண்டு பயந்துக்குவான். அதனால அடக்கிட்டு இருக்கேன். பிரசவம் மறுபொறப்பாமே கோவில்ல ஒரு அம்மா சொன்னாங்க. நிஜம்தான் ஒவ்வொரு வலி எடுக்குறப்பையும் சாமிக்குப் பக்கத்துல போயிட்டு வராப்புல இருக்கு. ஒரு வேள நான் சாமிகிட்ட போயிட்டேன்னா,

இன்னொரு சென்மம் நான் மறுபடி பொறந்து வந்து, உனக்காகக் காத்திருப்பேன்
அப்பவும் சேராம இருவரும் பிரியணும்னா, பொறக்காம போயிடுவேன்

சரயுவின் பேச்சைக் கேட்டு அறைக்கு வெளியே சத்தமில்லாமல் அழுதான் ராம். விஷ்ணுவை இந்த அளவுக்குக் காதலிக்கும் பைத்தியக்காரி சரயுவைக் கடிந்து கொள்ள மனதின்றி ‘அந்தப்பய இவள எப்படி மயக்கி வச்சுருக்கான் பாரேன்’ என்று அதற்குக் காரணமானவனைத் திட்டினான்.

ல்லபடியாய் பெற்றுப் பிழைத்து வந்து சேர்ந்தாள் சரயு. ஆனால் அடிக்கடி விஷ்ணுவை நினைத்துக் கண்ணீர் உகுப்பவளை சமாதனப்படுத்த தாயை அழைத்தான். பொற்கொடி போர்க்கொடி ஏந்தாத குறையாய் வந்தார்.

“டாக்டருக்கு படிச்சுட்ட ஏத்தமால, அம்மைட்ட கூடத் தகவல் சொல்லாம பிரசவம் பாத்திருக்க?” என்று வருந்திய தாயை சமாதானப்படுத்தினான்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் ராமின் மனைவி சரயு, மகன் அபி என்று நினைத்துக் கொள்ள, ராமும் அதை மாற்ற முயலவில்லை. அவர்களுக்கு மிக நெருங்கிய குடும்பத்துக்கு மட்டுமே ராம்-சரயு நண்பர்கள் மட்டுமே என்ற உண்மை தெரியும்.

முரட்டுக் குழந்தை சரயுவையும், அவள் வயிற்றில் உதித்த கட்டித்தங்கத்தையும் காக்கும் பொறுப்பை ராமும் பொற்கொடியும் ஏற்றுக் கொண்டனர். தாயும் மகனும் இளவரசன் அபிக்கு செய்யும் சேவைகளை ரசிக்கும் சரயு, இரவு மட்டும் மகனைத் தாலாட்டித் தூங்க வைப்பாள். நான் செய்யுறேனே என்று நச்சரித்த ராமிடம்,

“விஷ்ணு தினமும் பாப்பாவத் தாலாட்டு பாடித் தூங்க வைக்க சொல்லிருக்கான்” என்று உணர்ச்சியில்லாத குரலில் சொன்னாள்.

“விஷ்ணு விஷ்ணு விஷ்ணு… எப்போதும் உனக்கு அவன் நெனப்புத்தானா? சரவெடி, நல்லா நினைவுல வச்சுக்கோ… அவன் உன் டீன்ஏஜ் க்ரஷ்… அவ்வளவுதான்… அவன் பேரையே ஜபம் பண்ணிட்டு, மனசுக்குள்ள அவன் கூட கற்பனைலயே குடும்பம் நடத்தி, அவன் டிரஸ் எடுத்து பைத்தியம் மாதிரி பேசிட்டு, வேணான்டி… நிஜத்துக்கு வா… ” கோவமாய் திட்ட ஆரம்பித்தவன் கெஞ்சிக் கேட்டான். பதிலே சொல்லாமல் இருகினாள் சரயு.

தளிர் நடை நடக்க ஆரம்பித்திருந்த அபியை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் அருகிலிருக்கும் பார்க்குக்கு சென்றார்கள். அங்கிருக்கும் அவன் வயதை ஒத்த மற்ற சிறுவர்களுடன் ஆர்வமாய் விளையாடினான் அபி.

“ம்மா, ம்மா” எனும் அவனது மழலையை ரசித்துக் கேட்டாள் சரயு. அங்கு சில சிறுவர்கள் தங்கள் தந்தையுடன் விளையாடுவதை வேடிக்கை பார்த்தவாறு மண்ணை நோண்டிக் கொண்டிருந்தான்.

“சரவெடி, என்ன இருந்தாலும் தோட்டக்காரனுக்கு டிமிக்கி கொடுத்துட்டு, மாமரத்துல ஏறி மாம்பழம் பறிக்குறதுல இருக்குற த்ரில் இருக்கே… ” ராம் மலரும் நினைவுகளில் அமிழ,

அல்லித்தண்டு கால்களால் அழகாய் நடந்து வந்த அபி, தாழம்பூ கைகளால் ராமைக் கட்டிக் கொண்டு, கமலப்பூ கண்ணை விரித்து “ப்பா” என்றான். தாய்தான் தந்தையை அடையாளம் காட்ட வேண்டும். அபாக்கியவதிக்குப் பிறந்த பிள்ளை, தானே ஒருவனைத் தந்தையாக உருவகித்துக் கொண்டது. ராமுக்குக் கண்கள் கலங்க, சரயுவுக்கு இதயம் நொறுங்க, பொற்கொடி விம்மினார்.

“எட்டி சரவெடி, புள்ள ராசுவ அப்பனா பாக்க ஆரம்பிச்சுடுச்சே… அதோட ஏக்கம் உனக்குப் புரியலையா… ஒரு தாய் சொல்லக் கூடாதுடி இருந்தாலும் சொல்லுறேன். என் வம்சத்த விருத்தி பண்ண எம்மவனக் கல்யாணம் பண்ண சொல்லல. எனக்கு அபிதான் பேரன். நாளைக்கு அப்பனப் பத்தின உண்மை தெரிஞ்சு இந்தக் குட்டிப்பையன் மனசொடிஞ்சு போவக்கூடாதுடி”

“அத்த, அணுகுண்டு சிண்டுக்கு அப்பான்னா, எனக்கு அம்மா. எனக்கு பிரசவம் பாத்தது வேணும்னா டாக்டர் ராமா இருக்கலாம். மசக்கையா இருந்தப்ப கண்ணா என்னை கவனிச்சு, அழுற பிள்ளைக்கு ராத்தூக்கம் முழிச்சு, குழந்த அசிங்கம் பண்ண துணியை அருவருப்பில்லாம துவைச்சு, இப்படி சொல்லிட்டே போவலாம். எங்கம்மா சாவல, அணுகுண்டு உருவத்துல வந்திருக்கு” உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாத குரலில் சொன்ன சரயுவின் கைகளை அழுத்தமாய் பிடித்து, முதுகில் தட்டி சமாதானப்படுத்தினான்.

“அம்மா, இவ நான் மனசார இன்ப துன்பத்தை மறைக்காம பகிர்ந்துக்குற உயிர் தோழமை, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசான். என்னை கிண்டல் பண்ணுறவங்களைத் துவைச்சு எடுத்துருவா. என்னைக் காவல் காத்ததில் ஒரு தகப்பன். தினமும் சத்துணவு வாங்கி சாப்பிடுவேன்னு தானே நெனச்ச. நான் இவளோட சாப்பாட்டத்தான் சாப்பிடுவேன். இவ என்னோட சத்துணவு வாங்கி சாப்பிடுவா. காலைல நான் சாப்பிட்டிருக்க மாட்டேன்னு தெரிஞ்சு பலகாரத்தை வாங்கி கிளாஸ் ஜன்னல் வழியா என் மேல தூக்கிப் போட்டுட்டு போவா. என் பசியறிஞ்சு உணவு தந்த தாய். எல்லாத்துக்கும் மேல அவங்கம்மா சாவும்போது தந்ததை மனசார என் நல்வாழ்க்கைக்காகத் தாரைவார்த்துத் தந்த தெய்வம். இவளை பயபக்தியோடதான் பாக்க முடியுது. இவகூட என்னால குடும்பம் நடத்த முடியாதும்மா” தனது எண்ணத்தைத் தெளிவு படுத்தினான்.

அழுத கண்கள் சிவக்க சமையலறையை சுத்தம் செய்த தாயிடம் மெதுவாக, “அம்மா, அவ சித்ராங்கதாம்மா ஒரே நாள் அர்ஜுனனோட வாழ்ந்து அவனையே மனசில் சுமக்கும் தேவதை. அவ குடுத்த வாழ்வுதான் நம்ம வாழ்க்கை. அதை அவளுக்காக வாழ்ந்தா என்ன தப்பு. பொண்டாட்டி பிள்ளைன்னு இருந்தாத்தான் நல்ல லைப்பா. என் மேல உயிரை வச்சிருக்கும் அம்மா, எனக்காக உயிரையும் கொடுக்கும் தோழி, கட்டிக்கரும்பாட்டம் இனிக்கிற மகன். இப்படித் தானாவே அம்சமா அமைஞ்ச அழகான குடும்பம். என்னை விட அதிர்ஷடசாலி யாருன்னு சொல்லு” தாயை சமாதானப் படுத்தினான்.

சரயுவின் அறையிலிருந்து கசிந்த தாலாட்டு அவர்கள் கண்ணில் கங்கையைத் தோற்றுவித்தது.

சின்னஞ் சிறு கண்மலர், செம்பவள வாய்மலர்

சிந்திடும் மலரே ஆராரோ

வண்ணத் தமிழ் சோலையே மாணிக்க மாலையே

ஆரிரோ அன்பே ஆராரோ

 

பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ

பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால்தான் தூக்கமோ

தப்பாமல் வந்துனை அள்ளியே எடுப்பார்

தாமரை கன்னந்தனில் முத்தங்கள் விதைப்பார்

 

குப்பைதனில் வாழும் குண்டுமணிச்சரமே

குங்குமச் சிமிழே ஆராரோ

வண்ணத்தமிழ் சோலையே மாணிக்க மாலையே

ஆரிரோ ஆராரோ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை அறையின் மூலையில் போட்டுச் சென்றுவிட்டான். ‘எந்துணியை

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 10’

அத்தியாயம் – 10 “அம்மா நீங்க செஞ்சது நல்லாயிருக்கா? நந்தனாவைக் கல்யாணத்துக்குப் பேசிட்டு வாங்கன்னு சொன்னா அவ அக்காவைப் பேசிட்டு வந்து நிக்கிறிங்க” “நான் சொலுறதைக் கேளு. அந்த நந்தனா நமக்கு சரிவரமாட்டா. அவ அழகுதான் ஒத்துக்கிறேன். ஆனா அழகு, மனைவிக்கு