Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 56

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 56

ஜெயசுதாவின் தகாத வார்த்தையின் விளைவை ஆண்கள் தடுக்க வழியில்லாது நிற்க, அவர் கழுத்தை இன்னம் இறுக்கியவாறு தொடர்ந்தாள்.

“மெக்கானிக் பொண்ணுன்னா அவ்வளவு கேவலமா உனக்கு? நான் உன்கிட்ட பிச்சை கேட்டு வந்து நின்னேனா… இப்ப நீதான் என்கிட்டே உன் மகனைத் திருப்பிக் கேட்டு பிச்சை எடுத்துட்டு இருக்க. வசதி குறைஞ்சவளா இருந்தா, பணக்கார பசங்க கூப்பிட்ட உடனே போய்டுவாங்களா… என்ன சீப்பான நெனப்பு…

சொல்லு… எதுக்கு என் மொகத்துல பணத்தைத் தூக்கி எறிஞ்ச… ஹாங்… உன் மகன் கூட படுத்ததுக்குன்னு சொன்னேல்ல… அதுக்கா இருக்கக் கூடாதே… ஒரு வேளை கல்யாணம் ஆனதையே இத்தனை வருஷமா மறைச்சானே அதுக்கு அபராதம் கட்டினியா? ஒரு குழந்தை இருக்குறதை மறைச்சுட்டு, நேத்து முழுக்க என் சம்மதத்தோட என்னைக் கொள்ளையடிச்சானே… அதுக்கு பிராயச்சித்தம் செஞ்சியா… இப்ப எதுக்குன்னு சொல்லாம நீ நகர முடியாது”

அவள் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சரியாய் ஜிஷ்ணுவை சென்றடைய அக்கினியால் அபிஷேகம் செய்ததைப் போலத் துடித்தான்.

ஆணையிட்டே பழக்கப் பட்ட ஜெயசுதா கேள்விகளாய் வந்த கணைகளைத் தாங்க முடியாது மிரண்டு விழித்தார்.

அமைதியாய் இருக்கிறாள். மெல்லிடையாளை மிரட்டியே விரட்டி விடலாம் என்றெண்ணியவர் சரயுவின் குரலை உச்சஸ்தாயில் கேட்டு அதிர்ந்து விட்டார். அந்தப் பெண் சிங்கத்தை எதிர்க்க முடியாது தவித்தனர் தவறு செய்தவர்கள்.

சுதாரித்து தாயை அவளிடமிருந்து பிரித்த ஜிஷ்ணு, “பணத்துக்காக போனது சரயு இல்லை… நான்தான். கடைசி ஆசைன்னு நாடகமாடி என்னை ஜமுனாகிட்ட வித்துட்டிங்க…” ஜெயசுதாவின் தோள்களைப் பிடித்து உலுக்கினான்.

“ஒரு வருஷம்… நீங்க வாங்கின பணத்துக்காக ஒரு வருஷம் நான்தான் விபச்சாரம் செஞ்சேன்… போதுமா?

இவ்வளவு நாள் நடைபொணமா இருந்தவன் நேத்துத் தான் வாழ ஆரம்பிச்சேன். அது உங்களுக்குப் பொறுக்கலையா…?”

மேலிருந்து ஜிஷ்ணு கையை எடுத்தவுடன் அவர் வேகமாய் பானுவின் பின்னே மறைந்துக் கொண்டார்.

ஜமுனாவின் தகப்பனைப் பொசுக்கி விடுவதைப் போலப் பார்த்தான். “ஓ நீங்கதான் இதுக்கு சூத்திரதாரியா? ஜமுனாவுக்கும் எனக்குமான பிரச்சனையை நாங்களே பேசித் தீர்த்துக்கிட்டோம். நானும் ஜமுனாவும் பிரிய முக்கியமான காரணம் உங்களுக்கே தெரியும். உங்க மேல இருந்த மரியாதை காரணமாத்தான் வாயைத் திறக்காம இருந்தேன். என் வாழ்க்கைல இனிமே தலையிட்டிங்க, என் ஊமை வேஷத்தைக் கலைச்சுருவேன். கலைக்கட்டுமா?”

வாழ்க்கையை வியாபாரமாகவும், திருமணத்தை அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கும் அவரா தவறை உணருபவர்? ஜிஷ்ணு சொல்வது காதிலே விழாதது போல் வேறெங்கோ பார்த்தார். ஜிஷ்ணு அவன் வாயால் ஜமுனாவை மட்டுமல்ல எந்தப் பெண்ணையும் பழிக்க மாட்டான் என்று தெரிந்தவர். அப்படி சொல்லுபவனாக இருந்தால் ஜமுனாவுக்குத் தாலி கட்ட சொல்லும்போதே அவளைப் பற்றி சொல்லியிருக்க மாட்டானா? அதுவும் ஜமுனாவே திருமணத்துக்கு முன் ஜிஷ்ணுவிடம் ஒப்புக்கொண்ட உண்மையை… அவனது நேர்மைக்கும் தொழில் திறமையால் அவன் நிறுவிய ராஜ்யத்துக்கும் ஆசைப்பட்டே ஜிஷ்ணுவை விடாது துரத்தி வருகிறார்.

“ஒரே ஜிஷ்ணு, எவளோ ஒருத்தி முன்னால பெத்த தாயையும் மாமனாரையும் அவமானப் படுத்துறியா… அப்படி என்னடா உனக்கு சொக்குப் பொடி போட்டா?”

“அவ எவளோ ஒருத்தி இல்லை என் மனைவி”

“அந்தப் பஞ்சம் பொழைக்க வந்த கூட்டம் போடுற மாலையைப் போட்டுட்டா அவ உன் பொண்டாட்டி ஆயிடுவாளா? அதை எப்பவோ அறுத்து எறிஞ்சுட்டேன்…”

தரையில் உடைந்த இதயத்தின் சதைத்துணுக்காய் சிதறியிருந்த சிவப்பு முத்துக்களை வேதனையோடு பார்த்தான். “சபாஷ்! மகன் உயிரோட இருக்குறப்பவே உன் மருமக தாலியை அறுத்திட்டியா… நீதான் நல்ல அம்மா”

“உன்னைப் பெத்து வளத்து படிக்க வச்சு உசந்த இடத்துல கல்யாணம் பண்ணித் தந்து… இவ்வளவு செய்திருக்கேன்? நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் நல்ல அம்மாதாண்டா…”

“அதுக்குத்தான்மா நீ சொன்னதை எல்லாம் கேட்டேன். என்னைக்காவது எனக்கு என்ன பிடிக்கும்னு கேட்டிருக்கியா? உனக்குப் பிடிச்சதைத்தானே செய்ய வச்சிருக்க… நீயும் அப்பாவும் விரும்பித்தானே கல்யாணம் செய்துட்டிங்க. அப்படியும் ஏன் என் லவ்வை அழிக்க நினைக்கிற?

அம்மா பாசத்துனாலதான் நீ கடைசி ஆசைன்னு சொன்னதும் என் காதலுக்கு சமாதி கட்டிட்டு ஜமுனா கழுத்துல தாலி கட்டினேன். அப்ப கூட உன் காலைப் பிடிச்சுக் கெஞ்சினேனே… நீ இவ்வளவு பெரிய நடிகைன்னு எனக்குத் தெரியாம போயிடுச்சு. அம்மா எப்படிம்மா அரக்கியா மாறின… அதுவும் பெத்த மகனோட மனசையே கொன்னு திங்குற ராட்சசியா மாறின?”

“என்னடா பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு. அவ சொல்லிக் கொடுத்தாளா? நீ இவளை இப்ப வெளிய விரட்டல… என்னை உயிரோட பாக்க முடியாது”

ஜெயசுதாவை நெரித்த புருவத்துடன் பார்த்தவன் நிதானமாய் சொன்னான். “மறுபடியும் மிரட்டுறியா? சரி… உன் உயிர், உன் இஷ்டம் போல செய்… யாருக்காகவும், எதுக்காகவும் என் சரயுவை விட்டுத் தரமாட்டேன்”

தாய் என்ற பிரம்மாஸ்திரம் ஜிஷ்ணுவிடம் வலுவிழந்ததை அனைவரும் கையைப் பிசைந்தவாறே பார்த்தனர்.

ஜிஷ்ணு தனது தாயிடம் பேசிய சமயத்தில் சுதாரித்திருந்தாள் சரயு. அவன் பேசி முடித்ததும், நிதானமாய் அடியெடுத்து ஜிஷ்ணுவின் அருகில் வந்து அவனை நேர் பார்வை பார்த்தாள். காலையில் காதலோடு பார்த்த கண்கள் கனல் வீசியது. இவர்கள் சொல்வது நிஜம்தானா என்று கேள்வி கேட்டது.

அவ்வளவு நேரம் வாதாடியவன், மனையாளின் முன் குற்றவாளியாய்த் தலைகுனிந்தான்.

“சரயு… என்ன நடந்ததுன்னா” மெதுவான குரலில் கெஞ்சலாய் சொன்னான்.

போதுமென கைகளை உயர்த்தியவள், “இத்தனை வருஷமா என்கிட்டே மறைக்கப்பட்ட உண்மை இனியும் புதைஞ்சே இருக்கட்டும்”

“அப்படி சொல்லாதரா… என்னை ஒரு குற்றவாளி மாதிரி பாக்காத… என்னால தாங்க முடியல… மனசு வலிக்குது… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தியே அந்த மாதிரி பாருரா…” அருகில் நெருங்கி சமாதானமாய் அவளது முகத்தை நிமிர்த்தி கண்ணோடு கண் கலக்க முயன்றான்.

அதுவரை கட்டுப்படுத்தி நின்ற சரயுவுக்கு அவனது செயலால் விளைந்த ஆத்திரத்தால் மனம் கொதித்தது. விருட்டென்று அவனது கையைத் தட்டிவிட்டாள்.

“என்னைத் தொடாத.. என் உடம்பெல்லாம் எரியுது. நீ தொட்டா உருகிபோய் நீ செஞ்ச தப்பை மன்னிச்சிடுவேனா… குற்றத்தை மறைக்க தாம்பத்யத்தைப் பயன்படுத்தாதே… அருவருப்பா இருக்கு?”

“அய்யோ நான் அப்படி நினைக்கக் கூட இல்லரா… அப்படில்லாம் சொல்லாதரா… ப்ளீஸ்… கோவத்துல கூட இப்படியெல்லாம் பேசக் கூடாது…”

“விஷ்ணு ஏமாத்திட்ட…லே… பொய் சொல்லிட்ட, என்கிட்டே பொய் சொல்லிட்டலே…”

ஆத்திரமாய் அலைபாய்ந்த அவள் கண்களில் அங்கு அழகுக்காக வைக்கப்பட்டிருந்த டென்னிஸ் மட்டை பட்டது. அதை எடுத்தவள் சரமாரியாய் ஜிஷ்ணுவை அடிக்க ஆரம்பித்தாள்.

“ஐயோ” என்று அலறியபடி தடுக்க வந்த சொந்தங்களைத் தன் கையசைவில் நிறுத்திய ஜிஷ்ணு,

“இது பர்த்தா பார்யா விவகாரம். ஆல் தேர்ட் பெர்சன்ஸ், கெட் அவுட் ஆப் மை ஹௌஸ் அண்ட் ப்ரம் மை லைப்”

அவன் கர்ஜிப்பில் திகைத்தவர்களை ஜிஷ்ணு கோவம் பொங்கும் ஒரு பார்வை பார்க்க, அதுவே அவர்களை வாசலில் கொண்டு நிறுத்தியது. வீடெங்கும் சரயுவின் கோவக் குரலே எதிரொலித்தது.

“ஜிஷ்ணு உனக்குப் பொம்பளைங்க மேல அவ்வளவு ஆசையா?”

“எனக்கு எவ்வளவுடா விலை போட்ட? இலையும் தளையும் போட்டு கடாவை வளர்த்து பலி கொடுக்குற மாதிரி, உன் அன்பையும் பணத்தையும் வாரி இறைச்சு என்னைத் திணறடிச்சு கடைசில என் மனசை பலி போட்டுட்டியேடா”

“ஐயோ… நிஜம்மா அப்படி இல்லரா… நீன்னா எனக்குப் பிச்சி”

மட்டையால் அவனது காலில் ஓங்கி அடித்தாள்.

“அப்படி என்னடா உனக்கு என் மேல பைத்தியம். லைட்ட ஆப் பண்ணா உன் பொண்டாட்டியும் நானும் ஒண்ணுதான? இல்ல என்னை மட்டும் புது விதமா கடவுள் படைச்சிருக்கானா?”

இடதுகையில் அடித்த அடியில் மட்டை முறிந்து சிலாம்பு குத்திக் கிழித்து ரத்தம் வந்தது. உதடு கடித்து பொறுத்துக் கொண்டான் ஜிஷ்ணு.

“தூ… என்னோட இளகுன மனநிலை, நான் உன்மேல நான் வச்ச அன்பு எல்லாத்தையும் உன்னோட காமத்துக்குப் பயன்படுத்திட்டியே. உன்மேல பாசம் வச்ச பாவத்துக்கு என்னை வேசியாக்கிட்டியே”

“சரவெடி இப்படியெல்லாம் தப்பாப் பேசாதடி… அதுக்கு பதில் என்னை வெட்டிப் போட்டுடு”

“உனக்கும், ஒளிஞ்சு நின்னு நான் துணி மாத்துறதைப் பார்த்தானே அந்த சரசோட புருஷனுக்கும் ஒரு வித்யாசமும் தெரியல ஜிஷ்ணு”

“சரயு இதுக்கு மேல பேசாதரா என்னால தாங்க முடியல” வாய் சொன்னாலும் மனம் யாரவன்? என் பங்காரத்தை ஒளிஞ்சிருந்து பாத்தானா? அவன விடக் கூடாது என்று கருவியது. அவள் பேசுவதை கிரகிக்கத் தயாரானான்.

“அவன் எனக்குத் தெரியாம ஒளிஞ்சிருந்தான். ஆனா நீ படிச்சவன், இந்த விஷயத்துல பெரிய அனுபவஸ்தனாச்சே அதனால என்னை சம்மதிக்கவச்சு அனுபவிச்ச”

“தப்பம்மா… உனக்கு பிடிக்கலைன்னு சொல்லிருந்தா என் சுண்டு விரல் கூட உன்மேல பட்டிருக்காது”

“பிடிச்சிருந்ததே, இந்தப் பாதகத்திக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருந்ததே. எனக்கு முதன் முதலா முத்தம் கொடுத்த விஷ்ணுவைத் தவிர வேற யாராவது என்னைத் தொட்டிருந்தா அவன் பொணமாகிருப்பானே. அப்பேலருந்து நீ தானே என் உயிரா இருந்த”

ஜிஷ்ணுவுக்கு எவ்வளவு வலி வந்தாலும் தாங்கலாமென்ற தெம்பு வந்தது.

“இருந்தாலும் விஷ்ணு, உனக்குக் கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா உன் நிழல் இருக்குற பக்கம் கூட வந்திருக்க மாட்டேன்”

“அதனாலதாண்டி சொல்லல… போதுமா… நான் வாழுறதே உன்னை பாக்கப்போற நிமிஷத்தை நெனச்சுத்தான். கல்யாணமானது தெரிஞ்சா அந்த சின்ன சந்தோஷம் கூட இல்லாம போயிடுமே… அதுதான் சொல்லல” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சரயு.

அவள் முகம் திரும்பிய திசையில் வந்து நின்றான். “ப்ளீஸ் கேளுரா… ஜமுனாவும் நானும் சீக்கிரம் பிரியப் போறோம். என் முதல் கல்யாணம் நம்ம காதலுக்கு தடையா இருக்காது. சரயு… சரிபடுத்த முடியாததுன்னு எதுவுமில்லை. நான் உன்மேல எவ்வளவு லவ் வச்சிருக்கேன்னு என்னால சொல்லக் கூட முடியாது.. இனிமே நம்ம சேர்ந்து வாழப் போற ஒவ்வொரு நிமிஷமும் உன்கிட்ட காமிக்கிறேன்”

“வெரி குட்… ஒரு பொண்ணோட வயித்தெரிச்சலைக் கொட்டிட்டு, அந்த நெருப்பு மேல நின்னு வாழலாம்னு டையலக் விடுற. சரசு அக்காதான் நான் ஏன்னு கேக்க நாதியில்லாதவன்னு என்னை அவ புருசனுக்கு கீப்பா இருக்க சொன்னா. எப்படியும் அவ புருஷன் தினமும் யார் வீட்டுக்காவது போயிட்டு வாரானாம். யார் வீட்டுக்கோ போறதுக்கு உன்கூட இருக்கட்டுமேன்னு கூசாம சொன்னா. அதே ஜாதிதான் உன் பொண்டாட்டியுமா? ஏண்டா இந்த ஆம்பளக் கம்முனாட்டிங்கல்லாம் இப்படி இருக்கிங்க” அவள் வேகமாய் இழுத்ததில் ஜிஷ்ணுவின் சட்டைக் கிழிந்தது.

கண்கள் கசிந்தன சரயுவுக்கு, சிறிய கேவல் கிளம்பியது. “அணுகுண்டோட அம்மா மாதிரி நானும் இந்தப் பணக்காரனுக்குக் கூத்தியாளாகிப் போனேனே”

“என்ன வார்த்தை சொல்லிட்டரா… நீ புரிஞ்சுத்தான் பேசுறியா? அழாதே நீ அழுதா என் மனசு வலிக்குது. நம்ம உறவை நீயே அசிங்கப்படுத்தாதடி. பேசாம நான் செஞ்ச தப்புக்கு என்னைக் கொன்னுடு”

“அதைத்தான் செய்யப்போறேன்” பக்கத்திலிருந்த கண்ணாடி டம்ளரை உடைத்தாள். வேகமாய் அவனிடம் நெருங்கினாள். ஜிஷ்ணு இம்மியளவும் நகராமல் அதே இடத்தில் நின்றான். ஆவேசத்தோடு இறங்கிய அவளது கைகள் அவனது மார்பருகே வந்ததும் அந்தரத்தில் நின்றது.

“ஏன் சரயு நிறுத்திட்ட. என்னைக் கொல்றதுதான் உனக்கு நிம்மதி தரும்னா நான் சந்தோஷமா செத்துப் போறேன். ஆனா நீ குத்திட்டு நான் சாகுற வரை என் கண் முன்னாடியே இருக்கணும். உன்னைப் பார்த்துகிட்டேதான் என் உயிர் போகணும்”

கண்ணாடித் துண்டைக் கீழே போட்டவள், நாற்காலியைப் பிடிமானத்துக்குப் பிடித்தவாறு சொன்னாள். “முடியல விஷ்ணு, என்னால முடியல. மானத்தை அழிச்சது எதிரியா இருந்தா சங்கை அறுத்திருப்பேன் அதுக்கு எனக்கு தைரியமிருக்கு. ஆனா உன்னக் கொல்லுற அளவுக்கு எனக்கு தைரியமில்லடா”

“ஐயோ ஐயோ அவ்வளவு பெரிய தப்பு நடந்திருக்கு. அப்பா என்னைக் காப்பாத்திக்க சொல்லிக் கத்தியைக் கொடுத்திங்க. ஆனா இவனை அழிக்கிற மனசைத் தரலையே. இவன் செய்யுற நம்பிக்கை துரோகத்தை மன்னிக்கிற அளவுக்கு வெட்கங்கெட்டுப் போனேனே”

ஜிஷ்ணுவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, உடல் முழுவதுமிருந்த ரத்த வரிகள் வீங்கி வலியில் விண்ணென தெரித்தது. அத்துடன் முயன்று அவளை நெருங்கியவன் இறுக்கி அணைத்துக் கொண்டான். அதிர்ச்சியில் சோர்ந்திருந்த சரயுவால் அவனது உடும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.

“சரயு… நான் சூழ்நிலையால பெரிய தப்பு செஞ்சுட்டேன். ஒத்துக்குறேன். ஆனா இதுக்கெல்லாம் காரணம் உன் மேல இருக்குற காதல்தான்னு உனக்குப் புரியலையா… முன்னமே எனக்குக் கல்யாணமானதை சொல்லிருந்தா நீ என்னை விட்டுப் பிரிஞ்சிருப்பல்ல… அதுனாலதான் சொல்லல. என் தப்புக்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்குறேன்.”

அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தாள் சரயு.

“மாலையை அம்மா அறுத்துட்டாங்கன்னு கவலைப்படாதேரா… அதுதான் இந்த செயின் இருக்குல்ல”

அவனை ஒரு வினாடி முறைத்துப் பார்த்தவள், வேகமாய் அந்த சங்கிலியைக் கழட்டி அவன் கையில் வைத்தாள். விக்கித்துப் போய் அவளையே பார்த்தான் ஜிஷ்ணு.

‘பைத்தியக்காரி இந்த சிறு அடையாளமா நம் பந்தத்தை நிர்ணயிப்பது. தாய்க்கும் குழந்தைக்குமான பரிசுத்தமான பந்தத்துக்கு என்ன அத்தாட்சி தேவை. நீ கழட்டித் தந்தது தாலியில்லை பெண்ணே, உன் மனதை சுடும் என் நினைவுகளை. அதைத் துரத்துவது அவ்வளவு சுலபமா என்ன’ என்ற எண்ணம் தோன்றியதும் அவளது சிறுபிள்ளைத் தனமான செய்கையில் புன்னகை அரும்பியது ஜிஷ்ணுவுக்கு.

அதற்கு முத்தத்தைப் பதித்தான். “சரிரா போட வேண்டாம்… உனக்குப் பிடிக்கலைன்னா நான் கம்பெல் பண்ண மாட்டேன்”

“என்னை என் வழில விடு, நான் கிளம்புறேன்”

அவன் அறைக்குச் சென்று ஜிஷ்ணு தடுக்கத் தடுக்க வேகமாய் தனது பொருட்களை சேகரித்தாள்.

“சொன்னா கேக்க மாட்டியாடா? இந்த அரவாடு உனக்கு வேண்டாம். பேசாம உன் பொண்டாட்டியோட குடும்பம் நடத்து, இனிமே என்னைத் தேடி வந்த கொன்னுடுவேன் ராஸ்கல்”

ஒரு நாற்காலியை காண்பித்தவள், “இதுல உட்காருங்க ஜிஷ்ணு”. பேசாமல் அமர்ந்தான்.

“என்னை ஜிஷ்ணு கூப்பிடாதரா, நான் உன் விஷ்ணுரா. சரயு நான் தப்பு செஞ்சேன்… உண்மையை மறைச்சேன். எதுக்காக… நீ வேணும்னு தானே. உன் விஷ்ணுவை நீ மன்னிக்க மாட்டியா? இந்த செயினைப் போட்டுக்கோரா… என்னை ஒரு பிச்சைக்காரனா நெனச்சு உன் லவ்வை பிச்சை போடுரா… நீ பிரிஞ்சா நான் செத்துடுவேன்ரா… பங்காரம் வேண்டாம்ரா”

அவனது குரலை அவளால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவளது உள்ளம் இன்னமும் அவனைத் தேடுகிறதே… யார் என்ன சொன்னாலும் இவன் என்னை மட்டுமே காதலிக்கும் கணவனல்லவா…

“என்ன ப்ளாக்மெயில் பண்ணுறியா… என்னைத் தடுக்காதே விஷ்ணு… நீ செஞ்ச தப்புக்கு தண்டனை தந்திருக்கேன். நீ இந்த ரூம்ல தான் இருக்கணும்”

“பனிஷ்மென்ட்டா… நான் செஞ்ச தப்புக்கா… அப்ப சரி… என் பங்காரம் சொன்னா கரெக்ட்டாத்தானிருக்கும்… எத்தனை நாள்ரா…”

கண்களை மூடித் திறந்தவள், “ஒரு வாரம்… இந்த ரூம்ல இருக்கணும்… இந்த ஒரு வாரமும் என்னை தொல்லை பண்ணக் கூடாது.”

“நீ இங்கதான இருப்ப?”

“இல்ல நான் ஊருக்குப் போறேன். உன்னைப் பார்த்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது. உன்னை அடிச்சுடுவேனோன்னு பயம்மா இருக்கு”

“பரவால்ல… ஆனா ஒரு வாரத்துல வந்துடணும்… இல்லைன்னா நான் உன்னைத் தேடி வந்துடுவேன்”

அவனது வெகுளித்தனமான பேச்சைக் கேட்க முடியாமல் குளியறையில் நுழைந்து கதவை சாத்தினாள். அவனது அழுக்கு சட்டை அங்கு இருந்தது. அவளது விஷ்ணு அங்கு இருப்பதைப் போலவே பிரமை. கற்பனையில் அவனது நெற்றி முடியை விலக்கி மென்மையாய் முத்தமிட்டாள். கண்களிலிருந்து கண்ணீர்த் துளி ஒன்று அவன் சட்டையில் விழுந்தது. ஆவேசமாய் அவன் முகம் முழுவதும் முத்தமிடுவதாக நினைத்து அவனது சட்டைக்கு சத்தமில்லாமல் முத்தமிட்டாள்.

“ஐ லவ் யூ சோ மச் விஷ்ணு. ஆனா சில ஜோடிகள் காதலிக்க மட்டுமே பிறந்தவங்க. சேர்ந்து வாழ அவங்களுக்குக் கொடுப்பினை இல்லை” கிசுகிசுப்பாய் சொன்னாள். அங்கிருந்த அவனது வெஸ்ட்டைப் பார்த்தாள். அவசர அவசரமாக அவளது உடைக்குள் அந்த அழுக்கு பனியனை அணிந்து அதன் மேல் டாப்சை அணிந்தாள். வெளியே தெரியவில்லை என்று ஊர்ஜிதம் செய்துக் கொண்டாள். முகம் கழுவி பொட்டிட்டு வந்தாள்.

“இனிமே என்ன செய்யப் போற?” தவிப்போடு கேட்டான் ஜிஷ்ணு.

“என்னவோ செய்வேன். என்னை என்ன அந்த சித்ராங்கதான்னு நெனச்சியா.. சாகுற வரைக்கும் உன்னையே நினைச்சு வாழ. என் லைபை வேஸ்ட் பண்ண மாட்டேன். யாராவது நல்லவனைக் கல்யாணம் பண்ணிப்பேன்”

கஷ்டப்பட்டு புன்னகைத்தான். “அவுனா… உன்னால முடியுதான்னு பாரு”

“சேலன்ஞ் பண்ணுறியா… அம்மா, அப்பா ரெண்டு பேரும் என் கண் முன்னாடி இறந்தாங்க… அதைத் தாங்கினேன்… கூடப் பொறந்த அக்காவோட துரோகத்தையும் மச்சானோட வக்கிரத்தையும் தாண்டினேன். இதுவரைக்கும் கடலளவு கஷ்டத்தைக் கொடுத்த கடவுள் இப்ப கையளவு தானே தந்திருக்கான். இதையும் தாங்குவேன். உங்களுக்காகவாவது நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குவேன். இந்த இருவத்திநாலு மணி நேரம் நமக்குள்ள நடந்த விஷயங்களை என் லைப்ல இருந்து நான் அழிச்சுட்டேன். அதுல என்னோட பப்பி லவ்வும் அடக்கம். நீங்களும் இதை மறந்துடுறதுதான் நல்லது”

தனது பையை எடுத்துக் கொண்டாள். முகத்திலிருந்த கனிவு மாறி ஒரு திமிர் உட்கார்ந்துக் கொண்டது. ‘என் பொண்டாட்டியோட கவலையை மறைக்குற மாஸ்க் தான் இந்தத் திமிரா’ ரசனையுடன் பார்த்தபடி எழுந்தான் ஜிஷ்ணு.

“உங்க பனிஷ்மென்ட் இன்னம் முடியல ஜிஷ்ணு. நீங்க ரூமை விட்டு வெளிய வரக் கூடாது” புன்னகையுடன் சொன்னவள்,

“ராஜு கார்ல காத்திருக்கார். நீ எங்க போகணுமோ அங்க பத்திரமா இறக்கி விட்டுடுவார். நம்ம மறுபடியும் மீட் பண்ணுறவரை பத்திரமா உடம்பைப் பாத்துக்கோ. என்னைப் பத்திக் கவலைப்படாதே. என் ரௌடி பொண்டாட்டிட்ட காலம் பூர அடி வாங்கணுமே அதுக்காகவாது நானும் என் ஹெல்த்த கவனிச்சுப்பேன்”

“ஜிஷ்ணு… என் வாழ்க்கைல ஏதாவது ஒரு நாளை அழிக்க முடிஞ்சா… இந்த இருவத்திநாலு மணி நேரத்தை அழிச்சுடுவேன். எதிர்காலத்துல நம்ம எப்பயாவது பார்த்தா, முன்ன பின்னே அறிமுகமானவங்களா கூட காமிச்சுக்க வேண்டாம். என் பேமிலியை அது பாதிக்கும்… நீ ரெண்டு பொண்ணுங்களுக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சிருக்க I hate you to the core” வெறுப்போடு சொன்னாள்.

அவள் கரங்களைப் பிடித்து பலவந்தமாய் தன்னருகே இழுத்து அவள் திமிறத் திமிற இதழ்களில் தனது இதழ்களைப் பதித்தான்.

“பங்காரம் I love you with all my heart and soul”

அவனைத் தள்ளி விட்டு, இதழ்களை அழுத்தமாய்த் துடைத்துக் கொண்டாள்.

“அடுத்தவ புருஷன் என்னைத் தொடக் கூடாது. என் கணவன் ராமனா இருக்கணும். உன்னை மாதிரி அர்ஜுனன் எனக்கு வேண்டாம்” விரல் சுட்டி எச்சரித்தாள்.

அழுது சிவந்த கண்களை மறைக்கக் குளிர்க் கண்ணாடியை அணிந்தவள், “அட்யு ஜிஷ்ணு” கிளம்பினாள்.

“நா பங்காரம்… நோ ‘அட்யு’ ஜஸ்ட் ‘ஆ ரெய்வோர்’ நீ தந்த பனிஷ்மென்ட்டை மனசார அனுபவிச்சுட்டு, நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் உன்னை விடமாட்டேன். தேடி வருவேன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

இரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 14’

அத்தியாயம் – 14   ‘கௌமாரியம்மா என் மேல அன்பு செலுத்த இந்த உலகத்தில யாருமே இல்லையான்னு உன்னைக் கேட்டுட்டுத்தான் தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன். ஆனா என்னைக் காப்பாத்தி புது வாழ்க்கை தந்த ப்ரித்வியை நல்லா வை. இனிமேலும் ப்ரிதிவியை சோதிக்காதே.