Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 52

சீதாராமக் கல்யாணம் முடிந்தவுடன் அங்கேயே உணவு பரிமாறப்பட்டது. தொழிலாளிகளுடன் தொழிலாளியாய் தரையில் அமர்ந்து உண்டான் ஜிஷ்ணு. சரயுதான் பாவம் திணறி விட்டாள். இனிப்பினை உண்டவளுக்கு பப்பு, புலுசு, புளிஹோரா என்று விதவிதமாய் பரிமாறப்பட்ட உணவின் காரம் தாங்க முடியவில்லை.

“சாப்பிடும்மா” என்று அன்போடு சொன்னவர்களின் மனதைப் புண்படுத்த முடியாது உண்டவள், உபசரித்த பெண்மணி சற்று நகர்ந்ததும் தன்னுடைய தண்ணீர் மட்டுமல்லாது ஜிஷ்ணுவின் டம்ளரில் இருந்ததையும் காலி செய்தாள்.

“என்னரா…?” கேள்வியுடன் சரயுவை நோக்க, காரம் தாங்காமல் ரோஜா இதழ்கள் செம்மையாக மாறி இருந்தது. முகமே சிவக்க அமர்ந்திருந்தவளின் நிலையை சடுதியில் உணர்ந்தவன், ராஜுவை அழைத்து கூல்ட்ரிங் வாங்கி வரச் சொன்னான்.

கொஞ்சம் காரம் அடங்கியவுடன், “இந்தா பழத்தை மட்டும் சாப்பிடு… மத்ததை நான் சாப்பிடுறேன். இங்க வேலை செய்யுறவங்க ஒவ்வொரு பைசாவா சேர்த்து நடத்துற விழா. சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக்கூடாது” என்று அன்போடு சொன்னான்.

“ஏன் ஜிஷ்ணு இவ்வளவு காரமா சாப்பிடுறாங்க?” காரம் தாங்காமல் வாயில் மூச்சு விட்டவாறு கேட்டாள்.

“எங்க ஊருல மிளகாய், பருத்தி மட்டுமில்லாம புகையிலை விளைச்சலும் அதிகம்ரா… பதப்படுத்தாத டொபாக்கோவை வாயில் அடக்கிகுவாங்க. அது அவங்க நாக்குல இருக்குற டேஸ்ட் பட்ஸ அப்படியே மரத்து போக வச்சுடும். நீயெல்லாம் சாப்பிடுற அளவுக்கு உப்பு உறைப்பு அவங்களுக்குப் பத்தாது. வழக்கத்தை விட ரெண்டு மடங்கு மூணு மடங்கு அதிகம் வேணும். அப்பத்தான் அவங்களோட நாக்குக்கு உறைக்கும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இவங்களுக்குக் காரம் பழகிடுச்சு.

நானும் இவங்களோட புகையிலைப் பழக்கத்தை மாத்தணும்னுதான் பாக்குறேன் முடியல”

“அடேங்கப்பா… முதல்ல நீ சிகரெட் குடிக்குறதை நிறுத்து அப்பறம் ஊருக்கு உபதேசம் செய்யலாம்”

“என் வாழ்க்கைல கிடைக்குற சின்ன சின்ன இளைப்பாறுதலையும் விட சொன்னா எப்படிரா…” என்பதோடு பேச்சை நிறுத்திக் கொண்டான்.

கிளம்பும்போது விழாவுக்கு ஆன செலவாக கணிசமான தொகையும், அவர்களுக்கு அன்று விடுமுறையும் அளித்துக் கிளம்பினார்கள்.

திருமணத்தை நீங்கள் எப்போது சொன்னாலும் சரி ஆனால் இப்பொழுது சரயு புகுந்த வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று ராஜு அன்புக் கட்டளையிட்டதை மறுக்க முடியாது அவளையும் ராஜு அருந்ததி தம்பதியினரையும் அழைத்துக்கொண்டு தாரணிக்கோட்டை வீட்டுக்குக் கிளம்பினான் ஜிஷ்ணு. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

“ஒவ்வொரு தடவையும் கல்யாண உற்சவம் முடிஞ்சதும் கண்டிப்பா சின்ன தூறலாவது போடும்”

“எங்க ஊர்லயும் அப்படித்தான் அங்கிள் சித்திரை திருவிழா சமயத்துல சின்ன தூறலாவது போடும்”

பச்சை பட்டாடை உடுத்திய வயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள் சரயு. சாமரமாய் வீசிய குளிர்ந்த காற்றில் அவளுக்குத் தூக்கம் சொக்கியது. ஜடையை முன்னால் போட்டு அடியிலிருக்கும் முடியை முறுக்கி முறுக்கி விளையாடிக் கொண்டிருந்தாள். ஜிஷ்ணு அதைப் பார்த்து தனது மனமும் இந்த முடியைப் போல இவள் கையில் சிக்கியிருக்கிறது என்றெண்ணிக் கொண்டான்.

எங்கு சுற்றினாலும் மாலையில் சரியாக பட்டியில் வந்தடைந்து விடும் மாட்டினைப் போல, எல்லாத் திசையிலும் அலைந்துவிட்டு மறுபடி மறுபடி சரயுவின் மீதே வந்து நிலைத்த ஜிஷ்ணுவின் கண்பார்வையை கவனித்தார் ராஜு. ‘மனசுல இவ்வளவு ஆசையை வச்சுட்டு யாருக்காக நீங்க கஷ்டப்படணும் பாபு’

“அருந்ததி ஒரு ஆச்சரியத்தைப் பாத்தியா… மிதிலைல நடந்த சுயம்வரதப்ப சிவதனுசையே அனாயசமா தன்னோட இடது கையால தூக்கின ராமனால, தாலி கட்டினப்ப சீதம்மாவோட ஜடையைத் தூக்க முடியல…”

சொல்லிவிட்டுப் பெரிதாய் சிரித்தார். அவர் சொல்லியதன் அர்த்தம் புரிந்த அருந்ததியும் அந்த நகைப்பில் கலந்து கொண்டார்.

காலையில் சரயுவின் கழுத்தில் சிவப்பு மாலையைப் போட்டபோது அவளை சடையைப் பிடித்துக் கொள்ள சொன்னதைத்தான் கிண்டல் செய்கிறார் என்பது புரிந்து வெட்கத்தால் முகம் சிவக்க “ராஜு” என்றான் ஜிஷ்ணு.

“பாபு நீங்க வெட்கப் படுறது கூட அழகாத்தானிருக்கு. அப்படித்தானே சின்னம்மா” என்று வினவ,

ஒன்றும் புரியாமலேயே “அவுனு அவுனு” என்று தனக்குத் தெரிந்த வார்த்தையால் ஆமோதித்தாள் சரயு.

அவளது கையைக் கிள்ளி, “ஹே, பேசாம இருடி” கிசுகிசுப்பாய் சொன்னான் ஜிஷ்ணு.

‘மூணு வருஷம் நம்ம ஊர் பசங்க அதிகமா படிக்குற இடத்துல இருந்திருக்கா, இவளுக்குத் தெலுகு இன்னமுமா புரியல’ என்று தனக்குள் கேள்வி கேட்டபடி, “நீ சைதன்யா கிட்ட தெலுகு கத்துக்கல?” என்றான்.

அவனைத் திமிராகப் பார்த்தவள், “ஏன் கத்துக்கணும்?”

‘எனக்காக’ என்று நினைத்தவன், “அவ உன் ரூம்மேட் காதா… அவ பேசுறது புரியணுமில்லை”

“அதுக்குத்தான் அவளுக்கு மண்டைல கொட்டி கொட்டித் தமிழ் கத்துத்தந்தேன்… அவ ரூமுக்குள்ள நுழைஞ்சவுடனே, செருப்பைக் கழட்டிப் போடும்போதே கையோட தெலுங்கையும் சேர்த்து லாக் பண்ணிடனும்னு முதல் நாளே தெளிவா சொல்லிட்டேன். இன்னும் ரெண்டு வருஷம் என் ரூம்ல இருந்திருந்தா தமிழ்ல கவிதையே எழுதியிருப்பா…”

“அதானே… அப்ப உனக்கு இன்னமும் சுந்தரத் தெலுகுல ஒரு வார்த்தை கூடத் தெரியாது…” கிண்டலாகக் கேட்டான்.

“ஏன் தெரியாம… குக்கா, காடிதா, கோட்டி, தெய்யம், கொட்டேஸ்தாணு, சம்பேஸ்தானு…” அவள் தொடர, பாய்ந்து சென்று அவள் வாயைப் பொத்தினான்.

“நோரு மூய்… தெரியாம கேட்டுட்டேன். என்னடி, இவ்வளவு கெட்ட வார்த்தை கத்து வச்சிருக்க…” சிரித்தபடியே சொன்னான்.

“என்ன செய்யுறது ஜிஷ்ணு, தமிழ்ல திட்டுனா உங்க ஊரு அம்மாயிக்கு உரைக்க மாட்டிங்கிதே” பச்சை பிள்ளையைப் போல் பாவமாய் கேட்டாள்.

குறும்பாய் சிரித்தவன், “ம்ம்ம்… நீ தெலுகு கத்துக்கவே வேணாம்… அதை கொஞ்சநாள் சுந்தரமாவே இருக்கவிடு… கத்து வச்சிருக்கா பாரு நாயே, பேயேன்னு திட்ட…” அவள் கையை நன்றாகக் கிள்ளி விட்டு ட்ரைவிங்கைத் தொடர்ந்தான்.

‘தெலுகே தெரியலைன்னாலும் ‘சரயு தாரணிக்கோட்டா’ன்னுற பேர் இவளுக்குப் பொருத்தமாத்தானிருக்கு’ மனதுக்குள் அவளது பெயரை சொல்லிப் பார்த்துக் கொண்டான்.

தாரணிகோட்டையிலிருக்கும் அரண்மனை போன்ற ஜிஷ்ணுவின் வீட்டை கண்கள் விரியப் பார்த்தாள் சரயு. இந்தக் கனவுக் கல்யாணம் ஒரு வேளை உண்மையாகி விட்டால், சரயுவும் அவனும் fairy tale- லில் காண்பிப்பதைப் போல சந்தோஷமாய் வாழ ஆரம்பித்து விட்டால் கற்பனையில் மிதந்தபடியே நடந்தான்.

நீளம் கொண்ட கண்ணும், நேசம் கொண்ட நெஞ்சும்

காலம்தோறும் என்னை சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்

மன்னன் எந்தன் பேரை சொல்லும் பொன்மணி

கடவுளிடம், அவன் மனைவி வலதுகாலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தால் நன்றாக இருக்கும் என்று வேண்டியபடி பார்க்க, இயல்பாகவே அவ்வாறு நடக்க, ஜிஷ்ணுவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.

ஆரத்தி கரைக்க வேண்டும் என்று சொன்ன அருந்ததிக்குக் கண்களாலேயே மறுப்பு தெரிவித்துவிட்டு சரயுவின் கையைப் பிடித்து சந்தோஷமாய் வீட்டினுள் அழைத்து சென்றான். தனது பெரிய கண்களால் வீட்டை வியப்பாய் ஆராய்ந்தாள் சரயு.

“நீ பெரிய பணக்காரனா ஜிஷ்ணு… எவ்வளவு பெரிய வீடு… சினிமால காமிக்கிறது மாதிரி சிவப்பு ரஜாய் எல்லாம் விரிச்சு…

நீ எப்படி ஜிஷ்ணு தனியா வீட்டுல இருக்க… உன் கூட யாருமே இல்லையா…?

உங்கம்மா அப்பா ஊருக்குப் போயிட்டாங்களா…?

மெட்ராஸ்ல உனக்கு இன்னொரு வீடு இருக்கா…?”

அவளது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவளையே இமைக்காமல் பார்த்தான்.

காற்றில் வாங்கும் மூச்சிலும், கன்னி பேசும் பேச்சிலும்

நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது

அவன் பதிலளிக்காதது அவளின் ஆர்வத்துக்குத் தடை போடவே இல்லை.

“இங்க வேலை முடிஞ்சதும் போர் அடிக்காது. போர் அடிச்சா என்ன செய்வ?”

‘தண்ணியடிப்பேன்… அப்பறம் போதையை சாக்கா வச்சுட்டு கனவுல உன் கூட டூயட் பாடுவேன்’ என்று சொல்ல வாயைத் திறந்தவன் அப்படியே யூ டர்ன் அடித்து,

“பாஸ்கெட் பால் விளையாடுவேன்” என்றான்.

“நீயா… பாஸ்கெட்பாலா… ஹே பொய்தானே சொல்லுற?” களுக்கினாள் சரயு.

கேள்வி கேட்டுத் தொணத்திய சரயுவை பூஜை அறையிலிருக்கும் விளக்கை விளக்கி, திரிபோட்டு எண்ணை ஊற்றி, மலர்களை தெய்வத்துக்கு சூடிவிட்டு விளகேற்றச் சொன்னார் அருந்ததி. காலையில் ராஜுவின் வீட்டில் சரயுதான் விளக்கேற்றினாள். அதனால் வித்யாசமாய் அவள் மனதுக்கு எதுவும் படவில்லை.

அவர்கள் உண்ண ஒரு டிபன் காரியரில் உணவை வைத்துவிட்டு, “பாபு தயவுசெய்து எதுவும் குழப்பம் செய்துடாதிங்க. தெய்வத்தின் தீர்ப்பை ஏத்துக்கோங்க” என்று உருக்கமாக சொல்லி ராஜுவும், அருந்ததியும் விடை பெற்றுக் கிளம்பினர்.

ற்று தூரம் நடந்து வரலாம் என்று சொல்லி அவளை தோட்டத்துக்கு அழைத்து சென்ற ஜிஷ்ணு, சீக்கிரம் ஒரு நல்லவனாய் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூற, திகைத்து நின்ற சரயு பதில் பேசாமல் நடந்தாள். வானம் இருவரின் மனதைப் போல மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவர்கள் மேல் உரிமையோடு விளையாடிய காற்றோ இருவரின் அன்பைப் போலக் குளிர்ச்சியாய் இருந்தது.

“உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன் சரயு. விஷ்ணு மேல ஆசையை வளத்துக்காதே. புரிஞ்சுக்கோ. இந்த பப்பி லவ்வெல்லாம் ப்ராக்டிகல் லைப்க்கு ஒத்து வராது. நீ ஒரு நல்லவனா பாத்து உன் வாழ்க்கையை அமைச்சுக்கோ. ப்ளீஸ்ரா சரின்னு சொல்லு” வற்புறுத்தியபடி வந்தான்.

‘இப்படி சொல்லுறதுக்கு பதில் நீ என்னைக் கொன்னே போட்டிருக்கலாம்’ பதிலே சொல்லாமல் நடந்தாள் சரயு. காலையிலிருந்து கவனித்துக் கொண்டுதானிருக்கிறாள். அவன் ஒவ்வொரு செயலிலும் காதலைக் காட்டி வருவதை உணருகிறாள். ஆனால் ஏன் ஒத்துக்கொள்ள மறுக்கிறான். அப்படி என்னதான் இவனுக்குப் பிரச்சனை.

“எனக்குத்தான் பப்பி லவ்…” உனக்கு என்பதை சொல்லாமலே நிறுத்தினாள்.

அவன் உணர்ந்து கொண்டான். “எனக்கு உன் அழகு மேல வெறித்தனமான ஈர்ப்பு… என்கிட்டே டேட்டிங் போலாமான்னு கேட்ட பொண்ணுங்கதான் அதிகம். அதனால பொண்ணுங்க மேல எனக்குப் பெருசா மரியாதையில்லை. இவளுக்கு ஒரு லக்ஷம், இவ காஸ்ட்லி அஞ்சு லக்ஷம் செலவாச்சு இப்படித்தான் பேசுவோம்” பாதி பொய் கலந்து சரடு விட்டான்.

‘பொண்ணுங்களை லட்சத்தை வச்சு எடை போடுவியா… அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நீ’

“சின்ன வயசில் உன்னைப் பார்த்தப்ப உன்னை ஒரு பெண்ணா நெனச்சதே இல்லை. என் மேல ஆதாயமில்லாம பிரியம் வச்சிருக்குற ஒரு அன்பான தேவதையாத்தான் பார்த்தேன். ஆனா கொஞ்ச நாள் கழிச்சு மெட்ராஸ்ல நான் உன்னைப் பார்த்தப்ப நீ சரயுன்னே சத்தியமா தெரியாது. அப்படித் தெரிஞ்சிருந்தா என் பார்வை வேற மாதிரி இருந்திருக்கும்”

தனது பேச்சு அவளை யோசிக்க வைக்க வேண்டும் என்றே நினைத்துப் பேசினான். ஒரு சலனமுமில்லாமல் கேட்ட சரயுவின் முகத்திலிருந்து எதையுமே ஜிஷ்ணுவால் படிக்க முடியவில்லை.

‘லேடீஸ் முகம் அப்படியே உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும். இந்த ராட்சஸி எப்படி ரியாக்க்ஷன் இல்லாம நிக்கிறா பாரேன்’ வியந்தவன் தொடர்ந்தான்.

“நான் பார்த்த பொண்ணுங்கள்ல நீ ரொம்ப வித்யாசம். எப்படி சொல்லுறது… வானத்துலருந்து பூமிக்கு வந்த மோஹினி மாதிரி, ரதிதேவியாட்டமிருந்த. ஒரே நொடில அப்படியே உன்மேல பைத்தியமாயிட்டேன். உன் பின்னாடியே சுத்தினேன். என்னைக் கவர நீ எந்த முயற்சியுமே செய்யல. நீ பாட்டுக்கு நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருந்த. பெண்மைன்னா மென்மை, வெட்கம், பயம், ஆம்பிளைங்களை சார்ந்து இருக்குறவங்க இப்படினெல்லாம் சொல்லுற டெபனிஷனை உடைச்சுட்டு ஆண்களே ஆச்சரியப்படுற அளவுக்கு விஸ்வரூபமா நின்ன. அதுவே எனக்கு உன் மேல இருக்கிற ஆசையைக் கொழுந்து விட்டு எரிய செஞ்சது. உன்கூடவே இருக்க என்ன வேணும்னாலும் செய்ய ரெடியா இருந்தேன்”

‘நானும் உன்கூடவே இருக்க ஆசைப்படுறேன் விஷ்ணு. ஆனா அதெல்லாம் பகல்கனவா போயிடும் போலிருக்கே. ஏன் இப்படி சுத்தி வளைக்கிற… நான் உன்னை விட்டு விலகணும்னு நினைக்கிறயா… அதுதான் உன் ஆசைன்னா கண்டிப்பா செய்வேன்… உன் கண்ணுல படாத தொலைவுக்குப் போயிடுவேன். அப்பறம் நீ நெனச்சாக் கூட என்னைப் பாக்க முடியாது’ கண்களை வலியுடன் மூடிக் கொண்டு அவன் பேசுவதை கவனிக்க முயன்றாள்.

“எனக்கு உன்மேல ஆசை, உனக்கோ என் மேல சின்ன வயசிலருந்தே ஏற்பட்ட அன்பு. அதை காதல்ன்னு நம்ம ரெண்டு பேரும் நம்பற மாதிரி சூழ்நிலைகள் அமைஞ்சது. நம்ம ரெண்டு பேரோட வயசும் அதுக்கு ஒரு காரணமா இருக்கலாம். இதுதான் உண்மை சரயு. இதை சொல்லுறதுக்கு நான் வெக்கமே படல”

‘உனக்காகவேதான் நான். இதை சொல்ல நானும் வெக்கமே படல’

பேசாமலேயே அங்கிருந்த பன்னீர்பூவின் வாசத்தை நுகர்ந்தபடி நடந்தாள். ஜிஷ்ணுவுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை.

சரயுவுக்கு அவனிடம் பதில் சொல்லவே பிடிக்கவில்லை. அவ்வப்போது ஜிஷ்ணுவின் கண்களில் எட்டிப் பார்க்கும் விஷ்ணுவே அவளது இலக்கு. இவ்வளவு வருடமாகிவிட்டதே, ஒரு முறையாவது விஷ்ணுவாய் மாறி தன்னிடம் பேசமாட்டானா என்று மழைக்கு ஏங்கும் சக்கரவாகமாய் அவன் முகத்தையே பார்த்து நின்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21

ஜிஷ்ணு படுக்கையில் படுத்துக் கொண்டு எப்போதடா பொழுது விடியும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். முத்தமிட்டபோது படு நெருக்கத்தில் பார்த்த சரயுவின் ரோஜா இதழ்களும், கைகளால் உணர்ந்த அந்த மாம்பழக் கன்னத்தின் மென்மையும், விசிறியாய் அசைந்த அவளது

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 23தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 23

டிக் டிக் டிக் என்ற கடிகார முள் நகரும் ஓசையைத் தவிர அந்த அறையில் வேறொன்றும் சத்தமில்லை. ஏஸியை நிறுத்தியிருந்தான் ராம். சற்று உற்று கவனித்தால் சிண்டு மூச்சு விடும் ஒலி கேட்டது. இவனாச்சும் நல்லாத் தூங்கட்டும் என்று ராம் நினைத்துக்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 59தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 59

காலையிலிருந்து இருப்பே கொள்ளாமல் தவித்தான் ஜிஷ்ணு. சரயுவை வெறிப் பிடித்தார்போல் தேடி அலைகிறான். பலன்தான் இல்லை. அவளது சொந்த அக்கா குடும்பத்துக்குக் கூட அவளிருக்கும் இடம் தெரியவில்லை. ‘இன்னமும் விளையாட்டு புத்தி மாறல. இடியட் புருஷன்கிட்டயே கண்ணாமூச்சி விளையாடுறா’. ஜமுனாவிடமிருந்து விவாகரத்து