Tamil Madhura Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 4

4. அத்தியாயம் – 

அரவிந்தும் ஸ்ராவனியும் ஊருக்கு வந்து இரண்டு நாட்களாகி விட்டது. திருச்சி என்றால் தெரிந்தவர்கள் இருப்பார்கள். இங்கு யாரையும் தெரியாது. அதுவும் ஸ்ராவணியை வீட்டில் விட்டு விட்டுப் போகவும் அவனுக்கு மனமில்லை. ஏதோ தெனாலிராமன் பூனை வளர்த்த கதை போல் ஆகிவிட்டது. அதனால் வீட்டினுள்ளே அடைந்து கிடந்தான். வீட்டை கொஞ்சம் ஆராய்ந்தான். 

பாதி நாள் கரண்ட் இருப்பதில்லை. சிலு சிலுவென காற்று வரும் ஒரு வேப்ப மரம்  கூட கண்ணுக்குத் தெரியவில்லை. எங்க பார்த்தாலும் மனிதர்களும், கான்கிரிட் வீடுகளும் தான். இந்த வீடு கூட ஒரு படுக்கையறையுடன் தான் இருக்கிறது. உள்ளே நுழைத்தவுடன் திண்ணை போன்ற இடம். அதில் ஒரு ஆள் நன்றாக சேர் போட்டு உட்காரலாம். அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கலாம். அதில் தான் சத்யா வீட்டில் இருக்கும் பெருன்பான்மையான நேரம் வாசம் செய்வாள். அதன் ஒரு மூலையில் பழைய பேப்பர் மற்றும் செருப்புகள் வைக்க ஒரு சிறிய ஷூ ராக் . தின்னையைக் கடந்தவுடன் ஒரு விசாலமான  கூடம். அதில் போடுவதற்கு மடக்கு நாற்காலிகள். அதனை எடுத்து ஓரமாக மடித்து வைத்திருந்தார்கள். ஹால் நீளத்திற்கு ஏற்ற அளவு அதற்கு வலது புறம் இருந்த இடத்தை இரண்டாகத் தடுத்து படுக்கை அறையாகவும், சமையல் அறையாகவும் கட்டி இருந்தார்கள்.  

ஹாலின் வலதுபுறத்தில் ஒரு படுக்கை அறை. ஹாலின் பாதி அளவு இருந்தது. அதில் ஒரு மூலையில் பீரோவும், இரு சுவர்அலமாரிகளும் இருந்தது. எல்லா துணிகளும் அடுக்கிக் கொள்ள வாகாக இருந்தது. பீரோவுக்கும் சுவருக்கும் இடையே இருந்த இடைவெளியில் பத்தமடைப் பாய்களும், தலையானைகளும் இருந்தது. அந்த அறையில்  ஸ்ராவணி தனது அத்தைக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்களும் அவளை “வாழைபழம் சொல்லு, தமிழ் சொல்லு” என்று சொல்லி அவளின் மழலையை ரசித்தனர். மகளின் மகிழ்ச்சியைப் பார்க்க பார்க்க சந்தோஷமாக இருந்தது அரவிந்த்துக்கு. 

சமையல் அறை மேடையுடன் , சிங்க் கட்டப்பட்டு பழமையும் புதுமையும் கலந்து இருந்தது. இந்த வீட்டைக் கட்டி இருபத்தைந்து வருடங்கள் இருக்கும் போலிருக்கிறது. சமீபத்தில் தான் புதுபித்திருக்கிரார்கள். 

சென்னையில்  கையளவு நிலத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. ஆனால் இந்த வீட்டின் பின்னே ஒரு இரண்டு சென்ட்  இடம் சும்மாவே இருந்தது. அதில் துவைப்பதற்கு ஒரு கல், குளியல் அறை, கழிவறை மற்றும் கார்பரேஷன் அடிபம்ப் ஒன்றும் இருந்தது. இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முறை தண்ணி வருமாம். சமைக்க, குடிக்க பிடித்துக் கொள்வார்களாம். அம்மா சொல்லி இருந்தார்கள். இதில் மிச்சம் மீதி இருக்கும் இடத்தில் கொஞ்சம் செடி கொடிகள் வளர்க்கக்கூடாது? ஏக்கம் தோன்றியது அரவிந்தின் மனதில். 

மாடியில் கூட ஒரு குடும்பம் வசிக்கும் போலிருக்கிறது. ஆனால் ரெண்டு நாட்களாக நடமாட்டம் ஒன்றும் இல்லை. ஊருக்குப்  போயிருப்பார்கள் போலிருக்கிறது. கீழிருந்து பார்த்தால் மாடியில் அஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஒரு கட்டிடம் தெரிந்தது. அவர்கள் வீட்டின் பாதி அளவே அது இருக்கும் போலிருக்கிறது. மாடியில் தான் அம்மா துணி காயப்போட்டு வருவார்கள். மிச்சம் மீதி இருக்கும் இடத்தில் வீடு கட்டி இருந்தால் அது எவ்வளவு சின்னதாக இருக்கும். இந்த வீட்டிலேயே அனல் தாங்க  முடியவில்லை. மேலே எப்படித்தான் இருக்கிறார்களோ தெரியவில்லை. மிகுந்த பொறுமைசாலிகள் தான். இந்த மாதிரி ஐந்து வீட்டினை திருச்சியில் இருந்த அவர்களது சொந்த வீட்டில் அடைத்து விடலாம் அவ்வளவு பெரிசு. ஆக மொத்தம் இந்த மதராச பட்டினத்துல மக்கள் புறாக கூண்டில் வாழப் பழகிக் கொண்டார்கள் அவனைப் போலவும் அவன் குடும்பத்தினர் போலவும். 

காற்றாட வனமில்லை 

கால் நனைக்க நதியில்லை 

நாற்றாடும் வயலில்லை 

அவனுக்கு ஆடிப் பெருக்கில், அற்புதமாய் வளைவுகளோடு, மரங்கள் அழகை ஆராதனை செய்து காணிக்கையாகத் தந்த பூக்களை மேலாடையாக அணித்துக் கொண்டு, காண்பவர்கள் கண்களை ஆச்சிரியத்தால் விரிய வைத்து, அவர்களின் பார்வை தந்த வெட்கத்தால் நாணிக்கோணி ஓடும் காவிரிப் பெண் நினைவிற்கு வந்தாள். அவள் தந்த சிலிர்ப்பும் அன்பும் இன்று போல் இருக்கிறது. இனிமேல் எப்போது அவளை சந்திப்பேனோ தெரியவில்லை. அவனுக்கு உச்சி பிள்ளையாரும், ரங்கனும், திருவானைக்கா கோவிலும், மெயின்கார்ட் கேட் மைகேல் ஐஸ்கிரீமும் ஏக்கத்தைக் கொடுத்தது. தலைவாழை இலை போட்டு, சாம்பாரும், நெய்யும், காந்தி மார்க்கெட்டில் வாங்கி வந்த வாழைப்பூ கூட்டும், வாழைக்காய் வறுவலும், ஜானகிராம் வடகமும், நார்த்தங்காய் ஊறுகாயும்  சாப்பிட்டு எவ்வளவு நாளாகி விட்டது. இந்த சென்னையில் கறிகாய் கூட ருசியாக இல்லை. வழக்கம் போல ஆசையை வாய்விட்டு சொல்லாமல் மனதினுள்ளே அடக்கிக் கொண்டான் நம் அம்மாஞ்சி. 

திருச்சியில் இருந்த குடும்பம் இப்போது சத்யாவின் வேலை காரணமாக சென்னைக்குக் குடி புகுந்திருந்தது. நாராயணனின் மறைவுக்குப் பின் அவர்களது மளிகைக் கடையை நடத்துவது சற்று சிரமமாகவே இருந்தது. அரவிந்த்தோ சிறுவன்.உலகம் தெரியாதவன். உதவிக்கு என்று வந்த கதிரை தடுத்து விட்டு தானே மாமனாரின் குடும்ப பாரத்தை சுமக்கப் போவதாக அறிவித்தார் நாதன். அவருக்கு அவரது தொழிலே ததங்கினதோம். இதில் தெரியாத மளிகைத் தொழிலை எப்படி நடத்துவார்? அதனை ஒத்துக் கொள்ள அவரது ஈகோ இடம் தரவில்லை. பள்ளிப் படிப்பை முடித்திருந்த அரவிந்த்தை பி. காம் சேர்த்ததும் அவரே. 

காலேஜ் அப்ளிகேஷனில் பி.எஸ்.சி மேத்ஸ் என்று நிரப்பி, கார்டியன் என்று போட்டிருந்த இடத்தில் கையெழுத்து வாங்க வந்து நின்ற மச்சினனைப் பார்த்தார் நாதன் 

“என்னடா?”

“சைன் வேணும் மாமா”

செயின்ட் ஜோசப் காலேஜ் அப்ளிகேஷனில் கதிர் கையெழுத்து போட்டு விட, தையா தக்கா என்று நாதன் குதித்தது நினைவில் இருந்தது அரவிந்த் குடும்பத்தினருக்கு. 

“ஏன்டா திருச்சிக்கும் மதுரைக்கும் அலஞ்சு நாய் படாதபாடு பட்டு இந்தக் குடும்பத்தைத் தாங்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கார்டியனா அந்தக் குடிகாரனோட கையெழுத்தை வாங்கி இருக்க. நன்றி இல்லாத குடும்பம்டா உங்களுது. இன்னையோட உங்க குடும்ப உறவை முடிச்சுக்கிறேன். உன் அக்காவ இன்னைக்கே இங்க அனுப்பி விட்டுடுறேன். நான் செத்தாக் கூட என் மூஞ்சில உங்க குடும்பம் முழிக்கக் கூடாது” என்று அவர் போட்ட பேயாட்டத்தில் பயந்து போய் அடுத்த முறை அவரிடம் வந்து நின்றான் அரவிந்த்.

சற்று திருத்தங்கள் செய்தார் நாதன். பின் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். 

“மாமா இதுல பி.காம்னு போட்டு இருக்கிங்க . நான் மாத்ஸ் அண்ட் சயின்ஸ் குரூப்”

“தெரியுண்டா. நீ பி.காமே படி . நான் கூட அதுதான் படிச்சேன். இப்ப பாரு கணக்கு வழக்கெல்லாம் எனக்கு அத்துப்படி. ஒருத்தன் என்ன ஏமாத்த முடியாது”

சொன்னது மட்டுமின்றி அவரே கல்லூரிக்கும் வந்து சேர்த்து விட்டார். கல்லூரியில் கூட கேள்வி கேட்டனர். 

“நல்ல மார்க். பேசாம கெமிஸ்ட்ரி படிக்கலாமே” 

“இதெல்லாம் ஒரு மார்க்கா. தொள்ளாயிரம் எடுத்து இருக்கான். நல்லா படிச்சிருந்தா என்ஜினியர், டாக்டர் ஆகி இருக்க மாட்டான்? மத்தது படிச்சு கஷ்டப்படுறதுக்கு பி.காம் படிச்சிட்டு  பேங்க்ல வேலை ட்ரை பண்ணலாம்ல”

அவனுக்கு இடம் கிடைத்து விட்டது. ஆனால் அடிப்படை இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டான். முதல் செம்ல்  மார்க் சற்று குறைய, மிகவும் வருத்தப் பட்டான். நாதனிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று வந்து வீட்டில் சுமித்ராவிடம் அரவிந்தின் எண்ணத்தை சொன்னார் கதிர் . 

சுமித்திராவும்  தயங்கியபடி நாதனிடம் “ மாப்பிள்ள, அரவித்துக்கு படிக்க ரொம்ப கஷ்டமா இருக்காம்.  பி.எஸ். சி படிச்சாக் கூட பேங்க் பரிச்சை எழுதலாமாம். அடுத்த வருஷம் பி.எஸ். சி படிக்குறேன்னு சொல்லுறான்”

“எனக்கு தோளே வலிக்குது. எதுனாலன்னு தெரியுமா? உங்க குடும்ப பாரத்தை சுமந்துதான். நான் இருக்குற தைரியத்துலதான உங்க பையன் அடுத்த வருஷம் மறுபடியும் பி.எஸ். சி சேர்ந்து படிக்குறேன்னு சொல்லுறான். நான் போயிட்டேன்னு வச்சுக்கோங்க அப்பறம் யாரு பீஸ் கட்டுவாங்கன்னு பாக்குறேன்” காட்டமாகப் பேசினார். 

அரவிந்தின் கெஞ்சல் சுமித்ராவை உருக்கி இருந்ததால் மேலும் சொன்னார் “இல்ல கதிர் மாப்பிள்ளதான் நான் பாத்துக்குறேன்னு சொன்னாரு மாப்பிள்ள”

எங்கே பதவி பறி போய் விடுமோ என்ற பயத்தில் கொஞ்சம் தணிந்து போவது என்று முடிவு செய்தார் நாதன் “கதிருக்கு என்னத்த தெரியும்? சரியான குடிகாரன். பார்ல  யாராவது சொல்லுறதுதான் அவனுக்கு வேதவாக்கு. நான் அரவிந்த்தை சி. ஏ படிக்க வைக்கணும்னு நெனச்சு இருக்கேன். எனக்கு தெரிஞ்ச ஒரு பேமஸ் ஆடிட்டர் இருக்கார் ஸ்ரீதர்னு பேரு. எங்க ஊருல எல்லா பிசினஸ் மக்களுக்கும் அவர்தான் ஆஸ்தான  ஆடிட்டர்னா பாத்துக்கோங்களேன். அவர் ஆபிஸ்ல மட்டும் ஒரு அம்பது பேர் வேலை பார்ப்பாங்க. அவர் கிட்ட வேலைக்கு சொல்லி இருக்கேன். அரவிந்த எப்படியாவது அங்க சேர்த்துடணும்னு பார்த்துகிட்டு இருக்கேன். அவன் சின்னப் பையன் உலக விவரம் புரியாதவன். நீங்க தான் நல்லத எடுத்து சொல்லணும். இந்நேரம் மாமா உயிரோட இருந்திருந்தார்னா கூட பி.காம் தான் படிக்க சொல்லி இருப்பார்” 

இது போதாதா சுமித்ராவுக்கு. மகனை பிரைன் வாஷ் செய்து படிப்பைத் தொடர வைத்தார். சுமித்ரா தனது மூத்த மருமகன் நாதனிடம் ஒரு கேள்வி கேட்டு இருக்கலாம். 

“மாப்பிள்ளை ஆடிட்டர் ஸ்ரீதரை உங்களுக்குத் தெரியும், ஸ்ரீதருக்கு உங்களைத் தெரியுமா?” 

இப்படியெல்லாம் குறுக்கு விசாரணை பண்ணத் தெரியாத மாமியார் என்பதால் நாதன் அன்று தப்பித்தார். 

படிப்பைப் பற்றி எதுவும் பெரிதாக பரிச்சியம் இல்லாத அந்தக் குடும்பத்தில் முதன் முதலில் முதுகலைப் பட்டம் பெற்றவன் அரவிந்த் தான். அவன் பிகாம்  முடிப்பதற்குள் அந்தக் கடையில் இருந்து வந்த வருமானத்தை விடக் கடன் அதிகமாக இருந்தது. அவன் எம். காம் முடிப்பதற்குள் கடை கடனில் மூழ்கி காணாமலே போய்விட்டது. கடையில் பிரச்சனையை வர ஆரம்பித்த உடனே நாதன் வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டார். அரவிந்த் இதனை ஓரளவு எதிர்பார்த்திருந்தான். 

அரவிந்துக்கு வேலை செய்தாக வேண்டிய கட்டாயம். உள்ளூரிலேயே ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். இரண்டாயிரம் சம்பளம் தந்தார்கள். அந்த வருமானம் அவர்களுக்கு ஆனை  வாயில் போன கரும்பாயிற்று. சத்யாவும் தொலை தூரக் கல்வியில் படித்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் அவள் தேர்வு எழுத அரவிந்த்தோ அல்லது கதிரோ ஆட்டோவில் கைத்தாங்கலாக வைத்து அழைத்து செல்வார்கள். தங்கைகள் இருவரும் பள்ளி செல்லும் சிறுமிகள். கதிரால் உதவி கிடைத்தாலும் நாதன் வழக்கம் போல் அனைவரையும் ஒரு பாடு அழ வைத்தார். அம்மாவோ உலகம் அறியாத பெண்மணி. இதனால் குடும்பக் கவலை அனைத்தையும் சற்று பொறுப்போடு இருந்த அரவிந்திடமே ஒப்படைத்து விட்டனர். கதிர் ஓரளவு உதவி செய்தாலும் எவ்வளவுதான் அவரிடம் எதிர்பார்ப்பது? அதனால் அவனும் சத்யாவும் கதிருடன் கலந்து பேசி வீட்டை விற்று பாக்கி கடனை அடைத்தார்கள். வீட்டை விற்ற பணத்திலும் ஒரு பங்கு வாங்கிக் கொண்டுதான் நாதன் விட்டார். தனது கணவனின் செயலுக்கு தாய் வீட்டில் மன்னிப்பு கேட்டாள் சுதா. ஆனால் அவளால் என்ன செய்ய முடியும்? சுதாவின் நிலமை தெரிந்ததால் கவலைப் படாமல் இருக்குமாறு கூறி அனுப்பினார் அவளது தாய் சுமித்ரா. கதிர் தனக்கு பங்கு கண்டிப்பாக வேண்டாம் என்று சொல்லி விட்டார். கடனுக்கும், நாதனின் பங்குக்கும் தந்தது போக கையில் பத்து  லட்சம் மிஞ்சியது. அதனை வங்கியில் போட்டு விட்டு, வயலூரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். சொந்த வீட்டை விற்றுவிட்டு செல்லும்போது சுமித்ரா கதறி அழுதார் 

“டேய் அரவிந்தா நான் பொறந்ததில இருந்து கஷ்டப்பட்டேண்டா. இதே திருச்சிக்கு  நல்ல சேலை கூட கட்டாம வந்திருக்கேன். இதே ஊருல உங்க அப்பா என்னை ராணி மாதிரி வச்சிருந்தார். சொந்த வீடு, கழுத்து நிறைய நகைன்னு. இப்ப அவரோட என் சந்தோஷமெல்லாம் போயிடுச்சு.உங்கப்பாவப் பொறுப்பில்லாம இருந்தவருன்னு சுதா வீட்டுக்காரர் திட்டுறப்ப எல்லாம் காது கேட்காத மாதிரி இருப்பேன். உங்க ஆறு பேரயும் தாங்கி, படிக்க வச்சு பொண்ணுங்களக்  கல்யாணம் பண்ணி தந்து, சுதா வீட்டுக்காரருக்கும் தண்டம் அழுது இப்படி எல்லாமும் செஞ்சும் ஒரு தடவை முகம் சுளிச்சிருப்பாரா உங்கப்பா? இப்ப அவரு போய் ஆறு வருஷத்துல கடைய வித்து, வீட்ட வித்து என்னைய வாடகை வீட்டுல உட்கார வச்சுட்ட. என்ன இருந்தாலும் அவரு சாமர்த்தியம் உனக்குக் கிடையதுடா” கதறி அழும் தன் அம்மாவை தேற்ற வார்த்தை இல்லாமல் தடுமாறினான் அரவிந்த்.

அவனை சமாதானப் படுத்தி வெளியே அழைத்துக் கொண்டு போனார் கதிர். இருவரும் மலைக்கோட்டைக்கு சென்று பிள்ளையாரை தரிசனம் செய்தனர்.  

சுவாமி தரிசனம் செய்து விட்டு மரத்தினடியில் அமர்ந்தபடி கேட்டான் அரவிந்த்

“மாமா தப்பு செஞ்சுட்டேனா? வீட்டை விக்காம இருந்திருக்கலாமோ?”

சிலு சிலுவென அடிக்கும் காற்றை அனுபவித்தபடி சொன்னார் கதிர் 

“நீ செஞ்சது சரி அரவிந்தா. இப்ப நீ வீட்ட வித்ததுனாலதான் கையுல பணம் மிஞ்சுச்சு. இன்னும் கொஞ்சம் லேட் பண்ணி இருந்த அதுவும் இல்லாம போயிருக்கும். உங்கம்மாவுக்குத் தெரியல உங்க அப்பா கொஞ்சம் சுதாரிப்பா இல்லாம இருந்ததால தான், கடன் அதிகமாகி இந்த நிலைமைக்கு தான் வந்திருக்கோம்னு. அவராவது அப்பப்ப வீட்டு நிலமைய உங்களுக்கு எடுத்து சொல்லி இருக்கலாம். உங்க அம்மாவ கவலைப் பட விட வேண்டாம்னு நெனச்சாரு போலிருக்கு. நாதனும் கடையப் பத்தி தெரிஞ்சிருந்தும் அதை சரி செய்ய எந்த ஏற்பாடும் செய்யல. உங்க அம்மாகிட்ட ஒரு நாள், கடைய மட்டும் கை மாத்தி விட்டுடலாம்னு எடுத்து சொன்னேன். அப்ப அப்படி செஞ்சிருந்தா வீடு தப்பிச்சிருக்கும். அவங்களுக்கு மூத்த மாப்பிள்ளை கிட்ட பேசவே பயம். அதனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான்  ஒருத்தன் மட்டும் நாதனை எதிர்த்துட்டு என்ன செய்ய முடியும்?”

கதிரின் பதிலால் சற்று சமாதானமடைந்தவன் “அட்லீஸ்ட் அந்த தெருவுலயாவது சின்னதா விலைக்கு வீடு பார்த்திருக்கலாம். தெரிஞ்சவங்க இருந்திருப்பாங்க அம்மாவுக்கு கொஞ்சம் ஆறுதலா இருந்திருக்கும்”

“முட்டாள் அதுனாலதாண்டா வேணாம்னு சொன்னேன். அவ்வளவு பெரிய வீட்டுல இருந்துட்டு அங்கேயே சின்ன வீட்டுல அவங்களால இருக்க முடியுமா? அந்த அளவு மனப்பக்குவம் அவங்களுக்கு இருக்கா? தெரிஞ்சவங்க தினமும் பழம் பெருமையைப் பேசிப் பேசி அவங்க மனப் புண்ணைக் கீறி விட்டுகிட்டே இருப்பாங்க. இப்ப கூட அத்தை பேசுற வார்த்தைகள் எல்லாம் அவங்க கிட்ட அடுத்தவங்க சொன்னதுதான்”

அரவிந்துக்கும் அவர் சொன்னது சரியாகப் பட்டது. வீட்டிற்கு கிளம்பினார்கள்.  நினைவு வந்தவராக கதிர் சொன்னார் 

“நாதன் இப்ப சண்டை போட்டு பணம் வாங்கினதும் நல்லதுக்குத் தான்னு நெனச்சுக்கோ. இன்னும் கொஞ்ச நாள் உங்க வீட்டுக்கே வர மாட்டான். அதுக்குள்ளே சுதாரிச்சுட்டு வீட்டுல செய்ய வேண்டிய வேலை எல்லாம் செஞ்சு முடிச்சுடு. அவன் இருந்தா எல்லாத்திலையும் தலையிட்டு குழப்பி விட்டுடுவான். நானும் உன் வேலைக்கு பல இடங்கள்ல சொல்லி வச்சிருக்கேன். உன் சம்பளத்த வச்சு  மாச செலவுக்கு பார்த்துக்கோ. சத்யா டியூஷன் வருமானம் மத்த செலவுக்கு வச்சுக்கோங்க. தவிர வீட்டு வாடகைய நான் தந்திடுறேன். பிக்சட் டிபாசிட்டை மட்டும் எந்தக் காரணம் கொண்டும் எடுத்திடாதே”

“சரி மாமா” தலையாட்டினான். பாவம் அந்தப் பணத்தை விரைவிலே அவனே எடுக்கப் போகிறான் என்பதை அவர்கள் அறியவில்லை. ஆனால் அந்த உச்சி பிள்ளையாருக்குத் தெரிந்ததால் அவர் லேசாக புன்னகை புரிந்தார். 

 அவன் ஒரு வருடம் திருச்சியில் வேலை பார்த்த பின், கதிரின் முயற்சியால் ஹோசூரில் ஒரு புகழ் பெற்ற கம்பெனியில் அக்கௌன்ட்ஸ் பிரிவில் வேலை கிடைத்தது. அங்குதான் அவன் வாழ்க்கையே மாறியது.

அவனது அம்மா சுமித்ராவுக்கு ஏகப்பட்ட கல்யாண  வேலைகள். அவனுடன் நின்று பேச ஒரு நிமிடம் கூட இல்லை அவருக்கு. இதில் தனது மனைவிக்கு எடுத்த பட்டுப் புடவை ஜரிகை சரியில்லை  என்று சண்டை போட்ட நாதனுக்கும் அவரது சொந்தக்காரர்களுக்கும் ஜவுளி எடுக்க காஞ்சீபுரம் சென்று இருந்தார்கள். நாதனுக்குக் கல்யாணம் ஆகி இவ்வளவு நாட்களாகி இருந்தாலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்ற கோவம் பிறந்தது அரவிந்துக்கு. வயதுக்கும் முதிர்ச்சிக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நாதனைப் பார்க்கும் போது ஏற்படும் எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை அவனால். 

ஊருக்கு வந்து நான்கு நாட்கள் முடிந்து விட்டது. முதல் தங்கை சாந்தாவின் கணவனை மருத்துவமனையில் சென்று பார்த்து விட்டு வந்தான் அரவிந்த். சாந்தாவின் கணவனுக்கு அரவிந்தை ஏறிட்டுப் பார்க்கக் கூட தைரியம் இல்லை. இரண்டாவது தங்கை சாரிகா பிறந்த வீடு புகுந்த வீடு என்று அலைந்து கொண்டிருந்தாள். மூன்றாவது அக்கா சத்யா நான்கு நாட்கள் மட்டும் விடுமுறை எடுத்திருந்தாள். நாளையில் இருந்து தான் அவளது விடுமுறை ஆரம்பிக்கிறது. இன்று அனைவரும் வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவார்கள். 

ஏகப்பட்ட மலரும் நினைவுகளுடன் பாயில் புரண்டுக் கொண்டிருந்தவனை ஒரு குரல் தட்டி எழுப்பியது

“பத்து ரூபாய்க்கு மூணு கட்டு தரதா இருந்தா தா இல்லைனா போய்க்கினே இரு”

“கட்டாதும்மா. முதலுக்கே மோசமா  பூடும் கண்ணு. ரெண்டு கட்டுத்தான் வரும்”

இனிமையான காலையில் அபஸ்வரமாய் சண்டை இருக்க ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். மாடி வீட்டுக் காரர்கள் ஊரில் இருந்து வந்திருப்பார்கள் போலிருக்கிறது. ரோஜா  நிறத்தில் நீலநிறக் கரை போட்டு ஒரு முழுப் பாவாடை, அடர் நீலத்தில் பப் கை வைத்த சட்டை, கூந்தலை இழுத்துப் போடப்பட்ட ஒரு கொண்டை. அந்தப் பெண்ணின் முகம் தெரியவில்லை. ஒரு கீரை கட்டுக்கு சண்டை போடும் அந்தப் பெண் எரிச்சல் அளித்தாள். லிப்ஸ்டிக், ஐப்ரோ சொன்ன விலை கொடுத்து வாயை மூடிக் கொண்டு வாங்கி வரும் பெண்கள் , பூ, காய்கறி வாங்க ஏன்  இவ்வளவு பேரம் பேசுகிறார்கள்? சின்ன வீட்டில் இருந்து இருந்து இந்தப் பெண்ணின் மனதும் குறுகி விட்டது போலும். அவன் எண்ணத்துக்கு வலு சேர்க்கும் விதமாக மீண்டும் அந்தப் பெண் பேசினாள்.

“தோ  பாருடா தேரடியாண்ட மட்டும் உனக்குக் கட்டும் இங்க வந்தா கட்டாதா. இன்ன எங்க காலனி இளிச்சவாய் காலனியா. மூணு கட்டு எடுத்து வச்சுட்டு எடத்தக் காலி பண்ணு”

“உன்னண்ட பேச  முடியுமா? இந்தா மூணு கட்டு எடுத்துட்டு விடு”

“சரி சரி கொரல் என்னா மொள்ளமா வருது. நாஷ்டா துன்னலையா? நீ வூட்டுக்குப் போக மணி பத்தாவுமே, ஆயாவண்ட சொல்லிக்  கொஞ்சம் காபி குடிச்சிட்டு போ”

“சரிதான்மே  கூட இங்கனயே கெடக்கட்டும்” என்றபடி அந்த கீரைகாரி மாடி ஏறினாள்.

இப்போதுதான் ஒரு கட்டுக்கு சண்டை போட்டாள். அப்பறம் கீரைகாரியை காபி குடித்து விட்டு போகச் சொல்கிறாள். அந்த காபி விலையே மூணு ரூபாய் இருக்கும்.  இவ கேரக்டரே புரியலையே என்று யோசனையுடன் பார்த்தான்.  

அந்தப் பெண் சுற்றும் முற்றும் பார்த்தபடியே திரும்பினாள். கண்களைக் கூசச் செய்யும் பளீர் வெண்மை நிறம் இல்லை இருந்தாலும் முந்திரிப் பழ மூக்கும், செண்பகப் பூ விழியும், பன்னீர்பூவின் மலர்ச்சியுமாக  இருந்தாள். இத்தனைக் காலையில் ஒரு ஆடவனை அவள் அங்கு எதிர் பார்க்கவில்லை போலிருக்கிறது. ஒரு விநாடி திகைத்தவள் பின்னர் சுதாரித்தாள். ஸ்டைலாக மாடிக் கைப்பிடியில் சாய்ந்து கொண்டாள். சின்னஞ்சிறுவர்களை கிண்டல் செய்வது போல் உதடுகளை குவித்து ஒரு பாட்டை விசிலடித்தாள். அந்தப் பாட்டு அரவிந்த்துக்கு நன்றாகத் தெரிந்த பாட்டு 

“வாங்க மச்சான் வாங்க 

வந்த வழியப் பாத்து போங்க

ஏங்கி ஏங்கி நீங்க

ஏன் இப்படிப் பாக்குறீங்க?”

அந்த ரவுடிப் பெண்ணைப் பார்த்து பயந்து போன அரவிந்த் உடனே உள்ளே சென்று விட்டான். நார்த் மெட்ராஸ்ல ரௌடிங்க ஜாஸ்தின்னு கேள்வி பட்டது உண்மைதான் போலிருக்கே. அமைதியும் அடக்கமுமாய் எஸ்.ஆர்.சி கல்லூரி செல்லும் தன் ஊர் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள் அவனுக்கு. 

‘டேய் அரவிந்த் நீ ஒரு முறை மணமானவன். ஒரு குழந்தையின் தகப்பன். இன்னும் சில நாட்களில் இன்னொரு திருமணம் செய்து கொள்ள போகிறாய். அது மேல் வீட்டில் இருக்கும் அவளுக்குத் தெரியாமல் இருக்குமா? பாவாடை சட்டை போட்ட ஒரு சின்ன பெண்ணைப்  போய் வாயைப் பிளந்து பார்த்தாயே. அந்தப் பெண் உன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? காலிப் பயல்னு காரி துப்பப் போகிறாள்’ கண்டித்தது அவனது மனசாட்சி .

“சித்தாரா, அங்க என்ன காலைலயே சண்டை, மேல  வந்து காபி குடிச்சுட்டுப் போ ” என்று மாடியில் இருந்து வயதானவர் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. 

“நீ வேற ஆயா, அது சொம்மா என்கிட்ட வம்புளுக்குது, அந்தக் குயந்தப்புள்ளயப் போய் திட்டிகினு” கீரைகாரி சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தாள்.

 “வந்துட்டேன் பாட்டி. இங்க ஒரு காக்கா முறைச்சு பாத்துச்சு அதுதான் நல்ல புத்தி சொல்லி அனுப்பி வச்சுட்டு வந்தேன்”, கொலுசு அதிர நடந்து போனாள் அந்தப் பெண்.

“அட இவதான் அம்மா சொன்ன அந்த சித்தாராவா. மாடி வீட்டுல  இவளா இருக்கா?” ஆச்சிரியப்பட்டான் அரவிந்த். இதில் அவனைக் காக்கா என்று அவள் சொன்னது அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. 

அவனே விரும்பாமல் அவன் மனம் நினைத்தது ‘ரவுடியா  இருந்தாலும் ரசிக்கும்படிதான் இருக்கா’ அவனுக்கே பிடிக்காமல் தன்னால் அவன் வாய்  முணுமுணுத்தது. 

தூக்கி நிறுத்தி வைத்த கொண்டையாள் – மனம்

துள்ளி விளையாடும் விழிக்  கெண்டையாள் – நெஞ்சைத் 

தாக்கி மறுநொடியில் தவிடு பொடியாக்கும் சண்டையாள்

வெள்ளித் தண்டையாள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55

காலை புத்தம் புதிதாக அவளுக்காகவே விடிந்ததைப் போல் சரயுவுக்குத் தோன்றியது. தூக்கத்தில் ரங்கராட்டினம் சுற்றுபவளை தனது பரந்த தோள்களுக்கிடையே அடக்கி தப்பித்து விடாமல் கைகளால் சிறை செய்திருந்தான் அவள் அன்புக் கணவன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள். சிறு

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

  சத்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை ஊறுகாய்களையும் விற்பனை செய்யும் எண்ணத்துடன் அவற்றிக்கான