தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 50

ரவு ராஜுவின் வீட்டிலேயே சரயுவைத் தங்க வைத்தார்கள். வீட்டின் முன் நின்று வரவேற்ற வேம்பும், பின்கட்டிலிருந்த கிணறும் சரயுவுக்கு தன் வீட்டை நினைவு படுத்தியது. ஆனாலும் அவள் வீடு பெரியது. ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். இந்த வீடு ஸ்ரீவைகுண்டம் வீட்டில் கால்வாசி கூட இல்லை. இருந்தாலும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. காலடி எடுத்து வைத்ததும் ஏதோ மனதில் ஒரு நெருக்கத்தை உணர்ந்தாள். ராஜு, அருந்ததி தம்பதியினர் அன்புதான் காரணம் போலும் என்றெண்ணினாள்.

“எங்க வீடு மாதிரியே இருக்குல்ல” என்று ஆச்சரியப்பட்டாள். அதை அப்படியே ராஜுவிடம் மொழி பெயர்த்தான்.

“இதுவும் உங்க வீடுதான்மா” என்று ராஜுவும் பதில் சொன்னார்.

சரயு மட்டுமே தங்குவாள் என்று நினைத்தவருக்கு ஜிஷ்ணுவும் அங்கேயே தங்குவதாக சொல்லவும் சங்கடப்பட்டு விட்டார். அவரது வீட்டில் ராஜய்யா படுத்துத் தூங்க படுக்கையறை கூட இல்லை. இருந்த ஒன்றிரண்டு அறைகளிலும் நாளை நடக்கும் திருமணத்திற்கு வேண்டிய சாமான்களும், சுவாமி ரூமில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை பாதுகாத்தவாறு நாளை திருமணம் செய்யவிருக்கும் மணமக்களான ராமா சீதையும் வீற்றிருந்தனர்.

மனைவியின் காதில் ரகசியம் பேசி வந்தார் ராஜு.

“மேமு போஜனம் சேசேசாமு” (நாங்க சாப்பிட்டுடோம்) என்று சரயுவை கண்களால் வருடியவாறே மெதுவாய் சொன்னான் ஜிஷ்ணு.

“எனக்கு ஒரு பாய் போதும் திண்ணைல படுத்துக்குறேன்…”

என்றவனிடம் அன்பாக மறுத்துத் தன்னுடைய கயிற்றுக் கட்டிலை திண்ணையில் போட்டார் ராஜு. பருத்தித் துணிகளை அதன் மேல் விரித்து ஜிஷ்ணு உடம்பில் கயிறு குத்தக்கூடாதே என்ற அக்கறையோடு சோதித்தார்.

தூக்கத்தில் சாமியாடிக் கொண்டிருந்த சரயுவின் தலையில் தட்டி எழுப்பிவிட்டான் ஜிஷ்ணு. “படுக்கை எல்லாம் எதிர்பார்க்காதே… சோபால படுத்துக்கோ”

“சீர தீசுகொச்சாவம்மா?” (“சேலை வச்சிருக்கியாம்மா”) மெதுவாய் தெலுங்கில் கேட்ட அருந்ததியின் பாஷை புரியாது விழித்தவளிடம் மொழி பெயர்த்தான்.

“இல்லையே ஜிஷ்ணு… காலைல வேணும்னா இன்னைக்கு போட்டிருந்த ட்ரெஸ் போட்டுக்கவா?” என்றாள் பயணத்துக்கு ஏதுவாக தான் போட்டிருந்த ஜீனைப் பார்த்தபடி.

“மக்கு… அவங்க கல்யாணத்துக்கு ராமர் சீதை கல்யாண சடங்கை நம்மதானே செய்யணும்னு சொன்னாங்க. கிராமம் வேற, சாரிதான் கட்டணும்னு எதிர்பார்ப்பாங்க…” யோசித்தான்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவனாக,

“ராஜு பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற புடவைக்கடைல கணக்குப் பார்த்துட்டு பன்னெண்டு மணிக்குத்தானே சாத்துவாங்க” என்று விசாரித்தான்.

“சரவெடி நாளைக்கு நம்ம லக் எப்படி இருக்குன்னு பாக்கலாம்” என்றவாறு ராஜுவுடன் கடைக்குக் கிளம்பினான்.

கடைக்கு செல்லும் வழியில், “பாபு இனிமே சின்னம்மாவோட நீங்க சேர ஒரு தடையுமில்லையே… நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்காகவே இன்னொருத்தர் பிறந்தாப்பில இருக்கிங்க. கல்யாணம் செய்துக்கோங்க பாபு” தனது ஆசையை வெளியிட்டார்.

பெருமூச்சு ஒன்று கிளம்பியது ஜிஷ்ணுவிடமிருந்து. “ஜமுனா வேணும்னா என் வாழ்க்கையிலிருந்து மறைஞ்சிருக்கலாம். சந்தனா… அவளை மறந்துட்டிங்களே… நான் ஒரு தகப்பன் ராஜு. என்னை இன்னும் மறக்காம இருக்குற சரயுவுக்கு இது பெரிய துரோகமில்லையா… உண்மையை சொல்லி அவளை வேற யாரையாவது கல்யாணம் செய்துக்க சொல்லணும்”

“எப்படி பாபு… சின்னம்மா கண்ணு முழுக்க உங்க மேல இருக்குற அன்பைத்தான் பிரதிபலிக்குது. உங்களை அவங்க மறப்பாங்கன்னு எனக்குத் தோணல”

“என்னை மறக்கணும் அதுதான் அவ வாழ்க்கைக்கு நல்லது… நாளைக்கே உண்மையை சொல்லணும்”

“பாபு தயவு செய்து கல்யாணத்துல சந்தோஷமாய் கலந்துகிட்டு அப்பறம் நாளைக்கு சாயந்தரம் அவங்க கிட்ட உண்மையை சொல்லுங்க” என்று வேண்டினார்.

ஜிஷ்ணுவுக்கும் சரயு அருகில் ஒரு நாளை சந்தோஷமாய் கழிக்க வேண்டும் என்று தோன்றியதால் தலையசைத்தான்.

ராஜுவின் மனைவி அருந்ததி- ராஜய்யா, பாபு என்று சரயுவிடம் ஜிஷ்ணுவின் புராணம் பாட, ஒன்றும் புரியாவிட்டாலும் கேட்டுக் கொண்டேயிருந்தவள் களைப்பினால் சோபாவில் உறங்கிவிட்டாள்.

கடையிலிருந்து வந்த ஜிஷ்ணு, சரயுவுக்கு வாங்கிய புடவையும் மற்றவற்றையும் அருந்ததியிடம் தந்து காலையில் அவள் குளித்தவுடன் தரச் சொன்னான். அருந்ததி-ராஜுவுக்குப் புத்தாடைகளையும், தனக்கு பட்டு வேஷ்டியும் அத்துடன் எடுத்து வந்திருந்தான்.

பெண்கள் வீட்டில் படுத்துக் கொள்ள, வீட்டுக்கு வெளியே வெட்டவெளியில் நாடாக்கட்டிலில் சுகமாய் தூங்கிய ஜிஷ்ணுவைக் கண்கலங்க பார்த்திருந்தார் ராஜு. அவன் உறங்கியதை அறிந்ததும் மெதுவாய் வீட்டினுள் சென்று மனைவியை அழைத்தார்.

“ராமையா நித்ரபோயேடே. சீதம்ம நித்தரின்சிந்தா?” (“ராமய்யா தூங்கியாச்சு, சீதம்மா தூங்கிட்டாங்களா?) சந்தோஷமாய் வினவினார்.

“இது சரிவருமா… பாபுவுக்குத் தெரிஞ்சா கோவப்படுவாறே… எனக்கு பயம்மா இருக்கு.”

“கடல் மாதிரி வீடிருக்கிற நம்ம ராஜய்யா, இன்னைக்கு கொசுக்கடிலயும் சுகம்மா தூங்குறாருன்னா அதுக்கு காரணம், உள்ள தூங்கிட்டிருக்குற சின்னம்மாதான். நம்ம கிராமத்து மக்களுக்கு இன்னைக்கு வாழ்க்கை தந்திருக்குற பாபுவோட உயிர், உள்ளே தூங்குற அந்த பொண்ணுகிட்டத்தான் இருக்கு. அவரோட உயிரை அவர்கிட்ட சேத்து வைக்கிறதுதானே முறை” பெரிய மீசையினடியில் தென்பட்ட புன்னகையோடு சொன்னார்.

“சரி” என்றவாறு உள்ளே சென்றார் அருந்ததி.

ரவு சில மணி நேரங்களே தூங்கியும், அதிகாலைக்கு வெகு முன்பே எழுந்தும் கூட, களைப்பின்றி மிகவும் உற்சாகமாய் உணர்ந்தான் ஜிஷ்ணு. அவனுக்காக வெந்நீர் காய வைத்துத் தந்தார் ராஜு. பானையைத் தானே சுமந்து சென்று, கிணற்றில் தண்ணீர் சேந்தி விளாவிக் கொண்டான். சரயுவை தன்னுடன் தனியே தங்க வைப்பது நல்லதில்லை என்றுதான் ராஜு வீட்டில் தங்க வைத்தான் என்றாலும், கூப்பிடு தூரத்தில் தனது அரண்மனை வீட்டை வைத்துக் கொண்டு தனது வீட்டில் தங்களோடு ஒருவனாய் தங்கியதை நம்பவே முடியவில்லை ராஜுவால். நடப்பது கனவா நெனவா என்று கிள்ளிப் பார்த்துக் கொண்டார். மூணு நாலு மணி நேரம் கூட அவளை விட்டுப் பிரிய நினைக்காத அவனது காதல் உள்ளம் அவரைக் கசிந்துருக வைத்தது.

அனைவரும் எழுந்து குளித்துக் கிளம்பியும், சோபாவிலிருந்து தரையில் விழுந்து, ஹால் முழுவதும் உருண்டு எழாமல் அலும்பு செய்த சரயுவை எழுப்ப முடியாமல் தோல்வியுற்றுத் திரும்பினார் அருந்ததி. அவரிடமிருந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டான் ஜிஷ்ணு.

“சரவெடி, தூங்குமூஞ்சி எழுந்திருடி… ஒரு ஊரே உனக்காகக் காத்திருக்கு” மெதுவாய் கடிந்துக் கொண்டவனைப் படுத்தபடி அரைக்கண்ணால் காக்கா பார்வை பார்த்த சரயு, அவனது தோளில் கைகளை மாலை போல் போட்டு அணைத்துக் கொண்டாள்.

“விஷ்ணு… இன்னைக்கு என்னடா மாப்பிள்ளை மாதிரி சில்க் ஜிப்பால வந்திருக்க… ஆமா, நீ தினமும் என் கனவுல மட்டும்தான் வருவியா… எப்படா நேருல வருவ… உன் பங்காரத்தை மறந்துட்ட பார்த்தியா…” ஏக்கத்தோடு கேட்டாள்.

அவளது பேச்சினால் உறைந்து நின்றான். “நா பங்காரானி நேனு மறவகலனா?…(என் பங்கராத்தை மறக்குறதா…) நெவர்… நான் ரொம்ப கெட்டவன்டி… என்னை மறந்துடேன் ப்ளீஸ்”

நடப்பது கனவென்றே நினைத்துக் கொண்டிருந்த சரயு பதில் சொன்னாள். “எனக்கு நீ நல்லவன்” அவனை மேலும் இறுக்கி அவன் காதில் மெலிதாய் கடித்தாள்.

கடியால் சுயநினைவுக்கு வர, “இனிமே உன்கிட்ட பொறுமையா பேசினா அவ்வளவுதான்”

சரயுவை அலேக்காகத் தூக்கி குளியலறையில் அமர்த்தி ஒரு பக்கெட் வெது வெது நீரைத் தலையில் ஊற்றினான். திடுக்கிட்டு கண்விழித்தவள்,

“விஷ்ணு… நீ எப்ப என் பாத்ரூமுக்கு வந்த?” என்று தூக்கக் கலக்கத்தில் விழித்தவளைக் கண்டு குறும்பாய் சோப்பை எடுத்துத் தேய்த்து விடுவதைப் போல பாவனை காட்டினான்.

சுதாரித்தவள், “இதெல்லாம் எனக்குப் பிடிக்காது, வெளிய போடா” என்று கத்தினாள்.

தலையிலடித்துக் கொண்டவன், “இங்கபாருடி, இன்னும் பதினைஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு டிரஸ் செய்துட்டு காருக்கு வரல, எப்படி நிக்கிறியோ அப்படியே தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” என்று மிரட்டினான்.

குளியலறையில் வைத்திருந்த புதுத்துண்டையும் துணிகளையும் கண்களால் காட்டினான்.

“குளிச்சுட்டு இந்த புது சாரி கட்டிக்கோ… சாரி கட்டத் தெரியுமில்லையா… இன்னைக்கு புல்லா புடவைதான். கட்டத் தெரியாம கட்டி புதையல் எடுத்துடாதடி… ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னைக் கேளு”

‘நான் சேலை கட்ட இவன் ஹெல்ப் பண்ணுறானா?’ ஜிஷ்ணு சீரியஸாய் சொல்கிறானா இல்லை விளையாடுகிறானா என்று புரியாமல் பார்த்தாள்.

“உனக்கே சேலை கட்டத் தெரியும்னா நான் இந்நேரம் கத்துக்காமயா இருப்பேன். முதல்ல பாத்ரூம்லருந்து வெளிய போடா” கண்களை உருட்டி மிரட்டியவள் பக்கத்திலிருந்த மஞ்சள் உரசும் சிறு கல்லை எடுத்து அவன் மேல் எறிவதைப் போல சைகை காட்ட,

“அம்மோ… காளி நீலி சூலி பயங்கரி” என்று கத்தியவாறே கதவை சாத்தி ஓடிப் போனான்.

கண்ண, கண்ணக் கண்ண உருட்டி உருட்டி என்னை மிரட்டினா…

நா என்ன சிறுபிள்ளையா?

பேசி, பேசிப் பேசி வார்த்தையாலே என்னை தாக்குற

நீ என்ன கிளிப்பிள்ளையா

ஏதேதோ பண்ணிப் பண்ணி என்னக் கொஞ்சம் விரட்டப் பாக்குற

ஏதேதோ செய்ய சொல்லி மனச நீயும் கெடுக்கப் பாக்குற

சொன்னதைப் போலவே பதினைந்து நிமிடத்தில் ஜிஷ்ணு முதல்நாள் வாங்கி வந்திருந்த அக்மார்க் பட்டில் அரக்கு நிறத்தில் நெய்யப்பட்ட சிறிய சரிகை போடப்பட்ட புடவையை அணிந்து, பூஜை ரூமில் நுழைந்த சொர்ண விக்கிரகத்தை இமைக்காமல் பார்த்தான் ஜிஷ்ணு.

முதல் முறை புடவை கட்டியபோது பார்த்ததுக்கும் இப்போதும் எவ்வளவு வித்யாசம். ஆழ்ந்த வண்ணப் புடவை அவளது சந்தன நிற மேனியில் அயர்ன் செய்தாற்போல் ஒட்டியிருக்க அவளது வடிவம் ஓவியப் பெண்ணைப் போல அங்க லக்ஷணத்துடன் இருந்ததை வியப்போடு பார்த்தான். பிறை நிலவாய் ஒளிரும் நெற்றியும், பளிங்குக் கல்லில் செய்ததை போன்ற தேகமும், மாம்பழ மஞ்சளில் பளபளத்த கன்னங்களும், பனி படர்ந்த ரோஜா இதழாய் சிவந்த உதடுகளும் அவனது மனதில் புதைந்திருந்த ஆசையைக் கிளற,

“சரவெடி… ஏண்டே எலா இந்த அந்தம்கா உன்னா…? (சரவெடி எப்படி இவ்வளவு அழகா இருக்க…)” திகைத்துப் போய் முணுமுணுத்தான்.

“புடவைதான் ரொம்ப சிம்பிளா போச்சு. ஆனா சுத்தமான கதர் பட்டு. உனக்குப் பிடிச்சிருக்கா?” ஆவலுடன் கேட்டான்.

“ரொம்ப பிடிச்சுருக்கு” உற்சாகமாய் சொன்னாள்.

“நகை எதுவும் போட்டுக்க இல்லையா… வெறும் செயின் மட்டும் போட்டிருக்க” கவலையாய் சொன்னவன் கண்களில் டாலர் பட்டு, அது அவன் சென்னையில் பாஸ்கெட்பால் போட்டிக்கு வந்த போது அவளுக்கு வாங்கித் தந்த செயின் என்பதை சொல்லியது.

“வளையல் கூட நிறையா இல்லையே. உன் அம்மாவோடது தாரணிகோட்டைலதானிருக்கு. நேத்தே நினைவிருந்தா எடுத்துட்டு வந்திருப்பேன். சாரிரா” என்றான்.

“இப்ப வேணும்னா பைக்ல போயி எடுத்துட்டு வரட்டுமா?” ஆசையாகக் கேட்டான்.

“இங்க நிறைய வளையல் பாசி எல்லாம் வச்சிருக்காங்களே அதுல ஒண்ணை எடுத்துப் போட்டுட்டா போச்சு” என்று அங்கிருந்தவற்றை ஆராய, ஜிஷ்ணுவும் அவளுடன் சேர்ந்து அவளது உடைக்குப் பொருத்தமானதை ஆராய்ந்தான். இருவரின் மனதையும் அங்கு பேழையில் பத்திரமாய் மூடி வைக்கப்பட்டிருந்த சிவப்பு மாலை கவர்ந்தது. இருவரும் சேர்ந்தே கோரஸாய் “வாவ்” என்றனர்.

“இதுதான் நல்லாருக்கு… ப்ளீஸ் இதையே போட்டுக்கோரா… ஆனா அனுமதி வாங்கிட்டுப் போட்டுக்கோ”

“இப்பயே அருந்ததி ஆன்ட்டிட்ட கேக்குறேன். இதை போட்டுக்கவான்னு தெலுகுல எப்படி கேக்குறது ஜிஷ்ணு” விசாரித்துக் கொண்டாள்.

அதே நேரம் சமயலறையில், “என்ன இருந்தாலும் கல்யாணமாகாத ஆணும் பெண்ணும் சீதாராம கல்யாண சடங்கை செஞ்சது தெரிஞ்சா நம்ம பெரியவங்க கோச்சுக்குவாங்க. அதை கொஞ்சம் யோசிச்சுக்கோங்க” ராஜுவிடம் தனது மனத்தாங்கலை சொல்லியபடியே அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் அருந்ததி.

“தாலி கட்டுறது ஒண்ணுதான் கல்யாணமாடி… அது வெறும் அடையாளம்… அந்த சீதம்மாவுக்கும் ராமுடுக்கும் கண்ணும் கண்ணும் நோக்கியபோதே கல்யாணம் நடந்துடுச்சு. அதுக்கு அப்பறம் நடந்தது எல்லாம் வெறும் சடங்குதான். நம்ம பாபுவுக்கும் சின்னம்மாவுக்கும் இருக்குறது ஜென்மபந்தம். அதை வெறும் கயிறை வச்சு எடை போடுறது எவ்வளவு பெரிய அறிவீனம்” மனைவியிடம் விளக்கினார்.

“ஆன்ட்டி, நேனு தீனி தரிஞ்சனா?” (இதை நான் போட்டுக்கவா) என்று ஒவ்வொரு வார்த்தையாய் எழுத்துக் கூட்டி அனுமதி கேட்டாள் சரயு.

மனம் முழுவதும் சரியாகாத நிலையில், “சரம்மா” என்று தலையசைத்தார் அருந்ததி. அவள் எதை காண்பிக்கிறாள் என்று கூட கவனிக்க வில்லை.

அனுமதி கிடைத்தவுடன் வேகமாய் பூஜை ரூமில் தேங்காய்களை அடுக்கிக் கொண்டிருந்த ஜிஷ்ணுவிடம் ஓடியவள்,

“ஜிஷ்ணு இதை ஆன்ட்டி போட்டுக்க சொல்லிட்டாங்க. இந்த ட்ரெஸ்க்கு பெர்பெக்ட் மேட்சா இருக்குல்ல” என்றவாறு அணிய ஆரம்பித்தாள்.

அரக்கு வளையல்களை தான் அணிந்திருந்த தங்கவளையல்களுக்கு நடுவே அணிந்தவள், சிவப்பு நிற பாசிமணியில் கொக்கியை கழற்றத் தடுமாறினாள்.

“நில்லுடி, இருக்குற ஒரு பாசியையும் உடைச்சுடாதே… நான் போட்டு விடுறேன்” என்றவாறு அழகாய் அந்தக் கொக்கியை விடுவித்த கையோடு,

“உன் பாம்பு ஜடையைப் பிடிச்சுக்கோ நானே போட்டு விடுறேன்”

அவள் சடையைத் தூக்கி முன்னால் பிடித்துக் கொண்டு தலை குனிந்து நிற்க, அவளது சங்குக் கழுத்தில் பொருந்தி பவளமாய் மின்னிய மாலையை ரசித்தவாறு கவனமாய் அணிவித்தான். பூஜை அறைக்குள் பொருட்களை எடுக்க நுழைந்த ராஜுவும், அருந்ததியும் பேச வாய் எழும்பாமல் திகைத்து நின்றனர்.

பிரம்ம முஹுர்த்த ஆரம்பத்தில், ராஜுகோகுலம் குலவழக்கப்படி அணியும் பாசிமணித் தாலியை, அவர்களது குலம் காக்கும் தெய்வமான ராமர் சீதை சிலை முன், சரயுவின் கழுத்தில் அணிவித்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.

‘உங்களுக்கு இந்த அடையாளம் இல்லாததுதானே மனக்குறை, இதோ போக்கிவிட்டேன்’ என்றவாறு புன்னகை புரிந்தார் வைதேகி மணாளன்.

உற்றோரும் பெற்றோரும் சூழ்ந்திருந்தும் உள்ளம் செத்து நடந்த ஜிஷ்ணு-ஜமுனா திருமணம் என்ற காலத்தின் பிழையை இந்தத் திருமணத்தினால் சரியாக்க முயன்றானோ அந்த ராமக்கடவுள்.

தாயே என் தெய்வம் என்ற கோசலராமன் – தாயால் வஞ்சிக்கப்பட்ட ஒரு மகனுக்கு,

தந்தை மீது பாசம் கொண்ட தசரதராமன் – தந்தை தவறிழைத்த பிள்ளைக்கு,

மூர்த்திக்கு ஒருவனான ஸ்ரீராமன் – மனதுக்குப் பிடிக்காத மனையாளிடமும் வாக்குத் தவறாத உத்தமனுக்கு,

வெற்றி என்று போர் முடிக்கும் ஜெயராமன் – பலன் கருதாமல் ஒரு கிராமத்தின் அடிமை சரித்திரத்தை மாற்றி எழுதிய செயல்வீரனுக்கு

அவனது வாழ்க்கையை, உயிரை திருப்பித் தந்த நன்னாளைக் கண்ணாரக் கண்டு மனமார வாழ்த்தும் பாக்கியம் ராஜுவுக்கும், அருந்ததிக்கும் மட்டுமே கிடைத்தது.

“ராமைய்யா” என்றவாறு கண் கலங்க ராஜு கன்னங்களில் போட்டுக் கொள்ள,

“மன சீதாராமுல கல்யாணம் மன்சிபடிகா ஜெரிகிந்தி, ஏ ஜென்மலோ நோசுகுன்ன நோமோ மன சீதாராமுல விவாஹாணி கல்லாற சூடகலிகே அதிர்ஷ்டவந்துலம்”

(நம்முடைய சீதாராம கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு. நம்ப எந்த ஜென்மத்துல செஞ்ச நோன்பின் பலனோ நம்ப சீதாராமனுடைய கல்யாணத்தை நம் கண்களால் காணும் புண்ணியம் கிடைத்தது) முணுமுணுத்தார் அருந்ததி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’

அத்தியாயம் – 16 காலை நேரம் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சனிக்கிழமை என்பதால் நந்தனாவுக்கு விடுமுறை. நீளமுடியைக் கொண்டையாக முடித்துக் கிளிப் போட்டு, வீட்டில் போடும் பைஜாமாவுடன் சமையலறையில் சப்பாத்தியைத் தேய்த்துக்  கொண்டிருந்தாள். “டிபன் சாப்பிட்டுட்டு போங்க” உள்ளிருந்து கத்தினாள்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 22

அத்தியாயம் – 22 ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தான் அரவிந்த். மனைவியையும் குழந்தையையும் எப்போதடா பார்ப்போம் என்றிருந்தது அவனுக்கு. அப்பாடா இன்று வெள்ளிக் கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் ஸ்ராவனியும் சித்தாராவும் அடிக்கும் லூட்டியை ரசித்துக் கொண்டிருக்கலாம். நிமிடமாய் நேரம் பறந்து

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை அறையின் மூலையில் போட்டுச் சென்றுவிட்டான். ‘எந்துணியை