Tamil Madhura என்னை கொண்டாட பிறந்தவளே,Tamil Madhura என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 2

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 2

அத்தியாயம் – 2
தூக்கம் என்பது ஒரு வரப்ரசாதம். எவன் ஒருத்தன்
படுத்தவுடன் எந்த நினைவும் மனதை அலைக்களிக்காமல்
கட்டை போலத் தூங்குகிறானோ அவன் தான் மிகப் பெரிய
பணக்காரன் என்னைப் பொருத்தவரை.

சிறு குழந்தைகளைப் பாருங்கள். நன்றாக
விளையாடுவார்கள், சண்டை போட்டு அடி பட்டுக் கொண்டு
வருவார்கள், ஏன் ரொம்ப சேட்டை பண்ணும்போது அம்மா
அப்பாவிடம் மொத்து கூட வாங்குவது உண்டு, இருந்தாலும்
படுக்கையில் படுத்து அம்மாவிடம் கதை கேட்டுக் கொண்டே
நிமிடத்தில் தூங்கி விடுவார்கள்.


‘மகனே எதிர்காலத்தில் இந்தத் தூக்கத்துக்கு நாய் படாத பாடு
படப் போற பாரு அதனால இப்பயே அனுபவிச்சுக்கோ’
என்று கடவுள் பரிதாபப் பட்டு அந்த வரத்தை சின்ன வயதில்
தருவார் போலிருக்கிறது.

நம் கதாநாயகன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
ஏராளமான நினைவுகள் துரத்த, அரைகுறையாகத் தூங்கி,
விடியும் பொழுது சென்னைக்கு வந்து சேர்ந்தான்.
ஒரு பெரிய க்யூவில் நின்று ஏர்போர்ட்டில் வழக்கமான
சம்பிரதாயங்களை முடித்து விட்டு, ஸ்ராவணியை
அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் . அவனை
வரவேற்க அவனது மூத்த அக்கா மற்றும் இளைய
அக்காவின் கணவர்கள் முறையே நாதனும், கதிர்வேலுவும்
வந்திருந்தனர்.


“வாப்பா பிரயாணம் நல்லா படியா இருந்ததா?” என்று
கேட்ட படியே கதிர் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டார்.

அதனால் கூட வந்த நாதனும் மற்றொரு பெட்டியை
எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.


“என்ன அரவிந்த்… மீசை இல்லாம அப்படியே ஹிந்தி
நடிகனாட்டம் இருக்க” என்று மச்சானின் அழகைப்
பாராட்டினார் கதிர்.


“ நீ வேற கதிர், அவனுக்கு மீசை நரைக்க ஆரம்பிச்சு
இருக்கும் அதுனாலதான் வச்சுக்கமாட்டிங்கிறான்.
அப்படிதானடா…. ஆனா நமக்கெல்லாம் மீசை நிறைச்சாலும்
ஆசை நிறைக்காதுடா மாபிள்ள” என்று சொல்லிவிட்டு இடி
இடி என சிரித்தார் நாதன்.


இந்த சம்பாஷனையின் மூலமே இந்த இருவரின்
குணத்தைப் பற்றியும் ஓரளவு ஊகித்திருப்பீர்கள். கெட்ட
விஷயமாகவே இருந்தாலும் கூட அதில் ஏதாவது ஒரு
சின்ன நல்லது இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பவர் கதிர்.
தேவலோக அமிர்தத்தையே தந்தால் கூட ‘கையக்
கழுவிட்டு தானே அமிர்தப் பானையைத் தொட்ட?’, ‘இது
உண்மையிலையே அமிர்தம் தான் அப்படிங்கிறதுக்கென்ன
ஆதாரம்?’ என்று கொண்டு வந்தவனை ஆயிரத்தெட்டு குறை
சொல்பவர் நாதன்.


சகலையின் அட்டு ஜோக்குக்கு பதிலுக்கு சிரிக்காமல்
ஸ்ராவநியிடம் திரும்பிய கதிர், “ குட்டி எப்படி இருக்கீங்க?
இந்த மாமாவை நியாபகம் இருக்கா? மாமா கிட்ட வாங்க

செல்லம்” என்று விளையாடியபடி அவளைத் தூக்கிக்
கொண்டு காருக்கு செல்ல ஆரம்பித்தார்.


கதிர் சற்று முன்னே சென்று விட்டதால்,
வேறுவழியில்லாமல் நாதனிடம் வினவினான் அரவிந்த்
“அம்மாவுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?”


“அங்…. நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்காங்க” சொல்லிக்
கொண்டே நடந்தார் நாதன்.


அரவித்தும் விடவில்லை “இப்ப எங்க இருக்காங்க.
ஹாஸ்பிட்டல்லயா இல்ல வீட்டிலையா?”


“வீட்டுலதான்” என்று சொல்லி விட்டு விடுவிடுவென நடக்க
ஆரம்பித்தார்.


மேலே விவரம் கேட்க அரவிந்துக்குத் தயக்கமாக இருந்தது.
நாதன் ஒரு குணக்குன்று, முன்பு ஒரு முறை ஆஸ்த்மா
அதிகமாகி அம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருந்த
பொழுது மனது துடிக்க அவரிடம் கேள்வி மேல் கேள்வி
கேட்டு விட்டான் அதற்கு


“ ஏன் இங்க நானெல்லாம் பாத்துக்க இல்ல. உங்க
அம்மாவை அப்படியே அநாதையா சாகவிட்டுடுவோமா?
அவ்வளவு அக்கறை இருக்குறவங்க அம்மாவ இடுப்பில
முடிஞ்சு லண்டனுக்குத் தூக்கிட்டுப் போக
வேண்டியதுதானே” என்று அவனிடம் கேட்டு விட்டார்.

இன்று காலையில் இந்தியா வந்தவுடனேயே இந்த மாதிரி
அருள்மொழிகளைக் கேட்க அவன் பிரியப் படவில்லை.
அதனால் வாயை மூடிக் கொண்டான்.


நாதனுக்கு இவனெல்லாம் வெளிநாட்டுக்குப் போய் லட்சம்
லட்சமா சம்பாரிச்சு, இப்ப நாம இவனுக்குப் பெட்டியைத்
தூக்க வேண்டியதாகி விட்டதே என்ற எரிச்சல். மேலும்
தனது தங்கையை அவனுக்குத் திருமணம் செய்துவைக்க
ரொம்ப நாளாக முயற்சி செய்து அது முடியாமல் போன
ஆதங்கம்.


மாப்பிள்ளை ஏதாவது சொன்னால் அனுசரித்து
போகவேண்டும் என்ற சட்டம் நம்ம ஊர்ல பொண்ணு
பெத்தவங்க வீட்டுல அமலுல இருக்குறதை உபயோகப்
படுத்திட்டு நறுக் நறுக்குன்னு அப்பப்ப பேசுவார். அவர்
வந்து நாலு நாள் இருந்தார்னாக் கூட அரவிந்த் வீட்டுல
எல்லாரும் அவர் சொல்லுக்கு ஏத்தபடி பரத நாட்டியம்
ஆடணும்.


“என்ன அரவிந்தா நான் கேட்டது எல்லாம் எந்த பெட்டில
இருக்கு?” சற்று பின்தங்கிய சின்ன அக்கா சங்கீதாவின்
கணவர் கதிர் காதைக் கடித்தார்.


கதிர் ஒரு சோமபாணப் பிரியர். அவன் வெளி நாட்டில்
இருந்து வரும்போது வாங்கி வரச் சொல்லி ரகசியமாகச்
சொல்லுவார். ஒரு வாரம் அவருக்கு ஜாலிலோ

ஜிம்கானாதான். வீட்டில் அவருக்கும் அவரது மனைவி
சங்கீதாவுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது.
அதன்படி மாதம் ஒரு நாள் அவர் சோமபானம் பருகலாம்.
அதை குருவி தானியம் சேர்ப்பதைப் போல ஒவ்வொரு
நாளையும் சேர்த்து வைத்துக் கொண்டு அரவிந்த்
வரும்போது உபயோகப் படுத்திக் கொள்வார், நாம் நமது
வருட விடுமுறையை சேர்த்து வைத்து எடுத்துக்
கொள்வதைப் போல.


இந்த ஒரு குறையைத் தவிர மத்தபடி வீட்டினர்
ஒருவருக்கும் பிரச்சனை தராத மாப்பிள்ளை அவர். அவரின்
அறிவுரை அவனுக்கு நிறைய உதவி இருக்கிறது. அவர்
மேல் அரவிந்தனுக்குத் தனி பிரியம் உண்டு.
கதிர்தான் பெரும் பாடுபட்டு அரவிந்த்தை இந்த முடிவுக்கு
சம்மதிக்க வைத்தார். இதனால் எவ்வளவோ பிரச்சனைகள்
வரும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் மனைவி
சங்கீதா கூட


“ஏங்க உங்களுக்கு இந்த வம்பு? வேலில போற ஓணான
எடுத்து தோளுல போட்டுக்கப் போறீங்க. ஏதாவது செஞ்சு
நொந்து போய் இருக்குற தம்பிய இன்னமும்
கஷ்டப்படுதிடாதிங்க ” என்று சொன்னாள்.


“போடிப் போ, கொதிக்குற உலைக்கு பயப்படுற அரிசி,
அரிசியாவே இருக்க வேண்டியதுதான். அது பசியைத் தீக்குற

அன்னமா மாறணும்ன பாடு படணும்டி. நாளைக்கு உன்
தம்பி வாழ்க்கைல ஒரு நல்லது நடக்குறப்ப என்னையப்
பாராட்டி எனக்கு கன்னத்துல எல்லாம் தர வேண்டாம்,
மாசம் ஒரு நாள் தர கோட்டாவ இன்க்ரிமென்ட் தந்து
ரெண்டு நாளாக்கு. அது போதும்”என்று சொன்னவர்தான்
இந்தக் கதிர்.


“இந்த சிவப்பு பெட்டில தான் மாமா வச்சிருக்கேன்” என்ற
அரவிந்தின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தார்.


பெருமூச்சு விட்டவர், “அப்பாடி எங்க அந்த சிடு மூஞ்சி
நாதன் கைல மாட்டிக்கிச்சோன்னு பயந்துட்டேன். அவனுக்கு
எந்தக் கெட்ட பழக்கமுமே இல்லையாம்டா. அவன்
டீடோட்டலாராம்டா என்னைப் பக்கத்துல வச்சுகிட்டே
எல்லார் கிட்டயும் பீத்திகிட்டு இருக்குறான்.


இவன் இந்த வார்த்தை சொல்லுறப்ப எல்லாம் உங்க அக்கா
என்னைப் பார்த்து முறைக்குறா. வீட்டுல யாருக்கும்
தெரியாம சூதாடுறவங்க எல்லாரையும் சொல்லுறதுக்கு
ஏதாவது இங்கிலீஷ் வார்த்தை இருந்தா சொல்லேன் நானும்
அவனப் பாத்து சொல்லுறேன்”


“சரியாத் தெரியல மாமா அப்பறமா யோசிச்சு சொல்லுறேன்”
ஜகா வாங்கினான் அரவிந்த்.


கொண்டு வந்த பெட்டிகளை காரில் வாகாக அடுக்கி
வைத்துக் கொண்டிருக்கும் போது “தம்பி அரவிந்தன்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தான்.


விவேகானந்தன் நின்றுக் கொண்டிருந்தார். அவர் ஏதோ பேச
நினைப்பது அவனுக்குப் புரிந்தது. கதிரிடம் ஸ்ராவநியைப்
பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அவரிடம் சென்றான்.
விவேகானந்தன் ஆரம்பித்தார் “உங்களுக்கு இருந்திருந்தா
அதிக பட்சம் முப்பது வயசுக்கு மேல இருக்காதுன்னு
நினைக்கிறேன்”


“இருவதொன்பது” என்றான் அரவிந்த்.


“ நான் சரியா சொன்னேன் பாருங்க. என் கடைசி பிள்ளைய
விட உங்களுக்கு வயசு கம்மி. இந்த சின்ன வயசுல
மனைவிய இழந்திருக்கிறது பெரிய சோதனை. இப்பக் கூட
வைராக்கியமா இருந்துடலாம். நமக்கு வயசாகுறப்பத்தான்
ஒரு துணைக்காக மனசு ஏங்கும்”.


“உங்க கிட்ட சொல்லுறதுக்கென்ன, என் சம்சாரம் உயிரோட
இருந்தப்ப நான் அவள ஒரு மனுஷியா நெனச்சு பார்த்ததே
இல்ல. ஒரு கோவில் சினிமா கூட்டிட்டு போனதில்ல. வீடும்
மாடும் தான் கதியா நிப்பா. நான் உண்டு என் வேலை
உண்டுன்னு அலைஞ்சுட்டு இருப்பேன். அவ போய் இத்தன
வருஷத்துக்கு அப்பறம் என் உடம்புக்கு ஒண்ணுன்னா
பதறுது. பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்ல. எனக்கு
நேரமில்லாதப்ப அவ இருந்தா. இப்பக் கொள்ளையா நேரம்
இருக்கு அவ கூட இல்லை”

“தனியா பாட்டி இருந்தாக் கூட பேரப்பிள்ளைங்க லீவுக்கு
வீட்டுக்கு வருவாங்க. ஒண்டிக் கிழவனால அவங்கள
கவனிச்சுக்க முடியாதுன்னு நினைச்சு யாரும் வரதில்ல.
என்னையத் தனியா வுட்டுட்டு போய் பழி வாங்கிட்டியேடி
பாதகத்தின்னு என் பொண்டாட்டி படத்தப் பாத்து திட்டிட்டு
இருப்பேன்”


“தனிமையைப் போக்க உள்நாடு ஆறு மாசம் வெளிநாடு ஆறு
மாசம்னு கழிச்சிட்டு இருக்குற என்னோட அனுபவம்
சொல்லுதுன்னு வச்சுக்கோங்களேன். சீக்கிரமா ஒரு
கல்யாணம் பண்ணிகங்க. எல்லா சித்திக் காரிங்களும்
கொடுமைக்காரிங்க இல்ல தம்பி. உங்க அதிர்ஷ்டத்துக்கு
ராஜாத்தியாட்டம் ஒரு பொண்ணு வந்து உங்களையும்,
குட்டிப் பொண்ணையும் தங்கத் தாம்பாளத்துல வச்சு
தாங்கிட்டுப் போறா. உங்க தனிப்பட்ட விஷயத்துல
தலையிடுறதா நினைக்காதிங்க. அடுத்த முறை ஊருக்கு
வரும்போது நான் உங்கள ஜோடியோட பார்க்கணும் ”


கட கடவென சொல்லிவிட்டுக் கையில் அவரது மகனின்
லண்டன் விலாசத்தைத் திணித்து விட்டுக் கிளம்பிவிட்டார்.
அவருக்குக் கொஞ்சம் பயம். அளந்து அளந்து பேசும்
அரவிந்த்துத் தம்பி “நீ யாருய்யா எனக்கு அட்வைஸ் பண்ண”
என்று சண்டைக்கு வந்து விட்டால் என்ன செய்வது என்று.

குழப்பத்துடன் இருந்த அரவிந்துக்கு விவேகானந்தனின்
வாக்கு அசிரீரியாய் ஒலித்தது.


இரு வாரங்களாய் அவன் மனதை வாட்டிய பிரச்சனைக்கு
கடவுளே பதில் சொல்லியதாய் நினைத்தான். கடவுள் மனித
உருவில் தானே வருவார். இனிமேல் நடப்பது நடக்கட்டும்
என்று முடிவு அவனது மனதில் உதித்தது. எவ்வளவோ
துன்பங்களை அவனுக்குத் தந்த கடவுள் இனியும் சோதிக்க
மாட்டார் என்ற நம்பிக்கை பிறந்தது.


லண்டனில் இருந்து கிளம்பும்போது அவன் மனம் அங்கிருந்த
வானிலையைப் போலவே மேகமூட்டமாய் இருந்தது.
இப்போது சென்னை வானம் போல தெளிவாகி விட்டது.
சிறிதாகப் புன்னகைத்தான்.


விவேகானந்தன் சொன்னது ஏன் அவனுக்குத் தெளிவைத் தர
வேண்டும் என்று உங்களுக்கு ஆச்சிரியம் தோன்றலாம்.
ஏனென்றால் இப்பொழுது அரவிந்த் வந்திருப்பதே அவன்
கல்யாணத்துக்குதானே.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 48தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 48

“சரயு இல்லைன்னா எங்களைப் பொதைச்ச இடத்துல புல்லு மொளச்சிருக்கும். அவளுக்கு துரோகம் செய்ய எப்படிடா உனக்கு மனசு வந்தது…” என்று ராம் சட்டென சொல்லிவிட ஜிஷ்ணுவின் முகம் வருத்தத்தால் வாடியது. “ராசு, தம்பிகிட்ட என்ன மரியாதையில்லாம பேசிகிட்டு… என்னடா நீ இன்னமும்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 38தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 38

காலை உணவை அறைக்கே வரவழைத்து அருந்தினர் ஜிஷ்ணுவும் சரயுவும். “ரெண்டு இட்லி மட்டும் போதுமா? என்னடி இவ்வளவு கொஞ்சமா சாப்பிடுற… இந்த பூரியையும் சாப்பிட்டாத்தான் காலேஜுக்குக் கூட்டிட்டுப் போவேன்” ஜிஷ்ணு கண்டித்தான். “ப்ளாக்மெயில் பண்ணாதே… என்னால சாப்பிட முடியல… வேணும்னா அந்தப்