Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 47

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 47

டீ கடை பெஞ்சில் பேசிக் கொண்டிருந்தனர்.

“பெருசா கட்டடம் கட்டப் போறேன்னு காலைல மனைல இருக்குற புதரை சுத்தம் பண்ணி, பொந்து பாம்புப் புத்து எல்லாத்தையும் இடிச்சுத் தள்ளிட்டாங்கலே… அங்கிட்டிருந்த பாம்பெல்லாம் இப்ப அக்கம் பக்கத்து தோட்டத்துல புகுந்திருச்சாம். காலைல இருந்து நம்ம ஊரு ஆளுங்க நாலு பேரை பாம்பு கடிச்சிருக்கு. டவுனாஸ்புத்திரிக்குத் தூக்கிட்டு போனாவ. மத்த தோட்டத்துல இருக்குறவகள்ட்ட சாக்கிரதையா இருந்துகிட சொல்லிருக்குதோம். காட்டு வழியா வூட்டுக்கு போற சின்ன புள்ளைகள சுத்திப் போவ சொல்லிருக்குதோம்”

நடந்தது தெரியாமல் சரயுவின் தாய் சிவகாமி தோட்டத்துக்கு சென்றிருந்தார். பக்கத்து தோட்டத்தில் அணுகுண்டின் தந்தை சீமைத்துரையும் மோட்டார் போட சென்றிருந்தார்.

வழியில் தங்கள் சொந்தக்காரன் செல்வத்தைப் பார்த்த சீமைத்துரை, “என்னாலே நெல்லையப்பன்கிட்ட ஒழுங்கா வேல பாக்குற போலிருக்கு. ஒழுங்கா நடந்து என் பேரைக் காப்பாத்து” என்று ஒரு அறிவுரையை வீசி விட்டு சென்றார்.

ருங்கொளத்தான் போக்கிரின்னு சொன்னேலடி… இன்னைக்கு அவன் வாத்தியாரோட சைக்கிளல காத்தப் பிடுங்கி விட்டுட்டான்” சாயந்திரம் பள்ளிக்கூடத்தில் மணியடித்ததும் பொறியிலிருந்து தப்பும் எலியைப் போல அவரவர் வகுப்பிலிருந்து முதல் ஆளாய் ஓட்டமாய் ஓடி சரயுவும் அணுகுண்டும் பள்ளிக்கு வெளியே கடை விரித்திருக்கும் கிழவியின் கடைக்கு வந்தார்கள்.

“அணுகுண்டு, கொடுக்காப்புளி வந்திருக்குடா… ஒரு கூறு வாங்கலாம். அப்பறம் நாலு மாங்காவக் கீறி மொளவாப்பொடி போட்டுத்தா பாட்டி” சரயுவின் வியாபாரத்தை கவனித்தார் பாட்டி.

“பாட்டி எனக்கு ரெண்டு எலந்தவடை, ரெண்டு தேன் மிட்டாய்” நீலாவின் குரல் ஒலித்தது. அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்துவிட்டு பாட்டி காசுக்காகக் கையை நீட்ட,

“பாட்டி நானே அவளுக்கும் சேத்துத் தந்துடுதேன்” பெரிய மனசோடு சொன்னான் அணுகுண்டு.

“அதுதான் உன்னக் கெட்டிக்கப் போறவன் துட்டைத் தரேன்னு சொல்லிட்டான்ல்ல… நீ போடி” பாட்டி கேலி பேச, நீலாவின் முகம் சிவந்தது.

“ஏய் கிழவி, இந்தக் கருவாப்பயலா நான் கட்டிக்கப் போறவன், மொளவாப் பொடியைக் கண்ணுல தூவி விட்டுருவேன் பாத்துக்கோ” திட்டிவிட்டு சென்றாள் நீலா.

“அணுகுண்டு, உன் மாமா மவ, அந்தக் குதிரை மூஞ்சிக்காரிக்கு என்ன ஒரு தைரியமிருந்தா என் எதிரையே உன்னத் திட்டுவா… இன்னைக்கு இவள…” கோவமாய் கிளம்பிய சரயு மறக்காமல் ஒரு கூறு பெரிய நெல்லிக்காயை எடுத்து ஜாமின்ட்ரி பாக்ஸில் பதுக்கிக் கொண்டாள்.

“ஏய் குதிரை நில்லுடி…” முழுதாய் மூன்று கிலோமீட்டர் மூச்சு வாங்க ஓடிய பின், விரட்டி வரும் சரயுவிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் சரயுவின் தோட்டத்துக்கு அருகே நின்றே விட்டாள் நீலா.

நீலாவின் சடையை வலிக்க வலிக்கப் பிடித்திழுத்து முகத்தைத் திருப்பிய சரயு,

“பெரிய வெள்ளைக்காரக் கொக்காடி நீயி? எவ்வளவு தைரியமிருந்தா என் பிரெண்டை கருவாப்பயன்னு சொல்லுவ”

“காக்கா மாதிரி இருக்கான் இவனைக் கருவாப்பயன்னு சொல்லாம செவத்த மச்சான்னு கூப்பிடச் சொல்லுதியா?”

“உனக்குக் கொழுப்புடி… உங்கப்பனுக்கும் உனக்கும் அணுகுண்டோட தகராறு பண்ணுறதே வேலையாப் போச்சு. என்ன இருந்தாலும் அவன் உன் மாமா மவன், தெரியுமுல்ல”

“யாருடி மாமா மவன். எங்க ஐயத்த செத்து போச்சு. எங்க மாமாவுக்கு இவனோட அம்மா ரெண்டாவது பொண்டாட்டி. இவங்க அம்மாவ எங்க மாமா கல்யாணமே பண்ணிக்கலைன்னு எங்கப்பன் சொல்லுச்சு. இவனுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்ல. எங்கப்பாருக்கு மட்டும் நீ இப்படி சொன்னது தெரிஞ்சது உன் காதை அறுத்துக் காக்காய்க்குப் போட்டுடும்.”

நீலா பேசியதைக் கேட்ட அணுகுண்டுவின் கண்களில் கண்ணீர் துளிர்க்க, சரயுவுக்கு கோவம் அனலாய் காய்ந்தது. “என் பிரெண்டையா அழ வைக்குற…” நீலாவின் கையைப் பின்புறமாக முறுக்கி, வாயில் முழு நெல்லிக்காயைத் திணித்தாள்.

“வேண்டாண்டி சரவெடி… இதைத் தின்னா என் தொண்டை கட்டிக்கும்…”

“வேண்டாததைப் பேசுற உன் தொண்டை நல்லா கட்டட்டும். இனிமே நீ பேசவே கூடாது” அவள் நெல்லிக்காயைத் தின்று முடித்தவுடன்தான் கையை விடுவித்தாள் சரயு. விட்டால் போதுமென ஓட்டமாய் ஓடிப் போனாள் நீலா.

“குதிரைக்கு வாய் காது வரைக்கும் கிழியுது… நீ காக்காவாமில்ல… டேய் அணுகுண்டு, நீ பெரியவனானதும் இவளத்தேன் உனக்குக் கட்டுறோம். கல்யாணத்த முடிச்சுட்டு, தெனமும் நவாப்பழம், சீதாப்பழம், நெல்லிக்கான்னு ஒண்ணு மாத்தி ஒண்ணு திங்க கொடுத்து, தொண்டையைக் கட்ட வைக்கிறோம். என்ன சரியா?”

நண்பனிடம் எதிர்காலத் திட்டத்தை சொன்னவள், அவனையும் கூட்டிக் கொண்டு தோட்டத்தில் நுழைந்தாள்.

“அப்படியே அவ நடுமண்டைல நறுக்குன்னு கொட்டி, சேமியா ஐஸையும் சாப்பிட வைக்கணும்டி. அப்பத்தான் எப்ப பாத்தாலும் காக்கா மாதிரி கத்துவா” அணுகுண்டும் ஆமோதித்தான்.

“அணுகுண்டு, நம்ம நட்டு வச்ச கொய்யா மரத்துல காய் காச்சிருக்காம்டா… நேத்து எங்கம்மா சொல்லுச்சு. வா அதைப் பாத்துட்டு வீட்டுக்குப் போவலாம்” அறியா பிள்ளைகள் உள்ளே நுழைந்தனர்.

“சரயு… நிறைய பாம்பு சுத்துதுடி வராத வெளிய போ…” புடலைப் பந்தலின் கீழே நின்றபடி கத்திய சிவகாமியின் தோளில் விழுந்த பாம்பு பொட்டென ஒரு போடு போட்டது.

“அம்மா…” சரயு கத்த “அத்தை” அணுகுண்டு கத்த, அவர்கள் குரல் கேட்டு ஓடி வந்தார் சீமைத்துரை.

“யப்பா அத்தை” என்று கத்திய அணுகுண்டின் அருகே படமெடுத்து நின்ற நாகத்தைக் கண்டவர் அலேக்காக அவனைத் தூக்கிக் கொண்டார். இடது கையில் சரயுவை தூக்கிக் கொண்டவர் வேகமாய் ஓடி ரோட்டின் மத்தியில் குழந்தைகளை நிறுத்தினார். அவர் காலில் இரண்டு மூன்று முறை சுருக்கென பட்டது பாம்புக் கடியா இல்லை நெருஞ்சி முள்ளா என்று ஆராய்ந்து பார்க்கும் நிலையில் அவரில்லை. அதற்குள் சிவகாமியும் ஓடி வந்திருந்தார். பாதையில் வந்த லாரியை நிறுத்தி அனைவரும் ஏறியபின் மருத்துவமனைக்கு விடச் சொன்னார் சீமைத்துரை.

“அம்மா… நீ நல்லாயிருவம்மா” அழுத சரயுவைப் பார்த்துக் கண்கலங்கிய சிவகாமி, அத்தனை அவசரத்திலும் சூதானமாகத் தாலிக்கயிறை மட்டும் விட்டு விட்டு, கழுத்தில் தொங்கிய ரெட்டை வடத்தையும், முறுக்கு சங்கிலியையும் அவளுக்கு மாட்டி விட்டார்.

“என்னை ஆஸ்பத்திரில கழட்ட சொல்லுவாங்கலே… கண்ட இடத்துல வச்சா வேற யாராவது திருடிட்டு போயிருவாக… நீ பத்திரமா வச்சுக்கோ…”

சங்கிலி சரயுவின் தொப்புள் வரைக்கும் தொங்கியது. ஆண்பிள்ளைகள் போடுவது போல் சட்டை போட்டிருந்ததால் அது சரயுவின் கழுத்திலிருப்பதே தெரியவில்லை. சிவகாமிக்குக் கண்ணை இருட்டியது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை சரயுவின் மடியில் படுத்துக்கொண்டார்.

“அத்தை… எந்திருச்சு உட்காரு” அழுதான் அணுகுண்டு.

“எலே ரெண்டு பயலுவளும் ஒருத்தருகொருத்தர் விட்டுக் கொடுக்காம இருக்கனும்லே” என்று சீமைத்துரை குழறிக் குழறி சொல்ல, சிவகாமியும் “அண்ணாச்சி சொல்லுறதப் போல நடங்கலே” என்றார்.

“யப்பா ஏம்ப்பா என்னமோ மாதிரி பேசுற?” அணுகுண்டு பதற,

“ராசுப்பயலே உன்னையும் உங்கம்மாவையும் நா சரியாவே பாத்துக்கல. உங்கம்மா ஒரு வெள்ளந்தி. அவள நல்லா பாத்துக்கோடா” மகனை வருடினார் சீமைத்துரை.

“சின்னக் குட்டி இந்த உலகத்துல நல்லபடியா பொழைச்சுக்கோலே… அப்பாவை நல்லா பாத்துக்குறேன்னு சத்தியம் பண்ணு” என்று கேட்டு அவள் சத்தியம் செய்ததும் அவளது உச்சியில் முத்தமிட்டார் சிவகாமி.

“சரயு அம்மா வீட்டுக்கு வரலைன்னாலும் கவலைப்படக்கூடாது… தைரியமா இருக்கணும்” என்று சொன்னவர் வீட்டுக்கு வராமலே போய்விட்டார். அவர் மட்டுமல்ல, அணுகுண்டின் தந்தை சீமைத்துரையும்தான்.

ணவன் மறைந்ததைக் கேட்டு அந்த இருள் கவிழும் நேரத்தில் கதறியபடி ஓடி வந்த அணுகுண்டின் தாய் பொற்கொடிக்கு, கணவரது முகத்தை இறுதி முறை காணும் சந்தர்ப்பம் கூட மறுக்கப்பட்டது.

“யாருடி நீ? வெளிய போடி” உறவினர் கூட்டம் தள்ளிவிட்டது.

“ஏய்யா, என் கழுத்துலயும் தாலி கட்டித்தானே அந்த மனுசன் கூட்டியாந்தாரு… ரெண்டாந்தாரம்னு தெரியாம வாக்கப்பட்டப் பாவத்தைத் தவிர நானென்ன செஞ்சேன்? உங்க சொத்து சுகம் வேண்டாம்யா… வீட்டுக்குத் தான் வரக்கூடாதுன்னு சொல்லிட்டிங்க. தகப்பனுக்குக் கொள்ளி வைக்கிற உரிமையைக் கூடத் தர மாட்டிகிங்க. எதுவுமே வேண்டாம்யா கடைசியா என் புருசன் முகத்த மட்டும் ஒரு தடவை பாத்துட்டு போயிடுறேன்” கதறிய பொற்கொடியின் காலை பயந்தபடி கட்டிக் கொண்டு நின்றான் அணுகுண்டு.

“கொள்ளி வைக்குற உரிமையா? எங்கேயோ திரிஞ்ச கேடுகெட்டவளுக்குக் கொள்ளி வைக்கிற உரிமை வேணுமாம். ஏண்டி, எங்கப்பன் உங்க வீட்டுக்கு வந்து போயிட்டு இருந்தா நீ அவனுக்குப் பொண்டாட்டி ஆயிருவியா?” ஆத்திரத்தோடு கேள்வி கேட்டான் மூத்த தாரத்தின் மகன்.

பொற்கொடியை ஓங்கி மிதித்து வெளியே தள்ளி விட்டவன், போதாதென்று சுவரில் பயந்து ஒட்டிக்கொண்டிருந்த அணுகுண்டையும் ஒரு உதை உதைத்தான். வீலென்று அலறியபடியே தாயின் அருகில் விழுந்தான் சிறுவன்.

“யெப்பா அவனும் உன் தம்பிதானே… சின்னப்பயல இப்புடி அடிக்கிறியே உனக்கு இரக்கமே இல்லையா… இதைக் கேக்க ஒருத்தருமே இல்லையா?”

கதறிய அந்த ஏழைத்தாயின் கண்ணீர் அங்கு யார் காதிலும் விழவில்லை. பொற்கொடிக்கு எப்போதும் உதவும் நெல்லையப்பன் மனைவி சிவகாமியின் மறைவால் பித்து பிடித்தாற்போல் அமர்ந்திருக்க, உதவிக்கு யாருமில்லாத அந்த அபலையை முடியைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டனர்.

“எங்கப்பன் உனக்குத் தாலி கட்டினானா யாருகிட்ட கதை விடுற. உன் மவனுக்கு எங்கய்யாதான் அப்பாவா? அதுக்கு என்னடி சாட்சி? உயிரோட இருந்தவரை ஏதோ ஓட்டிகிட்டு இருந்த… இனிமே உன்னையோ உன் மவனையோ ஊரு பக்கம் பாத்தோம் வெட்டிப் போட்டுடுவோம்” உதைத்தே தெருமுனை வரை தாயையும் மகனையும் இழுத்து சென்றனர்.

அழுதவாறே மண்ணை வாரித் தூற்றினார் பொற்கொடி. “ஏலே பொய் புழுவாதிங்கலே… உங்க நாக்கெல்லாம் புழுபுழுத்துப் போயிரும். என் மவன் அவருக்குத்தான் பொறந்தான்னுறதுக்கு சாட்சி வேணுமா? என் புருசன அச்செடுத்தாப்பில மவனப் பெத்திருக்கேண்டா. இவனைக் காப்பாத்த உயிரையே விட்டிருக்காருடா என் வீட்டுக்காரரு. இதுக்கு மேல அவரோட சொத்தும் பணமும் என் கால் செருப்புக்கு சமானம்டா. ஒரு நாள் இந்த ஊருக்கு வருவேன். என் மவனை உங்க தம்பின்னு கூப்பிட்டுத் தொட்டில் கட்டித் தாலாட்டல, என் பேரை மாத்திக்கிறேன்” அடிவயிற்றிலிருந்து கத்தி விட்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றார் பொற்கொடி.

நீ பாம்பை அடிச்சு வெளாண்ட பாவம்தாண்டி பழி வாங்க அம்மாவ வந்து கொத்திடுச்சு” சரயுவின் முடியைப் பிடித்து ஆட்டி சரஸ்வதி முதுகில் ரெண்டு மொத்து மொத்தினாள். அவளைப் பிரித்து இழுத்துப் போனாள் பார்வதி.

“நெசம்மாவாக்கா… பழி வாங்குற பாம்பு என்னைக் கொத்திருக்கலாம்ல… ஏங்கா அம்மாவ கொத்துச்சு?” கண்களில் நீர் வழிய கேட்ட சின்னத் தங்கையை கட்டிக் கொண்டாள் லக்ஷ்மி.

“சரசு கிறுக்காட்டம் பேசிட்டுத் திரியுறா… நம்ம ஊருல நிறைய பேரை கடிச்சிருச்சாம். அதுல விதி முடிஞ்சவங்க எல்லாம் சாமிகிட்ட போயிட்டாங்க”

“போக்கா… அம்மா முருகர் சாமியை எப்படி கும்பிடும். அவர் மயிலை விட்டு அம்மாவக் காப்பாத்தி இருக்கலாம்ல… ஏன் காப்பாத்தல? இனிமே நான் சாமியே கும்பிட மாட்டேன் போ”

நீலா சரயுவின் அருகே அமர்ந்து கொண்டாள். “சரவெடி, அணுகுண்டையும் அவங்க அம்மாவையும் எங்க சொந்தக்காரங்க எல்லாம் அடிச்சு பஸ்ஸ்டாண்ட்டுக்கு தொரத்திவிட்டுடாங்கடி. அத்தை தலைல அடிபட்டு ரத்தம் ஒழுகுது” அழுதாள்.

“இப்ப எங்க அவன்?” அவ்வளவு நேரம் தாயை நினைத்திருந்த சரயு நீலா பின்தொடர வேகமாய் ஓடினாள்.

பேருந்து நிலையத்தின் வாசலிலிருந்த கல்லில் அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தார் பொற்கொடி. அவர்கள் வாழ்வை போல் இருண்டிருந்த அந்த இரவில், செய்வதறியாது தெருவிளக்கில் சாய்ந்து நின்றான் அணுகுண்டு. பக்கத்திலிருந்த சந்திலிருந்து மூச்சு வாங்க ஓடி வந்த சரயு அணுகுண்டைக் கட்டிக் கொண்டாள். “டேய் அணுகுண்டு எங்கடா போறிங்க…?”

“தெரியலடி… ஊருக்கு வேற போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. எங்க வீட்டுக்குப் போனா கொன்னுடுவாங்களாம். எங்க போகன்னே தெரியல. வீட்டுல போயி காசெடுத்துட்டு வரலாம்னா அதுக்குக் கூட வழியில்லை” பரிதாபமாய் சொன்னான் அணுகுண்டு.

பொற்கொடியின் தலையில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துவிட்டாள் நீலா.

“இந்தாடா வச்சுக்கோ” ஜாமின்ட்ரி பாக்சிலிருந்த சில்லறையைப் பொறுக்கிக் கொடுத்தாள் சரயு.

“அம்மா முன்னூறு ரூவா வச்சுருக்கு… எங்க சொந்தக்காரங்க எல்லாம் சிலோன்ல இருக்காங்க. அங்க போக இந்த துட்டு பத்துமான்னு தெரியல”

நீலா, “இந்தா எங்கப்பா யாருக்கும் தெரியாம இந்தக் காசக் குடுத்துட்டு வர சொல்லுச்சு” என்று கசங்கிய தாள்களைத் தந்தாள். சரயுவும் நீலாவும் பணத்தை எண்ணினார்கள்.

“அஞ்சாயிரமிருக்கு… இது பத்துமா? சிலோன் எவ்வளவு தூரம்? டிக்கெட் எத்தன ரூவா? எப்படி போவணும்?” அவர்களுக்கு அந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லை.

“சரவெடி பொறந்ததுல இருந்து ஒண்ணா இருக்கோம். உன்னை விட்டுட்டு எப்படிடி இருப்பேன்”

“அழுவாதடா… ஆம்பளையா தைரியமா நில்லு. உங்க ரெண்டு பேரையும் அடிச்சவங்களைப் பழி வாங்கு. எந்த ஊருக்குப் போனாலும் நல்லா படிலே”

“என்னால படிக்க முடியுமாடி?”

“உன்னால முடியும்லே. எங்கம்மா முருகன் சாமியை எப்படி கும்பிடும்… எங்கம்மாவப் பாம்பு கொத்துனப்ப அந்த சாமி வந்து காப்பாதிருக்கலாமில்ல… அவர் வரவே இல்லையே… எங்கம்மாவ சாக விட்டுட்டாரே… ஆனா இங்க ஆஸ்பத்திரில பாரு, எத்தன டாக்டருங்க ராப்பகலா வேல செஞ்சு உசுரக் காப்பாத்துறாங்க. அதனால இவங்கதான் எனக்கு சாமி மாதிரி தெரியுறாங்க. நீயும் டாக்டர் படிச்சு எல்லாரையும் காப்பாத்து”

பேசியவாறே தன் தாய் கழுத்தில் போட்ட நகையை கழட்டியவள் அணுகுண்டின் கழுத்தில் மாட்டி விட்டாள். நகையை அவனது சட்டைக்குள் தள்ளி காலரின் பொத்தானைப் போட்டு மறைத்தாள்.

“வேணாண்டி… உங்கம்மா சாவுறதுக்கு முன்ன தந்தது”

“எங்கம்மா ஒண்ணும் சொல்லாது. உனக்கு தந்தா எங்கம்மா சந்தோசந்தா படும். இந்த சங்கிலியை உங்கம்மாட்ட இப்ப காமிக்காத… எப்பையாவது பொழைக்க முடியாதுன்னு ஒரு நிலை வரும்போது காமி”

“சரவெடி எனக்கு அழுகையா வருதுடி. உன்னை விட்டுட்டு எப்படி இருப்பேன்?”

“அணுகுண்டு அழாதலே… இன்னும் கொஞ்ச நாள்தான். நல்ல படிச்சு பெரிய டாக்டராயி என்னைப் பாக்க வா…”

பொற்கொடியின் ஊரான மட்டக்களப்புக்கு வந்தார்கள். சிறிது நாட்களில் அங்கும் பிரச்சனையாக, அவர்களது உறவினர்கள் ஜெர்மனிக்கு அவர்களுடன் அழைத்தனர். எல்லாம் தயார் ஆனால் தாய் மகன் இருவருக்கும் பயணச்சீட்டு எடுக்க பணமில்லை.

“ராசு என்னால முடியலடா… நீ பெரியவனாயிட்ட… உங்கம்மா என்ன தப்பு செஞ்சான்னு உனக்குத் தெரிய வேண்டாமா? நான் செஞ்ச ஒரே தப்பு உங்கப்பாவ நம்புனதுதான். போர்ல சொந்த பந்தத்தை இழந்து, கூடப் பொறந்தவங்க திசைக்கொன்னா சிதற தனிச்சு நின்னேன். ராமேஸ்வரம் முகாம்ல இருந்தேன்.

அந்த ஊருக்கு வந்து போன உங்கப்பாவோட வார்த்தைய நம்புனேன். வயசு வித்யாசம் அப்ப என் கண்ணுல படல. உடம்பு சரியில்லாம இருந்தவரு வீட்டுல சுடுதண்ணி வச்சுக் கொடுக்கக் கூட ஆளில்லைன்னு என்கிட்ட சொன்னாரு. அப்பக்கூட கல்யாணம் பண்ணி பொண்டாட்டி செத்திருக்கும்னு நினைக்கலடா. தோளுக்கு உசந்த புள்ளைங்க இருக்கும்னு கற்பனை கூட பண்ணிப்பாக்கல.

என்ன சொல்ல, என்னை ஏமாத்தி ரெண்டாங்கல்யாணம் பண்ணிகிட்டாரு. அனாதையான எனக்கு ஒரு சின்ன கோவில்ல சாமியையும், பூமியையும் சாட்சியாக்கிக் கல்யாணம் நடந்தது. நீ பொறந்ததும் அவரு ஊருக்குக் கூட்டிட்டுப் போனாரு. அவங்க குடும்பத்துல என்னை ஏத்துக்கவே இல்லை. நானும் அவர் வீட்டுல ஒரு இடம் கேக்காம அவர் மனசில இடம் பிடிச்சதையே வரமா நெனச்சு ஒரு ஓரமா ஒதுங்கிட்டேன். தோட்டம் தொறவுன்னு அப்பனிருந்தும் கிழிஞ்ச டவுசரைப் போட்டுட்டு, சத்துணவு வாங்கித் தின்னு என் புள்ள வளர்ந்துச்சு. இப்ப அவரு போனதும் அதுக்குக் கூட வழியில்லாம போச்சு.

நாதியில்லாத நான் எல்லாரு கண்ணிலையும் சின்ன வயசு விதவையாத்தான் தெரியுறேன். இந்த சனியன் பிடிச்ச ஆம்பளைங்க கண்ணுக்கு ஒரு தாயா தெரியலை… அதுனாலதான் எங்க சொந்தக்காரவங்க இருக்குற பக்கம் ஒதுங்கிடலாம்னு பார்த்தேன். ஊருக்குப் போவ எப்படியாவது டிக்கெட் வாங்குறோம் இல்ல, இருக்குற காசுல ஒரு பாட்டில் விஷத்த வாங்கிக் குடிச்சுட்டு நம்ம ரெண்டு பேரும் உங்கப்பா போன இடத்துக்கே போயி சேர்ந்துடலாம்” விரக்தியாய் பேசிவிட்டு வெறும்தரையில் மனம் கனக்கப் படுத்துவிட்டார்.

இரவு முழுவதும் யோசித்துவிட்டு காலையில் சரயு தந்த நகையைத் தந்தான் ராம்.

“பொழைக்க வழியில்லாம போறப்பத்தான் இந்த நகையை உன் கண்ணுல காமிக்கனும்னு சரவெடி சொல்லிருக்காம்மா… இப்ப நம்ம வாழ்வா சாவான்னு நிக்கிறோம். இதை வித்து ஊருக்குப் போலாம். நான் டாக்டராயி, நிறையா சம்பாரிச்சு இதைவிட பத்து மடங்கு நகை செஞ்சு அவளுக்குத் தருவேன். அவளைக் கண்ணுல பொத்தி வச்சுப் பாதுகாப்பேன்”

சிவகாமியின் நகை, ராமும் பொற்கொடியும் ஜெர்மனியில் புது வாழ்க்கை தொடங்க உதவியது. அதுவரை விளையாட்டாய் படித்து வந்த ராம் சரயுவின் கூற்றுப்படி மருத்துவனாக வேண்டும் என்ற வெறியோடு படிக்கத் தொடங்கினான்.

ராமின் கடந்தகால நினைவுகளில் ஜிஷ்ணுவும் கலங்கினான்.

“அணுகுண்டு… என்னை மன்னிச்சுருடா… நான் இதெல்லாம் தெரிஞ்சுக்காம விளையாட்டுத்தனமா இருந்துட்டேனே“ வருத்தத்தோடு சொன்னவன் சோபாவில் அவனருகே அமர்ந்து அவனது தோளை ஆதரவாய் தட்டிக் கொடுத்தான். ராமுக்கு அதுவே ஆறுதல் தர மேலும் தொடர்ந்தான்.

“ஸ்கூல் போறதே வெறுப்பாவும், படிக்கிறதே பாரமாவும் நெனச்ச எனக்கு அப்போதைக்கு ஒரே குறிக்கோள்தான். என் சரவெடி டாக்டராயிட்டுத்தான் அவளைப் பாக்க வரணும்னு சொல்லிருக்கா. அதை நெறைவேத்தணும்.

படிக்கிறது எனக்கு சுலபமா இல்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்? தெரியாது. நடுத்தர வயசில இருக்குற என் அம்மா என்ன செய்வா? அவளுக்குத் தமிழைத் தவிர வேற எதுவும் பேசக் கூடத் தெரியாது. நான்தான் வேலைக்குப் போவணும். எங்க ஊர்காரங்க வீட்டுல குழந்தையை வளக்கவும் சமைக்கவும் ஆள் கேட்டாங்க. அங்க போயிட்டோம். பதிலுக்கு அவங்க தட்டு முட்டு சாமான் போட்டு வைக்கிற இடத்துல ரெண்டு பேரும் படுக்க இடமும், என் அம்மாவுக்கு மூணு வேளை சாப்பாடும், பாதுகாப்பும் கிடைச்சது.

நான் புது நாட்டுக்கு வந்து, புது மொழியைக் கத்துகிட்டு, சின்ன சின்ன வேலைகளை செஞ்சு படிச்சேன். எனக்கு சரயுவைப் பாக்கணும்னு தோணவேயில்லை. அவதான் என் கூடவே, என் மனசிலையே இருக்காளே.

படிச்சு முடிச்சுட்டு ஊருக்குப் போனேன். பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் எட்டி உதைச்சு அனுப்புன எங்க சொந்தக்காரங்கள்ளாம் டாக்டர் சேதுராமையும் அவனோட அம்மாவையும் மரியாதையோட பாத்தாங்க. ஆனா அது எனக்குப் பத்தல. எங்க அப்பாவுக்கு நானும் ஒரு வாரிசுதான்னு நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் திரட்டி, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து எங்க அப்பாவோட முதல் குடும்பத்து மேல வழக்கு போட்டேன். பணத்துக்காக இல்லை. எங்கம்மா பத்தினின்னு ஊருக்குக் காட்ட. சீமைத்துரை மகன்தாண்டா நானும்னு எங்க ஊருல பெருமையா நெஞ்சு நிமித்தி நடக்க.

சரயு வீட்டுல நடந்த சம்பவங்களை தெரிஞ்சுகிட்டேன். அவ சென்னைல வேலை பாக்குறதை சொல்லி லக்ஷ்மி அக்கா ஹாஸ்டல் அட்ரஸ் தந்தாங்க. அவளைப் பாக்க நானும் அம்மாவும் போனோம். நாங்க போனப்ப அவ ஊருல இல்ல. மறுநாள் காலைல வருவான்னு சொன்னாங்க. காலைல போனேன். அவ வரல. மத்யானம் ம்ஹும்… சாயந்தரமும் விசாரிச்சுட்டு வரலைங்கிற பதிலைக் கேட்டுக் கவலையா நின்னுட்டு இருந்தேன். அப்பத்தான் துவண்டு வாடின கொடியாட்டம் எங்களுக்கு உயிர் தந்த தெய்வம் வந்தா. அவளை நான் பாத்து கொள்ள நாளாச்சுதான். ஆனா பொறந்ததுலருந்து அவளோட வளர்ந்த என் மனசு அது சரயுதான்னு அடிச்சு சொல்லுச்சு. அவளுக்கு என்னை அடையாளம் தெரியுதான்னு பார்த்தேன்”

புயலால் அலைகழிக்கப்பட்ட மரத்துண்டை போல சின்னாபின்னப்பட்ட மனதுடன் சோர்ந்த நடை போட்டு வந்த சரயுவுக்கு யாரோ தன்னை உற்று நோக்குவதைப் போல குறுகுறுத்தது.

‘அவனா… என்னைத் தேடி வந்துட்டானா? அதுக்குள்ளே எப்படி? அவன்தான் துட்டுக்காரனாச்சே பறந்து கூட வந்திருப்பான். பொண்டாட்டியையும் பிள்ளையையும் இத்தன வருசமா மறைச்சவனுக்கா தூரத்தைத் தொரத்துறது கஷ்டம்’

வேதனையோடு சிரித்துக் கொண்டாள். வேகமாய் சுற்றுப்புறத்தைத் தன் பார்வையால் அலசினாள். மரத்தடியில் திகைப்போடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் அவள் கருத்தைக் கவர்ந்தான். அவளால் அவனை விட்டுக் கண்ணைத் திருப்ப முடியவில்லை. ஒரு நிமிடம் அவனையே பார்த்தாள். அந்தக் கண், அந்தப் பார்வை, அதில் தெரிந்த மகிழ்ச்சி, சிநேக பாவம் அவள் வாய் முணுமுணுத்தது “அணுகுண்டு”. அவள் அடையாளம் கண்டுகொண்டதை உணர்ந்து அவன் முகத்தில் தெரிந்த தவிப்பு மறைந்தது.

“எலே சரவெடி எப்படிலே இருக்க?” வேகமாய் அவளை நெருங்கினான்.

“அணுகுண்டு நீயாலே. எப்ப வந்த… எனக்காக ரொம்ப நேரம் காத்திருந்தியோ…?” முகம் மலர அவனை விட வேகமாய் அவனை நோக்கி ஓடினாள் சரயு.

“ஆமா ரொம்ப வருஷமா காத்திருக்கேன்… உன்னைப் பிரிஞ்சதுல இருந்து இப்ப உன்னைப் பாக்குற வரைக்கும்” என்றான்.

“சரி இனிமே என்னைப் பிரியாதே. உன் கூடவே கூட்டிட்டுப் போயிடு” என்றாள் தீவிரமான பாவனையுடன்.

“உன்னை இங்க விட்டுட்டுப் போற எண்ணமே எனக்கில்லை. நம்ம பட்ட வேதனை எல்லாம் போதும். இனிமே உன்னைத் இப்படித் தனியா அநாதை மாதிரி விடமாட்டேன். உனக்கு நானிருக்கேண்டி, சாகுற வரைக்கும்…”

சரயுவின் தோளை வளைத்தபடி நடந்தான் ராம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10

அத்தியாயம் – 10 போர் முடிந்த களைப்புடன், பெருகும் குருதியைப் பொருட்படுத்தாது, அந்தப் பாலைவனத்தில் ஒரு துளி தண்ணீருக்காக அலைகிறான் அரவிந்த். அவன்  பார்க்கும் போது தூரத்தில் தெரியும் நீர் அருகே சென்றதும் கானல் நீராக மாறுகிறது.   வெகு தொலைவில்  வெள்ளித்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

  சத்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை ஊறுகாய்களையும் விற்பனை செய்யும் எண்ணத்துடன் அவற்றிக்கான

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 55

காலை புத்தம் புதிதாக அவளுக்காகவே விடிந்ததைப் போல் சரயுவுக்குத் தோன்றியது. தூக்கத்தில் ரங்கராட்டினம் சுற்றுபவளை தனது பரந்த தோள்களுக்கிடையே அடக்கி தப்பித்து விடாமல் கைகளால் சிறை செய்திருந்தான் அவள் அன்புக் கணவன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தாள். சிறு