Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

பூங்காவில் கார்டை போட்டு பணம் செலுத்தி வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் வேகமாய் சைக்கிள் ஓட்டி ஒருவரை ஒருவர் முந்தினார்கள்.

ஓரிடத்தில் ஜெர்மன் கிராமிய நடனம் நடக்க அதை ஆர்வமாய் பார்த்தார்கள். ஒரு பெண்ணிருக்க அவளை திருமணம் செய்ய இரண்டு ஆண்கள் நடனத்திலேயே சண்டையிட்டனர்.

“இதுக்கு பேர் இங்கிலீஷ்ல ஸ்லாப் டான்ஸ். பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சுக்க அந்த காலத்துல இந்த ஊரை சேர்ந்த விவசாயிங்க, வேட்டையாடுரவங்க எல்லாம் இப்படித்தான் டான்ஸ் சண்டை போடுவாங்களாம். ஜெயிக்கிறவங்களுக்குத்தான் அந்தப் பொண்ணு”

அங்கிருந்த ஜோடிகளுடன் சேர்ந்து இருவரும் இடுப்பினைக் கட்டி அணைத்தவாறு ஒரு ஆங்கிலப் பாணி டான்ஸ் போட்டனர்.

“பேசாம உங்கப்பா இந்த மாதிரி போட்டி எதுவும் வச்சு எனக்கு உன்னைக் கல்யாணம் செஞ்சுத் தந்திருக்கலாம்” ஏக்கத்தோடு வெளிவந்த வார்த்தைகளை காதில் விழாதது போல் அலட்சியம் செய்தாள் சரயு.

“அன்னைக்கு உங்க அப்பா சீரியஸ்ன்னு தகவல் வந்ததுமே உன் கழுத்துல தாலி கட்டிருக்கணுமோ… அப்படி மட்டும் நடந்திருந்தா ஜமுனாவோட எனக்குக் கல்யாணம் நடந்திருக்காதுல்ல. இப்ப இருக்குற தெளிவும், முன்யோசனையும் அப்ப இல்லாம போயிடுச்சுரா. நம்ம ரெண்டு பேருக்குமே வயசும் அனுபவமும் கம்மி. யோசிச்சு முடிவெடுக்கத் தெரியல. நானும் பெத்தவங்களுக்கு நம்ம சந்தோஷத்தை விட குடும்ப கௌரவமும், ஊருல கிடைக்குற மரியாதையும்தான் முக்கியம்னு தெரிஞ்சிக்காமலேயே இருந்துட்டேன்” கவலைப்பட்டான் ஜிஷ்ணு.

“ஜிஷ்ணு நடந்தது நடந்துடுச்சு. இப்படி பண்ணிருக்கலாமே அப்படி பண்ணிருக்கலாமேன்னு குழம்பாதே. எப்போதும் நடந்ததை நெனச்சுப் பாக்கும்போது நாம இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணிருக்கலாமேன்னு தான் தோணும். உண்மை என்னான்னா அந்த நொடில அந்த முடிவைத் தவிர வேற ஒண்ணை நம்மால எடுத்திருக்க முடியாது”

அவன் கைகளைக் கோர்த்து ஆறுதல் சொல்லியபடியே நடந்தாள் சரயு. வார விடுமுறையாதலால் ஸ்டால்கள் சில போட்டிருந்தனர். குழந்தைகளோடு குழந்தைகளாய் மெர்ரி கோ ரௌண்ட் சுற்றினார்கள். ஜிஷ்ணு வில் அம்பு விடும் இடத்தில் ஐந்து ஐந்து யூரோவாய் கட்டி இருபது அம்புகளை விட்டு வெற்றிகரமாக சரயு ஆசைப்பட்ட பெரிய புலி பொம்மையை வென்று தந்தான்.

“அம்பு வாங்கின காசுக்கு இதை மாதிரி இன்னொரு பொம்மை வாங்கிருக்கலாம்”

“போடா லூஸு… எவ்வளவு கஷ்டப்பட்டு இதை எனக்காக ஜெய்ச்சு தந்திருக்க… இதுல காசு மட்டுமா இருக்கு. இதுக்காக நீ பட்ட கஷ்டமும் சேர்ந்து இருக்கு”. புலி பொம்மையை கட்டி அணைத்து அழுத்தமாய் முத்தமிட்டாள்.

ஏக்கத்தோடு பார்த்த ஜிஷ்ணு, “இதுக்கு பேருதாண்டி ஓரவஞ்சனை. கஷ்டப்பட்டு ஜெயச்சது நான். கிஸ் மட்டும் இதுக்கா?”

அவனது பின்தலையில் செல்லமாய் அடித்தவள், “புலம்பாம வா”

அங்கு கிடைத்த உணவு வகைகளை இருவரும் வாங்கி ருசி பார்த்தார்கள்.

“சரயு இந்த ஸ்ட்ராபெர்ரி கேக் டேஸ்ட் பண்ணிப்பாரேன்” என்று அவன் சாப்பிட்டுவிட்டு கையிலிருந்ததை இயல்பாக ஊட்ட,

“இந்த சாக்லெட் க்ராசியன்ட் சாப்பிட்டுப் பாரேன்” என்று அவள் பதிலுக்கு தான் உண்டதை அவனுக்கு ஊட்டினாள்.

“வெரி லவ்லி இந்தியன் கப்புல்”

என்று அருகில் யாரோ சொன்னது காதில் விழ, கடையில் பேரம் பேசிக் கொண்டிருந்த சரயுவை இன்னமும் நெருங்கி நின்றுக் கொண்டான். அவளை அடுத்தவனின் மனைவியாக ஜிஷ்ணுவால் கற்பனை கூடப் பண்ண முடியவில்லை.

‘ஊருல இருக்குற எல்லாரும் நாங்க ரெண்டு பேரும்தான் பொருத்தமான ஜோடின்னு சொல்லுறாங்க. இந்த திமிர்பிடிச்சவள பெருமாள் படைச்சதே என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னுதானே… அதனாலதானே அவர் கோவில்ல வச்சு இவகிட்ட என் மனசை பறிகொடுத்தேன். இவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு இவகிட்ட உணர்த்தியும், எப்படி என்னை மறந்துட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டா’

அவனது மனம் சுணங்கியது. முன்பு ஒரு தரம் தான்தான் அவளை வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு வாழும்படி சீரியஸாய் அறிவுரை சொன்னோம் என்பதை வேண்டுமென்றே மறந்தான்.

களைத்துப் போனவர்கள் ஓய்வெடுக்க அமர, “உனக்கு ஒரு சின்ன கிப்ட் தரணும்ரா”

“பணமோ நகையோ வேண்டாம்” என்றாள் கண்டிப்பாக.

“ரெண்டுமில்லை”

“நேத்து மாதிரி கிஸ் பண்ண, உன் கன்னத்துல பளார் பளார்ன்னு தந்துட்டு எந்திருச்சு போயிட்டே இருப்பேன்”

“சரி என் ஆசையை முழுங்கிடுறேன். இது வேற… இந்த வீடியோவைப் பாரேன்” என்றான் புன்னகையுடன்.

ஏனோதானோ என்று ஆர்வமில்லாமல் பார்க்க அமர்ந்த சரயு தூக்கி வாரி போட அவனது சாம்சங்க் டேபிலட்டில் தெரிந்த படத்தை பெரிதாக்கினாள்.

இரண்டு பேர் செல்வத்தை பிடித்துக் கொள்ள, ஒருவன் கையில் ஆசிட் பாட்டிலை வைத்துக் கொண்டு பக்கத்தில் நின்றான்.

“நாயே… என்ன தைரியமிருந்தா என் சரயு டிரஸ் மாத்துற ரூமில ஒளிஞ்சிருந்து பாத்துருப்ப. இந்தக் கண்ணு தானே அவளைப் பாத்தது. இனிமே அது எதையும் பாக்காது. இந்தக் கைதானே அவளைத் தொட்டது. இனிமே அது எதுக்கும் உபயோகப்படாது” என்று ஜிஷ்ணுவின் குரல் தெளிவாகக் கேட்டது. செல்வத்தின் கழுத்திலிருந்த பூட்ஸ் அணிந்த பாதம் ஜிஷ்ணுவினுடையது என்பதைக் கண்டு கொண்ட சரயுவின் கண்கள் வியப்பால் பெரிதாகின.

“இவன் கத்துறத தெளிவா வீடியோ பண்ணுங்க. என் பங்காரம் பாக்கணும்” ஆணையிட்டுவிட்டு நகர, உயிர் போகும் ஓலம் எழும்பியது செல்வத்தின் தொண்டையிலிருந்து.

வார்த்தை வராமல் சரயு திகைக்க, “உன்னை கஷ்டப்படுத்தினானே… உன் நம்பிக்கையை கெடுத்தானே… தங்கையா நெனைக்க வேண்டியவளை தாரமாக்கப் பார்த்தானே… இருக்க வீடில்லாம ஓடி ஒளிய வச்சானே… கடைசியா உங்கப்பா மனசொடிஞ்சு செத்துப் போகக் காரணமா இருந்தானே… அவன் மட்டும் சந்தோஷமா இருக்கலாமாரா? நான் விட்டுடுவேனா” அவளது கன்னங்களை வருடியபடி கேட்க,

உணர்ச்சி மிகுதியால் அவனது தோளை வளைத்து அணைத்துக் கொண்டவள் அப்படியே அவனது மார்பில் சாய்ந்தாள்.

“விட மாட்ட… எனக்குத் தெரியும். அவன் என்னைப் பிடிச்சு இழுத்தானே அப்ப உன்னைத்தான் நெனச்சேன். உன் வார்த்தை மட்டும்தான் என் காதுல ஒலிச்சி யானை பலம் தந்தது”

அவளது இடுப்பினை வளைத்து தனது கைகளுக்குள் அடக்கிக் கொண்டான். அதில்தான் அத்தனை ஆறுதல்.

“அன்னைக்கு ஸ்வீட் வாங்கித் தர சொன்னப்பவே நெனச்சேன் விஷ்ணு. தாங்க்ஸ்” என்றவாறு அவனது அகன்று பரந்த தோளில் அவளையறியாமலேயே இதழ்களைப் பதித்தவள், ‘ச்சே என்ன செஞ்சுட்டிருக்கேன்’ என்றவாறு விலகினாள்.

நீண்ட நாள் கழித்துக் கிடைத்த முத்தத்தை அனுபவித்தவன், “நான் ஒண்ணும் உன்ன மாதிரி கோவப்பட்டுத் திருப்பி அடிக்க மாட்டேன். நீ கிஸ் தந்த இடத்துல தண்ணி கூட படாம பத்திரமா பாத்துக்குவேன்”

“நீ இப்ப உணர்வு வேகத்துல உன்னை அறியாம கொடுதெல்ல, அதே மாதிரி தான் நேத்து நானும் கொடுத்தேன். இப்ப நீ கொடுத்த முத்தம் தப்பில்லைன்னா, நேத்து நான் கொடுத்த முத்தமும் தப்பில்ல” என்று சொல்லி அவன் நேற்று நடந்த முறையை நியாயப் படுத்தினான்.

“இப்ப சொல்லுரா உனக்கு நான் முத்தம் தரக்கூடாதா?”

அவன் மூக்கைப் பிடித்து ஆட்டியவள், “நேத்து நீ நடத்துகிட்டது தப்பே இல்லை. போதுமா” என்றாள்.

அப்படியே நெடுநேரம் அமர்ந்திருந்தனர்.

“சரயு… ”

“சொல்லு”

“ஒரு சாதாரண பொம்மையை ஜெயுச்சுத் தர நான் பட்ட கஷ்டத்தை உணர முடிஞ்ச உன்னால நான் உன்னைப் பிரிஞ்சு படுற கஷ்டத்தை உணர முடியலையாரா?”

“மரத்தை வெட்டும்போது அது கத்துறதில்லை. அதனால அதுக்கு வலியில்லைன்னு நெனைச்சுப்பியா?”

“என்னை விட்டுப் பிரியணும்னு தானே அந்த ராமை கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்த”

“இல்ல ஜிஷ்ணு… நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு தான் அந்த முடிவை எடுத்தேன்…”

“நீ உன் வீட்டுக்காரன் கூட சந்தோஷமா இருக்கியா?” மறுபடியும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டான்.

“ஐயோ திரும்பத் திரும்ப எத்தனை தடவைதான் இதையே கேப்ப… நான் சந்தோஷமா இருக்கேன். உலகத்திலேயே என் வீட்டுக்காரர் என் மேல அன்பு வச்சிருக்குற அளவுக்கு வேற யாரும் வச்சிருக்க மாட்டாங்க… போதுமா” என்றாள் கடுப்புடன்.

“அதை மட்டும் நான் ஒத்துக்க மாட்டேன். உலகத்திலேயே நான்தான் அதிகமா உன்மேல அன்பு வச்சிருக்கேன். உன் அம்மாவை விட, உன் அப்பாவை விட, உன் கணவனை விட…” சட்டென சொல்லிவிட்டு அவளது முறைப்பைக் கண்டு அடங்கினான்.

“தப்பா எடுத்துக்காத சரயு… பின்னி உன் ரூம்ல சிங்கிள் காட் இருக்குறதா சொன்னாங்களா நான் கொஞ்சம் குழம்பிட்டேன்” வழிந்தான்.

“எந்த ரூமை பார்த்தாங்க…” யோசித்தவன், “கடவுளே அது அபி ரூம். அதுலதான் என் சுடிதார்ஸ் அண்ட் குர்திஸ் அடுக்கி வச்சிருக்கேன். அதை பார்த்துட்டு என் ரூம்னு நெனச்சாங்களா உங்க சித்தி. நீயும் ஏதோ எனக்கும் என் கணவருக்கும் தகராறுன்னு நெனச்சுட்ட. இதுதான் நேத்துல இருந்து நீ என்கிட்ட ஈஷிகிட்டிருக்க காரணமா? தகறாரா இருந்தா என்ன செஞ்சிருப்ப…”

“சால்வ் பண்ண உதவி பண்ணலாம்னு நெனச்சேன். அந்த ராம்… இவ்வளவு லவ்லி பொண்டாட்டியை விட்டுட்டு வீக்எண்டு பணத்துக்காக வேலைக்குப் போறான்னா… எனக்கு எவ்வளவு கோவம் வரும்… நீ பாவம் ஹஸ்பன்ட் கூட ஸ்பென்ட் பண்ணணும்னு எவ்வளவு ஆசையா இருந்திருப்ப. கைக் குழந்தை வேற”

குறும்பாய் அவனைப் பார்த்து சிரித்தவள், “அதனால என்ன பண்ணப் போற?”

“அவனை ரெண்டு தட்டு தட்டி உன் கூட ஒழுங்கா குடும்பம் நடத்த வைக்கலாம்னு பார்த்தேன்” சொல்லியவாறு அமர்ந்தான்.

அவனது கன்னத்தை தனது இரு கரங்களாலும் தாங்கியவாறு அவன் கண்களை இமைக்காமல் பார்த்தாள். பின்னர் மெதுவான குரலில், “என் கதை இருக்கட்டும்… நீ எப்படி இருக்க… சந்தோஷமா இருக்கியா… என்கிட்டே உண்மையை மட்டும் சொல்லு பாக்கலாம்” என்றாள்.

“ம்ம்… சந்தோஷ…” என்று ஆரம்பித்தவன் அவளது கண்களை சந்தித்தவுடன் பொய்யைத் தொடர திராணியின்றி,

“ஜமுனா என்னை விவாகரத்து பண்ணிட்டு போயிட்டாடி” என்றான்.

“என்ன சொல்லுற விஷ்ணு?”

“நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள், ஜமுனாவோட பங்காளி வீட்டுக் கல்யாணத்துக்கு எல்லா சொந்தக்காரங்களும் கூடியிருந்தோம். சாதாரணமா இருந்த பேச்சு அதிகமாகி ஜமுனாவுக்கும் என் கசின் ஸ்ரீவள்ளிக்கும் சண்டை வந்துடுச்சு. வள்ளியோட ஹஸ்பன்ட் பானுபாஸ்கர்தான் ஜமுனாவை கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தான். ஆனா ஜோடி மாறிடுச்சு. வள்ளிக்கும் ஜமுனாவுக்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம். இந்தியால பானுவோட மருத்துவமனைல வச்சுத்தான் எனக்கும் ஜமுனாவுக்கும் அவசர கோலத்துல கல்யாணம் நடந்தது. அங்கதான் என் அம்மாவுக்கு சர்ஜரியும் நடந்தது. அப்பறம் அவன் கிளினிக் சரியா ஓடாம நஷ்டம் ஏற்பட்டுடுச்சு. பானு வேற ஹாஸ்பிட்டல்ல வேலைக்கு போனான். அவங்களோட பகையை வெளிக்காட்ட ஒரு விஷயம் வேணுமில்லையா அதுதான் யாரு வீட்டுக்காரர் பணக்காரன்னு வாக்குவாதம் ஆரம்பமாச்சு. அது எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைத் தெரியபடுத்துச்சு” சம்பவத்தில் அமிழ்ந்தான் ஜிஷ்ணு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 17தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 17

அன்று ஸ்ரீவைகுண்டம் செல்வம் மாமனார் வீட்டிற்கு அலப்பறயாய் தனது புது பைக்கில் சென்றான். அவனது விஜயத்தின் முக்கியமானக் குறிக்கோள் ஒன்றுதான் ‘புது வண்டியை சரயுவிடம் காண்பிக்க வேண்டும்’. ‘சரயு தனியாத்தான் வீட்டிலிருப்பா… தனியா என்னத் தனியா… பக்கத்து வீட்டுக் கிழவி டிவி

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 54தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 54

சமையலறையில் ஆராய்ந்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு. பசிக்கிது பசிக்கிது என்று புலம்பி விட்டாள் சரயு. பாதிநாள் வெளியே சாப்பிடுவதால் ரவையைத் தவிர வீட்டில் ஒன்றுமில்லை. உப்புமா செய்யலாம். அதை தந்துவிட்டு யார் அவளிடம் அடி வாங்குவது? அதுவும் புது மனைவியை திருமணநாளன்று காலைலேருந்து

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 53

அதற்குள் ஜிஷ்ணுவிடம் பேசியபடியே பாஸ்கெட்பால் கோர்ட்டை அடைந்திருந்தனர். அவனது வீட்டின் பின்னே அமைந்திருந்த அழகான சிறிய கோர்ட். அங்கிருந்த பிரெஞ்சு விண்டோ வழியாக வீட்டினுள் நுழைந்து பக்கத்திலிருக்கும் மாடிப்படி வழியாக அவனது அறைக்கு சென்றுவிடலாம். அவன் அறை பால்கனியிலிருந்தும் அவ்விடத்தைக் காணலாம்.