Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 40

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 40

மாலையே லில்லியின் அறையில் சரயுவுக்கு இடம் கிடைத்துவிட, அன்றே விடுதிக்கு செல்வதாக சொல்லிவிட்டாள். கையாலாகாதவனாய் தலையாட்டினான் ஜிஷ்ணு. கிளம்பும் முன் அவனிடம் ஒரு சிறிய வெல்வெட் பையைத் தந்தாள்.

“ஜிஷ்ணு… இது எல்லாம் எங்க அம்மா நகை. ஊருல இருந்து வரும்போது எதுக்கும் இருக்கட்டும்னு எடுத்துட்டு வந்தேன். ஹாஸ்டல் ரூம்ல வச்சுக்கிறது பாதுகாப்பில்ல. ப்ளீஸ் பத்திரமா வச்சுக்கிறிங்களா?”

காலையில் இதைத் தந்திருந்தாலென்றால் ஜிஷ்ணு தயக்கமின்றி வாங்கியிருப்பான். ஆனால் இப்போது அவன் பார்ப்பது வேறு சரயுவாயிற்றே, அதனால் தெளிவாகக் கேள்விக்கணையைத் தொடுத்தான். “இதை பீஸ் கட்டினதுக்கு ஈடா கொடுக்குறியா சரயு? உனக்கு பீஸ் கட்டக் கூடவா எனக்கு உரிமையில்லை”

அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தவள், “எனக்கு பீஸ் கட்டினது யாரு?”

“நான்தான்”

“நாந்தான்னா… உங்களுக்குப் பேர் இல்லையா?”

அவள் வார்த்தைகளில் ஏதோ பொடி இருந்தது போல் பட்டது ஜிஷ்ணுவுக்கு.

“நாந்தான்னா… உன்னோட பிரெண்ட், உன் அட்வைசர், உன் கார்டியன் எப்படி வேணும்னாலும் பேர் வச்சுக்கலாம்”

“அந்த நான் ஜிஷ்ணு தாரணிகோட்டாவா?”

பளிச்சென மின்னியது ஜிஷ்ணுவின் கண்கள், “இல்லயே அந்த நான் சரயுவோட விஷ்ணு”

புன்னகை கீற்றாகத் தோன்றி, பெரிதானது சரயுவின் முகத்தில், “அப்ப நான் எனக்காக செலவளிச்ச பணத்தைத் திருப்பித் தர மாட்டேன்”

“ஜிஷ்ணுவா இருந்தா திருப்பித் தந்துடுவியா?” ஏக்கத்தோடு கேட்டான்.

“கண்டிப்பா… படிச்சு முடிச்சதும் வட்டியோட திருப்பித் தருவேன்”

“ஏன்ரா” என்றவனிடம்,

ஆள்காட்டி விரலால் அவனை சுட்டிக் காட்டியவள், “இந்த ஜிஷ்ணுவை எனக்குப் பாக்கக் கூடப் பிடிக்கல. நீ எனக்கு வேண்டாம். எனக்கு என் விஷ்ணுதான் வேணும்”

‘கடவுளே! எண்ணங்கள் இந்த அளவுக்கு ஒன்று போல இருக்க முடியுமா… இப்படியும் ஒரு ஒற்றுமையைப் படைத்து, எங்கள சேர விடாமல் பிரித்தது விதியா இல்லை சதியா’ என்றெண்ணி சந்தோஷமும் துக்கமும் ஒன்றாய் கலக்க, கண்களில் நீர் வர சிரித்தான் ஜிஷ்ணு. “சரவெடி… எப்படிடி உனக்கும் சரி விஷ்ணுவுக்கும் சரி என்னைப் பிடிக்க மாட்டிங்குது”

“ஏன்னா நாங்க ரெண்டு பேரும் வேற வேற இல்ல. சரி ஜிஷ்ணு… வாங்க ஹாஸ்டல் கிளம்பலாம்” என்று கிளம்பி செருப்பை அணிந்துக் கொண்டாள்.

எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டான் ஜிஷ்ணு. “சரயு… என் கூட டின்னர் சாப்பிட வருவியா?”

“உங்களுக்கு இன்னைக்கு வேற அப்பாயின்ட்மெண்ட் இல்லையா?”

மனம் அவள் கேட்டதின் பொருளை உணர்ந்து கூச, இல்லை என்று தலையசைத்தான். சரயுவின் யோசனைப்படி அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்தினார்கள். சரயு தோசையை உண்ண, ஜிஷ்ணு கண்களாலேயே அவளை உண்டான். அவளோ அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. கட கடவென சாப்பிட்டு முடித்தாள்.

ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் தண்ணீராய் உருகியிருக்க, “என்ன ஜிஷ்ணு ஐஸ்கிரீம மில்க் ஷேக்கா மாத்த ட்ரை பண்ணுறாப்புல இருக்கு. புது பிசினெஸோ” சரயு நக்கலாய் கேட்கவும் அசடு வழிந்தபடி சாப்பிட்டு முடித்தான்.

ரயுவை மனம் கனக்க விடுதியில் இறக்கிவிட்டான் ஜிஷ்ணு.

“சரயு வாடி வா… ஆறு மணில இருந்து உனக்காக காத்திருக்கேன் தெரியுமா?” என்று சரயுவின் பொருட்களை வாங்கிக் கொண்டபடியே கோவித்தாள் லில்லி.

“ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வர நேரமாச்சுடி… ஆமா நம்ம ரூம்மெட் ச்சை… தன்யா வந்துட்டாளா?” என்று சையை அழுத்தியபடி கேட்டாள்.

“அவ அவங்க ஊர்காரி யாருக்கோ ரூம் கொடுக்கக் கேட்டிருந்தா போலிருக்கு. வார்டன் உன்னை ரூமுல போடவும் கோவத்துல என் பிளாஸ்க்கை உடைச்சுட்டாடி”

“சும்மாவா விட்ட?”

“கேட்டா தெலுங்குல என்னமோ கத்துதா. எனக்கு வெளங்க மாட்டேங்கு”

“தெலுங்குல பதில் சொல்லுறாளா? தமிழ் பேசப் பிடிக்காதவ எதுக்கு நம்ம ஊருக்கு வந்து படிக்கணும்? முதல் வேலையா அவளுக்குத் தமிழ் கத்துக் கொடுக்குறோம்”

“அவ மாட்டேன்னு சொன்னா?” ஆர்வமாய் கேட்டாள் லில்லி.

“அவளாவது பிளாஸ்க்கை உடச்சு கோவத்தக் காமிச்சா, எனக்கெல்லாம் கோவம் வந்துது அவ மண்டைதான் உடையும்”

“அப்படி கிப்பிடி செஞ்சுறாதடி” பயந்தாள் லில்லி.

“எடுத்த உடனே மண்டையை உடைப்போமா? நம்மகிட்ட தகராறு பண்ணா, முதல்ல அவளோட கண்ணாடி, சென்ட் பாட்டில் இப்படி உடைக்கலாம்… அடுத்து அவளுக்குப் பிடிச்ச டிரஸ்ல தக்காளி சாஸ் கொட்டும். அவ நல்லா தூங்குற சமயத்துல ரூம்ல பர்த்டே பார்ட்டி நடக்கும். இதுவே போதும்னு நினைக்கிறேன். அதுக்குள்ளே சேதாரத்துக்கு பயந்து தமிழ் அவ வாய்ல வந்துரும்”

ஜிஷ்ணுவுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் சரயு குழுவினரிடம் மாட்டிக்கொண்ட ரங்கம்மா நினைவுக்கு வந்தாள்.

‘எடு கொண்டலவாடா எங்க ஊரு அம்மாயி ஒருத்தி இந்த ரவுடிகிட்ட மாட்டிகிட்டா போலிருக்கே. அவளோட உயிருக்கு ஆபத்து வராம பாத்துக்கோப்பா’ என்று அவசர வேண்டுதல் வைத்தான்.

“வரேன் ஜிஷ்ணு. பத்திரமா போயிட்டு வாங்க” சொல்லிவிட்டு லில்லியுடன் பொருட்களை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். ஒரு முறையாவது தன்னைத் திரும்பிப் பார்ப்பாள் என்று ஆவலோடு கண்ணிமைக்காமல் சரயுவைப் பார்த்தான் ஜிஷ்ணு. அவளோ ஜிஷ்ணுவின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிட்டு அவன் பார்வையிலிருந்து மறைந்து விட்டாள்.

காரில் சாய்ந்தவாறு விடுதியை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் ஜிஷ்ணு.

“இப்போதைக்கு இதுதான் என்னோட தேவதையோட இருப்பிடம். இங்க அவ பாதுகாப்பா இருப்பா… சரயுவைப் பாக்கணும்னு தோணினா உடனே ஓடி வந்துடுவேன். பங்காரம் நீ என்னை அன்போட பார்த்தே பழகிட்டேனா… இப்படி ஒட்டாம நீ பேசுறதும் நடந்துக்குறதும் என்னால தாங்க முடியலரா… நீ என்னை கொஞ்ச நாள்ல மறந்துடுவேங்குற உண்மையை எப்படித் தாங்கப்போறேனோன்னு தெரியல” புலம்பினான்.

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே

நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி

ஜிஷ்ணு காரில் ஏறி ஸ்டார்ட் செய்ததும் அத்தனை நேரம் இருளில் மறைந்து அவனை ரசித்துக் கொண்டிருந்த அந்த உருவம் வெளியே வந்தது. ஜிஷ்ணு காரைக் கிளப்பி செல்வதை காரிடரின் இருளிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் சரயு.

“நீ எவ்வளவு பெரிய பொறுக்கியா வேணும்னாலும் இருந்துக்கோ… உன்னால என்னைத் தவிர யாரையும் காதலிக்க முடியாது. உனக்கு உலகம் முழுசும் கேர்ள் பிரெண்ட்ஸ் இருக்கலாம். ஆனா உன் மனசில இருக்குற சிம்மாசனத்தில, உனக்குப் பக்கத்துல உட்கார்ந்திருக்குற ராணியா இந்த சரயுதாண்டா இருப்பா… இதை நான் கர்வத்தோட சொல்லுவேன்.

முட்டாள்… என்னால வெறியோட கட்டிப் பிடிக்கிறதுக்கும், ஆசையோட கட்டிப் பிடிக்கிறதுக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா… இந்த சரயு அவ்வளவு சீக்கிரம் ஏமாந்துடுவாளா? என்னை வெறியோட கட்டிபிடிச்ச ஒரு மிருகத்துகிட்ட இருந்து நான் தப்பிச்சு வந்தது உனக்குத் தெரியாதில்ல.

முதல்ல உன் மேல அருவெறுப்பு வந்தது நிஜம்தான். அப்பறம் ராத்திரி பூரா யோசிச்சேன். இத்தனை நாள் உன் பக்கத்துல இருந்திருக்கேன். உன் ரூம்ல உன்கூட இருந்திருக்கேன். எனக்கு குட் டச், பேட் டச் சொல்லித்தந்திருக்கியே தவிர, தப்பு எண்ணத்தோட என்னைப் பார்த்தது கூட இல்லை. என்னால உன்னை உணர முடியாதா விஷ்ணு. லூசு பைய்யா… நம்ம ரெண்டு பேரும் வேற வேற ஆளா?

இதுதானே விஷ்ணு உனக்கு வேணும். நான் உன் மேல கோவப்படணும், உன்னை வெறுக்கணும், உன்னை மறக்கணும், இதைத்தானே என்கிட்டேயிருந்து எதிர்பார்த்த… முதல் ரெண்டை இப்பவே தந்துட்டேன் போடா… போயி என்னை ஏமாத்திட்டதா நெனச்சு சந்தோஷப்படு. ஆனா மூணாவது கோரிக்கை நான் செத்தா கூட நிறைவேறாது. ஆனா அதையும் பூர்த்தி செய்துட்டதா உன்னை நம்ப வைப்பேன்.

விஷ்ணு உனக்கு என்னமோ ஒரு பெரிய பிரச்சனை இருக்கு. அதை என்கிட்டே சொல்லாம மறைக்கிற… பரவால்ல, ஒரு நாள் வரும் அப்ப உன் மனசில இருக்குறதை எல்லாம் கொட்டுவ. நானும் என் மனசை உங்கிட்ட சொல்லுவேன். அந்த நாளுக்காக உன் பங்காரம் காத்துகிட்டு இருக்கா…

நீ இவ்வளவு செஞ்சும் எப்படி நீ சேர்த்துவிட்ட காலேஜ்ல அமைதியா படிக்கிறேன்னு குழம்பிருப்பியே… ‘என் வீட்டுக்காரர் அமெரிக்கால போய் மாஸ்டர்ஸ் படிச்சுட்டு வந்திருக்கார். அவரளவுக்கில்லைன்னாலும் நான் ஒரு டிகிரியாவது படிக்க வேண்டாமா?’ ஒரு கள்ளச் சிரிப்பு சிரித்தவாறு ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் உதட்டில் வைத்து சத்தமாய் ஜிஷ்ணு சென்ற திசைக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 1தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 1

அத்தியாயம் – 1 மியூனிக், ஜெர்மனி ‘குக்கூ குக்கூ’ என்று கடிகாரத்தின் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து கத்திய குக்கூப்பறவையிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் சரயு. “என்னடா நேரமாச்சுன்னு சொல்லுறியா? இதோ கிளம்பிட்டேன். நேத்து அப்பா என்னை விட்டு சாமிட்ட போன நாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 45

கண்கள் கலங்க ஜிஷ்ணு சொன்னதை இதயம் கலங்கக் கேட்டிருந்தாள் சரயு. “விஷ்ணு… குண்டூர்ல என்னைப் பாக்குறப்ப இதெல்லாம் ஏண்டா சொல்லல” “நானே அவ்வளவு நாள் கல்யாணம் ஆனதை உன்கிட்ட மறைச்சு நடிச்சுட்டு இருந்தேன். எப்படி இதை சொல்லுவேன்? ஆனா அப்பல்லாம் என்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 15

அத்தியாயம் –15  சத்யா ஆட்டோவை செலுத்திக் கொண்டிருக்கும் பன்னீரை ஓரக் கண்ணால் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தாள். அவள் சென்னையில்  வேலைக்கு சேர்ந்து மூன்று வருடங்களும் பன்னீரின் ஆட்டோவில் தான் காலையிலும் மாலையிலும் சென்று வருகிறாள். பன்னீருக்கு யாரும் இல்லை. எங்கோ