Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 37

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 37

 

காலை ஏழு மணி ஷிப்ட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு பத்து மணிக்கு இடைவேளையிருக்கும். வழக்கமாய் காலை உணவை அந்த சமயத்தில் அனைவரும் உண்ணுவார்கள். சரயுவோ சாப்பிடாமல் பக்கத்தில் போல்ட் உற்பத்தி செய்யும் பிரிவுக்குப் போய் ஆராய ஆரம்பித்து விட்டாள். அங்கு புதிதாகக் கிடைத்த தோழியுடன் பேசியபடி குடுகுடுவென வெளியே இருக்கும் மரத்தடிக்கு சென்றாள். அங்குதான் அவளது பையை வைத்துவிட்டு சென்றிருந்தாள்.

“ஆயிரத்து இருநூறு டிகிரில சூடு படுத்துறாங்க… அப்பத்தானே இரும்பு வளையும்… சரிடி எல்லாரும் போயிட்டாங்க போலிருக்கு. நீ போ நான் பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வாரேன்” என்று உடன் வந்த தோழியை அனுப்பி விட்டு மரத்தை நெருங்கினாள். அவ்வளவு நேரம் ஆட்கள் நிறைந்திருந்த இடம் இடைவேளை முடிந்ததால் வெறிச்சோடிப் போயிருந்தது.

பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் முகத்தில் தெளித்து விட்டுப் பின் கடகடவெனக் குடித்தாள். உள்ளே இருந்த சூட்டுக்கு தண்ணீர் குளுமையாக தொண்டையில் இறங்கியது.

‘தண்ணி எப்படி இவ்வளவு சில்லுன்னு’ ஆச்சரியமாய் பாட்டிலைப் பார்த்தாள்.

“என்ன சரவெடி… ரொம்ப தாகமா இருக்கா… இன்னும் வேணுமா?” என்ற குரல் ஒன்று மரத்தின் பின்னே கேட்க, சரயு கையிலிருந்த பாட்டில் நழுவி கீழே விழுந்தது. வேகமாய் மரத்தின் பின்னே போய் தேடியவள் ஜிஷ்ணுவை அங்கு கண்டதும்,

“விஷ்ணு…” என்று பாய்ந்து சென்று எக்கி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். அவ்வளவு நாள் பட்ட துன்பங்கள் எல்லாம் தங்களை விட்டு விலகியதைப் போன்ற உணர்வு இருவருக்கும். சில நிமிடங்கள் உலகத்தை மறந்து இரு ஜோடிக் கண்களும் இமைக்காமல் ஒன்றை ஒன்று விழுங்கின. ஆனால் துடிக்கும் இதயங்கள் பேசின.

புலியிடமிருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ஒருவனை வாயைத் திறந்து சந்தோஷமாய் வரவேற்றதாம் அம்மரத்தில் குடியிருந்த மலைப்பாம்பு. சாவு புலியினாலா… பாம்பினாலா என்று திகைத்தவனின் நாவில் தலைக்கு மேல் தொங்கிய தேன் கூட்டிலிருந்து சில துளிகள் தேன் சொட்டியதாம். ‘உறுதி படுத்தப்பட்ட மரணம் எதனாலிருந்தால்தான் என்ன… இந்த நொடியை அனுபவிப்போம்… இந்தத் தேன்தான் எவ்வளவு ருசி’… என்று அந்த கணத்தை அனுபவித்தானாம். அந்த நிலைமையில் தானிருந்தது இருவரின் உள்ளமும். புலியாய் உறுமி, மலைப்பாம்பாய் விழுங்கக் காத்திருக்கும் விதியின் கைகளில் சிக்கிய இருவரும் தேனாய் கிடைத்த நிமிடங்களை அனுபவிக்கத் தயாராயினர்.

“நல்லாயிருக்கியாரா… இளச்சுட்டியே” என்றவாறு அவளது தோளை ஒரு கையால் வளைத்து முதுகினில் தட்டிக் கொடுத்தான் ஜிஷ்ணு.

தூரத்தில் ஒலித்த பேச்சுக் குரல் கேட்டு விலகிய சரயு, “நல்லாயிருக்கேன் விஷ்ணு… நீ கூடத்தான் ரொம்ப இளைச்சுட்ட” என்று வருத்தப்பட்டாள்.

“நேத்து உன் கூட பேசினப்ப கூட சொல்லல… எப்படி அதுக்குள்ளே இங்க பறந்து வந்தியோ…” சந்தோஷ மிகுதியால் அவனது கையில் ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டுக் கேட்டாள்.

“குச்சி கையை வச்சுட்டு அடிக்காதடி, வலிக்குது… உன் கூட பேசிட்டு குண்டூர்ல இருந்து கார்ல சென்னை வந்தேன். அங்கேருந்து முதல் பிளைட் பிடிச்சு மதுரை. உன் ஹாஸ்டல்ல விசாரிச்சுட்டு இங்க வந்துட்டேன்.

இங்க வந்து பாத்தா, எல்லாரும் சாப்பிடுறாங்க. இந்த சரவெடி பேகை வச்சுட்டு அந்தக் கட்டடத்துக்குள்ள ஓடிட்டா…”

அவனை விட்டு விலக மனமின்றி அவனது தோளில் சாய்ந்து அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி கேட்டாள் “பொறவு”

“பொறவென்ன பையை ஆராய்ச்சி பண்ணிப் பாத்தா… அவளோட டிபன்பாக்ஸ்ல உப்புமா இருந்தது. அவளுக்குப் பிடிக்காத சாப்பாடாச்சே… அதுதான் அம்மாயி சாப்பிடலைன்னு தெரிஞ்சுகிட்டேன். சோ அவ வரதுக்குள்ள அதை நான் சாப்பிட்டுட்டு அவளுக்கு கூல் வாட்டர இந்த வாட்டர் பாக்ல ஊத்தி வச்சேன்”

இருவரும் சந்தோஷ மிகுதியால் சிரித்துக் கொண்டனர். அவனது கைகளுடன் தனது கைகளைக் கோர்த்துக் கொண்டாள் சரயு.

“விஷ்ணு இது நெஜம்தானான்னு நம்பவே முடியல” என்று சந்தோஷப்பட்டாள் சரயு.

“எனக்கும்ரா… சரி என்கூட வா சரயு” என்றான் ஜிஷ்ணு.

பையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள் சரயு. மின்னல் வேகத்தில் கம்பனியில் சொல்லிவிட்டு, ஹாஸ்டல் அறையைக் காலி செய்து மதியமே சென்னைக்கு விமானமேறினர்.

சரயுவுக்கு சீட் பெல்ட்டை மாட்டி விட்டான் ஜிஷ்ணு. விமானம் கிளம்பியதும் பஞ்சுப் பொதி போல இருக்கும் மேகங்களை ஆச்சரியத்தோடு விழி விரியப் பார்த்திருந்தாள்.

“ஹே சரவெடி முதல் விமானப்பயணம் பயமாயில்ல?”

இல்லை என்று தலையாட்டினாள்.

“அதானே நீ எவ்வளவு பெரிய வீராதி வீரி, சூராதி சூரி… உனக்காவது பயம்மாவது…”

‘இது தைரியத்தால இல்ல விஷ்ணு… உன் மேல இருக்குற நம்பிக்கையால… நீ பக்கத்துல இருக்கும்போது நான் ஏன் கவலைப்படணும்’ மனதினுள் நினைத்த சரயு ஜிஷ்ணுவைப் பார்த்துக் கண்ணை சிமிட்டினாள்.

“எங்க போறோம்ன்னு கேக்க மாட்டியா?” என்றான் ஜிஷ்ணு ஆதங்கத்தோடு.

“தேவையில்லை… நீ கூப்பிட்டா எங்கன்னாலும் வருவேன்” அழகாகச் சிரித்தாள் சரயு.

அவளது நம்பிக்கையைக் கண்டு சிலிர்த்த ஜிஷ்ணு. ‘பங்காரம்… என் மேல நீ வச்சிருக்கற காதலைக் காப்பாத்தற சக்தியை நான் இழந்துட்டேன்ரா. ஆனா படிப்பு மேல உனக்கிருக்குற காதலை எப்பாடுபட்டாவது கண்டிப்பா காப்பாத்துவேன்.’

அவன் எண்ணவோட்டம் பற்றி அறியாத சரயு, “உனக்கு இந்த தாடி நல்லாவேயில்ல விஷ்ணு. தேவதாஸ் மாதிரி இருக்க” என்று கடிந்துக் கொண்டாள்.

பின்னர் நினைவு வந்தவளாக, “விஷ்ணு உனக்கு ஒண்ணு வாங்கினேனே” என்றபடி பையைப் பிரித்து எடுத்தாள்.

“நீ பெரிய பணக்காரன்ல்ல… பாரு பெரிய செயின், வாட்ச் எல்லாம் போட்டிருக்க நான் வாங்கினது உனக்குப் பிடிக்குமான்னு தெரியல” வருத்தப்பட்டாள்.

“என்ன வாங்கினாரா…” என்றபடி பார்த்தவன் கண்களில் அந்த அழகிய மோதிரத்திலிருந்து பெருமாள் சிரித்தார். சரயுவே அவள் கையால் அவனுக்குப் போட்டுவிட, ஜிஷ்ணுவுக்கென்றே செய்தாற்போல் அவனது விரல்களில் பொருந்திக்கொண்டது மோதிரம்.

“என் முதல் சம்பளத்துல வாங்கினேன். உனக்குப் பிடிச்சிருக்கா…?” ஆவலாகக் கேட்டாள்.

“ரொம்ப ரொம்ப… சரி உனக்கு என்ன வாங்கின?” ஆர்வமாகக் கேட்டான் ஜிஷ்ணு.

“ஒண்ணும் வாங்கல… இதை வாங்கத்தான் என்கிட்டே பணமிருந்துச்சு” என்றவளின் அன்பைக் கண்டு வெண்ணையாய் உருகிப் போனான்.

மாலையே, சீட் ரிசர்வ் செய்த கல்லூரியின் அலுவலகத்தில் சரயுவின் சான்றிதழ்களைத் தந்துவிட்டு மறுநாள் கல்லூரியில் சேருவதாக சொல்லி வந்தனர்.

அந்த ஐந்து நட்சத்திர விடுதியில், இருவரும் தங்குவதற்கு அடுத்தடுத்த அறைகளை புக் செய்திருந்தான் ஜிஷ்ணு. அவளுடன் பேசுவதை முடிந்த அளவு தவிர்த்தான்.

“ஏன் விஷ்ணு ரெண்டு ரூம் புக் பண்ண… பணம் வேஸ்ட்தானே… உன்னைப் பாத்து எவ்வளவு நாளாச்சு. உன் கூட நான் எவ்வளவு பேசணும். பேசிட்டே இந்த சோபால தூங்கிப்பேனே”

‘சரயு பெத்தவங்களை இழந்துட்டு நிக்கிற உன்கிட்ட நானும் நீயும் இனி ஒண்ணு சேர வாய்ப்பில்லைன்னு எப்படிரா சொல்லுவேன். நீ பக்கத்துல இருக்குறப்ப என்னோட துக்கத்தை சொல்லி ஓன்னு அழணும், நான் தலை சாய உன் மடி வேணும்னு தவிக்கிற மனசை எப்படி அடக்குவேன்.’ மனதில் எண்ணுவதை வெளியே சொல்ல வழியின்றி சொல்ல முடிந்த வார்த்தைகளை மட்டும் உதிர்த்தான்.

“எனக்கு வேலை நிறைய இருக்கு சரயு… நீ உன் ரூமுல போய் தூங்கு” என்றான் லாப்டாப்பை பார்த்தபடி.

“விஷ்ணு… எனக்கு தனியா தூங்க பயம்மா இருக்கும். யாரோ எனக்குத் தெரியாம ரூமுல ஒளிஞ்சு இருக்குற மாதிரி இருக்கும். ப்ளீஸ் நான் இங்கயே தூங்குறேனே” என்று சொல்லியவளின் வார்த்தைகளை அன்று ஜிஷ்ணு கூர்ந்து கவனிக்கவில்லை.

“இப்ப உனக்கு என்ன வேணும் சரயு?” என்றான் கடுமையான குரலில்.

முகம் தொங்கிப் போக, “தூக்கமே வரல. நீதான் நல்லா பாட்டுபாடுவியே… எனக்காக ஒரே ஒரு பாட்டு பாடுறியா?” என்றாள்.

“எனக்குத் தெலுகு பாட்டு தான் தெரியும். தமிழ் டச் விட்டுப் போச்சு”

“எனக்குப் புரியாதே… சரி பரவால்ல பாடு…” என்று சோபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள்.

ஒரு சிகரெட் கையில் எடுத்துக் கொண்ட ஜிஷ்ணு அவளது முகத்தைப் பார்த்தான் அவனது வாயிலிருந்து தானாகப் பாடல் வந்தது.

பிரயத்தமா தெலுசுனா நா மனசு நீதேனனி

ஹ்ருதயமா தெலுபனா நீகோசமே நேனனி…

பாட ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் தூங்கிப் போனாள் சரயு. அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, படுக்கையில் படுக்க வைத்தான் ஜிஷ்ணு. பின்னர் கீழே தரையில் முட்டி போட்டு, கட்டிலில் தனது கைகளை ஊன்றி அதில் தலையை வைத்தபடியே அந்த மெல்லிய வெளிச்சத்தில் சரயுவின் முகத்தை இமைக்காமல் பார்த்தான்.

“உன் முகத்தைப் பாத்துட்டிருக்குற இந்த நிமிஷம் எவ்வளவு அற்புதமானதுன்னு தெரியுமா… நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவன்னு தெரியுமா?… உனக்குத் தெரிய வேண்டாம்…

சரயு… நா பங்காரம்… எந்த கஷ்டம்ரா நூக்கு… அப்பாவ இழந்த உனக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாத பாவியாயிட்டேனே… சொல்லக்கூடாதுன்னு இல்ல… சொல்லி என் மேல இருக்குற அன்பைத் தூண்டிவிட விரும்பல…

இந்த பதினெட்டு வயசில, நீ கஷ்டப்பட்டு, தகிக்குற அனல்ல வெந்து, முதுகொடிய சம்பாரிச்ச பணம் முழுசும் எனக்குன்னு செலவழிச்சியா செல்லி. நீ முதன் முதல்ல சம்பாரிச்ச பணம் முழுசும் எனக்கே எனக்கா… அப்ப உன் மனசில நான் எவ்வளவு ஆழமா இருந்திருக்கணும். இந்த மோதிரத்தோட கம்பேர் பண்ணுறப்ப நான் உனக்கு செலவழிச்ச பணம் ஒண்ணுமே இல்ல…

இவ்வளவு அன்பை ஒரு ஷணம் கூட பிரியாம என்கூடவே வச்சுக்கணும்னு ரொம்ப எனக்கு பேராசையா இருக்கு. But Beggers are not choosers.

நீயும் நானும் பாக்குறப்ப எல்லாம் முத்தம் தந்துக்கணும், கட்டிப் பிடிச்சுக்கணும், உடம்பாலதான் காதலைப் பகிர்ந்துக்கணும்னு இல்லரா. என்னைக்காவது ஒரு தடவை பாக்கும்போது மனசால பேசி, கண்ணால ஒருத்தர் மேல ஒருத்தருக்கிற அக்கறையை ஷேர் செய்துக்குறோமே இதுவே நம்ம ஆயுசு முழுசும் தொடர்ந்தாக் கூட போதும்”

தெலுகில் மெல்லிய குரலில் தன் மனதில் தோன்றியதெல்லாம் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தான். இவ்வளவு நாளும், தன்னைத் தேடி செல்வம் வந்துவிடுவானோ, தன்னை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று மனதில் மருகி, இரவு முழுவதும் தூங்காமல் விழித்து காலையில் வேலைக்கு செல்லும் சரயுவோ விஷ்ணுவின் அருகாமையில், தன்னுடன் அவனிருக்கும் தைரியத்தில், அவன் பாதுகாப்பு தந்த நிம்மதியில் நன்றாக உறங்கினாள்.

தூக்கத்தில் புரண்ட சரயுவின் பிஞ்சுப் பாதத்தில் மென்மையாக முத்தம் கொடுத்து மன்னிப்பை வேண்டினான் ஜிஷ்ணு.

“என்னை மன்னிச்சுடு டார்லிங். நாளைக்கு உன்னை என்கிட்டே இருந்து பிரிகிறதுக்கான வேலையை ஆரம்பிக்கப் போறேன். ஏற்கனவே ரணப்பட்டிருக்குற உன் மனசுக்கு இந்த அறுவை சிகிச்சை வேதனையை தரும். ஆனா எனக்கு வேற வழி தெரியலரா…

நீ யாராவது நல்லவனைக் கல்யாணம் பண்ணிக்கணும். நிறைய குழந்தை பெத்துக்கணும். சந்தோஷமா இருக்கணும். அதைப் பார்த்து நான் சந்தோஷப்படணும். இதெல்லாம் நடக்கணும்னா விஷ்ணுவை நீ மறக்கணும்.

என்னை நம்பாத… உன்னோட கனவுகள்ல இந்த விஷ்ணு வர வேண்டாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுப்பை என் மேல வளத்துக்கோ… என்னோட காதல் மூழ்கிட்டிருக்குற கப்பல்… அதுல விஷ்ணு மூழ்கி செத்தாக் கூடப் பரவால்ல… என் தங்கம், நீ மட்டும் தப்பிச்சு வாழ்க்கைல கரையேறிரு”

அவளது பாதங்களில் மறுபடியும் மறுபடியும் மென்மையாக தனது மன்னிப்பை முத்தமாகப் பதித்து வேண்டினான்.

முத்தத்தினால் ஏற்பட்ட குறுகுறுப்பில் அசைந்த சரயுவைத் தட்டிக் கொடுத்தவன், மெல்லிய குரலில் பாடலைத் தொடர்ந்தான்.

கவிதையே தெரியுமா, என் கனவு நீதானடி

இதயமே தெரியுமா, உனக்காகவே நானடி

அவனது கவிதை கனவினில் கூட விஷ்ணுவின் நினைப்பில் நிம்மதியாகத் தூங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 63 (நிறைவுப் பகுதி)

      சில வருடங்களுக்குப் பின், மியூனிக்கில் சற்று பெரிய வீட்டுக்குக் குடியேறி இருந்தார்கள் ஜிஷ்ணு ராம் குடும்பத்தினர். பெருகிவிட்ட குடும்பம்தான் அதற்குக் காரணம். இந்தியாவில் ஊறுகாய் கம்பனி மற்றும் மிளகாய் ஏற்றுமதியை ராஜுகோகுலம் வசமும், மற்ற இடங்களில் அலைவதை