Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 36

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 36

முதலில் சுதாரித்தது சரயுதான்.

“நல்லாருக்கியா விஷ்ணு… உங்கம்மா நல்லாயிட்டாங்களா?”

ஜிஷ்ணுவும் சமாளித்துக் கொண்டான். கையோடு முகமூடியையும் எடுத்து அணிந்து கொண்டான். “நல்லாயிருக்கேன் சரயு… அம்மாவுக்கு சரியாயிடுச்சு”

“நீ இப்ப எங்க இருக்க?”

“அமெரிக்காவுலதான் தங்கியிருக்கேன். ஆனா பிஸினெஸ் விஷயமா இந்தியாவுக்கு வந்துட்டுப் போவேன்”

‘ஏன் என்னைப் பார்க்க வரலன்னு கேட்டா என்ன சொல்லுறது?’ தொண்டைக்குள் முள் தைத்ததைப் போல வார்த்தைகள் வராமல் தவித்தான்.

“நிறையதரம் உங்க காலேஜுக்கு கால் பண்ணேன் சரயு. உன்கூடத்தான் பேச முடியல. பொண்ணுங்களைக் கூப்பிடாதேன்னு திட்டிட்டாங்க. ரத்தினசாமி கூட பேசலாம்னு பார்த்தேன். அவனும் காலேஜ் வரதில்லன்னு சொல்லிட்டாங்க”

“பரவால்ல விஷ்ணு… நீ பேசித்தான் உன்னை நினைவுபடுத்தணுமா… ரத்தினசாமி காலேஜை விட்டு நின்னுட்டான்”

“நீ நல்லாருக்கியா சரயு?”

“ரொம்ப நல்லாயிருக்கேன்”

“உன் நாணா”

“நல்லாயிருக்கார் அம்மாவோட சந்தோஷமாயிருக்கார்” அவளது பதில் நடந்ததை சொல்ல, ஜிஷ்ணுவின் முகம் வேதனையைக் காட்டியது.

“எப்பரா?”

“ரெண்டு மாசமாச்சு”

ஓ காட் ரெண்டு மாசமா அம்மா அப்பா இல்லாம சரயு… நான்கூட உன் பக்கத்துல இல்லாமா போயிட்டேனே…

“சாரி சரயு… ஏன்ரா முன்னாடியே சொல்லல?”

“நீ எங்க இருக்கன்னு எனக்குத் தெரியாதே”

“சாரி சரயு… நான் உன்னைப் பாக்கணுமே.. வீட்டு அட்ரஸ் ஒரு தடவை சொல்லேன்”

“நான் வீட்டுல இல்ல விஷ்ணு. மதுரைல வேலை பார்த்துட்டு இருக்கேன். அதனால நீ சிரமப்பட வேண்டாம்”

‘வேலை பாக்குறாளா… அக்கா வீட்டுல என்ன ஆனாங்க?’ குழப்ப முடிச்சுக்கள் ஜிஷ்ணுவின் முகத்தில்.

“பரவால்ல எப்ப நீ ஊருக்கு போவேன்னு சொல்லு… அப்ப வரேன்”

“நான் ஊருக்குப் போகவே மாட்டேன்”

என்னமோ நடந்திருக்கு… என்று நினைத்தவனுக்கு அவளிடம் ஏதாவது கேள்வி கேட்டு மனதைப் புண்படுத்திவிடக்கூடாதென்ற ஜாக்கிரதை உணர்வு வந்தது. வீட்டைப் பற்றிக் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்தான்.

“சரயு நீ மேல படிக்கல…”

“நானும் படிக்கிறேன்னுதான் சொன்னேன் விஷ்ணு… எல்லாரும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க… அப்பா நல்லபடியா இருந்திருந்தா படிக்க வைக்க சொல்லி சண்டை போட்டிருப்பேன். இப்ப யாரைக் கேக்க?

அக்கா வீட்டுல எல்லாம் நிரந்தரமா இருக்க முடியாதுல்ல. அதுதான் மதுரைல வேலைக்குப் போறேன்னு அடம் பிடிச்சு வந்துட்டேன். இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கவலையில்லை”

எல்லாவற்றையும் செய்தி வாசிப்பதைப் போல உணர்ச்சியற்ற சாதாரண குரலில் சரயு பேசப் பேச வேதனை தாங்காமல் அமர்ந்திருந்தான்.

பேச்சை திசை திருப்ப,

“அப்பறம் மதுரைல சரவெடிக்கு வேலை தர அளவுக்கு தகுதியோட கார் மெனுபாக்சரிங் கம்பனி இருக்கா என்ன?”

“நான் ஒரு நட்ஸ் அண்ட் போல்ட்ஸ் மெனுபாக்சரிங் கம்பனில வேலை பாக்குறேன்”

தெரிந்தாற்போல் சொன்னான். “தெரியுமே மீனாக்ஷி கோவிலுக்கு பக்கத்துல இருக்குறதுதானே”

“அய்யே மக்கு… கோவில் பக்கத்துல எவ்வளவு பில்டிங் இருக்கு. அங்க எப்படி கம்பனி நடத்த முடியும்… அதுக்கு நிறைய இடம் வேணுமில்ல… அவுட்டர் ஏரியாலதான் வைப்பாங்க… நான் வேலை பாக்குற இடம் கப்பலூர்ல இருக்கு”

‘உன் வாயில இருந்தே விஷயத்தை வரவழைக்குற நான் மக்காடி?’ சிரித்துக் கொண்டவன், “அப்ப எங்க ஸ்டே பண்ணிருக்க சரயு?”

“இங்க ஹாஸ்டல் ஒண்ணுல சேர்ந்திருக்கேன்”

“ஆபீஸ்க்கு பக்கதுலையா… நடந்தே போயிடுவியா?”

“இல்லை… நான் பழங்காநத்தத்துல இருக்கேன். பஸ்ல போயிட்டு வருவேன்”

“ஹாஸ்டல் பேரென்ன… வசதியாயிருக்கா? பஸ்ஸ்டாப் பக்கதுலதான?”

“மலர்மகள் ஹாஸ்டல்னு பேரு… ரொம்ப நல்லாயிருக்கு விஷ்ணு… இந்த ஏரியாலையே இதுதான் கொஞ்சம் காஸ்ட்லி… சம்முகம் மச்சான் இங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டாரு”

“அப்படியா… எத்தனை மணிக்கு ஆபிஸ் போவ?”

“இப்போதைக்கு ஏழு மணி ஷிப்ட் போறேன்”

சற்று நேரம் சாதாரணமாய் பேசியதிலேயே ரணப்பட்ட மனம் ரெண்டும் அமைதியானது. அதன்பின் சரயு நேரமாகிவிட்டது என்று சொல்ல, வைக்க மனமின்றி அலைபேசியை வைத்தான் ஜிஷ்ணு.

‘படிக்க வைக்க பணம் கேட்க சங்கடம், தெரியாதவர்கள் வீட்டில் தங்க சங்கடம். இதெல்லாம் உன் மனசுல வச்சுகிட்டு கஷ்டப்படுறியா சரயு. ஒரு வார்த்தை கஷ்டமாயிருக்கு என்னை கூட்டிட்டு போன்னு சொல்லிருந்தேன்னா எல்லாத்தையும் விட்டுட்டு உன்கிட்ட ஓடி வந்திருப்பேன். நீ சொல்லமாட்ட…

ஆனா மை ஸ்வீட் பேபி டால், நீ சொல்லலைன்னு நான் அப்படியே உன்னை விட்டுடுவேன்னு நெனச்சியா…’ மனதில் சொல்லிக் கொண்டான்.

டிராவல் ஏஜென்ட் ஒருவரிடம் பேசி சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் முதல் பிளைட்டில் டிக்கெட் புக் செய்தான். அப்படியே மதிய ப்ளைட்டில் மதுரையிலிருந்து சென்னைக்கு இரு டிக்கெட்டுகள் புக் செய்தான். கல்லூரி ஒன்றின் பேரையும் விலாசத்தையும் எழுதி ராஜுவிடம் தந்தான்.

“ராஜு நான் சென்னைக்கு உடனே கிளம்புறேன். நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணுமே. இந்த காலேஜ்… நம்ம குண்டூர் காலேஜ் ஆளுங்களோட சென்னை பிரான்ச். அங்க பேசி ஆட்டோமொபைல் எஞ்சினியரிங் ரெண்டாவது வருஷம் சீட் ஒண்ணு ஏற்பாடு பண்ணுங்க. என்ன… டோனேஷன், பீஸ் எல்லாம் சேர்த்து ஒரு பத்து லக்ஷம் கேப்பாங்க. கூடக் கேட்டாலும் கணக்கு பாக்காதிங்க. பாங்க்ல டிராப் பண்ணி கட்டிடுங்க. கார்டியனா என் பேரை போட்டுடுங்க. மறக்காம ஹாஸ்டல் சீட் ஒண்ணும் ஏற்பாடு செய்துடுங்க” படபடவென சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

அவனது மலர்ச்சியான முகத்தையும், ஊருக்கு அவன் கிளம்பும் வேகத்தையும் பார்த்தவர், “பாபு, ஸ்டுடன்ட் பேரு சொல்லலையே”

முக்கியமான விஷயத்தை மறந்துவிட்ட தனது முட்டாள்தனத்தை எண்ணி ராஜூவைப் பார்த்து அசட்டு சிரிப்பை உதிர்த்தவன், “சரயு நெல்லையப்பன்…” என்றான்.

“ராஜு… சரயு… அவதான் என்னோட ஏஞ்சல்…” என்றபடி துள்ளிக் குதித்து சென்றவனை சந்தோஷத்தோடு பார்த்தார் ராஜுகோகுலம்.

‘பாபுவுக்கு எவ்வளவு ஏக்கமிருந்தா அது இப்ப இவ்வளவு சந்தோஷமா வெளில வரும். பேசாம அந்தப் பொண்ணையே அவர் கல்யாணம் பண்ணிருக்கலாம்’ பெருமூச்சு விட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 26

  மறுபடியும் ஜிஷ்ணுவின் அறை முதலிரவு மேக்அப் போட ஆரம்பித்தது. எரிச்சலுடன் அறைக்கதவைத் தாள் போட்டான். ‘நானும் அம்மா உடம்பு சரியாகணும்னு பாத்தா தாலி கட்ட வச்சதுமில்லாம இப்ப முதலிரவாம். முடியாதுன்னு சொன்னா என்ன பண்ணுவாங்க? நாலு சுவத்துக்குள்ள நடக்குற விஷயத்துக்கும்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 43

பூங்காவில் கார்டை போட்டு பணம் செலுத்தி வாடகைக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு இருவரும் வேகமாய் சைக்கிள் ஓட்டி ஒருவரை ஒருவர் முந்தினார்கள். ஓரிடத்தில் ஜெர்மன் கிராமிய நடனம் நடக்க அதை ஆர்வமாய் பார்த்தார்கள். ஒரு பெண்ணிருக்க அவளை