Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 33

தாய் சிவகாமியின் படத்துக்கருகே புதிதாக இடம் பிடித்திருந்த தந்தை நெல்லையப்பனின் படத்தை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் சரயு.

‘தெனம் காலேல எந்திரிச்சதும்… அப்பாவுக்கு கஞ்சி தரணும், உடம்பு துடைக்கணும், துணி துவைக்கணும், மருந்து வாங்கணும்னு உன்னைப் பத்தியே நெனச்சுட்டு இருந்துட்டேன்ப்பா. படிச்சுட்டு இருந்தப்ப பொழுதே பத்தாது. இப்ப படிப்பும் முடிஞ்சிடுச்சு, நீயும் அம்மாட்ட போயிட்ட… இப்ப என்கிட்டே நிறைய நேரமிருக்கு… எப்பிடி செலவழிக்கன்னு தெரியாம முழிக்கேன்’

செல்வத்தின் நடத்தை, நெல்லையப்பன் மரணம் என்று அடுக்கடுக்காய் வந்த துன்பங்களில் துவண்டு போயிருந்தாள் சரயு.

கம்மங்கஞ்சியில் புளித்த மோரை ஊற்றி உப்பு போட்டு சரயுவுக்குக் குடிக்கக் கொடுத்தாள் அவ்வா.

“இந்தாடி வெங்காயத்தக் கடிச்சுக்கோ” என்றபடி சிறு தட்டில் பொடியாக அறிந்த சின்ன வெங்காயத்தைக் கொண்டு வந்தாள் லச்சுமி. மறுக்காமல் வாங்கி அருந்தினாள் சரயு.

சிறிய அழகான முகம். ரோஜாவால் செய்தவளோ என்றெண்ணவைக்கும் நிறம். குட்டி மூக்கு. வானவில்லின் வண்ணம் போல பேசும்போது பாவனைகளைக் காட்டும் கண்களும் முகமும் கொண்டவள். சிரிக்கும் போது கலகலவென வெள்ளிக் காசைச் சிதற விட்டது போலிருக்கும். அந்த அழகுக்கு சோடை போகாத படிப்பும், துறுதுறுப்பும் கொண்டவள். சின்ன வயதில் கிருஷ்ணனைப் போல அவள் செய்யும் குறும்புகளை சரயு இல்லாத நேரத்தில் நெல்லையப்பனும் சிவகாமியும் பேசி ரசிப்பார்கள்.

“உங்களுக்கெல்லாம் சுளுவா மாப்பிள்ளை பாத்துடலாம், என் சின்ன குட்டிக்கு இருக்குற அழகுக்கும், அறிவுக்கும் எந்தப் பட்டினத்திலையாவது இருக்குற ராஜாவைத்தான் புடிச்சுட்டு வரணும்” என்று கிண்டலாய் சொல்வார் நெல்லையப்பன்.

அந்த சரயு ஜீவனற்றுப் போயிருந்தாள். வழக்கமாய் அவள் மனதிலிருப்பதை வெளியே காண்பிக்கவே மாட்டாள். அம்மாவும் அப்பாவும் இறந்த பொழுது கூட ஒரு தடவை உடைந்தாள். பின்னர் ஒரே நாளில் சுதாரித்துக் கொண்டாள். அதன்பின் அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவில்லை. அப்படி ஒரு அழுத்தம். எல்லாவற்றையும் மனதினுள்ளேயே பூட்டி வைத்து மருகுவாள்.

சரயு குடித்து முடிக்கும் வரை பேசாமலிருந்த லச்சுமி மெதுவாய் பேச ஆரம்பித்தாள்.

“அப்பாவ நெனச்சு வருத்தப்படுதியா… எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு… ஒரு வகைல இது அவருக்கு நல்லதுதான். படுக்கைல இருந்தப்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டார். அதனால இது அப்பாக்கு ஒரு விடுதலைதான்”

ஒரு நிமிடம் மௌனம், “இனிமேயாச்சும் அப்பாவும் அம்மாவும் பிரியாம சந்தோஷமா இருப்பாங்கல்லக்கா…” என்றாள் சரயு.

கண்கள் கலங்க தங்கையைக் கட்டிக் கொண்டாள் லக்ஷ்மி. சிறிது நேரம் டிவி சத்தத்தைத் தவிர வேறேதும் அங்கு கேட்கவில்லை.

“சரயு… மச்சான் உனக்கு மாப்பிள்ள பாத்திருக்காரு… அடுத்த முகுர்த்தத்துல கல்யாணம் பண்ணிடலாம்னு முடிவெடுத்திருக்கோம்”

நீரைப் பருகிக் கொண்டிருந்தவள் புரையேற நிமிர்ந்தாள்.

“அக்கா கல்யாணம் வேண்டாம்க்கா… எனக்கு இப்பத்தானே பதினெட்டு வயசாவுது. நான் மேல படிக்கேன், இல்ல வேலைக்குப் போறேன்”

“ஏன்… அந்த விளங்காதவன் உன்னக் கடத்திட்டுப் போயி நாசம் பண்ணவா? சொல்லுறதக் கேளுடி… செல்வம் பொல்லாதவன்டி… உன் மேல வெறிப் பிடிச்சு அலையுதான்… உன்னை பத்திரமா கரை சேர்க்குற வரைக்கும் நாங்க வயத்துல நெருப்பைக் கட்டிட்டிருக்கோம்”

‘அப்ப விஷ்ணு… கல்யாணம், குடும்பம்னு நெனச்சாலே எனக்கு விஷ்ணு முகம்தானே நினைவுக்கு வருது. அவனை விட்டுட்டு என்னால எப்படி வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க முடியும். செல்வம் தொட்டப்ப உடம்பெல்லாம் பத்திகிட்டு எரிஞ்ச மாதிரி இருந்துதே… வேற ஒருத்தன என் பக்கத்துல நெருங்க விட முடியுமா?’ கலக்கத்தோடு பார்த்தாள் சரயு.

“வேணாம்கா”

“ஏண்டி?”

“அக்கா… எனக்குத் துணையா விஷ்ணுவைத் தவிர என்னால வேற யாரையும் நெனச்சுப் பாக்க முடியலக்கா”

சில வினாடிகள் கழித்தே தங்கை சொன்னது தமக்கை மனதில் உரைக்க, பளாரென்று சரயுவை அறைந்தவள், “முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே காதலா?” ஆத்திரம் அடங்காமல் முதுகில் ரெண்டு மொத்து மொத்தினாள்.

“அப்ப கல்யாணம் பண்ணிக்க மட்டும் வயசு வந்துடுச்சா?” தைரியமாய் எதிர் கேள்வி கேட்டாள் சின்னவள்.

அதிர்ந்து தலையில் கையை வைத்து உட்கார்ந்து விட்டாள் லக்ஷ்மி.

“எவண்டி அவன்… விஷ்ணு… உன் கூடப் படிக்கானா?”

“நம்ம வீட்டுக்கு வந்திருக்கானே… அம்மா கூட ஹாஸ்பிடல்ல அவனப் பாத்துகிட்டாங்களே” ஆர்வமாய் சொன்னாள் சரயு.

நினைவு வந்தது லக்ஷ்மிக்கு. “நீ சின்ன பிள்ளையா இருந்தப்ப, உசரமா ஹீரோ மாதிரி காருல வந்தானே அந்தத் தெலுங்குக்காரனா?” போன உயிர் திரும்பி வந்தது லக்ஷ்மிக்கு. இதத்தான் காதல்னு நெனச்சுட்டு இருக்காளா.

சரயு ஆமாமெனத் தலையாட்டவும் முறைத்தாள் லச்சுமி.

ஒரு நிமிடம் கோவத்தை அடக்கிக் கொண்டாள். ‘சின்ன குட்டிக்கு உலக விவரம் புரியாத வயசு… என்னை விஜய் மாதிரி டான்ஸ் ஆடுற மாப்பிள்ளயைக் கட்டிக்கிட சொல்லி சண்ட போட்டவதானே… கொஞ்சம் ஸ்டைலா, இங்கிலீஷ் பேசிட்டு, பாக்க அம்சமா, பாசமா இருந்தவனைப் பாத்து ஆம்பளைங்கன்னா இப்படித்தான் இருக்கணும்னு மனசில பதிஞ்சிருக்கும். கழுத வயசான சரசுவுக்கே விவரம் பத்தாதப்ப இந்தப் பச்ச மண்ணுக்கு என்ன தெரியும்… நம்மதேன் அவ மனச மாத்தி எப்படியாவது கல்யாணத்த நடத்தணும்.’

“ஓ சைக்கிள் எல்லாம் வாங்கித் தந்தானே அவன்தானே… எனக்கும் நல்லா நெனவுல இருக்கு… அவன் உன் பிரெண்ட்ல்ல… இங்க பாரு சின்னகுட்டி, எனக்குக் கூட ‘காதல்கோட்டை’ பாத்தப்ப அஜித்தைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையா இருந்தது. அப்பறம் வளர வளரத்தேன் நிழல் வேற நிஜம் வேறன்னு புரிஞ்சது. இப்ப உங்க மச்சானத் தவிர உலகத்துல யாருமே எனக்கு அழகாத் தெரியல. அந்த வயசுல யாரையாவது நமக்கு ரொம்பப் பிடிச்சா அவங்களையே கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணும். அதெல்லாம் உண்மையில்ல. அதனால இந்த மாதிரி பேத்திகிட்டுத் திரியாதே” கடுமையாக எச்சரித்தாள்.

“இல்லக்கா மெட்ராஸ்ல…” ஆரம்பித்தவளை இடைவெட்டியவள்,

“சரயு… நிலைமை புரியாம அடம் பண்ண, அறைஞ்சுப் பல்லைக் கழட்டிடுவேன். உன் மச்சான் உனக்கு ஈபில வேலை பாக்குற மாப்பிள்ளையைப் பாத்து பேசிட்டு வீட்டுக்கு வந்து சேருரதுக்குள்ள சரசோட புருசன் அந்தப் பையன அடிச்சுப் போட்டுட்டான்.

ஊரு பூர அவன்தான் உன்னக் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொல்லிட்டுத் திரியுதான். அவனால மாப்பிள்ள வீட்டுக்காரங்க எல்லாம் உன்னைக் கட்ட பயப்படுதாங்க. கடைசீல மச்சானோட பங்காளி ஒருத்தன்தான் தைரியமா கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லிருக்கான். அவனும் எங்க ஊருதான். மெடிக்கல் ஷாப்பு, நிலம், வீடுன்னு நல்ல வசதி. எனக்குப் பக்கத்துத் தெருவிலேயேதான் வீடு. நாங்கெல்லாம் உன் பக்கத்துலேயே இருப்போம். செல்வம் தகராறு பண்ணான் உருப்படியா கை காலோட திரும்ப முடியாது. உனக்கு ஒரு விடிவு வந்துருச்சுன்னு சந்தோஷமா இருக்கோம். இப்ப வேண்டாமுன்னு சொல்லி கரி நாக்க வச்சுடாத.

உன்னை நிச்சயம் பண்ண மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துகிட்டு இருக்காங்க. நீ மாட்டேன் கீட்டேன்னு தகராறு பண்ண, மச்சான் என்னை வெட்டிப் போட்டுடுவாரு.” என்று சொல்லி சரயுவின் வாயை அடைத்தாள்.

ரஞ்சு வண்ணப் புடவையைக் கட்டிவிட்டு, கழுத்தில் வெள்ளைக்கல் அட்டிகையையும், மயில் டிசைனில் டாலர் செயினயும் அணிவித்து, முகத்துக்கு சற்று பவுடர் போட்டு, கண்களில் மை எழுதி, காலணா அளவில் ஒரு குங்குமப் பொட்டை வைத்ததும் சரயுவின் அழகு சுடர்விட்டது. மூன்று முழம் பூவினை எடுத்து அவளது கூந்தலில் சூடிய லக்ஷ்மி மறக்காமல் கன்னத்தில் ஒரு திருஷ்டிப் பொட்டை வைத்தாள். பொம்மை மாதிரி முகத்தைக் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள் சரயு.

“சின்னக்குட்டி தங்கச் சிலையாட்டம் இருக்கடி…” நெற்றியில் முத்தமிட்டாள் லச்சுமி.

அந்தத் தங்கச் சிலையை பெண் பார்க்க வந்த சுப்ரமணியத்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. இன்று தட்டை மாற்றி உறுதி செய்துவிட்டு இன்னும் இரண்டு நாளில் கோவிலில் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது.

தட்டு மாற்றும் கடைசி நேரத்தில் “நிறுத்துங்க” என்றபடி வந்து நின்றாள் சரஸ்வதி. அவளுடன் ஒரு இருவது பெரிய தலைகள் வந்திருந்தன.

“இங்க பாருங்க லச்சுமிக்காவுக்கு மாப்பிள்ள பாக்குற உரிமை இருக்குன்னா, நானும் அவ அக்காதேன், எனக்கும் அதுக்கு சமம்மா உரிமை இருக்கு. சரயுவ என் புருஷனுக்குத்தான் கட்டித் தரணும்” என்றவளைத் திகைத்துப் போய் பார்த்தனர் அனைவரும்.

ருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நடந்ததுக்கெல்லாம் விளக்கம் சொல்லுமாறு செல்வத்தின் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கேள்வி கேட்டாள் சரஸ்வதி.

“ஆமாண்டி நான் அப்படித்தான். நீ ஒருத்தி மட்டும் எனக்குப் போதாது. ஒரு வாரிசப் பெத்துக் கொடுக்க வக்கில்ல, பெருசாப் பேச வந்துட்டா… இப்ப கேட்டுக்கோ… நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறேன்… அது உன் தங்கச்சியா இருந்தா உனக்கு வசதி. கடைசிவரை என் பொண்டாட்டின்னு உரிமையோட வீட்டுல இருக்கலாம். அதுக்கு சம்மதிக்கலைன்னா வாழவெட்டியா உன்னை வீட்டுக்கு அனுப்பிட்டு வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டுவேன். உனக்கெப்படி வசதி?

உனக்கு இப்ப இருக்குற மரியாதை குறையாம வளைய வரணும்னா சரயுவை எனக்குப் பேசி முடி. இல்லைன்னா உன் வீட்டுக்கு நடையைக் கட்டு”

என்று திமிராகப் பேசியவனை அடக்கும் வழி தெரியாது திகைத்தாள். அவனுக்கு சப்போர்ட்டாக மாமியார், நாத்தனார் அவர்கள் உறமுறை என்று ஒரு லாரி ஜனம் வந்தது. வீட்டை விட்டு ஓடி வந்து ஒத்தையாக இந்தக் கும்பலில் மாட்டிக் கொண்டதை நினைத்து நெஞ்சம் வெடிக்க அழுதாள் சரசு.

‘செல்வத்தையும் அவன் குடும்பத்தையும் தனியா எதிர்க்க முடியாது. என் கூட பிறந்தவங்கல்ல பார்வதி அக்கா, அப்பா செத்த ஒரு மாசத்துல சொத்தப் பிரிச்சு வாங்கிட்டுப் போயிட்டா. அவ இருந்தும் இல்லாதவ மாதிரிதான். உதவிக்கு வந்த லச்சுமிக்காவையும் என் வாயால வெட்டி விட்டுட்டேன். நான் பேசின பேச்சுக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்க. வேறென்ன என்ன செய்யுறது?

எனக்குத்தானே யாரும் உதவி செய்ய மாட்டாங்க, சரயுன்னா எல்லாருக்கும் பிரியம். சரயு என்கூட சேர்ந்துட்டா… லச்சுமி அவளக் கண்கலங்க விடமாட்டா… சம்முகத்துக்கு பயந்து செல்வமும் அவன் வீட்டு ஆளுங்களும் என்கிட்டே மரியாதையா நடப்பாங்க…

ஊருல எல்லாரும் ரெண்டாந்தாரத்தை ஒத்துக்குவாங்களா?

ஏன் ஒத்துக்க மாட்டாங்க நல்ல புருஷன் கிடைக்க வரம் தர சாமியே ரெண்டு தாரத்துல ஒண்ணாத்தேன் ஓட்டிகிட்டு இருக்கு. நம்ம பெருமாள் கோவிலுல சோரநாதருக்கு சோரநாயகி மட்டுமா பொஞ்சாதி? வைகுண்டநாயகிக்கும் அவரு மேல சரிக்கு சமமா உரிமை இருக்குல்ல. சாமியே ரெண்டாவது பொண்டாட்டி கட்டிக்கும்போது சாதாரண மனுசன் கட்டிகிட்டா என்ன தப்புங்குறேன்?

எனக்குப் புள்ள பொறக்காதத சாக்கா வச்சுகிட்டு எப்படியும் யாராவது ஒருத்தி சக்களத்தியா வரப்போறா… அது என் தங்கச்சியாவே இருந்துட்டுப் போறா… ஒருத்தருக்கு ஒருத்தர் கடைசி வரை துணையா இருந்துட்டுப் போறோம். ஆனா சரயு… செல்வத்துக்கு வாக்கப்படுவாளா?

அக்காவுக்கு புள்ள இல்லைன்னா தங்கச்சியக் கல்யாணம் பண்ணி வைக்குறது ஊருலகத்துல நடக்காததா என்ன? சரயுவ எப்படியாவது இந்த ஏற்பாட்டுக்கு சம்மதிக்க வச்சுட்டா… இப்ப இருக்குற மரியாதை குறையாம இருக்கலாம். வீட்டுக்காரனும் விலக மாட்டான். புள்ள வரமும் கிடைச்சுடும். எல்லாத்தையும் விட செல்வம் மறுபடியும் ஊரப் பொறுக்கினா அவனை என் சொந்தக்காரங்க தொலைச்சுடுவாங்க’ தனது யோசனை சரியாகப் பட்டது சரசுக்கு.

“சரிய்யா ஆனா சரயுவைக் கல்யாணம் பண்ண பின்னாடியும் நீ ஊர் பொறுக்க மாட்டேன்கிறதுக்கு என்ன உத்தரவாதம்” உறுதிப் படுத்திக் கொள்ளக் கேட்டாள்.

“நான் சொல்லுறத நம்ப மாட்டியா?”

“இந்த வசனமெல்லாம் என்கிட்டே இனிமே பலிக்காது… சொரிமுத்து அய்யனார் மேல சத்தியம் பண்ணு…”

ஒரு வினாடி யோசித்த பின், “சரிடி… கல்யாணத்த நிச்சயம் பண்ணிட்டு வா… கோவிலுல வச்சு சத்தியம் பண்ணுறேன்” என்றான் செல்வம்.

தலைக்கு மேல் போன வெள்ளத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே முதன்மையாகத் தோன்றியது சரஸ்வதிக்கு. ஆயிரத்தில் ஒன்றாய் பிழைப்பதை விட, தங்கையுடன் ஒற்றுமையாய் பிழைப்பது சவுகரியமாய் பட்டது. அதற்காக தனது தங்கையின் கழுத்தை உயிரோடு அறுத்து ரத்தத்தைக் குடிக்கத் தயாராகிவிட்டாள்.

“தட்டு வைக்கப்பட்டு சீலை, பழம் எல்லாம் வாங்கிட்டுக் கிளம்புங்க… வேற எவனாவது பூ வைக்கும் முன்னாடி சரயுவைப் பேசி முடிக்கணும்” புகுந்த வீட்டினரைக் கிளப்பினாள்.

பெஞ்சாதியை தூக்கி தட்டாமாலை சுற்றி, சீர்வகைகளுடன் மச்சினியைப் பெண் கேட்க அனுப்பி வைத்தான் செல்வம்.

ரயுவின் வீட்டில், திடீர் திருப்பமாய் சரஸ்வதி தன் கணவனுக்குப் பெண் கேட்ட சம்பவத்தில் அனைவரும் அதிர்ந்து போயிருக்க, அனைவரின் முன்பும் சரயுவின் காலைப் பிடித்துக் கதறினாள் சரசு.

“சின்னகுட்டி… என் வீட்டுக்காரேன் செஞ்சது தப்புத்தேன். அதுக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டுக்குறேன். அந்தாளு செஞ்ச பாவத்துக்கு உன் கூடப் பொறந்தவளைப் பழி வாங்கிடாதே. எந்த ஜென்மத்துல எவன் குடியைக் கெடுத்தேனே இப்பப் பூக்காத மரமா போயிட்டேன். மனசார என் பாயில உனக்குப் பங்கு தாரேன். என் குடும்பத்த வெளங்க வைக்க வாரிசப் பெத்துத்தா… மாட்டேன்னு சொல்லிடாதே… இதுக்கு நீ சம்மதிக்கலைன்னா நான் தூக்கு மாட்டிட்டு செத்துடுவேன்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 14

இன்று மியூனிக் அலுவலகத்திலிருக்கும் போது ராமை அழைத்தாள் சரயு. குசலம் விசாரித்தபின் ஜிஷ்ணு வந்திருப்பதைச் சொன்னாள். எதிர்பாராதவிதமாக அவனை சந்தித்ததையும் மறைக்கவில்லை. ராமுக்குத் தெரியாத ரகசியம் அவளிடம் ஏதுமில்லை. “எந்த ஜிஷ்ணு… ஓ… உன் அடலசன்ட் க்ரஷா? அவன் எங்க இந்தப்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 25

  சத்தமில்லாமல் சில நாட்கள் கழிந்தது. ஜெயசுதா வீட்டுக்கு வந்துவிட்டார். ஜிஷ்ணு அவனது தொழிலை சீர்படுத்தும் வேலையில் முழு மூச்சாக இறங்கினான். செய்முறையில் சில மாற்றங்கள் செய்தான். ஆவக்காய், கோங்குரா தவிர மற்ற வகை ஊறுகாய்களையும் விற்பனை செய்யும் எண்ணத்துடன் அவற்றிக்கான