Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 31

செல்வம் கிளம்பிப் போன அரைமணியில துவைக்க துணிகளை வேலைக்காரியிடம் எடுத்துப் போட்டாள் சரஸ்வதி. வழக்கமாய் செல்வம் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வான். சட்டையை சலவைக்கு போடுவான். இந்த முறை அவசர சோலியால் துணியை அறையின் மூலையில் போட்டுச் சென்றுவிட்டான்.

‘எந்துணியை மட்டும் துவைக்க வேலைக்காரியா? இன்னைக்கு அவரு துணியையும் சேத்துத் துவைக்கட்டும்’ என்று துணிகளை எடுத்தவ கண்ணுல பனியனில் அழுத்தமா ஒட்டிகிட்டிருந்த உதட்டுச்சாயம் பட்டது. பரபரவென மத்த டிரெஸ்ஸ ஆராஞ்சவ நீளமா தலைமுடியும் பட்டுச்சு. அதத் தவிர முகத்துல சப்புன்னு அறஞ்சாப்புல வந்த சென்ட்டு வாசம்.

சில மாசம் முன்ன, லச்சுமி சரசு வீட்டுக்கு வந்திருந்தாள். “செல்வத்துக்கு வெளில பொண்ணுங்க கூடத் தொடர்பு இருக்குடி கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்கிடு” என்று அறிவுரை சொன்ன தமக்கையை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள் சரஸ்வதி.

“தெரியுண்டி, நீ எனக்கும் என் புருசனுக்கும் சண்டை மூட்டி விடப் பாப்பேன்னு தெரியும்… எப்பேர்பட்ட பழிய தூக்கிப் போடுத… நீயெல்லாம் ஒரு அக்காவடி… உன் கல்யாணத்துக்கு முன்ன, நீ என் புருசன் கால்ல விழுந்து உன்னக் கட்டிக்கிட சொன்னதும் தெரியும். அதுக்கு அவரு சரசத்தான் விரும்புறேன்னு உன்கிட்ட சொன்னதும் தெரியும்.

கல்யாணம் முடிஞ்சதும் நீ அப்பாகிட்ட பேசி கடைக்கு வரவச்சியே அப்பவே உன் உள்நோக்கம் தெரியாம போயிடுச்சு. நீ என்னைக் குடும்பத்தோட சேத்துக்க வரல, எம் புருசனைப் பாக்க வந்திருக்க.

உன்னை வேண்டாம்னு சொல்லி என்னக் கட்டிக்கிட்டதுக்காக, மனசில வெஞ்சனம் வச்சுட்டு என் வீட்டுக்காரனைப் பொறுக்கின்னு சொல்லுறியா… வெளியே போடி…”

என்று ஆங்காரியாய் ஆடியவளை நெஞ்சடைக்கப் பார்த்திருந்தாள் லச்சுமி.

“சரசு என்னப் பாத்து என்ன கேள்வி கேட்டுப்புட்ட… அந்த சாமிக்கு சமமா எம் புருசன வச்சிருக்குதேன்… அவரு காதுக்கு மட்டும் இந்த விஷயம் போச்சு…”

“ஏன் பணம் அலுத்துப் போச்சோ… வயசு நாப்பதாகப் போகுதே… சீக்கு வந்துடுச்சோ… ஒரு வேள அரக்கிழவனா போயிட்டானோ… அவனப் பிடிக்காமத்தானே இப்பல்லாம் என் வீட்டுப் பக்கம் சுத்தி வார”

நெருப்புக் கங்கினால் அபிஷேகம் செய்தாற்போல துடித்துப் போன லக்ஷ்மி, “சீச்சீ… எப்பேர்பட்ட பழியத் தூக்கிப் போடுற… உன் வாயில புத்துத்தாண்டி வைக்கும்… எப்ப என்னைப் பாத்து இப்படி ஒரு வார்த்த கேட்டுட்டியோ இனிமே நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒட்டுமில்ல உறவுமில்ல… நான் செத்தாக்கூட என் மூஞ்சீல முழிக்காதே.

இந்தா… உம்புருசன் சரயுவுக்கு நீ வாங்கித்தந்ததா ஒரு சங்கிலியத் தந்திருக்கான்… அதையும் நீயே வச்சுக்கோ” லச்சுமி தூக்கி எறிந்து விட்டு சென்றாள். எறிந்த வேகத்தில் பீரோவுக்கு அடியில் சிக்கிக் கொண்ட சங்கிலியை எடுக்கத் தோன்றாமல் நின்றிருந்தாள் சரஸ்வதி. செல்வத்திடம் கூட இந்த நிகழ்வை அவள் சொல்லவில்லை.

இப்போது அந்த சம்பவம் நினைவுக்கு வர, வேலைக்காரியின் துணையோடு பீரோவுக்கு அடியில் மாட்டியிருந்த சங்கிலியை எடுத்துப் பார்த்தாள். ஒட்டடை படிந்த அந்த பாம்பே கட்டிங் செயினில் எஸ் வடிவ டாலர் எடுப்பாய் தெரிந்தது.

‘இது கடைல யாரோ வச்சுட்டுப் போயிட்டாங்கன்னு செல்வம் சொன்னதுல்ல… அப்ப லச்சுமி சொன்னது உண்மையா’ பீதியில் உறைந்து நின்றாள் சரஸ்வதி.

ரயுவுக்குக் கூட்டாளிகளைப் பார்த்ததும் ஒரே குஷி… “சிவதாணு நீ மதுரைல வேல பாக்கேன்னு சொன்னாக… இங்க நிக்க?”

“டிவிஎஸ்ல வேல பாக்கேன் சரயு… உங்க எல்லா பேத்தையும் பாக்கலான்னுதேன் இங்க வந்தேன்”

“அங்க என்னாலே பண்ணுற? வித விதமா பைக்கு வருதா… நம்ம படிச்சதெல்லாம் ப்ரோசனமா இருக்கா?”

“ட்ரைனிங்ல இருக்கேன். நம்ம படிச்சது ஓரளவு புரிஞ்சுக்க வசதியா இருக்கு… ஆனா நம்ம படிப்பெல்லாம் ஒண்ணுமேயில்ல… நிறையா கத்துக்கணும் தெரியுமா… ஒவ்வொரு பிரச்சனையும் கண்டுபிடிச்சு சரி செய்யுறப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா… நீ மட்டும் அங்க வந்து வேலைக்கு சேந்தா, ரெண்டு பேரும் போட்டி போட்டுக் கத்துக்கலாம்”

“எங்கலே… அப்பாவ விட்டுபோட்டு வரமுடியாது” ஏக்கத்தோடு சொன்னாள் சரயு.

“நீ வாரதுன்னா ஒரு வார்த்தை சொல்லு… எங்க மேனேஜர் கிட்ட என் பகையாளி வாரா… என்னையே தூக்கி சாப்பிடிடுடுவான்னு சொல்லிப் பாக்குறேன்”

அதன் பின் சிவதாணுவிடம் நீண்ட நேரம் அவன் வேலையைப் பற்றின விவரத்தை கேட்டுக் கொண்டிருந்தாள்.

படிக்கும்போது சிவதாணுவுக்கும் சரயுவுக்கும் முதல் மதிப்பெண் எடுப்பதில் குடுமிப்பிடி சண்டையே நடக்கும்.

‘ஏலே தெர்மல் இன்ஜினியரிங்ல என்ன விட அஞ்சு மார்க் அதிகம் வாங்கிட்டேல்லே… உன்ன இந்த செமஸ்டர் கவனுச்சுக்குறேன்’ என்று சரயு கருவ,

“ஃப்ளுயிட் மெக்கானிக்ஸ்ல என்ன விட எட்டு மார்க் அதிகம் வாங்கிட்டல்ல… இந்த தடவ உன்ன முந்தல என் பேர மாத்திக்கிறேன்’ என்று சிவதாணு சபதம் செய்வான்.

ஆனால் சரயுவின் தந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அவளால் கல்லூரிக்கு சரியாக வர முடிவதில்லை. வராத பாடத்துக்குத் தன்னுடைய நோட்ஸ் எல்லாம் அவளுக்குத் தந்து உதவினான் சிவதாணு.

“ஏம்லே நான் உன்னை விட மார்க்கு அதிகம் வாங்கிடுவேன்னு உனக்கு பயம்மா இல்லையா?” சரயு சிரித்தபடியே கேட்டாள்.

“அதெல்லாமில்ல நீ நல்லா படிக்கணும்… அப்பத்தான் நானும் உன் கூட போட்டி போட்டு உன்னை விட நல்லா படிப்பேன்… ஓட்டப்பந்தயத்துல தனியா ஓடினா இண்ட்ரெஸ்டாவே இல்லை”

இருவரும் அதை நினைத்து சிரித்துக் கொண்டார்கள்.

“வேலைக்கு போவ முடியாதுன்னு சொன்ன.. இங்க என்ன இன்டர்வியூக்கு வந்திருக்க…”

“எனக்கு இன்டர்வியூ எப்படி இருக்குன்னு பாக்கணும்னு ஆச… அதுதான் அப்பாவ இன்னக்கு மாத்தரம் பாத்துக்க சொல்லி பக்கத்து வீட்டுக்காரங்கள்ட்ட சொல்லிட்டு கனியோட வந்துட்டேன். என்ன பாடம் படிக்குறதுன்னே தெரியல. அவங்க கேட்டதுக்குத் தமிழ்லதேன் பதில் சொன்னேன். எனக்கு வேல கொடுத்துட்டாங்க தெரியுமா? மாசம் மூணாயிரம் சம்பளம். தங்குறதுக்கு பொம்பளப் புள்ளைங்களுக்கு வீடு ஒண்ணு இருக்காம்… சாப்பாட்டுக்கும் தங்குறதுக்கும் ஆயிரம் ரூவா தந்துடணுமாம். எனக்கு உடனே கெடச்சுடுச்சு… கனிக்கு நாளைக்கு முடிவு சொல்லுறேன்னு சொல்லிருக்காங்க”

சிவதாணுவிடம் சந்தோஷமாய் பேசும் தோழியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சேர்மக்கனி.

கல்லூரியை விட்டுக் கிட்டத்தட்ட நின்றுருந்த ரத்தினசாமியும் இவர்களைப் பார்க்கவே வந்திருந்தான். அவனிடம் முதல் நாள் கடன் வாங்கிய செல்போனைத் திருப்பித் தந்தாள் கனி.

“நம்பர் நெனவுல வச்சிருக்கிதியா?” கேட்டு உறுதிப் படுத்திக்கொண்டான். அவர்கள் ஊரில் தனி செல்போன் என்பது ஒரு ஆடம்பரமான விஷயம். தொழிலை கவனிக்கத் தேவை என்ற ஒரே காரணத்துக்காக ரத்தினசாமியின் தந்தை அவனுக்கு வாங்கித் தந்திருந்தார். சேர்மக்கனி வீட்டில் தொலைப்பேசி என்பது கனவு. சரயுவின் வீட்டிலோ நெல்லையப்பனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும் பக்கத்து வீட்டு அவ்வாவின் வீட்டு போன்தான் எல்லாவகை தொடர்புக்கும். சுருக்கமாய் சொன்னால், பேசியவுடன் நினைவிலிருந்து மறைந்து போகும் குரலை விட, திரும்பத் திரும்ப படித்து மகிழும் கடிதங்களில் தான் அந்த கிராமத்து மனிதர்களின் உறவு இன்னமும் வளர்ந்துக் கொண்டிருந்தது. நீல மசியால் உயிரூட்டப்பட்ட அந்தக் காகிதத்தை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

“அந்தண்ணே பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா…?” கனியிடம் மெதுவாகக் கேட்டான் ரத்தினசாமி.

இல்லையென உதட்டைப் பிதுக்கினாள் கனி.

“கனி… நம்ம காலேஜுக்கு நாலஞ்சு தடவை யார்கிட்டயிருந்தோ போன் வந்திருக்கு… ஒரு ஆம்பள சரயு கூட பேசணும்னு சொன்னாகளாம்… ரெண்டு தடவை பார்த்துட்டு அப்பறம் பொம்பளப் புள்ளையக் கூப்பிட்டதுக்கு ஏசி விட்டுட்டாக போலிருக்கு. அப்பறம் அதே ஆளு என்னைக் கூப்பிட்டிருக்காரு… நாந்தேன் படிப்ப நிறுத்திட்டேனே… அனேகமா அது விஷ்ணு அண்ணனாத்தேன் இருக்கும்னு நெனக்கிறேன். அமெரிக்காவுல இருந்து கூப்பிட்டிருப்பாகளோ?

அன்னைக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட்ல பார்த்தேல்ல… ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிகிட்டு… மனசொடிய பிரிஞ்சு போனாகளே… என் மனசே தாங்கல கனி… ரெண்டு பேரும் ஒருத்தருக்காகவே இன்னொருத்தர் பொறந்திருக்குற மாதிரி தோணுச்சு… காதலோட அர்த்தமே அன்னைக்குத்தேன் எனக்குத் தெரிஞ்சது கனி.

சரயுவத் தப்பான எண்ணத்தோட பாத்தவன எப்படி அடிச்சுத் துவைச்சாக… ப்ச்… நான் வேற அவர்கிட்ட போயி சரயுவை எனக்குக் கட்டித் தாங்கன்னு கோட்டியாட்டம் கேட்டு… கிறுக்குப் பயல்ன்னு என்ன நெனச்சிருப்பாங்கள்ள… ஆனா அவுக அதைக் கேட்டு என் மேலக் கோவமே படல… சரயுவப் பாத்துக்க சொல்லி என்கிட்டத்தான் சொன்னாக… என் மேல அவுகளுக்கு என்ன ஒரு நம்பிக்க… அந்தண்ணன் இவளைத் தேடி வருவாக…” ரத்தினசாமியின் வாக்கை எதிர்க்க மனமில்லாமல்,

“நானும் அதத்தேன் சாமிகிட்ட கேக்கேன்…” என்று ஒரு பெருமூச்சோடு சொல்லி முடித்தாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 10

அத்தியாயம் – 10 போர் முடிந்த களைப்புடன், பெருகும் குருதியைப் பொருட்படுத்தாது, அந்தப் பாலைவனத்தில் ஒரு துளி தண்ணீருக்காக அலைகிறான் அரவிந்த். அவன்  பார்க்கும் போது தூரத்தில் தெரியும் நீர் அருகே சென்றதும் கானல் நீராக மாறுகிறது.   வெகு தொலைவில்  வெள்ளித்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27

சில மாதங்களில் ஜிஷ்ணு அடைந்த உயரம் பிரமிப்பு தருவது. வங்கிக் கடனை மட்டும் நம்பி வியாபாரத்தை விரிவு படுத்தினான். “ஜிஷ்ணு, பேசாம உன் மாமனார் ஆரம்பிச்சுத் தர கம்ப்யூட்டர் கம்பனில போய் தினமும் உட்கார்ந்துட்டு வா. மக்கள் பர்கர், பீட்சான்னு சாப்பிடுற

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 44தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 44

“ஆத்தரத்தைக் கிளப்பாதே ஜமுனா எங்க கஷ்டத்துக்குக் காரணமே நீதாண்டி” “இது நல்லா இருக்கே… பிஸினெஸ் பண்ணறதுக்கு ஜிஷ்ணு மாதிரி அறிவு வேணும். அது இல்லாம அடுத்தவங்க மேல குறை சொல்லக் கூடாது” “ஆமாண்டி அந்த அறிவில்லாமதான் உன் அப்பாவும் மாமியாரும் காலுல