Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 22

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 22

ரயு… நேத்து வெங்கடேஷ் கூடப் பேசினேன். நான் உன்னைப் பார்த்ததைப் பத்தி சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டான்”

வெங்கடேஷுக்கு ஜிஷ்ணுவின் உறவினர் வழியில் ஒரு பெண் முடிவாகியிருந்தாள். அதை அவனிடம் சொல்லவே அழைத்தான். ஜிஷ்ணுவின் திருமணத்தைப் பற்றிக் கேட்டவனிடம் தான் சரயுவைத் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்லியிருந்தான். ‘நிஜம்மாவா? எங்கடா அவளப் பார்த்த?’ என்று திகைப்பு விலகாமல் கேட்ட வெங்கடேஷின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தான்.

அவர்களின் மோன நிலையைக் கலைப்பதைப் போல் ஜிஷ்ணுவின் செல் வீறிட்டலறியது. எடுத்துப் பேசிய ஜிஷ்ணுவின் முகத்தில் பதட்டம்.

“என்னாச்சு கனி?” என்றவனிடமிருந்து செல்லைப் பிடுங்கினாள்.

“ஏய் அழாம சொல்லுடி” என்றாள்.

“சரயு உங்கப்பாவ திருநெல்வேலில ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காகளாம். நம்ம உடனே கிளம்பிப் போகணும்… ஓட்டப்பிடாரம் போனப்ப நெஞ்சு வலி வந்துடுச்சாம்… அங்கிருந்த டாக்டர் பாத்துப்பிட்டு தின்னவேலிக்கு அனுப்புனாகளாம்…” கனி பேசப் பேச சரயுவின் மனதைப் பிடிங்கிற்று.

கண்களை இறுக்க மூடினாள் சரயு. அவளது கைகள் பற்றினான் ஜிஷ்ணு. அவளது மனதின் அழுத்தத்தைப் போக்க பற்றுகோல் தேடி வெறும் காற்றில் அலைந்த அவளது கைகளுக்குத் தனது கரங்களைத் தந்தான் ஜிஷ்ணு. பிடித்த வேகத்தில் அவனது கைகளை இறுக்கினாள். அந்த அழுத்தத்தில் ஜிஷ்ணுவுக்கே கைகள் வலிக்க ஆரம்பித்தது. இவ்வளவு அழுத்தம் கொடுத்தாள் என்றால் எவ்வளவு வேதனையை மனதினுள் அடைக்கிறாள். துக்கத்தை ஏன் இப்படி மனதினுள் புதைக்க வேண்டும் என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு.

“உயிருக்கு ஏதாவது?” சரயுவுக்குக் குரலே எழும்பவில்லை.

“அதெல்லாம் பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. இருந்தாலும் உடனே கிளம்பி வர சொல்லுறாக”

“சவரிமுத்து சார்கிட்ட சொல்லிட்டியா?”

“சார் நம்மளக் கிளம்பிப் போக சொல்லிருக்கார். நான் நம்ம துணிமணியெல்லாம் பைல எடுத்து வச்சுட்டேன். நீ வந்ததும் கிளம்ப வேண்டியதுதான். ரத்தினசாமி கோயம்பேடுல பஸ் ஏத்தி விட்டுடுவான். திருநெல்வேலி பஸ்ஸ்டாண்ட்ல உங்க மச்சான் கூப்பிட்டுகிறாராம்”

“நீ நேரா பஸ்ஸ்டாண்ட்டுக்கே வந்துடு. நானும் அங்கேயே வந்துடுறேன்” என்று செல்லை ஜிஷ்ணுவிடம் தந்தவள் தோய்ந்து போய் அப்படியே மடங்கித் தரையில் உட்கார்ந்தாள்.

“சரயு” பயந்து போய் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

“ஒண்ணும் ஆயிருக்காதுரா… பயப்படாத” என்றான்.

“அப்பாவ நல்லாப் பாத்துக்குறேன்னு அம்மா சாகுறதுக்கு முன்னாடி அவங்களுக்கு சத்தியம் செஞ்சு குடுத்திருக்கேன் விஷ்ணு… இப்படி நெஞ்சுவலி வந்து அட்மிட் ஆகுற அளவுக்கு வந்திருக்கே… ஏற்கனவே அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாரே… அப்பவே திட்டி டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிருக்கணுமோ? நான் எங்கப்பாவ சரியா கவனிக்கலையா விஷ்ணு…”

“அப்படியெல்லாம் இல்லரா? கவலைப்படாதே” தோளைத் தட்டி ஆறுதல் சொன்னான்.

“எல்லாத்துக்கும் நம்மதான் காரணம்னு நெனச்சு மனசை அலட்டிக்காதே சரயு. இந்த உலகத்துல நம்ம கைல இல்லாதது ஏராளமா இருக்கு… நம்மால முடியாததை அப்படியே ஏத்துட்டு வாழப் பழகிக்கணும்” சிறிது நேரத்தில் தனக்கே இது பலிக்கப் போவது தெரியாமல் சொன்னான்.

“விஷ்ணு நான் கோயம்பேடு போகணுமே”

“நான் உன் கூட திருநெல்வேலிக்கே வர்றேன். கோயம்பேடு போய் கனியைக் கூட்டிட்டுக் கிளம்பலாம்” வேகமாய்க் கிளம்பினான்.

“வேண்டாம் விஷ்ணு… எனக்கு அங்க அக்கா மச்சான் எல்லாரும் துணைக்கு இருக்காங்க… என்னை நல்லாவே பாத்துப்பாங்க.”

“உங்க அக்கா மச்சான் மட்டும் போதுமா? நான் வேண்டாமா?”

“உனக்கு பிஸினெஸ் வேலை அதிகம்னு சொன்னியே நீ இங்கேயே இரு. ஏதாவது நடந்ததுன்னா போன் பண்ணுறேன்”

“என்னை கோவப்படுத்தாதடி… இப்போதைக்கு உனக்கு ஆதாரவா இருக்குறதை விட வேற முக்கியமான வேலை எதுவும் எனக்கில்லை.. ஏதாவது அசம்பாவிதம் நடந்தாத்தான் நான் வரணும்னு இல்லை. என்னைப் பொறுத்தவரை உன் லைப்ல ஒவ்வொரு வினாடிலையும் நானிருக்கணும். நேரடியாவோ இல்லை மறைமுகமாவோ… அண்டர்ஸ்டாண்ட்”

தலையைக் குனிந்து கொண்டாள். “உன்ன மட்டும் ஏன்ரா இந்தக் கடவுள் சந்தோஷமாவே இருக்க விடமாட்டேங்கிறார்” ஜிஷ்ணுவின் குரல் நடுங்கியது.

‘எனக்கு பயம்மா இருக்கு சரயு. உனக்குக் கெடுதலா என்னவோ நடக்கப் போகுதுன்னு என் மனசு சொல்லுது’ அவன் மனம் அவளிடம் சொல்லத் துடித்தது. அவளை மீண்டும் கலவரப்படுத்த மனமின்றி காற்றுக் கூடப் புகமுடியாதவாறு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“சரயு எதுக்கும் கலங்கக் கூடாது… நாணா நல்லபடியா இருப்பார்… இந்த பிரச்சனையெல்லாம் சீக்கிரம் மறைஞ்சுடும்… அப்பறம் நம்ம ரெண்டு பேரும் நமக்கே நமக்குன்னு இருக்குற வீட்டுல சந்தோஷமா வாழுவோம். Fairy talesல காமிக்குற மாதிரி Happily ever after” என்றான் அவள் காதருகே கிசுகிசுப்பாய்.

“ம்ம்…” ஆமோதித்தாள் சரயு. எக்கி அவன் தோளில் முகம் புதைத்து அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.

ஜிஷ்ணுவின் வண்டி கோயம்பேட்டை நோக்கிப் பறந்தது. வடபழனியை நெருங்கியபோது விடாமல் ஜிஷ்ணுவின் தொலைப்பேசி மறுபடியும் அலற, அதில் மருத்துவமனையின் எண்ணைப் பார்த்துப் பதறி நிறுத்தினான்.

“எப்புடு?”

“பானு ஹாஸ்பிடல்லயா. நேனு ஹாப் அன் ஹவர்ல ஒஸ்தானு…” என்றான்.

“என்னாச்சு ஜிஷ்ணு?”

“எங்கம்மா… அம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செஞ்சிருக்காங்களாம்ரா… ரொம்ப சீரியஸ் கண்டிஷனாம்…” என்றான் பதறிப் போய்.

ஆதரவாக அவன் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சரயு. “கவலைப்படாதே… நீ ரொம்ப நல்லவன் விஷ்ணு… உன்னைக் கடவுள் சோதிக்க மாட்டார்”

“உன்னால டிரைவ் பண்ண முடியுமா?” கவலையாகக் கேட்டாள்.

“ம்ம்…” என்றான் சுரத்தில்லாமல்.

“எனக்கு நம்பிக்கையில்லை. காரை இங்கேயே பார்க் பண்ணு. அப்பறம் யாரையாவது வந்து எடுத்துட்டுப் போக சொல்லு. இங்கேருந்து 170ம் நம்பர் பஸ் பிடிச்சு நான் கோயம்பேடு போயிடுறேன். நீ ஆட்டோ பிடிச்சு உங்கம்மாவைப் பாரு போ”

“இல்லரா உன்னைத் தனியா விட்டுட்டுப் போக மாட்டேன். பேசாம என்கூட வா. எங்கம்மாவைப் பார்த்துட்டு, பிளைட் பிடிச்சு மதுரை போயிடலாம். அங்கேருந்து திருநெல்வேலி”

அவன் முகத்தை தன் இரு கைகளால் ஏந்தினாள் சரயு, “எங்கம்மாவை இப்ப எங்கப்பாவ சேர்த்திருக்குற அதே ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் பண்ணோம்… பிழைசுருவாங்கன்னு நெனச்சேன்… ஆனா அன்னைக்கு அப்பாவப் பாத்துக்க சொல்லி எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டு என் மடில படுத்துட்டு என்னை பார்த்துக்கிட்டே செத்துப் போய்ட்டாங்க விஷ்ணு… அந்த மாதிரி ஏதாவது நடந்துட்டா… உலகத்தையே கொடுத்தாலும் அவங்களைத் திரும்பி வரவைக்க முடியுமா…

விஷ்ணு உனக்கு நிஜம்மாவே புரியலையா? நம்ம ரெண்டு பேரும் நம்ம அப்பாவையும் அம்மாவையும் பாக்குறது கடைசி முறையாக் கூட இருக்கலாம். அவங்களோட கடைசி நிமிஷங்களா கூட இது இருக்கலாம். அவங்களோட ஆசைகளை நிறைவேத்த வேண்டி வரலாம். அப்ப நான் உனக்கு பாரமாவோ, நீ எனக்கு பாரமாவோ இருந்தா சரி வருமா? நீ போய் உன் கடமையை செய். நான் என் கடமையை செய்யுறேன். ரெண்டு பேரோட கடமைகளையும் ஒண்ணு கூட பாக்கியில்லாம முடிச்சுட்டு, நமக்கே நமக்குன்னு கட்டுன மூங்கில் வீட்டுக்குப் போகலாம். அங்க எனக்கு முறுகல் தோசை ஊத்தித் தா. உனக்கு ஒரு முறுகல் தோசைக்கு ஒரு முத்தம் கண்டிப்பாத் தரேன்” வேதனையுடன் சொன்னாள்.

“சரயு… நா பங்காருத்தங்கம்… ஐ லவ் யூ சோ மச்ரா” முணுமுணுத்தான். இருவரின் இதழ்களும் ஒரு மெல்லிய வேதனையான ஒற்றலுடன் பிரிந்தன.

அதன்பின் ஜிஷ்ணு யோசிக்கவில்லை. ஆட்டோவில் ஏறி அவளை கனியின் வசம் ஒப்புவித்தான். கிளம்பும் முன் இருவரின் கைகளும் எலும்புகளை நொறுக்கி விடுவதைப் போல பிணைந்துக் கொண்டன. பிரிவின் வலிக்கு சாட்சியாயிருந்த சேர்மக்கனியின் கண்களும், ரத்தினசாமியின் கண்களும் கூடக் கலங்கின.

சரயு ஜிஷ்ணுவைப் பார்த்தபடியே பின்னாலேயே நடந்து பஸ்ஸில் ஏறினாள். ஜிஷ்ணுவும் அவளை விட்டு வைத்த கண்கள் விலகாமல் பேருந்தின் ஜன்னலுக்குக் கீழே நின்றுக் கொண்டான். பஸ் ஸ்டாண்ட் கூச்சலில் ஜிஷ்ணுவின் கண்களும் சரயுவின் கண்களும் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டன.

ஒத்தையா நீயும் நானும் பேசிக்கவே முடியலைன்ன

மனசுக்குள்ள பேசிக்குவோம்.

சுத்தமா நீயும் நானும் பாத்துக்கவே முடியலைன்னா

கனவுக்குள்ள பாத்துக்குவோம்

அவளை விட்டுப் பிரிய மனமில்லாத கண்களையும் மனதையும் வலுக்கட்டாயமாகப் பிடிங்கிக் கொண்டு பூந்தமல்லி ரோட்டிலிருக்கும் அவனது ஒன்று விட்ட அண்ணன் பானுபாஸ்கரனின் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான்.

ருத்துவமனையின் வெளியே கூடியிருந்த உறவினர்களைப் பார்த்ததும் மனம் கலங்கிப் போனான் ஜிஷ்ணு. ஜமுனாவின் குடும்பமும் அங்கிருந்தது. பானுபாஸ்கரனின் சொந்த மருத்தவமனை என்பதால் உறவினர்கள் எந்த வித தடங்கலுமின்றி நடமாடினர்.

“நாணா… அம்மா…” என்றவனிடம் ஐசியுவைக் காட்டினார் சலபதி.

“அம்மா…” கண்ணீருடன் உள்ளே சென்றான் ஜிஷ்ணு.

களைப்பாக உள்ளே படுத்திருந்தார் ஜெயசுதா.

“என்ன ஆச்சு?” என்று கேட்ட ஜிஷ்ணுவிடம் பேசினார் சலபதி.

“அம்மாவுக்கு யூட்ரஸ்ல டியூமர் மாதிரி இருக்கு, சர்ஜரி செய்யணும்” டியூமர் என்ற சொல் ஜிஷ்ணுவின் மனதில் ஆழமாய் பதிந்தது.

“செய்யாம ஏன் வெயிட் பண்ணுறிங்க…”

“அதுக்கு உங்கம்மா சம்மதிக்கணுமே” என்றார் வேதனையோடு.

“ஏன் சம்மதிக்கல”

“உனக்குக் கல்யாணம் செய்து வைக்காம அவ சர்ஜெரி பண்ணிக்க மாட்டாளாம்”

“இதென்ன பைத்தியக்காரத்தனம். என் கல்யாணத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“இருக்குடா இந்த சர்ஜெரில ரிஸ்க் அதிகமாம். உங்கம்மாவை இனிமே நாம பாக்க முடியாம போனாலும் போகலாம்” என்றார். விக்கித்துப் போனான் ஜிஷ்ணு.

“நாணா… ”

“ஜமுனா லீவுக்கு வந்திருக்கா… அதனால அவகூட உடனே உன் கல்யாணம் நடக்கணும்னு உங்கம்மா விரும்புறா”

“நாணா, என்னால ஜமுனாவைக் கல்யாணம் செய்துக்க முடியாது. நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்”

பதில் சொல்லாமல் நடந்து சென்று ஜெயசுதாவின் அருகில் அமர்ந்து கொண்டார் சலபதி.

“பானு ஆப்ரேஷன் வேண்டாம். நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம்” கோவமாக சொன்னார்.

“நாணா புரிஞ்சுக்கோங்க… அம்மாவோட உயிர்ல விளையாடாதிங்க. என்னால ஜமுனாவைக் கல்யாணம் செய்துக்க முடியாது”

“உன் விருப்பம் போல நீ நடப்பா… உன்னைக் கம்பெல் பண்ண நான் யாரு? உன்னை உயிரா வளர்த்த அம்மா சாகக் கிடக்குறப்ப வேற எவளோ ஒருத்தியை உன் மனசு தேடுது. நீயா.. நான் சொன்னா கேட்கப் போற… ஆனா ஒண்ணு மட்டும் நினைவுக்கு வச்சுக்கோ… என் மனைவிக்கு ஏதாவது ஒண்ணுன்னா உன் மனசுல இருக்குறவளை உயிரோடு கொளுத்தாம விடமாட்டேன்”

“உங்க ரெண்டு பேர் மேலயும் நான் உயிரையே வச்சிருக்கேன்… ஆனா அதை வச்சு என்னை ப்ளாக்மெயில் பண்ணாதிங்க. எங்கம்மாவைக் காப்பாத்த எனக்குத் தெரியும். பானு ஆப்ரேஷன் தியேட்டர ரெடி பண்ணுடா” என்றான் கர்ச்சனையுடன். ஜிஷ்ணுவின் கால்களை யாரோ பிடிக்க, திரும்பினால் மூச்சிரைக்கக் கட்டிலில் படுத்தவாறே அவனது கால்களைப் பற்றியிருந்தார் ஜெயசுதா.

“ஒரே… பெல்லி… ஜமுனா” என்றவாறே மூச்சிரைத்தவரை படுக்க வைத்தார்கள்.

“ஜிஷ்ணு அவங்க உடம்பு இருக்குற நிலைல நீ இன்னமும் மனசு கஷ்டத்தைத் தராதே” எச்சரித்தான் பானு.

“அம்மாவப் பிழைக்க வைச்சுடு பானு”

“ஐம்பது சதவிகிதம்தான் என் கைல இருக்கு. அவங்க மனசு நிறைவா இருந்தால்தான் அது முழுசுமா சாத்தியப்படும்” என்றான் பானு அங்கிருக்கும் உபகரணங்களைப் பார்த்தவாறே.

“ஒத்து… என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது.” சொன்னவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான் ஜிஷ்ணுவின் உடன்பிறந்த அண்ணன்.

“உனக்கு மட்டும் உசத்தியான ஸ்கூல், உயர்ந்த படிப்பு, தண்ணியா செலவழிச்சு நீ மனசால நெனச்சதை எல்லாம் கொண்டுவந்தாங்களேடா… பதிலுக்கு அவங்களை உயிரோட கொல்லுறியேடா…” அவன் அடித்த அடியில் ஜிஷ்ணுவின் மூக்கு உடைந்து ரத்தம் கொப்பளித்தது.

“உன்னைப் போய் என் மகன் என் மகன்னு பெருமையா சொல்லுவாங்களே. ஒரு தாயோட கடைசி ஆசையை நிறைவேத்தக் கூட யோசிக்குற நீயெல்லாம் ஒரு மகனாடா?” கேட்டான் மற்றொரு அண்ணன். அவன் தள்ளி விட்டதில் கீழே விழுந்தான் ஜிஷ்ணு.

“வேண்டாம் அவனை ஒண்ணும் செயாதிங்கரா… அவன் வலி தாங்க மாட்டான்ரா” தீனமாகக் கதறினார் ஜெயசுதா. வலியை விட தாயின் கதறல் ஜிஷ்ணுவைக் கொன்றது.

“அம்மா அப்ரேஷனுக்கு ஒத்துக்கோம்மா. உடம்பு சரியானதும் என் கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்”

ஜெயசுதாவின் காலைப் பிடித்துக் கெஞ்சினான் ஜிஷ்ணு.

“இல்ல நாணா… நான் பொழைக்க மாட்டேன்னு தோணுது. வாழ்க்கைல பணம், பதவி, பேரன், பேத்தின்னு எல்லாத்தையும் பாத்துட்டேன். உன் கல்யாணத்தையும் பார்த்துட்டேன்னா நிம்மதியா போவேன். நீ அந்த நிம்மதியை எனக்குத் தா நாணா” ஜிஷ்ணுவிடம் கை கூப்பிக் கெஞ்சினார் ஜெயசுதா.

கடைசி ஆசை… அம்மாவின் கடைசி ஆசையாகக் கூட இருக்கலாம்… இதுதான் ஜிஷ்ணுவின் மனதில் எதிரொலித்தது.

‘அன்னைக்கு அப்பாவப் பாத்துக்க சொல்லி எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டு என் மடில படுத்துட்டு என்னை பார்த்துக்கிட்டே செத்துப் போய்ட்டாங்க விஷ்ணு… அந்த மாதிரி ஏதாவது நடந்துட்டா… உலகத்தையே கொடுத்தாலும் அவங்களைத் திரும்பி வரவைக்க முடியுமா…

விஷ்ணு உனக்கு நிஜம்மாவே புரியலையா? நம்ம ரெண்டு பேரும் நம்ம அப்பாவையும் அம்மாவையும் பாக்குறது கடைசி முறையாக் கூட இருக்கலாம். அவங்களோட கடைசி நிமிஷங்களா கூட இது இருக்கலாம். அவங்களோட ஆசைகளை நிறைவேத்த வேண்டி வரலாம். அப்ப நான் உனக்கு பாரமாவோ, நீ எனக்கு பாரமாவோ இருந்தா சரி வருமா? நீ போய் உன் கடமையை செய். நான் என் கடமையை செய்யுறேன்’

காதலைக் காப்பாற்றும் போரில் சொந்தங்களை எதிர்க்க வழியின்றி கலங்கி நின்ற அர்ஜுனனானான் ஜிஷ்ணு.

‘இலாண்டி சந்தர்ப்பம் நாக்கு ஒஸ்துந்தியனி முந்தே தெளிசேமோ நாக்கு ஈ பேரு பெட்டாறு?’ (இது மாதிரி சூழ்நிலை வரும்ன்னு நெனச்சே எனக்கு ஜிஷ்ணுன்னு பேர் வச்சாங்களா?) விரக்தியுடன் நினைத்தான் ஜிஷ்ணு.

காதலியைப் பார்ப்பதா இல்லை ஈன்ற கடனை அடைப்பதா என்ற சூழ்நிலையில் தாயின் உயிரே முக்கியமாய் பட, காதலை விட்டுக் கொடுத்துக் கோழையானான்.

ஒரு கோடி புள்ளி வச்சு நான் போட்ட காதல் கோலம்

ஒரு பாதி முடியும் முன்னே அழிச்சுடுச்சு காலம் காலம்.

குருஷேத்திர யுத்தம், அங்கஹீனமே இல்லாத அரசகுமாரனான அர்ஜுனின் மகன் அரவானை களப்பலியாகக் கொண்டதைப் போல, அர்ஜுனின் பெயர் சூட்டப்பட்ட ஜிஷ்ணுவின் மாசற்ற காதலைப் பலி கொடுத்து திருமணம் ஒன்று நடந்தேறியது. துண்டான தலையுடன் யுத்தம் முடியும் வரை பார்த்திருந்த அரவானைப் போல, ஒச்சமில்லாத அவன் காதல் பதறித் துடிதுடிக்க அந்த நிகழ்ச்சிக்குப் பார்வையாளனாய் மாற்றிற்று.

“ஜமுனாவைக் கூப்பிடுங்க” ஜிஷ்ணுவின் மாமா உறுதியுடன் சொன்னார். இங்கு நடந்த சர்ச்சைகள் எதுவுமே தெரியாமல் வெளியில் அமர்ந்திருந்த ஜமுனா அழைத்து வரப்பட்டாள். வரவேற்பறையிலிருந்த பெரிய வெங்கடாசலபதியின் படத்தை யாரோ எடுத்து வந்தனர். அந்த அறையில் அவசர அவசரமாய் ஜிஷ்ணுவின் கைகளில் தாலி திணிக்கப்பட, பொம்மையாய் மாறிப்போன அவனது கரங்கள் ஜமுனாவின் கழுத்தில் தாலியைக் கட்டியது. ஒவ்வொரு முடிச்சின் போதும் ஜிஷ்ணுவின் இதயம் கதறித் துடித்தது.

“சரயு எலா நீ முஹானி சூடகலன்னு? நேனு தெளிசே நீக்கு இலாண்டி துரோகம் செயலேது. நாக்கு ஏன்சசேயலக போயின ஈ நிமிஷாணி அஸஹின்சுகுன்டான்னு. நன்னு மன்னின்சகலவா?”

(சரயு இனிமே உன் முகத்துல எப்படி முழிப்பேன். உனக்கு இந்த துரோகத்தை நான் விரும்பி செய்யல. என்னால ஒண்ணுமே செய்ய முடியாம போன இந்த நிமிஷத்தை நான் வெறுக்குறேன். என்னை மன்னிக்க முடியுமா?)

ரணமான இதயத்தின் கதறலோடு ஜிஷ்ணு-ஜமுனாவின் திருமணம் எனும் தாலி கட்டும் சடங்கு நடந்ததேறியது.

திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் இறங்கிய சரயுவை அழைத்துச் செல்ல செல்வம் காத்திருந்தான். பஸ்ஸிலிருந்து இறங்கிய சரயுவைப் பார்த்ததும் சிகரெட்டை காலில் மிதித்து அணைத்துவிட்டு,

“சின்னக் குட்டி” என்று பாய்ந்து சென்று அவளது தோள்களை அணைத்தாற்போல் கட்டிக் கொண்டான்.

“அப்பாவப் பாரு ஆஸ்புத்திரில நாராட்டம் கெடக்காக” கண்ணீர் விட்டவனிடமிருந்து மெதுவாக விலகினாள். அவன் தொட்டது என்னவோ அவளுக்கு பிடிக்கவில்லை. சம்முகம் தூரத்தில் வருவதைக் கண்டவுடன், ஓடிப் போய் அவனிடம் நின்றுக் கொண்டாள். செல்வத்தை முறைத்த சம்முகம்,

“உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வாறேன்னு போன, இப்ப என்ன இங்க வந்து நிக்க?”

“சரயுவக் கூட்டிட்டு வர ஒத்தாசையா”

“மெட்ராஸ்லேருந்து சரயு கூட வந்திட்டா… நீ போய் ஊர்ல இருக்குற உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வா” திட்டிவிட்டு சரயுவை அழைத்துச் சென்றான் சம்முவம்.

“அறிவுகெட்ட நாயி, வயசுக்கு வந்த புள்ளைய ஆயி அப்பனே தொட்டுப் பேச யோசிப்பாக. இவேன் என்னடான்னா பொட்டப் புள்ளைய பஸ்ஸ்டாண்ட்ல கட்டிப் பிடிக்குறான்” செல்வத்தைப் பற்றி உண்மையை சரயுவிடம் நேரடியாய் சொல்ல இது நேரமில்லை. குறிப்பால் உணர்த்தினான் சம்முகம்.

மருத்துவமனையில், “அப்பா… எப்படிப்பா இருக்க?” என்ற சரயுவை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தார் நெல்லையப்பன்.

“கை கால் விளங்கல… வாய் இழுத்துக்குச்சு… இனிமே படுத்தப் படுக்கைதான்… வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக சொல்லிட்டாக… இன்னும் மாசக்கணக்குத்தான்” என்று படாரென்று உடைத்துச் சொல்லப்பட்ட விஷம் போன்ற உண்மையை ஆலால கண்டனைப் போல விழுங்க முயன்றாள்.

அந்த சிவனுக்கே முடியாதது இவளுக்கு முடியுமா?

இடைவேளை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுரா – என்னைக்‌ ‌கொண்டாடப்‌ ‌பிறந்தவளே‌ – 1தமிழ் மதுரா – என்னைக்‌ ‌கொண்டாடப்‌ ‌பிறந்தவளே‌ – 1

அத்தியாயம் – 1 ‘விர்’ என்ற இரைச்சலுடன் அந்த அலுமினியப் பறவை, ரன்வேயில் ஓட ஆரம்பித்தது. சக்கரங்கள் மெல்ல எழும்பும் தருணம் பெரும்பாலானவர்கள் கண்ணை மூடித் திறந்தனர். எத்தனை முறை விமானத்தில் பயணம் செய்தாலும் அதன் சக்கரங்கள்  தரையை விட்டு வானத்தில்

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’

அத்தியாயம் – 13   ப்ரித்வியின் பக்கத்து வீட்டில் கர்ஜீவன், அவர் மனைவி மித்தாலி, குழந்தைகளில் பெண்கள் நான்கும், ஆண்கள் இரண்டுமாய் பெரிய குடும்பம். அனைவரும் வஞ்சகமில்லா மனதோடும் உடம்போடுமிருந்தனர். கர்ஜீவன் வீட்டில் தீதி தீதி என காலையே சுற்றி வந்த

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 29

அத்தியாயம் -29   கல்லாய் இறுகிய முகத்துடன் வீட்டிற்கு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் சித்தாரா. அவளின் நிலை கண்டு சந்திரிகாவின் கண்களில் நீர். “சித்து மனசைத் தளர விடாதே. இந்த சைலஜாவப் பார்த்தாலே எனக்கு நல்ல அபிப்பிராயம் வரல. இவ்வளவு நேரம்