Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21

ஜிஷ்ணு படுக்கையில் படுத்துக் கொண்டு எப்போதடா பொழுது விடியும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். முத்தமிட்டபோது படு நெருக்கத்தில் பார்த்த சரயுவின் ரோஜா இதழ்களும், கைகளால் உணர்ந்த அந்த மாம்பழக் கன்னத்தின் மென்மையும், விசிறியாய் அசைந்த அவளது கண் இமைகளும் மீண்டும் மீண்டும் அவன் மனதில் தோன்றி இம்சித்தன.

உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை

உன்னைக் கண்ட பின்னே என் உலகம் தொடங்குதடி

வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்

பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்

‘இந்தக் உலகத்துல எவ்வளவோ கண்டு பிடிக்குறானுங்க… சரயு பக்கத்துல இருக்குறப்ப நேரம் ஸ்லோவா ஓடுறமாதிரியும், அவளை விட்டுப் பிரிஞ்சிருக்குறப்ப பாஸ்டா ஓடுற மாதிரியும் ஒரு கடிகாரம் கண்டுபிடிக்கக் கூடாது? அப்படி மட்டும் ஒருத்தன் கண்டுபிடிச்சா என் சொத்தெல்லாம் அவனுக்கே எழுதி வச்சுடுவேன்…’ அலுத்துக்கொண்டான்.

அப்போதுதான் அவனுக்குத் தோன்றியது? ‘என் சொத்தா? சரயுவோட அன்பைத் தவிர நான் வேற என்ன சம்பாதிச்சேன்? ஊறுகாய் தொழில், கிராமத்துப் பரம்பரை வீடு, இது ரெண்டும் தாத்தா அவரது அன்பின் காரணமாக எனக்குத் தந்தது. அப்பறம் போட்டிருக்கும் சட்டை முதற்கொண்டு அப்பா தந்த பணம்தான். அவன் கம்பெனியைக் கூட அவர்தான் ஒப்புக்கு நடத்திக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் இழுத்து மூடிவிடும் எண்ணமும் அவருக்கு உண்டு. இத்தனை வயசு வரை ஒரு பைசா கூட சம்பாதிக்காம அடுத்தவங்க காசில செலவு செஞ்சுட்டு இருந்திருக்கோம்’ நினைக்கவே கூசியது ஜிஷ்ணுவுக்கு.

‘இதுவரை பரவாயில்லை. இனிமே சரயுவக் கல்யாணம் செய்துக்கணும். அதுக்குக் கண்டிப்பா அம்மா அப்பா சம்மதம் கிடைக்கப் போறதில்ல. அவளை வச்சுக் காப்பாத்த ஒரு நல்ல வேலை வேணும். அந்த ரத்தினசாமி கூட படிப்பு வரலைன்னாலும் பிஸினெஸ் பார்த்து ராணி மாதிரி சரயுவை வச்சுக்குவேன்னு சொல்லுறான். நான் பட்டத்துராணி மாதிரி அவளை வச்சுக்க வேணாமா?’

குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி வருங்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

‘ஏதாவது எம்மென்சிக்கு அப்ளை பண்ணலாம். ரெண்டு மூன்று மாதங்களில் நல்ல வேலை கண்டிப்பா கெடச்சுடும். காலையில் அப்பாவிடம் தானே இனி ஊறுகாய் கம்பனியைப் பார்த்துக்குறதா சொல்லிடலாம். கைல வருமானமிருந்தா வீட்டை விட்டுக் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிட்டாலும் சரயுவை நல்லா பாத்துக்கலாம். அவளை எஞ்சினீயரிங் படிக்க வைக்கலாம்.’ ஒரு முடிவுக்கு வந்தவுடன் இரண்டு மணி நேரம் நிம்மதியாகத் தூங்கினான்.

காலையில் வேகமாய் எழுந்து ஆவலாதியாய் குளித்துவிட்டு, சலபதி உணவருந்துவதற்கு முன் டைனிங் டேபிளில் இருந்தான்.

அவனைப் பார்த்துக் குழம்பிப் போன அவனது தந்தை ‘காலை சாப்பாட்டுக்குத் தானே வந்தோம். ஜிஷ்ணு உட்கார்ந்திருக்கான். ஒரு வேளை மத்யானமாயிடுச்சா’ கண்ணாடியை நன்றாக அழுத்தித் துடைத்துவிட்டுப் போட்டுக் கொண்டார்.

“என்ன ஜிஷ்ணு, இவ்வளவு சீக்கிரம் எந்திருச்சுட்ட.. ஜெட்லாக் இன்னும் போகலையா…” பேச்சை ஆரம்பித்தார் சலபதி.

“இனிமே சீக்கிரம் எழுந்திரிக்கிறதா முடிவு பண்ணிட்டேன். அப்பறம் வேறொன்னு கூட முடிவு பண்ணிருக்கேன்”

அவனை அந்தக் காலையில் எதிர்பார்க்காத அதிர்ச்சியிலிருந்த தாய் தந்தையிடம் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டான்.

“நாணா, நம்ம ஊறுகாய் கம்பனியை நானே கவனிச்சுக்குறேன்… நீங்களும் பாவம் எவ்வளவு நாள்தான் கஷ்டப்படுவிங்க?”

“அது நஷ்டமாயிட்டு இருக்குப்பா. நானே மூடிடலாம்னு பாக்குறேன்”

“நஷ்டமானா அப்படியே விட்டுட முடியுமா? நான் அந்தக் கம்பனியைப் பாத்துக்கனும்னுறது தாத்தாவோட கடைசி ஆசை. நானும் சத்தியம் செய்து கொடுத்திருக்கேன். அதை மூட வேண்டாம். நான் எப்படியும் லாபமாக்கிக் கட்டுறேன். அதுக்கு முன்பணமா அவர் எனக்குத் தந்த ஷேர்ல ஒரு இருவத்தி அஞ்சு லக்ஷம் மட்டும் என் பேர்ல இன்னைக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க”

“சொன்னா கேளு நாணா… ஜமுனாவோட அப்பா உனக்கு அமெரிக்காவில கம்ப்யூட்டர் தொழில் பண்ண ஏற்பாடு பண்ணிட்டிருக்கார். கல்யாணத்துக்கு அப்பறம் அதை கவனிச்சுக்கோ” தன்மையாய் ஜிஷ்ணுவிடம் சொன்னார் ஜெயசுதா.

“அவர் யார் நான் என்ன பண்ணணும்னு ஆர்டர் போட? அம்மா நான் எந்த பிஸினெஸ் பண்ணனும், எதை கவனிக்கணும்னு தீர்மானம் செய்யுற உரிமையை இனியாவது என்கிட்டயே தாங்க…”

சொன்னவன் கடுமையாக எச்சரித்தான். “இன்னொரு தடவை என் கல்யாணத்தைப் பத்திப் பேசுனிங்க நான் வீட்டுக்கே வரமாட்டேன்”

கார் சாவியை எடுத்துக் கொண்டு சாப்பிடாமல் சென்ற மகனைத் திகைப்புடன் பார்த்தனர் ஜெயசுதாவும் சலபதியும்,

“இவனுக்குப் பேய் பிடிச்சுருச்சாங்க” கணவனிடம் கவலையுடன் கேட்டார் ஜெயசுதா.

ஜிஷ்ணு சொன்ன வார்த்தைகளை ஒவ்வொன்றாய் யோசித்துக் கொண்டிருந்தார் சலபதி. ஏதோ ஒரு மந்தரவாதி ஒரே நாளில் தன் மகனை மாற்றி விட்டதைப் போல உணர்ந்தார். யார் அந்த மந்திரவாதி?

னி இந்த கிரீன் சுடி எனக்கு நல்லாயிருக்காடி” மறுபடியும் கேட்டாள் சரயு.

“எத்தனவாட்டிடி கேட்ப… நல்லாயிருக்கு நல்லாயிருக்கு நல்லாயிருக்கு” கத்தினாள் சேர்மக்கனி.

“கோச்சுக்காதடி… இந்தக் கண்ணாடில முகம் மட்டும்தான் பாக்க முடியுது… அதுதான் கேட்டேன்” என்ற தோழியை ஆச்சரியமாய் பார்த்தாள்.

விளையாட வெளியிடங்களில் தங்கும்போது பொட்டு வைக்கக் கூடக் கண்ணாடியைப் பார்க்காமல் அசால்ட்டாய் கிளம்புபவள் சரயு.

“ஏண்டி தலை சீவக்கூட உனக்கு அக்கறையில்லையா… இப்படிப் பராமரிப்பு இல்லாம இருக்குறவளுக்கு இடுப்பளவு முடி. நிதமும் தேங்கா எண்ணையைத் தடவி, வாரத்துக்கு ஒருக்கா சீவக்கா தேய்ச்சுக் குளிச்சும் எனக்குத் தோளைத் தாண்டுவேனான்னு அடம்பிடிக்கு” திட்டிக் கொண்டே நீள முடியைத் தொடும் ஆசையில் சரயுவுக்கு சிக்கெடுத்துவிடுவாள் கனி.

“முடியை இவ்வளவு சிக்கா வச்சிருக்காத சரயு. வாழ்க்கையும் அவ்வளவு சிக்கலாப் போவும்னு என் பாட்டி சொல்லும்” கடிந்துக் கொள்வாள்.

“கனி உன்கிட்ட இதுக்கு மேட்சா ரப்பர்பேன்ட் இருக்கா?” தயக்கத்துடன் கேட்ட தோழிக்கு சுடிதாருக்குப் பொருத்தமாய் தன்னிடமிருந்த ரப்பர்பேன்ட், வளையல், தோடு எல்லாவற்றையும் போட்டு விட்டாள்.

கண்ணாடியில் பார்த்தாள் சரயு. “போடி… டிராமால வேஷம் கட்டுறவ மாதிரி இருக்கேன். விஷ்ணுவுக்குப் பிடிக்காது” முகத்திலிருந்த பவுடரை ஈரத்துண்டால் துடைக்கப் போனாள்.

“துடைக்காதடி, இன்னைக்காவது பொம்பளப் புள்ள மாதிரி இரு…” அதட்டினாள்.

“கொள்ளை அழகா இருக்க சரயு… இன்னைக்கு அண்ணன் அப்படியே கடத்திட்டுப் போகப் போறார்”

“சீ… போடி…”

அவர்களுக்குள் ஒவ்வொரு நொடியும் பெருகி வளர்ந்த அன்பை ஒரு சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சேர்மக்கனி.

சேர்மக்கனி சொன்னதைப் போலவே சரயுவைப் பார்த்து சொக்கித்தான் போனான் விஷ்ணு. காலை வசந்தபவனில் உணவு சாப்பிட்டுவிட்டு அவளை சென்னையிலிருக்கும் ஒவ்வொரு கல்லூரியையும் சுற்றிக் காண்பித்தான்.

“இதுல ஆட்டோமொபைல் பிரான்ச் இருக்கு. உனக்கு கார் மேல இருக்குற ஆர்வத்துக்கு அதைப் படி” யோசனை சொன்னான்.

மருத்துவமனைக்கு சென்று அவளது காலை மறுபடியும் காட்டினான். அவனை அங்கு கட்டி அணைத்துக் கொஞ்சிய அவன் வகுப்புத் தோழியைப் பார்த்து முறைத்தாள் சரயு.

“ஜிஷ்ணு… பொண்ணுங்க எல்லாருக்கும் நீ ரொம்ப க்ளோஸ் போலிருக்கே…”. அவளுடன் கழித்த பொழுதுகளில் அவள் தன்னை சற்று எட்டி நிறுத்த எண்ணும்போது ஜிஷ்ணுவெனக் கூப்பிடுவதைக் கண்டிருந்தான் ஜிஷ்ணு. அது அவனுக்கு எட்டிக்காயைப் போலக் கசந்தது.

“அவ சிட்டி பொண்ணு… எல்லார்கூடவும் அப்படித்தான் பேசுவா” பயந்தபடியே சொன்னான்.

“வெங்கடேஷ் அண்ணன் கூட ஒரு தடவை சொன்னாங்களே நீ பொண்ணுங்க கூட பொங்கல் வைப்பன்னு. அவளுக்கும் ‘குட் டச்’, ‘பேட் டச்’ பாடம் எடுத்தியா?” அவளின் பொறாமை கண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான். அவன் தலையில் ஓங்கிக் கொட்டினாள் சரயு.

“கொட்டாதடி… சரயு… அந்த லெசன என்னால உனக்கு மட்டும்தான் ஆசையா சொல்லித்தரமுடியும். இப்பத்தான் இன்ட்ரோ தந்திருக்கேன். புல் சிலபசையும் சில வருஷங்கள்ல கவர் பண்ணுறேன்? ஓகே… ஹாப்பி…”

சமாதனப் படுத்தினான். சரயுவும் தனக்கு விஷ்ணுபாலிருந்த நாட்டத்தை உணர்ந்தாள்.

“சும்மாவே நீ அழகு. இப்படியெல்லாம் மேக்அப் பண்ணா உன்னை விட்டுப் பிரியவே எனக்கு மனசு வரல போ…” என்றான்.

அவளுக்குக் காலில் சுளுக்கு இருந்ததால் அவ்வளவாக நடக்க விடுவதில்லை. இன்னும் இரண்டு நாட்களில் ஆண்களுக்கான பைனல்ஸ் முடிந்ததும் ஊருக்குக் கிளம்புகிறாள். நினைத்தாலே இருவருக்கும் இதயமே வலித்தது.

ஆசையோடு ஐஸ் கிரீமை சாப்பிட்டவளிடம் தன்னுடையதையும் தந்தான். வாயில் ஒட்டிக் கொண்டிருந்ததைத் துடைத்து விட்டான்.

“எப்பரா உன்னை மறுபடியும் பார்ப்பேன்…” ஏக்கத்தோடு கேட்டான்.

“நீயும் என் கூடவே வந்துடு விஷ்ணு” பதிலுக்கு அதே ஏக்கத்தோடு சொன்னாள்.

“இவ்வளவு நாளா விளையாட்டுத்தனமா இருந்துட்டேன் சரயு, இனிமே சம்பாதிக்குறதுல கவனம் செலுத்தணும். இனிமேலாவது உனக்கு செலவளிக்கிறது என் சம்பாத்தியமா இருக்கணும். நான் பிஸினெஸ்ல கவனம் செலுத்தணும்ரா… கொஞ்ச நாள் உன்னைப் பார்க்கக் கூட வர முடியாது… நீ அடுத்த வருஷம் சென்னைல என்ஜினீயரிங் சேர்ந்துடு. நாம அடிக்கடி மீட் பண்ணலாம்”

“என்ஜினீயரிங் எல்லாம் படிக்க ஒரு குடுப்பினை வேணும் விஷ்ணு. அப்பா எனக்குக் கல்யாணம் செய்துடுவேன்னு சொல்லிட்டார், அவருக்கு உடம்பு சரியில்லை. இந்த வருஷமே கல்யாணமாகிருக்க வேண்டியது, அவருகிட்ட கெஞ்சிக் கூத்தாடி பாலிடெக்னிக் சேர்ந்து படிக்கிறேன்” என்றாள்.

“என்னரா இப்படி சொல்லுற… கல்யாணம் எவ்வளவு பெரிய கமிட்மெண்ட். இவ்வளவு சின்ன வயசுல உன்னால எப்படிக் குடும்பப் பொறுப்பைத் தாங்க முடியும்” கவலையுடன் சொன்னான்.

“சரி கல்யாணம் அது இதுன்னு ஏதாவது உங்கப்பா நெருக்குனாருன்னா எனக்கு ஒரு போன் பண்ணு. நான் ஓடி வந்துடுறேன்… ஆமாம் என் செல் நம்பர் தெரியுமா? சொல்லு”

சரயுவும் சொன்னாள். அது அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை அவளிடம் சொன்ன எண். அதன் பின் இரண்டு மூன்று தடவை போனை மாற்றி விட்டான். அப்போது சொன்ன என் செல் நம்பர் முதற்கொண்டு நினைவுக்கு வைத்திருக்கிறாளென்றால், இந்த எண்ணை எப்பாடு பட்டாவது திரும்ப வாங்கிவிட வேண்டும்.

“இந்த நம்பர் இப்ப என்கிட்டே இல்ல. கவலைப்படாதே எப்படியாவது மறுபடியும் வாங்கிடுவேன்”

‘பாலிடெக்னிக்கை முடிக்கட்டும். ரொம்ப நெருக்கலான சூழ்நிலை ஏற்பட்டா கழுத்துல தாலி கட்டிக் கூட்டிட்டு வந்துட வேண்டியதுதான். அப்பறம் சென்னைல இவளைப் படிக்க வச்சுக்கலாம்’ என்று முடிவு செய்தான்.

நீக்கு நேனு நச்சானா?” கண்ணுக்கு முன் ஜிஷ்ணு சரயுவின் காதலைப் போலக் கடல் விரிந்துப் பறந்து நிறைந்திருந்தது.

“என்னது?”

“சே எஸ் ஆர் நோ”

“நோ”

“ப்ளீஸ்… நச்சாவுன்னு செப்பரா”

“நச்சாவு”

“சால தாங்க்ஸ் சரயு. சரி லேச்சிபோத்தாமா”

“நீ பேசுறது ஒண்ணுமே புரியல விஷ்ணு”

“இப்படியே ஓடிப் போயிடலாமா சரயு. ஒரு சின்ன கிராமத்துக்குப் போகலாம். அங்க ஒரு அழகான மூங்கில் குடிசை கட்டிக்கலாம், சுத்திலும் தோட்டம். உங்க வீட்டுல இருக்குற மாதிரி ஒரு தண்ணி நிறைஞ்ச கிணறு. பக்கத்துல இருக்குற டவுன்ல ஒரு வேலை தேடிக்கிறேன். நீயும் அங்கேயே படி. காலைல உன்னை காலேஜ்ல விட்டுட்டு வேலைக்குப் போவேன். சாயந்தரம் காத்திருந்து கூட்டிட்டு வருவேன். உனக்காக பாஸ்கெட் பால் விளையாடக் கத்துக்குவேன். லீவ்ல பாஸ்கெட் பால் விளையாடலாம், ஆத்துல நீச்சலடிக்கலாம், சைக்கிள் ஓட்டிட்டு காடு மேடெல்லாம் சுத்தலாம். நமக்காக அழகா ஒரு உலகம். அதுல நீயும் நானும் மட்டும்தான்” கண்கள் முழுவதும் கனவுடன் சொன்னான்.

“சாப்பாடு… எனக்கு சரியா சமைக்கத் தெரியாதே விஷ்ணு…”

“அதுலேயே இரு… மரமண்டை… உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரேன்னு சொல்றேன்.. சமைக்கக் கத்துக்க மாட்டேனா… சமைச்சு நானே என் கையால ஊட்டி விடுறேன்”

“சரி. ஆனா உப்புமா செய்யக் கூடாது. தினமும் முறுகல் தோசை ஊத்தித் தரணும்”

“ஓகே. காணி ஒக முறுகல் தோசைக்கு ஒக கிஸ் தரணும்… டீலா?”

சரயுவுக்கு அவன் தந்த முத்தம் நினைவுக்கு வந்தது. முகம் சிவந்தது. “போ விஷ்ணு… நீ ரொம்பக் கெட்டப் பையன்”

கோவக்கார சரவெடியாய், திமிர் பிடித்த சரயுவாய், அன்பு சொட்டும் அன்னப்பூரணியாய், மனதைத் தொடும் மீனாட்சியாய் இதுவரை அவன் அவளைப் பார்த்திருந்தவன், முதன் முறையாக அவள் முகத்தில் வெட்கத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனான். அவன் சரயுவுக்கு அவனைப் பார்த்து வெட்கம் வருகிறது. அவனைப் பார்த்து அவள் பெண்ணாக உணர்கிறாள். அவளை அப்படியே அணைக்கப் பரபரத்த கைகளை அடக்கினான். சின்ன பெண். அவள் மனம் சலனமடையக் கூடாது.

“நா பங்காரம்…” பளிங்குக் கன்னங்களை மெலிதாக வருடினான்.

அவனது சட்டை பட்டனைத் திருவி விளையாடின அவளது கைகள்.

“விஷ்ணு…”

“செப்பு ஸ்வீட்டி”

“நீ அது பண்ணியே…” வெட்கத்தில் வார்த்தைகள் வராமல் திணறினாள்.

“ஹே தப்பா பேசாதரா… என்ன பண்ணேன்னு கிளியரா சொல்லணும்… இல்ல சென்சார்ல கத்தரி போட்டுடுவாங்க”

தனது இதழ்களை சுட்டிக் காட்டினாள். “நீ இங்க கிஸ் பண்ணியே அதுலேர்ந்து எப்பப் பாத்தாலும் உன் நினைவாவே இருக்கு… தூங்கவே முடியல… கனவுல கூட நீ கிஸ் பண்ணதுதான் திரும்பத் திரும்ப வருது. ஏன் அப்படி இருக்கு?”

‘பொறம்போக்கு படவா… நல்லாப் படிக்குற பொண்ணு மனசக் கெடுத்து வீணாக்கிட்ட’ திட்டிய மனசாட்சியை அடக்கியவன்,

“அது வேறொண்ணுமில்ல உனக்கு வேற யாரும் முத்தம் தந்ததில்ல இல்லையா… அதுனாலதான் அப்படி இருக்கு. ஒரு பத்து நாள் தொடர்ந்து முத்தமா வாங்கிட்டிருந்தா பழகிடும்”

“அப்ப பத்து நாள் எனக்கு முத்தம் தரப்போறியா?”

பத்து நாள் மட்டும் எனக்குப் பத்துமா? அதில்லை இப்பப் பிரச்சனை… முத்தத்தோட என் மனசு நிறுத்திக்குமா? அடுத்தக் கட்டத்துக்குப் போக ஆசை வந்துட்டா? கேள்வியுடன் பார்த்தான்.

“சரயு… என்னை விட்டுடு. நான் சாதாரண மனுஷன். அவ்வளவு பெரிய சோதனையை என்னால தாங்க முடியாது”

“முத்தம் தந்தா அவ்வளவு கஷ்டமா இருக்குமா?” டக்கென அவன் கன்னத்தில் தனது ஈரமான இதழ்களைப் பதித்தாள். விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான் ஜிஷ்ணு.

“ஆமாம் தூ… நீ ஷேவ் பண்ணவேயில்ல. உன் தாடி குத்திடுச்சு” மூன்று நாட்களாய் சவரம் செய்யாததால் சொர சொரப்பாயிருந்த அவன் தாடி முடிகள் குத்தி, ரோஜா நிறத்திலிருந்து சிவப்புக்கு மாறியிருந்த அவள் இதழ்களைப் பார்த்தவுடன் தொபுக்கடீரென ஜிஷ்ணுவின் இதயம் அவளது கால் சுண்டுவிரலுக்கருகே விழுந்து துடித்தது.

ஜிஷ்ணுவின் கண்களில் மயக்கம் தெரிந்தது. “ஆமாம் சரயு. நானும் இந்த மாதிரி கிஸ் வாங்கினதேயில்லையா. அதனால எனக்கும் உன் முகம்தான் தெரியுது. இனிமே நீ கிஸ் பண்ணனும்னா முன்னாடியே சொல்லு. ஒரு நிமிஷத்துல ஷேவ் பண்ணிடுறேன்”

தன் மார்பில் சாய்ந்து அமர்ந்திருந்தவளின் விரல்களோடு தனது விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.

“சரயு… நிஜம்மாவே என்னை உனக்குப் பிடிச்சிருக்கா? என்கூடவே வாழ்க்கை பூராவும் வருவியா?”

“விஷ்ணு… உன்னை எனக்கு அவ்வளவு பிடிச்சிருக்கு. உன் கூடவே இருக்கணும்னு ஆசையா இருக்கு… நீ தொடுறது பிடிச்சிருக்கு… முத்தம் கொடுக்குறது கூடப் பிடிச்சிருக்கு… இதெல்லாம் சாதாரணமா நண்பர்கள் செய்ய மாட்டாங்கன்னு எனக்குப் புரியுது. உன்னைத் தவிர வேற யாரையும் நான் இந்த அளவுக்கு அனுமதிச்சிருக்க மாட்டேன். இதுக்குப் பேர் அன்புன்னா… சரி, உன் மேல எனக்குக் கொள்ளை அன்பு, ஆசைன்னா… உன் மேல வானம் முட்டுற அளவுக்கு ஆசை, காதல்ன்னா… உன் மேல எனக்கு வெறித்தனமான காதல்…”

அவனது நெற்றியில் தனது இதழ்களைப் பதித்தாள். கன்னங்களுக்கு முன்னேறியபோது,

“சரயு… ஷேவ் பண்ணலடி முடி குத்தும்” கவலைப்பட்டான் ஜிஷ்ணு.

“ம்ம்… முடி குத்தாத இடத்துல கிஸ் பண்ணுறேன்” என்றவளின் பட்டு வண்ண ரோஜா இதழ்கள் அவனது இதழ்களை மெலிதாகத் தீண்டின.

“நா ப்ரேயசி…”

நம் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி

அதை வானம் அண்ணாந்து பார்க்கும்

நான் தூரத்தெரியும் வானம், உன் துப்பட்டாவில் இழுத்தாய்

என் இருவத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய்?

‘பாவி மக்கா… இன்னைக்குக் கடைசியா சந்தோஷப்பட்டுக்கோங்க, கனவு கண்டுக்கோங்க, மணல் கோட்டை கட்டிக்கோங்க. நாளைக்கு உங்க வாழ்க்கையே தலைகீழா மாறப்போகுதே… பீச்சுல நடக்குற அசிங்கத்துக்கெல்லாம் சாட்சியான நான் இன்னைக்கு ஒரு அழகானக் காதலைக் கண்டு, அது கலையப் போறதுக்கும் சாட்சியாகிப் போனேனே’

ஓ…வென்று அலறிக் கண்ணீரால் கரைந்த கடல், தனது அலைகளால்… காதலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, அவர்களது பாதத்தை மென்மையாக வருடி முத்தமிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 16

அன்று லாஸ் ஏன்ஜல்ஸ் ஜிஷ்ணுவுக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை. அவன் தாய் ஜெயசுதா ஆதாயமில்லாமல் ஒரு காரியமும் செய்ய மாட்டார். இவன் அமெரிக்காவை விட்டுச் செல்ல மனமில்லாமல் வருடக்கணக்காய் படிக்கிறேன் என்று பாவலா காட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் பணம் அனுப்புகிறார்கள்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

அத்தியாயம் -33 “அப்பா…..  வேலவா! ஷண்முகா! பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா?”,   ஊரில் இருந்து திரும்பி இருந்த நான்சியிடம்

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 13தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 13

சரயு வயதுக்கு வந்ததறிந்து பட்டு சேலையுடனும் சீர்வரிசையுடனும் பார்த்துச் சென்றான் சம்முவம். லஷ்மிக்கு அது பேறுகாலம் அதனால் வரமுடியவில்லை. பார்வதி வீட்டில், “உந்தங்கச்சி பெரியவளாயிட்டாளா? இதென்ன ஊருலகத்தில் நடக்காததா…” என்று மாமியார் கேள்வி எழுப்பியதில் ஒரு போன் விசாரிப்போடு சம்பாஷனை முடிந்து