Tamil Madhura குழந்தைகள் கதைகள் தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத் தொழில் நடந்தால் தானே உணவுப் பொருட்களை மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்வார்கள் வண்டி மாடுகள், உழவுத் தொழிலாளிகள், மூட்டைத் தூக்கிச் சுமக்கும் கூலித் தொழிலாளர்கள், கடைகள், மண்டிகள், உணவகங்கள் எல்லாம் நடக்கும். வயிறு நிறைந்தால்தானே மக்களுக்கு நாட்டியம், நாடகம், விளையாட்டு என்று கேளிக்கைகளில் கவனம் திரும்பும். உணவு பற்றாக்குறை, உணவுப் பஞ்சம் நான் முன்னர் கூறிய மற்ற அனைத்து தொழில்களையும் சேர்த்து முடக்கிவிடும்.

இவை மட்டுமா… இன்னும் ஒரு பேராபத்து ஏற்படும். பசி காதை அடைக்கும்பொழுது பக்கத்திலிருப்பவனின் உணவைப் பிடிங்கித் தின்னலாம் தப்பில்லை, அடித்துப் பிடுங்கலாம் அதுவும் தப்பில்லை என்றே தோன்றும். இவை எல்லாம் குற்றங்கள் என்று பிரித்தறியும் அறிவே மழுங்கி விடுவதால் நாட்டில் குற்றங்கள் பெருகிவிடும். ஒழுக்கமற்ற இடத்தில் காவலர்கள் பாடு திண்டாட்டம்தான்.

சித்திரநாட்டில் இந்த மாதிரி சூழ்நிலைதான் ஏற்பட்டது. சித்திரசேனன் மந்திரிகள் துணை கொண்டு  தன்னால் முடிந்த அளவுக்கு நிலமையைக் கட்டுப் படுத்த முயன்றான். பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். மிகுந்த கவலையோடு அமர்ந்திருந்தான். அவனைப் பார்க்க அவனது அன்னை வந்தார். அவரும் ஒரு காலத்தில் தனது கணவருடன் சேர்ந்து நாட்டு நலனில் பாடுபட்டவர்தான். ஆனால் மூப்பின் காரணமாக ஓய்வெடுக்க ஹிமாலய தேசம் சென்றிருந்தவர் சிலதினங்களுக்கு முன்புதான் சித்திரநாட்டிற்குத் திரும்பியிருந்தார்.

“சித்திரசேனா என்ன கவலை”

“நாட்டின் நிலையை நினைத்துக் கவலையாக இருக்கிறது அன்னையே. நானும் மந்திரிகளின் ஆலோசனைப்படிதான் செயல்படுகிறேன் இருந்தும் பயனில்லை”

“ஏன் அப்படி?”

“எனது மந்திரிகள் ஒவ்வொருவரின் யோசனையும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. ஒருவர் கிழக்கு திசையில் செல்லலாம் என்று சொன்னால் மற்றொருவர் மேற்கு நோக்கி இழுக்கிறார். இவர்களில் யார் சொல்வதைப் பின்பற்றுவது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது”

“உண்மை ஒன்றுதான் அது எதிர் எதிர் திசைகளில் இருக்காது. பொய்தான் பலதிசைகளில் பரவும்”

“அதை அறிந்ததால்தான் எது உண்மை. தகுதி வாய்ந்தவர்களாக இருந்து ஏன் முரண்பாடு என்று யோசிக்கிறேன்”

“உனது மந்திரிகள் தகுதி வாய்ந்தவர்கள் என்று எப்படி சொல்கிறாய்”

“ஒவ்வொருவருக்கும் பரீட்சை வைத்து சிறந்த மக்களையே தேர்ந்தெடுத்து என் மந்திரியாக அதிகாரிகள் குழு நியமித்துள்ளது. அதனால் அனைவரும் நல்ல அறிவாளி என்றே நம்புகிறேன்”

“பரிட்சையில் தேர்வடைந்தவர்கள் நல்ல படிப்பாளிகள் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அனைவரும் நாட்டை வழிநடத்தும் அளவிற்கு அறிவாளியா என்பது விவாதத்திற்குரிய விஷயமாகத்தான் படுகிறது. ”

அப்பொழுதுதான் தான் செய்வது சரியா என்ற சந்தேகம் சித்திரசேனனுக்கு எழுந்தது. “அவர்கள் அனைவரும் சந்தேகமில்லாமல் நல்ல படிப்பாளிகள்தான் ஆனால் அறிவாளியா என்பது தெரியவில்லை”

“அதிகாரிகள் தேர்வை நியாயமாக நடத்தினார்களா என்பதையும் நீ அறிந்துக் கொள்ள வேண்டும்”

“தக்க சமயத்தில் யோசனை கூறினீர்கள் அம்மா… தகுந்த ஒற்றர்கள் மூலம் தேர்ந்தெடுத்தவர்கள் சரியா என்பதை சரி பார்க்கிறேன்”

சில நாட்களில் அன்னையை சந்திக்க வந்த மன்னன் வருத்தமாக இருந்தான் “அதிகாரிகள் தேர்வுகளில் குளறுபடி செய்துவிட்டார்கள் என்றும்  லஞ்ச லாவண்யத்தில் கரை தேர்ந்து விட்டார்கள் என்றும் செய்திகள் வருகிறது அம்மா. ஊழல் என்னும் புற்றுநோய் அரசாங்க ஆலோசகர்கள் வரையில் ஊடுருவி இருப்பது இத்தனை நாளும் நான் அறியாமல் இருந்தேன் என்பதை நினைத்து எனக்கே வெட்கக் கேடாக இருக்கிறது”

“நல்லது… தாமதமாக அறிந்து கொள்வது அறியாமலேயே இருப்பதைவிட மேல் அல்லவா… இதிலிருந்து நீ கற்ற பாடம் ஒரு செயலை செய்து முடித்துவிட்டோம் என்று ஓய்வெடுத்துக் கொள்ளக் கூடாது. நமது செயலை கண்காணிக்கவும் பரிசீலிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் நமது தவறுகள் கண்ணில் படாது. திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்காது”

“இதனைத் திருத்தவும் மந்திரிகளின் துணை வேண்டுமல்லவா…”

“ஆம்… உனக்கு ஒரு தெய்வ வாக்கைச் சொல்கிறேன் கேள்”

“என்னம்மா அது”

“நாடு இப்படி பசி பஞ்சத்தில் தத்தளித்து மன்னன் செய்வதறியாமல் திகைத்து நிற்கும்பொழுது ஒரு தேவ தூதன் வருவான் என்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அவர் உன்னை வழிநடத்துவார்”

“அப்படியா… அவரை உடனே கண்டுபிடிக்கச் சொல்கிறேன்”

Imsai arasan 23 am pulikesi Images : Other_comedians Memes Images Download  | Other_comedians In Imsai arasan 23 am pulikesi Tamil Memes | Online Memes  Generator For Other_comedians Create Your Own Memes Using

மன்னன் நாடு முழுவதும் தேவதூதனைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு பதவியும் சன்மானமும் வழங்கப்படும் என்று அறிவிக்க சொன்னார்.

ஏழை விவசாயி வீரனின் வீட்டில் குழந்தைகளும் மனைவியும் ஒரு வேளை கூட சரியாக உண்ண முடியாது இறக்கும் நிலையில் இருந்தனர். இயற்கை சதி செய்தால் எத்தனை அறிவும், நியாய புத்தியும் இருந்தாலும் குடும்பத்தினரின் நலனே முன் நிற்கும். மன்னரின் அறிவிப்பைக் கேட்ட  வீரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனக்கு அந்த தேவதூதன் இருக்கும் இடம் தெரியும் என்று அரண்மனை அதிகாரிகளிடம் சொன்னான். அவர்களும் அவனை மன்னன் முன்பு கொண்டு சென்றனர்.

அவனைப் பரிட்சித்து பார்த்தனர் அமைச்சரவையில் இருந்த மந்திரிகள். அவர்கள் அனைவரின் கேள்விக்கும் டாண் டாணென்று  பதில் சொன்னான் வீரன். அவனை உற்று நோக்கிய மன்னன் “வீரா எப்போது தேவ தூதன் இருக்கும் இடத்திற்கு எங்களை எப்பொழுது அழைத்து செல்லப் போகிறாய்?” என்றான்.

“அதற்கு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் ஆகும் மன்னா. இந்தக் காரியத்தை செய்து முடிக்க எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தேவைப்படுகிறது”

“தனாதிகாரியிடம் ஆயிரம் பொற்காசுகளைப் பெற்றுக் கொள். நாற்பத்தி எட்டாம் நாள் தேவ தூதன் இருக்கும் இடத்தைக் காட்டாவிட்டால் உன் சிரம் என் கரங்களால் வெட்டப்படும் என்பதை நினைவில் கொள்”

வீட்டிற்குத் திரும்பிய வீரன் தான் வாங்கிய கடனை எல்லாம் திருப்பிச் செலுத்தினான். தன்னுடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் வயிறார உணவளித்தான். அவர்களுக்கு உணவளித்தது போக மீதமிருந்த பணத்தால் அவனது ஊர் கிணற்றை தூர் வாரி ஆழப்படுத்தினான். அதனால் அவனது கிராமத்து குடிநீர் பஞ்சம் ஓரளவு நீங்கியது. இந்தப் பணிகளில் ஒரு மண்டலம் பறந்தே போனது.

கடைசி நாளன்று தனது மனைவியிடம் தனக்கு தேவதூதன் யாரும் தெரியாது என்றும், மன்னரிடம் பொய் சொல்லி பொற்காசுகளைப் பெற்றதால் அவர் தரும் தண்டனையை ஏற்றுக் கொள்ளப் போவதாக சொல்லி அரசவைக்குச் சென்றான். தான் வந்து அரசரிடம் பேசுவதாக சொல்லிய மனைவியின் கண்ணீரைக் கண்டு கூட அவளை மறுத்துவிட்டு அரசனிடம் சென்று உண்மையை சொன்னான்.

“என்ன… இந்த நாட்டின் அரசனான என்னை தேவதூதனைக் காண்பிப்பதாக சொல்லி ஏமாற்றி ஆயிரம் பொற்காசுகளை பெற்றுச் சென்றாயா.. உனக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்” மீசை துடிக்க, கண்கள் சிவக்க வீரனைக் கேட்டான் மன்னன்.

“மந்திரிகளே… இவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று சொல்லுங்கள்” என்று கேள்வி கேட்க மூத்த மந்திரிகள் மூவர் எழுந்தனர்.

“மன்னா கோடாரி கொண்டு இவனது கை வேறு கால் வேறாக துண்டு துண்டாக வெட்டிக் கொள்ளலாம்” என்றார் ஒருவர்.

“வேண்டாம் மன்னா… உங்களையே ஏமாற்றிய இவனை எண்ணைக் கொப்பறையில் பொரித்து எடுக்கலாம்” என்றார் இன்னொரு மந்திரி.

மூன்றாம் மந்திரி வளவன் அமைதியாக இருந்தார். அவர் எப்பொழுதும் மற்ற மந்திரிகளுடன் இணக்கமான போக்கு இல்லாது ஒதுங்கியே இருப்பார் என்று மன்னனுக்கு பல முறை புகார் வந்திருக்கிறது.

“நீங்கள் சொல்ல மாட்டீர்களோ” என்று கேட்டான் மன்னன்.

“மன்னா… நான் சொல்வேன் ஆனால் நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது”

“கோபிக்க மாட்டேன்… சொல்” பதிலுரைத்தான் மன்னன்.

“வறுமை காரணமாகவே இந்தக் குற்றத்தை வீரன் செய்திருக்கிறான். உங்களிடமிருந்து பெற்ற பொன்னை எடுத்துக் கொண்டு இப்போது நாட்டில் பல குற்றவாளிகள் செய்வது போல மனைவி குழந்தை குட்டியுடன்  ஊரை விட்டு ஓடியிருக்கலாம். அப்படி அவன் சென்றிருந்தால் அடுத்த நாட்டிலிருந்து அவனைக் கைது செய்து அழைத்து வருவது கடினம். ஆனால் அவன் நேர்மையாக அவனது தவறை ஒத்துக் கொண்டு தண்டனையை அனுபவிக்க வந்திருக்கிறான். அதில் நேர்மை தெரிகிறது. அதனைப் பாராட்டி அவனது வாழ்வு சிறக்க வழி செய்வது நமது கடமை. அது மட்டுமில்லாது அவனது குணத்தைப் பார்க்கும் பொழுது உங்களிடமிருந்து பெற்ற பொற்காசுகளை நல்வழியில் செலவளித்திருப்பான் என்றே எனக்குப் படுகிறது” என்றார் வளவன்.

“உங்கள் முடிவு எனது சினத்தை அதிகப்படுத்துகிறது மந்திரியாரே…  என் மனதுக்கு உவப்பான அறிவுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்”

“மன்னிக்கவும் மன்னவா… உங்களது மனதை மகிழ்விக்கும் அறிவுரையை சொல்வது எனது பணியல்ல… இந்த நாட்டு மக்களின் நன்மையை மனதில் கொண்டு வழிகாட்டுவதே எனது கடமை” என்று அடக்கமாக பதிலளித்தான் வளவன்.

அப்பொழுது உப்பரிகையின் மேலிருந்து பலத்த கைதட்டல் ஓசை கேட்டது. அங்கிருந்து அரசவையில் நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த ராஜமாதா தான் அது.

“சித்திரசேனா உனது மந்திரிகளில் அவன் விறகுவெட்டி, யாரிடமோ பணத்தை வெட்டி இந்த மந்திரி பதவியை அடைந்திருக்கிறான். இவனோ சமையல்காரன். உண்மையாக சிறந்த அறிவுரை கூறி வழிநடத்தும் திறமை வளவனுக்கு மட்டுமே உண்டு. அவனையே முதல் மந்திரியாக நியமி”

“அப்படியே செய்கிறேன் அம்மா… வளவனின் துணை கொண்டு மந்திரிசபையில் களை எடுத்து நல்லாட்சி தருகிறேன்” என்று உறுதியளித்தார்.

வீரனை மன்னித்து இவ்வளவு நாட்களும் ஒற்றர்கள் பின் தொடர்ந்து அவனைக் கண்காணித்ததைச் சொல்லி, ஊருக்கு உழைத்த அவனது உத்தம குணத்தைப் பாராட்டி ஊர் தலைவனாக நியமித்து ஆணை பிறப்பித்தார் மன்னர்.

“மன்னா… அப்போது தேவதூதர்… ”  வளவன் மன்னனிடம் கேட்க

“என் அன்னைதான் அது தகுந்த சமயத்தில் வந்து என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றினாரே… ஹா ஹா… ” என்று சொல்லி சிரிக்க அந்த சிரிப்பில் ராஜமாதாவும், வளவனும் இணைந்து கொண்டனர்.

 

Tags:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 2சூரப்புலி – 2

இந்தச் சம்பவத்தால் சூரப்புலி மனமுடைந்துவிட்டது. அந்த மாளிகையில் இனிமேல் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தது. ஒன்பது மாதமே ஆன குட்டியாகிய தன்னால் ஒரு பெரிய கோழியைப் பிடித்து முழுவதையும் தின்ன முடியாது என்பதைக் கூட யாரும் அறிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து, அது மிகவும்

ஆமையின் அழகான மகள் – நைஜீரிய நாட்டுபுறக் கதைஆமையின் அழகான மகள் – நைஜீரிய நாட்டுபுறக் கதை

ஒரு காலத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு ராஜா இருந்தார். காட்டு மிருகங்கள் மற்றும் விலங்குகள் மீது அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது.  அந்த நாட்டில் வசித்த ஆமை ஒன்று அனைத்து மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் புத்திசாலித்தனமாக பார்க்கப்பட்டது. ராஜாவுக்கு எக்பென்யோன் என்ற மகன்