Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான்.

“பிஸியா இருக்கியா சரயு… உனக்கு வேணும்னா சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா…” ஜிஷ்ணு என்ற ஒரு ஆள் அங்கிருப்பதையே அலட்சியப்படுத்திவிட்டுக் குழைவாக சரயுவிடம் கேட்டான். அவன் சரயுவைப் பார்த்த பார்வையே அக்மார்க் சரயுப்ரியன் என்று காட்டியது.

‘அட… என் எதிரேயே இவளை சைட் அடிக்கிறான் பாரு… பயங்கர துணிச்சல்தான்’ என்றெண்ணியவாறு அவர்களை சுவாரஸ்யமாய் பார்த்தான் ஜிஷ்ணு. சரயுவின் ரியாக்க்ஷனைத் தெரிந்துக் கொள்ள அவனுக்கு ஆசை.

“அஞ்சு நிமிஷத்துல குளிச்சுட்டு வந்துடுறேன்” என்று ஜிஷ்ணுவிடம் சொல்லியவள்,

“ரத்தினசாமி, அதெல்லாம் வேண்டாம்… நீ எனக்கு ஒரு உதவி செய்யணுமே” என்றவாறு நைஸாக அந்தப் பையனுடன் பேசியவாறு நகர்ந்தாள். தனக்குத் தெரியாமல் அவனுடன் எதோ பேச எண்ணுகிறாள் என்பதை உணர்ந்தவுடன்,

‘எனக்குத் தெரியாம இவளுக்கென்ன அந்தத் தடியனோட ரகசியம் வேண்டிக் கெடக்குது’ என்று ஜிஷ்ணுவுக்கு மனது தவிக்க ஆரம்பித்தது. அவனை மேலும் சிந்திக்க விடாமல்,

“சாப்பிட வாங்க சார்” என சவரிமுத்து உணவறைக்கு அழைத்துச் சென்றார். சரயுவை அழைத்துச் சென்று வெளியே எங்காவது உணவு அருந்தி வரலாம் என நினைத்திருந்தான். இவளெங்கே மறைந்து போனாள்? எண்ணியவாறு, அன்பாக உபச்சாரம் செய்த சவரிமுத்துவிடம் மறுத்துப் பேச மனமின்றி சென்றான்.

“நேத்தக்கி சரயுவ ரொம்ப நேரமா காங்கல… அப்பறம் உங்களோட கார்ல வந்து இறங்குறா… அதனால நல்லா ஏசிப்புட்டேன்… அவ வெகுளி… கத்திக்கிட்டு இருப்பாளே தவிர சூதுவாது இல்லாதவ… என் கிளாஸ்மேட் மனோரமா வேற சரயு அவ மகள மாதிரின்னு சொல்லித்தேன் எங்க காலேஜ்ல சேர்த்துட்டுப் போனா… இதுனால இவமேல என் பொறுப்பு கூடிட்டு… ராத்திரி சரயுவோட அப்பாகிட்ட உங்களைப் பத்திப் பேசினேன். நீங்க தெரிஞ்சவருதான்னு சொன்னாரு… அப்பறம்தான் போன உசுர் திரும்ப வந்துச்சு… பொம்பளப் புள்ளைய நம்மள நம்பி அனுப்பிச்சிருக்காங்க பாருங்க… கல்லூரில நம்மதான இவங்களுக்கு தாய்தந்தை…” என்று சொல்லியவாறு ஜிஷ்ணுவை அழைத்து சென்றார்.

‘நேத்து என்னால சரயு திட்டு வாங்கினாளா? ஒரு வார்த்தை கூட சொல்லல…’ என்றெண்ணிக் கொண்டே சென்றான் ஜிஷ்ணு.

“ஏலே சார சாப்பிட வைலே… வெஞ்சனம் (காய், பொறியல்) தீந்து போச்சா… பக்கவடா (பக்கோடா) வாங்கிட்டு வாரேன்னு போன அத்திமரப்பட்டிக்காரன் எங்கலே…” என்றவாறு அத்திமரபட்டிக்காரனை தேடிச் சென்றார்.

கிளம்பும்முன், “சார் சாப்பிடுங்க… இன்னைக்கு சைவம்தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. நான் கடிச்சுக்க பக்கவடா எடுத்துட்டு வந்துடுறேன்” என்று உபசரிக்கவும் மறக்கவில்லை.

அங்கிருந்த பசங்களில் ஒருத்தன் தேடி எடுத்து ஒரு தட்டைக் கழுவி வந்தான். ஜிஷ்ணு தங்கியிருக்கும் இடங்களில் பெரும்பாலும் ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கினையாக உணவு கிடைக்கும். போரடித்தால் ஏதாவது ஒரு பெரிய உணவகத்துக்குப் போய் சாப்பிட்டு வருவான். அவன் நடுத்தரக் குடும்ப சூழ்நிலையைக் கண்டதே வெங்கடேஷுடன் சென்ற ஸ்ரீவைகுண்டம் ட்ரிப்பின் போதுதான். இப்போது தரையில் சிந்தியிருக்கும் சோற்றுப் பருக்கைகளினிடையே லாவகமாய் சென்று ஜிஷ்ணுவுக்கு உணவை எடுத்து வைத்த அந்தப் பையனை ஆச்சரியத்துடன் பார்த்தான். பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்களில் குண்டு குண்டாய் சாதமும், கருவேப்பிலை மிதக்கும் தண்ணி சாம்பாரும் ஜிஷ்ணு இதுவரைப் பார்த்திராதவை. ஸ்பெஷல் விருந்தாளியான ஜிஷ்ணுவுக்கு உணவுடன் சாம்பாரில் கிடந்த ரெண்டு உருளைக்கிழங்குத் துண்டுகள் கிடைத்தன. அப்பளத்தை எண்ணையை மிச்சப்படுத்த எண்ணி நான்கு துண்டுகளாய் வெட்டிப் பொறித்திருந்தார்கள்.

“உப்பு குறைவாயிருக்கும். ஊறுகாயைக் கடுச்சுக்கிடுங்க” என்றவாறே ஊறுகாய் கம்பெனி ஓனருக்குத் தட்டின் மூலையில் காய்ந்து போன எலுமிச்சை ஊறுகாயை வைத்தான் பறிமாறியவன்.

“சரயுவுக்கு சாப்பாடு… ” அந்தப் பையனிடம் கேட்டான்.

“டீம்ல எல்லாரும் குளிச்சுட்டு வருவாங்க… லேட்டாயிடும்… சில சமயம் ரூமுக்கே சாப்பாடு போயிடும். நீங்க சாப்பிடுங்க… அவ இங்க வந்தா பொம்பளப் புள்ளைகளோட சாப்பிடுவா” என்றான்.

அங்கிருந்த நீள நீள பெஞ்சில் அனைவரும் அமர்ந்திருந்தனர். தட்டை வாங்கிக் கொண்ட ஜிஷ்ணு, ‘பெஞ்ச்ல உக்கார்ந்து சாப்பிடணும் போலிருக்கு. ஆனா இடமே இல்லையே’ என எங்கு அமருவது என்று தெரியாமல் விழித்தான். வெளியே கிரௌண்ட்டில் இருக்கும் பெஞ்சுக்கு சென்றான். அங்கிருந்தால் சரயு வரும்போது பார்க்க வசதியாக இருக்குமென்றெண்ணினான்.

அவனருகே வந்தாள் பூஜா. ட்ராக் சூட் தேவலாம் போலிருந்தது இப்போது அவளணிந்திருந்த உடை. அபாயகரமாய் கீழிறங்கியிருந்தது. பக்கத்திலிருந்த சேரில் அமர்ந்தவள் கைகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு போதை ஊட்டும் விழிகளால் பார்த்தாள்.

“ஹாய்… ஹன்ட்சம், போர்ட் ஐகான் கார், சோனி எரிக்சன் லேட்டஸ்ட் மாடல் போன், டெனிம் ஜீன், டீசல் டி-ஷர்ட், ரீபோக் ஷூஸ்…” ஜிஷ்ணுவின் தோற்றத்தை வர்ணித்தாள் பின்னர் கிண்டலாய் சொன்னாள்.

“இதுக்கும், நீ கைல தட்டு வச்சுட்டு இப்படி நிக்கிறதுக்கும் சுத்தமா மாட்சே ஆகலையே. அந்த பட்டிக்காடு சரயுகிட்ட அப்படி என்ன அதிசயத்தைப் பார்த்த? வச்ச கண்ணு வாங்காம அவளையே பாக்குற… அவளோட சேர்ந்தா இப்படி நெளிஞ்சத் தட்டுலதான் சாப்பிடணும். நான் உனக்குக் கம்பனி தர ரெடியா இருக்கேன். நான் ப்ரீதான். நைட் ஹாஸ்டல்ல டிராப் பண்ணா போதும். எங்காவது வெளிய போயி சாப்பிட்டுட்டு அப்படியே ஊர் சுத்திட்டு வரலாமா?” மிழிற்றினாள்.

இவளுக்கு மிஞ்சிப் போனால் இருவது வயதிருக்குமா? இந்த வயதுக்கு இத்தனை சாதுர்யமா? மனதை சாக்கடையாக வைத்திருக்கிறாளே என்று வருத்தத்துடன் உதட்டைப் பிதுக்கினான்.

“வேண்டாம் எனக்கு இந்த சாப்பாடே போதும்… ஒரே ஒரு அட்வைஸ் சிஸ்டர்… அழகை ஆபரணமா பயன்படுத்துங்க, ஆயுதமா கூடப் பயன்படுத்தலாம் தப்பில்ல, இப்படி சீப்பா பயன்படுத்தினா நீங்களும் சீப்பா போயிடுவிங்க” சொல்லிவிட்டு அமைதியாய் தனது காரை நோக்கித் தட்டினை ஏந்தியவாறே நடக்க ஆரம்பித்தான். அனல் கக்கும் கண்களால் ஜிஷ்ணுவின் முதுகை சுட்டெரித்தாள் பூஜா.

ரயு நிமிடத்தில் குளித்துவிட்டு, ஒரு மாதுளை நிற சல்வாரில் புகுந்திருந்தாள். ரத்தினசாமிக்காகக் காத்திருந்த சரயு, தட்டினை ஏந்தியவாறே காருக்கு சென்ற ஜிஷ்ணுவைப் பார்த்து விக்கித்துப் போனாள். சரயுவின் மனதில் ஜிஷ்ணுவின் தங்க நகைகள் செய்யாத ரசாயன மாற்றத்தை அவனது செயல் செய்ய ஆரம்பித்திருந்தது. விஷ்ணு எனும் ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி, எனக்காக, என் மேல் கொண்ட அன்புக்காக, காலையிலிருந்து சுட்டெரிக்கும் வெய்யிலில் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, தட்டேந்தி உணவு வாங்கினானா? அவளது இருதயம் ஒரு வினாடி நின்று, பின் துடித்தது.

அவளது விஷ்ணு மிகவும் வசதியானவன் என்று தெரியும். அவன் ஸ்ரீவைகுண்டத்துக்கு வந்திருந்த போது வெங்கடேஷின் வீட்டில் சமையல் பிரமாதமாய் இருக்கும். அவள் தாய் சிவகாமி சமைத்துத் தந்தபோது கூட அரிசி சற்று பெரிதாயிருந்தால் அவனுக்கு உணவே இறங்காது. அதனால் சிவகாமி தனியாக அவனுக்கென்று சன்ன அரிசியில் சமைத்துத் தருவார்.

விளையாட்டுப் போட்டி நடக்கும் தினங்களில் சைவம் அசைவம் என்று நல்ல உணவு கிடைத்தாலும், பயிற்சியின் போதும் எல்லா நாட்களிலும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. அவளுக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை. விளையாடிவிட்டு வரும்போது காட்டுத்தனமாய்ப் பசிக்கும். அப்போது வயிறுக்கு சாப்பாடு தயாராய் இருக்கவேண்டும். அது போதும். பசிக்காக அவள் உண்ணும் இந்த உணவை ருசிக்காக சாப்பிடும் இவனால் எப்படி உண்ண முடியும்?

“ரத்தினசாமி வந்ததும் நேரா அந்த சிவப்பு காருக்கு வெரசா வரச் சொல்லுலே” என்று கட்டளையிட்டுவிட்டு வேகமாய் காரை நோக்கி ஓடினாள்.

கார் கதவைத் திறந்து பின் சீட்டில் அமர்ந்த ஜிஷ்ணு உணவை வெறித்துப் பார்த்தான். ‘தேவுடா… இதென்ன சாதம் பாப்கார்ன் மாதிரி இவ்வளவு பெருசாயிருக்கு? சாம்பாரா இல்லை மஞ்சள் தண்ணியா? இதை சாப்பிட்டுட்டு சரயுவால எப்படி விளையாட முடியும்? காலைல வேற சாப்பிடலைன்னு சொன்னாளே’ கவலையுடன் நினைத்தான்.

அவனுக்கு பெரும்பாலான தெலுங்கர்களைப் போல அரிசி சன்னமாக இருக்க வேண்டும். சைனீஸ் உணவகத்தில் கிடைக்கும் ஸ்டிக்கி ரைஸ் கூட சாப்பிட மாட்டான். இந்த மொச்சைக் கொட்டை சாதத்தைத் தன்னால் சாப்பிட முடியுமா என்ற கேள்வி ஒரு வினாடி தோன்றியது. சரயு சாப்பிடும் உணவு இது என்று உடனே பதில் தோன்ற, தயக்கமின்றி உணவைப் பிசைந்து, முதல் கவளத்தை உருட்டிக் கையில் எடுத்தான்.

“விஷ்ணு…” தலைதெறிக்க ஓடி வந்தாள் சரயு.

“என்னாச்சு சரவெடி?” கையை வாய்க்கு அருகில் அப்படியே நிறுத்திவிட்டுக் கேட்டான். காரினுள் நுழைந்தவள் அவனருகே மூச்சுவாங்க அமர்ந்தாள். ஜிஷ்ணுவின் கையை தனது வாய்க்கு இழுத்துச் சென்று அந்தக் கவளத்தை வாங்கிக் கொண்டாள்.

“பசிக்குதாரா?… காலைலேயே சாப்பிடலைன்னு சொன்னியே?” ஜிஷ்ணு கவலையுடன் கேட்க, ஆமாம் என்று தலையாட்டினாள். அவ்வளவுதான் தட்டை வாங்க நீண்ட சரயுவின் கைகளில் ஒரு அடி போட்டுவிட்டு மடமடவென ஜிஷ்ணு அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டபடி கேட்டாள்.

“காலைல இருந்து இங்கேயே இருக்க… போர் அடிச்சதா விஷ்ணு”

“உன்னைப் பாத்துட்டே இருந்தேன். என் சரவெடி இப்ப என்ன போடு போடுறா… இவளும் அவளும் ஒரே பொண்ணுதானா… இல்லை வேற யாருமான்னு யோசிச்சேன். உன்னைப் பத்தி மத்தவங்க பேசினதைக் கேட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. உன்னை விட்டுப் பிரிஞ்சிருந்த இடைவெளியைக் கொஞ்சம் நிரப்பின மாதிரி இருந்தது” மனதார சொன்னான்.

“ரொம்ப நல்லா விளையாடுற சரயு” என்றான்.

“தாங்க்ஸ்” சொல்லிவிட்டு வியர்வையைத் துடைக்கத் துப்பட்டாவை உபயோகிக்கப் போனவளைத் தடுத்து தனது கைக்குட்டையை நீட்டினான். காரினை சாத்தி ஏஸியை ஆன் செய்தான்.

“கொஞ்சம் கவனமா விளையாடுரா… இன்னைக்கு மட்டும் அஞ்சு தடவை கீழ விழுந்திருக்க… கை, கால்ல லேசா அடி பட்டிருக்குன்னு நினைக்கிறேன். சாப்பிட்டதும் ஆயின்மென்ட் தடவி விடுறேன்” என்றான்.

“உனக்குப் பசிக்கலையா?” என்றாள் சரயு. ஜிஷ்ணு தட்டிலிருப்பது அனைத்தையும் அவளுக்கு ஊட்டி முடித்திருந்தான்.

“இல்லையே” பொய் சொன்னான்.

“பொய் சொல்லாதே”

“நிஜம்மா”

“நீ பாஸ்கட்பால் பிளேயர்ன்னு என்கிட்டே சொன்னேல்ல அந்த அளவுக்கு நிஜமாவா?” கிண்டலாய்க் கேட்டாள்.

“ஹா ஹா… பொய்ன்னு கண்டு பிடிச்சுட்டியே”

“எத்தனை ரன் எடுத்தன்னுற மாதிரி ஏதோ சொன்னியே அப்பயே நீ பொய் சொல்லுறன்னு கண்டு பிடிச்சுட்டேன்”

ஆள்காட்டி விரலால் அவனது நெற்றியில் துப்பாக்கி சுடுவது போல் வைத்தாள். ”இந்த தடவை மன்னிக்கிறேன். ஆனா இனிமே நீ என்கிட்டே பொய் சொல்லக்கூடாது… அது எனக்குப் பிடிக்காது” எச்சரித்தாள்.

சிரித்தான் ஜிஷ்ணு.

“விளையாட்டில்ல விஷ்ணு. உனக்கு பாஸ்கட்பால் விளையாடத் தெரியாதது தப்பில்ல. ஆனா தெரியும்னு என்கிட்டே பொய் சொன்னதுதான் எனக்குப் பிடிக்கல. மத்தவங்ககிட்ட நீ பொய் சொல்லுறதைப் பத்தி எனக்குக் கவலையில்லை. ஆனா என்கிட்டே மட்டும் சொல்லாதே. என் டீம்ல இருக்குறவங்க தப்பு பண்ணாக் கூட மன்னிச்சு அவங்களுக்காக சப்போர்ட் பண்ணுவேன். ஆனால் பொய் சொல்லி என்னை ஏமாத்த நினைக்கக்கூடாது. அப்பறம் அவங்களுக்கு என் மனசில இடம் கிடையாது. ரொம்ப நாள் கழிச்சு உன்னைப் பார்த்தேன். அன்னைக்கே ஏன் அடிக்கணும்னு தான் விட்டுட்டேன்” தான் இன்னமும் மாறவில்லை என்று தனது பேச்சின் மூலம் ஜிஷ்ணுவுக்கு உணர்த்தினாள்.

கார் ஜன்னலைத் தட்டினான் ரத்தினசாமி. கதவைத் திறந்து பார்சலை வாங்கினாள். நன்றி சொல்லிவிட்டு உள்ளே வந்து அதிலிருக்கும் உணவுப் பார்சலைப் பிரித்தாள்.

“உனக்கு ஏதாவது அறிவிருக்கா விஷ்ணு… ஏற்கனவே ஒரு தடவை ஸ்ரீவைகுண்டம் வந்தப்ப உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனேல்ல. இப்ப இந்த சாப்பாடு உனக்கு ஒத்துக்குமா? அதுனாலதான் உனக்கு வெளில சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லிருந்தேன்”

சிக்கன் பிரைட் ரைஸ், சிக்கன் கிரேவி, ஆம்லெட், சிறிய அமுல் தயிர் டப்பா ஒன்று அனைத்தையும் அவன் சாப்பிடப் பிரித்து வைத்தாள். குடிக்க கோக் ஒன்று.

“எனக்கு இங்க எது நல்ல கடைன்னு தெரியாது விஷ்ணு. அதனால ரத்தினசாமிய வாங்கிட்டு வரச் சொன்னேன். இதெல்லாம் நீ விரும்பி சாப்பிடுவேல்ல… நான் கவனிச்சுருக்கேன்…” என்றாள்.

அவன் அந்த உணவை சாப்பிட்டு விடக் கூடாதென்றுதான் வேகமாய் வந்து முழு உணவையும் தானே உண்டிருக்கிறாள். அப்போதுதான் ஜிஷ்ணுவின் புத்திக்கு உரைத்தது.

“நான் சாப்பிடக் கூடாதுன்னுதான் அந்த சாப்பாட்டை நீயே சாப்பிட்டியா?”

ஆமாம் என்று தலையாட்டினாள்.

“உனக்கு ஒத்துக்காம போயிடுச்சுன்னா…” ஜிஷ்ணு அவளிடம் கேட்டான்.

“எனக்கு நிறைய வெளி இடங்களில் சாப்பிட்டுப் பழக்கம். அதனால ஒத்துக்கும். ஏதாவது கஷ்டம்னாலும் நான் தாங்கிப்பேன். ஆனா உனக்கு ஒரு கஷ்டமும் வரதை அனுமதிக்க மாட்டேன்… ” சீரியசாய் சொன்னாள்.

அவனது சரயு பேசியதைத் திகைப்போடு கேட்டிருந்தான்.

“என் மேல உனக்கு எவ்வளவு அன்பு சரயு… இதுக்கு நான் தகுதியானவன்தானான்னு எனக்கே புரியலரா… இந்த அன்பு எனக்கு எப்போதும் வேணும் சரயு… தருவியா… ப்ளீஸ்…” கெஞ்சலாகக் கேட்டான். குழந்தையைப் போல் பாவமாய் அவன் கெஞ்சுவதைக் கேட்டு, சரயு அடக்கமாட்டாமல் சிரித்தாள்.

“எனக்கு இப்பல்லாம் க்ளோஸ் பிரெண்டே கிடையாது விஷ்ணு. இருக்குற அன்பை உனக்குத் தராம வேற யாருக்குத் தரப்போறேன்னு சொல்லு” தலையை சாய்த்தபடி கேட்ட அழகில் நெகிழ்ந்து போனான் ஜிஷ்ணு.

என்னைச் சுற்றி இன்பச் சிறை கட்டிக் கொண்டுதான்,

இன்றுவரை வாழ்ந்திருந்தேன்

சிறைச் சுவர் முட்டி மோதி பூவின் வேர்வந்து,

என்னைத் தொட ஆவி சிலிர்த்தேன்

அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா

மீண்டும் வந்தாள்

அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்

லட்சம் மின்னல் தந்தாள்

இரு கைகளாலும் அவள் கன்னங்களைத் தாங்கியவன், “இவ்வளவு நாள் எங்க போயிருந்த சரவெடி? எனக்காக பியூப்பால ஒளிஞ்சிருந்து அழகான பட்டுப் பூச்சியா மாறி வந்தியா?” என்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 7என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 7

அரவிந்தின் வாழ்க்கை முறை சற்று மாறியது. தன்னுடன் படிக்க ஒரு நல்ல துணை  கிடைத்தது பாபுவுக்கு மிகவும் திருப்தி. பாபு அலுவலகம் செல்ல அரவிந்தின் அலுவலகத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் தினமும் காலையில் அரவிந்தை அலுவலகத்தில் விட்டுவிட்டு, மாலை

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 27

அத்தியாயம் – 27 பன்னீருக்கு என்ன செய்வது என்று யோசிக்க சில வினாடிகள் தேவைப்பட்டது. கதிர் குடும்பத்தோடு திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்காக நின்றுக் கொண்டிருந்தார். சரியாக பேச முடியவில்லை.  குடும்ப விஷயத்தை தொழில் கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. அன்பான மனைவி

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 28

அத்தியாயம் – 28   மனைவியின் நடவடிக்கை எல்லாம் தனது இஷ்டப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். கஷ்டமாக இருந்தது அரவிந்துக்கு. தான் செய்த காரியம் எவ்வளவு தப்பு என்று உரைத்தது. நியூகாசிலுக்கு வேலை விஷயமாக வந்தவன்