Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 17

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 17

அன்று ஸ்ரீவைகுண்டம்

செல்வம் மாமனார் வீட்டிற்கு அலப்பறயாய் தனது புது பைக்கில் சென்றான். அவனது விஜயத்தின் முக்கியமானக் குறிக்கோள் ஒன்றுதான் ‘புது வண்டியை சரயுவிடம் காண்பிக்க வேண்டும்’.

‘சரயு தனியாத்தான் வீட்டிலிருப்பா… தனியா என்னத் தனியா… பக்கத்து வீட்டுக் கிழவி டிவி பார்த்துட்டு வெத்தலையை உரல்ல இடிச்சுக்கிட்டிருக்கும்… இவ ஆம்பிள கணக்கா சுத்தியலால ஓட்ட ஒடசலத் தட்டிக்கிட்டும், சேரை ரிப்பேர் செஞ்சிட்டுமிருப்பா. இல்லாட்டி பெரிய பொஸ்தகத்தை வச்சுட்டுப் படிப்பாளி கணக்கா மொகத்தப் பொதச்சுட்டிருப்பா.

மனுசப்பய ஒருத்தேன்… சலவை செஞ்ச சட்டப் பேண்ட்டப் போட்டுக்கிட்டு, பேர் அண்ட் லவ்லியை முகத்தில் அப்பிகிட்டு, மருக்கொழுந்து செண்ட்டை தெளிச்சுகிட்டு, வேகாத வெயில்ல தின்னவேலி சாந்தியில் ஒரு கிலோ அல்வா வாங்கிக்கிட்டு, லொங்கு லொங்கென்று ஓடி வர்றான்னா… அவனோட ஆசையைப் புரிஞ்சிக்க வேணாம்… மெசினோடப் பொழங்கிப் பொழங்கி, இந்தக் கழுதையும் மெசினாயிட்டு…

ஒரு சினிமா கெடையாது, தேட்டர் போக வேணாம்யா… வீட்டு டிவில காதல் சொட்டச் சொட்டப் படம் போடுதானே… அதையாவது பாத்துத் தொலைக்கக் கூடாது… அதுவுமில்லைன்னா கதைப் பொஸ்தகமாவது படிக்கக் கூடாது… தமிழ் கூட சரியாப் படிக்கத் தெரியாத நானே, வெள்ளைக்காரப் பொம்பளங்களப் பாக்க இங்கிலீஷ் புஸ்தகம் வாங்கல… இவளுக்கு பொழுதுபோக்கு, ஒரு இழவும் கிடையாது. இதெல்லாமிருந்திருந்தா சரசுவை வளைச்ச மாதிரி இவளையும் வளைச்சிருக்கலாம்.

மாரு முடி தெரிய சட்ட பட்டனை அவுத்துவிட்டுகிட்டு புலி நகம் போட்ட செயினு கண்ணுல படுற மாதிரி நின்னா… மொகத்தப் பாத்து… ‘மச்சான் புதுசா டிவியஸ்ல பியெரோன்னு வந்திருக்காமே… பைக் நல்லா ஓடுதா’ன்னு கேக்கா’

மனதினுள் திட்டிக் கொண்டே வந்தான். சரயுவுக்கு சம்முகத்தின் புல்லட் மேல் ஒரு கண் இருப்பது தெரியும். ‘சம்முவம் மச்சானோட பைக்கு’ என்று அவள் ஆரம்பித்தாலே அவனுக்குக் கொலைவெறி வரும்.

‘மூதி… பொம்பளையாப் பொறந்தவளுக்கு நக நட்டு மேல ஆச இருக்காது? நான் வாங்கியாந்த ரெண்டு பவுன் சங்கிலியப் பத்தி பெரும பேசாம, அந்த பனங்கருப்பட்டிப் பயலோட புகழ் பாடுதா’

இருந்தாலும் ஒரு அவுட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டே நிற்பான்.

செல்வம், பத்து வயதில் பனங்காட்டில் பீடி குடித்தான், பதினான்கு வயதில் சாராயத்தை ருசி பார்த்தான். இவற்றில் இருந்த ஆர்வம் படிப்பிலில்லை. எட்டாவது படிக்கும் போதுகூட அவனுக்கு சரியாக எழுதப்படிக்க வராது. அவனது பழக்கங்கள் தெரிய ஆரம்பிக்க ஆரம்பிக்க அவன் தந்தை விறகுக்கட்டையை எடுத்து விளாச ஆரம்பித்தார். அவனோ அதே கட்டையைப் பிடுங்கி அவர் மண்டையைப் பிளந்தான். சுருக்கமாக சொன்னால் வீட்டில் தண்ணி தெளித்து விடப்பட்ட தறுதலை.

பதினெட்டு வயதில் செல்வத்துக்குப் பெண்கள் சகவாசம் இருப்பதைப் பார்த்த அவனது தூரத்து சொந்தம் துரை, அவனைத் திருத்த எண்ணி, தனது நண்பன் நெல்லையப்பனிடம் எடுபிடியாக வேலைக்கு சேர்த்து விட்டார்.

“சொந்தக்காரப் பையன்… படிப்பு வராம பீடி பிடிச்சுகிட்டு சுத்துதான்… ஆயி அப்பன் தொரத்தி விட்டுட்டாக… ஏதோ பெரியமனசு பண்ணித் தொழில் கத்துத் தந்தேன்னா பொழச்சுப்பான்” என்று சொல்லித்தான் சேர்த்துவிட்டார்.

நெல்லையப்பனும் தனக்கு உதவியாக ஒருவன் வேண்டுமென்று நினைத்ததால் சேர்த்துக் கொண்டார். செல்வத்துக்கு சாதகமான ஒரு விஷயம், அவனது தோற்றம். நல்ல உயரம், நிறம், உழைத்து முறுக்கேறிய உடம்பு, பச்சைப் பிள்ளை போல பாவனை காட்டும் முகம். என்னதான் தகிடுதத்தம் செய்தாலும், ‘ஆதிசேஷன் கொத்த வந்தா ஆவின் பாலை வைப்பானே’ என்பது போல உலகமகா உத்தமனாய் முகத்தை வைத்துக் கொள்வான்.

வேலையில் சேர்ந்து சில வருடங்கள் சென்றதும்தான் அவனுக்குத் தன்னுடைய நிலைமை தெரிந்தது. அவனுடன் படித்த கூட்டாளிகலெல்லாம் மெத்தப் படித்து மேதாவியாக, இவனோ அவர்கள் பைக்கை ரிப்பேர் பார்க்கும் கடையில் எடுபிடியாய் இருந்தான். தனக்கும் நல்ல வாழ்க்கை வேண்டும். அழகாய் பொண்டாட்டியுடன் குடும்பம் நடத்தி இவர்களை வெறுப்பேத்த வேண்டும் என்று நினைத்தான். அதற்குத் தெரிந்த ஒரே வழி அழகழகான பெண்களைப் பெற்று வைத்திருக்கும் இளித்தவாய் முதலாளி. அவர் பெண்களில் ஒருவரைக் கட்டிக் கொண்டு அவரது வீட்டுக்கும், மெக்கானிக் ஷாப்புக்கும் உரிமை கொண்டாடத் தெளிவாகத் திட்டம் போட்டான். அதற்கு முதல் படியாக, நெல்லையப்பன் எள் என்பதற்கு முன் எண்ணையைப் பிழிந்து நீட்டினான். ஊரே அவனது வயதுக் கோளாறுகள் மறைந்து விட்டதாய் நம்பியது.

சிவகாமி இருந்தவரை அவனால் நெல்லையப்பன் வீட்டை நெருங்க முடியவில்லை. அவர் செல்வத்தை வாசல் தாண்டி நுழையவிட்டதில்லை. பெண்களில் மூத்தவள் பார்வதி எடுப்பார் கைப்பிள்ளை. குனிந்த தலை நிமிரமாட்டாள். லச்சுமி இருக்காளே, பயங்கரத் திமிரு புடுச்சவ. அப்பாவி கணக்கா மூஞ்ச வச்சுகிட்டு, ஏதாவது கேக்குற சாக்குல முன்னே போயி நின்னா… ‘அப்பாலே போ சாத்தானே’ன்னுற மாதிரி ஒரு பார்வ பாப்பா. அவளுக்குத் துட்டில்லாதவனெல்லாம் தெருநாயி… இல்லாம போனா துட்டு மட்டுமே ஒரே தகுதியா இருக்குற அந்த எரும மாட்டுப் பயலக் கல்யாணம் செஞ்சிருப்பாளா?

லச்சுமி கல்யாணத்தன்னக்கு, ஓடி ஆடி வேல செஞ்சாலும் செல்வத்துக்கு மனசே கொதிச்சது. ‘இந்தப் பேப்பயலுக்கு(பேய் பயல) நான் என்னடி கொறஞ்சு போயிட்டேன்’னு, அவ முடியப் பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டனும் போல ஆத்திரம். அப்பத்தான் ஓரக் கண்ணால தன்னப் பாக்குற சரசுவப் பாத்தான். எதுக்குமிருக்கட்டும்னு அங்கன இங்கன சரசுவப் பாக்குறப்ப லேசு பாசாப் பேசி வச்சது இப்படி சாதகமாகும்னு நெனக்கல. இப்ப வேற வழியுமில்ல… அவளத்தேன் கட்டனும். கோவத்தை மறைத்துக் கொண்டு வேலைப்பளுவைப் போல பாவனைக் காட்டினான். இரக்கப்பட்ட சரசும் யாருக்கும் தெரியாமல் அவன் கையில் காப்பித்தண்ணியைத் திணித்து விட்டுப் போனாள்.

சரசு ஒரு ஆங்காரி. கோவம் அதிகம். சின்ன வயதிலிருந்தே வீட்டில் அனைவரும் சரயுவுக்குத் தனிப் பிரியம் காண்பிப்பதாய் ஒரு எண்ணம். எல்லாவற்றையும் விட, மாநிறமாய் இருக்கும் அவளுடன் சரயுவை ஒப்பிட்டு அனைவரும் கூற, அவளது தாழ்வு மனப்பான்மை சரயு மேல் விஷ விருட்சத்தை வளர்த்திருந்தது. வீட்டிலேயே தான்தான் அழகு கம்மி, தான்தான் மக்கு என்று குன்றியவளை “நீதான் என் மகராணி. உன் வீட்டு ஆளுங்களெல்லாம் குப்பை” என்று சொல்லியே வளைத்தான். நெல்லையப்பனின் சம்மதம் கிடைக்காதென்று தூண்டி விட்டுத் திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டான். இப்போது செல்வத்துக்குக் கவலையில்லை என்றைக்கிருந்தாலும் இந்த நெல்லையப்பனின் கடையும் வீடும் தனக்குத்தான் என்ற மமதையிலே கால் தரையில் பாவாமல் நடை போட்டான்.

சரயு வயதுக்கு வந்ததறிந்ததும் சரசுவுடன் பார்க்க வந்தவன் அப்போதுதான் மலர்ந்த இளம்பூவாய் அவளைப் பாவாடை தாவணியில் பார்த்ததும் அசந்துவிட்டான்.

‘தப்பு பண்ணிடியேடா செல்வம்… இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்தா இந்தப் புதையலைக் கொள்ளையடிச்சிருக்களாமே’ என்று மனதுள் ஆதங்கப்பட்டவனின் வக்கிரமான எண்ணமறியாது அவனைப் பார்த்துக் கள்ளமில்லாமல் சிரித்தாள் சரயு.

“சரயு பெரிய பொண்ணாயிட்ட போலிருக்கு” சடையைப் பிடித்திழுத்துக் கேட்டான்.

“சடைய விடுங்க மச்சான் வலிக்குது” அவன் கையைத் தட்டி விட்டாள்.

‘வாடி என் அத்த பெத்த சீனிக்கிழங்கே… இனிமே உன்ன விடமாட்டேன்… அக்காளோட சேந்து தங்கச்சியும் வந்தா எனக்கென்ன கசக்கவா போவுது’

என்றெண்ணியவன் எண்ணம் அப்போதிலிருந்து சரயுவை மடக்குவதிலேயே ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தது. நெல்லையப்பனுக்கும் சரசுக்கும் பேச்சு வார்த்தை இல்லாமலிருந்தது அவனுக்கு வசதியாய்ப் போய்விட்டது. சரசுவுக்குத் தூபம் போட்டே அவளைத் தகப்பனுடன் பேசாமல் பார்த்துக் கொண்டான்.

ஏரலுக்குப் போய் சரயுவின் சங்குக் கழுத்துக்குப் பொருத்தமாக அவளின் பொன்நிறத்திலேயே பாம்பே கட்டிங் செயின் வாங்கினான். ‘எஸ்’ என்று அதற்குத் தோதாக ஒரு டாலர் வாங்கித் தனது கழுத்தில் அணிந்துக் கொண்டான்.

“அண்ணே இது பொம்பளைங்க செயின்” என்று சொன்ன கடைக்காரனை ஒரு முறை முறைத்தான்.

“எங்களுக்குத் தெரியாதா? போய் பில்லப் போடுலே என் வென்று” என்று எரிந்து விழுந்தான்.

வீட்டில் சங்கிலியைப் பற்றிக் கேட்ட சரசுவிடம் “கடைல வச்சுட்டுப் போய்ட்டாங்க. நான் நாளைக்குத் திரும்பத் தரணும். தொலைஞ்சுடக் கூடாதுன்னு கழுத்துலப் போட்டுக்கிட்டேன்” என்று நம்பும்படி சொன்னான். அவளும் நம்பினாள். இவள மாதிரியே அந்தச் சின்னக் கழுதையும் இருந்தா எவ்வளவு சுலபமா இருக்கும். பெருமூச்சு விட்டபடி கிளம்பினான்.

சரயு பள்ளிக்கு வரும் வழியில் நின்றுக் கொண்டான். தன் கழுத்திலிருந்த சங்கிலியைக் கழற்றி ஒரு முத்தம் கொடுத்தான். ரோட்டை நேர் பார்வை பார்த்து வந்த சரயுவைக் கையைக் காட்டி நிறுத்தினான். ஏதேதோ பேசி செயினைக் கழுத்தில் அணியவைத்து டாட்டா காட்டி அனுப்பினான்.

“‘எஸ்’ டாலர் அவளோட பேருன்னு நெனச்சு மல்லிகப்பூவாட்டம் சிரிச்சுட்டுப் போறாளே… செல்வத்தோட பேருதான் ‘எஸ்’ன்னு இவளுக்கு புத்தில உரக்கலையோ… ஏ குட்டி… இப்பத்தேன் சங்கிலியப் போட்டேன். சீக்கிரமே அந்த சங்கிலியாட்டம் உன் கழுத்துல சுத்திக்கிடுதேன்”

அவளது கழுத்தில் பாந்தமாகப் பொருந்திய சங்கிலியை நினைத்தபடியே சென்றான்.

ஆனாலும் அதற்குப் பின் அவனால் அவளை நெருங்க முடியவில்லை. தினமும் சாயந்தரம் ஒரு குண்டு டீச்சர் ஒருத்தியுடன்தான் வீட்டுக்குச் சென்றாள். ஒரு மாதம் தொடர்ந்து கண்காணித்து விட்டு கிணத்துத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகப் போகுது என்றெண்ணி அப்போதைக்கு சின்ன மான்குட்டியின் மீதிருந்த கண்பார்வையைத் தளர்த்தியது அந்த வேங்கை.

ம்முவத்தின் வண்டியை விடப் பெரிதாக வாங்க வேண்டும் என்று பணம் சேர்த்து கரிஷ்மா வாங்கினான். நெல்லையப்பன் ஓட்டப்பிடாரம் சென்றிருப்பது தெரிந்தேதான் வருகிறான். இன்றைக்கு முடிந்தால் அந்தக் குட்டியை ஒரு ரவுண்ட் அடித்து வரலாம் என்று கிளப்பிக் கூட்டிக் கொண்டு எங்காவது சென்று வரவேண்டும்.

நெல்லையப்பனின் வீட்டில் அவனை லச்சுமி வரவேற்றாள்.

“வாங்க மயனி… சொவமா இருக்கீயளா… அண்ணாச்சி சொவமா?” ஏமாற்றத்தை மறைத்தவாறே நலம் விசாரித்தான்.

“தெரிஞ்சவங்க வீட்டு விசேசத்துக்கு வந்தோம். நீங்க சொவமா இருக்கீயளா… சரசு எப்படியிருக்கா?” பதிலுக்குக் கேட்டாள்.

“நல்லாத்தானிருக்கேன்” பதில் சொன்னான்.

“அப்பா ஓட்டப்பிடாரம் போயிருக்காக. எதுனா கேக்க வந்தியளா?”

“இந்த வழியா ஒரு வேலையா வந்தேன். நடுவுல தெரிஞ்சவங்களப் பாத்தேன். மிட்டாய் பாக்கெட்டைத் தூக்கித் தந்துபுட்டாக. நாங்க என்னத்த சாப்பிட… அதுதான் சின்னக் குட்டிகிட்டத் தந்துட்டு… பத்திரமா இருக்குறாளா, சாப்பாடு கீப்பாடு வாங்கித் தரணுமான்னு கேட்டுட்டுப் போக வந்தேன்… அவளுக்குத்தேன் சுடுதண்ணி கூட விலாவத் தெரியாதே…” மாமனார் குடும்பத்தின் மேலிருக்கும் அக்கறையைக் காண்பித்தான். அவன் எதிர்பார்த்ததைப் போலவே லச்சுமியின் முகத்தில் பல்ப் எரிந்தது.

“உக்காருங்க… காப்பி கொண்டாறேன்” என்று சமையலறைக்கு சென்றாள்.

“அண்ணன் வரலையா?”

“ரூமுல தூங்கிக்கிட்டிருக்காக…” சமையலறையிலிருந்து கத்தி சொன்னாள்.

அந்த நேரத்தில் வீடு முழுசும் கண்ணாலேயே அலசி விட்டான். சரயுவைக் காணவில்லை.

“சின்னக் குட்டி வீட்டுல இல்லை…”

“அவ டோர்னமென்ட்டுன்னு சென்னைக்குப் போயிருக்கா”

பொசுக்கென்றானது செல்வத்துக்கு.

“எப்ப வர்றா…?”

“ஒரு வாரமாகும்”

பல்லைக் கடித்தான் செல்வம். ‘பொட்டக் கழுதைக்கு சமைக்கக் கத்துதராம விளையாட அனுப்புறதுல அப்படி என்ன சந்தோசமப்பா இவளுங்களுக்கு’

பின்கட்டிலிருக்கும் பாத்ரூம் சென்றான். அங்கிருந்த தண்ணியில் முகத்தைக் கழுவியவன் மேலே உயரத்திலிருக்கும் சரயுவின் மைசூர் சாண்டல் சோப்பை எடுத்துக் குழைத்து முகத்தைக் கழுவினான். வெளியே கொடியில் காசித் துண்டுகள் காய்ந்தன. திருட்டுத்தனமாய் சுற்றும் முற்றும் நோட்டம் விட்ட செல்வத்தின் கண்கள், யாருமில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டபின், கொடியின் மூலையில் காய்ந்த சரயுவின் சுடிதார் டாப்ஸை எடுத்தன. அதில் அழுத்தி முகத்தைத் துடைத்துக் கொண்டவன், ஆசையோடு ஒரு முத்தம் தந்துவிட்டுப் பெருமூச்சோடு மறுபடியும் காயப்போட்டான்.

வீட்டுக்குள் நுழைந்தவனின் காலில் காபியுடன் தூக்கி எறியப்பட்ட டம்ளர் தட்டி நின்றது.

“காப்பியாடி இது… கழனித் தண்ணியாட்டமிருக்கு” என்ற சம்முவத்தின் குரலைத் தொடர்ந்து பளாரென அறையும் சத்தமும் “ஐயோ…” என்ற லச்சுமியின் வலி தாங்கா கத்தலும் கேட்க, அப்படியே பைக்கில் ஏறி நழுவினான்.

பைக் கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது. கண்கள் சிவக்க அமர்ந்திருந்தான் சம்முகம், அவன் அறையால் உதடு கிழிந்து ரத்தம் வழிய அமர்ந்திருந்தாள் லக்ஷ்மி. அடியின் வலியைவிட சம்முவம் அடித்துவிட்டானே என்ற வலிதான் அவள் நெஞ்சில். சற்று நேரம் சென்று மனம் தாங்காமல் காப்பிப் பொடியை ரத்தம் வழியும் இடத்தில் வைத்து அழுத்தினான் அவள் கணவன்.

“மன்னிச்சுக்கோடி… புத்தி கெட்டுப் போயி அடிச்சுட்டேன்” கண்கள் கலங்க சொன்னவனிடம் சண்டை போடவா முடியும்.

“அடி வாங்கின என்னை விட அடிச்ச உனக்குத்தான் மனசு ரொம்ப வலிக்கும்னு தெரியும்… ஆனா இனிமே கொஞ்சம் பைய அடி… என் முகம் கிகம் கோணிக்கப் போகுது”

“முகம் கோணிகிட்டாலும் என் பொண்டாட்டி அம்சமாவே இருப்பா”

சிரிக்க முயன்றவள் வாய் வலித்ததால் வேதனையுடன் முகம் சுருக்கினாள். “எதுக்குய்யா என்ன அடிச்ச… உன் கோவத்தைப் பாத்து சரசு புருசன் பயந்தடிச்சுட்டு ஓடிட்டான்”

“களவாணிப்பய ஓடட்டும். இந்த அடி அவன் வாங்கிருக்க வேண்டியது” குரலில் தெரிந்த கொடூரத்தில் பயந்து போனாள் லக்ஷ்மி.

“என்னய்யா சொல்லுற?”

பேச முடியாமல் குரலடைக்க அவளது கையைப் பிடித்துக் கிணற்றடிக்கு இழுத்துச் சென்றான்.

“அந்த பொறுக்கி நாயி மொகம் கழுவிட்டுத் தொடச்சத் துணியப் பாருடி”

சரயுவின் சுடிதார் டாப்ஸின் மேல் பகுதியில் செல்வம் முகம் துடைத்திருந்த இடத்தைப் பார்த்ததும் கனல் தெரித்தது லக்ஷ்மியின் கண்களில்.

“அடப்பாவி… இவனை நம்பி வீட்டுக்குள்ள விட்டேனே… அந்த அருவாள எடுங்க நானே அவன வகுந்துடுறேன்”

“அவசரப் படாதடி… உன் ரெண்டு தங்கச்சிங்க வாழ்க்கை இதுல அடங்கிருக்கு… ரூமு இருட்டாயிருந்ததால நான் உள்ள நின்னுகிட்டிருந்ததை அவன் கவனிக்கல. இனிமே சரயுவைத் தனியா விடக்கூடாது. நீ அடிக்கடி இங்கன வந்துட்டுப் போ. சீக்கிரம் ஒரு மாப்பிள்ளையைப் பாத்துக் கல்யாணம் முடிச்சுத் தந்துடலாம்”

கண்களைத் துடைத்துக் கொண்டாள் லக்ஷ்மி. “நல்லா படிக்குற புள்ள… பேசாம நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயி படிக்க வைக்கலாமா?”

பரிதாபமாக பார்த்தான் சம்முவம். “உங்கப்பாரு உடம்பு சரியில்லடி… வாய்வுத் தொல்லன்னு அடிக்கடி சுக்குக் கசாயம் குடிக்கிராறேன்னு டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போனேன். இதயத்துல இருக்குற ரத்தக் குழாய்ல ஏதோ அடைப்பிருக்காம். மேல சோதனை பண்ண சொன்னாங்க. உங்கப்பாரு டாக்டரு சொன்னதக் காதுல வாங்காம முட்டாத்தனமா நாட்டு மருந்து வாங்கித் தின்னுகிட்டிருக்காரு. நான் அடுத்த வாரமே தின்னவேலிக்குக் கூட்டிட்டு போயி சோதனை எல்லாம் செஞ்சு கூட்டிட்டு வரேன். சரயுவுக்கு மாப்பிள்ளை பாக்கணும்னு சொன்னாரு. நான் இனிமே முழு மூச்சா இறங்க வேண்டியதுதான். அதுவரை நீ அவளைத் தனியா விடாதே”

“உனக்கு ஒரு தம்பி இருந்திருந்தா சரயுவைக் கட்டிருக்கலாம்யா”

“உந்தங்கச்சியா கட்டுவா… உன்னையே என்னை விட்டுப் பத்தடி தள்ளி நிக்கச் சொன்னவ… என் தம்பி அப்பறம் சாமியாராப் போக வேண்டியதுதான்”

வேதனையுடன் சொன்னான். “அந்த நாயி மட்டும் சரசோட புருசனா இல்லாமயிருந்தான், இந்நேரம் நம்ம செங்கல் சூளைல்ல வெந்துட்டிருந்திருப்பான்”

சரசு ஒரு பொம்பளப் பொறுக்கியிடம் மாட்டிக் கொண்டது, சரயுவின் மீது அவனது கண் விழுந்திருப்பது, நெல்லையப்பனின் உடல் நிலை இவை அனைத்தையும் நினைத்து தூக்கத்தைத் தொலைத்தனர் லக்ஷ்மியும் சம்முவமும்.

“லக்ஷ்மி… ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே”

“சொல்லு”

“எப்படியாவது சரயுவக் காப்பாத்தணும்னு ஒரு நெலம வந்தா… செல்வத்தை கொல்லுறதுக்குக் கூடத் தயங்கமாட்டேன்டி…”

கணவனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தைப் பார்த்தவள் அவனை அணைத்து ஆறுதல் படுத்தினாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 37தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 37

  காலை ஏழு மணி ஷிப்ட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு பத்து மணிக்கு இடைவேளையிருக்கும். வழக்கமாய் காலை உணவை அந்த சமயத்தில் அனைவரும் உண்ணுவார்கள். சரயுவோ சாப்பிடாமல் பக்கத்தில் போல்ட் உற்பத்தி செய்யும் பிரிவுக்குப் போய் ஆராய ஆரம்பித்து விட்டாள். அங்கு புதிதாகக்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 8என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 8

அது ஒரு பொன் மாலைப் பொழுது. இரவு உடை அணியும் முன் வான மகளின் முகம் நாணத்தால் சிவந்தது. காலையில் திருமணம் . கனவில் மிதக்காமல் அரவிந்த் யோசனையில்  இருந்தான். அவனுக்கு இன்று மிகப் பெரிய கவலை. திருமணம் செய்ய சம்மதித்ததை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

“லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான். “பிஸியா