லக்ஷ்மியின் கல்யாணம் முடிந்ததும் சரஸ்வதிக்கும் நல்ல வரன் வர அதை முடித்துவிட நெல்லையப்பன் விரும்பி ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார்.
முதலில் மாப்பிள்ளைகளை நொள்ளை நொட்டை சொல்லிய சரசு பின் ஒரு நல்ல நாளில் நெல்லையப்பனின் கடையில் வேலை செய்த செல்வத்தை ஓடிப் போய் திருட்டுத் திருமணம் செய்துகொண்டாள். மனம் உடைந்தார் நெல்லையப்பன்.
செல்வம் அவரது தொழிலுக்கு உதவியாக இருந்தாலும் அவனை அவருக்கு மனதிற்கு அவ்வளவாய் பிடிக்கவில்லை. அனைத்திற்கும் மேலாக அவன் அவர்கள் இனமும் இல்லை. அதனால் மரியாதைக் குறைவாகப் போய்விட, சொந்தக்காரர்கள் மத்தியில் துயரப்பட்டுப் போனார்.
பார்வதியின் வீட்டில் போக்கு வரத்தை நிறுத்தினார். லக்ஷ்மி மாத்திரம் அப்பா வீட்டுக்கு வந்தவள் மனம் பொறுக்காமல் சரயுவை அழைத்துக் கொண்டு திருட்டுத்தனமாய் சரசு வீட்டுக்கு சென்று வந்தாள்.
“கவலைப் படாதே. செல்வம் மச்சானை எனக்குப் பிடிச்சிருக்கு. சம்முவம் மச்சானை மாதிரி பயம்மா இல்லை. உனக்கேத்த மாதிரி உசரமா அழகாயிருக்காங்க” சரசுக்குத் தேறுதல் சொன்னாள் சரயு.
செல்வமும் சிரித்தபடியே சரயுவின் தலை முடியைப் பிடித்து இழுத்து பைவ் ஸ்டார் சாக்லெட் ஒன்றைத் தந்தான். அவனை சிறுவயதிலிருந்து பார்த்து வருவதால் சம்முகத்திடமிருக்கும் ஒதுக்கம் செல்வத்திடமில்லை சரயுவுக்கு.
“செல்வம் அப்பாருட்ட சொல்லி உன்னக் கடைக்கு முதல்ல கூப்பிட சொல்லுதேன். முதல்ல கடைக்கு வா பொறவு ஒரு புள்ள கிள்ள பொறந்தவுடனே உங்க அண்ணனை விட்டு சமாதானம் பேசச் சொல்லுதேன்” லக்ஷ்மி சொல்ல சரசு வெட்கத்துடன் தலை குனிந்தாள். செல்வம் ரகசியமாக மனைவியின் இடுப்பைக் கிள்ளினான்.
லக்ஷ்மி வெம்பாடுபட்டு செல்வத்தை மறுபடியும் கடைக்கு வேலைக்கு வர செய்தாள். இருந்தும் நெல்லையப்பனின் கோவம் குறையவில்லை. செல்வத்தை அவர் மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளவுமில்லை, சரசுவை வீட்டுப் படியேற விடுவதுமில்லை. ஆனால் செல்வத்துக்கு சம்பளத்தை மட்டும் இருவர் தாராளமாக செலவு செய்வதற்கு வசதியாக ஏற்றிக் கொடுத்தார்.
கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏன்ஜல்ஸ், ஹாலிவுட் இருக்கும் சொர்க்கலோகம். கலிபோர்னியா ஸ்டேட் யுனிவர்சிட்டி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மாஸ்டர்ஸ் டிகிரி வகுப்பில் தெனாவெட்டாய் அமர்ந்திருந்தான் ஜிஷ்ணு. அமெரிக்காவின் ஹை கேலரி உணவும், சீஸ் கலந்த காற்றும், பார்லி சிரப்பும் செய்த வேலையால் அவனுக்கு சற்று பளபளப்பு ஏறிப் போயிருந்தது. ஜிஆர்இ-யில் அவன் வாங்கியிருந்த ஸ்கோருக்கு… (நானாயிருந்தா யுனிவர்சிட்டி வாசல் கூட மிதிச்சிருக்க முடியாது) எங்கும் ஏய்ட் கிடைக்கவில்லை. இருந்தும் அதைப் பற்றிக் கவலைப்பட அவசியமில்லாமல், பீஸ் கட்டி, வீடெடுத்து தங்கவைத்து, மாதாமாதம் வீட்டிலிருந்து செலவுக்குத் தாராளமாய் பணம் அனுப்பினார்கள். ஆவக்காய் வித்த காசெல்லாம் ஜிஷ்ணு அழிப்பதற்கென்றே சிட்டி பேங்க் வழியாக வந்தது.
மெட்ராசிலேயே டிஸ்கோத்தே, பார்ட்டி என்று காதில் விழுந்தால் ஜிஷ்ணு ‘என் ஒண்ணு விட்ட ஆயா செத்துபோச்சு’ என்று கல்லூரியில் விடுமுறை சொல்லிவிட்டு ஓடிவிடுவான். இப்போது ‘செவச்செவ’யெனத் தக்காளியாய் சிவந்திருக்கும் வெள்ளைக்காரிகளின் தாராளமயமாக்கள் கொள்கையில் திணறியிருந்தான். துப்பட்டாவைக் கண்டாலே தடுமாறும் அவர்கள் குழு விட்ட ஜொள்ளு மழையில் கம்பாஸில் மாணவிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய கப்பல் விடலாமா என்று யோசித்தார்கள் நிர்வாகத்தினர்.
மாலை மங்க ஆரம்பித்த சமயத்தில் வெல்கம் பார்ட்டி நடந்தது. வைனும், விஸ்கியும் ஆறாய் பெருக்கெடுக்க, பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள் அனைவரும். லெவிஸ் ஜீன் உடுத்தி அலுத்து போய் அன்று கில்லர் ஜீன் அணிந்து வந்திருந்தான் ஜிஷ்ணு. கில்லர் ஜீன்ல நம்மளக் கொல்லுறானே என்றவாறு ஹாய் சொல்லி சென்றனர் வகுப்புப் பெண்கள்.
“எனக்கென்னமோ இவளுங்களைப் பாத்தாலே மாவு பொம்மை மாதிரி இருக்குடா. நம்ம ஊர் பொண்ணுங்கதான் அழகு, விதவிதமான சாக்லெட் ஷேட்ல, மென்மையா, தன்மையா நமக்குன்னே பொறந்தவங்க. நம்ம அழகா இருக்கோமோ இல்லையோ, தாலி கட்டிட்டா நம்மள மட்டும் வாழ்க்கை பூரா பார்த்துகிட்டு இருந்துடுவாங்க. அதுல நமக்கு ஒரு கிக்கு. இந்த ஊர் பொண்ணுங்க மேல ஆசை வருதே தவிர அன்பு வரல” நண்பர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“இன்னைக்கு லூசி வீட்டுக்குப் போறேண்டா” வெட்கமாய் சொன்னான் விநாயக்.
“ஏமிரா ஜிஷ்ணு உனக்கு எதுவும் மாட்டலையா. ஆபர் எக்கச்சக்கமா வந்ததுன்னு கேள்விப்பட்டோம். நீ ஏண்டா ரிஜெக்ட் செய்துட்ட”
“தெரியலடா… பொண்ணுங்களை சைட் அடிக்க முடியுது. ஆனால் அதுக்கு மேல போனா தப்புன்னு என் மனசுல படுது. நம்ம வைப் நம்மள மாதிரி நடந்துகிட்டா அப்படின்னு ஒரு பயம்”
“சரிடா உன்னை சுத்தி சுத்தி வருவாளே அந்தப் பச்சக் கண்ணுக்காரி, எங்கேடா?”
கைகளில் மதுக்கோப்பையுடன் வந்த அந்தப் பச்சைக் கண் டீனா, ஜிஷ்ணுவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள்.
“ஜிஷ், நீ ரொம்ப மான்லி. நீ விலகிப் போகப் போக உன் மேல எனக்கு ஆசை அதிகமாகுது. என்னை ஒரே ஒரு கிஸ் பண்ணுறியா? ப்ளீஸ்…”
ஜிஷ்ணுவுக்கு ஒரு வாரமாய் சரியாய் உறக்கமில்லை. அதுவும் இன்று காலையிலிருந்து என்னவோ அலைகலைப்பு, ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. ஆனாலும் அது இதுதானா என்று உறுதியாய் தெரியவில்லை.
“மச்சான் சான்ஸை விடாதே தூள் கிளப்பு” என்று நண்பர்கள் சத்தம் போட்டதில் அவளது முகம் நோக்கிக் குனிந்தான். ஆனால் ஆனால் அவனால் அவளை முத்தமிட முடியவில்லை.
“சாரி டீனா…” சொல்லி விலகினான். ஓங்கி அவனது முகத்தில் குத்து விட்டுவிட்டு பக்கத்திலிருந்த அவனது நண்பனை இழுத்துச் சென்றாள் டீனா.
ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கேம்ஸ் டீச்சர் ரூமிற்கு வந்தனர்.
“டீச்சர்… சரயு பெரிய பொண்ணாயிட்டா”
“உலகத்துல எட்டாவது அதிசயமா நடந்திருக்கு இப்படி கூட்டமா வந்திருக்கிங்க. எல்லாரும் கிளாஸ்க்கு போங்க”
கண் முன் நின்ற சரயுவைப் பார்த்தார். ‘இந்தத் திமிர் பிடிச்சவளா!’ மனதுக்குள் நினைத்தாலும், பையில் தயாராக வைத்திருக்கும் கேர்ப்ரீ பாக்கெட்டைப் பிரித்து அவள் கைகளில் தந்தார்.
“டீச்சர் இதை எப்படி யூஸ் பண்ணனும்னு சொல்றிங்களா. எனக்குத் தெரியாது”
பயமே அறியாமல் கேட்டவளை வியந்தபடி அதனை எப்படி உபயோகிப்பது என்று அவளுக்கு சொன்னார்.
மனோரமாவின் கடமைகளில் அதுவும் ஒன்று. அதன் பின் பெரிய மனுஷியாகும் ரெண்டும் கெட்டான் பிள்ளைகளை… பெற்றோரை வர சொல்லி ஒப்படைப்பது.
“ஒரு வாரம் செண்டு தலைக்குத் தண்ணி ஊத்தினதும் அனுப்புங்க. அதுக்கு மேல கண்டிப்பா லீவ் கிடையாது”
அவர்கள் வருவதற்கு முன்பு பயந்து போயிருக்கும் பெண் குழந்தைகளை மனதளவில் தயார் படுத்துவதும் அவர் மனமுவந்து செய்யும் வேலைகளில் ஒன்று. சரயுவிடமும் அப்படித்தான் சொன்னார்.
“இங்க பாருடி. பொம்பளைங்க பூமில உண்டானதில இருந்து காலம் காலமா நடக்குறதுதான் இது. இதைக் கண்டு பயப்படவோ, அழவோ கூடாது. மாசா மாசம் ரத்தப்போக்கு எற்படுறதால நல்லா இரும்பு சத்துள்ள கீரை, பேரிச்சம்பழம்னு சாப்பிடணும். சோர்வைப் போக்க சத்தான பழங்கள், பால் சாப்பிடணும். மாதவிலக்கு… பெண்ணுக்கு ஏற்படுற அசௌகரியமே தவிர வேதனையில்லை. புரிஞ்சதா”
புரிஞ்சது என்று தலையாட்டினாள் சரயு.
“உனக்கு சொல்றதை விட உங்க அம்மாக்களுக்குத் தான் முக்கியமா சொல்லணும். இல்ல தினமும் புளிசாதமும் தயிர்சாதமும் மட்டும் தந்தே உங்க ஆரோக்யத்தை பாழாக்கிடுவாங்க. சரி உங்க வீட்டு போன் நம்பர் சொல்லு”
“வீட்டுக்கு போன் பண்ண வேண்டாம் டீச்சர்”
“ஏண்டி… உங்க அம்மா முன்னாடியே ஏன் சொல்லலைன்னு என்னை ஏசுறதுக்கா?”
“அம்மா செத்து போயிருச்சு டீச்சர். அப்பா ஊருக்குப் போயிருக்காக. வர ரெண்டு நாளாகும். பக்கத்து வீட்டு அவ்வாதான் காலைல சாப்பாடு தந்தாங்க. மத்யானம் சாப்பிட பிஸ்கட் வச்சிருக்கேன். ஸ்டெல்லாவும் எனக்குன்னு ரெண்டு சப்பாத்தி கொண்டு வந்திருக்கா. ரவைக்கு அவ்வா வீட்ல சாப்ட்டுட்டு அங்கேயே படுத்துக்கிடுவேன்”
வயதுக்கு வருவது இயல்பான சமாச்சாரம் என்ற தொனியில் மனோரமா சொன்னால், அதே தொனியில் அம்மா செத்துப் போனதை சொல்கிறாள். அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. முதன்முறையாய் கனிவாய் சொன்னார்.
“சொன்னாக் கேளு சரயு. வீட்டுக்குப் போய்த் தூங்கு. உனக்கு சோர்வா இருக்கும்டி. முதல் தடவ வரும்போது வயிறு வலி அதிகமா இருக்கும்”
ஒரு வாரமாய் ஹார்மோன்களின் வேலையால் சரயுவுக்குமே சரியாய்த் தூக்கமில்லை.
“வயிறு வலிக்குதுதான் டீச்சர். ஆனா வீட்டுக்குப் போகல. அம்மா செத்ததுல இருந்து தனியா வீட்ல இருந்தா அவங்க நினைவே வருது டீச்சர். அழுகையா வருது. எனக்கு அழப் பிடிக்காது. உங்களுக்கு சரின்னா அந்த ஷெல்ப் ஓரமா இருக்குற பாய்ல படுத்துத் தூங்கட்டுமா? மத்யானம் கிளாஸ் போயிடுறேன்”
“நில்லுடி”
சரயுவை வெளியில் உட்கார வைத்துவிட்டு, அறையைக் கூட்டினார். புது சாக்கினை விரித்து, அதன் மேல் அவர்கள் உட்கார வைத்திருந்த போர்வையை விரித்தார்.
“காலேல என்ன சாப்பிட்ட?”
“இட்லி”
“எத்தன?”
“ரெண்டு”
“ரெண்டா? பெரிய பிள்ளயாயிட்ட இனிமே காலைல நாலு இட்லி சாப்பிடணும். வீட்ல சமைக்க முடியலைன்னாலும் பழங்கள் நிறையா சாப்பிடணும். சரியா”
தலையாட்டினாள்.
“இப்ப என்னோட சாப்பாட்டை சாப்பிடு, வயத்து வலி. பொறுக்குற அளவு இருந்தா தாங்கிக்கோ. ரொம்ப இருந்தா மாத்திரை தரேன் போட்டுட்டு நல்லா படுத்துத் தூங்கு”
“நான் சாப்பிட்டுட்டா… உங்களுக்கு மத்யானம் சாப்பாடு டீச்சர்”
“அதைப் பத்தி நான் கவலைப் பட்டுக்குறேன். நீ உன் வேலையப் பாரு”
சாப்பாட்டை மறுக்காமல் சாப்பிட்டுவிட்டுப் படுத்துத் தூங்கினாள்.
அவள் தூங்கியதும் கணவரை அழைத்தார் மனோரமா. போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் கணவர் அன்று காலைதான் இரவுப் பணி முடிந்து வந்திருந்தார். இனி மறுநாள் இரவு சென்றால் போதும்.
“என்னங்க மதியம் சாப்பாடு வேணுமே”
“என்ன வேணும்னு சொல்லு”
“பிரிட்ஜ்ல பருப்பு வச்சிருக்கேன். அதை தாளிச்சு அதுல ஏதாவது கீரையை நறுக்கிப் போட்டுருங்க. அப்பறம் நிறையா வெங்காயம், பச்ச மொளகா அரிஞ்சு நீங்க செய்யற ஸ்பெஷல் ஆம்ப்லேட். சாதம் மட்டும் சூடா வடிச்சு ஹாட்பாக்ல போட்டுக்கோங்க. ஆவின் நெய் நூறு கிராம் பாட்டில் ஒண்ணு. அப்பறம் அங்கனயே மைசூர்பா இருந்தா காக்கிலோ வாங்கிடுங்க. அப்பறம் உங்களால முடிஞ்சா உளுந்தங்களி செஞ்சு கொண்டாறிங்களா…”
“எதுக்குடி இத்தனை வக.. அதுவும் ஸ்வீட் கேக்குற… உனக்குத் தவறிப் போய் நல்லாசிரியர் விருது தந்துட்டாய்ங்களா? அப்படி எதுவும் தந்துட்டாலும் உன் ஸ்கூல் பிள்ளைகளே புடுங்கச் சொல்லி அரசாங்கத்துக்கு மொட்ட கடுதாசி எழுதுவாங்களே. போற ஸ்கூல்லலெல்லாம் அவ்வளவு நல்ல பேருல்ல வாங்கிருக்க”
“அடப் போங்க இவளுங்களுக்கு கண்ணே மணியேன்னு கொஞ்சினா கேக்குற வயசுமில்ல. நல்லத சொன்னா புரிஞ்சுக்குற பக்குவமுமில்ல. அதனால கொஞ்சம் கடுபிடியாத்தேன் நடக்கணும். இதனால கெட்ட பேர் வந்துட்டா வரட்டும் போங்க”
தூங்கிக் கொண்டிருந்த சரயுவைப் பார்த்தபடி அவளைப் பற்றி சுருக்கமாய் சொன்னார். அதன் பின் உளுந்தங்களி செய்யும் முறையையும் சொன்னார்.
மதியம் டேவிடே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிட்டார்.
“சாப்புடாத்தா… முதல்ல கொஞ்சம் இனிப்பு சாப்புடு”
“இம்புட்டுடோண்டு சாப்பிடுறயே… அதுதான் குச்சாட்டமிருக்க. நல்லா அள்ளி வாய்ல வைம்மா…” என்று சொன்ன அந்த மதுரைக்கார டேவிட் மாமாவைப் பார்த்ததும் தந்தையின் நினைவு வர, கூடவே தாயின் நினைவும் ஒட்டிக் கொண்டு வந்தது. மௌனமாய் சாப்பாட்டைக் கைகளால் அளைந்தாள் சரயு.
“ஏய்… என்னடி அங்க சோத்துல விளையாட்டு… அஞ்சு நிமிஷத்துல உன் தட்டு காலியாகணும்…” மனோரமாவின் அதட்டல் குரல் கேட்டதும் உணவை அள்ளி வாயில் வைத்தாள்.
டேவிட் சென்று விட, புது உடையை சரயுவிடம் தந்தார் மனோரமா.
புது நாப்கின் பாக்கெட்டையும், இரவு உணவாய் ஒரு டிபன் பொட்டலத்தையும் அவளது பையில் வைத்தார்.
“சாப்பாடே போதும் டீச்சர். ஸ்வீட் பாக்கெட் வேற வாங்கித் தந்திருக்கிங்க. புது ட்ரெஸ்செல்லாம் வேண்டாம்” மறுத்தாள்.
“இந்த டிரஸ் இனிமே போட்டுக்கக் கூடாது. இதுக்கு பதிலா வேற யூனிபார்ம் வாங்கிக்கலாம். வீட்டுக்குப் போனதும் தலைக்குத் தண்ணி ஊத்தி நல்லா காய வச்சுட்டு, இந்தப் புது ட்ரெஸ் போட்டுக்குற. நல்லா சாமி கும்பிட்டுட்டு அவ்வா கூட படுத்துக்குற. உங்கப்பா ஊர்ல இருந்து வந்ததும் துணிக்குப் பணம் வாங்கிக்கிறேன்”
மனோரமா அன்று விளையாட்டு வகுப்பை சற்று தொலைவில் நடத்தி சரயுவுக்கு தொல்லை ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.
நடுவில் கனவில் அம்மாவை நினைத்து முகம் சுருங்கியவளை மென்மையாக ஒரு கரம் நீவி விட்டது. அதன் சுகத்தில், ஜன்னல் வழியே அறைக்குள் வீசிய வேப்பமரக் காற்றில் நன்றாகத் தூங்கினாள் சரயு.
“இவ என்ன இம்புட்டு அழகாயிருக்கா. இனிமே இந்த அழகு கூடுமே! சமஞ்ச பொண்ணுங்களுக்கு வார தொல்லைங்கலெல்லாம் சாரி சாரியா வருமே. வயசுக்கு வந்த பொண்ணுக்கு அம்மாதேன் வேலி. வேலியில்லா தோட்டமா இந்த அழகு பொண்ண விட்டுட்டு போயிட்டியே ஆத்தா” மனதுள் இதுவரை பார்த்ததேயில்லாத சரயுவின் அம்மாவிடம் ஆதங்கப்பட்டார் மனோரமா.
Very emotional epi