Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 9

ன்னடா ஜிஷ்ணு… இப்படி வந்து படுத்துகிட்ட” அங்கலாய்த்தபடி வந்தான் வெங்கடேஷ்.

நெல்லையப்பன் சீவித் தந்திருந்த இளநியை… வாயால் வண்டி ஓட்டியபடி வந்த அணுகுண்டும் சரயுவும் நண்பர்கள் இருவருக்கும் தந்தார்கள்.

“என்னமோ நான் ஆசைப்பட்டு வந்து ஹாஸ்பிட்டல்ல படுத்துட்ட மாதிரி சொல்லற” இளநியை அருந்தியவாறே பதிலளித்தான்.

“சரக்கு ஓவராயிடுச்சா…” நைசாய் கேட்டான் வெங்கி.

“ஒரே… என்மேல ஏமி அனுமானம்டா நீக்கு” சலித்துக் கொண்டான்.

“சும்மாவா சந்தேகப்படுறேன்… உன் ட்ராக் ரெகார்ட் அப்படிடா”

“விஷ்ணு ட்ராக் ரெகார்ட்னா என்ன?” சரயு தான் அங்கிருப்பதை நண்பர்களுக்கு நினைவு படுத்தினாள்.

“அதுவா சரயு… இப்ப உன்னைப் பாத்து உன் ஸ்கூலே நடுங்குதுல்ல. அதுக்குப் பேர்தான் ட்ராக் ரெகார்ட்” தெளிவு படுத்தினான் ஜிஷ்ணு.

புரிந்தது என்று தலையாட்டினாள்.

“நான் ஊருல இல்லாதப்ப என்ன அதிசயம்டா நடந்தது? சரவெடி சரயுவும், ஜித்தன் ஜிஷ்ணுவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டிங்க”

சிரித்தான் ஜிஷ்ணு. திருதிரு துறுதுறு சரயுவை ஜிஷ்ணுவுக்கு மிகவும் பிடித்து விட்டது.

“உன் பேர் விஷ்ணு இல்லையா… ஜிஷ்ணுவா… இதென்ன பேர்! நான் கேள்விப்பட்டதேயில்லை” கண்களை விரித்து வியந்தபடி கேட்டாள் சரயு.

“விஷ்ணு பெருமாள் பெயர். ஜிஷ்ணு அர்ஜுனன் பெயர். எனக்கு பொருத்தமா இருக்கட்டும்னு வச்சாங்க போலிருக்கு” சிரித்தபடி சொன்னான்.

“அப்ப நீயும் கர்ணன் மேல வில்லு விடுவியா?”

“உன் மாமா கர்ணன் மேல வில்லு விடமாட்டான். ஆனா பொண்ணுங்க கூட சக்கரப் பொங்கல் வைப்பான்”

“ஓ… நீ சமைப்பியா? எனக்கும் சக்கரப் பொங்கல் செஞ்சுத்தறியா?” புரியாமல் கேட்டாள் சரயு. நண்பனைக் கிள்ளி வாயை மூடச் சொன்னான் ஜிஷ்ணு.

“நான் கொஞ்சம் கெட்டவன்தான் அம்மாயி. ஆனா உனக்கு மட்டும் இந்த விஷ்ணு ரொம்ப நல்லவன். உன் பிரெண்ட் போதுமா?” என்றான்.

வெங்கடேஷ் இரவு தங்கிக் கொள்வதாய் சொல்லிவிட்டதால் சரயுவின் வீட்டில் கிளம்பி விட்டார்கள். தனியாக இருக்கும்போது வெங்கடேஷிடம் விண்ணப்பம் போட்டான் ஜிஷ்ணு.

“வெங்கடேஷ்… சரயு வீட்டுல நிறைய செலவு செஞ்சிருக்காங்க. எவ்வளவுன்னு கேட்டு சொல்லுடா தந்துடுறேன்”

“மறந்துடு… வாங்க மாட்டாங்க”

“அஞ்சாயிரமாவது செலவாயிருக்கும். கூடப் போட்டுக் கொடுத்தா அவங்களுக்கும் உதவியா இருக்குமில்ல”

‘அவங்கம்மாவ மாதிரியே பணத்தை வெச்சே எல்லாரையும் எடை போடுறான்’ என்று கடுப்பானான் வெங்கடேஷ்.

“அவங்க பணத்துக்காகத் தான் இதெல்லாம் செஞ்சாங்கன்னு நினைக்கிறியா?”

“ச்சே அப்படி இல்லைடா… இருந்தாலும்…”

“சரயு அப்பாவுக்கு சொந்தமான மெக்கானிக் ஷாப்பே பல லட்சம் பெறும். தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலி இந்த பாதைல மெயின் ரோட்ல இருக்கு. சொந்த வீடு, தோட்டம், நிலம் எல்லாமிருக்கு. அவங்க வீட்டுத் தேவைக்குன்னே ரெண்டு மாடு, கோழிங்க வளக்குறாங்க. ஆனாலும் பங்களாக்குக் குடிபோகாம அவங்க பரம்பரை வீட்டுலதான் இருக்காங்க. அவங்க கைல த்ரோ அவே மணி இல்லை. சோ… ஆடம்பர வாழ்க்கையை வாழல. அதனால அவங்களைப் பிச்சைக்காரங்கன்னு நினைச்சுடாதே. அவங்க எளிமையை ஏழ்மைன்னு தப்பா எடை போட்டுடாதே”

“கடன் வாங்கின மாதிரி இருக்கேடா. அவங்க அக்கா கல்யாணத்துக்கு வேணும்னா ப்ரெசென்ட் தந்துடலாம்” தீர்வு கண்டான்.

ஆனாலும் பிறிதொரு நாளில் செய்ய வேண்டியிருந்ததால் ஜிஷ்ணுவால் சரயுவின் பெற்றோருக்கு அந்தக் கடனைத் திருப்பித் தர முடியாமலேயே போயிற்று.

வெங்கடேஷின் வீட்டில் ஊருக்கு வர தாமதமானதால், நண்பர்களுக்கு உணவு தரும் பொறுப்பு சரயுவின் குடும்பத்தின் வேலையாயிற்று.

“எங்கம்மா நல்லா சமைப்பாங்க விஷ்ணு மாமா. ஆனா அவங்களுக்கு உப்புமா மட்டும்தான் சமைக்கத்தெரியும்” என்று சொல்லி சிவகாமியிடம் முறைப்பைப் பெற்றுக் கொண்டாள். ஏதோ தப்பு செய்ததை உணர்ந்து,

“இல்ல… கருப்பட்டி காப்பி கூட தினமும் போடுவாங்க” என்று அம்மாவை சமாதானப்படுத்தினாள்.

சிரித்த ஜிஷ்ணு, “எனக்கு உப்புமா ரொம்ப பிடிக்கும் ஆன்ட்டி. எங்க ஊர்ல பாசிப்பருப்பு தோசை செஞ்சு அதுக்கு நடுவுல ரவா உப்புமா வச்சு தருவாங்க. அதுக்கு பெசரெட்டுன்னு பேரு. சுப்பரா இருக்கும். அதுக்கு தொட்டுக்க இஞ்சி சட்னி செய்வாங்க”

“ஐய… தோசைக்கு நடுவுல உப்புமாவா? உங்க ஊருக்கு நான் வரமாட்டேன்பா” என்றாள் சரயு.

“வரமாட்டியா… உன் கை காலைக் கட்டி என் வீட்டுக்குத் தூக்கிட்டு போய்… மூணு வேளையும் உப்புமாதான் தரப்போறேன். ஆமாவா ஆன்ட்டி”

“தாராளமா தூக்கிட்டுப் போங்க தம்பி…” அனுமதி அளித்த தாயை முறைத்தாள்.

விஷ்ணு தனது விடுமுறை முடிந்து ஊருக்குக் கிளம்பிவிட்டான். நட்பை ஒரு விளையாட்டாகவே பார்க்கும் அவனுக்கு இந்த முறை சின்னஞ் சிறுவர்களின் நட்பைப் பிரிந்து செல்வது கடினமாகவே இருந்தது.

“பாவம் விஷ்ணு நீ… அன்னைக்கு மயக்கம் போட்டப்ப டிராயர் போட்டிருந்தல்ல. உனக்கு உங்க வீட்டுல கைலி வாங்கித் தரலையா? இந்தா வச்சுக்கோ. எங்கப்பா கூட போனப்ப உனக்கு சங்கு மார்க் கைலி வாங்கிட்டு வந்தோம்”

பெர்முடாஸ் அணியும் பழக்கம் அவர்கள் ஊர் பக்கத்தில் யாருக்கும் இல்லாததால் விஷ்ணு அணிந்திருந்தது டிராயராகிப் போனது.

கண்கள் நீர் பனிக்க அந்தக் கைலியைப் பெற்றுக் கொண்டான். அவனுக்கு எவ்வளவோ விலை உயர்ந்த பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவன் பெற்றதிலேயே மிக விலைமதிப்புள்ளது இதுவாகத்தான் இருக்க முடியும். ஊருக்குக் கிளம்பியவன் இருவரையும் அணைத்துக் கொண்டான்.

மூன்று கடலை மிட்டாய்களை மட்டுமே வைத்திருந்த சரயு ஒன்றை வெங்கடேஷுக்கும் மற்றொன்றை அணுகுண்டுக்கும் தந்தாள். மிச்சம் இருந்ததைக் காக்காய் கடி கடித்து ஜிஷ்ணுவுடன் பகிர்ந்து கொண்டாள். ஜிஷ்ணுவும் அதனை வேறுபாடு பார்க்காமல் வாங்கி உண்டான். வெங்கடேஷுக்கு ஒரே ஆச்சரியம். ‘எப்படி இருந்த ஜிஷ்ணு இப்படி மாறிட்டான். ஸ்பூன், போர்க் வைத்து நாசுக்காய் சாப்பிடுபவன், ஒரு சிறு பெண் காக்காய் கடி கடித்துத் தரும் கடலை மிட்டாயை மறுக்காமல் வாங்கி உண்கிறான்’ நண்பனைப் புதிதாய் பார்த்தான்.

“நீங்க ரெண்டு பேரும் என் வயசா இருந்திருந்தா உங்களைக் கையோட கூட்டிட்டு போயிருப்பேன்” வருத்தப்பட்டான் ஜிஷ்ணு.

பாசத்துக்கு ஏங்கிப் போயிருக்கும் ஜிஷ்ணுவுக்கு சரவெடியும் அணுகுண்டும் அவர்கள் அறியாமலேயே அதனை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.

“ஆமாம்… அதுவும் சரவெடி… உனக்கு மட்டும் எங்க வயசா இருந்திருந்தா ஜிஷ்ணு இந்த ஊர விட்டே போயிருக்க மாட்டான். மாப்பிள்ளையாட்டம் உங்க வீட்லயே டேரா போட்டிருப்பான்”

“சீ… தப்பா பேசாதடா” வெங்கடேஷைத் திட்டினான் ஜிஷ்ணு.

“உண்மையை சொல்லு மாப்பு” வெங்கடேஷ் சீண்டிவிட, ஜிஷ்ணு யோசித்தான்.

“சான்ஸ் இருக்குடா” என்றான் விளையாட்டாய்.

“விஷ்ணு… வெங்கடேஷ் அண்ணன் வேணும்னா ஊருக்குப் போகட்டும். நீ இங்கேயே இரு. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு” விவரம் புரியாமல் சொன்னாள் சரயு.

“எனக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சு போச்சு. உன்னைப் பார்க்குறதுக்கே லீவ் விடுறப்ப கண்டிப்பா வரேன் சரவெடி”. எவ்வளவு தூரம் பலிக்கப் போகிறது என்று அறியவில்லை என்றாலும் மனதார சொன்னான்.

அவர்களுக்கு தனது பரிசுகளைத் தந்தான். பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு ஓட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இரண்டு புத்தம் புது பளபள ஹீரோ சைக்கிள்கள் வாங்கித் தந்திருந்தான்.

“போன ஸ்கூல் ஃபங்ஷன்ல லிப்ஸ்டிக்குக்கு பதிலா சிகப்பு ஸ்கெட்ச் பென்சில் போட்டுட்டேன்னு சொன்னிங்களே. இனிமே இந்த மேக்அப் செட்ல இருக்குற லிப்ஸ்டிக் போட்டுட்டு அழகா போட்டோ எடுத்து மாமாவுக்கு அனுப்பணும். சரியா”

“சரி… எந்த மாமா விஷ்ணு…”

“கதையை கெடுத்தியே சரயு… இந்த விஷ்ணு மாமனுக்குத்தான்”

“எப்படி அனுப்புறது”

“வெங்கடேஷ் கிட்ட தந்தா அவன் கம்ப்யூட்டர்ல அனுப்பிடுவான். ஓகேயா”

ஊரை விட்டு ஜிஷ்ணு செல்லும்போது, ஆண்டு விழாவில் கௌபாய் வேஷம் கட்டி, தட்டுத் தொப்பி அணிந்து, தீபாவளி துப்பாக்கியுடன் அவனது சரவெடியும், அணுகுண்டும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் அவனுடனேயே பயணித்தது.

காலை அணிவகுப்பில் நீராடுங்கடலுடுத்த நிலமடந்தையைப் போற்றி, ஜெயஹே என்று நாட்டுப்பண்னுடன் முடித்த மாணவிகளைக் கடுமையாக முறைத்தவாரே நின்றிருந்தார் மனோரமா, அந்தப் பெண்கள் பள்ளியின் கேம்ஸ் டீச்சர்.

மனோரமா என்றால் அந்தப் பள்ளி மாணவிகளுக்கு சிம்ம சொப்பனம்தான். “வரிசையா போங்கடி” அடித் தொண்டையில் கத்துவது சிங்கம் உருமியதைப் போலவே கேட்டது மாணவியருக்கு.

லேட்டாய் வந்தவர்களை முட்டி போட வைத்து, மைதானத்தில் குப்பை போட்ட ஒழுங்கீனங்களைப் பிரம்பால் செல்லமாய் அடித்து ஏகப்பட்ட வேலைகள் செய்து பின் பதினோரு மணிக்கு மைதானத்தில் ரௌண்ட்ஸ் வந்தார். நடந்து சென்று கொண்டிருந்த மாணவிகள் கூட்டத்தை அழைத்தார்.

“கிளாஸ் நடக்குறப்ப கூட்டமா எங்கடி கிளம்பிட்டிங்க?”

“பாத்ரூம்… டீச்சர்”

“அதுக்குத் தனியா போக மாட்டியளோ! ஒரு கூட்டமா சேந்து எருமைங்களாட்டம் அசஞ்சுத்தான் போவியளோ! இண்டர்வல் விட்டப்ப என்னடி செஞ்சுட்டிருந்திங்க?”

பதில் சொல்லாமல் தலை குனிந்தனர்.

“போன பீரியட் யாருது”

“கலைச்செல்வி டீச்சரோடது”

கணக்கு டீச்சர் கலைச்செல்வி பரிச்சைக்கு சிலபசை முடிக்க வேண்டியிருந்ததால் இன்டெர்வலயும் சேர்த்து பாடம் எடுத்தார். ஒரே நாளில் திரிகோணமிதியை மாணவிகளின் மண்டைக்குள் திணித்துவிடும் கட்டாயம் அவருக்கு. ஒவ்வொரு சூத்திரமாய் கற்றுத் தந்து அதை அவர்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டபின் அடுத்த படிக்கு செல்லவேண்டும். அதற்கு அவருக்கு நேரமில்லை. கிளார்க்குகளை உருவாக்கும் நம் தேசத்தில் மார்க்குக்கு தரும் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் பதிய வைக்கவும் தந்தால் இன்னும் பல அப்துல்கலாம்களும் சகுந்தலாதேவிகளும் உருவாகலாம்.

“நாளைக்கு இந்த பத்து ஃபார்முலாவையும் நெட்டுரு பண்ணிட்டு வாங்கடி” என்று சொல்லி சென்று விட்டார்.

கலைச்செல்வி… என்று சொன்னதும் மனோரமா புரிந்து கொண்டார். ‘இன்டெர்வல் கூட விடாம ரம்பம் போட்டிருப்பா… பாத்ரூம் போயிட்டு வார பத்து நிமிஷத்துலதான் இவளுங்க படிச்சு ஸ்டேட் ரேங்க் வரப்போறாளுங்களாக்கும்’

“பள்ளிக்கூடத்துக்குள்ள இப்படி எங்க போனாலும் நாலு பேத்தைக் கூட்டம் சேர்த்துட்டுப் போகப் பழகாதிங்க. இப்ப பாத்ரூம் போயிட்டு கிளாசுக்கு ஓடுங்க”

குடு குடுவென ஓடினார்கள்.

“இந்தம்மா வீட்டுல எப்படிடி பேசும்… தப்பு செஞ்சா பிரம்பால அடிக்குமோ.. பாவம் இவங்க வீட்டு சார்” மெதுவாய் பேசி களுக்கினார்கள்.

ஓடியவர்களைப் பார்த்தவர், “ஏய் யாருடி துப்பட்டா இல்லாம போறது… இங்க வா… உன் பேர் என்னடி?”

தாமதித்தவள், “சரயு”

“சரயுவா? பேரெல்லாம் ஒனக்கையாத்தான் இருக்கு? சுடிதாருக்கு மேல துப்பட்டா போடாம ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல”

தலை குனிந்தாள்.

“துப்பட்டா எங்கடி?”

“தொலஞ்சுடுச்சு டீச்சர்”

“கையை நீட்டு” பிரம்பால் சுளீரென அடி ஒன்றை வைத்தவர், “நாளைக்கு உன் கிளாஸ்க்கு வந்து பாப்பேன் துப்பட்டா போட்டிருக்கல தொலஞ்ச”

மிரட்டி விட்டுக் கிளம்பினார்.

ழாம் வகுப்பு மாணவிகள் ப்ளாக்கில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் மனோரமா. அமைதியான அந்த இடத்தில் திடீரென சளார் சளாரென புத்தகங்களைத் தூக்கி எறியும் சத்தம். முதல் மாடிப் படிக்கட்டில் இருந்து எட்டிப் பார்த்தவர், கீழே கிரௌண்டிலிருந்து புத்தகங்கள் காரிடரின் மூலையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியில் விழுவதைக் கண்டு பிடித்தார். காலியாய் இருந்த அறையினுள் நைஸாக ஒளிந்து கொண்டார்.

சற்று நேரத்தில் முதல் மாடியிலிருந்து ஓடி வந்த ஏழாம் வகுப்பு சி பிரிவு மாணவியர், “வழக்கம் போல கரெக்டா போட்டுட்டாடி. எப்படித்தான் முடியுதோ…” மெச்சியபடி குப்பைக் கூடையிலிருந்த புத்தகங்களை எடுத்துச் சென்றனர்.

“ஏய் இங்க வாங்கடி…” எதிர்பாராத நேரத்தில் மனோரமாவின் கர்ச்சனையைக் கேட்டு மயக்கமே வந்துவிட்டது அவர்களுக்கு.

“என்னங்கடி நடக்குது இங்க…”

“இங்கிலீஷ் புத்தகம் கொண்டு வர மறந்துட்டோம் டீச்சர். அதனால ஏழு எ செக்சன் பிள்ளைங்க கிளாஸ் முடிஞ்சதும் அவங்க புஸ்தகத்த இங்க வச்சுட்டு போக சொன்னோம். நாங்க இந்த வகுப்பு முடிஞ்சதும் அவங்களுக்குத் திருப்பித் தந்துடுவோம்”

“கீழ இருக்குற எ செக்சன் பிள்ளைக… புத்தகத்த உங்களுக்கு எப்படித் தந்தாங்க. யாரும் மாடிக்கு வரலையே”

கேள்விக்கு பதிலாக குப்பைத் தொட்டியில் இப்போது கணக்குப் புத்தகங்கள் விழ ஆரம்பித்தன.

“டி செக்க்ஷனுக்கு அடுத்த பீரியட் கணக்கு” மனோரமாவின் பார்வைக்கு பதில் சொன்னாள் ஒருத்தி.

“அட கூட்டுக் களவாணிகளா… புஸ்தகம் எடுத்துட்டு வர சோம்பேறித்தனப் பட்டுட்டு இப்படித்தான் திருட்டு வேல பண்ணுறிங்களா?”

எட்டி தூக்கிப் போடுவது யார் என்று பார்த்தார்.

கீழே நின்றுக் கொண்டிருந்த சரயு, தோழிகள் இருவரிடம் புத்தகங்களை வாங்கி சட சடவென மாடிக்கு அசராமல் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தாள். அவள் போட்ட பதினைந்து புத்தகங்களில் நான்கு சரியாக கூடையில் விழுந்தது. மூன்று ஜஸ்ட் மிஸ். ஆச்சரியத்துடன் குறித்துக் கொண்டவர்,

“ஏய் சரயு மாடிக்கு வாடி…” ஓங்கி ஒரு சத்தம் போட்டார்.

“நீ போய் பதினொன்னு பி செக்சன் செங்கமலத்த நான் கூப்பிட்டேன்னு கூட்டிட்டு வா”

சரயு உள்ளூர சற்று பயந்துக் கொண்டேதான் வந்தாள். ‘பத்து அடி அடிச்சாக் கூட பரவால்ல… தாங்கிக்கலாம்… அப்பாவக் கூப்பிட்டுட்டா… ஏற்கனவே சரசக்கா ப்ரைவேட்டா படிக்க சொல்லி தகராறு பண்ணிட்டிருக்கா. ஸ்கூல விட்டு நிறுத்திட்டா… இருக்குற ஒரே சந்தோஷமும் போய்டுமே…’

‘செத்தா சரயு’ பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்ற பிள்ளைகள்.

“செங்கமலம் இவள இன்னைக்கு சாயந்தரம் நடக்குற பாஸ்கட்பால் டீம் செலக்க்ஷனுக்குக் கூட்டிட்டு வந்துடு. இந்தாடி சரயு… பெல் அடிச்சதும் வீட்டுக்கு ஓடிடாத… சாயந்தரம் மட்டும் நீ கிரௌண்ட்ல இல்ல… தொலைச்சுடுவேன் தொலைச்சு”

மாலை சரயுவின் வகுப்புத் தோழிகள் சிலரும் கிரௌண்ட்டில் ஆஜராகியிருந்தனர். வழக்கமாய் எட்டாம் வகுப்பிலிருந்துதான் விளையாட்டுத் தேர்வு ஆரம்பமாகும். சரயுதான் முதன் முதலில் ஏழாம் வகுப்பிலேயே தேர்வு செய்யப் படப் போகிறாள். தன்னையே செலக்ட் செய்ததைப் போல ஒரே சந்தோசம் அவர்களுக்கு.

எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஓட்டப் பந்தயம் மற்றும் பல சிறு தேர்வுகளை வைத்து டீம் செலக்ட் செய்தார். ஹாக்கி, கபடி அணிகளைத் தேர்வு செய்துவிட்டு பாஸ்கெட்பால் அணிக்கு வந்தார். படிக்கும் காலத்தில் மாநில அளவிலான பாஸ்கெட்பால் அணிக்கு விளையாடியவர் மனோரமா. அதனால் கூடைப்பந்தென்றால் தனி காதல் அவருக்கு.

தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை இரண்டு அணிகளாய்ப் பிரித்து. சரயு என்ற ஒருத்தியை அழைத்ததைப் பற்றி நினைவே இல்லாமல் அவர்களுக்கு விளையாட்டு சொல்லித் தந்துக் கொண்டிருந்தார் மனோரமா.

“இருக்குறதுலயே உயரமா இருக்குறவ வா. நீ தான் சென்டர். டீம்ல குள்ளமா இருக்குறவங்க கார்ட்ஸ். நடுவாந்தரமா இருக்குறவங்க பார்வர்ட்.

பாலை இங்கேருந்து கூடைல போட்டா மூணு பாயிண்ட். ஆனா அங்கேருந்து தூக்கிப் போட்டா ரெண்டு பாயிண்ட்தான்.

சர்வர் டிபன் தட்ட தூக்கிட்டு வார மாதிரி பாஸ்கட் பால கைல பிடிக்காதே. உள்ளங்கைய குவிச்சு, விரல்ல மட்டும் இப்படி பிடிக்கணும். அப்பறம் கண்ணு லெவெலுக்கு பந்தைக் கொண்டுவந்து கூடைல தூக்கி பூப் போடுறமாதிரி போடணும். அதுக்கு பேர்தான் ஷூட்டிங். உன் கையை உயர்த்துற அதே நேரம் உன் குதிக்காலும் உயரணும். இல்ல… பந்து கூடைல விழாது… உன் தலைலதான் விழும்”

சொல்லித் தந்துவிட்டு மரத்தடிக்கு வந்தவரிடம் கேட்டாள் சரயு.

“டீச்சர் என்னை என்னவா போட்டிருக்கிங்க?”

கேள்வியுடன் பார்த்தார்.

“பார்வர்ட், சென்டர், கார்ட் அப்படினெல்லாம் சொன்னிங்களே. நான் இதுல யாரு?”

“முதல்ல தினமும் சாயந்தரம் தவறாம வந்து… பந்து பொறுக்கிப் போடுறது, ஸ்கோர் எழுதுறது, இதெல்லாம் செஞ்சுக் கிழி… அப்பறம் மெதுவா டீம்ல சேரலாம்” நக்கலாய் சொன்ன மனோரமாவை, மனதில் எழுந்த கொலைவெறியை அடக்கிக் கொண்டு பார்த்தாள் சரயு.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’

அத்தியாயம் – 15 அன்று காலையில் நந்தனா எழும்முன்பே ப்ரித்வி கிளம்பிவிட்டிருந்தான். அவன் அதிகாலை கிளம்ப வேண்டியிருந்தால் அவனே எழுந்து கதவை பூட்டிவிட்டு செல்வான். நந்தனா மெதுவாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள். காலை யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 29

சரயு நெல்லையப்பனின் கட்டிலுக்குக் கீழேயிருந்த பெட்பானை எடுத்து வெளியே சென்றாள். தனது தகப்பனுக்கே தாயான தோழியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் சேர்மக்கனி. தந்தை படுக்கையில் விழுந்ததிலிருந்து சரயுதான் எல்லா வேலையும். கையை சுட்டுக் காலை சுட்டு சமைக்கக் கற்றுக் கொண்டாள்.

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 9

அத்தியாயம் – 9  கடற்கரையில் இருந்து வீட்டிற்குத் திரும்பிய அரவிந்தின் மனதில் இன்னமும் அதிகக் குழப்பமே நீடித்தது. யாரும் இல்லாத தீவிற்கு ஸ்ராவநியுடன் சென்று விடலாமா என்ற விரக்தி தோன்றியது. யோசனையுடன் ஆட்டோவில் அமர்ந்திருந்த அரவிந்தை தொந்தரவு செய்யாமல் வந்தார் கதிர்.