Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 8

ரவு படுத்திருந்த பாயிலிருந்து உருண்டு அறையின் சுவரோரமாய் சுருண்டு தூங்கிக் கொண்டிருந்த சரயுவை ரசித்தார் சிவகாமி.

‘நம்ம பக்கத்துல யாரும் இம்புட்டு அழகில்ல. பொங்கலுக்குப் பறிச்ச பச்ச மஞ்சளாட்டம் ஒரு நெறம். சின்னதா மல்லிகப்பூ மொக்காட்டம் மூக்கு. வசதியிருந்தா இந்த மூக்குக்கு குட்டி வைர மூக்குத்தி போட்டு அழகு பாக்கலாம். உதட்டப் பாரு நல்லா பழுத்த அத்திப்பழ நிறத்துல. இந்தக் கழுத கல்யாண வயசுல மீனாட்சியாட்டமிருப்பா. இவளுக்கேத்த சொக்கநாதன் எங்க பொறந்திருக்கானோ… எப்படி வளந்திருக்கானோ… ‘

மகளின் அழகை வியந்த அதே நேரத்தில் அவருக்கு பயமும் பிடித்துக் கொண்டது.

‘வயசு காலத்துல இவளை பத்திரமா பாதுகாக்கல… ஓநாய் கும்பலுக்கு நடுவுல ஆட்டுக்குட்டியை விட்டாபில ஆயிடுமே!’

“என்ன சிவாமி… சின்னக் குட்டிய வெறிச்சுட்டு கெடக்க? தூங்குற புள்ளைய அந்தப் பார்வ பாக்காத… கண்ணு பட்டுறப் போவுது” தெருமுனையில் திருட்டுபீடி குடித்துவிட்டு கடுங்காப்பிக்காக வீட்டுக்குள் நுழைந்த நெல்லையப்பன் மனைவியைக் கடிந்தார்.

“நம்ம சாதி சனத்துல இம்புட்டு அழகி இல்லய்யா… மூக்கும் முழியுமா மகாராணிதான் போ. ஆனா கூறு கெட்ட சிறுக்கியாயிருக்கா. நேத்தெல்லாம் வெங்கடேசு தம்பி கூட்டாளியோட சேர்ந்து இவளும் அந்த ராசுப்பயலும் மழைல சுத்திருக்காங்க”

“தப்பா சொல்லாத சிவாமி. அந்தத் தம்பி நல்ல மாதிரி. வெங்கிட்டு பங்காளிங்க வீட்டு துஷ்டிக்கு மார்த்தாண்டம் போயிருக்கான். அதனால பொழுது போகாம இதுங்க கூட பேசிட்டு இருந்திருக்கும்” ஜிஷ்ணுவுக்கு சான்றிதழ் வழங்கினார் நெல்லை.

மணியைப் பார்த்த சிவகாமி, அவ்வளவு நேரம் இருந்த கனிவு மாறி, “எந்திரிடி ஸ்கூலுக்கு நேரமாச்சு” குரலில் வலிய கடுமையை வரவழைத்தவாறு சரயுவை எழுப்பினார்.

பத்து நிமிடம் போராடியபின்,

“செத்த நேரம் தூங்க விட்றாத… அப்பா நீ வேற நல்ல அம்மாவா கல்யாணம் பண்ணிக்கோ…” அலுத்துக் கொண்டே பின்வாசலில் இருந்த கிணத்தடிக்கு சென்றாள் சரயு. இந்தியா, இலங்கை, மலேயா நாடுகளில் புகழ்பெற்ற கோபால் பல்பொடியால் பல்லை விளக்கியபடி கோழிகளை விரட்டி கிணற்றை சுற்றி சுற்றி விளையாடினாள்.

சற்று தள்ளி சுடுநீர் பானை அடுப்பு கணன்று கொண்டிருந்தது. கிணத்தடியிலிருந்த துவைக்கும் கல்லில் அமர்ந்து கொண்டார் நெல்லையப்பன். பல்லை விளக்கிவிட்டு ஓட்டமாக ஓடி வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டாள் சரயு. சின்ன குட்டி அசந்த சமயம் காதோரம் செருகியிருந்த கணேஷ் பீடியை அவளுக்குத் தெரியாமல் வேட்டியின் மடிப்பில் சுற்றிக் கொண்டார் நெல்லை.

வெந்நீர் தவலையைப் பக்கமாக ஒதுக்கி வைத்து விட்டு, சரசு எடுத்து வந்த காய்ந்த வரட்டியில் சீமெண்ணெய் ஊற்றி அடுப்பில் பத்த வைத்து, எறியும் அடுப்பில் சிறிது சுள்ளிகளையும் போட்டு, காப்பி போடும் போணியில் காபித்தண்ணிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார் சிவகாமி.

இரண்டாவது மகள் லக்ஷ்மியிடம் முதல் நாள் மழையில் கீழே விழுந்திருந்த முருங்கைக் கொப்பை ஒடித்து, மதிய சமையலுக்கு அதன் இலைகளை ஆய்ந்து வைக்க சொன்னார். மூத்த மகள் பார்வதியை அழைத்து காப்பிக்கு கருப்பட்டியை உடைத்துத் தர சொன்னார். அவளும் சிறு அம்மிக் குழவியை வைத்து கருப்பட்டியைப் பொடித்து கொதிக்கும் நீரில் கொட்டினாள்.

நீர் நன்கு கொதித்தவுடன் இரண்டு கை காப்பிப் பொடியை அள்ளி வெந்நீரில் கொட்டினார் சிவகாமி. கருப்பட்டியும் காப்பித்தூளும் கலந்து ஒரு வித்தியாசமான நறுமணத்தை எழுப்பியது. தள புளவென கொதித்துப் பொங்கி வந்த காப்பியை வாயால் ஊதி அமர்த்தியபடி கரித்துணியால் பாத்திரத்தின் விளிம்பைப் பற்றி வாகாக சுழற்றினார். மேலும் இரண்டு முறை அவ்வாறு செய்தார். ஒரு பெரிய பாத்திரத்தில் வேஷ்டியில் கிழித்த துணியைப் போர்த்தி காப்பி வடிகட்ட எடுத்து வைத்த பார்வதி, கையோடு அனைவரும் குடிப்பதற்கு டம்ளரும், சரயுவின் பூ டிசைன் டம்ளரையும் எடுத்து வைத்தாள். அனைவருக்கும் கடுங்காப்பியை ஊற்றியவர் சரயுவின் காப்பியில் மட்டும் சிறிது பாலை ஊற்றித் தந்தார்.

காலையில் காப்பி சாப்பிடும் நேரம் அந்தக் குடும்பத்துக்கே மிகவும் முக்கியமான நேரம். அனைவரும் அமர்ந்து ருசித்துக் குடிப்பார்கள். மாலை டீ நெல்லையப்பன் கடையில் குடித்துக் கொள்வார். சரயுவோ பள்ளி முடிந்ததும் புழுதியில் புரண்டு விட்டு இருள் கவிழத்தான் வீட்டுக்கு வருவாள். அதனால் காலை நேரம் அனைவரும் பேசிக்கொள்ள தோதாக தேர்ந்தெடுத்தார்கள்.

காலைக் குளிரில் கருப்பட்டியும் காபித்தூளும் தொண்டையில் அமிர்தமாய் இறங்கியது. நெல்லையப்பன்… தனது அழகு மகள்களையும், அவர்களைப் பெற்றுத் தந்த சீமாட்டியையும் கண்களில் நிறைத்தவாறே ஒவ்வொரு மிடறாக விழுங்கினார்.

“மாப்பிள்ளை வீட்டுல கூடுதலா ஒரு பைக் கேக்குறாங்க. பணத்துக்கு என்ன செய்யன்னு தெரியல. பேசாம செகண்ட் ஹாண்ட் பைக் வாங்கித் தந்துடலாமா?” குடும்பத்தினரிடம் கேட்டார்.

“சரிவராது… அப்பறம் பைக்ல பிரச்சனை வரும்போதெல்லாம் நம்மைத்தான் ஏசுவாக. அதுக்கு பதிலா மூணு பவுன் சேர்த்து போட்டுடலாம்”

“பணம்…” யோசித்தார் நெல்லையப்பன்.

“பைக் வாங்கணும்னா கடந்தான் வாங்கணும். அதுக்கு பதிலா இப்போதைக்கு என்னோட அட்டியலப் போட்டுடலாம். ஆனா இப்படி அவங்க யோசிச்சு யோசிச்சு கேக்கக் கூடாதுன்னு கட்டன்ரைட்டா முன்னமே சொல்லிடனும். நமக்கு இன்னும் மூணு பொண்ணுங்க இருக்குல்ல… மூத்தவளுக்கே எல்லாத்தையும் செய்ய முடியுமா?” தீர்ப்பு சொன்னார் சிவகாமி.

“இன்னைக்கு தோட்டத்துல பூச்சி மருந்தடிக்க ஆளு வர்றாங்க. நான் போயிட்டு பொழுது சாயத்தான் வருவேன். பார்வதி சமைச்சுடு. லச்சுமி மெஷின்ல முறுக்கு மாவு அரைச்சு வச்சுடு. சரசு தையல் கிளாஸ்க்கு போயிட்டு வரப்ப சின்னகுட்டிக்கு பாவாடைத்துணி வாங்கிட்டு வந்துடு. நான் சாயந்தரம் வீட்டுக்கு வரப்ப சரயு வீட்டுல இல்ல… அவளுக்கு ராத்திரிக்கு சோறு கிடையாது” அவர் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தார்.

“எம்மா… இந்த சேவல் காலங்காத்தால காதுகிட்ட வந்து கூவுதும்மா. கோழியாச்சும் முட்டை போடும். சேவலுக்குத் தீனி வச்சு என்ன ப்ரோசனம்? நீ முருகர் சாமி கும்புடுறதால இதைக் குழம்பும் வைக்க மாட்ட… பேசாம அடிச்சு பத்திவிட்டுடுமா” சரயுவும் குடும்பப் பொருளாதாரம் செம்மையடைய அவளாலான யோசனையை சொன்னாள்.

தமக்கைகள் நமுட்டுச் சிரிப்பை மறைத்துக் கொண்டு எழுந்து செல்ல, கடைக்குட்டி மகளை முறைத்த சிவகாமி, “அரக்கிளாஸ் காப்பிய அரமணி நேரமா குடிக்க. ஒழுங்கா குடிச்சுட்டு பள்ளிக்கூடத்துக்குக் கெளம்புடி”

பக்கத்திலிருந்த புது லைப்பாய் சோப்பை கையில் கொடுத்தார்.

“சந்தன சோப்பு வாங்கித்தாம்மா”

“நீ மண்ணுல பொரண்டுட்டு வார்ற அழகுக்கு குளிக்க உப்பு சோப்புத்தேன் தரணும். தரவா…”

‘அம்மாடி… உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ வேண்டாம் என்று வேகமாய் மறுத்துத் தலையசைத்தாள்.

வழக்கமாய் அவள் குளிக்கப் போகும் முன் சொல்வதை சொன்னார் சிவகாமி, “முதுகுக்கு நல்லா சோப்பு போட்டுத் தேச்சுக் குளிக்குற. பராக்குப் பாத்துட்டு காக்கா குளியல் குளிச்சுட்டு வந்த…”

“ஒத விழும்” முடித்தாள் சரயு.

ள்ளியில் முன்பு வேலை பார்த்து ஓய்வு பெற்ற சங்கரலிங்கம் வாத்தியார் இயற்கை எய்தியதால் பள்ளி விடுமுறை அறிவித்து விட, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டாற்போல் சீருடை அணிந்த செல்வங்கள் சிதறி ஓடின.

“இன்னைக்கு இங்கிலீஷ் கட்டுரை படிக்கல. பத்மா டீச்சர் முட்டி போட வைக்கப் போறாங்கன்னு பயந்துட்டே இருந்தேன். தப்பிச்சுட்டேன்” சிரித்தான் அணுகுண்டு.

மாந்தோப்பில் நடந்தவர்கள், “வாடா… விஷ்ணுவப் பாக்கலாம்”. முதல் நாள் பெய்த மழையில் ஈரமாயிருந்த மண்ணில் செருப்பு பட்டு நாலாபுறமும் சேறு தெறிக்க, புது நண்பனின் வீட்டுக்கு ஓடினார்கள்.

கதவைத் தட்டத் தட்ட யாருமே திறக்கவில்லை.

“விஷ்ணு வீட்டுல இல்லைன்னு நெனைக்கிறேன்”

“கார் இருக்குடா. இன்னும் எந்திரிக்கல போலிருக்கு”

வீட்டை சுற்றி சுற்றி வந்தார்கள். ஏதோ முனகல் கேட்டது.

“அணுகுண்டு என்னவோ சத்தம் கேக்குது. மேல கதவு திறந்திருக்குடா” பால்கனி கதவைப் பார்த்து சொன்னாள்.

மாந்தோப்பிலிருந்த ஏணியை இழுத்து வந்து பால்கனி அருகே போட்டார்கள். ஏணியில் தாவி ஏறினாள் சரயு.

முதல் நாள் சாப்பிட்ட பாமாயில் பஜ்ஜி வாந்தியையும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்த, அத்துடன் மழையில் நனைந்தது காய்ச்சலையும் பரிசாகத் தந்திருக்க, உடம்பில் சத்தெல்லாம் வடிந்து மயங்கிக் கிடந்தான் ஜிஷ்ணு.

மாடியிலிருந்து கீழே கத்தினாள். “விஷ்ணு மயங்கி கிடக்காண்டா. எனக்கு பயம்மா இருக்கு. எங்கப்பாட்ட சொல்லி அவரக் கூட்டிட்டு வா”

அணுகுண்டின் மூலமாக விஷயத்தைக் கேள்விப்பட்ட நெல்லையப்பன் டாக்டரைக் கையோடு அழைத்து வந்தார். சரயு நாற்காலியில் ஏறி வாயில்கதவில் போட்டிருந்த கெண்டியைத் திறந்துவிட, மருத்துவர் ஜிஷ்ணுவைப் பரிச்சித்துப் பார்த்தார்.

“நீர்சத்து சேர க்ளுகோஸ் ஏத்தணும். ஆஸ்பத்திரில கொண்டு வந்து சேர்த்துருங்க”

ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து அவர் சொல்படியே மருத்துவமனையில் சேர்த்தனர்.

“வாந்தியும் வயத்துப்போக்கும் நிக்க மருந்து தாரேன். வேளை தவறாம தாங்க. ஒரு நா பாத்துட்டு ஆரோ ரூட் பவுடர் வாங்கி கஞ்சி காய்ச்சித்தாங்க. ரெண்டு நா செண்டதும் புழுங்கல் அரிசி கஞ்சி வச்சுத்தாங்க”

ரு நாள் கழித்து கண்களைத் திறந்த ஜிஷ்ணுவின் கண்ணெதிரே… மஞ்சள் பூசிக் குளித்த முகத்தில் மூக்குத்தி மின்ன, முகத்தில் சிவப்பு நிலவாய் ஒளிர் விட்ட குங்குமத்துடன் நின்ற அந்த அம்மாவைக் கண்டவுடன், ‘காந்திமதித் தாயார்தான் நேரில் வந்ததோ!!!’ என்று திகைத்துப் போய் பார்த்தான்.

பிளாஸ்கில் இருந்த சுடுநீரை ஆற்றிக் கொண்டிருந்தார் அவர்.

“அம்மா விஷ்ணு முழிச்சாச்சு” சாத்துக்குடியை ஜூஸ் போட்டுக் கொண்டிருந்த சரயு கத்தினாள்.

“கத்தாதடி” அதட்டியவர்,

“இப்ப தேவலாமா தம்பி?” கனிவுடன் வினவினார்.

“தேங்க்ஸ் ஆன்ட்டி. நீங்க சரயு அம்மாவா? உங்களுக்கு ரொம்ப தொந்தரவு தந்துட்டேன் சாரி”

“இதுல என்ன தொந்தரவு தம்பி? வெளிய சாப்பிட்டது ஒத்துக்கிடல போலிருக்கு. எனக்கு தெரிஞ்சிருந்தா வீட்டுல சமைச்சுத் தந்திருப்பேன். ஒண்ணும் சாப்பிடாம வயிறு காஞ்சுக் கிடக்கே! புழுங்கல் அரிசி கஞ்சி தாரேன். குடிக்கியலா?”

வேண்டாம் என மறுத்துவிட்டு சுடுதண்ணி வாங்கி குடித்தான். சரயு, பாதி சாத்துக்குடி பிழிந்த பின் மீதியில் உப்புமிளகாய் தூளைத் தூவி நக்கிக் கொண்டிருந்தாள். ஜிஷ்ணு திரும்பிப் பார்க்கவும்,

“உனக்கு வேணுமா? ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்” என்று ஆசை காட்டினாள்.

நீயே சாப்பிடு என்று கையால் ஜாடை காட்டியவன், “என்ன சரவெடி… ஸ்கூல் போகல?” வினவினான்.

“விஷ்ணு அதுதான் எங்க ஸ்கூல்… ஜன்னல் வழியா உன்னப் பார்த்தேனே…” ஜன்னல் வழியே அந்த சிறு பள்ளியைக் காண்பித்தாள்.

நங்கென்று தலையில் கொட்டினார் சிவகாமி. “மரியாத தெரியாத கழுதை. பேர சொல்லியா கூப்பிடுறது?”

முகத்தை சுழித்தவள் வலி போக அழுத்தித் தலையைத் தடவிக் கொண்டே, “விஷ்ணு மா…மா… அதுதான் எங்க ஸ்கூல். போதுமா?” என்றாள் கடுப்புடன்.

சிவகாமி கவனிக்காதபோது அவன் காதருகே குனிந்தவள், “விஷ்ணு எங்கம்மா முன்னாடிதான் உன்ன மாமான்னு கூப்பிடுறேன்… இல்லேன்னா அம்மா கொட்டி கொட்டியே என் மண்டையை உடைச்சுடும்” கிசுகிசுத்தாள்.

“சரி… நீ விஷ்ணுன்னே என்னைக் கூப்பிடு. அதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு” பதிலுக்கு சரயுவின் காதில் ரகசியம் பேசினான் ஜிஷ்ணு.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 3

அத்தியாயம் – 3 “அப்பா, சரயு ஆன்ட்டிய முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” சந்தனா சந்தோஷத்தில் கூவினாள். “சரயு, சிறு வயதிலிருந்தே என் மனதிற்கு நெருக்கமான தோழி. அப்படித்தானே சரயு” என்றான். ஆமாம் என ஆமோதித்தாள் சரயு. “நேரமாகிவிட்டதே. வீட்டில கணவர்…?” என

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 33

அத்தியாயம் -33 “அப்பா…..  வேலவா! ஷண்முகா! பன்னிரு கண்களில் ஒரு கண்ணால் கூடவா அந்தக் குழந்தையைப் பார்க்கல. உனக்கு பன்னெண்டு காது இருந்தும் அந்தப் பச்சிளங் குரல் கேட்காத அளவுக்கு செவிடாய் போச்சா?”,   ஊரில் இருந்து திரும்பி இருந்த நான்சியிடம்

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 3

அத்தியாயம் – 3 நாதனும்  கதிரும் விடியும் முன்பே  கிளம்பி ஏர்போர்ட் வந்திருந்ததால் இப்போது அவர்களுக்குத் தூக்கம் கண்ணை சுழட்ட ஆரம்பிக்க, காரிலே உறங்க ஆரம்பித்திருந்தனர். அரவிந்துக்குத் தூக்கம் கலைந்திருந்ததால் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.  கடற்கரை ரோட்டில் கார்