Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 7

றக்காமல் பன்னிரண்டு மணிக்கு ஜிஷ்ணுவை அழைத்தாள் சரயு.

“சொல்லு ஜிஷ்ணு”

“இன்னைக்கு நீ சொன்ன இடத்துல சைட் சீயிங் டூர் ஒண்ணு ஏற்பாடு செஞ்சுருக்கேன். மத்தபடி ஆட்டோமொபைல் சம்மந்தமான இடத்தைப் பாக்க நீயும் வந்தா நல்லாயிருக்கும் சரயு. உன்னால முடியும்னா வரப்பாரேன்”

“வீக் எண்ட் ஒகேயா?”

“இல்ல சரயு, பின்னியும் சந்துவும் என் பிரெண்ட் ரமணா பாமிலி கூடப் போறாங்க”

“வீக் டேஸ்ன்னா நான் லீவ் எடுக்கணும்”

“கட்டாயமில்ல சரயு. முடிஞ்சா வா. இல்லைன்னா டின்னராவது எங்க கூட ஜாயின் பண்ணப் பாரேன்”

“டின்னர் வரேன். லீவ்க்கு எனக்கு காம்ப் ஆப் பத்து நாள் வச்சிருக்கேன். ஆனா அதை சிண்டு, ராம் ஊர்ல இருந்து வந்ததும் எடுக்கலாம்னு இருந்தேன். இப்ப ஷார்ட் நோட்டிஸ்ல எடுக்கணும்னா கொஞ்சம் கஷ்டம். நான் இன்னைக்கு சாயந்தரம் பதில் சொல்லட்டுமா?”

“தாராளமா. ஆனா நைட் சாப்பாடு எங்க கூடத்தான் சாப்பிடுற” உத்தரவு போல் சொல்லி வைத்தான். அவன் மனது கட்டவிழ்த்து அணுகுண்டுவையும் சரயுவையும் நண்பர்களாக்கிய நாளில் மீண்டும் சென்று நின்றது.

காரினை அவர்கள் முன்பு அமர்ந்திருந்த மரத்தடியிலேயே நிறுத்தினான் ஜிஷ்ணு. மேகம் வழக்கத்துக்கு மாறாய் கருத்திருந்தது.

“மழ வரப் போது மக்கா” என தவளைகள் சத்தமிட்டுக் குதித்தன.

சோலி குலுக்கினாற்போல் நண்பர்களின் சிரிப்பு சத்தமே எங்கும் ஒலித்தது. அவர்கள் சந்தோஷத்துக்கு உச்சமாய் வந்தது ஒரு குரல்.

“அங்கன யாருடா?” உள்ளூர் ஆள் ஒருவர் பக்கத்தில் வந்தார்.

ஜிஷ்ணுவைப் பார்த்ததும் மரியாதை கூடியது. “வெங்கிட்டு வீட்டு விருந்தாளிதானே… அவன் வர ரெண்டு நாளாகுமா. உங்ககிட்ட சொல்லச் சொன்னான். அதச் சொல்லத்தேன் வந்தேன்” ஒப்பித்தவர் அணுகுண்டைப் பார்த்து,

“சீமத்தொரயோட கூத்தியா மவன்தானே நீ… வானம் திரளுது வீட்டுக்கு ஓடுறா” சொல்லிவிட்டு தனது வண்டியில் ஏறிப் பறந்தான்.

வானத்தை நிமிர்ந்து பார்த்த ஜிஷ்ணு, “ஆமா மழை வர மாதிரி இருக்கு. வீட்டுக்குப் போங்க” என்றான்.

பதில் சத்தமே வராதிருக்கவும் தனது புது நண்பர்களைப் பார்க்க, கண்கள் கலங்க நின்றிருந்தான் அணுகுண்டு.

“உன்னாலதாண்டி நான் இந்த ஊர்ல கஷ்டப்படுறேன்… எனக்கு யாரையும் பாக்கவே பிடிக்கல… எங்கம்மா, அப்பா, வாத்தியார், பள்ளிக்கூடம் எல்லாத்தையும் விட்டுட்டு செத்துப் போறேன் போ…”

சரயுவின் கைகளை தட்டிவிட்டு கிணற்றுப் படிக்கட்டுக்கு ஓடினான்.

பின்தொடர முயன்ற ஜிஷ்ணுவைத் தடுத்தவள், “நில்லு விஷ்ணு அவன் கொஞ்ச நேரத்துல சரியாயிடுவான்”

“என்ன ஆச்சு சரவெடி?”

“அணுகுண்டோட அம்மா, அவங்கப்பாவுக்கு ரெண்டாவது பொண்டாட்டி. அத சொல்லி ஊர்ல எல்லாரும் அவனக் கிண்டல் பண்ணுவாங்க. அவனுக்கு அது பிடிக்காது. கோவம் வரும்.

ரெண்டு வருசம் முன்னே அவன் கை நல்லாருக்கும். முத்து முத்தா எழுதுவான். ரொம்ப நல்லாப் படிப்பான். ஆனா ஒரு நா பொடி டப்பி வாத்தியார் இவங்க அம்மாவப் பத்தி தப்பா சொல்லவும் கல்லைக் கொண்டு வாத்தியார அடிச்சுட்டு ஊர விட்டு ஓடிப் போய்ட்டான். அப்பறம் மதுரைல ப்ரோட்டா கடைல வேல பார்த்துட்டு இருந்தவன எங்கப்பாதான் கண்டுபிடிச்சு கூடியாந்தாரு.

அந்தக் கடைல வேலைபாத்தப்ப முதலாளி அடிச்சதுல அவன் கை வளஞ்சுடுச்சு. நாங்களும் நெறைய டாக்டர்ட்ட கூட்டிட்டு போனோம். ஆனா சரி பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

அணுகுண்டோட அப்பா வாத்தியார நல்லா ஏசுனாக. அதுலேருந்து பொடிடப்பி… மாமாவுக்கு பயந்துட்டு அவன ஒண்ணும் பேசுறதில்ல. ஆனா வேணும்னே நிறைய எழுதுற வேலை தருவாரு. பாவமில்ல அணுகுண்டு… அவனால எப்படி நிறைய எழுத முடியும்? அவனுக்குக் கை வலிக்குமில்ல… அதுனால நான் அவன் கையெழுத்துல எழுதித் தருவேன். ஆனா எழுதி முடிச்சதும் எனக்கே கை வலிக்கும் தெரியுமா?” அவர்கள் பாசப் பிணைப்பைப் பற்றி விளக்கினாள்.

பிறந்ததிலிருந்து கஷ்டத்தைக் கண்ணால் கண்டிராத ஜிஷ்ணுவுக்கு வாழ்க்கையின் கொடுமையான பக்கத்தை அணுகுண்டின் கதை உணர்த்தியது. வேலைக்கு சிறுவனை எடுத்ததுமின்றி, அடித்து அவன் கையையும் உடைக்கும் முதலாளி வர்க்கத்தின் மேல் முதல் முறையாக வெறுப்பு வந்தது.

வேண்டுமென்றே அவனுக்கு அதிகம் எழுத்துவேலை தரும் கொடூர குணம் கொண்ட வாத்தியாரின் மேல் மேலும் கோவம் வந்தது.

“வாத்தியாரை எப்படி சும்மா விட்டிங்க?”

“போன வாரம் அவங்க வீட்டுல மெஷினுக்கு சீயக்காத்தூள் அரைக்க கொடுத்துட்டு போனாக. நான் மொளகாப் பொடி அரைக்குறதுல அள்ளிப் போட்டு அரைச்சு மூடி வச்சுட்டேன்” சொல்லி விட்டுக் களுக்கிச் சிரித்தாள்.

அணுகுண்டின் கோவத்தையும் ஆத்திரத்தையும் நல்ல வழியில் திருப்பிவிட்டால் போதும் முன்னேறிவிடுவான் என்று நினைத்துக்கொண்டான்.

ற்று நேரம் சென்றதும் தூறல் வெள்ளிக் கம்பியாய் விழ ஆரம்பிக்க, ஜிஷ்ணுவும் சரயுவும் அணுகுண்டு அமர்ந்திருந்த கிணற்றுப் படிகளில் அமர்ந்தார்கள். பளிங்கு நீரில் நீச்சலடித்த ஆமையை வேடிக்கை பார்த்தபடியே மூவரும் இருந்தார்கள். தண்ணிப் பாம்பு ஒன்று ஓட, சரயு அதனை நோக்கிக் கல்லெறிந்தாள்.

“யே பெசாசு… அது மேல கல்லெறியாத… நல்ல பாம்பா இருந்தா கொத்தாம விடாது” அமைதியைக் கைவிட்டான் அணுகுண்டு.

“நீ செத்து போறேன்னு சொன்னல்ல… செத்தவுடனே யார் கூட விளையாடுவ? பாம்பு கொத்துச்சுன்னா நானும் செத்து உன் கூட விளையாடுவேன்ல” அணுகுண்டின் முகம் பார்க்காமல் இறுக்கமான குரலில் சொன்னாள் சரயு.

குரலிலே மனதின் வருத்தத்தைக் காண்பிக்க முடியுமா? சரயு காண்பித்தாள். அதிர்ந்து போய் பார்த்தான் ஜிஷ்ணு.

“சத்தியமா செத்து போக மாட்டேண்டி. நான் இனிமே அப்படி சொல்லல. நீயும் சொல்லாத” வளைந்த வலக்கரத்தால் சரயுவின் கரத்திலடித்து சத்தியம் செய்தான் அணுகுண்டு.

‘எவ்வளவோ நண்பர்கள் நமக்கும்தான் இருக்கிறார்கள்? எனக்குத் தோள் கொடுக்க இதைப் போல் தோழி இருக்கிறாளா? இல்லை நாமும்தான் இந்த அளவு நண்பர்களுக்கு உண்மையாக இருந்திருக்கிறோமா?’ தனக்குள் கேள்வி கேட்டவாறே அவர்களின் நட்பைப் பார்த்து வியந்து நின்றான் ஜிஷ்ணு. பொழுதுபோக்காக அவர்களுடன் நட்பினை ஏற்படுத்திக் கொண்டவன், அந்த நொடியில் அவர்கள் நண்பர் வட்டத்தில் தானும் ஒரு ஆள் என்று பெருமையாக உணர்ந்தான்.

மழையை ரசித்தபடி நின்றிருந்தவர்களுக்கு நீரில் கப்பல் விட ஆசை வந்தது. பைண்ட்டிங்கின் கடைசி காக்கி பக்கங்களைக் கிழித்து கப்பல் செய்து விட்டனர் அணுகுண்டும் சரவெடியும். மழை மேலும் வலுக்க இருவரும் நனைவதையும் பொருட்படுத்தாது மழையில் குதித்து விளையாடினர். அவர்களுடன் சேர்ந்து ஜிஷ்ணுவும் மழையில் நனைந்தான். நனைந்தபடியே மூவரும் கண்மாய்க்கு அருகே வந்துவிட கண்மாயில் நீர் பெருக்கெடுத்து ஜிஷ்ணுவின் மனதைப் போலவே சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

“சரவெடி பேப்பர் தீர்ந்துடுச்சுடி”

கவலையாக சொல்ல,

“இருங்க வந்துட்டேன்” என்று சொல்லி ஓடோடி வந்த ஜிஷ்ணுவின் கைகளில் கம்ப்யூட்டர் நெட்வொர்க்ஸ் புத்தகம்.

“இதுல கப்பல் செய்யுங்க”

விழிகளை விரித்து வியந்தவர்கள், “நிஜம்மாவா? புதுசா இருக்கு. கிழிச்சா உங்கம்மா அடிக்க மாட்டாங்களா?” அக்கறையாகக் கேட்டான் அணுகுண்டு.

சற்று முன்பு தோன்றிய கவலை மறந்து புதிதாக அவர்கள் முகத்தில் தோன்றியிருக்கும் சந்தோஷத்தைத் தவிர வேறொன்றும் பெரிதாகத் தெரியவில்லை ஜிஷ்ணுவுக்கு.

“நான் சொல்லிக்கிறேன் யூ கேரி ஆன்”

ஆசையுடன் பார்த்த சரயு, “வேணும்னா புத்தகம் தொலஞ்சுருச்சுன்னு சொல்லிடு” களவாணித்தனத்தைக் கற்றுக் கொடுத்தாள்.

“சரவெடி வேண்டாண்டி அப்பறம் விஷ்ணுவுக்குத் தான் அடி விழும். நமக்காக விஷ்ணு திட்டு வாங்கவேண்டாம்”

சிணுங்கியபடியே சரயு புத்தகத்தைத் திருப்பித் தந்தாள்.

“அணுகுண்டுக்கு வேணாண்ணா எனக்கும் வேணாம்”

அவளது நட்பு வட்டத்தில் தான் அணுகுண்டுக்கு அடுத்தபடிதான் என்று தெரிந்து ஜிஷ்ணுவுக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது.

பொறாமைப் படாதே ஜிஷ்ணு… இந்தக் கள்ளமில்லா நட்புக்கு பிரிவு இன்னும் ஒரு கல் தொலைவுல தான் நிக்குது. அந்த வலியை இந்தச் சின்ன இதயங்கள் தாங்குமான்னு நெனச்சா எனக்கே மனசு கனத்து போயிடுது.

சின்னஞ் சிறு பொட்டு வச்சு,

சிக்கெடுத்து தலை சீவி,

சிவப்புத் தோடணிந்து

சிங்காரமாய் சிறகடித்த பள்ளியில்

என்ன படித்தேன் – நினைவில்லை

யாருடன் படித்தேன் – நெஞ்சில் நிற்கிறது

ழை சற்று விட்டதும் ஜிஷ்ணுவின் காருக்கு சென்றனர். காரிலிருந்து துண்டினை எடுத்து துவட்டியவன் அவர்களுக்கும் ஒன்று தந்தான்.

“வாங்க சூடா டீ குடிச்சுட்டு வரலாம்” அவனது புதுத் தோழர்களை அழைத்து சென்றான். அவர்கள் இருவரையும் காரில் அமரவைத்து விட்டு டீக்கடையில் சூடாக டீயும் பஜ்ஜியும் வாங்கித் தந்தான்.

ஒரு பஜ்ஜியை மட்டும் சாப்பிட்டு விட்டு குட்டே பிஸ்கட் வாங்கி சரயுவும் அணுகுண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஜிஷ்ணு மிளகாய் சட்னியை சாப்பிடுவதை வாய் மூடாமல் வியந்து பார்த்தனர்.

சாப்பிட சாப்பிட, “இன்னும் ஒண்ணே ஒண்ணு”

“இதை மட்டும் சாப்பிட்டின்னா பத்தாயிடும்”

“எங்க வெறும் மிளகாய மட்டும் சாப்பிடு பார்க்கலாம்…”

என்று ஊக்குவித்தனர். சூடான மிளகாய் பஜ்ஜியும் தோதாக சட்னியும் பார்த்ததும் ஜிஷ்ணுவுக்கு ஆந்திர உணவு நினைவுக்கு வர அனாயசமாக பதினைந்து பஜ்ஜியை வெளுத்துக் கட்டினான்.

அன்று இரவு தூக்கம் தொலையப் போவது தெரியாமல் இருவரையும் அவர்கள் வீட்டின் முன் இறக்கி விட்டு தான் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பினான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 16’

அத்தியாயம் – 16 காலை நேரம் பரபரப்பாய் கிளம்பிக் கொண்டிருந்தான் ப்ரித்வி. சனிக்கிழமை என்பதால் நந்தனாவுக்கு விடுமுறை. நீளமுடியைக் கொண்டையாக முடித்துக் கிளிப் போட்டு, வீட்டில் போடும் பைஜாமாவுடன் சமையலறையில் சப்பாத்தியைத் தேய்த்துக்  கொண்டிருந்தாள். “டிபன் சாப்பிட்டுட்டு போங்க” உள்ளிருந்து கத்தினாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 21

ஜிஷ்ணு படுக்கையில் படுத்துக் கொண்டு எப்போதடா பொழுது விடியும் என நிமிடத்துக்கு ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். முத்தமிட்டபோது படு நெருக்கத்தில் பார்த்த சரயுவின் ரோஜா இதழ்களும், கைகளால் உணர்ந்த அந்த மாம்பழக் கன்னத்தின் மென்மையும், விசிறியாய் அசைந்த அவளது

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 12

லக்ஷ்மியின் கல்யாணம் முடிந்ததும் சரஸ்வதிக்கும் நல்ல வரன் வர அதை முடித்துவிட நெல்லையப்பன் விரும்பி ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தார். முதலில் மாப்பிள்ளைகளை நொள்ளை நொட்டை சொல்லிய சரசு பின் ஒரு நல்ல நாளில் நெல்லையப்பனின் கடையில் வேலை செய்த செல்வத்தை ஓடிப்