அத்தியாயம் – 4
அந்தப் பெரிய பாமிலி சூட்டில் இரண்டு இரட்டைப் படுக்கைகள் இருந்தது. ஒன்றில் இரவு உடை அணிந்த சந்தனா நானம்மாவின் மேல் காலைப் போட்டுக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். வரலக்ஷ்மியும் அப்படியே. பக்கத்திலிருந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடை போட்டுக்கொண்டிருந்தான் ஜிஷ்ணு. முதன் முதலில் சரயுவை சந்தித்தத் தருணம் நினைவில் வந்தது.
ஜிஷ்ணு… ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் சமமாக செல்வாக்குப் பெற்றிருக்கும் குடும்பத்தை சேர்ந்தவன். விவசாய நிலங்கள் எக்கச்சக்கம். பொழுதுபோக்காய் ஊறுகாய் கம்பெனி ஆரம்பித்ததற்கு காரணமே அதற்குத் தேவையான ஆவக்காய், மிளகாய் விளைவிக்க விளைநிலங்கள் எல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்ததால்தான். அவர்களது கிராமத்து வீட்டில், அவனது தாத்தா மரபீரோவில் வைத்திருந்த பணம் எடுப்பார் இல்லாமல் செல்லரித்து போயிருந்தது என்றால் அவர்கள் குடும்ப வளமை புரியும். குடும்ப விழா ஏதாவது வந்தால் தமிழகமும் ஆந்திராவும் திரண்டு வந்ததைப் போலிருக்கும்.
ஜிஷ்ணுவின் தந்தை சலபதி, தாய் ஜெயசுதா. ஜெயசுதாவின் வசதியைவிட குறைந்தது பத்து மடங்கு செல்வாக்கு படைத்த சலபதி அழகான ஜெயசுதாவின் மேல் காதல் கொண்டார். மணமும் செய்தார். ஆனால் ஜெயசுதாவோ சலபதி மட்டும் மேலான அந்தஸ்தில் இல்லாமலிருந்தால் மணந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்குத் தரம் பார்ப்பவர்.
ஜிஷ்ணுவுக்கு இரண்டு அண்ணன்கள். இருவருக்கும் படிப்பு என்றால் வேப்பங்காய். பள்ளியில் தினமும் தங்களுக்கு பதில் வாத்தியாரிடம் அடி வாங்குவதற்கென்றே ஒரு வேலையாளை ஏற்பாடு செய்யும் படி தகப்பனிடம் கோரிக்கை விடுத்தவர்கள் என்றால் அவர்களின் படிப்பு ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம். பள்ளிப்படிப்பை முடித்தவர்கள் அதற்கு மேல் தாங்காது என்று தொழில், திருமணம் என்று செட்டிலாகி விட்டார்கள்.
கடைக்குட்டியாய் பிறந்த ஜிஷ்ணுவுக்கு படிப்பு வந்தது. அவனை சிறு வயதிலிருந்து ஊட்டியில் பெரிய கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைத்தார் ஜெயசுதா. அவர்கள் ஊரின் பெரிய மனிதர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளி அது. அங்கு இடம் கிடைப்பதே குதிரைக் கொம்பு. வருடம் ஒருமுறைதான் வீட்டுக்கு வருவான். கோடை விடுமுறைக்கு பள்ளியிலே சுற்றுலா அழைத்து செல்வார்கள். அதில் செல்லும்படி தாயிடமிருந்து கட்டளை பிறக்கும்.
வீட்டுக்கு வந்தாலும், “நயனா, இந்த லீவுக்கு உன்னை கித்தார் கிளாஸ் சேர்த்திருக்கேன். அந்த வாணியோட பையன் கித்தார் அருமையா வாசிப்பானாம். பீத்திகிட்டா. நீயும் கிளாஸ் போற” என்ற கட்டளை பிறக்கும். உறவினர்கள் விருந்தில் ஒரு நாள் ‘ப்ரியத்தமா’ என்று ஜிஷ்ணு கிட்டார் வாசித்ததும் அந்த ஆசை அடங்கிவிடும்.
“என்ன வாணி… என்னமோ உன் பையனுக்கு மட்டும்தான் தெரியும்னு பீத்திகிட்டாயே. என் மகனைப் பார்த்தியா?” பெருமை பொங்கக் கேட்பாள்.
“ஜிஷ்ணு பியானோ கிளாஸ் ஏற்பாடு செய்திருக்கேன். போயிட்டு வா. மாதவியோட பொண்ணை விட நல்லா பியானோ வாசிக்கணும். கித்தார் கத்துட்ட வரைக்கும் போதும். இனிமே நீயே பிக்அப் பண்ணிப்ப” என்பார் அடுத்த விடுமுறையில்.
அம்மாவின் ஆசைக்காக கற்றுக் கொண்டதில் கராத்தே, நீச்சல், வாய்ப்பாட்டு, டிஸ்கோ என்று பெரிய லிஸ்டே வைத்திருக்கிறான் ஜிஷ்ணு.
பின்னர் சென்னையில் கல்லூரியில் சேர்த்து விட்டார். ஜெயசுதாவின் ஆசைப்படி ஐஏஎஸ் படிக்கும் அளவு இல்லாவிட்டாலும், ஏதோ… பொறியியல் கல்லூரியில் சீட்டை வாங்கிய விலைக்கு வஞ்சம் செய்யாமல், படித்து பாஸ் மார்க் வாங்கிவிடுவான். ஜெயசுதாவின் மனக்கோட்டைகளுக்கு அடித்தளமே ஜிஷ்ணுதான்.
வெங்கடேஷும் ஜிஷ்ணுவும் சென்னையில் கல்லூரித்தோழர்கள். கல்லூரியில் தேர்வு முடிந்து விடுமுறை விட்டிருந்தனர். ஒவ்வொரு விடுமுறைக்கும் தனியே சுற்றி போரடித்துப் போயிருந்தான் ஜிஷ்ணு. வீட்டுக்கு போக ஆசை. ஆனால் வீட்டில் அம்மா அப்பா இருவரும் அமெரிக்கா சுற்றுலா சென்றிருந்தார்கள். சிறு வயதிலிருந்தே விடுதியில் வளர்ந்ததால் அண்ணன்களிடம் நெருக்கமான உறவு இருந்ததில்லை. அவர்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாய் வார்த்தையாகக் கூடக் கேட்க முடியாது. அவனது சித்தி வரலக்ஷ்மி அவனுக்கு அம்மாவை விடவும் நெருக்கம். ஆனால் அவரின் மூத்த பெண்ணின் பிரசவ சமயமாகையால் பிஸியாய் இருப்பார். இவன் சென்றால் அவருக்குக் கூடுதல் வேலை வேறு. அதனால் அங்கும் செல்ல விருப்பமில்லை. ச்சே கடலில் நீர் இருந்தும் தாகத்துக்கு வேலைக்காகதது போல ஊர் முழுக்க சொந்தமிருந்தும் போகக் கூட இடமில்லை.
ஜிஷ்ணு யோசனையில் இருந்த சமயம் அவனை வீட்டுக்கு அழைத்தான் வெங்கடேஷ். தென்தமிழகத்தை சேர்ந்தவன். அரசாங்க ஒதுக்கீட்டில் அவனது கல்லூரியில் இடம் கிடைத்துப் படிப்பவன். ஜிஷ்ணுவின் பணத்துக்காக பழகாமல் அவனுக்காகவே பழகுவான். அதனால் ஜிஷ்ணுவுக்கு வெங்கடேஷின் மேல் தனி அன்பு. ஜிஷ்ணுவிடம் தங்களது ஊரின் பெருமையை பறைசாற்றி பாணதீர்த்தம் குற்றாலம் எல்லாம் சுற்றிக் காட்டுகிறேன் என கூட்டி வந்திருந்தான் வெங்கடேஷ்.
வீட்டில் கேட்டதற்கு “மணவாடா?” என்று விசாரித்துவிட்டு ஜிஷ்ணு செல்ல அனுமதி அளித்திருந்தார் ஜெயசுதா. ஜிஷ்ணு பழகுவதற்கு ஏற்றவாறு வெங்கடேஷ் வீட்டிலும் ஓரளவு வசதியானவர்கள்தான் என்ற திருப்தி வேறு அவர் மனதில்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர் மூன்று பெரிய டவுன்களுக்கு இடையில் இருந்தும் பழமை மாறாமல் இருந்தது ஸ்ரீவைகுண்டம். ஜிஷ்ணுவுக்கு அந்த அழகான கிராமத்தை மிகவும் பிடித்து விட்டது. இயற்கை சூழ்நிலையில் அவர்கள் இருந்த அவர்கள் தங்குமிடம் கூட.
பணக்காரனான ஜிஷ்ணுவுக்கு வெங்கடேஷின் வீட்டில் பலத்த வரவேற்பு. அவனும் தனது சொந்த காரில் வெங்கடேஷை அழைத்து வந்திருந்தான். சாப்பிட சுவிஸ் சாக்லெட், கிலோ கணக்கில் வெளிநாட்டு ட்ரை ப்ருடஸ், மேக்அப் சாதனங்கள் என்று அவர்கள் கண்ணால் கூட கண்டிராத திம்பண்டங்களையும், பரிசுகளையும் வாங்கி வந்தால் யாருக்குத்தான் பிடிக்காது.
சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு வெங்கடேஷின் தோட்டத்து வீட்டுக்கு சென்றார்கள். இருமருங்கும் தென்னை மரங்கள் அடர்ந்திருக்க, நடப்பதற்கு பாதையை விட்டுவிட்டு மற்ற இடங்களில் சேனையை ஊடுபயிராகப் பயிர் செய்திருந்தார்கள்.
“வெரி கிளெவர்” பாராட்டியபடி பார்த்தவனது பார்வை பக்கத்தில் இருந்த மாந்தோப்பிடம் சென்றது.
“உங்க வீட்டு சாப்பாடு ஹெவியாயிடுச்சு. அந்த மாந்தோப்புல ஒரு வாக் போயிட்டு வரலாமா?” என கேட்க, தலையசைத்து கூட்டிச் சென்றான் வெங்கடேஷ்.
“ஜிஷ்ணு நம்ம கிருத்திகா கூட உன்னைப் பார்த்தேன். லவ் பண்ணுறியா?”
“அது போன மாசம்டா. இப்ப நான் ஹாப்பிலி சிங்கிள். கிருத்திகா சரியான டார்ச்சருக்குப் பொறந்தவ. பொக்கே குடு, நகை குடு, இதுல இன்னைக்கு நான் அழகா இருக்கேனா? சிம்ரன் மாதிரி அழகா இல்லை ஷாலினி மாதிரி ஹோம்லியா இருக்கேனா? இப்படி தினமும் நொய் நொய்ன்னு காலைல இருந்து சாயந்தரம் வரை வாயை மூடாம கேள்வி கேக்குறா. கேட்டு கேட்டு காதுல ரத்தமே வந்துடுச்சு. ஒரே வழியா பிரேக் அப் ஆச்சு. சிங்கள்க்கு அர்த்தம் தெரியுமா உனக்கு… SINGLE – Stress Is Now Gone Life is Easier”
“நீயும் எத்தனை பேரைத்தான்டா லவ் பண்ணுவ?”
“கேர்ள்ஸ் பொறுத்தவரை I love everybody. Some I love to be around. Some I love to avoid”
“அப்ப பாவப்பட்ட ஆம்பளைங்கள ஹேட் பண்ணுவியா?”
“ஹே நான் மனுஷங்க எல்லாரையும் லவ் பண்ணுறேண்டா. ஒன்லி என் வழில குறுக்க வர ஆளுங்களை மட்டும் I love to punch their face”
விளையாட்டாக சற்று ஒதுங்கி வெங்கடேஷ் நடக்க, “பயப்படாதடா நீ என் பிரெண்ட். உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன் வீட்டுக்கு நான் வர சம்மதிச்சதுக்குக் காரணம் என்ன தெரியுமா? மத்த எல்லாரை மாதிரி நீ இல்ல. மூஞ்சிக்கு நேர கேள்வி கேக்குற உன்னோட நேர்மை எனக்குப் பிடிக்கும்.”
“பேச்சை மாத்தாம சொல்லு இதுவரை நீ யாரையும் லவ் பண்ணதில்ல”
நீ எப்படி வளைச்சு வளைச்சு கேட்டாலும் ஒரே பதில்தான். இதெல்லாம் வெறும் டைம் பாஸ். கடலை போடுறதோட நிறுத்திடுவேன். அதுக்கு அடுத்த ஸ்டெப்பை அவாய்ட் செய்துடுவேன். என்னை பொறுத்தவரை painக்கு இன்னொரு பேர் பிரேமா”
நண்பர்களின் பேச்சு சத்தத்தையும் மீறி,
“அணுகுண்டு, அந்த டயர எடுடா” என ஒரு அதட்டல் குரல் கேட்க, அந்தப்பக்கம் திரும்பினான்.
மாமரத்தடியில் ஒரு பெரிய கல்லிருக்க, அதில் அமர்ந்து, கையில் இருந்த மொண்ணைக் கத்தியை வைத்துக் கல்லால் அடித்து மரக்கிளையை செதுக்கிக் கொண்டிருந்தாள் சரயு. அவ்வப்போது அந்த ஆங்கில ‘வொய்’ வடிவக் கிளையை ஒரு கண்ணால் பார்த்து அளந்தவள், திருப்தியுடன் டயரை வெட்டி அதில் சுற்றத் தொடங்கினாள். ஆபரேஷன் செய்யும் சீனியர் டாக்டரை சுற்றி நிற்கும் ஜூனியர் டாக்டர்கள் போல் அவளை சுற்றிலும் மூன்று நான்கு பொடியன்கள்.
ரெட்டை ஜடையில் ஒன்று அவிழ்ந்து தொங்க, மற்றொன்றோ பாதி மடித்திருக்க, மஞ்சள் நெற்றியில் வைத்த சாந்து பொட்டு பாதி அழிந்திருக்க, வெள்ளை நிற அரைக்கை சட்டை கசங்கியிருக்க, முழுப்பாவாடையில் காலை மடித்து கணுக்கால் தெரிய அமர்ந்திருந்தவள் முதல் பார்வையிலேயே அவனை ஆச்சரியப்படுத்தினாள். அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. கவண்கல்லை கை பாட்டுக்குத் தயார் செய்ய, வாய் பாட்டுக்கு நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தது.
“அணுகுண்டு, புவியல்ல எத்தனை மார்க்குலலே பெயில் ஆன?”
“ஒரு மார்க்” வருத்தத்துடன் சொன்னான் அவள் வயதை உடைய அந்த சிறுவன்.
“என்கிட்ட இருவத்தொம்பது மார்க்குன்னு சொன்ன. பாசாக இன்னும் ஆறு மார்க் வேணும்” என்றான் மற்றொருவன்.
“ஓலைப்பட்டாசு… தெரியும்லே, முப்பது மார்க் வந்தா போதும் டீச்சர் கைல கால்ல விழுந்து பாசாயிடுவோம்” அவனுக்கு பதில் சொன்னவள், “ஆமா… பரிச்ச முடிஞ்சதும் மார்க் போட்டப்ப முப்பது வந்துச்சே” யோசித்தாள்.
“மேப்ல தாமிரபரணியை குறிக்க சொன்னாங்கல்ல, நான் மாத்தி வைகையைக் குறிச்சுட்டேன். அதுல ஒரு மார்க் போச்சு” வருத்தத்துடன் சொன்னான்.
“ஏண்டா, இதோ… இங்குட்டு மதுரைல இருக்குது வைகை. பஸ்ல ஏறுனா மூணு மணி நேரத்துல போய்டலாம். மேப்புலையும் பக்கத்துலதான வருது. இதை உங்க டீச்சர் அட்ஜஸ்ட் பண்ணிக்கக் கூடாதா? தப்பு போட்டே ஆகணுமா?” சரயு கோவமாய் கேட்க, சத்தமாய் சிரித்துவிட்டான் ஜிஷ்ணு.
‘வாடா மாப்பிள்ள. உனக்குத்தான் காத்திருக்கோம்’ என்பது போல் ஒரு முறை முறைத்தாள் சரயு. அதையும் கண்டு கொள்ளாதவன் வெங்கடேஷிடம்,
“யாருடா இந்த அம்மாயி?” என்று கேட்க பொங்கி எழுந்துவிட்டாள் சரயு.
ஜிஷ்ணு பேசும்போது தெலுங்கு வார்த்தைகளும் அவ்வப்போது வந்து விழும். இதனால் அவனுக்கு இதுவரை பெரிய பிரச்சனைகள் வந்ததில்லை. ஆனால் தன்னை அம்மாயி என்று சொன்னதை சரயுவால் தாங்க முடியவில்லை.
“ஏய்… என்னை பார்த்தா உன் பாட்டி மாதிரி இருக்கா? எவ்வளவு தைரியமிருந்தா என்னை அப்படி கூப்பிடுவ?” பெட்ரோமாக்ஸ் விளக்கு மாதிரி முகம் ஜிவுஜிவுக்க எழுந்தவளைப் பார்த்து அரண்டுவிட்டான் ஜிஷ்ணு.
“சாரி சாரி. நான் தெலுங்கு. அதுல அம்மாயின்னா பொண்ணுன்னு அர்த்தமாகும்” அவசர அவசரமாய் சொன்னான்.
சற்று மட்டுப்பட்டவள், “வெங்கடேஷ் அண்ணாவோட பிரெண்டா? உன் பேர் என்ன?” என்றாள்.
“ஜிஷ்ணு” என்றான்.
அவன் பேரை அரைகுறையாக காதில் வாங்கிக் கொண்டாள். “இதோபாரு விஷ்ணு… அண்ணனோட பிரெண்ட்டுங்குறதால இப்ப விடுறேன். நான் போயி தெலுங்கு பேசுற ஆளுங்ககிட்ட நீ சொல்லுறது உண்மைதானான்னு கேட்பேன். பொய் மட்டும் சொன்னேன்னு தெரிஞ்சது… ” காளியம்மனைப் போல கண்களை உருட்டி மிரட்டினாள்.
ஊடே ஓடி வந்த ஒற்றன் ஒருவன், “சரவெடி… ரங்கம்மா வர்றா” என அவர்கள் கோஷ்டிக்கு மட்டும் கேட்கும் வண்ணம் கத்த,
“தனியாத்தானே வர்றா, இன்னைக்கு இருக்கு அவளுக்கு வேட்டு” என்று தாதா போல் வசனம் பேசினாள்.
அவளது கவனம் திசை திரும்பி விட்டதை அறிந்த வெங்கடேஷ் நண்பனின் கையைக் கிள்ளி வருமாறு அழைத்தான். ஜிஷ்ணுவுக்கோ அந்த சரவெடி அடுத்து என்ன அதிர்வெடி போடப்போகிறது என்று பார்க்க ஆவலாய் இருந்தது. சட்டமாய் அந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று கொண்டான்.
“வாடி… ர்ர்..ரா…ங்கி ர்ர்..ரங்கம்மா” ஸ்டைலாக மரத்தில் ஒரு காலை சாய்த்து நின்றபடி அந்தப் பெண்ணை வரவேற்றாள் சரயு. அணுகுண்டை கையால் சைகை செய்து அழைத்தவள், அவன் தோளில் கை போட்டவாறு உறுமினாள்.
“உன்னால என் பிரெண்ட் பெயிலாயிட்டான். இப்ப அவங்கம்மாட்ட நீயா அடிவாங்குவ?” கோவமாய் நியாயம் பிளந்தவள், சத்தத்தைக் குறைத்தாள்.
“உன்னை என்ன கேட்டோம்? அணுகுண்டு படிக்கல… அதனால் கோடிட்ட இடம், பொருத்துக, ரெண்டு மார்க் விடை அதை மட்டும் காமின்னு தானே சொன்னேன். அன்னைக்கு என்னமோ பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டின? உனக்காக அணுகுண்டு வேற வீட்டுல இருந்து அதிரசம், முறுக்குன்னு திருடித் தந்திருக்கான். அப்ப நல்லா தின்னல்ல? அப்பறம் ஏன் பரிச்சையப்ப பேப்பரைக் காண்பிக்கல?” கையில் கவண்கல்லை ஏந்தியபடி மிரட்ட,
“அவனை ஏன் என் பின்னாடி உட்கார சொன்ன. வேற உன் பிரெண்ட் யார் பின்னாடியாவது உட்கார சொல்ல வேண்டியதுதானே”
“எங்களுக்கென்ன உன்ன மாதிரி திமிர் பிடிச்சவ கிட்டல்லாம் கெஞ்சனும்னு ஆசையா? பேர் வரிசைப்படி உன் பேர்தானே அவனுக்கு முன்னாடி வருது. நீ அணுகுண்டோட கிளாஸ்ல படிக்குற வரை அப்படித்தான் கேட்போம். உனக்குப் பிடிக்கலைன்னா ஒண்ணு செய்யலாம்” யோசனையாய் சொன்னாள்.
“என்ன?” கேட்டாள் ரங்கம்மா.
“உன் பேரை நாளைல இருந்து குரங்கம்மான்னு மாத்திடலாம். சரியா? உங்க கிளாஸ் டீச்சர் கிட்ட சொல்லிடுறேன்” சீரியஸாய் சொல்ல ஓவென அழ ஆரம்பித்தாள் ரங்கம்மா.
“என் மாமா அம்பாசமுத்துரத்துல கான்ஸ்டபிள் ஆயிட்டாரு தெரியுமா? அவர் கிட்ட உன்னைப் பத்தி சொல்லி ஜெயில்ல போட சொல்லுறேன் பாரு” அழுதுக் கொண்டே சொல்ல,
“உங்க மாமா கான்ஸ்டபில்தான். என் மாமா இன்ஸ்பெக்டர் தெரியுமா?” தெனாவெட்டாய் சொன்னாள்.
நிஜமா என்பது போல் ஜிஷ்ணு வெங்கடேஷைப் பார்க்க அவன் பொய் எனக் கண்ணடித்தான். ‘வருங்காலத்தில் அரசியல்ல பெரிய ஆளா வருவா போல இருக்கே’ என மனதில் நினைத்துக் கொண்டான் ஜிஷ்ணு.
“போடி, நீ பொய் சொல்லுற” கண்டு பிடித்துவிட்டாள் ரங்கம்மா.
புருவத்தை சுளித்தவாறு பார்த்தவள் கண்ணில் உயரமாக, மீசை வைத்துக் கொண்டு நின்ற ஜிஷ்ணு பட்டான்.
“நீ நம்பலேன்னா போ… இதோ இங்க நிக்குறாரே இவர்தான் அந்த போலிஸ் மாமா” என்று ஜிஷ்ணுவை சுட்டிக் காட்டியவள்,
“என்ன மாமா பாக்குற? ஆமாம்னு சொல்லு” என்றாள் அழுத்தமான குரலில். ஆமாம் என தலையாட்ட வேண்டும் என்ற கட்டளையும் அதில் மறைமுகமாய் பொதிந்திருந்தது. அந்தக் குரலின் ஆளுமையில் அசந்து போய் தலையாட்டினான் ஜிஷ்ணு.
“ரங்கம்மா இனி வர்ற பரிட்சைல அணுகுண்டுக்கு பேப்பரை காண்பிக்குற. இல்லைன்னா” என்றவள் குறி பார்த்து மரத்தில் இருந்த மாங்காயின் மேல் கவண்கல்லால் கல் எறிய, அந்த மாங்காய் நேர் கீழே நின்றிருந்த ஜிஷ்ணுவின் நடுமண்டையில் நச்சென விழுந்தது.