Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா,Ongoing Stories,Tamil Madhura தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 1

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 1

அத்தியாயம் – 1

மியூனிக், ஜெர்மனி

குக்கூ குக்கூ’ என்று கடிகாரத்தின் உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து கத்திய குக்கூப்பறவையிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள் சரயு. “என்னடா நேரமாச்சுன்னு சொல்லுறியா? இதோ கிளம்பிட்டேன். நேத்து அப்பா என்னை விட்டு சாமிட்ட போன நாள். ராத்திரி அப்பா நினைவு வந்துடுச்சு, பொட்டு கூடத் தூங்கல. விடியுறப்பத்தான் கண்ண அசந்தேன். அதான் எந்திரிக்க முடியல”

வாய் பேசிக் கொண்டிருந்தாலும் கை காரியத்தை கவனித்தது. கடாயில் ஊற்றிய எண்ணை காய்ந்தவுடன் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை சேர்த்து தாளித்தாள். பின் அரிந்து வைத்த பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் வதக்கியவள், குளிர்பதனப் பெட்டியில் கறிவேப்பிலை மீதி இருக்கிறதா என்று ஆராய, பேருக்குக் கூட ஒரு இலை இல்லை. சமையல் அறை ஜன்னலின் அருகே சிறு பூந்தொட்டியில் இருந்த கொத்துமல்லி ஆபத்பாந்தவனாய் ‘நானிருக்கிறேன் சரயு’ என காற்றில் அசைந்து அவளை அழைக்க, செடிக்கு வலிக்காமல் நான்கு இலைகளை மட்டும் கிள்ளினாள். கெட்டிலில் சுட்டிருந்த வெந்நீரையும், போன வாரஇறுதியில், பொழுதைக் கழிக்கும் பொருட்டு வறுத்து டப்பாவில் அடைத்து வைத்திருந்த ரவையையும் கொட்டி நிமிடத்தில் உப்புமாவைக் கிளறினாள்.

டீ போட நேரமில்லை. இங்கிலீஷ் டீ என்ற பெயரில் டீ பாக் போட்ட சுடுதண்ணியைக் குடிப்பதற்கு அவள் டீயே வேண்டாம் என இருந்துவிடுவாள். இன்று அவர்கள் பாணிக் காபி வேண்டுமானால் அருந்தலாம். காபி மக்கில் அரை ஸ்பூன் நெஸ்காபித் தூளையும், குளிர் பாலில் ஐம்பது மில்லிலிட்டரையும் ஊற்றிக் கலக்கினாள். நன்றாகக் கரைந்தவுடன் கெட்டிலில் சுட்டிருந்த நீரை ஊற்றினாள். இதோ சூடான, மணமான சரயு காபி தயார்.

அவளுடன் வேலை செய்யும் மால்கமுடன் பிரேக்கில் காபி கலந்து அருந்துவாள். அவன்தான் செய்முறையைப் பற்றி சொல்வான். இன்ஸ்டன்ட் காப்பிப் பொடியில் நேரடியாக கொதிக்கும் நீரை ஊற்றினால் கருகிப் போன வாடை வருமாம். அதனால் பொடி பாலில் நன்றாகக் கரைந்தவுடன் தான் ஊற்ற வேண்டுமாம். ஆனாலும் அவனைப்போல் சர்க்கரை இல்லாத காபியைப் பருக அவளால் முடியாது. அம்மா சொல்வதைப்போல் சொல்லிப்பார்த்தாள்.

“சரயு உனக்கு நாக்கு நீளம்டி. பொம்பளப்பிள்ளைங்களுக்கு நாக்கு இத்தனை வக்கணை கேட்கக் கூடாது”

கைகள் சர்க்கரை பாட்டிலில் துளவ, அதுவோ முதல்நாளே முடிந்து போயிருந்தது. ராம் வீட்டில் இருந்தால் தீரத் தீர வாங்கிப் போடுவான். அத்தையோ வேளை தவறாமல் வாய்க்கு ருசியாக முந்திரி பக்கோடா, நவரத்ன குருமா, வெள்ளி இரவு அவளுக்கு மிகவும் பிடித்த திருநெல்வேலி சொதி என்று சமைப்பார். இருவரும் சிண்டுவுடன் ஊருக்குக் கிளம்பி இரண்டு வாரங்களாகியிருந்தன. ராமின் அப்பா வழி சொத்துப் பிரச்சனையைத் தீர்த்து வரச் சென்றிருந்தார்கள். வீடு வர இன்னும் இரு வாரங்களாவதாகும். அதுவரை சரயு, ராமின் அறிவுரைப்படி, பொறுப்பான பெண்ணாக நடக்க முயல வேண்டும். அதன்பின் இந்த சமையல் அறையின் அரசி வந்து விடுவார். மூக்குப் பிடிக்க சாப்பிடும் வேலையை மட்டும் அவள் கவனித்தால் போதும்.

மெக் டொனால்ட்டில் நேற்றைய காபிக்கு எடுத்த சர்க்கரைத்தூள் பாக்கெட்டுகளில் இரண்டினை எடுத்து காபியில் கலந்து ஒரு வாய் பருகிவிட்டு, உணவை ஒரு வாய் உண்டாள்.

“இதுக்கு பேர் உப்புமா இல்ல வெறும் மா தான். என்னடி சரயு… உப்பு போட மறந்துட்டியே” தலையில் கொட்டிக் கொண்டாள். பாட்டிலில் இருந்த ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

‘இரவு உப்பு இல்லாத இந்த ‘மா’வுக்கும் வழியில்லை. மளிகை சாமானெல்லாம் முடிந்துவிட்டது. இன்று சாயந்தரம் கண்டிப்பாக இந்தியன் க்ரோசரி செல்ல வேண்டும்’

அவள் மனதில் சிறு வயது சரயு வந்தாள். குட்டி சரயு… நீல நிற முழுப்பாவடையும், வெள்ளை சட்டையும் அந்த ஒல்லிக் குச்சி உடம்புக்காரியை சுற்றியிருக்க, தாமிரபரணித் தண்ணீர் குடித்து வளர்ந்த அந்த மஞ்சள் நிறத்தழகி, இஞ்சி இடுப்பழகி யோசனையுடன் சீருடை சட்டைப் பித்தானைப் போட்டு விட்டு சாப்பிட அமர்ந்தாள்.

முதல்நாள் அன்பரசனிடம் முடியைப் பிடித்து இழுத்து சண்டை போட்டதில் அவன் அவளது ரிப்பனை அறுத்துவிட்டான். ஓரம் அடிக்காத ரிப்பன்கள் இரண்டும் நூல் நூலாகப் பிரிந்துவிட்டது. விடுவேனா என்று அதையும் மொட்டைகிணற்றில் எறிந்துவிட்டான். அவளும் பதிலுக்கு அவனது காத்தாடியைப் பிடுங்கி அதே கிணற்றில் வீசி விட்டாள்.

இன்று மறக்காமல், முக்கியமாக அம்மாவுக்குத் தெரியாமல், அப்பாவிடம் காசு வாங்கி, மாலை நாடார் கடையில் புதிய ரிப்பன் வாங்கிவிடவேண்டும். பின்னர் அதனைத் தண்ணீரில் ஊறவைத்து மொடமொடப்பை நீக்கி, மண்ணில் புரட்டிப் பழையதாக்கி, அம்மாவிடம் பழைய ரிப்பன்தான் என்று சாதித்து விடலாம்.

நேற்று மாலை வகுப்புத் தோழி கனகாவிடம் கணக்குப் புத்தகத்தை அடகு வைத்து, அவளது ஒற்றை ரிப்பனைக் கடன் வாங்கி, ப்ளேடால் பாதியாக வெட்டி, ரெட்டை ஜடையிலும் பின்னியிருந்தாள். புது ரிப்பன்களில் ஒன்றைக் கொடுத்து கணக்குப் புத்தகத்தைத் திருப்ப வேண்டும். புத்தகம் இல்லாததால், செய்யாமல் விட்ட வீட்டுப் பாடத்தை, தமிழ் வகுப்பின் போது, கடைசி பெஞ்சில் அமர்ந்து காப்பியடிக்க வேண்டும். மாட்டிக் கொண்டாலும் தமிழம்மாக்கள் மட்டும் கடுமையாக தண்டிக்க மாட்டார்கள். அப்பாடி, எவ்வளவு வேலை… எவ்வளவு வேலை? மலைத்தபடி தட்டைப் பார்த்த சரயுவின் முகம் அஷ்டகோணலாகியது.

“ஏம்மா இன்னைக்கும் உப்புமாவா? உங்கம்மா வேற சமைக்கவே கத்துத் தரலையா?”

நாற்பதின் இறுதிகளில் இருந்த சிவகாமிக்கு, அவளது முப்பதுகளில் நடந்த இனிய விபத்தினால் முளைத்த குட்டி மாமியாரின் மேல் கடுப்பாய் வந்தது. “ஏண்டி உன்னை விட பெரியவளுங்க வாயை மூடிட்டு சாப்பிடுராளுங்கல்ல? உனக்கென்னடி கேடு. சாப்டுட்டு ஸ்கூலுக்குக் கிளம்புற வழியைப் பாரு”

“முப்பெரும் தேவியரே வாயை மூடிட்டு சாப்புடுறது எப்படின்னு உங்க செல்லத் தங்கச்சிக்கு சொல்லித் தரிங்களா?” மூன்று அக்காக்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த மகளை ரசித்தவாறு உள்ளே நுழைந்தார் நெல்லையப்பன்.

“சின்னக்குட்டி, என்னலே காலங்காத்தால வம்பு” பெண்ணின் அருகே தரையில் அமர்ந்தவாறு வாஞ்சையுடன் அவளது தலையைத் தடவினார்.

“இந்தம்மாவுக்கு பாட்டி உப்புமாவைத் தவிர வேற சமையலே கத்துத் தரலப்பா. இன்னைக்கு டிபன் ரவா உப்புமா, நேத்து சாயந்தரம் கோதுமை ரவை உப்புமா, நேத்து காலை சேமியா உப்புமா. அப்பறம்…”

“சிவகாமி முந்தாநாள் என்ன செஞ்ச?” மனைவியிடம் குறுக்கு விசாரணை செய்தார் நெல்லை.

“அரிசி உப்புமா” அசடு வழிந்தபடி சொன்னார் சிவகாமி.

“ஆமாம்பா அதையும் வாயைத் திறக்காம சாப்பிடனுமாம். அதைத்தான் எப்படின்னு அக்காக்கள் சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி கிட்ட கேட்டுட்டு இருந்தேன்”

“ஏண்டி புள்ளைகளுக்கு நல்ல சாப்பாடு சமைக்கிறதை விட அப்படி என்ன வேலை உனக்கு? இன்னைக்கு வெள்ளிக்கிழமையா? மதியத்துக்கு சொதி செஞ்சு வை. சின்ன குட்டி உங்க வாத்தியார் சுப்பு வண்டிய என்கிட்ட சர்வீசுக்கு விட்டுருக்கான். மத்யானம் வண்டிய வாங்கிட்டு பள்ளிக்கூடத்துக்கு லேட்டாத்தான் வருவான். நீ ஒரே ஓட்டமா வீட்டுக்கு ஓடி வந்து சாப்பிட்டுட்டு போய்டு”

“சரிப்பா” சந்தோஷமாய் தலையாட்டினாள்.

“ஏண்டி நீங்கதான் மதியம் வீட்டுக்கு வரக்கூடாதே. ஸ்கூல் கதவு பூட்டிருக்குமே எப்படி வருவ?” மூன்றாவது அக்கா சரஸ்வதி கேட்க,

“கிரௌண்ட்ல மதிலை ஒட்டி ஒரு சிமென்ட் பெஞ்ச் இருக்குல்ல. அது மேல ஏறி நின்னு கூட ஐஸ்வண்டில சேமியா ஐஸ் வாங்கித் தின்னுவோமே, அதுல ஏறி, பக்கத்துல இருக்குற வேப்பமரத்துல இன்னொரு காலை வச்சு ஒரு எம்பு எம்புனா காம்பௌன்ட் சுவத்துல ஏறிடலாம். அப்பறம் அங்கிருந்து ஒரே ஜம்ப்” சரயு சொல்ல, அக்காக்கள் மூவரும் அவளது சாகசத்தை வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.

“நீ என் சிங்கக்குட்டிடா. இந்த நெல்லையப்பனோட பேர் சொல்லப் பிறந்த பிள்ளைடா” சபாஷ் போட்டார் நெல்லையப்பன்.

“நல்லா இருக்கு நீங்க பண்ணுறது. களவாணித்தனம் பண்ண கிளாஸ் எடுக்குறா உங்க பொண்ணு. முதுகுல ரெண்டு போடு போடாம…” பல்லைக் கடித்தார் சிவகாமி. கோவத்துடன் அப்படியே சரயுவிடம் திரும்பினார்.

“உன் வயசு பொண்ணுங்கல்லாம் எவ்வளவு அடக்க ஒடுக்கமா இருக்குங்க. வாலில்லாத வானரமா எனக்கும் வந்து பொறந்திருக்கியே. பொம்பளைப் புள்ளையா லட்சணமா நடந்துக்கோடி” என்று தாய் கண்டிக்க,

“ஆமாம்லே, சுவத்துலேர்ந்து கீழ குதிக்குறப்ப புல்லு நிறையா இருக்குற பக்கமா குதி. அப்பத்தான் அடிபடாது” என்று தந்தை அவர் பங்குக்கு எச்சரித்தார்.

நெல்லையப்பன் ஆண் குழந்தையாகவே சரயுவை வளர்த்தார். பெண் என்று அடக்க நினைத்ததில்லை. அவள் வயது பெண்கள் பாண்டி விளையாட இவளோ பசங்களுடன் சேர்ந்து சைக்கிள் டயர் ஓட்டினாள். தாமிரபரணியில் பெண்கள் அடக்கமாகக் குளிக்க, சரயு பக்கத்தில் வளைந்திருந்த தென்னை மரத்தில் ஏறி தலைகீழாக நீரில் பாய்ந்து வாளை மீனாய் நீந்தினாள். அக்காக்கள் வடாம் இட, இவளோ ஏணியில் ஏறி பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளையடித்தாள். பெண்கள் தாய்க்கு உதவியாக காய்கறி அரிய, அப்பாவுக்கு உதவியாக மெக்கானிக் கடையில் நெல்லையப்பன் கேட்ட எட்டாம் நம்பர் ஸ்பானரைக் கையில் தந்து ‘பெட்ரோல் வண்டிக்கும் டீசல் வண்டிக்கும் என்னப்பா வித்யாசம்’ என ஆர்வத்துடன் விசாரித்தாள்.

அம்மா அடக்கம் பற்றி பேசியது ஒன்றும் அன்று ஆறாவது படித்த சரயுவுக்கு விளங்கவில்லை. மேலும் விளக்கிச் சொல்லவும் நேரமின்றி அவள் வயதுக்கு வரும் முன்னரே சிவகாமி மறைந்து விட்டார். திருமண வயதில் இருந்த அக்காக்களுக்கு வேறு கவலைகள். அதனால் அவளுக்கு உலகத்தை உணர்த்த யாருமில்லை. ஆனால் அவளைப் பெண் என்று அவளுக்கே விளங்க வைக்கவும் ஒருவன் வந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 24என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 24

அத்தியாயம் – 24   பில்டரில் இரண்டு ஸ்பூன் காபி பொடியைப் போட்டவன், அதன் தலையைத் தட்டி, கெட்டிலில் சுட்டிருந்த சுடுதண்ணியை ஊற்றினான். சுகந்தமான டிகாஷனின் நறுமணத்தை அனுபவித்தபடி பாலை சுடவைத்தான். அவன் மனதில் நேற்றைய நினைவுகள். “ என்ன சித்து

பெரிய இடத்து மாப்பிள்ளைபெரிய இடத்து மாப்பிள்ளை

“என்னங்க கஞ்சத்தனப்படாம நல்ல காஸ்ட்லியா வாங்கிட்டு வாங்க. அதுவும் ஸ்ட்ராபெரி மாப்பிள்ளைக்கு  பிடிக்கும் போல இருக்கு. அதனால அதையும் வாங்கிட்டு வாங்க” வெளியே கிளம்பி கொண்டிருந்த கணவர் கிருஷ்ணசாமியை வழிமறித்து சொன்னாள் ரத்னா. “மாப்பிள்ளை என்னடி மாப்ள… இப்பதான் பொண்ணு பார்க்கவே

என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30என்னைக் கொண்டாடப் பிறந்தவளே – 30

அத்தியாயம் – 30   கையைக் கட்டிக் கொண்டு தன் முன் குற்றவாளியாய் நிற்கும் கணவனைக் கண்டு கனியத் தொடங்கி இருந்த மனத்தைக் கல்லாக்கிக் கொண்டாள் சித்தாரா. இது இளகும் நேரம் இல்லை இறுகும் நேரம். ஊரில் இருந்து நேரம் கெட்ட