வேப்பம்பூவின் தேன்துளி – 03
வழக்கமான இசைதான் அந்த வீட்டில் ஒலித்தது. கூடவே சேர்ந்த கிளை இசையாய் ஜோதிமணியின் அதட்டல் குரல்!
“ஒரு பொட்டைப்புள்ள இந்தளவு கூட சூதானமாக இல்லாட்டி எப்படி? உன்னை வீட்டுல தனியா விட்டுட்டு போனா வீட்டைத் திறந்து போட்டுட்டு தூங்கிட்டு இருக்க? வீட்டுக்கு வந்தவன் என்னன்னு நினைச்சிருப்பான்? வயசுப்புள்ள இப்படியா இருக்கிறது? பொறுப்பே இல்லை புள்ள உனக்கு”
கடந்த ஒருவாரமாக இதே திட்டு தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெரியம்மா அறிவுரை மற்றும் வசை மழையைப் பொழிந்து தள்ளி விடுகிறாள்! அன்று நடந்ததைச் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் பூரணி தவித்துப் போனாள்.
தலையில் இடித்துக் கொண்டதையும், அதைத் தொடர்ந்து வந்த மயக்கத்தையும் சொல்லலாம். ஆனால், நீதிவாசன் தன்னை கைகளில் ஏந்தி வந்ததை எங்கனம் சொல்வது? முன்னதைச் சொன்னால், பின்னதையும் சொல்ல வேண்டும் அல்லவா? அது அவளால் முடியும் என்று தோன்றவில்லை!
போதாததற்கு, ரஞ்சிதா வேறு, “உண்மையைச் சொல்லு, யாருமில்லாத நேரம் நீதி மாமாவைப் பார்த்ததும், பயந்துட்டு போயி தூங்கின மாதிரி படுத்துட்ட தானே?” என அவள் பங்கிற்கு ஒரு காரணம் கண்டுபிடித்துச் சொல்ல… பூரணிக்கு ‘அச்சோ!’ என்றானது.
இதெல்லாம் போதாதென்று அன்றைய நிகழ்வுக்குப் பிறகு, இரவெல்லாம் உறக்கம் கொள்ளாமல் வேறு தவித்தாள். அது அவன் அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டதற்காக அல்ல! அவன் இவள் பாடிய பாடலைக் கேட்டு விட்டான் என்பதற்காக!
‘கண்டிப்பா நம்ம கத்துன கத்துக்கு நான் பாடின மொத்தத்தையும் கேட்டிருப்பாரு! அச்சோ! என்ன நினைச்சிருப்பாங்க… மானம் கப்பல் ஏறிப்போனா பரவாயில்லை. இங்க ராக்கெட்டுல ஏறி சொய்ங்ன்னு போயிடுச்சே!’ என்ற எண்ணங்கள் அவளைச் சங்கடமும், கூச்சமும் அடையச் செய்ய அந்த நிகழ்வைப் புறந்தள்ள இவளுக்கு மேலும் சிலபல தினங்கள் பிடித்தது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த வாரம் சென்னையிலிருந்து கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்திருந்தான். இந்த முறை சனி, ஞாயிறு வார விடுமுறையுடன் திங்கள், செவ்வாய் கிழமைகளும் விடுப்பு எடுத்து வந்திருந்தான்.
அவன் வந்தால் பெரும்பாலும் வீடு தங்குவதில்லை. அவனுடைய நட்பு வட்டங்கள் பெரிது! ஏற்கனவே, சனிக்கிழமை முழுவதும் அப்படியாகக் கரைந்திருந்தது. அடுத்த தினமும் சுற்றிக் களைத்து விட்டு, மாலை தேநீர் அருந்த வீட்டிற்கு வந்தவனை அதற்கு மேலும் வெளியே செல்ல தடா விதித்து, இழுத்துப் பிடித்து அமர வைத்து, ‘வேலை எப்படிப் போகிறது? சென்னை எப்படி இருக்கிறது?’ என்றெல்லாம் கேட்டு தங்கைகள் இருவரும் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தனர்.
“அட போயிட்டு வந்துடறேன். நாம நிதானமா அப்பறம் பேசிக்கலாம்…” என்று மறுத்தவனை, “காலையில இருந்து அவங்களோட தான இருந்தீங்க. எங்களோட கொஞ்சம் இருங்க” எனத் தடுத்து விட்டனர் தங்கையர்கள்.
அவனும் மேலும் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து வந்திருந்தபடியால், அந்த சாவதானமான ஞாயிறு மாலையில், தங்கைகளோடு உள்ளறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஜோதிமணி சமையல் வேலையாய் இருக்க, முத்துச்செல்வம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.
“பஸ் ஸ்டாப் நீ இருக்கிற ஏரியாக்கு பக்கம் தானா அண்ணா?” என்று ரஞ்சிதா கேட்க, “இல்லை இல்லை கொஞ்சம் நடக்கணும்” என்றான்.
“பெரியப்பா கிட்ட உன் வண்டியை எடுத்துட்டு போக கேட்டியே என்ன சொன்னாங்க?” என்றாள் பூரணி குரலைத் தழைத்து.
“இடம் எல்லாம் பழகிடுச்சுன்னா எடுத்துட்டு போ அப்படினுட்டாங்க” என்றான் அவன்.
“ஆமாம் ண்ணா பெரியப்பா சொல்லறதும் சரிதான். இடம் எல்லாம் பழகினதும் எடுத்துட்டு போ. சரி வழக்கம்போல பஸ் ல போகும் போது இன்னும் அந்த கடைசி நீள சீட்டுல தான் உட்கார்ந்து போறியா?” என்று பூரணி அவன் வழமை தெரிந்து கேட்க,
“அந்த கொடுமையை ஏன் கேட்கிற பூரணி. நம்ம ஊருல எல்லாம் முன்னாடி பாதி வண்டியில பொம்பளைங்களும், பின்னாடி பாதி வண்டியில ஆம்பிளைங்களும் போவோமா… ஆனா அங்க சென்னையில அப்படி இல்லை. டிரைவர் கிட்ட அப்பறம் அவருக்குப் பின்னாடி வலது பக்கம் இருக்க மொத்த சீட்டும் ஆம்பிள்ளைங்க. கடைசி சீட்டும் இடது பக்கம் இருக்க மொத்த சீட்டும் பொம்பளைங்க” என தனக்குப் பிடிக்காத சிஸ்டம் பற்றி சொல்ல, அது தங்கையர்களுக்கும் பிடிக்கவில்லை தான்.
“என்னண்ணா இப்படி சொல்லற? உட்காரரவங்களுக்கு அதுசரி! அப்ப நிக்கிறவங்களுக்கு?”
“எல்லாம் ஒன்னா தான் நிக்கணும்”
“அப்ப இந்த வழிசல் பார்டிங்களுக்கு எல்லாம் ரொம்ப சௌகரியம்” என்று முகம் சுளித்தாள் ரஞ்சிதா.
“தெரியலை. நமக்கு இதுவே பழகிட்டதால அது வித்தியாசமா தெரியுது போல! அங்க எல்லாருக்கும் அதுதான் பழகிடுச்சு போல!”
“ஹ்ம்ம்… இருக்கலாம் ண்ணா. நம்ம ஊருல பஸ்ல ஏறினதும் முன்னாடி போயி நின்னுக்கன்னு பொம்பளைப் பிள்ளைங்களைப் பத்திரத்துக்காக சொல்லுவாங்க. அங்க அதெல்லாம் முடியாது என்ன?”
“ஹ்ம்ம் ஆமா ஆமா. அங்க பின்னாடி தான் எல்லாரும் ஏறுவாங்க. இறங்கும்போது முன் வழியா இறங்கணும்” என்றான் மூத்தவன்.
“போன்னா எனக்கு பிடிக்கலை. நம்ம ஊருல முன் வழியா லேடீஸ் ஏறி இறங்கினா, பின் வழியா ஜெண்ட்ஸ் ஏறி இறங்குவாங்க. அதுதான் நல்லா இருக்கு”
“என்னவோ அவங்களுக்கு அது பழகிடுச்சு. நமக்கு இது பழகிடுச்சு” என்று கோபி பேசிக்கொண்டிருக்கும் போது தான் தொலைக்காட்சியில் அந்த பாடல் இசைக்கத் தொடங்கியது.
“ஆத்தங்கரை மரமே! அரசமர இலையே!”
அந்த பாடலைக் கேட்டதும் கோபி தன் புலன்களை எல்லாம் ஒருமுகப்படுத்தி வரவேற்பறையை கவனிக்கலானான்.
அவனிடம் மாறுபாட்டை உணர்ந்த ரஞ்சிதா, “என்னண்ணா?” என்று ஆர்வமாகக் கேட்க, ‘ஸ்ஸ்ஸ்… கவனி’ என்றான் மிக மெல்லிய குரலில்.
பெண்கள் இருவருக்கும் புரியவில்லை. அண்ணனே மெதுவான குரலில், “இந்த பாட்டோட எஸ்.டி.டி. உங்களுக்குத் தெரியாதா?” என்றான். பெண்பிள்ளைகள் இருவரும் ஒருசேர உதடு பிதுக்கினர்.
“உங்களோட அப்சர்வேஷன் ஸ்கில் ரொம்ப மோசம்… இப்ப பாருங்க கிச்சன்’ல ஒரு கரண்டி விழும்” என்று கோபி மெல்லிய குரலில் கூறினான். அதேநேரம் தொலைக்காட்சியில்,
“அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே…
முத்து மாமா என்னை விட்டுப் போகாதே – என்
ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே!”
இந்த வரிகள் பாடும்பொழுது சமயலறையில் ஜோதிமணியும் கரண்டியைக் கீழே போட்டார். ஏதோ வருங்காலத்தைச் சரியாகக் கணித்துச் சொல்பவனைப் பார்க்கும் பிரமிப்பில் அண்ணனைப் பார்த்தார்கள் தங்கைகள் இருவரும்.
அவனும் கெத்தாக இல்லாத டீ-ஷர்ட் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
“இது ஒரு பாதி தான்… இப்ப நீங்க அப்பாவைப் பார்க்கணுமே! அந்த நரைமீசை கூட அழகா… கர்வமா… துடிக்கும். அவர் முகத்துல ஒரு ஒளியும், ஆர்வமும் மிளிரும்” என்றான் ரசனையான குரலில்!
அண்ணன் சொல்லும்போதே அந்த காட்சியை நேரில் காண வேண்டும் என்பது போல ஆர்வம் முளைத்தது இளையவர்களுக்கு! அடுத்தமுறை இந்த பாடல் போடும்போது திருட்டுத்தனமாய் கவனிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டனர்.
நினைத்ததை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், “என்னண்ணே சொல்லற?” என்று காதல் கதையைக் கேட்கப் போகும் ஆர்வத்தில் தங்கைகள் அண்ணனின் புறம் வாகாகத் திரும்பி அமர்ந்து கதை கேட்கத் தயாராக…
“கிழக்கு சீமையிலே படம் தான் ரெண்டு பேரும் கல்யாணம் முடிஞ்சு சேர்ந்து பார்த்த முதல் படம்! அதோட பாட்டு வரியை கவனிச்சீங்களா? ‘முத்து மாமா என்னை விட்டுப் போகாதே!’ன்னு அப்பா பேரோட வருதே… அதுனால இந்த பாட்டு அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ரொம்ப ஸ்பெஷல்!” என்றான் அண்ணன்.
“இந்த எஸ்.டி.டி. நிஜமா எங்களுக்குத் தெரியாது ண்ணா. உனக்கு எப்படித் தெரியும்?” என்று ரஞ்சிதா ஆசையாக வினவினாள். கூடவே அவளின் மனம், ‘நம்ம எல்லாருக்கும் இந்த மாதிரி கடைசிவரை காதலோட வாழற வாழ்க்கை அமையணும்’ என்று அவசரமாக ஒரு பிரார்த்தனையை வைத்தது.
“சின்ன பசங்களுக்கு எல்லாம் அது புரியாது” என்று ஒரு குட்டு வைத்தவன், “இதுக்கு பேரு தான் ‘கப்பிள் சாங்’ அதாவது ஒரு பாட்டை கேட்டாளே அவங்க பெட்டர் ஹாப் ஞாபகம் வந்திடும்” என்று சொல்லிக் கோபி மெலிதாக புன்னகைக்க, பூரணியின் செவிகளுக்குள்,
“புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா….
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா
உத்தரவின்றி உள்ளே வா…
சக்கரை இனிக்கிற சக்கரை…”
என்ற பாடல் ரீங்காரமிட்டது.
உடனே பதறியவளாக, “கப்பிள் சாங் எல்லாம் ஒன்னும் கிடையாது போ. ஏதோ ஒரு பாட்டு கேட்டா… யாரோ ஒருத்தங்க ஞாபகம் வந்தா… அது கப்பிள் சாங் ஆயிடுமா? இல்லை அவங்க தான் பெட்டர் ஹாப் ஆகிடுவாங்களா?” கண நேரக் கற்பனையில் தன்னுள் உதித்த பாடலையும், அதையொட்டி தோன்றிய உருவத்தையும் ஏற்றுக்கொள்ள பிரியமில்லாமல் அண்ணனிடம் காய்ந்தாள்.
அவளின் ஆக்ரோஷமான பேச்சில் மூத்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்து அவளைப் பரிகசித்தனர். “நீ சின்ன புள்ளை. உன்கிட்ட போயி சொன்னேன் பாரு…” என்று கோபி சிரிப்பினூடே சலித்துக் கொண்டான்.
ரஞ்சிதாவோ, “அண்ணன் சொன்னது கூட உனக்கு புரியலையா?” என்று மேலும் கேலி செய்தாள்.
“போங்க…” என்று சிணுங்களோடே சென்றவள், “பெரியம்மா… இவங்க ரெண்டு பேரும் நான் சின்ன பிள்ளைன்னு என்னை ஏமாத்த பார்க்கிறாங்க” என்று புகார் வாசிக்க, பின்தொடர்ந்து வந்தவர்கள், “பாரு பாரு நீயே ஒத்துக்கற… நீ சின்ன பொண்ணுன்னு…” என்று கைக்கொட்டி கேலி செய்தனர்.
இருவரையும் ஒருசேர முறைத்தவள், “ஆமாம் பெரியம்மா… இவங்க ரெண்டு பேரும் தான் ரொம்ப பெரியவங்க… சீக்கிரம் கல்யாணத்துக்கு பாருங்க. இவங்களை பேக் பண்ணி விட்டுட்டு நாம வேலையை பார்ப்போம்” என்று அவர்களை வம்பில் மாட்டி விட்டாள்.
பேச்சும், சிரிப்புமாக பொழுது கழிந்தாலும் ‘கப்பிள் சாங்’கில் வந்து மையம் கொண்டு விடுவது அவளது மனதிற்கு வாடிக்கையாகிப் போனது. ‘இதென்னடா புது வம்பு?’ என்று எண்ணியவளுக்கு அந்த வம்பு மறைவதாய் காணோம்.
பூரணியின் முகம் அவ்வப்பொழுது தெளிவில்லாமல் இருப்பதைக் கவனித்த சரண்யா, “அருக்காணி… உனக்கு என்ன தான்’டி பிரச்சனை? ஏன் வர வர இப்படி இருக்க?” என்றாள் அவளைக் களைத்த வண்ணம்.
“சரக்கு சரக்கு நீ இது சொல்லேன்… இந்த கப்பிள் சாங் இருக்கல்ல…”
“நிறுத்து நிறுத்து… அது என்ன கப்பிள் சாங்?”
“சுத்தம் உனக்கு அதுவே தெரியாதா?” என்றாள் பூரணி சலிப்பான குரலில்.
“மொத்துனேன்னு வைய்யு இவ பெரிய களஞ்சியம். ஒத்த வார்த்தை தெரியலை அதுக்கெதுக்கு ஓராயிரம் பில்ட் அப்… முதல்ல கப்பிள் சாங் அப்படின்னா என்னன்னு சொல்லு” என்று சரண்யா முறைத்ததும், ‘புரியாட்டியும் இந்த வாயுக்கு ஒன்னும் குறைச்சலில்லை’ என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி அன்னபூரணி விளக்கத்தைச் சொன்னாள்.
முழு விவரத்தையும் கேட்டுவிட்டு, “சரி. எந்த பாட்டு நம்ம பெட்டர் ஹாஃப் நினைவு படுத்துதோ அது கப்பிள் சாங். இப்ப நமக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? நாம தான் சிங்கிள் பார்டரை இன்னும் தாண்டலையே!” என்றாள் இலகுவான குரலில் தோளைக் குலுக்கி.
அஞ்சலியும் ஆமோதிக்க… சரண்யா சில நொடிகள் அஞ்சலியைப் பார்த்தாள். பிறகுத் தன் தாடையைத் தட்டி யோசித்தபடி, “பெருச்சாளி மட்டும் இப்ப பார்டர்’ல நிக்கிறா?” என்றாள் வாயிற்குள் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்ட புன்னகையோடு.
“இப்படி எல்லாம் சொல்லாத சரக்கு” என்று சொன்ன அஞ்சலியின் முகம் சட்டென்று சோர்ந்து விட்டது.
“ஹே அவ சும்மா தான சொன்னா இதுக்கு போயி அப்செட் ஆகிட்டு…” என்று பூரணி உடனடியாக அஞ்சலியைத் தேற்றினாள். சரண்யாவும் அவள் இப்படி முகம் வாடவும் உடனே மன்னிப்பு கேட்டு விட்டாள்.
அஞ்சலியோ இனி இந்த பேச்சு, கேலி எழக்கூடாது என்பதை எண்ணி, “எனக்கு எரிச்சலா இருக்குடி. அவன் அப்ரோச் ரொம்ப போர்ஸ் பண்ணற மாதிரி. நம்பர் எப்படியோ தெரிஞ்சுட்டு இப்ப எல்லாம் மெசேஜ் பண்ணறான். நாலு நாள் பார்த்தேன். அப்பறம் பிளாக் பண்ணிட்டேன். சிலரோட பார்வை, பேச்சு எல்லாம் நமக்கு எரிச்சல் வருமே! எனக்கு இப்ப அப்படித்தான் இருக்கு. நம்ம பரிதாபம் காட்டறதோ, இல்லை கேலி பேசிக்கறதோ நமக்கே எதிரா திரும்பலாம். அதுனால பேசாம கண்டுக்காம விட்டுடலாம்டி” என்றாள் கெஞ்சுதலாக!
அவளின் நிலை புரிய, “அச்சோ சாரிடி இனி இந்த மாதிரி கண்டிப்பா பேச மாட்டேன்” என்று உடனடியாக சரண்யா சொல்லிவிட்டாள்.
இந்த சம்பாஷணைகளால் அன்னபூரணியின் குழப்பம் மேலும் அதிகரித்தது. அஞ்சலிக்கு தோன்றுவது போல, பாடலும், அவனுமான நினைவு அவளுக்கு எரிச்சலைத் தருவதில்லையே! மாறாக ஒருவித பதற்றத்தை அல்லவா தருகிறது. அதிலும் அந்த சமயத்தில் அவன் முகம், தோரணை, தோற்றம், பார்வையிலேயே அதட்டும் பாவனை என்று ஏதாவது ஒன்று மனதில் தோன்றி நீங்க மறுத்தல்லவா இம்சிக்கிறது.
அபஸ்வரமாக இருந்தால் ஒதுக்கி வைப்பது எளிதாக இருந்திருக்குமோ என்னவோ, இது சுஸ்வரம் என்று பட்டவர்த்தனமாகத் தெரிந்த பிறகு அதை அத்தனை எளிதில் அவளால் சிந்தனையிலிருந்து விலக்கி வைக்க முடியுமா? மனம் மேலும் பதற்றம் கொண்டது. கூடவே ஒருவித அச்சமும்!
‘இல்லை இல்லை கண்டிப்பா அப்படி எல்லாம் எதுவும் இல்லை! அந்த பாட்டு கேட்டா தான ஞாபகம் வரும். நான் ஏன் அதை கேட்க போறேன்? அதோட இது சும்மா ஒரு பயம்… அதுனால வர பதற்றம் அவ்வளவு தான். அவரை பார்த்தா தான் எல்லாரும் பயப்படுவாங்களே! இந்த அழகுல நான் ஏதோ உளரலா பாடி வேற வெச்சிருக்கேன். என்ன நினைச்சிப்பாரோன்னு ஒரு எண்ணம். அதுதான் இப்படி படுத்துது போல!’ அலசி ஆராய்ந்து அவளாகவே தன் தடுமாற்றத்திற்கு காரணம் தேடிக் கொண்டாள்.
அந்த எண்ணங்களின் திருப்தியில் அவசரமாகத் தோழிகளிடம், “கப்பிள் சாங் எல்லாம் ஒன்னும் கிடையாது…” என்றாள் கறார் குரலில். வீட்டில் அக்கா, அண்ணனிடம் சொன்னது போலவே!
அவளது பதிலில் அஞ்சலியும், சரண்யாவும் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தனர். “நாங்களா தொடங்கினோம். நீ தானே தொடங்கி வெச்ச?” என்றாள் அஞ்சலி அவளை ஆராய்ச்சியாய் பார்த்தபடி.
“அது பேசிட்டு இருந்தாங்கன்னு சொன்னேன். அவ்வளவு தான்! நாம இதெல்லாம் நம்பணும்ன்னு அவசியமே இல்லை” என்றாள் வெகு உறுதியாக!
அவளது முரணான பேச்சில், அடிக்கடி எதையோ சிந்திக்கும் செய்கையில், ‘இவளுக்கு கண்டிப்பா என்னவோ ஆயிடுச்சு!’ என்று உறுதிப்படுத்திக் கொண்டனர் தோழிகள்!
குரங்கை நினையாமல் மருந்து குடிக்க நினைக்கும் பூரணி வெகு விரைவில் குற்றாலத்தில் (குரங்கு சூழ் இடத்தில்) மருந்து குடிக்கும் நிலைக்குத் தள்ளப்படப் போவதை அவள் உணர்வாளா?
அன்றையதினம் மாலையில் கல்லூரியிலிருந்து இல்லம் வர அன்னபூரணிக்குச் சற்று தாமதம் ஆகியிருந்தது. காஃபி குடிக்கும் நேரம் கடந்தே வந்திருந்தாள்.
அந்த வீட்டில் அவரவர் வேலைகளை அவரவர் செய்யும்படி தான் ஜோதிமணி பழக்கி விட்டிருந்தார். ஆனால், அன்று இருந்த சோர்வில் காஃபி கலக்கும் தெம்பு இல்லாததால், “ரஞ்சிக்கா…” என்று ராகம் இழுத்தாள் சின்னவள்.
அவள் கோரிக்கைப் புரிந்து நமட்டு சிரிப்புடன், “என்ன வேணும் பூரணி?” என்று, வேண்டுமென்றே தெரியாதது போலக் கேட்டாள் மூத்தவள்.
என்ன நான் கேட்பேன் தெரியாதா?
இன்னமும் என் மனம் புரியாதா?
அட ராமா ஒரு காஃபி… இந்த பெண்ணுக்குக் கிடைக்காதா…?
ஆ… ஆஆ… ஆஆஆ…
தமக்கைக்குப் புரிந்திருக்கும் என்று தெரிந்தாலும் தன் கோரிக்கையை, வழக்கம்போல தன் பாணியில் பாட்டாகவே படித்து விட்டவளுக்கு, இதுவும் காஃபி குறித்த பாடல் என்பதால் தன்போல மனம் நீதிவாசனை நினைத்துக் கொண்டது.
‘கப்பிள் சாங்’ தானே? இதென்ன ‘கப்பிள் சாங்ஸ்ஸ்ஸ்…’ ஆயிடும் போலயே! இந்த பாட்டுக்கும் அவரே ஞாபகத்துல வராரு? இல்லை ஒருவேளை காஃபி’ன்னு வந்ததால அவரு ஞாபகத்துல வந்தாரா? அச்சோ அப்ப காஃபி ‘கப்பிள் ட்ரிங்க்’ ஆ இருக்குமோ? கடவுளே! எனக்குச் சர்க்கரையைப் பார்த்தா கூட அவர் நினைப்பு தான வருது அப்ப அது ‘கப்பிள் புரோவிஷனா?’
மனதின் குழப்பங்கள் முகத்தில் தெரிய கசப்பான கசாயத்தை முதன்முதலில் உட்கொண்ட பாவனையில், விழிகளை அகலவிரித்து முகம் வெளிறிக் காட்சியளித்தாள் அன்னபூரணி.
“என்ன பூரணி எல்லாத்துக்கும் ஒரு பாட்டை தயராவே வெச்சிருக்க?” என்று ஆசையாகக் கேலிப் பேசி அவளது பதிலுக்குக் காத்திருந்த ரஞ்சிதாவிற்கு இவளின் தோரணையில் சிரிப்புப் பொங்கியது.
“பாட்டு நல்லா இருந்தது பூரணி. நீ ஏன் இப்படி இருக்க?” எனத் தமக்கை உலுக்கவும், “அக்கா! அக்கா! அதெல்லாம் எதுவும் இல்லை தானே!” என்றாள் பதற்றமான குரலில்.
அவளை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்தபடி, “ஸ்ஸ்ஸ்… என்ன யோசனை? என்ன ஆச்சு? சரி சரி அமைதியா உட்காரு. நான் காஃபி கலந்துட்டு வரேன்” என்ற ரஞ்சிதா காஃபியை கலந்து கொண்டு வந்து அவளிடம் நீட்டினாள்.
காஃபியை பருகியவளின் தலையை ஆதரவாக வருடி விட்டு, “என்ன ஆச்சு? வர வர இந்த பார்ட் கொஞ்சம் அதிகமா வேலை செய்யுது போல!” என்றாள் தமக்கை இளையவளின் தலையைச் சுட்டிக்காட்டி.
ரஞ்சிதாவை ஒருதரம் பார்த்தவள், தலையை உலுக்கிக் கொண்டு அவள் தோளில் சாய்ந்து கொண்டாள். “ஏதேதோ யோசனை வருதுக்கா. பயமா இருக்கு” என்றாள் குரல் கமற.
புருவங்கள் சுருங்க யோசித்து விட்டு, “காலேஜ்ல எதுவும் பசங்க தொந்தரவு செய்யறாங்களா பூரணி?” என்று தணிந்த குரலில் விசாரித்தாள் மூத்தவள்.
மறுப்பாகத் தலையசைத்த பூரணி, “இல்லைக்கா… ம்ப்ச் விடு. உன்னையும் குழப்பறேன்” என்றாள் முயன்று வருவித்த இலகு குரலில்.
ரஞ்சிதாவிற்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது. இளையவளின் முகத்தை ஆழப்பார்த்து விட்டு, “கண்டதையும் நினைச்சு குழப்பிக்கக் கூடாது. எதுவா இருந்தாலும் சொல்லு. என்ன செய்ய முடியும்ன்னு பார்க்கலாம்” என்றாள் பொறுப்பான குரலில்.
கண்கள் சிரிக்க, அக்காவை அணைத்துக் கன்னத்தில் இதழ் பதித்தவள், “கண்டிப்பா க்கா. நீ கிட்ட இருந்தாலே தெம்பு வந்துடும். இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சரி நான் போயி அசையின்மெண்ட் எழுதறேன்” என்று அறைக்குள் ஓடியவளை யோசனையுடன் தொடர்ந்தது மூத்தவளின் பார்வை.
வர வர இப்படி தனக்குள் எதையோ குழப்பிக் கொண்டு மறுகுகிறாள் என்று புரிய மூத்தவளுக்குக் கவலையாக இருந்தது. எதுவும் தவறாக இருக்கக் கூடாது என்று தங்கைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டாள். ஆனால், எதுவம் நம் கைகளில் இல்லையே!
அந்த வார இறுதியில் தோழிகளோடு கடைவீதியில் ஷாப்பிங் செல்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது. அன்னபூரணி வெளியில் செல்கிறோம் என்ற பூரிப்பில் குதூகலமாக கிளம்பித் தோழிகள் வரச்சொன்ன இடத்திற்குக் குறித்த நேரத்திற்கு ஆஜரானாள்.
அவளுடையப் பட்டாளங்கள் சிறிது நேரத்தில் இணைந்துவிட, ‘எந்த கடைக்கெல்லாம் போகலாம்?’ என்னும் குட்டி ஆலோசனையைப் பழச்சாறு எடுத்துக் கொண்டே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள்.
அத்திப்பழ மில்க்ஷேக்கை நிதானமாகப் பருகியபடி தோழிகளின் தேர்வைக் கேட்டுக்கொண்டிருந்த பூரணிக்கு அவர்கள் சொன்ன கடையின் பெயரைக் கேட்டதும் புரையேறியது.
“பழனியாண்டவர் ஸ்டோர்ஸ்” என்ற தோழிகளின் குரலுக்குப் புரையேறி விடவும், “ம்ப்ச் பார்த்து குடியேன்டி அருக்காணி” என்று அஞ்சலி அவள் காதை கடித்து தலையைத் தட்டி விட்டாள்.
இருமல் நின்றதும், “வேற கடைக்கு போவோம்டி” என்று பாவமாகப் பூரணி கேட்க, அவளை அனைவரும் முறைத்தனர்.
“அங்க துணி நல்லா இருக்கும். விலையும் நார்மலா இருக்கும். எங்கம்மா அங்க தான் போகச் சொல்லியிருக்காங்க” என்றாள் ஒருத்தி முடிவாக! அனைவரும் அவளையே ஆதரிக்க, பூரணி நொந்து போனாள். பின்னே, அந்த கடையின் உரிமையாளர் நீதிவாசன் ஆயிற்றே!
இவர்கள் வீட்டிலும் அங்குதான் ஆடைகள் வாங்குவது. ஆனால், இப்படி இவள் மட்டும் தனியாக வந்தபோது அங்குச் செல்வது? அதையும் விடவும் அவனைக் காண்பது? நினைக்கும்போதே உள்ளுக்குள் படபடப்பு ஏற்பட்டு அடங்க மறுத்தது.
தோழிகள் வேறு உறுதியாக இருக்க, வேறு வழியின்றி அமைதியாக அவர்களோடே சென்றாள். அவன் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று ஓராயிரம் வேண்டுதல்களுடன் கடைக்குள் சென்றவளின் பார்வை, பதற்றத்துடன் கடை முழுவதும் அலசியது.
“என்ன ஆச்சு பூரணி ஏன் இப்படி வேர்க்குது உனக்கு?” என்று சரண்யா கேட்கவும், தன்நிலை புரியக் கைக்குட்டையால் தன் முகம் முழுவதும் ஒற்றி எடுத்தவள், “ஒன்னுமில்லை சரண்” என்று அவசரமாகப் பதில் தந்தாள்.
அவளது செய்கையில் இருந்த வித்தியாசத்திலும், குரலின் தடுமாற்றத்திலும், “என்ன ஆச்சு பூரணி? தண்ணி எதுவும் வேணுமா?” என்று சரண்யா மீண்டும் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள்.
தோழியை ஆராய்ச்சியாய்ப் பார்த்த வண்ணம், “வர வர நீ சுத்தமா சரியில்லை” என்று முணுமுணுப்பவளை என்னச் சொல்லிச் சமாளிக்க என்று பூரணிக்குத் தெரியவில்லை.
வீட்டிலும், கல்லூரியிலும் நீதிவாசனின் நினைவால் மாற்றி மாற்றி அனைவரிடமும் இதே குற்றச்சாட்டைத் தான் வாங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுக்கே தன்நிலை உவப்பாக இல்லை. எதுவும் செய்ய இயலாத இயலாமையில் பெருமூச்சு எழுந்தது.
அவர்கள் சென்ற தளத்தில் நீதிவாசன் கண்ணில் படவில்லை என்றதும் சற்று நேரத்தில் இயல்புக்குத் திரும்பியவள், தோழிகளோடுச் சேர்ந்து ஆர்வமாக ஆடைகளைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள்.
கடை வழக்கமாகவே சற்று கூட்டமாகத் தான் இருக்கும். இன்று விடுமுறை தினமும் என்பதால், நிறைய வாடிக்கையாளர்கள் இருந்தனர். இத்தனை கூட்டத்தில் நம்மைத் தெரியப் போகிறதா என்று ஆசுவாசம் எழ, அவளுடையப் பதற்றம் சற்று விலகியது.
ஆடைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் ஆளுக்கு ஒரு பக்கம் நகர்ந்திருக்க, “இங்க சர்க்கரை எல்லாம் விக்கிறது இல்லை” என்ற அழுத்தமான கம்பீரக்குரல் பூரணியைச் செயலிழக்க வைத்து சிலைப்போல் மாற்றியது.
இத்தனை நேரம் விலகியிருந்த பதற்றம் பல மடங்கு வேகமாய் திரும்பி வந்திருக்க, விரலின் நுனியைக் கூட அவளால் அசைக்க முடியாதுப் போயிற்று!
“அதோட சர்க்கரை விலையும் ஐம்பது ரூபாய் இல்லை போலவே! நாற்பதுன்னு கேள்விப்பட்டேன்!” என்று மீண்டும் சீண்டல் குரலில் அவளின் பின்புறமிருந்து நீதிவாசன் வினவினான்.
தன் குரலைக் கேட்டும் திரும்பாமல் நின்றிருந்தவளை ஆராய்ச்சியாய்ப் பார்த்தவன், “ஏன் வீட்டுல சொல்லாம வந்திருக்கியா?” என்று கடுமையானக் குரலில் கேட்டான்.
வேகமாகத் திரும்பியவள், “இல்லை இல்லை சொல்லிட்டுத் தான் வந்திருக்கேன்…” என்றாள் பதற்றத்துடன். மீண்டும் முகம் வியர்க்கத் தொடங்கி விட்டது. உள்ளங்கையும் வியர்த்திருக்கக் கைக்குட்டையைக் கூட நழுவ விட்டு விடுவோம் என்னும் பயம் எழுந்தது.
கைகளை இறுக மூடி, ஏசியின் குளுமையிலும் வியர்க்க நின்றவளை விசித்திரமாகப் பார்த்தவனுக்கு, “எதற்கிந்த பயம்?” என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் நிற்க, அவளே பேசினாள்.
“சாரி அன்னைக்கு நீங்க வந்ததை கவனிக்கலை” என்றாள் வெகுவாக தணிந்த குரலில். இவள் கத்திப் பேசுவதைக் கேட்டே பழக்கப் பட்டிருந்ததால், அவனுக்கு இந்த குரல் வெகு வித்தியாசமாய் தெரிந்தது.
‘அதற்குத்தான் பயமா?’ என்று எண்ணியதை வெளிப்படுத்திக் கொள்ளாமல், “சரி பர்சேஸ் பண்ணு. பில் போடும் போது கவுன்டர்ல என்கிட்ட பேச சொல்லு…” என்றுவிட்டு நகர எத்தனித்தவனை, “இல்லை…” என அவசரமாக மறுத்து நிறுத்தினாள்.
செல்ல இருந்தவன் மீண்டும் இவள் புறம் திரும்பி நிற்க, “இல்லை… பிரண்ட்ஸ் கூட வந்திருக்கேன். இப்ப எதுவும் டிஸ்கவுண்ட் வேணாம்” என்றவளை மெல்லிய கோபம் எழப் பார்த்தான் அவன்.
அவன் முகமாற்றம் புரியவும், “அது கேலி… அது… வந்து… ‘நீங்க பெரிய ஆளு, கடை ஓனர்’ன்னு எல்லாம் சொல்லி கேலி பேச ஆரம்பிச்சுடுவாங்க… அதான்… அதோட ஒருமுறை இப்படி சலுகை கிடைச்சா மறுபடியும் இதையே எதிர்பார்ப்பாங்க…” என்று தயக்கமாக உரைத்தவளிடம் மேற்கொண்டு வற்புறுத்தாமல், “ஹ்ம்ம் சரி… வரேன்” என்று சொல்லி விடை பெற்றான் அவன்.
அவனுக்குக் கோபம் போயிருந்தது புரிந்தது. இப்பொழுது விலகிப் போகவும் மூச்சுக்காற்று கூட சீரானது போல உணர்ந்தாள். ஆனாலும் அவன், தன் பார்வையில் விழாத தூரம் சென்றிருக்கவும் ஏனோ மனம் சற்று ஏமாற்றம் அடைந்தது போல உணர்ந்தாள்! அதற்கான காரணம் புரிந்தும் புரியாத நிலை!
வழக்கம்போல, ‘அதெல்லாம் எதுவும் இல்லை!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். இவனைப் பார்ப்பதை இனி தவிர்ப்பது உத்தமம் என்று அவளின் மனம் அவளுக்கு ஆருடம் சொன்னது.