விசுவின் ‘ராசியில்லா ராணி – ஆறாம்ப்பூ டீச்சர்!’
“அந்த ஆறாம்ப்பூ ராணி டீச்சரை ஏன் எல்லாம் ராசியில்லா ராணின்னு சொல்றாங்க”?
“நீ ஸ்கூலுக்கு புதுசா? “
“ஆமாம்”
“அதான் உனக்கு தெரியல!, பாவம் அவங்க! கொஞ்ச வருசத்துக்கு முன்னால கல்யாணாமாச்சாம். அப்புறம் ஒரே வருசத்துல ஒரு பையன் பாப்பா.. அப்பாவும் பாப்பாவும் ஒரு நாள் சைக்கிளில் போகும் போது லாரியில் அடிபட்டு செத்துட்டாங்களாம்!”
“அதுக்கு இவங்க எப்படி ராசியில்லா ராணி ஆனாங்க?”
“என்னமோ தெரியல.. ஜாதகம் அது இதுன்னு சொல்லுவாங்க, காலையில் இவங்க எதிரில் வந்தா கூட நாளே நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க”
ராணி டீச்சரை கவனித்தான். முகத்தில் எப்போதும் ஒரு சோகம் இருந்தாலும் அதையும் மீறி ஒரு சமாதானம்.
என்னமோ தெரியல. சில பேரை பார்த்தவுடன் அவங்கள பத்தி ஒண்ணுமே தெரியாவிட்ட்டாலும் அவங்களை பிடித்து விடும் அல்லவா, அப்படி ஒரு பாசம் அவர்கள் மேல் இவனுக்கு வந்து விட்டது.
புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபிபில் போட முடியாத மாணவ மாணவியர்களுக்கு காக்கி நிறத்தில் அட்டை வாங்கி கேமல் லேபிலும் அவர்கள் செலவிலே வாங்கி..
“உங்களுக்கு யார் யாருக்கு அட்டை போட தெரியுமோ, என் வீட்டுக்கு சாயங்காலம் வாங்க. எல்லார் புத்தகத்துக்கும் அட்டை போடலாம் “
என்று கூற,
இவனுக்கு தான் உலகத்தில் தெரியாத விஷயமே இல்லையே.. அட்டை போடுவது என்ன ஜுஜுபி, அதுமட்டுமில்லாமல் அந்த டீச்சர் மேல் ஒரு பாசம், போகலாம் என்று சென்றான்.
இல்லத்தில், இவனுக்கும் முன்பாகவே, சில மாணவ மாணவிகள். அட்டை போட்டு கொண்டு இருந்தார்கள்.
“வா, உக்காரு. புதுசா வந்த ஸ்டுடென்ட் தானே நீ !”
“”ஆமாம் டீச்சர்””
அந்த வீட்டை நோட்டமிட்டு கொண்டே அட்டை போட ஆரம்பித்தான்.
வீட்டின் வெளியே “நல்வரவு”
கதவில் ” Late Mr .கருணாமூர்த்தி BA , B Ed “
அருகில் இருந்த மாணவியிடம் கேட்டான்.
“அது, கருணாமூர்த்தி தான் இவங்க புருஷனா? “
“ஆமாம் அவரும் டீச்சரா தான் இருந்தார். சைக்கிளில் …!!”
“தெரியும்!”
“அவர் பேருல போர்டு வைச்சி இருக்காங்களே.. இவங்க பேருக்கு ஏன் வைக்கலை? “
“இவங்க அவரோட நிறைய படிச்சவங்களாம், அதனால வைக்கலைன்னு எங்க அம்மா சொன்னாங்க”
“அந்த சைக்கிள் விபத்து எப்படி ஆச்சி!!!?”
“ஒரு சனி கிழமை இவங்க வீட்டுல இருக்கும் போது மார்க்கெட்டுக்கு அவரும் பையனும் போகும் போது லாரியில்..”
“அங்கேயே செத்துட்டாங்களா….?”
“பையன் அங்கேயே செத்துட்டான், வாத்தியார் ரெண்டு மாசம் ஹாஸ்பிடலில் இருந்தார்”
“ரெண்டு மாசம்?”
“அந்த ரெண்டு மாசத்துல ஊரே அவருக்காக வேண்டிகிச்சி”
“ரொம்ப நல்லவரா?”
“ஆமாம்… டீச்சர் கூட அவரு ஹாஸ்பிடலில் இருக்கும் போது, ஆண்டவனே இவரை காப்பாத்து, நான் இனிமேல் கவுச்சி கூட சாப்பிடமாட்டேன்னு வேண்டிக்குணங்களாம் ?”
“அப்படியும் செத்துட்டாரே!!?”
“ஹ்ம்ம்… “
“அவரு செத்த உடனே கூட இவங்க கவுச்சி சாப்பிடுறதில்லை”
“கவுச்சி சாப்பிடுறது இல்லையா? அப்புறம் வீடு முழுக்க கோழி.. அதுல ஒன்னு அடை காக்குது,வேற!”
“கோழி வளர்த்து விக்கிறாங்க, கருணா சார் இருக்கும் போது செய்வார், அதை தொடர்ந்து செய்றாங்க”
“ஹ்ம்ம்..”
“அந்த கோழி அடை காக்குறதுல கூட இவங்க தான் ரொம்ப ராசியில்லாம இருப்பாங்க..?”
“புரியல!!!”
ஒவ்வொரு முறையும் கோழி ஒரு பதினாலு முட்டை அடை காக்கும்.ஒவ்வொரு முட்டையிலும் எங்க ஒவ்வொருத்தர் பேரை எழுதி வைப்பாங்க.”
“எதுக்கு”
“விளையாட்டுக்கு!, யார் கோழி முட்டை பொறிக்குதுன்னு பாப்போம்”
“ஹ்ம்.. அதுல கூட இவங்களுக்கு என்ன ராசி இல்லைனு சொன்ன?”
“ஒவ்வொரு முறையும் எங்க எல்லார் பேர் போட்ட முட்டையும் பொரிச்சிடும், இவங்க முட்டை அழுகி இருக்கும்”
“ஓ.. பாவம்”
“இன்னைக்கோட அடை காக்க ஆரம்பிச்சி இருபது நாளாச்சு, நாளைக்கு காலையில் பொரிச்சிடும். என் பேர் கூட இருக்கு. அடுத்த முறை உன் பேரையும் போடுவாங்க”
வேலை முடிய கிளம்பினான்.
பாவம் அந்த டீச்சர்.. புருசனும் போயாச்சு.. பிள்ளையும் போயாச்சு. இவங்க பேருல வைச்சா ஒரு கோழி குஞ்சு கூட பிழைக்க மாட்டுது. என்ன ஜாதகமோ.. ராசியோ…
அதிகாலையில் கொஞ்சம் சீக்கிரமே தூக்கம் கலைய, சரி சீக்கிரமே போய் அந்த டீச்சர் வீட்டு கோழி பொரிச்சிடுச்சான்னு பாக்கலாம்னு கிளம்பினான்.
முன் கதவு திறந்து இருக்க, உள்ளே டீச்சர் அந்த அடை கோழியை சற்று அதட்டி தட்டி வெளியேற்ற, புத்தம் புதுசாக வெவ்வேறு நிறத்தில் வெவ்வேறு டிசைனில் கோழி குஞ்சுகள். அதன் நடுவில் ஒரு முட்டை மட்டும் பொரிக்காமல்.
டீச்சர் சுற்றும் முற்றும் நோட்டமிடுவதை பார்த்த இவன் கதவிற்கு பின் மறைந்தான்.
உடைந்த முட்டை ஓடுகளை அகற்றிவிட்டு பொரிக்காமல் இருந்த முட்டையை காதருகே வைத்த டீச்சர் மீண்டும் அந்த முட்டையை கூர்ந்து பார்த்து விட்டு சோகமாக அதை குப்பையில் எரிந்து விட்டு அருகே இருந்த அரிசி பானையில் கையை விட்டு அதில் இருந்த ஒரு முட்டையை எடுத்து ஏதோ எழுதி குஞ்சுகளுக்கு நடுவில் வைக்க,
இவனோ குழம்ப..
மற்ற மாணவ மாணவியரும் அடித்து பிடித்து அங்கே ஓடி வர… அனைவரும் அந்த அடை கோழியை அகற்றி விட்டு குஞ்சுகளை பார்க்க, ஒரு முட்டை மட்டும் பொரிக்காமல் .. அதில் டீச்சர் பெயர்!
“நான் நேத்தே சொல்லல, அவங்க ராசி இல்லாதவங்க. அவங்க பேரு முட்டை மட்டும் பொறிக்கல, இவங்க ரொம்ப நல்லவங்க தான் ஆனாலும் ராசி தான் இல்லை..”
அனைவரும் அந்த கோழி குஞ்சுகளை பார்த்து கொண்டு இருக்கையில் இவனோ அந்த குப்பையில் இருந்த அழுகிய முட்டையை பார்த்தான். அதில் டீச்சர் பெயர் இல்ல, வேறு ஏதோ பெயர்!
பல வருடங்களுக்கு பின், தான் வாழ்வின் முக்கியமான இறுதி பரீட்சைக்கு பட்டணத்தில் இருந்து எந்த தடையும் இல்லாமால் நிம்மதியாக படிக்க கிராமத்திற்கு வந்த அவன், இரண்டு மாசம் கருமமே கண்ணாயிரம் என்று படித்து பரீட்சைக்கு மீண்டும் பட்டணம் போக கிளம்பி, போகும் வழியில், டீச்சர் வீட்டு கதவை தட்டினான்.
“வா, எப்ப பரீட்சை!!?”
“நாளைக்கு டீச்சர், அதுக்கு தான் போறேன், உங்கள பார்த்துட்டு உங்க ஆசிர்வாதத்தோட, போகலாம்னு..”
“என் ஆசிர்வாதத்தோடவா? பழைசை எல்லாம் மறந்துட்டியா.. நான் இன்னும் ராசியில்லா ராணி தான்,”
“அது மத்தவங்களுக்கு டீச்சர்.. எனக்கு நீங்க ரொம்ப ராசி”
டீச்சர் ஆச்சர்யமாக சிரிக்கையில், அடை காத்த கோழியின் சப்தத்தை கேட்டு..
“இன்னும் முட்டையில் பேரை எழுதி வைக்கிறீங்களா, டீச்சர்!!?”
“ஹ்ம்ம்.. நான் வைக்காட்டியும் இந்த பிள்ளைங்க விட மாட்டாங்க””
“டீச்சர், நான் கேட்டது, இன்னும் அந்த பொரிக்காத முட்டையில் உங்க பேரை எழுதி வைக்குறீங்களா?”
அதிர்ந்தார்கள் ..
“நான் பாத்துட்டேன் டீச்சர்..”
டீச்சரின் கண்கள் கலங்கியது ..
“ஏன் டீச்சர்?”
“யாருக்கும் விளையாட்டுக்கு கூட “ராசியில்லனு” ஒரு பேரு வந்துட கூடாது. அது தாங்க முடியாத வலி”
இவன் கண்களும் கலங்க..
“சரி, உங்க வாயாலே “நான் பாஸாயிடுவேன்னு சொல்லிட்டு ஒரு ஜெபத்தை பண்ணி அனுப்புங்க”
அனுப்பினார்கள்.
அந்த ராசியில்லா மகாராணியின் மகராசியினால் அன்றில் இருந்து இவன் தொட்டதெல்லாம் துலங்கியது
1 thought on “விசுவின் ‘ராசியில்லா ராணி – ஆறாம்ப்பூ டீச்சர்!’”
Leave a Reply
You must be logged in to post a comment.
ஜெபத்தப் பண்ணி அனுப்புங்க என்பதற்கு பதிலாக ஒரு தேவாரப் பாடலைப் பாடி அனுப்புங்க என்று எழுதியிருக்கலாம். ஜெபம் சமஸ்கிருதம். தேவாரம் தமிழ்.