Tamil Madhura Uncategorized சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 02

சுகமதியின் வேப்பம்பூவின் தேன்துளி – 02

வேப்பம்பூவின் தேன்துளி – 02

 

சுட்டெரிக்கும் ஆதவனின் வெப்பத்தை கிஞ்சித்தும் மதியாமல் அந்த கல்லூரி வளாகம் சிறு சிறு குழுக்களான மாணவ, மாணவியர்களால் நிரம்பி வழிந்திருந்தது. அது மதிய உணவு இடைவேளைக்கான நேரம்!

 

தோழியர்களோடு உணவருந்த வழக்கமாக அமரும் மரநிழலைத் தேடித் தஞ்சம் புகுந்தாள் அன்னபூரணி.

 

“என்னடி இன்னைக்கு சத்தத்தையே காணோம். என்ன யோசனை உனக்கு?” சரண்யா பூரணியிடம் கேட்டபடியே அவளருகே அமர்ந்தாள்.

 

“ம்ப்ச்…” என்றபடி இடதுக்கரத்தை மேலிருந்து கீழ்நோக்கி அசைத்த வண்ணம் சலித்தவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

 

அவளது மனநிலை சுத்தமாகச் சரியில்லை என்பதை உணர்ந்து, “என்னடி பெருச்சாளி இவளுக்கு என்னவாம்?” என்றாள் சரண்யா அஞ்சலியைப் பார்த்து!

 

தன்னை பட்டப்பெயர் சொல்லி அழைப்பதால் எரிச்சலடைந்த அஞ்சலி, “சரக்கு… சாணி… என்னை எதுக்குடி இழுக்கிற. இன்னைக்கு மட்டம் போடணும்ன்னு நேத்து சொல்லிட்டுப் போனாளே… வீட்டுல நல்லா மொத்தி அனுப்பி விட்டிருப்பாங்க. அதுக்கு இந்த அருக்காணி இப்படி இருப்பாளா இருக்கும்” என்று முகம் சுளித்தபடி கூறினாள்.

 

இப்பொழுது தன் பட்டப்பெயர் காதில் விழுந்ததும் பூரணிக்குச் சொரணை வந்தது போல! சுட்டுவிரலைக் காதினுள் விட்டு வேகமாக ஆட்டி குடைந்தபடியே, “என்ன சரக்கு கேட்ட… பாட்டு பாடணுமா? நேயர் விருப்பமா?” என்று சொல்லிவிட்டு தங்களை சுற்றி ஆங்காங்கே உணவுண்ண அமர்ந்திருந்தவர்களைப் பார்வையிட்டபடியே, “இந்த கூட்டம் போதும் தானே பாடிடவா” என்று திருவாய் மலர்ந்தாள். இத்தனை நேரம் இருந்ததற்கு நேரெதிர் தோரணை!

 

பூரணி, அஞ்சலி சொன்ன பட்டப்பெயரில் கோபம் கொண்டு அவளைச் சீண்டப் பார்க்கிறாள் என்று புரிந்து கொண்ட சரண்யா வாயைப் பொத்தி சிரிக்க, அஞ்சலி அவசரமாக எட்டி பூரணியின் வாயை அடைத்தாள்.

 

இவர்கள் மூவரின் ஆர்ப்பாட்டத்தில், “ஹே என்னடி பாட்டு?” என்று ஆர்வமாய் மீதம் இருந்த தோழியர்கள் கேட்க, சரண்யாவிற்கு அந்த பாட்டை மனதிற்குள் எண்ணிப் பார்த்ததும் சிரிப்பே குறையவில்லை.

 

இவர்கள் வகுப்பில் கூடப்படிக்கும் சம்பத் என்பவன், அஞ்சலியை நூல் விட்டுக் கொண்டிருப்பதால், மூன்று நாட்கள் முன்பு தான் “அஞ்சலி… அஞ்சலி… என்னுயிர் காதலி…” என்று டூயட் படத்தில் வரும் எஸ்.பி.பி. ஹைபிட்சில் பாடும் பாடல் வரிகளை ஸ்டேட்டஸாக வைத்திருந்தான்.

 

அதை சரண்யா வந்து அடுத்த நாள் பூரணியிடம் சொல்லி… அந்த ஸ்டேட்டஸையும் காட்டி இருக்க, அதைப்பார்த்து விழுந்து விழுந்து சிரித்த பூரணி, அதே ஹைபிட்சில்,

 

“அஞ்சலி… அஞ்சலி… என்னுயிர் பெருச்சாளி…” 

 

என்று பெருங்குரலெடுத்துப் பாடியிருந்தாள். காலை நேரம் என்பதால் கல்லூரிக்கு அதிக மக்கள் வரவில்லை. வந்தவர்களும் அரட்டையில் இருக்க , இவள் பாடியதைப் பெரிதாக யாரும் கவனிக்கவில்லை. என்னமோ சத்தம் என்று மற்றவர்கள் திரும்பி பார்ப்பதற்குள் பூரணி பாடிய ஒற்றைவரி முடிந்து, அவள் அஞ்சலியின் அடிக்கு அகப்படாமல் ஓடிக் கொண்டிருந்தாள்.

 

அப்பொழுதே அஞ்சலி அவளை உருட்டி, மிரட்டி, கெஞ்சிக் கூத்தாடி இனி இப்படிப் பாடக்கூடாது என்று சொல்லி வைத்துத்தான் ஓய்ந்தாள்.

 

அந்த பாடல் வரிக்கான பஞ்சாயத்து தான் இப்பொழுதும்!

 

அஞ்சலியின் கையை விலக்கிய பூரணி, “விடுடி நீ மட்டும் என்னை அருக்காணின்னு சொல்லற…” என முறைப்புடன் கேட்டாள்.

 

“சரி சரி தெரியாம சொல்லிட்டேன். சாப்பிடுவோம். நீயும் அந்தப்பாட்டைப் பாடக்கூடாது” என டீல் பேசி உணவில் கவனம் ஆனாள் அஞ்சலி.

 

பூரணியும் உணவில் கவனம் வைத்தாலும், “எனக்குள்ள இருக்க கவிதாயினியைப் பத்தி உங்களுக்கெல்லாம் தெரியலை…” என்றாள் இழுத்து நிறுத்தி.

 

“ஆமாம் ஆமாம் இருக்கிற எல்லா பாட்டையும் கொலை பண்ணற திறமை யாருக்கு வரும்?” என அஞ்சலி தன் வாயிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

 

அஞ்சலி முணுமுணுப்பதும் சரி தான்! பூரணி எந்த பாட்டையும் உள்ளது உள்ளபடி பாட மாட்டாள். அனைத்தையும் ரீமிக்ஸ் தான்! இவளாகவே ஏடாகூடமாக வரிகளைப் போட்டு பாடுவாள். அதுவும் அவளது வெண்கலக் குரலை வைத்துக் கொண்டு பாடினால் ஊருக்கே வேறு கேட்குமே!

 

தோழிகளோடு கேலியும், சிரிப்பும், விளையாட்டுமாய் உணவு இடைவேளை கழிந்ததில், பூரணிக்கு நீதிவாசனின் நினைவுகள் சற்று மட்டுப்பட்டிருந்தது. மதியத்திற்கு மேல் அவள் வீட்டிற்கு விலக்கு வேறு ஆகிவிட்டதால் அந்த சோர்வில் அவன் எண்ணங்கள் முற்றிலுமாக மறைந்திருந்தது. அவன் மாலையில் வீட்டிற்கு வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதையும் சுத்தமாக மறந்திருந்தாள்!

 

பூரணியின் சோர்வை கவனித்து, “என்னடி இப்படிச் சோர்ந்து தெரியற. இந்தா கொஞ்சம் வெந்தயம் வாயிலை போட்டு தண்ணியைக் குடி” என்று அஞ்சலி தர, அவளும் மறுக்காமல் வாங்கி போட்டுக் கொண்டாள்.

 

கூடவே, “இன்னைக்குத் தைப்பூசம் அஞ்சு. ஊரே விசேஷமா இருக்கும். இன்னைக்குத் தான் இப்படி ஒதுங்கி இருக்கணுமா?” என்று பூரணி கவலையான குரலில் பெருமூச்சு விட்டாள்.

 

பூரணி அவர்கள் ஊரில் காவடி தூக்கி பழனிக்கு நடந்து செல்பவர்களையும், அதையொட்டி நடக்கும் விசேஷங்களையும் ஒரு வாரமாக வாயோயாமல் சொல்லிக் கொண்டும், இந்த தினத்தை ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டும் இருந்ததை அஞ்சலியும் அறிவாளே! இருந்தும் சமாதானக் குரலில், “விடுடி அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்” என்றாள் ஆதரவாக.

 

உடல் சோர்வு ஒருபுறமும், கோயிலுக்குச் செல்ல இயலாது என்றதில் எழுந்த மனச்சோர்வு ஒருபுறமுமாய் வீடு வந்து சேர்ந்தவள், தலைக்கு ஊற்றி, காதோர முடிகளை மட்டும் கிளிப்பில் அடக்கி மீதியை விரியவிட்டு உலர வைத்துக் கொண்டிருந்தாள்.

 

முத்துச்செல்வம் ஏற்கனவே கோயிலுக்குச் சென்றிருந்தார். பூரணிக்குத் துணைக்கு இருப்பதாகச் சொன்ன ஜோதிமணியையும், ரஞ்சிதாவையும், “நீங்க கோயிலுக்குப் போங்க. நான் இருந்துப்பேன்” என்று வற்புறுத்திச் சொல்லி அனுப்பி வைத்தாள். தான் போக முடியாத சூழலுக்கு அவர்களும் ஏன் கோயில் விசேஷத்திற்குப் போகாமல் இருக்க வேண்டும் என்று எண்ணம் அவளுக்கு!

 

இவர்கள் ஊரில் மூன்று ராஜ காவடிகளையும், நிறையச் சாதாரண காவடிகளையும் சுமந்து கொண்டு பழனி திருஸ்த்தலுக்கு மூன்று நாள் பிரயாணமாகப் பாதயாத்திரை செல்வது வழக்கம். காவடிகள் சுமக்காமல் பாதயாத்திரை செல்பவர்களும் இருக்கிறார்கள்.

 

பாதயாத்திரை தொடங்கும் முன்னர், காவடிகளுக்குப் பூஜை நடந்து, மத்தள முழக்கங்களோடு பாதயாத்திரை செல்பவர்களை ஊர் எல்லைவரை சென்று ஊர் மக்கள் அனைவரும் வழியனுப்பி வைப்பார்கள். பிரசாதமாக இரவு உணவும் கோயிலின் பூஜை சமயத்திலேயே அனைவருக்கும் வழங்கி விடுவார்கள்.

 

மத்தள முழக்கமும், கோயில் பூஜையும், பிரசாதமும் கடந்த எட்டு தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருப்பது தான்! பெண் பிள்ளைகள் ஆங்காங்கே கும்மியடித்துப் பாடுவதும் இந்த எட்டு நாட்களில் நடக்கும் வழக்கம் தான்!

 

இன்றையதினம் பழனிக்கு அனைவரையும் வழியனுப்பி வரவே மணி இரவு பத்தை தாண்டிவிடும். பழனிக்கு வழியனுப்பும் தைப்பூச தினமான இன்றுதான் கடைசி நாள் கும்மியடிப்பதும், அதையொட்டி பெண்கள் மட்டுமாக விளையாடுவதும் இருக்கும். பொதுவாக விளையாட்டுகள் நள்ளிரவு வரை அரங்கேறும். பெண்கள் என்றால் வயதுப்பெண்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் இருக்கும் திருமணமான மகளிரும் இதில் இணைந்து விளையாடுவார்கள். ஒரே ஒரு விதி அந்த நேரத்தில் ஆடவர்கள் யாரும் வெளியில் வரக்கூடாது!

 

கோ கோ, கபடி கபடி, கொலை கொலையா முந்திரிக்கா, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள் களைகட்டும்.

 

இதில் எதிலுமே தன்னால் இன்று பங்குபெற முடியாது என்றபோதும், “சரி அடுத்த வருஷம் பார்த்துப்போம்” என்று பூரணி தன்னைத்தானே தேற்றிக் கொண்டவள், உடல் சோர்வில் ஏழு மணிக்கே தோசையை வார்த்துப் பொடி வைத்து உண்ணத் தொடங்கினாள்.

 

கோயிலுக்கு சென்றிருந்ததால் அனைத்து வீடுகளிலும் விசைத்தறி நிறுத்தப்பட்டு அதுவொரு நிசப்தமான வேளை! தொலைக்காட்சியை உயிர்ப்பித்துப் பாடல்களைக் கேட்டுக்கொண்டே உண்டுமுடித்து அனைத்தையும் இவள் ஒதுங்க வைத்த நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்தது.

 

கும்மென்ற இருட்டு மிரட்சியைத் தந்தது. சாமியறையில் தீபம் சுடர்விடும் மெல்லிய ஒளி மட்டுமே அவ்விடத்தில்! சமையலறையில் வழக்கமாக மெழுகுவர்த்தி வைக்கும் இடத்தில் மெல்லத் துழாவி மூன்று மெழுகுவர்த்திகளை எடுத்துக் கொண்டாள்.

 

ஒன்றை சமயலறையிலும், ஒன்றை மாடிப்படிகளில் வெளிச்சம் பரவும் வண்ணம் அங்கிருந்த ஜன்னல் மேலும் வைத்தவள், கீழ்த்தளத்தை நோக்கி… உணவுண்ணும்போது தொலைக்காட்சியில் போட்ட பாடலை தனக்கேற்றபடி வரிகளை மாற்றிப் போட்டு உச்சஸ்தாதியில் பாடிக் கொண்டே சென்றாள்.

 

“சக்கரை இனிக்கிற சக்கரை… அதை அம்பது ரூபாய்க்கு நீயேன் விக்கிற…

நீ விக்கிற… நான் வாங்குறேன்… நீ விக்கிற… நான் வாங்குறேன்… 

நடுவுல காஃபி வெச்சு தரச்சொல்லி… நீ ஏன் கேக்கிற?

காஃபி வெக்க… காஃபி வெக்க… தெரியாது… தெரிஞ்சாலும் வெச்சு தர முடியாது…

நீ வெச்சுக்குடு வெச்சுக்குடு குடிச்சிக்கிறேன்…

நூறு மார்க்கு உனக்குப் போட்டு கொடுக்கிறேன்… றேன்… றேன்… றேன்…”

 

என்று உச்சஸ்தாதியில் அவள் பாடிக்கொண்டிருக்க, வாயிலில் நீதிவாசன் நின்று கொண்டிருந்தான்.

 

சற்றுமுன்பு தான் இந்த வீதிகளின் நிசப்தத்தை உள்வாங்கியபடி, இருளை விரட்டியபடி நீதியின் வாகனம் வந்திருந்தது. ஏற்கனவே பூரணிக்குப் பெரிய தொண்டை, இதில் யாருமற்ற நிசப்தமும், விசைத்தறிகள் இயங்காத அமைதியும் அவள் குரலை மைக்செட் இல்லாமல் ஒலிப்பிக் கொண்டிருக்க… அந்த பாடலைத் தொடங்கும்போதே வாயிலுக்கு வந்திருந்தவன், அதை முழுவதும் கேட்டுக்கொண்டே தான் வாயிலிலேயே நின்றான்.

 

அவளோ அவனை இன்னமும் கவனிக்காததால் பாடலை மறு ஒலிபரப்பு செய்தபடியே, தரைத்தளத்தில் இருந்த ஜன்னலில் இன்னொரு மெழுகுவர்த்தியை வைத்தாள்.

 

அப்பொழுது கையிலிருந்த தீப்பெட்டி தவறி விழுந்திருக்க, அதை அவள் எடுக்கக் குனிந்த நேரம்…. அவள் மீண்டும் அதே பாடலை மறு ஒலிபரப்பு செய்ததால், ‘இதேதடா… இவள் நம்மைக் கவனிக்க மாட்டாள் போல’ என்று நினைத்த நீதி, “அத்தை, மாமா இல்லையா?” என்று சற்று குரல் உயர்த்தி கேட்டான். அவள் பாட்டுச் சத்தத்தில் இவன் குரல் எட்ட வேண்டுமே! அவள் கீழே குனிந்திருந்ததை அவன் கவனிக்கவில்லை.

 

திடீரென்று அவனின் குரல் கேட்கவும் பூரணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. பாடிக் கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு அவசரமாக எழுந்த வேளையில் விசைத்தறியின் ஓரம் நெற்றியில் நன்கு இடித்திருந்தது.

 

அத்தனை கனமான இரும்பில் தலையை இடித்துக் கொண்டதால் கொடும் வலி தர, “அம்மா…” என்ற அலறலுடன் நிற்க வலுவில்லாமல் அங்கேயே சோர்ந்து அமர்ந்து விட்டாள்.

 

அவளின் அலறல் கேட்கவும் “அன்னம்…” எனப் பதறியவன் மொபைல் டார்ச்சை ஆன் செய்தபடி வீட்டிற்குள் விரைந்திருந்திருந்தான்.

 

அவளுக்கு ஏற்கனவே இருந்த உடல் சோர்வு ஒருபுறம் இப்பொழுது தலையிலும் நன்கு இடித்துக் கொண்டதால் தலை சுற்றுவது போல இருக்க, கிட்டத்தட்ட அரைமயக்க நிலையில் சுவற்றில் சாய்ந்திருந்தாள்.

 

‘வீட்டில் யாரும் இருப்பது போலக் காணோம். இவள் வேறு இப்படிக் கிடக்கிறாளே!’ என்று பதறியவன் அவளருகே அமர்ந்து, “அன்னம் என்ன ஆச்சு?” என்று பதற்றமாகக் கேட்டான்.

 

அவளால் பேச முடியவில்லை. வலது கரத்தை மட்டும் உயர்த்தி வலது நெற்றியைக் காட்டினாள். “அச்சோ என்ன இப்படி இடிச்சிருக்க. சரி வா மேல வந்து படு. நான் மாமாவுக்கு போன் போடறேன். எழுந்திரு” என்று சொன்னபடியே கைப்பேசியை இயக்கி முத்துச்செல்வத்தை அழைக்க, அவர் கோயிலில் பூஜை நடைபெறும் இடத்தில் இருந்ததால், அந்த சத்தத்தில் அவருக்குக் கைப்பேசி சத்தம் கேட்கவில்லை.

 

பூரணியும் எழாமல் இருக்க, “ம்ப்ச் எழுந்திரு. இப்படி இருட்டுல உட்கார்ந்துட்டு…” என்றான் சலிப்பான குரலில்.

 

அவள் தன் இரு கைகளையும் ஊன்றி எழ முயற்சிக்கத் தலை இன்னும் நன்கு சுற்றியது. எழவே முடியவில்லை.

 

“முடியலையா? இப்படியா இடிச்சுப்ப. சரி எழுந்திரு” என்று அவளது கரங்களைப் பற்றி எழுந்து நிற்க உதவி செய்தான். எழுந்தவளால் நிற்கக் கூட முடியவில்லை. மீண்டும் தடுமாற, “ம்ப்ச்… என்ன பண்ணி வெச்சிருக்க. கவனமா இருக்க வேண்டாமா?” என்றவன் எதுவும் யோசிக்காமல் அவளை கைகளில் ஏந்திக் கொண்டான்.

 

“இல்லை… வேணாம்… விடு… ங்க… அப்பறமா போயிக்கிறேன்” என சன்னக்குரலில் முனங்கலாக மறுப்பை தெரிவித்தவளின் சொற்களை அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

 

“வாயை மூடு. அந்த கத்து கத்திட்டு இருக்க. வீட்டுல தனியா இருக்கோம்ன்னு ஒரு கவனம் வேணாம். இப்படி இடிச்சுட்டு உட்கார்ந்திட்டு இருக்க…” என பொரிந்தவன் கவனத்துடன் மெஷின்களை கடந்து மாடிப்படிகளில் ஏறினான்.

 

‘இவரு திடீர்ன்னு பேசாட்டி நான் ஏன் இடிச்சுக்கப் போறேன்’ என மனதோடு மட்டுமே நொந்து கொள்ள முடிந்தது அவளால். அவனின் நெருக்கம் தந்த சங்கடமும், கூச்சமும் அவளுக்கு பெரும் அவஸ்தையாய் இருந்தது.

 

“விடுங்களேன்…” என்றாள் மீண்டும் சன்னக்குரலில்.

 

அவள் அவஸ்தை புரியாதவனோ, “வாயை திறந்தன்னா பாரு… ம்ப்ச்… எப்படி அடி பட்டிருக்கு… கவனமா இருக்க வேணாமா?” நாற்காலியையோ, மேஜையையோ தூக்கிப் போகும் பாவனையில் செல்பவனின் அதட்டல் குரலில் இருந்தது நிச்சயம் தவிப்பும், அக்கறையும் தான்!

 

வலியிலும், அவன் கையில் இருக்கிறோம் என்ற சங்கடத்திலும் இருந்த பூரணிக்கு அந்த குரல் கவனத்தில் பதியவில்லை! அவனுமே அவனே அறியாமல் தான் சொல்லியிருப்பான் போலும்!

 

மாடிக்கு வந்ததும் சோபாவில் படுக்க அவளுக்குச் சிரமமாக இருக்கும் என்று நினைத்து, படுக்கையறைக்கு அவளை எடுத்துச் செல்ல, “அச்சோ விடுங்களேன்…” என மீண்டும் கெஞ்சியவளை முகம் மென்மையுறப் பார்த்தபடியே படுக்கையில் இறக்கி விட்டான்.

 

பொறுப்பாக ஐயோடக்ஸ் வேறு தேடி எடுத்து அவள் நெற்றியின் தடிப்பில் பூசி அழுந்த தேய்த்து விட, இதற்கு மேலும் மறுக்கும் திராணி இல்லை எனப் புரிய விழிகளை அழுந்த மூடி, கீழுதட்டைப் பற்களால் கடித்து வலியைத் தாங்க முயன்று கொண்டிருந்தாள்.

 

அழுத்தித் தேய்த்தால் தான் வீக்கம் குறையும் என்று நீதிவாசன் நன்கு அழுத்தித் தேய்த்தது விட்டுக் கொண்டிருக்க அவளுக்கு வலி தாங்காமல் கண்ணீரே வந்துவிட்டது.

 

“சரியாகிடும். தேய்க்காம விட்டா ரத்தம் கட்டிக்கும். கொஞ்சம் பொறுத்துக்க…” என்று அவளை தேற்றியபடியே நெற்றி வீக்கத்தைத் தேய்த்து விட்டான்.

நீதிவாசன் நன்கு தேய்த்து விட்டதும் அவளுக்கிருந்த சோர்வினாலோ, மயக்கத்தினாலோ கண்கள் தன்போல தூக்கத்திற்குச் சொருகியது. அவன் ஒருவன் அங்கிருக்கிறான் என்று நினைவில்லாமல், வீட்டில் யாரும் இல்லை என்ற நினைவையும் மறந்து கண்ணயர்ந்தாள். ஒருவேளை அவன் இருக்கிறான் என்னும் தைரியமோ என்னவோ?

 

‘ம்க்கும் சரியான கும்பகர்ணி போல! இவளைத் திட்ட வந்தவனைச் சேவகம் செய்ய வெச்சுட்டா…’ என அலுத்துக் கொண்டாலும், அவளது முகத்தின் சோர்வைப் பார்த்து அவளை எழுப்பவும் மனம் வரவில்லை.

 

‘இனி இவளுக்கு வாட்ச்மென் வேலை வேற பார்க்கணும் போலயே…’ என்றெண்ணியபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டவனது மனம் காலையில் நடந்த சம்பவத்தை அசைபோட்டது. ரோட்டுல நின்னு எல்லாரும் பார்க்க, ‘இங்க சினிமா தியேட்டர் கூட இல்லை தானே’ன்னு அந்த கத்து கத்தறா? நான் என்னவோ, ‘இந்த இடத்துக்கு வா… உன்னை சினிமா பார்க்க கூட்டிட்டு போறேன்னு’ இவகிட்ட சொன்ன மாதிரி… புத்தி இல்லாதவ…’ என்று தனக்கிருந்த ஆத்திரத்திற்குப் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது அவனால்!

தற்போதைய நிலையில் அவள் செய்ததற்குக் கண்டிக்க முடியும் என்று தோன்றவில்லை. சரி வீட்டிற்கேனும் செல்லலாம் என்றால், உறங்குபவளைத் தனியாக விட்டுச் செல்லவும் மனம் வரவில்லை.

தனது மாமாவிற்கும், அத்தைக்கும் அவ்வப்பொழுது அழைத்துக் கொண்டிருந்தவனின் அழைப்பை ஒருவழியாக ஜோதிமணி ஏற்றிருந்தார்.

அழைப்பை ஏற்றவரிடம், தான் வீட்டிற்கு வந்திருப்பதை மட்டும் நீதிவாசன் சுருக்கமாக சொல்ல, “பூரணி இருப்பாப்பா கொஞ்சம் காஃபி குடிச்சுட்டு இரு. நான் வந்துட்டே இருக்கேன்” என்று பதிலுக்குச் சொல்லி அழைப்பைத் துண்டித்திருந்தார் மூத்தவர்.

 

அத்தை சொன்னதில் அவனுக்குச் சிரிப்பு தான் வந்தது. சற்று முன் பூரணி பாடிய பாடலின் நினைவால்!

“அதான் காஃபி வைக்க தெரியாதுன்னு சொல்லிட்டா… தெரிஞ்சாலும் வெச்சு தர முடியாதுன்னுட்டா… இதுல இவளுக்கு வெச்சு வேற தரணுமாம்…” என வாய்விட்டே புலம்பியவனுக்கு அவள் பாடிய பாடல் ரிப்பீட் மோடில் செவிகளில் ரீங்காரமிட மனதிற்கு ஒரு இதமான சூழல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சக்தி பீடம் – பூரி விமலா தேவிசக்தி பீடம் – பூரி விமலா தேவி

[youtube https://www.youtube.com/watch?v=BwOk80BoxRM?rel=0&showinfo=0&start=151&w=560&h=315] Free Download WordPress ThemesDownload WordPress Themes FreeDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress Themesdownload udemy paid course for freedownload coolpad firmwareDownload WordPress Themesudemy course download free