Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 13’

அத்தியாயம் – 13

 

ப்ரித்வியின் பக்கத்து வீட்டில் கர்ஜீவன், அவர் மனைவி மித்தாலி, குழந்தைகளில் பெண்கள் நான்கும், ஆண்கள் இரண்டுமாய் பெரிய குடும்பம். அனைவரும் வஞ்சகமில்லா மனதோடும் உடம்போடுமிருந்தனர். கர்ஜீவன் வீட்டில் தீதி தீதி என காலையே சுற்றி வந்த அவரது செல்வங்களுடன் நெருங்கிவிட்டாள்.

 

“ஏய் ப்ரித்வி என்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு ஏமாத்திட்டியே. நாளைக்கே பேஸ்புக்ல ‘ஐ லவ் ப்ரித்வி’ க்ரூப்பை கலைச்சுட்டு ‘ஐ ஹேட் ப்ரித்வி’ன்னு ஒரு க்ரூப் ஆரம்பிக்கிறேன்” மூக்கை உறுஞ்சினாள் கர்ஜீவனின் முதல் பெண் ரிங்கி. முதல் வருடம் கல்லூரியில் சேர்ந்திருகிறாள்.

 

“இந்த மதராசி பொண்ணுங்களுக்கு எப்படித்தான் இவ்வளவு சிக்குன்னு இடுப்பிருக்கோ” தனது இடுப்பினைக் கவலையாய் பார்த்தவள், நந்தனாவின் இடுப்பை இரு கைகளாலும் பிடித்துப் பார்க்க, பயந்து போன நந்தனா ப்ரித்வியின் பின் ஒளிந்துக் கொண்டாள்.

 

“பயப்படாதே நந்தா… இவங்க இப்படித்தான் ஜாலியா பேசுவாங்க. ஆனா மனசுல கல்மிஷமில்லாதவங்க”

 

 

அந்த ரெட்டை படுக்கையறை வீட்டில் குடும்பமே கலகலப்பாய் இருந்தனர். அவர்களின் பஞ்சாபியும், உடைந்த ஆங்கிலமும்  இவளின் அரைகுறை ஆங்கிலமும், இடைவெளியை இட்டு நிரப்பிய சைகை மொழியும் சேர்த்து சமாளித்தாள்.

 

காலை அவர்களது உணவான நெய் சொட்டிய ஹல்வா, எண்ணையில் ஊறிய பூரி, பால் கிரீம் கலந்த சன்னாவைப் பார்த்துத் திகைத்து நின்றவளுக்கு போனசாய்  ஒரு பெரிய குவளையில் பாலும் வந்தது.

 

“ஆன்ட்டி நான் எங்க வீட்ல ப்ரித்வி கூட சாப்பிட்டுக்கிறேனே” என அனைத்தையும் எடுத்து பக்கத்து பிளாட்டுக்கு சென்றாள்.

 

ப்ரித்வி நந்தனா எடுத்து வந்த பூரியில் இரண்டை உண்டுவிட்டு, காலையில் கிளம்பிவிட்டான்.

 

“நந்தா… மத்யானம் சாப்பாடு”

 

“ஐயோ இத்தனை நெய்யும், பாலும் செமிக்கவே ராத்திரியாகும்”

 

“நந்தா பாக்டரி எப்படி நடக்குதுன்னு பாக்கணும். புது ஆர்டர் வேற எக்கச்சக்கமா வந்திருக்கு. சோ ஒரு வாரம் எனக்கு அங்கேயே வேலை சரியாயிருக்கும். ராத்திரி வர லேட் ஆகும். நீ தனியா எப்படி வீட்ல இருப்ப? வேணும்னா என்கூட வர்றியா?”

 

“கவலைப்படாம கிளம்புங்க நான் பொழுது போகலைன்னா ஆன்ட்டிட்ட பேசுறேன்” தைரியம் சொன்னாள்.

 

“சமையல் ரூம் ஷெல்ப்ல பணம் வச்சிருக்கேன். எடுத்துக்கோ” சொல்லிவிட்டு இண்டஸ்ட்டிரியல் எஸ்டேட்தில் இருக்கும் தனது பேக்டரிக்கு ஓடினான்.

 

 

ப்ரித்வி  சொன்ன ஷெல்பைத் திறந்தவள் அவன் கணிசமாய் செலவுக்கு வைத்திருந்த ரூபாய் நோட்டைத் தவிர நிறைந்து கீழே கொட்டிய  சில்லறைக் காசுகளையும் ரூபாய் நோட்டுக்களையும் ஒரு மணிநேரம் செலவளித்து தனித்தனியே பிரித்தாள்.

 

அப்பார்ட்மென்ட் அருகிலிருந்த கடையில் சோப்புத்தூள், விளக்குமாறு, பாத்திரம் தேய்க்கும் பிரஷ் போன்ற முக்கியமான பொருட்களை வாங்கிவந்தாள்.

 

குப்பை போடும் பிளாஸ்டிக் கவரில் சிதறிக் கிடந்த பொருட்களை மூட்டை மூட்டையாகக் கட்டி இரண்டு படுக்கை அறைகளில் ஒன்றில்  போட்டு மூடினாள்.

 

அழுக்குத் துணிகளை பார்த்து மலைத்தவள், ஒரு பக்கெட் துணிகளை மட்டுமெடுத்து சோப்புத் தூளில் ஊறவைத்தாள். பக்கத்திலிருக்கும் சலவை நிலையத்தில் ப்ரித்வியின் சட்டை, கால்சராய்களை சலவைக்குத் தந்தாள்.

 

 

கொஞ்சம் சோப்புத் தூளை மக்கில் கரைத்து எண்ணைப் பிசுக்கு போக சமையலறையை அழுத்தித் துடைத்தாள். ஓரளவு சுத்தமானது. சாயந்தரம் பள்ளி முடிந்ததும் தீதி என ஓடி வந்த கர்ஜீவனின் மகன்கள் அனோக், அனூப் இருவருக்கும் கட்டி வைத்திருந்த பழைய பேப்பர்களைத் தாராள மனத்துடன் கடையில் விற்றுப் பணமாக்கிக் கொள்ள சொன்னாள். இருவரும் உடனே செயலாக்கி விட்டு கிடைத்த பணத்தில் ஆளுக்கு ஒரு ஸ்பைடர்மென்  டீஷர்ட் வாங்கிக் கொண்டார்கள்.

 

ஓரளவு முடித்துவிட்டு நிமிர்ந்தபோது மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்யும் வேலை கூட சுலபமாய் தெரிந்தது நந்தனாவுக்கு.

 

ரவு வீட்டுக்கு வந்த ப்ரித்வி திகைத்துப் போனான். “நந்தா இது நிஜமாவே நம்ம வீடுதானா?” எனக் கண்ணைக் கசக்கி நின்றவனுக்கு

 

“ஹால் மட்டும்தான் சுத்தமாயிருக்கு. உங்க அழுக்கு மூட்டையெல்லாம் அந்த அறைல பத்திரமா பூட்டி வச்சிருக்கேன்” என பதில் சொன்னாள்.

 

“யு ஆர் சோ ஸ்வீட் நந்தா” எனத் தாடையைப் பிடித்து செல்லம் கொஞ்சினான். இதெல்லாம் புதிதாய் தோன்றவே முகம் சிவக்க அவனது கைகளை விலக்கியவள்.

 

“உங்க அனுமதியில்லாம பழைய பேப்பரைக் கடைல போட்டுட்டேன். பணத்தை அனூப், அனோக் ரெண்டு பேரையும் ஷேர் செய்துக்க சொல்லிட்டேன்”

 

“குட் ஜாப்”

 

“உங்களோட அறைல அழுக்கு சட்டை மட்டும் முப்பத்தி அஞ்சு எடுத்து வச்சிருக்கேன். அப்பறம் பைஜாமா செட் பத்து. உள்ளாடை செட் எண்பத்தி ரெண்டு. சாக்ஸ் மட்டும் ஒத்தை ஒத்தையா நூறிருக்கும்”

 

“அதுவா துவைக்க சோம்பேறித்தனமாயிருந்தா ஒரு புது செட் வாங்கிக்க வேண்டியதுதான். நீ ரெஸ்ட் எடுக்காம என்ன பண்ணிட்டிருக்குற நந்தா, ஒரே பகல்ல என் வீட்டோட அழகையே கெடுத்துட்டியே. வீட்டைப் பாரு சுத்தமா…. மியூசியம் மாதிரி இருக்கு. கடவுளே, இது மறுபடியும் எப்ப பழையபடி வீடா மாறப்போகுதோ. நான் அதுக்கு எவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்குமோ” கவலையாய் சொன்னான்.

 

பக்கென சிரித்தவள் “முன்னாடி இருந்தது பேர் வீடா? ஜோக்கடிக்காதிங்க  ப்ரித்வி…. உங்களோட பேசினா எனக்கு சிரிச்சு சிரிச்சே வயிறு வலி வந்துடுது”

 

 

“அது பசியா இருக்கும் நந்தா, வாயேன் நம்ம ரெண்டு பேரும் வெளிய சாப்பிட்டுட்டு வந்துடலாம். ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு சுத்தம் செய்யலாம்”

 

ப்ரித்வியிடம் பைக்தானிருந்தது. தயங்கியபடியே அமர்ந்தாள். பிடித்துக் கொள்ளக் கம்பியைத் தேடியவளின் கைகளை எடுத்துத் தனது இடுப்பில் வைத்தான்.

 

“ஏற்கனவே காத்துல பறந்து போற மாதிரி இருக்க. என்னை பிடிச்சிட்டேனா நீ பின்னால உட்கார்ந்திருக்கியா இல்லையான்னு தெரியும். ப்ளீஸ்” என்று சொல்லிய பின் கைகளை எடுக்க முயலவில்லை நந்தனா. முன்னால் அமர்ந்திருந்த ப்ரித்வியின் முகத்தில் கீற்றாய் புன்னகை தோன்றி மறைந்தது.

 

வீட்டை சுத்தம் செய்வதிலும் ஓய்வெடுப்பதிலும் நந்தனாவுக்கு அந்த வாரம் ஓடிப்போனது. வார இறுதியில் வீவா கொலாஜ் மாலுக்கு அழைத்து சென்ற ப்ரித்வி, கையோடு அங்கிருந்த கடைகளை அலசினான். நந்தனா வேண்டாம் எனத் தடுத்தும் அவளுக்குப் பொருத்தமாக பளீரென அடிக்கும் வடநாட்டு ஸ்டைல் சுடிதார்கள் பத்து வாங்கிவிட்டுத்தான் அடங்கினான்.

 

“ப்ரித்வி என்கிட்டே இருக்குற உடைகள் போதாதா? ஏன் வீணா செலவளிக்கிறிங்க?”

 

“காலேஜ் போற பெண்ணுக்கு கண்டிப்பா தேவையாயிருக்கும் நந்தா”

 

காலேஜா… புரியாமல் பார்த்தாள்

 

“எம்ஜிஎன்ல உனக்கு மேல்படிப்பு விஷயமா பார்த்து பேசிட்டு வந்திருக்கேன். எம்.எஸ்சி பிசிக்ஸ் அட்மிசன் முடிஞ்சுடுச்சு. அடுத்தவருஷம்தான் சேரமுடியும். இந்த வருஷம் வீணாக்க வேண்டாம்னு நீ ஆசைப்பட்ட பி.எட் சேர ஏற்பாடு செய்துட்டேன். நேர்முகத் தேர்வுக்கு வர சொல்லிருக்காங்க. அது பார்மாலிட்டிதான். அனேகமா அன்னைக்கே கல்லூரில சேர வேண்டியிருக்கும். நம்ம வீட்லருந்து ரொம்பப் பக்கம்தான். நீ நடந்தே போயிட்டு வந்துடலாம்”

 

கண்கள் கலங்க சொன்னாள் “ப்ரித்வி….”

 

“ஹாய் ஜானு… இதென்ன பொது இடத்துல கண் கலங்கிட்டு, காலம் முழுசும் நீ வீட்டு வேலை மட்டுமே செய்ய முடியுமா? நீ உன் சொந்தக் கால்ல நிக்க வேண்டாமா?”

 

“இவ்வளவு ஹெல்ப் செய்யுறிங்க. பதிலுக்கு உங்களுக்கு ஒண்ணுமே செய்யலையே ப்ரித்வி” குற்ற உணர்ச்சியோடு தவித்தவளைப் புன்னகையோடு பார்த்தான்.

 

“ரொம்பக் குழப்பிக்காதே நீ வீட்டை சீர்படுத்துற, என்னைப் பார்த்துக்கிற….  பதிலுக்கு நான் படிக்க வைக்கிறேன். இது பரஸ்பர உதவி அவ்வளவுதான்”

 

 

லேட்டாகிவிட்டதால் சாப்பாடு பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வீட்டில் நந்தனா உடை மாற்றி வருவதற்குள் இருவரும் சாப்பிட தட்டுக்களைக் கழுவி எடுத்து வைத்தவன், ஒரு போர்க்கும், கத்தியும் எடுத்து வைத்தான். பசியோடு சாப்பிட வந்த நந்தனா தட்டில் பரிமாறப்பட்டிருந்த நூடுல்சையும், தக்காளி சாஸையும் கண்டு திகைத்து நின்றாள். அவளது பசியே அடங்கிவிட்டது.

 

“உட்காரு நந்தா சாப்பிடலாம். நான் மத்யானம் கூட ஒண்ணுமே சாப்பிடல. பயங்கரமா பசிக்கிது” புன்னகையோடு சொன்ன ப்ரித்வியிடம் மறுத்துப் பேச மனமின்றி அமர்ந்தாள்.

 

உணவினை உண்டவாறே நந்தனாவின் முகத்தைப் பார்த்தான். பேயறைந்தது போல் தட்டினைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தவளிடம் “சாப்பிடு… “ என்றான்

“எனக்கு இந்த மாதிரி போர்க்ல சாப்பிட்டு பழக்கமில்ல. கைல சாப்பிடட்டுமா”

“நோ நந்தா. இதை இப்படித்தான் சாப்பிடனும். பழக்கமில்லன்னு சாக்கு சொல்றதை விட்டுட்டு பழக முயற்சி செய்” கண்டிப்பான  குரலில் சொன்னான்.

 

நூடுல்சை எடுத்தவளுக்கு வாயில் வைப்பதற்குள் உணவு கீழே விழுந்தது. கண்கள் கலங்க கீழே குனிந்துக் கொண்டாள். அடுத்த முறை நடுங்கிய கைகளை முயன்று  முள்கரண்டியைப் பிடித்து தட்டின் அருகே கொண்டு செல்லும்போது மென்மையாக அவளது வலது கரத்தைப் பற்றியது ப்ரித்வியின் வலது கரம். அவளது நாற்காலியின் பின் குனிந்து நின்றவனின் வலது கை அவளது வலது கையையும், அவன் இடது கை அவளது இடது கையையும் பற்றியிருந்தது. அவனது முகம் அவளது வலது தோளில் அழுத்தமாய் பதிந்திருந்தது.

 

“இப்படி சுத்தி இப்படி சாப்பிடணும்” அவளது கைகளைப் பற்றிப் பொறுமையாக  சொல்லித்தந்தான். அவள் தானே எடுத்து முழுவதும் சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கேயே நின்றுருந்தான்.

 

“இனிமே கல்லூரிக்குப்  போகணும்…. நண்பர்கள் கூட பழகணும்….  உன் பிரெண்ட்ஸ் வெளிய சாப்பிடப் போகும்போது நீ சங்கடப்படக்கூடாதில்ல” அவளது நாற்காலிக்கருகே முட்டி போட்டு அமர்ந்துகொண்டு அவளது முகத்தைப் பார்த்து சொன்னான்.

 

“உனக்கு என்ன வேணுமோ என்கிட்டே உரிமையோடு கேளு ஜானு”

 

“தாங்க்ஸ் ப்ரித்வி” கண்கள் கலங்க அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள். அவளது தலையினை ஆறுதலாகக் கோதியது ப்ரித்வியின் கரங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 15’

அத்தியாயம் – 15 அன்று காலையில் நந்தனா எழும்முன்பே ப்ரித்வி கிளம்பிவிட்டிருந்தான். அவன் அதிகாலை கிளம்ப வேண்டியிருந்தால் அவனே எழுந்து கதவை பூட்டிவிட்டு செல்வான். நந்தனா மெதுவாக எழுந்து கல்லூரிக்குக் கிளம்புவாள். காலை யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள்.

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 27

சில மாதங்களில் ஜிஷ்ணு அடைந்த உயரம் பிரமிப்பு தருவது. வங்கிக் கடனை மட்டும் நம்பி வியாபாரத்தை விரிவு படுத்தினான். “ஜிஷ்ணு, பேசாம உன் மாமனார் ஆரம்பிச்சுத் தர கம்ப்யூட்டர் கம்பனில போய் தினமும் உட்கார்ந்துட்டு வா. மக்கள் பர்கர், பீட்சான்னு சாப்பிடுற