Tamil Madhura ஆடியோ நாவல் (Audio Novels),Tamil Madhura தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’

தமிழ் மதுராவின் ‘உன்னிடம் மயங்குகிறேன் – 8’

அத்தியாயம் – 8

ரஞ்சனின் தோழன் அபிராம்  வெளிநாட்டில் வேலை செய்கிறானாம். நந்தனாவைப் பார்க்கும் ஆவலில் வந்திருந்தான். வழக்கமாய் கல்லூரிக்கு அணிந்து வரும் மஞ்சள் வண்ண சுடியில் பதட்டமாக ரஞ்சனுக்காக அவன் வருவதாக சொன்ன இடத்தில் காத்திருந்தாள். ரஞ்சனைக் கண்டதும் நந்தனாவின் மனதில் ஒரு சாந்தம் தோன்றியது. ரஞ்சனின் முகத்தில் ஒரு திருப்தியின்மை.

“என்ன நந்து கொஞ்சம் கிராண்ட்டா டிரஸ் போட்டிருக்கலாமே. கழுத்துல கைல கூட வழக்கமா போடுற சீப் பிளாஸ்டிக் தான் போட்டுட்டு வரணுமா”

“இல்ல… ” முடிக்கும்முன் குறுக்கிட்டான் அவன்

“உன்கிட்ட இல்லைன்னா முன்னாடியே சொல்லியிருக்கலாமே. நான் வாங்கித் தந்திருப்பேன்”

என்ன சொல்கிறான்? அவளது கஷ்டத்தை சொல்லி அவனிடமிருந்து பணம் ஏன் பறிக்கவில்லை என்கிறானா? அவளது தன்மானத்தை ஏலம் விடச் சொல்கிறானா?

“காலேஜுக்கு வரும்போது இப்படித்தான் எப்போதும் வருவேன். இன்னைக்குத்தான் உங்க பார்வைல இது குறையா பட்டிருக்கு போலிருக்கு”

“ஷ்… எதிர்த்து பேசாதே. புது டிரஸ் வாங்கி…. இங்க இருக்குற ஹோட்டல் எதுலயாவது மாத்திட்டு அவனைப் பார்க்கப் போயிருக்கலாம். வெளிநாட்டிலிருந்து சென்னை வந்தவன் உன்னைப் பார்க்கன்னே பெரியகுளம் வந்திருக்கான். அவன் எதிரே இப்படி ஒரு கசங்கிப் போன காட்டன் சுடிதாரைப் போட்டுட்டு போனா, எனக்கு என்ன மதிப்பிருக்கும்? ரஞ்சனோட மனைவி முதல் பார்வையிலையே எல்லாரையும் இம்ப்ரெஸ் பண்ண வேண்டாமா?

இவன் அம்மாகிட்ட  சிபாரிசு செய்தா நம்ம கல்யாணம் நூறு சதவிகிதம் நடந்த மாதிரிதான். என் கஷ்டம் உனக்கெங்கே புரியும்” சாதாரணமாக சிரித்துக் கொண்டே பேசுவது போல் கடுமையாக சொன்னான். ஆனால் அவன் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் மனதைப் புண்படுத்த, விக்கித்து ரஞ்சனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“முட்டாளாட்டம் திருதிருன்னு முழிக்காம முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சிக்கோ” சீறினான்.

“அபி இது நந்தனா. நந்து இது அபிராம்” அறிமுகப்படுத்தினான். அபியின்  முகத்தில் ஒரு அலட்சியம் தோன்றியது. ஏதோ போனால் போகிறது என்பது போல நந்தனாவின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டான்.

சாப்பிட நூடுல்ஸ், பிஷ் பிங்கர்ஸ், சீபுட் பிரைட் ரைஸ் என ஏகப்பட்டது ஆர்டர் செய்தனர். உனக்கு என்ன வேண்டும் என ரஞ்சன் கேட்க

“இட்லி, தோசை கிடைக்குமா” என மெதுவாய் கேட்டு அவனது முறைப்பைப் பரிசாகப் பெற்றாள்.

“அதெல்லாம் இங்க கிடைக்காது. இருக்குறதை செலக்ட் செய்” அவள் மெனுவைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் திணற, கடுப்பாய் ரஞ்சன் அவளுக்கும் சேர்த்தே ஆர்டர் செய்தான்.

தன் முன்னே வைத்த நூடுல்சை போர்க்கில் எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் விழித்தாள். ‘சனியனை சேமியா மாதிரி கொஞ்சம் சின்னதா வெட்டிப் போட்டிருக்கக் கூடாதா? ரிப்பன் மாதிரி இவ்வளவு  நீளமா இருந்தா எப்படி சாப்பிடுறது?’

ரஞ்சன் செய்வதைப் போல் போர்க்கில் சுற்றி சுற்றி சாப்பிட்டாலும் பாதிதான் வாயினுள் நுழைந்தது, மீதி வாய்க்கு வெளியே இருந்தது. விளம்பரங்களில் காண்பிக்கும் குழந்தைகளைப் போல் தொங்கிய நூடில்சை வாயினுள் இழுத்தவளைக் கேவலமாய் பார்த்தான் அபி. உடைதான் இப்படி என்றால் சாப்பாடு கூட நாசுக்காய் சாப்பிடத் தெரியாதா? என பார்வையாலேயே நண்பனை வினவ, ரஞ்சன் முகம் மேலும் தொங்கிப் போனது. சூழ்நிலை சரியில்லை எனத் தெரிந்து உணவை அப்படியே வைத்துவிட்டாள் நந்தனா.

மற்ற உணவையாவது வாய் திறந்து கேட்கிறாளா என ரஞ்சன் பார்க்க, அனைத்தும் அசைவமாய் இருந்ததால் பசியோடு அமர்ந்துவிட்டாள் நந்தனா. உண்டு  முடித்ததும் கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என நந்தனா மெதுவான குரலில் முணுமுணுத்தாள்.

“எங்களுக்கு நிறைய வேலையிருக்கு. ஒரு ஆட்டோல போய்டேன். காசிருக்கா” என அபி கேட்டான். அதில் தெரிந்த இளக்காரத்தைப் புரிந்து கொள்ள முடியாமல்.

“காசெல்லாமிருக்கு. இங்கேருந்து டைரக்ட் பஸ்சே இருக்கு. அதுல போய்டுவேன். வர்றேன் ரஞ்சன். வர்றேண்ணா” என்று விடைபெற்றுக் கொண்டு, விட்டால் போதும் என விரைந்தாள்.

தலைகுனிந்து அமர்ந்த நண்பனிடம் சொன்னான் அபி “விட்டுடு. இவ சரிபட்டு வரமாட்டா”

“என்னடா சொல்லுற”

“நம்மை மாதிரி பணக்காரங்களுக்கு தகுதி ரொம்ப அவசியம். இவளுக்கு ப்ளஸ் பாய்ன்ட்ன்னு பார்த்தா அழகைத் தவிர வேற ஒண்ணுமில்லை. அந்த ப்ளசும் ரெண்டு பிள்ளை பொறந்தவுடனே ஜீரோ ஆயிடும். அழகா உடுத்தத் தெரியல, பேசத் தெரியல, பழகத் தெரியல, நாசுக்குத் தெரியல, இங்கிலீஷ்ல ரெண்டு கேள்வி கேட்டா நீ மொழி பெயர்த்து சொல்ல வேண்டியிருக்கு.

மனைவின்னா யாருடா? படுக்கைக்கு மட்டுமா? இல்லை.. நமக்கு இன்னொரு நண்பன், நம்ம சுமைகளைப் பகிர்ந்துக்கிற ஒரு தோழமை, நம்ம இன்ப துன்பங்களைப் புரிஞ்சு ஆலோசனை சொல்லுற மந்திரி. என் வாழ்க்கையையே உதாரணத்துக்கு எடுத்துக்கோ, என் மனைவியை கருப்புன்னு பொண்ணு பார்த்தப்ப நிராகரிச்சவன், அப்பாவோட பிரஷர்ன்னால கல்யாணம் செய்துகிட்டேன். திருமந்திற்கு அப்பறம் தான் அவளது அறிவு, அன்பு, ஆளுமைத்திறம் எல்லாத்தையும் பார்த்து அசந்துட்டேன். இப்ப அவ சேல்ஸ் மேனேஜர். அவளை நான் மிஸ் பண்ணிருந்தா…. என்னால நினைச்சுப் பார்க்கவே முடியல.

இப்ப உன் விஷயத்துக்கு வருவோம் நந்தனாவைக்  கல்யாணம் செய்துகிட்டா உன் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு தோணல. அதுக்கு மேல உன்னிஷ்டம். ஆனா உன் கல்யாணத்துக்கு சிபாரிசு செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே”

குழப்பத்தில் முடிச்சிட்டன ரஞ்சனின் புருவங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’தமிழ் மதுராவின் ‘கடவுள் அமைத்த மேடை – 4’

“இன்னைக்கும் ராத்திரி அவ வலில அழுதா ரங்கா. என்னால தாங்கவே முடியல” ரங்காவிடம் பகிர்ந்துகொண்டான் சிவா.  ஒரே வயதினர் என்பதால் நெருங்கியிருந்தனர். அதைத் தவிர இந்த ஆறு மாதங்களில் மாதங்களில் மனம் விட்டு பேசியதாலும், ரங்காவின் மனைவி சந்தியாவுக்கு குடல்வால் அறுவை

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 19

“லேட்டாச்சு… சாப்பாடு தீர்ந்துடும்… சாப்பிட வாங்க…” என்றபடி சரயுவின் கல்லூரி மாணவன் ஒருவன் வந்தான். அவனை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்த ஜிஷ்ணு கஷ்டப்பட்டு யோசித்து, சரயுவின் பிறந்ததினத்தன்று அவளுக்கு சுவாமி படம் கொடுத்தவன் என்று நினைவுக்குக் கொண்டு வந்தான். “பிஸியா

தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 61தமிழ் மதுராவின் சித்ராங்கதா – 61

இருவாரங்களுக்குப் பின் தாயின் தாலாட்டு கேட்டு கண்கள் சொக்கி உறங்க ஆரம்பித்திருந்தான் அபி. மெதுவாய் சத்தம் கசிந்த அறைக்குள் பூனை போல் சென்றான் ஜிஷ்ணு. மகனை மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்தபடி மெலிதான குரலில் தாலாட்டிக்கொண்டிருந்தாள் சரயு. ஜிஷ்ணு சொன்ன