Tamil Madhura சுகமதியின் 'இதயம் தழுவும் உறவே',தொடர்கள் சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10

சுகமதியின் ‘இதயம் தழுவும் உறவே’ – 10

இதயம் தழுவும் உறவே – 10

 

அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் சமயங்களில் தேர்தல் மையத்தில் பணி புரிவார்கள். பொதுவாக அவர்கள் தற்சமயம் பணியில் இருக்கும் தாலுக்காவை விடுத்து, அதே மாவட்டத்தின் கீழ் இருக்கும் வேறு ஒரு தாலுக்காவில் தான் அவர்களுக்கான பணி மையம் அமைந்திருக்கும். கவியரசனுக்கும் அதேபோன்று வேறு ஒரு தாலுக்காவில் வேலை அமைதிருந்ததால்தான் அவன் நேரமே கிளம்பி சென்றது.

இவர்கள் அனைவரும் நேரமே வேலை பார்க்க சென்று விடுவதால் இவர்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்து விடுவார்கள். மாலை ஆறு மணி வரை தேர்தல் மையம் செயல்படும்.

ஆனால், அதோடு அவர்களது பணி முடிந்து விடாது. மாவட்ட தேர்தல் கண்காணிப்பாளர் வந்து அனைத்து படிவங்களையும் சரிபார்த்து கையொப்பமிட்டு, வாக்கு பெட்டிகளை சீல் வைத்து எடுத்து செல்லும்வரை அனைவரும் அங்கேயே தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மையத்திலும் பெட்டிகளை எடுத்து செல்லும் நேரம் வேறுபடும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொதுவாக இருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து, தேர்தல் மையத்தின் தூரத்தை பொறுத்து எடுத்து செல்லும் நேரமும் தாமதப்படும். சில இடங்களில் நள்ளிரவு வரை கூட ஆவதுண்டு.

கவியரசனுக்கும் வேலை முடிய இரவு பத்தரை மணி ஆகி விட்டது. அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வர ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும். வேலை முடிந்ததும், அங்கிருந்த அனைவரோடும் பேசிக்கொண்டிருந்ததால் வெகுநேரமாக மறந்து விட்டிருந்த கைப்பேசியை தேடி எடுத்து உயிர்ப்பித்து அன்னை மீனாட்சிக்கு அவன் அழைக்க நினைத்த நேரம், அவன் மனையாளின் பெயர் தாங்கி கைப்பேசி அதிர்ந்தது. அதைப்பார்த்தவனும் மெலிதாக அதிர்ந்து தான் போனான்.

யசோதா மதியத்திலிருந்தே அவ்வப்பொழுது கணவனுக்கு அழைத்துப் பார்த்து சோர்ந்து போனவள், மணி இரவு பத்தை நெருங்கவும் சற்றே பயந்து தான் போனாள். அதன்பிறகு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முயற்சி என்றிருக்க, சரியாக இப்பொழுது இத்தனை நேரமும் கேட்ட வாய்ஸ் மெசேஜ் மாறி ரிங் சத்தம் அவளது செவிகளை நிறைத்தது. அவளுக்கு கண்களில் நீரே திரண்டு விட்டது.

கவியரசன் அழைப்பை ஏற்று “ஹலோ” என மெல்லிய ஆச்சர்யமான குரலில் பேச்சை தொடங்க, அவனது புருவங்கள் கூட வியப்பில் உயர்ந்து தான் இருந்தது. திருமணமான ஒன்றரை மாதங்களில் மனையாளிடமிருந்து வந்த முதல் அழைப்பு.

அவன் குரல் கேட்டதும் பதில் கூட பேச முடியாமல் விழிகளில் நீரினை கசிய விட்டுக் கொண்டிருந்தாள் யசோதா. அவன் மீண்டுமொருமுறை, “ஹலோ யசோ…” என அழுத்தி அழைத்து, “லைன்ல இருக்கியா?” என்றான் கொஞ்சம் ஸ்ருதியை ஏற்றி.

அழுகையை விழுங்கியபடி, “ம்ம்” என்றாள் மெலிதாக. அதில் குரலின் கரகரப்பு தெரிந்து விடாதல்லவா? ஆனால், இந்த படபட பட்டாசின் அதீத மௌனமும், திடீர் அழைப்பும் அவனுக்கு சற்று பதற்றத்தை தந்தது.

“என்ன ஆச்சு? திடீர்ன்னு கூப்பிட்டிருக்க? எதுவும் பிரச்சனையா?” என அனுசரணையாக கேட்டான்.

“அதெல்லாம் இல்லை” என்று உடனடியாக மறுத்தவள், இப்பொழுது இன்னும் கொஞ்சம் தெளிந்திருந்தாள். ‘எங்க இருக்கீங்க?’, ‘எப்போ வீட்டுக்கு வருவீங்க?’, ‘ஏன் என்கிட்ட சொல்லிட்டு போகலை?’, ‘ஏன் நான் போன் பண்ண கூடாதா?’ இதுபோன்ற கேள்விகள் மனதிற்குள் அணிவகுத்து நின்றாலும் எதையும் கேட்க திராணியற்று அமைதியாகவே இருந்தாள்.

‘எதுக்கு போன் செஞ்சு இருப்பா?’ என குழம்பியவன் என்ன சொல்ல என புரியாமல், “ஆமா இன்னும் தூங்காம என்ன பண்ணற?” என கேட்க, தூக்கம் வரவில்லை என்று பதில் தந்தாள்.

வேறு என்ன பேசுவது என அவனுக்கு புரியவில்லை. “சரி நான் வீட்டுக்கு வர ஒன் ஹவருக்கு மேல ஆகும். நீ தூங்கு. நான் வந்துடறேன்” என கூறி அழைப்பை துண்டித்தான். அழைப்பை துண்டித்தாலும் மனதில் ஒரே யோசனை, எப்பொழுதும் கைப்பேசியில் அழைத்து இவளுக்கு பழக்கமில்லையே என்பதாக.

‘ஏன் அழைத்திருப்பாள்?’ என மனம் பதறிக்கொண்டிருந்த போதும், நேரம் ஆவதை உணர்ந்து வீடு நோக்கி சென்றான். அவன் சொன்னபடி சரியாக அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றிருந்தான்.

கவியரசன் உறங்க சொல்லி இருந்தும் உறக்கம் என்பதை மறந்தவள் போல அவனை எதிர்பார்த்து விழித்தே கிடந்தாள் யசோதா. அவனது வண்டியின் சத்தம் கேட்டது தான் தாமதம் ஓடிச்சென்று கதவை திறந்து விட்டிருந்தாள்.

‘என்ன ஆச்சு இவளுக்கு?’ என கவியரசன் அவளை வினோதமாக பார்த்தபடி அறையினுள் நுழைய, விளக்குகளை அணைத்து விட்டு, கதவினை தாளிட்டு விட்டு யசோதாவும் அறைக்கு சென்றாள்.

“ஏன் இன்னும் தூங்காம இருக்க?” சற்றே அழுத்தமாக கவியரசன் கேட்க, இந்த முறையும் “தூக்கம் வரலை” என்றாள் மென்குரலில்.

இவளின் அமைதி அவனுக்கு பழக்கம் தான் என்றாலும், இன்றைய அவளின் செய்கைகள் அனைத்தும் மிகவும் வித்தியாசமாக அவனுக்கு பட்டது. என்னவோ சரியில்லை என்றும் தோன்ற, “எதுவும் பிரச்சனையா? யாரும் வம்பு எதுவும் பண்ணறாங்களா? யாராவது எதாவது சொல்லிட்டாங்களா? படிக்கிறதுல எதுவும் சந்தேகமா? உடம்புக்கு எதுவும் செய்யுதா?” என அவனும் வரிசையாக தனக்கு தெரிந்ததையெல்லாம் கேட்க மறுப்பாக தலையசைத்துக் கொண்டே வந்தாள்.

அவனுக்கிருந்த பொறுமை பறக்க, “என்னன்னு சொல்லறியா?” என நள்ளிரவில் படுத்துகிறாளே என்ற எண்ணத்தில் சற்றே குரல் உயர்த்தி அதட்டினான்.

“எதுக்கு இப்ப சத்தம் போடறீங்க? சொல்லு சொல்லுன்னா என்ன சொல்ல?” என தனது கோபத்தையும், இயலாமையையும் அமைதியாகவே வெளிப்படுத்தியவள், “எனக்கும் உங்களை மாதிரியே தான்… சொல்லறதுக்கு எதுவும் இல்லை” என்றாள் வெகு அழுத்தமாக. ‘நீ மட்டும் என்னிடம் சொல்லி விட்டா செய்கிறாய்?’ என்னும் விதமாக அவள் குத்திக்காட்ட, அலைச்சலிலும், சோர்விலும் இருந்தவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“இருக்க டையர்ட்ல இவ வேற படுத்துவா. காலையில நாலு மணிக்கு எழுந்தது. கொஞ்சம் தூங்க விடறியா?” என்னவோ இவனை அவள் தான் தூங்காதே என்று சொன்னது போல எரிந்து விழுந்துவிட்டு படுத்துக் கொண்டான்.

“நாலு மணிக்கு எந்திரிச்சு என்னத்த வெட்டி முறிச்சாராம்” என அவன் செவிகளை தீண்டாத வண்ணம் முணுமுணுத்தபடி அவனருகே படுக்க, அவனுக்கு இருந்த சோர்வில் அசைவற்று உறங்கிக் கொண்டிருந்தான்.

‘என்ன படுத்ததுமே தூங்கிட்டாரு. இவருக்கு பொதுவா இவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராதே…’ என யோசித்தவளுக்கு, அவனது முகத்தை பார்த்தே சோர்வு புரிந்தது. ‘நாலு மணிக்கு எதுக்கு எழுந்தாரு? இத்தனை நேரமும் என்ன செஞ்சிட்டு இருந்தாரு?’ என எண்ணி எண்ணி குழம்பி போனாள். தவறாக எதையும் நினைக்க முடியவில்லை இருந்தும், என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே என்னும் தவிப்பு இருந்துகொண்டே இருந்தது.

‘சரி எதுவோ இருக்கட்டும்’ என்று எண்ணிக்கொண்டு அவனது தோள்பட்டைகளை இதமாக அழுத்தி விட்டாள். ஆழ்ந்து உறங்கியவனுக்கு அவளது செய்கை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருக்களித்து படுத்திருந்தவனின் முகத்தை விடிவிளக்கின் ஒளியில் பார்த்துக் கொண்டு மீண்டும் யோசனை. ‘சொல்லிவிட்டு சென்றிருக்கலாமே? அதற்கு கூட மனமில்லை என்றால் நம்மை தள்ளி நிறுத்துகிறாரா?’ என்று. அந்த எண்ணமே கசந்தது அவளுக்கு.

அவளும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை மறந்து விட்டால் போல!

அவனை வெகுநேரமாக பார்த்துக் கொண்டிருந்த்ததாலோ, அல்லது காலையில் இருந்து அவனை மனம் வெகுவாக தேடியதாலோ என்னவோ… திடீரென்று அவனை முத்தமிட வேண்டும் என்று எண்ணம் அவளுள் விருட்சமாய் முளைக்க, தன் எண்ணத்தின் போக்கை உணர்ந்து சற்றே அதிர்ந்து தான் போனாள்.

அந்த அதிர்ச்சியின் தாக்கம் குறையாமலேயே அவனுக்கு முதுகு காட்டியவண்ணம் படுக்கையில் சரிந்து கொண்டாள். தன் எண்ணம் சென்ற திசையை நினைத்து மனம் மத்தளம் கொட்டியது.

‘புருஷன் முழிச்சிட்டு இருக்கும்போது பேசக்கூட செஞ்சிடாத. தூங்கும் போது திருட்டு முத்தம் தருவியா? உன்னையெல்லாம்…’ என அவளின் மனமே அவளை கழுவி ஊற்ற, அமைதியாக படுத்துக்கொள்ள முயன்றாள்.

என்ன முயன்றும் அமைதி கிட்டவில்லை. தூக்கமும் நெருங்கவில்லை. மனமெங்கும் பாரமாகவும், குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது. இத்தனை தினங்களாக பிறந்த வீட்டினர் குறித்த கவலையும், தவிப்பும் தான் அதிகம் இருக்கும். ஆனால், இன்று கணவனின் நிராகரிப்பும் கவலையைத் தந்தது. கணவனிடம் தனது செய்கைகள் முறையில்லையோ என எண்ணி பரிதவித்தாள். ஏதேதோ எண்ணி சோர்ந்து போனவள் எப்பொழுது உறங்கினாலோ தெரியவில்லை.

காலையிலும் மனதின் சோர்வு குறைந்ததாக தெரியவேயில்லை. அது அவளது முகத்திலும் மெலிதாக பிரதிபலிக்க, கவியரசன் வேறுவிதமாக எடுத்துக் கொண்டான்.

‘அவள் அம்மா வீட்டிற்கு சென்று வர வேண்டும் என்று எண்ணியிருப்பாளோ? என்னிடம் கேட்க தயங்குகிறாளோ?’ என கணித்தவன், ‘நம்ம வேற தூக்கத்துல திட்டிட்டோமே’ என யோசித்தபடி, “யசோ, இன்னைக்கு காலேஜுக்கு லீவு போட முடியுமா?” என்று கேட்டான்.

அவள் புரியாது விழிக்கவும், “உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாம்” என அவன் சொல்லிக்கொண்டிருந்த நேரம், மீனாட்சி மகனை அழைக்கும் சத்தம் கேட்டது.

“என்னம்மா?” என்றபடி பாதி பேச்சில் அம்மாவை நோக்கி முன்னறைக்கு சென்றான் கவியரசன். யசோதாவும், ‘அத்தை எதுக்கு கூப்பிடறாங்க?’ என யோசித்தபடி அவனை பின் தொடர்ந்திருந்தாள்.

“நைட் எத்தனை மணிக்கு வந்த கவியரசு? எனக்கு ஏன் போன் பண்ணலை?” என்று மீனாட்சி கேட்டார்.

‘அச்சோ இவள் திடீரென அழைத்த குழப்பத்தில் அம்மாவிடம் சொல்ல மறந்து விட்டோமே!’ என எண்ணியவன், “நேரம் ஆயிடுச்சு மா. பதினொன்றைக்கு மேல தான் வந்தேன். யசோ போன் செஞ்சிருந்தா அவகிட்ட சொல்லிட்டேன். சரி உங்க தூக்கத்தையும் ஏன் கெடுக்கணும்ன்னு தான் சொல்லலை மா” தாயிடம் சொல்லாததை தவறாக எடுத்துக் கொள்வாரோ என்னும் குற்றவுணர்வில் பதில் தந்தான்.

ஆனால், மீனாட்சிக்கு அதெல்லாம் பெரிதாக தெரியவில்லை. அவனது வேலை தாமதம் தான் முதன்மையாக பட்டது. “அவ்வளவு நேரமா செஞ்சுட்டாங்க? ரொம்ப அலைச்சலா இப்படி சோர்ந்து தெரியற? நீ இருந்த எரியாவுல தேர்தல் பூத்துல எதுவும் பிரச்சனை இல்லையே!” என கரிசனமாக கேட்டார். கூடவே விடுமுறை வேண்டுமானால் எடுத்துக்கொள் என்றும் சேர்த்து கூற, யசோதா அதை கேட்ட பின்பு முழுவதுமாக தெளிந்தாள்.

‘அட இவருக்கு எலெக்ஷன் ட்யூட்டி இருந்திருக்கும் இல்ல. இதை எப்படி நான் மறந்தேன்? இவ்வளவு நாளா லீவு விடும்போதும் வோட்டர் லிஸ்ட் எடுக்கணும், வெரிபை பண்ணனும்ன்னு எலெக்ஷன் வேலையா தானே அலைஞ்சுட்டு இருந்தாரு. இருந்தும் இதை எப்படி மறந்தேன்?’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள். கூடவே இன்னமும் மனம் ஒப்பாமல், ‘இருந்தாலும் சொல்லிட்டு போயிருக்கலாம்’ என மனம் சுணங்கத்தான் செய்தது.

இருந்தாலும் கொஞ்சம் தேறிக்கொண்டாள். நாலு மணிக்கு எழுந்து எப்படி சொல்ல முடியும்? யாரிடமும் சொல்லாமல் தான் சென்றிருப்பார். எல்லாரும் புரிந்து கொண்டனர். நாம் மட்டும் குழப்பிக் கொண்டோம் என தன்னைத்தானே சுயசமாதானம் செய்து கொண்டாள்.

“ஆமாம்மா. லீவு எடுத்துட்டு… அப்படியே யசோ கூட அவங்க அம்மா வீடு வரைக்கும் போயிட்டு வரலாம்ன்னு பாத்தேன் மா” என்று அன்னையிடம் கவியரசன் பதில் தந்து கொண்டிருந்தான்.

கூடவே அவளிடமும் திரும்பி, “லீவு போட முடியுமா யசோ?” என கேட்க, தலையை உருட்டினாள். இப்பொழுது மனம் முழுதாக தெளிந்திருந்தது.

“பாத்தீங்களாம்மா… உங்க மருமகளை அம்மா வீடுன்னு சொன்னதும் எவ்வளவு சந்தோஷம்ன்னு” என மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தபடியே கவியரசன் வம்பிழுக்க,

“ஏன்டா நீ அப்பப்ப கூட்டிட்டு போற மாதிரி பேசற? நீங்க போய் வந்தே நாள் இருக்குமே! இனி அடிக்கடி போயிட்டு வாங்க. ஏன் முந்தாநாளே லீவு தானே, போயிட்டு வந்திருக்க வேண்டியது தானே?” என மீனாட்சி கேட்டார்.

“அது அம்மா… யசோ போடவேண்டிய ஓட்டை நம்ம ஊருல மாத்திட்டோம் தானே, அங்க போயிட்டு ஞாயித்து கிழமை தங்காம வந்தா சங்கட படுவாங்களேன்னு தான்…” என பொருத்தமாக கவியரசன் சமாளித்து வைத்தான்.

“சரி சரி நல்லபடியா போயிட்டு வாங்க” என மீனாட்சி சொல்ல, அதன்பிறகு இருவரும் காலை உணவை முடித்துவிட்டு அவளது தாய்வீட்டிற்கு கிளம்பினார்கள்.

வீட்டில் அகிலா மட்டுமே இருந்தாள். “என்ன அகி? அம்மா எங்க?” என தங்கையிடம் விசாரித்தபடி உள்நுழைந்தாள் யசோதா.

“அக்கா வா வா… நீ வரப்போறதை சொல்லவே இல்லையே? அம்மா சந்தைக்கு போயிருக்காங்க க்கா. காய்கறி வாங்கிட்டு வரணுமல்ல” என அகிலா கூறினாள்.

“நானும் இங்க தான் இருக்கேன்” என கவியரசன் சொல்ல, “வாங்க மாமா… வாங்க… சாரி அக்காவை பார்த்த சந்தோஷத்தில…” என அசடு வழிய நின்றாள் சின்னவள்.

“நீ என்ன பண்ணற காலேஜ் போகாம?” என வந்தவுடனேயே யசோதா விசாரணையை தொடங்க, “கொஞ்சம் தலைவலிக்கா. அம்மாக்கு சமைச்சு வெச்சு உதவி பண்ணலாம்ன்னு தான் க்கா லீவு போட்டுட்டேன்” என அகிலா கூறினாள்.

“இதெல்லாம் மட்டம் போட ஒரு காரணம் உனக்கு. காலேஜுக்கு கிளம்பு. நான் சமைச்சுக்கிறேன்” என விரட்டினாள் மூத்தவள்.

‘இப்ப மட்டும் பட்டாசு வெடிக்குமே!’ என நினைத்து சிரித்தான் கவியரசன். யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவன் சிரித்திருக்க, அகிலா பார்த்துவிட்டாள். “ஏன் மாமா சிரிக்கறீங்க?” என அதை அவனிடமே கேட்டும் வைக்க,

“இல்லை என்னை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலையா? மாத்தி மாத்தி நான் சமைக்கிறேன், நான் சமைக்கிறேன்னு என் வயிறோட விளையாடறீங்க” என கவியரசன் மேலும் சிரிக்க, அகிலா சற்றே அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள்.

அதே அதிர்ச்சியுடன், “மாமா என் சமையலை சொல்லறீங்க சரி. யசோ தான் சூப்பரா சமைப்பாளே! இன்னுமா உங்களுக்கு சமைச்சு போட்டு தொல்லை தரலை” என சந்தேகமாக கேட்க, அவன் யசோதாவை நோக்கினான். வீட்டில் அவ்வப்பொழுது முளைத்த புது வகையறா உணவு வகைகளின் மூல காரணம் இப்பொழுது விளங்கியது.

‘அவ சமைச்சதுன்னு கூட என்கிட்ட சொல்ல முடியாதோ? மாமியாரும், மருமகளும் எத்தனை கதை? டீவியில பாத்து சமைச்சங்களாம்’ என மனதிற்குள் பொருமியபடி அவளை பார்வையால் துளைத்தெடுக்க,

கவியரசனின் பார்வையின் வீரியம் தாங்காமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள் அவள். அங்கிருக்க முடியாமல், “நான் போயி டீ போட்டு கொண்டு வரேன்” என முணுமுணுப்பாய் கூறிவிட்டு சமையலறையில் புகுந்து கொண்டாள்.

அவள் நகர்ந்ததும், “அது சும்மா கேலிக்கு சொன்னேன் அகிலா. உன்னை மட்டும் கிண்டல் செஞ்சா சின்ன பொண்ணு கவலை படுவியே!” என கவியரசன் சொல்லி சமாளித்தான்.

“அதுக்கெல்லாம் கவலையே பட மாட்டேன் மாமா. இந்த யசோ பாருங்க காலேஜ் போக சொல்லறா? அதை மட்டும் வேணாம்ன்னு சொல்ல சொல்லுங்களே! எனக்கு இவ சொன்னதை நினைச்சு தான் பெரிய கவலையே!” என பெருமூச்சு விட்டபடி, அவளுக்கிருந்த மிகப்பெரும் கவலைக்கு சிபாரிசு கேட்க, அதைக்கேட்டவன் சத்தமாக சிரித்தான்.

“அவ தான் சொல்லறான்னா நேரம் ஆயிடுச்சுன்னு சொல்ல வேண்டியது தானே” என கவியரசன் எடுத்துக் கொடுக்க, “பரவாயில்லை ஹாஃப் டே போன்னு சொல்லிடுவா மாமா உங்க பொண்டாட்டி” என்றாள் பரிதாபமாக.

“உங்க அக்கா காலேஜ் லீவு போட அத்தனை யோசிப்பா… நீ மட்டும் ஏன் அகிலா இப்படி?” என கவியரசன் புன்னகையுடன் சலித்துக்கொள்ள,

“அவளுக்கு படிப்புன்னா ரொம்ப இஷ்டம் மாமா. அப்பா தவறினதும், அம்மாவுக்கு வீட்டையும் பார்த்துட்டு, கடையையும் பார்த்துக்க ரொம்ப சிரமமா போயிடுச்சு. நானும், அசோக்கும் டுவல்த் வேற. அதுனால எங்களை எந்த வேலையும் செய்யவும் விட மாட்டாங்க. அதுக்காகத்தான் அவ தன்னோட படிப்பை நிறுத்தி, வேலைக்கு போயி, வீட்லயும் அத்தனை வேலையும் செஞ்சு… ஒரு வருஷத்துல நிறைய கஷ்டப்பட்டுட்டா மாமா. அப்ப தான் சமைக்கவே பழகினா. எவ்வளவு ருசியா சமைப்பா தெரியுமா? எல்லாம் எங்களுக்காக மாமா. ஒவ்வொண்ணையும் பாத்து பாத்து செஞ்சா” என்றாள் அக்காவின் செய்கையில் மனம் நெகிழ்ந்து.

ஆறுதல் எதுவும் கூறமுடியாமல் நின்றிருந்தான் கவியரசன். தான் மிகவும் நேசித்த ஒன்றை துறக்க நினைப்பது என்பது எத்தனை ரணமானது என அவனுக்கும் புரியுமே! குடும்பத்திற்காக அந்த வலியையும் ஏற்றுக்கொண்ட தன் மனையாளின் செய்கையை எண்ணி வியந்து போனான்.

சூழலின் கணம் கூடியதை உணர்ந்து அதனை இலகுவாக்க, “அப்பறம் இப்போ எப்படி மாமா? எங்க அக்காவுக்கு சாமர்த்தியம் இருக்கா இல்லையா?” என அகிலா கேட்டு சிரிக்க, அவள் என்ன கேட்க வருகிறாள் என புரிந்தவனோ, “அதெல்லாம் நிறையவே இருக்கு!” என்று கூறி சிரித்தான்.

“அப்போ அவ சொல்லறதுக்கெல்லாம் தலையாட்ட தொடங்கிட்டீங்க?” என ஆர்வமாய் கேட்டு கேலி செய்ய, “வேற வழி” என்று கூறி அவனும் சிரித்தான்.

தேநீர் கொண்டு வந்த யசோதா, “இன்னமும் கிளம்பாம என்ன செய்யற அகி?” என்று அதட்ட,

“விடு நம்ம வந்திருக்கோமல்ல. அவளும் வீட்டுல இருந்துட்டு போகட்டும். ஒரு நாள் தானே” என சிபாரிசு செய்தான் கவியரசன்.

சரி என்னும் விதமாக அவனிடம் தலையசைத்தவள், “பாரு இன்னொருமுறை இப்படி மட்டம் போடறதை கேள்விப்பட்டேன் அவ்வளவுதான்” என தங்கையை மிரட்டி அவள் விடுமுறைக்கு மறைமுகமாக சம்மதித்தாள் தமக்கை.

அதில் ஆச்சர்யம் அடைந்த அகிலாவோ, “உங்களுக்கும் நிறைய சாமர்த்தியம் இருக்கும் போலவே மாமா” என கவியரசனின் காதை கடிக்க, “ஸ்ஸ்ஸ்…” என்று கூறி மெதுவாய் சிரித்தான் அவன்.

அவனது புன்னகையை ரசித்தபடியே, “இவ மட்டும் எப்படி இவரு கிட்ட இவ்வளவு சாதாரணமா பேசறா?” என மூளையைக் குடைந்தாள் யசோதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கபாடபுரம் – 20கபாடபுரம் – 20

20. சந்தேகமும் தெளிவும்   கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோ கூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்து கொண்ட சாரகுமாரனும், முடிநாகனும், விரைந்து பேச்சை வேறு பொருளுக்கு மாற்றினார்கள். “கலைகளில் எயினர் மரபினருக்கு ஈடுபாடு உண்டா? உண்டானால்

கபாடபுரம் – 4கபாடபுரம் – 4

4. கடற்கரைப் புன்னைத் தோட்டம்   இளையபாண்டியருடைய தேர் திடீரென்று அங்கு நின்றது எல்லோருக்கும் ஒரு புதிராகவே இருந்தது. முன்னால் சென்ற தேர்கள் வெகுதூரம் போய்விட்டன. பின்னால் வர வேண்டிய தேர்கள் வரமுடியாமல் இளையபாண்டியருடைய தேர், கோட்டத்தின் வாயிலிலேயே வழிமறித்து நின்று

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 47

47 – மனதை மாற்றிவிட்டாய் தனக்குள் சிறிது நேரம் பல மன போராட்டங்களில் இருக்க அவளிடம் வந்து நின்றனர் அபி, அம்மு, தர்ஷி, ரஞ்சி அனைவரும். அபி நேராக திவியை பார்த்து “என்ன திவி, உன் லவர் தயா வ நினைச்சிட்டு